Home Blog Page 31

மத்திய கிழக்கில் புதிய திருப்பம்: சவுதி-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்!

உலக அரசியலின் பார்வையை மீண்டும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது மத்திய கிழக்கு! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், சவூதி அரேபியாவுடன் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும், பொருளாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அணுசக்திச் சட்டத்தின் பிரிவு 123-ன் கீழ் (Section 123) கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம், பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான, பல தசாப்த கால கூட்டாண்மைக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் சவூதி அரேபியாவிற்கு அணுசக்தி தொழில்நுட்பங்களை வழங்கி அணு உலைகளை அமைக்க உதவும். “அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பங்களிப்புடன், சர்வதேச பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டே இந்த திட்டம் செயல்படுத்தப்படும்” என அமெரிக்க ஆற்றல் துறைச் செயலாளர் கிறிஸ் ரைட் (Chris Wright) தெளிவுபடுத்தியுள்ளார்.

இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் வெளிவராத ஒரு விடயம் தான் தற்போது உலக நாடுகளிடையே மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. சவூதி அரேபியா தனது சொந்த மண்ணிலேயே யுரேனியத்தைச் செறிவூட்ட (Uranium Enrichment) இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யலாம் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆற்றல் தேவைக்காக யுரேனியத்தைச் செறிவூட்டுவது அணு ஆயுத உற்பத்திப் பாதைக்கு வித்திட்டுவிடுமோ என்ற அச்சத்தால், வாஷிங்டன் காங்கிரஸ் இதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், ஈரானுக்கு எதிரான போரும், பிராந்தியத்தில் நிலவும் கடுமையான மோதல் சூழலும் நீடித்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னணியில், சவூதி அரேபியாவுக்கு அணுசக்தி கதவுகளை அமெரிக்கா திறந்துவிடுவது மத்திய கிழக்கின் பாதுகாப்புச் சமநிலையை எவ்வாறு மாற்றப்போகிறது என்பதை உலக நாடுகள் மிக உற்றுநோக்கி வருகின்றன.

சுகாதார ஊழியர் ஒருவருக்கு மரண தண்டனை தீர்ப்பு!

கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச வைத்தியசாலை ஒன்றின் சுகாதார உதவியாளர் ஒருவருக்கு,வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம்  இன்று (22) மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளர் தரப்பினால் சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டானது நியாயமான சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

அதன்படி, ஜனாதிபதியினால் நிர்ணயிக்கப்படும் திகதி மற்றும் நேரத்தில், சிறைச்சாலை ஒன்றிற்குள் பிரதிவாதியின் உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டார். 

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் எப்பாவல பகுதியைச் சேர்ந்த,அரச வைத்தியசாலை ஒன்றில் பணிபுரிந்த டபிள்யூ.டி.தேவாநந்த என்ற சுகாதார உதவி ஊழியராவார்.

2014 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி அல்லது அதனையொட்டிய தினத்தில் எப்பாவல, 20 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த பெலிகல என்ற பி.மகிந்த குமார என்பவரை கொலை செய்ததாக, இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 296 ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. 

தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்பக்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைக்காக இவ்வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. 

இவ்வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பான சட்டமா அதிபர் சார்பில் அரசு சட்டத்தரணி யோமாலி நாகொட விதான ஆஜரான அதேவேளை, பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம், சேதாப்பொலையில் இடம்பெற்ற வரலாற்று சிறப்பு நிகழ்வு!

  • ‘MSC ELSA 3’ கப்பல் விபத்தினால் இலங்கை கடற்பரப்பில் கலந்த பிளாஸ்டிக் கழிவுகளை முழுமையாக அகற்றி மறுசுழற்சி செய்யும் பிரமாண்ட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • புத்தளம், சேதாப்பொலையில் ஒரு வருடமாக சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்காக அகற்றப்படும் சிறப்பு நிகழ்வு சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
  • கப்பல் விபத்தில் வெளியான கழிவுகள் மட்டுமன்றி, யாழ்ப்பாண தீவுகள் முதல் தெற்கு கடற்கரை வரை பல தசாப்தங்களாக சேர்ந்திருந்த கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்பரப்பை உலுக்கிய பாரிய விபத்து: பிளாஸ்டிக் கழிவுகளுக்கு கிடைத்த வரலாற்று முடிவு!

