Home Blog Page 32

முரண்பாடுகளின் உச்சம்! கால்பந்துத் தொடர் உலகிற்குச் சொன்ன பாடம் என்ன?

  • ட்ரம்பின் அரசியல் சர்ச்சை: வெற்றி கிண்ணத்தை வழங்கும் மேடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடந்துகொண்ட விதம் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
  • மக்களின் பஸாட்டை முடக்கிய கட்டணங்கள்: சாதாரண உழைக்கும் வர்க்க ரசிகர்கள் போட்டிகளைக் காண முடியாத அளவுக்கு நுழைவுச்சீட்டுகளின் விலைகள் விண்ணைத் தொட்டன.
  • அரசியல் களமாக மாறிய மைதானங்கள்: விசா மறுப்புகள், ஈரானிய அணி மீதான தடைகள் மற்றும் பாலஸ்தீனக் கொடிகளின் அலை என விளையாட்டுத் தொடர் அரசியல் உச்சகட்டமாக மாறியது.

பிரான்ஸை அரையிறுதியிலும், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை இறுதிப் போட்டியிலும் வீழ்த்தி ஸ்பெயின் அணி உலகக் கிண்ணத்தை வென்ற அந்த வரலாற்று தருணத்தை உலகம் முழுதும் இருந்த கோடி கணக்கான ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். ஸ்பெயின் அணித் தலைவர் ரொட்ரி தங்கக் கோப்பையை உயர்த்தக் காத்திருந்த வேளையில், மேடையில் நகராமல் நின்றுகொண்டிருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!

இறுதியில் பீபாத் (FIFA) தலைவர் ஜியான்னி இன்ஃபாண்டினோ தலையிட்டு டிரம்பை சற்று தள்ளி நகர்த்திய பிறகே, ஸ்பெயின் அணித் தலைவரால் அந்த வெற்றிக் கோப்பையைக் கைகளில் ஏந்த முடிந்தது. இராணுவச் செலவினங்கள் மற்றும் ஈரான் உடனான போர் எதிர்ப்பைக் காரணம் காட்டி ஸ்பெயினுடனான வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்திய பின்னணியில், இந்த மேடைச் சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

களத்தில் விளையாட்டு… பின்னணியில் அரசியல் கூத்து!

இந்த 2026 உலகக் கிண்ணத் தொடர் வெறும் கால்பந்து போட்டியாக மட்டும் அமையவில்லை; அது உலக அரசியலின் பிளவுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

  • சோமாலியா நடுவருக்கு விசா மறுக்கப்பட்டது முதல் ஈரான் அணிக்கு ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் வரை அமெரிக்க நிர்வாகத்தின் அணுகுமுறை கடும் விமர்சனத்துக்குள்ளானது.
  • ஈரான் தொடரிலிருந்து வெளியேறியதை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் பகிரங்கமாகக் கேலி செய்து கருத்து வெளியிட்டார்.
  • மைதானங்களில் பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலியக் கொடிகள் பறக்கவிடப்பட்டு, கால்பந்து மைதானம் ஒரு ‘அரசியல் மாநாடாக’ மாறியதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்தனர்.
சாமானியனுக்கு எட்டாக்கனியான உலகக் கிண்ணம்!

கால்பந்து விளையாட்டு உலகம் முழுவதும் இவ்வளவு பிரபலமாக இருப்பதற்கு முக்கியக் காரணமே, அது ஏழை-பணக்காரன் வித்தியாசம் இன்றி அனைவரும் ஆடக்கூடிய எளிய விளையாட்டு என்பதால் தான். ஆனால், இந்த உலகக் கிண்ணத்தில் போட்டியை நேரில் காண்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.

நூற்றுக்கணக்கான டொலர்கள் முதல் இலட்சக்கணக்கான டொலர்கள் வரை நுழைவுச்சீட்டுகளின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டதால், மைதானத்திற்கு சில கிலோமீட்டர் தொலைவில் வசித்த தீவிர ரசிகர்கள் கூட உள்ளே செல்ல முடியாமல் போனது. “எங்களைப் போன்ற தீவிர ரசிகர்கள் தங்கள் கதாநாயகர்களை நேரில் பார்க்க அரசாங்கம் உதவியிருக்கலாம்” என லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் வாழும் மெக்கானிக் ஒருவரின் ஆதங்கம் ஒட்டுமொத்த சாமானிய மக்களின் குரலாகவே ஒலித்தது.

அமெரிக்க பாணியில் மாறிய பாரம்பரிய விளையாட்டு!

கால்பந்தின் பாரம்பரிய முறைகளை மாற்றி, வணிக நோக்கில் அமெரிக்கா தனது சொந்த முத்திரையைப் பதிக்க முயன்றது தெளிவாகத் தெரிந்தது.

போட்டியின் நடுவே விளம்பரங்களுக்காக வழங்கப்பட்ட இடைவேளைகள், ‘ஹாஃப்-டைம் ஷோ’ மற்றும் சாம்பியன்ஷிப் மோதிரங்கள் என அனைத்தும் ‘கால்பந்தின் அமெரிக்கமயமாக்கலை’ உலகிற்கு உணர்த்தின.

