Friday, March 27, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 32

சர்வதேச நீர்ச்சறுக்கல் வீரர்கள் சங்கமமாகும் கற்பிட்டி!

0

இலங்கையின் புவியியல் அமைப்பில் தனித்துவம் வாய்ந்த இடமாகத் திகழும் கற்பிட்டி கண்டகுழி கலப்புப் பகுதி, தற்பொழுது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் நீர்ச்சறுக்கல் (Kite Surfing) மையமாக மாறியுள்ளது.

இலங்கையில் கற்பிட்டியில் மாத்திரமே இந்த நீர்ச்சறுக்கல் விளையாட்டு மேற்கொள்ளப்படுவது இதன் மிக முக்கியமான சிறப்பம்சமாகும்.

கற்பிட்டியில் இந்த நீர்ச்சறுக்கல் விளையாட்டு சுமார் 15 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக, கண்டகுழி கலப்புப் பகுதி ஆழமற்று காணப்படுவதால், நீர்ச்சறுக்கலில் ஈடுபடுபவர்களுக்கு இது மிகவும் பாதுகாப்பானதாகவும், விளையாட்டை எளிதாகக் கற்றுக்கொள்ள ஏதுவான இடமாகவும் அமைகின்றது. எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் விளையாடுவதற்கு இது ஒரு மிகச் சிறந்த இடமாக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்ச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபடுவதற்காக அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ், ஆஸ்திரியா, கனடா, சுவிஸ்லாந்து மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் கற்பிட்டிக்கு வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு இலங்கைப் பயிற்றுவிப்பாளர்களே முறையான பயிற்சிகளை வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, இரண்டு அல்லது மூன்று வாரங்கள் என்ற குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தினமும் இந்த நீர்ச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டு மகிழ்ந்துவிட்டுத் தமது நாடுகளுக்குத் திரும்புகின்றனர்.

இலங்கையிலுள்ள இவ்வாறான தனித்துவம் வாய்ந்த சுற்றுலா மையங்களை முறையாக மேம்படுத்துவதன் மூலம், நாட்டின் அந்நியச் செலாவணியை பெருமளவில் ஈட்ட முடியும். அத்துடன், இத்துறை சார்ந்த வளர்ச்சி உள்ளூர் மக்களுக்கு அதிகளவிலான தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கும்.

எனவே, கற்பிட்டி போன்ற இடங்களைச் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவது இலங்கையின் சுற்றுலாத் துறைக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் பலன் அளிப்பதாக அமையும்.

கற்பிட்டி வீதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

0

ஜூட் சமந்த

கற்பிட்டி – சேதாப்பொல பகுதியில் இயங்கி வந்த பாரியளவிலான கசிப்பு (சட்டவிரோத மதுபானம்) உற்பத்தி நிலையமொன்றை வெற்றிகரமாக சுற்றிவளைக்க நுரைச்சோலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தச் சோதனை நடவடிக்கை கடந்த 23ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

கசிப்பு உற்பத்திக்குத் தேவையான ஆயத்தப் பணிகளைச் செய்து கொண்டிருந்த போது, சேதாப்பொல பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உற்பத்தி நிலையத்திலிருந்து கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 3,60,000 மில்லி லீட்டர் கோடா (Goda), ஒரு தொகுதி உபகரணங்கள் மற்றும் 02 இரும்பு பீப்பாய்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

குறித்த சந்தேகநபர் நீண்டகாலமாக ஒரு சதுப்புநிலப் பகுதியில் இரகசியமாக இந்த உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்துள்ளதாகவும், அங்கிருந்து வெளி மாகாணங்களுக்கும் கசிப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் விஜேரத்ன தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பதுங்கியிருந்த பயங்கரக் குற்றவாளி கைது!