கடல் அலைகளோடு அடித்து வரப்பட்ட கோடிக்கணக்கான பிளாஸ்டிக் துகள்கள்… இலங்கை கடற்பரப்பிற்கு ஏற்பட்ட ஆகப்பாரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலுக்கு இப்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்வு கிடைத்துள்ளது!

லைபீரியக் கொடியுடன் பயணித்த “MSC ELSA 3” சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, இலங்கைக் கடற்கரைகளில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் (Plastic Nurdles) மற்றும் கடல்சார் கழிவுகள் அதிகளவில் குவிந்தன. பேரழிவை ஏற்படுத்திய இந்தச் சூழல் மாசுபாட்டை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA), புத்தளம் – சேதாப்பொல மத்திய களஞ்சியத்தில் ஒரு வருடமாகச் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்காக விடுவிக்கும் விசேட திட்டத்தை இன்று (22) முற்பகல் ஆரம்பித்து வைத்துள்ளது.

சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, நாட்டின் கடல்சார் சூழல் பாதுகாப்பில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது!

ஆனால், இந்த மறுசுழற்சித் திட்டத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மையான பின்னணியும், இலங்கைக்குக் கிடைத்துள்ள மாபெரும் நன்மையும் என்ன தெரியுமா?

அரசிற்கு ஒரு சதம் செலவில்லை: கப்பல் நிறுவனமே ஏற்கும் முழுப் பொறுப்பு!

பொதுவாக இதுபோன்ற சூழலியல் பேரழிவுகளின் போது அரசுக்கே பெருமளவு நிதி இழப்பு ஏற்படும். ஆனால், இங்கு நிலைமையே வேறு! இந்த ஒட்டுமொத்தக் கடற்கரை தூய்மையாக்கல் மற்றும் கழிவு மேலாண்மை செயல்பாட்டிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு சதம் கூட செலவு ஏற்படவில்லை.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் (MEPA) நேரடி வழிகாட்டலின் கீழ், “MSC” கப்பல் நிறுவனத்தின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் இத்திட்டம் மிகவும் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

இன்றைய நிகழ்வில், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பான ஒப்பந்தம் பரிமாறப்பட்டதுடன், MEPA அதிகாரசபைக்கு MSC Lanka (Pvt) Ltd நிறுவனத்தினால் இடைக்கால இழப்பீட்டு காசோலையும் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. MEPA தலைவர் கலாநிதி சமந்த குணசேகர, பொது முகாமையாளர் ஜகத் குணசேகர மற்றும் MSC, Interocean, Colombo Logistics, P&I club ஆகிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.

13 அபாயகரமான இரசாயன கொள்கலன்கள்… கடலுக்குள் கவிழ்ந்த பேரபாயம்!

விபத்துக்குள்ளான சமயத்தில் இந்த கப்பலில் 13 அபாயகரமான இரசாயனக் கொள்கலன்கள், 66 பிளாஸ்டிக் துகள்கள் (Plastic Nurdles) அடங்கிய கொள்கலன்கள் உட்பட மொத்தம் 643 கொள்கலன்களும், சுமார் 452 மெட்ரிக் தொன் எரிபொருளும் இருந்தன!

எண்ணெய் மற்றும் இரசாயனங்கள் கடலில் கசியும் அபாயத்தைக் கட்டுப்படுத்த, தேசிய அவசரகால திட்டத்தின் கீழ் 2025 ஜூன் 12 அன்று விசேட கூட்டங்கள் கூட்டப்பட்டு உடனடி நடவடிக்கைகள் பாய்ந்தன. அடுத்த நாளே, அதாவது 2025 ஜூன் 13 அன்று முப்படையினர் மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பங்களிப்புடன் வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்கரை சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

இதில் ஆச்சரியப்பட வைக்கும் இன்னொரு விடயம் என்னவென்றால், ‘MSC ELSA 3’ கப்பலிலிருந்து சிதறிய பிளாஸ்டிக் துகள்கள் மட்டுமன்றி, யாழ்ப்பாணத்தின் வடக்குத் தீவுகள், மன்னார், புத்தளம் முதல் நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகள் வரை பல தசாப்தங்களாகச் சேர்ந்திருந்த பிளாஸ்டிக் கழிவுகளும் இத்திட்டத்தின் மூலம் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன!

