Friday, September 12, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 30

வவுனியா பகுதியில் மீட்கப்பட்ட பயங்கர வெடி பொருட்கள்!

0

வவுனியா நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து வருகை தந்த புலனாய்வுத்துறை அதிகாரிகளோடு வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொலிசாரும் இணைந்து செட்டிகுளம் துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது நேரியகுளத்தில் வீடு ஒன்றின் அருகாமையில் பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள் 86 கைக்குண்டுகள், ரி- 56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.

இதனையடுத்து குறித்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலைமையில், பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச மற்றும் ராஜகுரு, பொலிஸ் அதிகாரிகளான ரன்வல, ரூபசிங்க, பாலசூரிய, சனுஷ், கேரத், சனத், பண்டார, திசாநாயக ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் ரத்து!

0

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகளை இரத்து செய்வதற்கான புதிய சட்ட மூலத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனைத்து ஜனாதிபதிகளுக்கும் பொதுவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எவருக்கும் சிறப்புரிமை வழங்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள அனைத்து சிறப்புரிமைகளும் இதன் மூலம் இரத்து செய்யப்படும். இந்த சட்ட மூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.  பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்த பின்னரே சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய கால அவகாசம் தொடர்பில் குறிப்பிட முடியும். மிகக்குறுகிய காலத்துக்குள் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இங்கு எந்தவொரு நபருக்கும் சிறப்புரிமை வழங்கப்பட மாட்டாது. முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் ஒரே மட்டத்திலேயே நடத்தப்படுவர். தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து ஜனாதிபதிகளுக்கும் பொதுவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு எனும் போது முன்னாள் ஜனாதிபதிகள் மாத்திரமின்றி நாட்டு பிரஜைகளும் கவனத்தில் கொள்ளப்படுவர். அனைவரது பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படும்.

1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் (நீக்கல்) சட்டமூலத்தை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’  எனும்  அரசாங்க கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற விசேட சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டத்தை நீக்குவதற்காக சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக கடந்த ஜூன் 16ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பணிகளுக்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் உரித்துக்கள் (நீக்கல்) சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

ஏமனில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து?

0

நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஏமன் ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களாகவே இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர் இந்தியா அழைத்து வரப்படுவார் என்று பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்திய Global Peace Initiative அமைப்பின் தலைவர் டாக்டர் கே.ஏ. பால் தெரிவித்துள்ளார்.

ஏமன் நாட்டை சேர்ந்த மஹ்தி என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நிமிஷா பிரியா சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணத் தண்டையை விதித்திருந்தது. சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே மத்திய அரசு உட்பட பல்வேறு தரப்பும் எடுத்த முயற்சியைத் தொடர்ந்து மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாகவே இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏமன் நாட்டில் இருந்த Global Peace Initiative அமைப்பின் தலைவர் டாக்டர் கே.ஏ. பால் இது தொடர்பாக வீடியோவை வெளியிட்டுள்ளார். நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்றும் நிமிஷா பிரியா விடுதலை செய்யப்பட்டு, இந்தியா அழைத்துச் செல்லப்படுவார் என்றும் டாக்டர் கே.ஏ. பால் தெரிவித்துள்ளார். வலிமையான முயற்சிகள் மற்றும் பிரார்த்தனை காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளதாகவும் ஏமன் தலைவர்களுக்கு இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் டாக்டர் கே.ஏ. பால் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஏமன் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இது குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை. மேலும், நிமிஷா பிரியாவின் குடும்பத்தினரும் கூட இந்தச் செய்தியை உறுதி செய்யவில்லை. மேலும், பால் விளம்பர பிரியர் என்பதால் அவரை நம்ப முடியுமா என்ற கேள்வியை நிமிஷா குடும்பத்தார் முன்வைக்கிறார்கள். இதனால் நிமிஷாவின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதில் கேள்வி தொடர்ந்தே வருகிறது..

மஹ்தி என்பவரைக் கொன்ற குற்றச்சாட்டில் நிமிஷா பிரியா சிறையில் இருக்கிறார். அவரது குடும்பத்தினருக்கு ரத்தப் பணம் கொடுத்து மன்னிப்பு கோரும் முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனால், உயிரிழந்த மஹ்தியின் சகோதரர் சமீபத்தில் அளித்த நேர்காணலில், நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பே இல்லை என்றும் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் ஆரம்பமான பனை எழுச்சி வாரம்!