இருப்பினும், லாம்மின் யமால் போன்ற இளம் நட்சத்திரங்களின் எழுச்சி, லியோனல் மெஸ்ஸியின் குறையாத வீரியம், நோர்வே மற்றும் கேப் வெர்டே அணிகளின் எதிர்பாராத வெற்றிகள் என அற்புதம் நிறைந்த தருணங்களுக்கும் பஞ்சமிருக்கவில்லை.

ஜெர்மனியின் புகழ்பெற்ற கால்பந்து மேலாளர் செப் ஹெர்பெர்கர் கூறியது போல: “பந்து உருண்டையானது. ஆட்டம் 90 நிமிடங்கள் நீடிக்கும். மற்றவையெல்லாம் வெறும் தியரிகள்தான்!” இறுதியில் சர்ச்சைகளைத் தாண்டி, கால்பந்து தன் மாயாஜாலத்தால் உலகை மீண்டும் ஒருமுறை கட்டிப்போட்டுள்ளது.

10,440க்கும் மேற்பட்டோருக்கு வழக்கு: PHI சங்கம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் டெங்கு அதி-தீவிர வலயங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதிவேகமாகப் பரவி வரும் நோயைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ரீதியில் பல விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு அங்கமாக, டெங்கு கொசுக்கள் பெருகும் வகையில் சூழலை அசுத்தமாக வைத்திருந்த நபர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதுவரை 10,440 க்கும் மேற்பட்டோருக்கு எதிராக நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் (PHI) பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது அரசாங்கத்தினதோ அல்லது பொது சுகாதார பரிசோதகர்களினதோ நோக்கமல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார். நோயின் பரவலைத் தடுப்பதற்கு ஏதோவொரு கடுமையான நடைமுறை அவசியமாக இருந்ததன் காரணமாகவே, டெங்கு சுழலை உருவாக்கிய நபர்களுக்கு எதிராக இத்தகைய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“வெறும் நீதிமன்ற வழக்குகளைத் தொடர்வதன் மூலம் மட்டும் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் டெங்குவைக் கட்டுப்படுத்திவிட முடியாது. இதற்கு மக்களின் நேரடிப் பங்களிப்பு இன்றியமையாதது.”

டெங்கு அச்சுறுத்தலில் இருந்து விடுபட வேண்டுமாயின், ஒரு நாடாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். அரசாங்கமும் அதிகாரிகளும் எடுக்கும் முயற்சிகளுக்கு மக்கள் தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே, உயிர்களைப் பலிவாங்கும் இந்த டெங்கு அரக்கனை ஓரளவுக்கேனும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

போலை அடிக்காமல் ஆளை அடித்த அர்ஜென்டினா! WWE பாணி அராஜகம்!

மெட்லைஃப் மைதானத்தில் நேற்று நடந்த 2026 ஃபீஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி, வரலாற்றில் ஒரு மறக்க முடியாத ஆட்டமாக மாறியுள்ளது. முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவும், ஸ்பெயின் அணியும் மோதிய இந்த ஆட்டம், கால்பந்து மைதானத்தை விட ஒரு WWE மல்யுத்த ரிங்கைத்தான் அதிகம் நினைவூட்டியது.

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அர்ஜென்டினா அணி கடுமையான உடல் ரீதியான தாக்குதல்களை கையில் எடுத்தது. ஸ்பெயின் வீரர்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், அவர்களை முரட்டுத்தனமாக இடித்து தள்ளுவது, சட்டையை பிடித்து இழுப்பது என அர்ஜென்டினா வீரர்கள் முரட்டு ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக, லிசாண்ட்ரோ மார்டினெஸ், லியான்ட்ரோ பரேடஸ் மற்றும் கிறிஸ்டியன் ரொமேரோ ஆகியோர் நடுவரின் கண் முன்னாலேயே ஸ்பெயின் வீரர்களை தாக்கி மஞ்சள் அட்டைகளைப் பெற்றனர்.

இருப்பினும், அர்ஜென்டினாவின் இந்த ரவுடித்தனமான அப்ரோச்சை கண்டு ஸ்பெயின் அணி சற்றும் பதற்றமடையவில்லை.

அர்ஜென்டினாவின் ஒவ்வொரு முரட்டு அடியையும் புன்னகையுடனும், நிதானத்துடனும் எதிர்கொண்டது. பந்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்த ஸ்பெயின், பாசிங் கேமில் கவனம் செலுத்தி அர்ஜென்டினாவை ஓடவிட்டது.

65 சதவீதத்திற்கும் மேலாக பந்தை தன் வசம் வைத்திருந்த ஸ்பெயின், அர்ஜென்டினாவின் மோசமான ஆட்டத்திற்கு தங்களின் கிளாஸ் ஆட்டத்தின் மூலமே பதிலடி கொடுத்தது.

ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ், ஸ்பெயின் இளம் டிஃபெண்டர் பாவ் குபார்சியை மிக மோசமான முறையில் கீழே தள்ளி இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.