சேகரிக்கப்படும் கழிவுகள் முதலில் மாவட்ட ரீதியிலான தற்காலிக களஞ்சியங்களில் திரட்டப்பட்டு, பின்னர் புத்தளத்தில் இதற்காகவே விசேடமாக அமைக்கப்பட்ட மத்திய களஞ்சியத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. Interocean மற்றும் Colombo Logistics ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புடன், MSC நிறுவனத்தின் நிதியுதவியில் இந்த நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இலங்கையின் இயற்கை வளத்தைப் பாதுகாப்பதில் சர்வதேச நிறுவனங்களை முழுமையாகப் பொறுப்பேற்கச் செய்து, வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, உலகளவில் சூழல் பாதுகாப்புத் துறையில் இலங்கைக்கு ஒரு புதிய அடையாளத்தைப் பெற்றுத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தம்பியைக் கொன்றுவிட்டு பொலிஸில் சரணடைந்த அண்ணன்!

ஆராச்சிக்கட்டுவை: அமைதியாகச் சென்றுகொண்டிருந்த அந்த மதிய வேளையில், ஆராச்சிக்கட்டுவை பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த அந்த நபரைப் பார்த்து அங்கிருந்த அதிகாரிகள் நிலைகுலைந்து போயினர். கையில் இரத்தம் சொட்டச் சொட்ட ஒரு கூர்மையான கத்தி, முகத்தில் எந்தவித சலனமும் இல்லாத உறைநிலை… பொலிஸார் சற்றும் எதிர்பாராத அந்த வார்த்தையை அவர் கூறினார் — “நான் என் தம்பியைக் கொன்னுட்டேன்!”

இன்று (22) மதியம் 2.10 மணியளவில் இடம்பெற்ற இந்த அதிரடிச் சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் நொடிப் பொழுதில் செயற்படத் தொடங்கினர். சந்தேகநபரை உடனடியாகக் கைதுசெய்த அதிகாரிகள், அவரை அழைத்துக்கொண்டு அவர் சுட்டிக்காட்டிய வீட்டிற்கு விரைந்தனர்.

ராஜகதளுவை பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டிற்குள் சென்று பார்த்த பொலிஸாருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. அங்குள்ள ஒரு கட்டிலில், உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் துலேன் ஹசங்க என்ற இளைஞன் சடலமாகக் கிடந்துள்ளார். கொலையுண்ட இளைஞன் மனவளர்ச்சி குன்றியவர் என்பது பின்னர்தான் தெரியவந்தது.

அதிர்ச்சியளிக்கும் பின்னணி என்னவென்றால், உயிரிழந்த இளைஞனின் தந்தை ஒரு பாடசாலை ஆசிரியர், தாய் சிலாபம் பொது வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர். பெற்றோர் இருவரும் கடமைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டிலிருந்த மனவளர்ச்சி குன்றிய தம்பியைப் பராமரிக்கும் பொறுப்பு இந்தச் சகோதரனிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அன்போடு பராமரிக்க வேண்டிய கை, தம்பியின் உயிரையே பறிக்கும் கூர்மையான ஆயுதமாக மாறியது ஏன்? குடும்பத் தகராறா அல்லது வேறு ஏதேனும் பின்னணியா?

தற்போது உடலத்தைக் கைப்பற்றியுள்ள பொலிஸார், நீதவான் பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதுடன், ஆராச்சிக்கட்டுவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜுட் சமந்த

அரசின் அதிரடித் தடை: எதிர்க்கட்சிகள் அவசர ஆலோசனை!

நீதித்துறை தொடர்பான விவாதத்திற்கு அரசாங்கத்தால் தடை. எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவசர கூட்டம்.

கடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய அரச ஆளுகையின் மூன்று முக்கிய தூண்களும் (Tripartite System of Government), அதிகாரத்தை பகிர்வு (Separation of Powers), மற்றும் அதிகாரங்களுக்கு இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகள் (Checks and Balances) ஆகிய ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் பாராளுமன்ற விவாதத்தை நடத்துமாறு எதிர்க்கட்சி வலியுறுத்திய கோரிக்கைக்கு அரசாங்கத் தரப்பு உடன்பாடு தெரிவிக்கவில்லை.

இதன்பிரகாம், நீதித்துறை தொடர்பான விடயங்களை பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்காமை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று (22) பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட அவசரக் கூட்டமொன்று இடம்பெற்றது.

ஜனநாயக ஆட்சிமுறையின் அடிப்படையான சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான அதிகார பகிர்வு மற்றும் அதிகாரங்கள் இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகளின் (Checks and Balances) முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் விடயங்கள் வெளிப்படையாக பாராளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் கவனம் செலுத்தப்பட்டன.