0

சர்வதேச சிவப்பு அறிவித்தல் (Red Notice) பிறப்பிக்கப்பட்டு வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் இந்தியாவில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

காவல்துறை மா அதிபர் (IGP), இந்திய அரசாங்கம், இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் இந்திய பாதுகாப்புப் பிரிவினருடன் நடத்திய நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி, சந்தேக நபர் 24.01.2026 அன்று மாலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் மேலதிக விசாரணைகளுக்காக கெசல்வத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் கெசல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஆவார். அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன

2015யில் கெசல்வத்தை பொலிஸ் பிரிவில் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலை செய்தமை, 2018யில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமை, 2021யில் மட்டக்குளி பொலிஸ் பிரிவில் ஒருவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியமை, 2021யில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் கைக்குண்டு ஒன்றை வைத்திருந்தமை, கெசல்வத்தை, வெள்ளவத்தை மற்றும் புளுமெண்டல் பொலிஸ் பிரிவுகளில் கொள்ளை மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பில் அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.

அந்த வகையில் தற்போது, கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபரின் (DIG) மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகக்கிண்ண தொடரில் இருந்து வெளியேறிய வங்கதேச அணி!

0

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்லப்போவதில்லை என பங்களாதேஷ் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 2026 ICC ஆடவர் ரி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்களாதேஷிற்குப் பதிலாக ஸ்கொட்லாந்து அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஸ்கொட்லாந்து அணி தற்போது ‘சி’ (Group C) குழுவில் இத்தாலி, நேபாளம், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் போட்டியிடவுள்ளது.

கல்லடி பாலத்தில் முடிந்த வாழ்க்கை!

0

மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து 20 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது. 

இவரது சடலம் மீட்கப்பட்டதையடுத்து, கடந்த 23 நாட்களில் மாவட்டத்தில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். 

தாழங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சம்பவ தினமான நேற்று இரவு சுமார் 7.15 மணியளவில் குறித்த யுவதி தற்கொலை செய்து கொள்வதற்காகப் பாலத்திலிருந்து வாவிக்குள் குதித்துள்ளார். 

இதனை அவ்விடத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அவதானித்துள்ளனர். உடனடியாகச் செயற்பட்ட மீனவர்கள், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து, படகு மூலம் சடலத்தை மீட்டு கரைக்குக் கொண்டு வந்ததுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

உயிரிழந்த யுவதி கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர் எனவும், காதல் விவகாரம் காரணமாகவே இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த வருடத்தின் ஜனவரி 1ஆம் திகதி முதல் நேற்று (23) வரையிலான குறுகிய காலப்பகுதிக்குள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

உயிரிழந்தவர்களில் 3 இளம் யுவதிகளும், 75 வயதுக்கு மேற்பட்ட 3 முதியவர்களும் உள்ளடங்குவதாகப் பொலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இத்தகைய தற்கொலைச் சம்பவங்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்பிட்டி பிரதேச சபை தலைவரின் அதிரடி ஆரம்பம்!

நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலைய உள்ளக வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்தின் உள்ளக வீதிக்கான காபட் இடும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

கற்பிட்டி பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஒதுக்கீட்டில் சுமார் 47,20,000 ரூபா செலவில் இந்த வீதி புணரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளரின் நேரடி கண்காணிப்பின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மக்களின் நீண்டகாலத் தேவைகளை உணர்ந்து, முறையான திட்டமிடலுடன் முன்னெடுத்து வரும் அபிவிருத்திப் பணிகள் வரிசையில் இவ் வேலைத்திட்டம் இடம்பெறுவதுடன் மக்களின் வரிப்பணத்தை முறையான நிர்வாகத்தின் ஊடாக மக்களுக்கே பயனுள்ள வகையில் மாற்றியமைப்பதில் அரசு என்றும் உறுதியாக இருப்பதை இது உணர்த்துகிறது.

கற்பிட்டி நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையம் 2001 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட போதும் கடந்த 25 வருடங்களாக உள்ளக வீதிகள் எவ்வித புனரமைப்பும் செய்யப்படாது காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

21 மாவட்டங்களில் புதிய ஆரோக்யா மையங்கள் மக்கள் வசம்!