இதனால் அர்ஜென்டினா 10 வீரர்களாக குறைந்தது. 90 நிமிடங்கள் முடிவிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.

கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயின் அடித்த ஒரு கோல் நடுவரால் மறுக்கப்பட்டாலும், அவர்கள் தங்களின் பொறுமையை இழக்கவில்லை. நடுவரிடம் சண்டைக்கு செல்லவில்லை.

இறுதியாக ஆட்டத்தின் 106-வது நிமிடத்தில், நிக்கோ வில்லியம்ஸ் கொடுத்த அற்புதமான அசிஸ்ட்டை, மாற்று வீரராக களம் புகுந்த பெரான் டோரஸ் கோலாக மாற்றினார்.

மைதானமே அதிரும் வகையில் ஸ்பெயின் ரசிகர்கள் இந்த வரலாற்று கோலை கொண்டாடினர்.

கோலை இழந்த பின் அர்ஜென்டினாவின் ஆக்ரோஷம் எல்லை மீறியது. ஆட்டத்தின் இறுதி விசிலுக்குப் பிறகு, அர்ஜென்டினாவின் லியான்ட்ரோ பரேடஸ் ஸ்பெயின் வீரர்களின் தொண்டையைப் பிடித்து தள்ளியதால் அவருக்கு நேரடியாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

அர்ஜென்டினா வீரர்கள் இத்தனை அராஜகங்களை செய்த போதிலும், கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி எந்தவொரு சண்டைக்கும் செல்லாமல், அர்ஜென்டினா வீரர்களுக்கு கைகொடுத்து தங்களின் நிதானத்தையும் நாகரீகத்தையும் வெளிப்படுத்தினர்.

லியோனல் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை கனவை உடைத்து, முரட்டுத்தனத்தை தனது பொறுமையான ஆட்டத்தால் வீழ்த்தி, 2010க்கு பின் தங்களின் இரண்டாவது உலகக்கோப்பை மகுடத்தை சூடியுள்ளது ஸ்பெயின்!

கால்பந்து உலகில் ‘கிளாஸ்’ எப்போதும் ‘மாஸ்’ என்பதை ஸ்பெயின் மீண்டும் நிரூபித்துள்ளது.

EAST RUTHERFORD, NEW JERSEY – JULY 19: Rodri #16 of Spain lifts the FIFA World Cup Winner’s Trophy after the team’s victory following the FIFA World Cup 2026 Final match between Spain and Argentina at New York New Jersey Stadium on July 19, 2026 in East Rutherford, New Jersey. (Photo by David Ramos/Getty Images)

அர்ஜென்டினா தோல்வியை பலரும் கொண்டாடுவது ஏன்? ஷாக் பின்னணி!

அர்ஜென்டினா ஸ்பெயின் இடையே நடந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வென்றது. அர்ஜென்டினாவில் தோல்வியை உலக நாடுகள் பலவும் கொண்டாடி வருகின்றன. சக லத்தீன் அமெரிக்க நாடுகளே கூட இதை கொண்டாட தொடங்கி உள்ளன.

சர்வதேச கால்பந்து அரங்கில் அர்ஜென்டினா அணி பல வெற்றிகளைக் குவித்து இருந்தாலும், அந்த அணியின் வீரர்களும் ரசிகர்களும் வெளிப்படுத்தும் அதி தீவிர இனவெறிப் போக்கு உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்திய தொடர்களில் மாற்று நாட்டு வீரர்களை நோக்கி அர்ஜென்டினா வீரர்கள் செய்த இனவெறி தாக்குதல்கள், பாடிய இனவெறிப் பாடல்கள் மற்றும் ரசிகர்களின் மோசமான நடத்தைகள், லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜென்டினா எவ்வாறு ஒரு தீவிர வலதுசாரி நாடாக மாறியுள்ளது என்ற விவாதத்தை உலக அரங்கில் தீவிரப்படுத்தியுள்ளது.

தற்போது உலககோப்பை தோல்வி இந்த விவாதத்தை மேலும் தீவிரமாக்கி உள்ளது

போலிப் பெருமிதம்

அர்ஜென்டினா ஒரு லத்தீன் அமெரிக்க நாடாக இருந்தாலும், பிரேசில் அல்லது கொலம்பியா போன்ற அண்டை நாடுகளைப் போல தங்களை இடதுசாரி நாடாக அடையாளப்படுத்திக் கொள்ள அது வரலாற்று ரீதியாக மறுத்து வருகிறது.

19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் அந்நாட்டு பிரதமர்கள், நிர்வாகிகள் திட்டமிட்டு ஐரோப்பிய குடியேற்றங்களை ஊக்குவித்தனர். நாங்கள் அனைவரும் ஐரோப்பாவிலிருந்து கப்பல்களில் வந்தவர்களின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு நாட்டிற்கு உள்ளே ஐரோப்பிய மக்கள் அதிக அளவில் குடியேற வழி ஏற்படுத்திக்கொடுத்தனர்.