நீதித்துறை தொடர்பான விடயங்கள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்த சந்தர்ப்பம் வழங்காமை ஜனநாயக ஆட்சிக் கோட்பாடுகளை பாதிக்கும் விடயம் என இங்கு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இது தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாராளுமன்ற மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இங்கு மேலும் கலந்துரையாடினார்.

இதில், பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி விஜேரத்ன, சித்ரால் பெர்னாண்டோ, வி. இராதாகிருஷ்ணன், சமிந்த விஜேசிறி, கயந்த கருணாதிலக்க, ஜே. சி. அலவத்துவல, சுஜித் சஞ்சய பெரேரா, காவிந்த ஜயவர்தன, சதுர கலப்பத்தி, கபீர் ஹாஷீம், ரவி கருணாநாயக்க, எம். எஸ். ஏ. வாசித், ரோஹண பண்டார, டபிள்யூ. எச். எம். தர்மசேன, பி. ஆரியவங்ச, தயாசிறி ஜயசேகர, அனுராத ஜயரத்ன, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹகீம், இராமநாதன் அர்ச்சுனா, நிசாம் காரியப்பர், எம். எஸ். உதுமாலெப்பே, சானக மதுகொட, சுரங்க ரத்நாயக்க மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மோகினி நீர்வீழ்ச்சி அருகே கொடூர விபத்து: இருவர் பலி!

நல்லதன்னிய: நல்லதன்னியிலிருந்து மஸ்கெலியா நோக்கி இன்று (22) காலை 7.30 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த த்ரீவீலர் ஒன்று, நல்லதன்னியா மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகில் வீதியை விட்டு விலகி, சுமார் 10 அடி ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டுக் கவிழ்ந்தது.

வளைவுகள் நிறைந்த அந்த ஆபத்தான பாதையில் எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தின் வேகம், த்ரீவீலரில் பயணித்தவர்களின் உயிரையே பறிக்கும் அளவுக்குக் கொடூரமாக அமைந்தது.

இந்த கோரச் சம்பவத்தில் நல்லதன்னியா, முல்கம கீழ் பிரிவைச் சேர்ந்த 46 வயதான கந்தசாமி செல்வம் மற்றும் 26 வயதான இராமலிங்கம் திவாகர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேவேளை, த்ரீவீலரில் பயணித்த மேலும் மூவர் படுகாயமடைந்தனர். இதில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த இரு சிறுவர்களும் அடங்குவது அதிர்ச்சியையும் வேதனையையும் இரட்டிப்பாக்கியுள்ளது.

விபத்து நடந்தவுடனேயே ஓடிவந்த பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர்களின் நிலைமையைக் கருத்திற் கொண்டு மேல் சிகிச்சைக்காக அவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அவசரமாக மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்துக்கான பின்னணி என்ன, வாகனக் கோளாறா அல்லது வீதியின் வழுக்கும் தன்மையா என்பது குறித்து நல்லதன்னிய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

240 பில்லியன் போதைப்பொருள் பணத்தில் பிரம்மாண்ட மோசடி!

கொழும்பு: நாட்டின் நிதி அமைப்பையே உலுக்கும் வகையிலான மிகப்பெரிய நிதி முறைகேடு மற்றும் கறுப்புப் பண சுத்திகரிப்புச் சம்பவம் ஒன்று தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் நாடாளுமன்ற அரச நிதி பற்றிய குழு (CoPF) முன்னிலையில் அம்பலமாகியுள்ளன.

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பாரதூரமான குற்றச்செயல்கள் மூலம் உழைக்கப்பட்ட சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை ரூபாவில் சுமார் 240 பில்லியன்) நிதியானது, போலி இறக்குமதி ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் நேற்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பொருட்கள் இறக்குமதிக்கான முன்பணம் என்ற பெயரில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வரை நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார். பொருட்கள் எதுவும் நாட்டிற்கு வந்து சேராத நிலையில், தந்திப் பரிமாற்றங்கள் (TT) மூலமாகவே இந்த பிரம்மாண்டத் தொகை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த வெளிப்படுத்தலைத் தொடர்ந்து, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளில் இறங்கினர். இதன் தொடர்ச்சியாக, மத்திய வங்கி மற்றும் சுங்கத் திணைக்கள அதிகாரிகளை அழைத்து அரச நிதி பற்றிய குழு (CoPF) நடத்திய விசாரணையின் போதே, இந்த சட்டவிரோதப் பரிமாற்றங்கள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் உறுதி செய்யப்பட்டன.