0

நாட்டில் உள்ள மக்களுக்கு கௌரவத்துடனும் அபிமானத்துடனும் உன்னதமான சுகாதார நலன்களைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் 1000 ஆரோக்கிய மையங்களை (Arogya Wellness Centers) நிறுவும் திட்டத்தின் முன்னோடித் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, 21 மாவட்டங்களில் 42 மையங்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் “ஆரோக்கியமான இலங்கை” (Healthy Sri Lanka) எனும் புதிய திட்டத்தின் கீழ் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த முன்னோடித் திட்டத்தின் முதற்கட்டமாக 2025 ஆம் ஆண்டு காலி (மாபலகம), இரத்தினபுரி (எத்ஓய), களுத்துறை (தல்பிட்டிய), கண்டி (பொலகொல்லவத்தை) மற்றும் மாத்தளை (கன்கந்த) ஆகிய பகுதிகளில் 5 ஆரோக்கிய மையங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன.

இவ்வாண்டிற்குள் நாடு முழுவதும் 250 புதிய ஆரோக்கிய மையங்களை நிறுவுவதற்கு சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதுடன், இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி மக்கள் பாவனைக்கு வழங்கப்படவுள்ள 42 மையங்களின் மாவட்ட ரீதியான விபரம் பின்வருமாறு:

கொழும்பு (3), குருநாகல் (3), களுத்துறை (3)

கம்பஹா (2), கண்டி (2), காலி (2), மாத்தறை (2), ஹம்பாந்தோட்டை (2), மட்டக்களப்பு (2), புத்தளம் (2), பதுளை (2), மொனராகலை (2), அனுராதபுரம் (2), பொலன்னறுவை (2), அம்பாறை (2), கேகாலை (2), நுவரெலியா (2), திருகோணமலை (2)

இரத்தினபுரி (1), கல்முனை (1), மாத்தளை (1)

களுத்துறை மாவட்டத்தின் கனன்வில மற்றும் ஹீனட்டியங்கல ஆகிய ஆரோக்கிய மையங்களை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ திறந்து வைப்பதன் மூலம் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இந்த ஒவ்வொரு மையத்திலும் ஒரு குடும்ப வைத்தியர், சமூக சுகாதார தாதி உட்பட எட்டுப் பேரைக் கொண்ட சுகாதாரக் குழுவினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மக்கள் இலகுவாக அணுகக்கூடிய இடங்களில் இம்மையங்கள் அமைக்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.

சமூகப் பங்கேற்புடன் இயங்கவுள்ள இம்மையங்கள் ஊடாக, அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும், பொதுமக்களைச் சுகாதார ரீதியாக வலுப்படுத்துவதும் முக்கிய நோக்கங்களாகும்.

குறிப்பாக, தொற்றா நோய்களைக் கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்துதல், புற்றுநோய் பரிசோதனை, சிறு சத்திர சிகிச்சைகள், முதியோர் பராமரிப்பு, மறுவாழ்வுச் சேவைகள், ஆரம்ப கண் மற்றும் வாய் சுகாதாரப் பராமரிப்பு, மனநலச் சேவைகள் மற்றும் ஆலோசனை, போசாக்கு சேவைகள் மற்றும் ஆய்வகப் பரிசோதனைகள் உள்ளிட்ட பல ஆரம்ப சுகாதாரச் சேவைகள் இங்கு இலவசமாக வழங்கப்பட உள்ளமை சிறப்பம்சமாகும்.

நில்கல காட்டை காப்பகமாக மாற்ற வர்த்தமானி வெளியீடு!

0

2025 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வனஸ்பதி தேசிய திட்டத்தின் கீழ், 40,684.99 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இலங்கையின் இரண்டாவது பெரிய காடான நில்கல (Nilgala) காடு, ஒரு காப்பகமாக (Reserve) மாற்றப்பட்டதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை போன்ற வெப்பமண்டல நாடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட காடுகளை உருவாக்குவதும் அவற்றைப் பாதுகாப்பதும் மிகவும் முக்கியமானது;

இந்தச் செயல்முறையானது சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, வனவிலங்குகளுக்கான ஊட்டமளிக்கும் வலயங்களை உருவாக்குகிறது. இதன் மூலம், வனவிலங்குகள் மற்றும் மனிதர்களுக்கிடையிலான சகவாழ்வுடனான ஒரு பசுமையான தேசத்தை நோக்கிய பயணம் எளிதாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசானின் 30,000 ஊழியர் பணிநீக்கப் பட்டியல் தயார்!