இந்த வரலாற்று கொடூரம்தான், இன்றைய அர்ஜென்டினாவின் தீவிர வலதுசாரி இனவாதப் போக்குக்கு அடிப்படை அஸ்திவாரமாக மாறியுள்ளது. அதாவது அர்ஜென்டினா நாட்டை ஆக்கிரமித்து, நாட்டை கட்டுப்பாட்டில் எடுத்து, அந்த நாட்டு பூர்வகுடிகளையே ஓரம்கட்டியதுதான் தற்போது உள்ள அர்ஜென்டினியர்களின் உண்மையான கதை!

வீரர்களும் ரசிகர்களும் காட்டும் இனவெறி

அர்ஜென்டினா கால்பந்து கலாச்சாரத்திலும் இந்த இனவெறிப் போக்கு மிக அப்பட்டமாக வெளிப்படுகிறது. 2024 கோபா அமெரிக்கா வெற்றிக்குப் பிறகு, நட்சத்திர வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் உள்ளிட்ட அர்ஜென்டினா வீரர்கள் பிரான்ஸ் நாட்டு கறுப்பின வீரர்களின் ஆப்பிரிக்க வம்சாவளியை இழிவுபடுத்தும் வகையில் பேருந்தில் இனவெறிப் பாடலைப் பாடி கிண்டல் செய்தனர். இது சர்வதேச அளவில் பெரும் கண்டனத்தைப் பெற்றது.

இதுமட்டுமன்றி, உலகக் கோப்பைத் தொடர்களின் போது மாற்று நாட்டு ரசிகர்களையும், கறுப்பின வீரர்களையும் அர்ஜென்டினா ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்வதும், வீரர்களை களத்திலே கடுமையாக நடத்துவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

அண்டை நாடான மெக்சிகோ மக்களை நோக்கியும் தீவிரமான வெறுப்புப் பிரச்சாரத்தை அந்நாட்டு மக்களே முன்னெடுப்பது வழக்கம்.

தீவிர வலதுசாரி அரசியல்

தற்போது அர்ஜென்டினாவில் அதிபர் ஜாவியர் மிலெயின் தலைமையில் தீவிர வலதுசாரி ஆட்சி நடைபெற்று வருகிறது.

தீவிர இனவெறி, நிறவெறி கொள்கையைக் கொண்ட இந்த அரசு அங்கே மக்கள் இடையே மேலும் வெறுப்பை திணித்து வருகிறது. இது தற்போது உலகக்கோப்பையிலும் தெரிய தொடங்கி உள்ளது.

48 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பையிலேயே, முற்றிலும் வெள்ளையின வீரர்களை மட்டுமே கொண்ட அணியாக அர்ஜென்டினா தனித்து நிற்பதற்கு பின் இந்த நிறவெறிதான் காரணம்!

இதன் காரணமாக, ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க நாடுகளும் தற்போது அர்ஜென்டினாவுக்கு எதிராகத் திரும்பியுள்ளன. பிரேசில், மெக்சிகோ, சிலி, உருகுவே போன்ற நாடுகளின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அர்ஜென்டினா இல்லாத லத்தீன் அமெரிக்கா என்ற பிரச்சாரத்தைத் தீவிரமாக முன்னெடுத்து, அர்ஜென்டினாவுக்கு எதிராக விளையாடும் அணிகளை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். உலகக்கோப்பை இறுதிப் போட்டியிலும் இவர்கள் ஸ்பெயின் அணிக்கே ஆதரவு அளித்தனர்.

விளையாட்டு என்பது உலக மக்களை இணைக்கும் பாலம் என்பதை மறந்து, போலிப் பெருமிதத்தாலும் தீவிர வலதுசாரி அரசியலாலும் அர்ஜென்டினா ஒரு மோசமான நாடாக மாறி வருவது கால்பந்து ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ள நீரில் 8 அடி மூழ்கிய வீடுகள்: உரிமைப் பத்திரம் இல்லாததால் இழப்பீடு மறுப்பு!

சொந்த மண்ணிலேயே பிறந்து, வளர்ந்து, அங்கேயே தங்கள் ஆயுளைக் கழித்து விட்ட பிறகும், “நீங்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் இல்லை” என்று கூறப்பட்டால் அந்த மக்களின் வேதனை எப்படி இருக்கும்? அப்படியொரு கண்ணீர்க் கதையைத்தான் தங்கோட்டுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஜங்குராவெல, கல்வக மற்றும் அட்டியாவல ஆகிய கிராம மக்கள் பல தலைமுறைகளாகச் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.

மாவோயா ஆற்றை அண்டி அமைந்துள்ள இக்கிராம மக்களின் பிரதான ஜீவனோபாயமே செங்கல் மற்றும் ஓட்டு உற்பத்திதான். தமது தொழில் தேவைக்காகவும், மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் பல தலைமுறைகளாக மாவோயாவைச் சுற்றியே இவர்கள் தமது குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். காலப்போக்கில் மக்கள் தொகை பெருகியபோது, அன்றைய அரசியல்வாதி ஒருவரால் ஜங்குராவெல குளத்துப்பகுதியில் இவர்கள் குடியமர்த்தப்பட்டனர். ஆனால், இன்றுவரை அவர்களுக்கான சட்டப்பூர்வ காணி உரிமை வழங்கப்படவே இல்லை!