இந்த நிதி முறைகேட்டின் பின்னணியை ஆராய்ந்த போது, நாட்டின் வங்கிக் கட்டமைப்பு, சுங்கத் திணைக்களம் மற்றும் நிதி அமைச்சின் இறக்குமதி – ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் ஆகியவற்றின் செயல்பாடுகளிடையே நிலவிய பாரிய கண்காணிப்புக் குறைபாடுகளே இத்தகைய மோசடிக்காரர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்துக் கருத்து வெளியிட்ட அரச நிதி பற்றிய குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அரச மற்றும் தனியார் வங்கிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு நிதி அனுப்பப்படும் போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், நேர்மையான இறக்குமதியாளர்களுக்கு தேவையற்ற சுமையையோ அல்லது புதிய சட்டக் கட்டுப்பாடுகளையோ விதிக்காமல், நடைமுறையிலுள்ள சட்டங்களை வலுப்படுத்தி இவ்வாறான மோசடிக்காரர்களைக் சட்டத்தின் முன் நிறுத்துவதே தங்களின் முதன்மை நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான புலனாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க இரு மாத கால அவகாசத்துடன் பல்துறை முகமைகளைக் கொண்ட விசேட குழுவொன்றை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

14 வருட பதவியை தூக்கிப் எறிந்த ஓமல்பே சோபித தேரர்!

தென் மாகாணம்: அதிகாரத்தையும் பதவிகளையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்க நினைக்கும் தற்போதைய சூழலில், மதத் தலைவரொருவர் எடுத்த அதிரடித் தீர்மானம் ஒன்று நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மகா நிகாயவின் தென் மாகாண பிரதம சங்கநாயக பதவியிலிருந்து பூஜ்ய கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உத்தியோகபூர்வமாக விலகியுள்ளார். கடந்த 14 வருடங்களாக இந்தப் பொறுப்பை வகித்து வந்த நிலையிலேயே, அவர் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளார்.

கடந்த ஜூலை 11 ஆம் திகதி சிறிமங்கல பிரிவேனா விகாரையில் நடைபெற்ற தென் மாகாண மகா சங்க சபையின் விசேட கூட்டத்தின் போதே, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணம் தான் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

தலைமைத்துவப் பதவிகள் என்பது ஆயுட்காலம் முழுமைக்கும் அனுபவிப்பதற்கான ஒன்று அல்ல எனக் குறிப்பிட்ட தேரர், இளம் பிக்குகள் பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், சங்கநாயக பதவிகள் என்பது முதிய வயதில் வழங்கப்படும் கௌரவப் பட்டங்களாகக் கருதப்படக் கூடாது என்றும், சாசனத்தின் வளர்ச்சிக்குச் சுறுசுறுப்பாகப் பங்காற்றக் கூடிய திறமையாளர்களுக்கே அவை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மகா நிகாயவின் தென் மாகாண சங்க சபையால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட இவர், தான் விலகுவதற்கு முன்னர் ஒரு முன்மாதிரியான காரியத்தையும் செய்துள்ளார். தனது வழிகாட்டலின் கீழ் இயங்கி வந்த 14 விகாரைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பொறுப்புகளைத் தனது சீடர்களிடமும் ஏனைய பிக்குகளிடமும் முழுமையாக ஒப்படைத்த பின்னரே அவர் தனது பதவியைத் துறந்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகைகளுக்கு வந்த சோதனை! பிரதமர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கொழும்பு: அரச சொத்துக்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளின் பராமரிப்புச் செலவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 22) வெளியாக்கப்பட்ட தகவல், பொதுமக்கள் மற்றும் அரசியல் தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, இதுவரை பராமரிப்பிலேயே முடங்கிக் கிடந்த ஜனாதிபதி மாளிகைகள் இனி எவ்வாறு பயன்படுத்தப்படவுள்ளன என்பது குறித்த முக்கிய திட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் உள்ள சில ஜனாதிபதி மாளிகைகள் ஏற்கனவே நீதிமன்றங்களாக மாற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளதுடன், எஞ்சியுள்ள மாளிகைகளை நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கும் திட்டங்களுக்குப் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இம்மாளிகைகளுக்காகச் செலவிடப்பட்ட பிரம்மாண்டத் தொகை குறித்த விவரம் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், நாட்டின் 8 ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிப்பதற்காக அரசாங்கம் 13.9 மில்லியன் ரூபாவை (1.39 கோடி) செலவிட்டுள்ளதாகப் பிரதமர் உறுதிப்படுத்தினார்.