பனை உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கப்பெற்று வருகின்றது.

எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி பொறிமுறையை இலகுவாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதன் ஊடாக இடைத்தரகர்களை விட உற்பத்தியாளர்களே அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் இணைந்து நடத்தும், வடக்கு மாகாண பனை எழுச்சி வாரத்தை முன்னிட்டு ‘எங்கள் வாழ்வியலில் பனை’ என்னும் தலைப்பிலான கண்காட்சியை, நல்லூர் முத்திரைச்சந்தியிலுள்ள சங்கிலியன் பூங்காவில் வடக்கு மாகாண ஆளுநர் இன்று செவ்வாய்க்கிழமை காலை (22.07.2025) ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் ஒவ்வொரு கண்காட்சிக் கூடங்களையும் ஆளுநர் பார்வையிட்டார்.

இங்கு உரையாற்றிய ஆளுநர்,

மில்வைக்ட் கனகராஜா சகல இடங்களிலும் பனை விதைகளை நடுகை செய்து பனையை வளர்த்த ஒருவர். பனைகள் இல்லாத தேசம் இருக்கக் கூடாது என்பதற்காக அரும்பாடுபட்டவர். அவரின் நினைவு நாள் இந்தப் பனை வாரத்தின் ஆரம்ப நாளாக உள்ளது.

எமது மாகாணத்தின், மாவட்டத்தின் சொத்தாகவுள்ள பனை வளத்தைப் பயன்படுத்தி பல்வேறு உற்பத்திப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும். அவர்களின் உற்பத்திக்கு நியாயமான விலை கிடைக்கவேண்டும்.

பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் மிகச் சிறப்பாகச் செயற்படுகின்றன. ஆனால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அந்தளவுக்கு இல்லை. கடந்த காலங்களில் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அதைப்பயன்படுத்தி அவர்கள் முன்னேறவில்லை.

ஆனால் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் அவ்வாறில்லை. இவ்வாறு சிறப்பாகச் செயற்படுவர்களுக்கு அடுத்துவரும் ஆண்டுகளில் கூடுதலான நிதி ஒதுக்கீட்டை வழங்க முடியும், என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனின் பிரதிநிதியாக கௌரவ மாநகரசபை உறுப்பினர் சு.கபிலன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடக்கில் மக்கள் முறைப்பாட்டுக்கு அவசர இலக்கம்!

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் பொது மக்கள் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம் குறித்த இலக்கத்தினை கொண்ட விழிப்புணர்வு பிரசுரத்தை பேருந்துகளில் ஒட்டும் பணி கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய பொது போக்குவரத்தின்போது பொது மக்களுக்கான அசெளகரியங்கள், இடர்பாடுகளை முறையிடுவதற்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கட்டமைப்பின் நடவடிக்கை மூலம் வடமாகாணத்தில் பொது மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை முறையிடுவதற்கான புதிய அவசர இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் விழிப்புணர்வு பிரசுரத்தை பேருந்துகளில் ஒட்டும் பணிகள் கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டதுடன், இதனைத் தொடர்ந்து ஏனைய நான்கு மாவட்டங்களிலும் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த செயற்பாடு கிளிநொச்சி பேருந்து நிலைய பொறுப்பதிகாரி ஈஸ்வரதேவன் கோபிதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பதில் அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

திங்கட்கிழமைகளில் மாரடைப்பு ஏற்படுவது அதிகமா?

உலகம் முழுவதும் அச்சுறுத்தும் பிரச்சனையாக மாரடைப்பு பிரச்சனை இருக்கிறது. மற்ற நாட்களை விட திங்கட்கிழமைகளில்தான் மாரடைப்பு அதிக அளவில் ஏற்படுகிறது என்று தற்போது ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான ஆய்வுகள் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகியிருப்பினும், தற்போது மீண்டும் கவனம் பெற்று வருகிறது. பெல்ஃபாஸ்ட் ஹெல்த் மற்றும் சோஷியல் கேர் டிரஸ்ட் மற்றும் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் இன் அயர்லாந்து ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

STEMI எனப்படும் தீவிர மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 10,528 நோயாளிகளின் மருத்துவ பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர். 2013 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் அயர்லாந்து தீவு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் தரவுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