இவர்களின் வேதனையை மேலும் இரட்டிப்பாக்கியது அண்மையில் வீசிய ‘திட்வா’ சூறாவளிதான்! மா ஓயா பெருக்கெடுத்ததால் இவர்களின் வீடுகள் சுமார் 8 அடி உயரத்திற்கு நீரில் மூழ்கி நாசமாகின. ஆனால், காணிப் பத்திரம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக, வீடுகளைக் கழுவுவதற்கு வழங்கப்பட்ட சிறிய தொகையைத் தவிர, உடைமைகளை இழந்த இந்த ஏழை மக்களுக்குச் சதமேனும் இழப்பீடு கிடைக்கவில்லை.

“நாங்கள் திருமணம் முடித்து 30 வருடங்களாகிறது. வாக்காளர் பட்டியலில் பெயரிருக்கிறது, வீட்டிற்கு மின்சாரமும் தந்திருக்கிறார்கள். தேர்தலின்போதும், கரண்ட் தரும்போதும் எங்களை இந்த நாட்டின் குடிமக்களாக ஏற்கும் கிராம சேவகர், ஏதேனும் நிவாரணமோ உரிமையோ கேட்கப் போனால் ‘அனுமதியற்ற குடிகள்’ என்று விரட்டுகிறார்” எனப் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் கண்ணீருடன் விவரிக்கின்றார்.

நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வகையில், குடியிருப்புகள் குளத்தின் மேல்பகுதியில் அமைந்துள்ளதால் இங்கிருந்து வெளியேறி வனாதவில்லு பகுதிக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அழுத்தம் தருகின்றனர். ஆனால், “எங்களுக்குத் தெரிந்த தொழிலை விட்டுவிட்டு, அறிமுகமில்லாத ஊருக்குச் சென்று பிள்ளைகளுடன் எப்படி வாழ்வது?” எனக் கேள்வி எழுப்பும் இம்மக்கள், ஏற்கனவே ‘திட்வா’ புயலால் மாதக்கணக்கில் நீரில் மூழ்கிய வனாதவில்லு – சின்னநாகவில்லு பகுதிக்கு எங்களை அனுப்புவது ஒரு பிரச்சினையைத் தீர்க்க முற்பட்டு மற்றொரு பெரும் பேரழிவை உருவாக்குவதற்கே சமம் எனக் குமுறுகின்றனர்.

சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் இவர்களுக்கு, அவர்கள் பிறந்த மண்ணிலேயே சட்டப்பூர்வ உரிமையை வழங்கி, நிம்மதியாக வாழ வழிவகுப்பதே தற்போதைய அரசின் கடமையல்லவா?

செய்தி: ஜுட் சமந்த

கல்பிட்டியில் ஈரான் நாட்டு சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த கொடூரம்!

இலங்கையின் இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்தவண்ணம் உள்ளனர். ஆனால், நாட்டைத் தேடிவரும் விருந்தினர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அப்படியொரு அதிர்ச்சிச் சம்பவம்தான் தற்போது நாட்டின் பிரபல சுற்றுலாத் தலமான கல்பிட்டி பகுதியில் இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

தலவில – கப்பலடிப் பகுதியில் அமைந்துள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த இவர், கல்பிட்டியின் அழகை ரசித்தபடி தலவில – களப்புப் பள்ளி வீதியில் சென்று கொண்டிருந்த அந்த நொடியில்தான், அந்தத் திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

திடீரென அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அந்தப் பெண்ணின் அருகில் உரசி நின்றது. அதில் வந்த மர்ம நபர் ஒருவர், அச்சமுற்ற அந்த வெளிநாட்டுப் பெண்ணை பலவந்தமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், கூச்சலிட்டுத் தப்பியோடித் தன் உயிரையும் கற்பையும் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.

காயப்பட்ட மனதுடன் உடனடியாகச் செயற்பட்ட அந்த ஈரான் பெண், கல்பிட்டி காவல் நிலையத்திற்குச் சென்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் புகார் அளித்துள்ளார். நாட்டிற்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டவர் ஒருவருக்கு நாட்டின் வீதியிலேயே இவ்வாறானதொரு அச்சுறுத்தல் ஏற்பட்டது சுற்றுலாத் துறையினரிடையேயும் அப்பகுதி மக்களிடையேயும் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள கல்பிட்டி காவற்துறையினர், தப்பியோடிய மோட்டார் சைக்கிள் ஆசாமியைக் கைது செய்யப் பெருமுயற்சி எடுத்து வருகின்றனர். “சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும், குற்றவாளி யார் என்பது விரைவில் அடையாளம் காணப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்” என காவற்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறையினரின் தீவிர விசாரணை தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது!

ஜுட் சமந்த

தடகள சம்பியன்ஷிப் தொடரில் அல் ஹிலால் மாணவன் வெள்ளிப் பதக்கம்!