இவ்வளவு பெரிய தொகையை பராமரிப்புக்காக மட்டுமே செலவிடுவது குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர், “இந்த மாளிகைகள் பொருளாதார ரீதியில் பயன்படும் திட்டங்களாக முழுமையாக மாற்றப்படும் வரை, அவற்றைப் பாழடைய விடாமல் பராமரிக்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு உள்ளது” எனத் தெளிவுபடுத்தினார்.

விரைவில் இம்மாளிகைகள் நாட்டின் வருமானத்தை உயர்த்தும் புதிய திட்டங்களாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வண்டியின் விலையை விட டெக்ஸ் அதிகம்! ஹாபரில் துருப்பிடிக்கும் 1,000 கார்கள்!

  • துறைமுகத்தில் முடங்கிய 1,000 சொகுசு வாகனங்கள்:
  • 40,000 வாகனங்கள் தேக்கம்:
  • காருக்கு 2 கோடி… கட்டணம் 5 கோடி!:
  • உண்மையான விலையை விட 3 மடங்கு அதிகம்:
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நடப்பது என்ன?

உங்களின் கனவு காரின் உண்மையான விலை 2 கோடி ரூபா. ஆனால், அதனைத் துறைமுகத்தில் இருந்து வெளியில் எடுக்க வேண்டும் என்றால் 5 கோடி ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இவ்வாறானதொரு நம்பமுடியாத அதிர்ச்சிச் சம்பவம்தான் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அரங்கேறியுள்ளது!

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 1,000 சொகுசு மோட்டார் வாகனங்களை இறக்குமதியாளர்கள் விடுவித்துக்கொள்ளாமல் அப்படியே கைவிட்டுள்ளதால், அவை துறைமுக வளாகத்திலேயே துருப்பிடித்து நாசமடைந்து வருவதாக இலங்கை சுங்கத் திணைக்கள வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

40,000 வாகனங்கள் தேங்கிக் கிடப்பது ஏன்?

தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏறத்தாழ 40,000 மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் மறு ஏற்றுமதி செய்யப்பட வேண்டியவை. உலகளவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலைமைகள் காரணமாக துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு இவற்றை ஏற்றிச் செல்ல வேண்டிய கப்பல்களால் பயணிக்க முடியாமல் போனதால் இவை அம்பாந்தோட்டையில் இறக்கி வைக்கப்பட்டன.

ஆனால், இவ்வாறு தற்காலிகமாக இறக்கப்பட்ட வாகனங்களுக்கும் தங்குமிடக் கட்டணம் பூதாகரமாக உருவெடுத்துள்ளதால், வாகன உரிமையாளர்கள் பெரும் தலையிடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.

“6 வருடங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு காரை விடுவிக்கச் சென்ற உரிமையாளருக்கு, 5 கோடி ரூபாவை தங்கிடக் கட்டணமாகச் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது! இதனால் காரின் மொத்த விலை 7 கோடி ரூபாவாக, அதாவது அதன் உண்மையான பெறுமதியை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது.”

இந்த அதிரடிக் கட்டண விபரத்தைக் கேட்டறிந்த இறக்குமதியாளர் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். காரை மீட்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் அதிர்ச்சியையடுத்து, அவர் சுங்கத் திணைக்களத்திற்கு நிலைமையை விளக்கிக் கூறியதுடன், காரை மீட்கும் எண்ணத்தையே முற்றாகக் கைவிட்டுவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளார்.

சீன நிறுவனத்தின் கட்டுப்பாடும் உருவான நெருக்கடியும்!

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாகப் பொறுப்பு சீன நிறுவனமொன்றின் கீழ் கையளிக்கப்பட்டதன் பின்னரே இத்தகைய அநியாயமான தங்கிடக் கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலை உருவானதாக சுங்க அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வணிக நோக்கில் விதிக்கப்படும் இந்த அதீதக் கட்டணங்களால், பல கோடி பெறுமதியான வாகனங்கள் துறைமுகத்திலேயே முடங்கி, இலங்கையின் பொருளாதாரத்திற்கும் இறக்குமதியாளர்களுக்கும் பாரிய இழப்பை ஏற்படுத்தி வருகின்ற பேரதிர்ச்சி செய்தி வாகன பிரியர்களுக்கு பெரும் இடியாக விழுந்துள்ளது.