STEMI என்பது இதயத்திற்கு இரத்தம் வழங்கும் முக்கிய கரோனரி தமனி முழுவதுமாக அடைக்கப்படும்போது ஏற்படுகிறது. இந்த சமயத்தில் அவசர சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிர் போய்விடும். இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 30,000-க்கும் அதிகமானோர் STEMI காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சிகிச்சை மூலம் அடைபட்ட கரோனரி தமனியைத் திறந்து, இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக்க முடியும். பிரச்சனை என்னவெனில், வாரத்தின் தொடக்கத்தில் அதாவது திங்கட்கிழமைகளில் STEMI மாரடைப்பு விகிதம் அதிகரிப்பதை அவர்கள் கண்டறிந்தனர். திங்கட்கிழமைகளில் இது மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 13% அதிகமாக இருந்தது.

அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் STEMI விகிதம் அதிகமாக இருந்தது. இப்படி திங்கட்கிழமைகளில் மாரடைப்பு ஏற்படுவதை ‘ப்ளூ மண்டே’ என்று அழைப்பார்கள். இந்த விளைவுகளுக்கு பின்னால் உள்ள காரணம் இன்னும் முழுயைமாக தெரியவில்லை.

இது உடலின் சர்க்காடியன் ரிதம் எனப்படும் தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய இருதயவியல் நிபுணர் டாக்டர் ஜாக் லஃபான் கூறுகையில், “வாரத்தின் தொடக்கத்திற்கும், மாரடைப்புக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதாக நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

இந்த தொடர்பு ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கலாம். முந்தைய ஆய்வுகளின் அடிப்படையில், சர்க்காடியன் ஒரு காரணமாக இருக்கலாம்” என்று கூறியுள்ளார். பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் மருத்துவ இயக்குனர் பேராசிரியர் சர் நிலேஷ் சமனி, இதுபற்றி கூறுகையில், “இங்கிலாந்தில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

எனவே மாரடைப்பு எப்படி, ஏன் ஏற்படுகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவது முக்கியம். இந்த ஆய்வு தீவிரமான மாரடைப்புகளின் நேரத்தைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. ஆனால், வாரத்தின் சில நாட்களில் அவை ஏன் அதிகமாக நிகழ்கின்றன என்பதை நாம் கண்டறிய வேண்டும். இதன் மூலம் இந்த ஆபத்தான நிலையைப் பற்றி மருத்துவர்கள் நன்கு புரிந்துகொள்ளவும், அதிக உயிர்களைக் காப்பாற்றவும் முடியும்” என்று கூறியுள்ளார்.

ஞாயிற்று கிழமைகளில் பெரும்பாலும் விடுமுறை என்பதால் மது, பார்டி, இதர போதை பழக்கங்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே தூக்கம் பாதிக்கப்படுகிறது. உடல் சோர்வாகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இதே நடக்கும்போது அது, உடலுக்கு ஆபத்தாக முடிகிறது. திங்கட்கிழமையில், அலுவலக அழுத்தம், வேலைக்கு போவது, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது உடல் திணறுகிறது. இதுகூட மாரடைப்புக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் இதுமட்டும்தான் முழுமையான காரணமாக சொல்லிவிட முடியாது என்றும் சிலர் கூறுகின்றனர்.

எது எப்படி இருப்பினும் மது, சிகிரெட் இதர போதை பழக்கங்கள் இல்லாததே சிறந்த வாழ்க்கையாகும்.

சடுதியாக குறைந்த உப்பின் விலை!

0

கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக புத்தளத்தில் பாதிக்கப்பட்ட உப்பு அறுவடை, தற்போதைய வறண்ட வானிலை காரணமாக உப்பு விளைச்சல் அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும், உப்பின் விலை குறைந்துள்ளமை தமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இலங்கையின் உப்புத் தேவையில் 50 வீதம் முதல் 55 வீதம் வரை புத்தளம் மாவட்டத்தின் புத்தளம், முந்தல், மங்கள எளியா, பாலவி, தளுவ, கற்பிட்டி மற்றும் வன்னாத்தவில்லுவ ஆகிய பகுதிகளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், தற்போது சுமார் 10,000 ஏக்கர் நிலத்தில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்பு உற்பத்தியில் சுமார் 1,000 விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 

புத்தளத்தில் உப்பு உற்பத்தி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. இதற்கு ஒரு சான்றாக, மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஆய்வாளரான இப்னு பதூதா 1304 முதல் 1368 வரை உலகம் முழுவதும் மேற்கொண்ட பயணங்களின் போது இலங்கைக்கும் விஜயம் செய்திருந்தார். இவர், புத்தளம் நகரில் தங்கியதுடன், புத்தளம் உப்புத் தொழில் குறித்து பல குறிப்புகளை எழுதியதாகக் கூறப்படுகிறது. 