கொழும்பு சுகததாச சர்வதேச விளையாட்டரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற 3ஆவது எஸ்.ஏ தடகள சம்பியன்ஷிப் தொடரில், நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியின் நட்சத்திர மாணவனான பஸ்லி முஹம்மது பராஸ் குண்டெரிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை தட்டிப்பறித்து அசத்தியுள்ளார்.

தேசிய மட்டத்திலான இந்தத் தொடர் ஆரம்பமானது முதலே பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இதில் 15 வயதிற்குட்பட்டோருக்கான குண்டெரிதல் பிரிவில் களமிறங்கிய பராஸ், ஆரம்பத்திலிருந்தே ஏனைய போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினார். அனைவரது கண்களும் மைதானத்தின் எல்லைக் கோட்டையே உற்றுநோக்கிக் கொண்டிருந்த அந்தப் பரபரப்பான நிமிடத்தில், பராஸ் தனது முழு பலத்தையும் பிரயோகித்து குண்டை வீசினார்.

அவர் கைகளிலிருந்து புறப்பட்ட அந்த விசை, 12.40 மீற்றர் தூரத்தைக் கடந்து போய் விழுந்தபோது மைதானமே அதிர்ந்தது. இந்த அசாத்திய தூரப் பிரயோகம் அவருக்கு தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும், இலங்கையின் தடகள வரலாற்றில் ஒரு புதிய அடையாளத்தையும் பெற்றுக்கொடுத்தது. இந்த அரிய சாதனைக்காக அவருக்கு உத்தியோகபூர்வமாக சான்றிதழும் வெள்ளிப் பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த வெற்றியானது வெறும் பதக்கத்தோடு நின்றுவிடவில்லை. ஒரு சாதாரண பிரதேசத்து மாணவன், தேசிய அரங்கில் கொடி கட்டிப் பறக்க முடியும் என்பதை பராஸ் நிரூபித்துக் காட்டியுள்ளார். இந்த வரலாற்று வெற்றியையடுத்து, அல் ஹிலால் மத்திய கல்லூரியின் அதிபர், பாடசாலை நிர்வாகம், அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் சக மாணவர்கள் என ஒட்டுமொத்த நீர்கொழும்பு பிரதேசமுமே இந்த இளம் வீரனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் பராஸின் சாதனைப் படங்கள் தப்போது ட்ரெண்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தித் தகவல்: அரபாத் பஹர்தீன்

20 வருச ஏமாற்றம்: அரசியல்வாதியை பிங்கிரியவில் வச்சு செஞ்ச மக்கள்!

தலைப்பு: 20 வருச ஏமாற்றம்: எல்லையில மாட்டுன ரோடு! அரசியல்வாதியை வச்சு செஞ்ச மக்கள் – பிங்கிரியவில் பரபரப்பு!

மாதம்பே: “நடந்து கூட போக ஏலாது தம்பி, இது ரோடா இல்ல வயலா?” என்று கேட்கும் அளவுக்கு மோசமடைந்துள்ள மாதம்பே – பனிரெந்தாவ சந்தியிலிருந்து பிங்கிரிய – வத்துவத்த வரையான வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி, பிரதேச மக்கள் இன்று (20) மதியம் திடீர் வீதி மறியல் போராட்டத்தில் குதித்தனர். 20 வருடங்களாக ஒரு துண்டு தார் கூட இடப்படாமல் கைவிடப்பட்டுள்ள இந்த வீதியால் மக்களின் பொறுமை எல்லை கடந்துள்ளது.

இந்தப் பகுதியில் பெருமளவிலான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனால் நாளொன்றுக்கு 300 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இந்த வீதியைப் பயன்படுத்துகின்றன. ஏற்கனவே குன்றும் குழியுமாக இருந்த வீதி, இந்த அசுர வாகனங்களின் நடமாட்டத்தால் முற்றாக அழிந்து போயுள்ளது. “வாகனங்கள் போறதை விடுங்க, எங்களால கால்நடையாகக் கூட இந்த வீதியில நடக்க ஏலாது” என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆத்திரத்துடன் தெரிவித்தனர்.

இந்த வீதிப் பிரச்சினைக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான ‘அரசியல் நழுவல்’ ஒளிந்திருக்கிறது. இந்த வீதியானது பிங்கிரிய மற்றும் உடுபத்தாவ ஆகிய இரு பிரதேச சபைகளை பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளது. இதனால், “அது அவங்க எல்லை, இது இவங்க எல்லை” என இரு பிரதேச சபைகளும் மாறி மாறி சாக்குப்போக்கு சொல்லி, கடந்த 20 வருடங்களாக மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளதாக கிராமவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

போராட்டம் சூடுபிடித்த வேளையில், அந்த வீதியால் வந்த பல வாகனங்களை மக்கள் மறித்து திருப்பி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. அப்போதுதான் அந்த ‘கிளைமாக்ஸ்’ காட்சி அரங்கேறியது. போராட்ட இடத்திற்கு பிங்கிரிய பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் ஒருவர் வருகை தந்தார். அவரைக் கண்டதும் மக்கள் மேலும் கொதித்தெழுந்தனர். “20 வருசமா எங்கிருந்தீங்க?” என மக்கள் சூழ்ந்து கொள்ள, மக்கள் பிரதிநிதிக்கும் கிராமவாசிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