0

அமேசான் நிறுவனம் தனது நிர்வாகச் செலவுகளைக் குறைக்க 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அதிரடி முடிவெடுத்துள்ளது.

பிரபல அமேசான் நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு காரணங்களை கூறி சுமார் 27,000 ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி சுமார் 14,000 பணியிடங்கள் குறைக்கப்பட்டன. அந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஊழியர்களுக்கான 90 நாட்கள் ஊதியக் காலம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், நிறுவனத்தின் 30 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத வகையில், மொத்தம் 30,000 கார்ப்பரேட் பணியிடங்களை ரத்து செய்ய அந்நிறுவனம் தற்போது இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, வரும் 27ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் சுமார் 14,000 முதல் 16,000 வரையிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையானது அமேசான் வெப் சர்வீசஸ், ரீடைல், பிரைம் வீடியோ மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகளையும் சாப்ட்வேர் இன்ஜினியர் உள்ளிட்ட வெள்ளை காலர் பணியாளர்களையும் பெருமளவில் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் காலடி எடுத்து வைத்த ‘லெஜெண்ட் சரவணன்’

0

லெஜெண்ட் சரவணனின் உலகளாவிய விரிவு:

தமிழகத்தின் வணிகத்துறையில் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய லெஜெண்ட் சரவணன், தற்போது தனது எல்லையை விரிவுபடுத்தி உலகத் தமிழர்களுக்காகப் பணியாற்றத் தொடங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, இலங்கையில் தனது முதலாவது ரசிகர் மன்றத்தை அவர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார்.

ஒரு சாதனைப் பயணம் எளிய பின்னணியில் இருந்து கடின உழைப்பால் சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தை ஒரு மாபெரும் விருட்சமாக வளர்த்தெடுத்தவர் லெஜெண்ட் சரவணன்,. “அனைவருக்கும் தரமான பொருட்கள் நியாய விலையில்” என்ற தாரக மந்திரத்துடன் தங்கம், துணி மற்றும் மின்னணு சாதனங்கள் எனப் பல துறைகளில் அவர் முத்திரை பதித்துள்ளார். வணிகத்தில் உச்சத்தைத் தொட்ட அவர், சுமார் 10,000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பையும், 35,000-க்கும் மேற்பட்டோருக்கு வாழ்வாதாரத்தையும் வழங்கியுள்ளார்.

இலங்கை வாழ் மக்கள் மீது லெஜெண்ட் சரவணன் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடாக ரசிகர் மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. அகில உலக லெஜெண்ட் சரவணன் ரசிகர் மன்றத் தலைவர் T. முத்துதுரை அவர்களின் ஆணைக்கிணங்க, மகளிரணி தலைவி Dr. கலைவாணி, தலைமைச் செயலாளர் Dr. I. டேவிட், மருத்துவரணி துணைத் தலைவர் J. ராஜேஷ் மற்றும் கவிஞர் ரித்து சூர்யா ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்து இதனைத் தொடங்கி வைத்தனர்.

இலங்கையின் 9 மாகாணங்களுக்கும், 22 மாவட்டங்களுக்கும் தனித்தனியே இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, மக்கள் நலன் சார்ந்த பல்வேறு சமூகச் சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கனவுகளின் நாயகன் வணிகத்தில் வெற்றி பெற்றாலும், தனது சினிமா கனவை நனவாக்க 2022-ல் ‘The Legend’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் மருத்துவம் மற்றும் கல்வி சார்ந்த சமூக அக்கறையுள்ள கருத்துக்களைக் கொண்டிருந்தது. விமர்சனங்கள் எழுந்தபோதும், அவற்றை மன உறுதியுடன் எதிர்கொண்ட அவர், “கனவுகள் வயதைப் பார்க்காது” என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்,,.

தன்னைப்போலவே மற்றவர்களும் உயர்வு பெற வேண்டும் என்ற அவரது உயரிய சிந்தனையே அவரது வெற்றியின் ரகசியமாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தைத் தாண்டி உலகத் தமிழர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற நோக்கில் லெஜெண்ட் சரவணன் எடுத்துள்ள இந்த புதிய முயற்சி, அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.