புத்தளத்தில் உப்புத் தொழிலின் நீண்டகால வரலாறு இவ்வாறு ஆதாரங்களுடன் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் ‘புத்தளத்தின் உப்பு சக்கரை போன்றது’ என்ற பழமொழி நாட்டுப்புறக் கதைகளில் சொல்லப்படுகிறது. எனவே, உப்புத் தொழிலுடன் மிகவும் பின்னிப்பிணைந்த ஒரு வரலாற்றை புத்தளம் கொண்டுள்ளது. 

சில தசாப்தங்களுக்கு முன்பு, குளத்தில் இறால் வளர்ப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட இறால் தொட்டிகளை உற்பத்தியாளர்கள் உப்பு உற்பத்திக்காக மாற்றியுள்ளனர். இறால் வளர்ப்பில் பல்வேறு நோய்கள் மற்றும் அதிக செலவுகள் ஏற்படும் நிலையில், சில இறால் வளர்ப்பாளர்கள் அதை மேற்கொள்ளத் தயங்குவதால், இறால் வளர்ப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட இறால் தொட்டிகளை உப்பு உற்பத்திக்குப் பயன்படுத்த ஆரம்பித்தனர். 

மேலும், குறைந்த மூலதனத்துடன், சரியான வறண்ட வானிலை நிலவும் மாதங்களில் வளமான உப்பு அறுவடையைப் பெறவும், நல்ல வருமானத்தைப் பெற முடியும் என்பதன் காரணமாக உப்புத் தொழிலை ஆரம்பித்தனர். இருப்பினும், புத்தளம் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால், உப்பு அறுவடை எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. 

புத்தளம் மாவட்டத்தில் பெய்த மழை, நாட்டின் பிற பகுதிகளிலும் பெய்தது. இவ்வாறு நாடு முழுவதும் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால், இந்தியாவின் குஜராத்தில் இருந்து உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. 

இருப்பினும், புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது உப்பு அறுவடை நடைபெற்று வருகிறது. உப்பு உற்பத்தியாளர்கள் 50 கிலோ இந்திய உப்பை 4,000 ரூபாவுக்கு வாங்கும் அதே வேளையில், புத்தளத்தில் 50 கிலோ உப்பு மூட்டையின் விலை 1,800 முதல் 2,000 வரை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரனீஸ் பதுர்தீன் கூறுகையில், “இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்ததே இலங்கையில் உப்பு விலை குறைந்தமைக்கு காரணமாகும். உப்பை இறக்குமதி செய்ய அனுமதி கேட்ட அனைவருக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், கட்டுப்பாடுகள் இன்றி இந்தியாவில் இருந்து உப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. திட்டமிட்டு உப்பை இறக்குமதி செய்திருந்தால் உள்நாட்டு உப்பு உற்பத்திக்கு ஒரு நல்ல விலை கிடைத்திருக்கும். 

இன்றும் 1,50,000 தொன்னுக்கும் மேல் உப்பு துறைமுகத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உப்பை இறக்குமதி செய்தவர்கள் அதனை விற்க முடியாமல் தடுமாறுவதைப் பார்க்க முடிகின்றது. குறைந்த விலைக்காவது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட உப்பை விற்பனை செய்ய வேண்டும் என்ற முயற்சியில் அவர்கள் இருக்கும் போது, எங்களது உப்பை எப்படி விற்பனை செய்வது? 

புத்தளத்தில் உப்பு அறுவடை தற்போது நடைபெற்று வருகிறது. உப்பை அறுவடை செய்ய உப்பு உற்பத்தியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். நல்ல வெப்பமும் உப்பு உற்பத்திக்கு பெரும் பங்களிப்பைத் தருகிறது. ஆனால் உப்பின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உப்பு உற்பத்தியாளர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதைவிட சிறந்த விலை கிடைத்தால் நல்லது என நினைக்கிறோம். 