நிலைமை கைமீறிப் போவதைக் கண்ட பிங்கிரிய பொலிஸார் உடனடியாக களத்தில் குதித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நின்ற பொலிஸார், நிலைமையை ஒருவாறாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இறுதியாக, பிங்கிரிய மற்றும் உடுபத்தாவ ஆகிய இரு பிரதேச சபைகளின் தவிசாளர்களையும் அழைத்து, உடனடியாக ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்து தருவதாக பொலிஸார் உறுதியளித்தனர். பொலிஸாரின் இந்த உத்தியோகபூர்வ வாக்குறுதியை அடுத்தே மக்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். 20 வருட பிரச்சினைக்கு இந்த பேச்சுவார்த்தையிலாவது தீர்வு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தகவல்: ஜூட் சமந்த

பிள்ளையைப் பாடசாலையில் விட்டுவிட்டு திரும்பிய இராணுவ அதிகாரி விபத்தில் பலி!

ஜுட் சமந்த

பிள்ளையைப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பிய தந்தைக்கு, வீதியில் காத்திருந்த விபத்து மரணத்தை பரிசளித்த துயரச் சம்பவம் ஆணமடுவ பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று (ஜூலை 20) அதிகாலை ஆணமடுவ – புத்தளம் பிரதான வீதியின் பரமாகந்த சந்திக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக ஆணமடுவ போலீசார் தெரிவித்துள்ளனர்.

அபேபுஸ்ஸ இராணுவ முகாமின் முதலாவது சிங்க ரெஜிமென்ட்டில் ‘வொரண்ட் ஒபிசர்’ (Subedar/Warrant Officer) ஆகக் கடமையாற்றி வந்த 37 வயதுடைய விக்கிரமஆரச்சிகே துமிந்த சந்தருவன் என்ற இராணுவ அதிகாரியே இந்தத் கொடூர விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஆணமடுவ – ஊரியாவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இவர், விடுமுறையில் வீடு வந்திருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

இராணுவப் பணியில் எத்தனையோ சவால்களை எதிர்கொண்ட இந்த அதிகாரி, இன்று காலை தனது பிள்ளையின் எதிர்காலத்திற்காக மோட்டார் சைக்கிளில் ஆணமடுவ நகரிலுள்ள பாடசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிள்ளையைப் பாதுகாப்பாகப் பாடசாலையில் விட்டுவிட்டு, மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே, பரமாகந்த சந்திக்கு அருகில் எதிரே வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (CTB) பேருந்துடன் இவரது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது.

விபத்தின் வீரியம் காரணமாக மோட்டார் சைக்கிள் முற்றாகச் சேதமடைந்ததுடன், படுகாயமடைந்த இராணுவ அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஆணமடுவ போலீசார், விபத்துடன் தொடர்புடைய இலங்கை பொதுப்போக்குவரத்துச் சபை பேருந்தைக் கைப்பற்றியுள்ளதுடன், அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர். ஆணமடுவ போலீஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்துப் பல கோணங்களில் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை அலறவிட்டு மகுடம் சூடியது ஸ்பெயின் இளம்படை!

  • மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை அலறவிட்ட ஸ்பெயின் ‘சிறுவர்கள்’: நியூஜெர்சியில் மகுடம் சூடியது இளம்படை!
  • கேப் வேர்டேவிடம் தடுமாற்றம் முதல் உலகக் கிண்ண சாம்பியன் வரை: ஸ்பெயினின் அசாத்திய மிரட்டல் பயணம்!
  • 120 நிமிடங்கள், ஒரு ஷாட் கூட டார்கெட் இல்லை: அர்ஜென்டினாவை முற்றாக முடக்கிய ஸ்பெயினின் ‘பார்முலா’!

உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் மற்றுமொரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை வீழ்த்த முடியாது என்ற பிம்பத்தை உடைத்தெறிந்து, நியூஜெர்சியில் நடைபெற்ற அதிரடியான இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை முத்தமிட்டுள்ளது ஸ்பெயின் இளம்படை.

முப்பது நாட்களுக்கு முன்னர் எவராலும் கணிக்கப்படாத ஒரு அணி, இன்று உலக கால்பந்தின் உச்சகட்ட சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தத் தொடரின் ஆரம்பம் ஸ்பெயின் அணிக்கு அத்தனை சிறப்பாக அமையவில்லை. தங்களின் முதல் போட்டியில் உலகக் கிண்ணத்திற்குப் புதியவரான கேப் வேர்டே (Cape Verde) அணியுடன் கோல் எதுவுமின்றி ஸ்பெயின் சமநிலை பெற்றபோது, பல விமர்சகர்கள் ஸ்பெயினின் உலகக் கிண்ணக் கனவு அவ்வளவுதான் என எழுதத் தொடங்கினர். ஆனால், சவுதி அரேபியா மற்றும் உருகுவே அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி மீண்டெழுந்த ஸ்பெயின், நாக்-அவுட் சுற்றுகளில் போர்த்துக்கல் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு எதிராக கடைசி நிமிடங்களில் ‘சூப்பர்-சப்’ மிக்கேல் மெரினோ அடித்த அசாத்திய கோல்களால் அரையிறுதிக்கு அசுரப் பாய்ச்சல் மேற்கொண்டது.