மேலும், முந்தைய அரசாங்கங்களிடமிருந்து உப்பு உற்பத்திக்குத் தேவையான நிலத்தை எங்களால் பெற முடியாமல் போனது. எனவே, புத்தளத்தில் உப்பு உற்பத்தியை மேலும் அதிகரிக்க உதவுமாறு புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்,” என்றார். 

இதேவேளை, சமீபத்தில் பெய்த மழையால் எங்களால் உப்பு உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே, தற்போதைய வறண்ட வானிலை உப்பு உற்பத்திக்கு உகந்ததாகக் காணப்படுகிறது. இருப்பினும், உப்பின் விலை குறைவடைந்துள்ளதால், நாங்கள் செய்யும் செலவுகளைக் கொண்டு இந்தத் தொழிலை நடத்துவது சற்று கஷ்டமாக உள்ளது. எனவே, இதற்கு அரசாங்கம் சில நிவாரணங்களை வழங்க வேண்டும் என புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

உப்பு உற்பத்தியைப் பார்க்கும் ஒருவர், அது அவ்வளவு பெரிய வேலை இல்லை என்று நினைக்கலாம். ஆனால், அது முறையாகச் செய்ய வேண்டிய ஒரு தொழில். எல்லாவற்றிற்கும் மேலாக, தற்போதைய விலையில் தொழிலாளர் செலவுகள் மற்றும் பிற செலவுகள் போக, ஒரு சிறிய தொகையை மட்டுமே நாம் பெறுகிறோம். எனவே, இந்தத் தொழிலை நடத்துவதற்கு எங்களுக்கு பொருத்தமான தொகை கிடைக்க வேண்டும். 

கடந்த காலத்தில், 50 கிலோ உப்பு ரூ. 12,000 க்கு விற்கப்பட்டது. எங்களுக்கு அவ்வளவு பணம் வேண்டாம். தொழிலுக்கு ஏற்ற விலையை நாங்கள் பெற வேண்டும் என்றும் புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

-புத்தளம் நிருபர் ரஸ்மின்-

தேசபந்து தென்னகோனுக்கு ஆப்பு!

0

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய பாராளுமன்ற விசாரணைக் குழு, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் கண்டறிந்து, அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (22) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதேவேளை, குறித்த அறிக்கையை அச்சிட்டு பாராளுமன்ற இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை தயாரிக்க கடந்த ஏப்ரல் மாதம் விசேட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. 

உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன குழுவின் தலைவராக பணியாற்றினார். 

நீதிபதி நீல் இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏகநாயக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாகப் பணியாற்றினர். 

இந்த விசாரணைக் குழு 10 தடவைகளுக்கு மேல் கூடி, சாட்சியங்களைச் சேகரித்தது. 

மேலும், 2025 ஜூலை 16 முதல் தினமும் கூடி, சாட்சியங்களைப் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டது. 

இதன்படி, விசாரணைக் குழுவின் சாட்சியப் பதிவு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, குழுவின் அறிக்கை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பிக்கப்பட்டு, தென்னகோனை பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கல்விக்கு உதவும் சட்டத்தரணி முஜீப் அமீன்!

கல்விக்கு உதவும் முன்னோடி – சட்டத்தரணி முஜீப் அமீன்..!

எஸ். சினீஸ் கான்

கல்வி என்பது ஒவ்வொரு சமூகத்தின் முன்னேற்றத்தின் அடித்தளமாக இருக்கிறது. அதனை அனைவருக்கும் சமமாகக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுவது, மனிதநேயத்தின் உயர்ந்த வடிவமாகக் கருதப்படுகிறது. இத்தகைய உயரிய நோக்கத்துடன் தன்னை அர்ப்பணித்துள்ளவரே சட்டத்தரணி முஜீப் அமீன் அவர்கள்.

பரக்கா சரட்டி (Barakah Charity) நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய நிர்வாகியாக செயல்படும் இவர், கல்வித் துறையில் பல்வேறு முக்கியமான திட்டங்களை முன்னெடுத்து, ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். அவரது முயற்சிகள் எதிர்கால நலன்களை கருதி திட்டமிடப்பட்டவையாகவும், நன்கு பரிசீலிக்கப்பட்டவையாகவும் காணப்படுகின்றன.

அவரின் முயற்சில் இதுவரைக்கும், 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ.5,000 வீதம் கல்விப் புலமைப் பரிசில்கள், தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இது ஏழை மற்றும் பின் தங்கிய குடும்ப மாணவர்களுக்கு ஒரு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.

அத்துடன், கல்விக்கான உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில், மூன்று பாடசாலைகளுக்கு நவீன கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் மற்ற மூன்று பாடசாலைகளுக்கான கட்டிடங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளன. இதன் பின்னணியில் இன்னும் சில பாடசாலைகளுக்கான கட்டுமான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

IT வசதிகள் கொண்டு வரப்பட்டு, தகவல் தொழில்நுட்ப உலகிற்கு மாணவர்களை நன்கு அறிமுகப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவை தவிர, மாணவர்கள் கல்வியை மகிழ்வுடன் தொடரும் வகையில், 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை பைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தைத்த சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் செயல்கள் கல்விக்கு உந்துகோலாகவும், சமூக சமத்துவத்திற்கான அடி இறையாகவும் விளங்குகின்றன.

அவர் அவரது சொந்த மாவட்டமான திருகோணமலை மாவட்டத்தை தாண்டி மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களிலும் அவரது சமூகப்பணி தொடர்கிறது.

முஜீப் அமீன் அவர்களின் பணிகள் ஒரு தனிநபரின் முயற்சி என்பது மட்டும் அல்ல; அது ஒரு தலைமுறையின் எதிர்காலத்தையும், ஒரு சமூகத்தின் நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் திட்டம். கல்வி என்பது வெறும் புத்தகம் அல்ல; அது வாழ்வின் வழிகாட்டி என்பதை அவரின் பணிகள் வெளிப்படையாக காட்டுகின்றன.

சட்டத்தரணி முஜீப் அமீன் அவர்கள் மேற்கொண்டு வரும் கல்வி தொடர்பான சேவைகள், ஒரு சமூக சேவகரின் உண்மையான பண்பை எடுத்துக்காட்டுகின்றன. அவரைப் போன்று கல்விக்காக அர்ப்பணித்து செயல்படும் நபர்கள் தான் சமூகத்தின் உண்மையான தூண்கள். அவரது செயல்கள் தொடர்ந்து வளர்ந்து பல மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் என்பதில் ஐயமில்லை.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

0

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடாத்தப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். 

அறிக்கை பின்வருமாறு, 

பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கும் புலமைப்பரிசில் வழங்குவதற்குமாக தரம் 5 மாணவர்களுக்காக நடாத்தப்படும் பரீட்சை – 2025

நேர அட்டவணை 

II, ஆம் வினாப்பத்திரம் – 09.30 – 10.45 மணி 

I ஆம் வினாப்பத்திரம் – 11.15 – 12.15 மணி 

மேற்படி பரீட்சை 2025 ஓகஸ்ட் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2787 பரீட்சை நிலையங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இப் பரீட்சைக்காக விண்ணப்பித்த சகல பரீட்சார்த்திகளினதும் வரவு இடாப்புகள் உரிய பாடசாலை அதிபர்களுக்குத் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன. 

இதுவரையில் வரவு இடாப்பு கிடைக்கப்பெறாத பாடசாலை அதிபர்கள் www.doenets.lk இற்குப் பிரவேசித்து ‘எமது சேவை’ இன் கீழுள்ள Exam Information Centre’ இன் மீது சொடுக்குவதன் மூலமோ அல்லது http://onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசிப்பதன் மூலமோ வரவு இடாப்பைத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். 

அங்கு குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளின் தகவல்களில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருப்பின் 2025 ஜூலை 25 ஆம் திகதி தொடக்கம் 2025 ஓகஸ்ட் 04 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் அதனை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பதனை அறியத்தருகின்றேன். 

விசாரணைகள் :- 

தொலைபேசி இலக்கங்கள் : 011-2784208, 2784537, 2786616, 2785413 

துரித அழைப்பு இலக்கம் : 1911 

தொலைநகல் இலக்கம் : 011-2784422

ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே 

  பரீட்சை ஆணையாளர் நாயகம்