அரையிறுதியில் உலகக் கிண்ணத்தை வெல்லும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரான்ஸ் அணியை, பயிற்சியாளர் டி லா புவெண்டேவின் (de la Fuente) தந்திரோபாய ஆட்டம் முற்றாக முடக்கியது. எம்பாப்பே போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர்களை ஸ்பெயினின் நடுவண் கள வீரர்களான ரோட்ரி, டானி ஓல்மோ மற்றும் பாபியன் ரூயிஸ் ஆகியோர் பந்தைக் கூடத் தொடவிடாமல் தடுத்து, 2-0 என பிரான்ஸை வீட்டுக்கு அனுப்பினர். இந்தத் தொடரில் லாமின் யமால் எனும் 19 வயது இளம் நட்சத்திரம் மாத்திரம் கோல் அடிக்கவில்லை என்றாலும், ஒட்டுமொத்த அணியாக மிக்கேல் ஒயர்சபால் (5 கோல்கள்) மற்றும் பெரான் டோரஸ் ஆகியோர் இணைந்து ஸ்பெயினை வழிநடத்தினர்.

அதே அரையிறுதி வியூகத்துடனேயே அர்ஜென்டினாவுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் ஸ்பெயின் களமிறங்கியது. 65 சதவீதத்திற்கும் அதிகமாகப் பந்தைத் தன் வசம் வைத்திருந்த ஸ்பெயின் அணி, அர்ஜென்டினா வீரர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடையச் செய்தது. இதன் விளைவாக, போட்டியின் கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ், ஸ்பெயினின் 19 வயது இளம் வீரர் குபார்சியை ஆபத்தான முறையில் தாக்கியதால் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். 120 நிமிட ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியால் ஸ்பெயினின் கோல் கம்பத்தை நோக்கி ஒரு துல்லியமான ஷாட் கூட அடிக்க முடியாமல் போனதே ஸ்பெயினின் பலத்திற்குச் சான்றாகும்.

மைதானத்தில் நிலவிய இந்த உச்சக்கட்ட பதற்றத்திற்கு மத்தியில், போட்டியின் 106ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அந்த வரலாற்றுத் தருணம் நிகழ்ந்தது. நிக்கோ வில்லியம்ஸ் அசிஸ்ட் செய்ய, மாற்று வீரராகக் களம் புகுந்த பெரான் டோரஸ் (Ferran Torres) பந்தை அர்ஜென்டினாவின் கோல் வலையின் உச்சிக்கு அதிரடியாக உதைத்து தள்ளினார். அரங்கம் அதிர எழுந்த அந்த ஒற்றை கோல், மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை வீழ்த்தி, ஸ்பெயினின் புதிய இளம் சகாப்தத்தை உலகக் கிண்ண சாம்பியன்களாக அரியாசனத்தில் ஏற்றியுள்ளது.

போட்டி முடிவடைந்ததாக நடுவர் இறுதி விசிலை ஊதிய அடுத்த கணமே, மாற்று வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியிலிருந்து ஸ்பெயின் வீரர்கள் தங்களின் வரலாற்று வெற்றியை கொண்டாடுவதற்காக மைதானத்தை நோக்கி ஓடி வந்தனர். அந்த உற்சாக வெள்ளத்திற்கு மத்தியில், மைதானத்தில் நின்றுகொண்டிருந்த அர்ஜென்டினாவின் நடுகள ஆட்டக்காரர் லியாண்ட்ரோ பரேடஸ் (Leandro Paredes), ஸ்பெயினின் இளம் நட்சத்திர வீரர் காவியை (Gavi) ஆக்ரோஷமாக தரையில் தள்ளி வீழ்த்தினார்.

தோல்வியின் விரக்தியும், வெற்றியின் கொண்டாட்டமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அந்த நொடியில், இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மைதானத்தில் ஒரு மினி யுத்தமே வெடித்தது. வீரர்கள் ஒருவரையொருவர் முட்டித் தள்ளிக்கொண்டதால், இறுதிப் போட்டி நடந்த அரங்கம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.

நிலைமை கைமீறிச் செல்வதனை அவதானித்த அர்ஜென்டினா அணியின் தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி (Lionel Scaloni) உடனடியாக மைதானத்திற்குள் விரைந்து இரு அணி வீரர்களுக்கும் இடையே மிகச் சாதுரியமாகத் தலையிட்டு, ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட வீரர்களின் கோபத்தைத் தணித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். தோல்வியின் வலியிலும் அவர் காட்டிய இந்த நிதானம் தற்போது கால்பந்து ரசிகர்களினால் சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகின்றது.