Saturday, September 13, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 33

இன்டெல் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

உலகின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான இன்டெல் நிறுவனம், ஜூலையில் சுமார் 5,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

கடுமையான சந்தைப் போட்டி, நிதி இழப்புகள் மற்றும் AI துறையில் பின்தங்கியது போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கலிபோர்னியா, ஓரிகான், அரிசோனா மற்றும் டெக்சாஸ் உள்ளிட்ட இடங்களில் 5,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பணிநீக்கங்கள் புதிய தலைமை நிர்வாக அதிகாரி லிப்-பு டானின் கீழ் நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகக் கூறப்படுகிறது.

2024 தொடக்கம் 15000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது மேலும் 5000 பேர் பணிநீக்கம் செய்யப்படஉள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மு.ஜனாதிபதி ரணிலின் திட்டத்தை கையிலெடுத்த அரசாங்கம்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை கடுமையாக எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசாங்கம் தற்போது அந்த மறுசீரமைப்பு திட்டத்தை செயற்படுத்த முனைவது வரவேற்கத்தக்கது. இதனையே கர்மவினை என்பார்கள். நடைமுறைக்கு சாத்தியமான வகையில் கல்வி முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில்  வெள்ளிக்கிழமை (18)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

புதிய கல்வி சீர்த்திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் 2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் மறுசீரமைப்பு பணிகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ட்டன. இருப்பினும் அதனை செயற்படுத்த முடியவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரண்டாண்டு கால பதவியில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நவீன தொழில் உலகினை கருத்திற் கொண்டு கல்வி மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அப்போதைய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ஆகியோர் தலைமையில் குழுவை நியமித்து மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்த கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தற்போதைய கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும், தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆசிரியர்களையும் தூண்டிவிட்டு போராட்டத்தை தோற்றுவித்தார்கள். இதனால் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

இவ்வாறான நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  மேற்கொண்ட கல்வி மறுசீரமைப்பு பணிகளை இந்த அரசாங்கம் எவ்வித மாற்றமுமில்லாமல் செயற்படுத்த தீர்மானித்துள்ளது. 

இதனையே கர்மவினை என்று குறிப்பிட வேண்டும். சிறந்த விடயங்களை செயற்படுத்துவதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். நடைமுறைக்கு சாத்தியமான வகையில் கல்வி முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும்.

புதிய கல்வி மறுசீரமைப்பில் 7 முதல் 9 ஆம் தரம், 9 முதல் 11 தரம், 11 முதல் 13 ஆம் தரம் என்ற அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 11 தரங்களில் தடைதாண்டல் பரீட்சையை நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது எந்த அடிப்படையில் என்பதில் தெளிவற்ற தன்மை காணப்படுகிறது.

பாட தெரிவுகளின் போது விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும். வரலாறு மற்றும் அழகியற் கலை பாடங்களை இரண்டாம் நிலையாக்காமல் அவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் சகல தரப்பினருடனும் அரசாங்கம் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் என்றார்.

மட்டக்களப்பில் மாபெரும் கண்காட்சி!

0

மட்டக்களப்பில் நிர்மாணத்துறை, தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறைகளை வலுப்படுத்தும் நோக்கில் Batticaloa Expo 2025 வர்த்தக கண்காட்சி நிகழ்வானது 17.07.2025 அன்று மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது தடவையாக இடம் பெறும் batticaloa Expo 2025 கண்காட்சியானது 17.07.2025 அன்று முதல் 20.07.2025 வரையான நான்கு நாட்கள் இடம்பெறுவதுடன், இதில் தொழில் சார் கண்காட்சி மட்டுமல்லாது சிறுவர்களுக்கான mega carnival உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கியுள்ளன.

நிர்மாணம், தொழில்துறை மற்றும் வணிகத் துறைகளுக்கிடையிலான தொடர்புகளை மாவட்டத்தில் வலுப்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த ஆண்டு பாரம்பரிய கண்காட்சியாக குறித்த கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துவதற்கும் இக் கண்காட்சியானது சந்தர்ப்பமாக அமையுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

இக்கண்காட்சியில் 175 இற்கு மேற்பட்ட காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், முன்னணி தொழில் நிபுணர்கள் மற்றும் தொழில் முனைவோர்களினால் கிழக்கு மாகாணத்தின் பொருளாதார மற்றும் வணிக வளர்ச்சி ஊக்குவிக்கபடுவதாக ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

நிர்மாணம், உள்ளமைப்பு, இயந்திரங்கள், வேளாண்மை சார்ந்த தயாரிப்புகள், பதப்படுத்தல் மின் மற்றும் மின் உபகரணங்கள், கைத்தொழில் பொருட்கள், சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகள், கண்ணாடிப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சுகாதார உபகரணங்கள், உணவு மற்றும் பானங்கள், பரிசுப் பொருட்கள், துணி, கருவி உபகரணங்கள் மற்றும் பல துறைகளுக்கான தயாரிப்புகளும் சேவைகளும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Tima international (Pvt) Ltd மற்றும் Event Max Exhibitions ஆகியவவை இணைந்து ஒழுங்குபடுத்திய இக்கண்காட்சி நிகழ்விற்கு மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனம், Ceylon institute of Builders (CIOB), EDB மற்றும் கிழக்கு மாகாண வர்த்தக சங்கங்கள் ஆதரவு வழங்குகின்றன.

ஒருவகை நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப்!

0

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு விதமான நரம்பு பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு 79 வயதாகிறது. கடந்த ஜூலை மாதம் நியூ ஜெர்சியில் நடந்த பிபா உலகக் கோப்பை பைனலின் போது, டிரம்ப்பின் வீங்கிய கால்கள் பத்திரிக்கையாளர்களால் போட்டோ எடுக்கப்பட்டது. அதேபோல், வெள்ளை மாளிகையில் பஹ்ரைன் பிரதமருடன் நடந்த சந்திப்பின் போது, அவரது கையில் காயங்கள் இருப்பது போன்ற போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அவரது உடல்நலம் குறித்து விவாதம் எழுந்தது.

இந்த நிலையில், அதிபர் டிரம்ப்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் லீவிட் கூறியதாவது; அதிபர் டிரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு க்ரானிக் வெனோஸ் இன்சப்பிசியன்ஸ்’ (நாள்பட்ட சிரை பற்றாக்குறை) எனப்படும் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை நோய் உலகில் 20ல் ஒருவரை பாதிக்கும். கால்களில் இருந்து இதயத்திற்கு ரத்தம் சரியாக திரும்பாததால் இந்தப் பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அடிக்கடி கைகுலுக்குதலால் ஏற்பட்ட திசு சேதம் மற்றும் இதய நோய்தடுப்பு மருந்தான ஆஸ்பிரின் மருந்து பயன்பாடு இதற்கு காரணம்.

கால்களில் உள்ள நரம்புகளுக்கு ரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு செலுத்துவதில் சிரமம் ஏற்படும்போது இந்த நிலை உருவாகிறது. மற்றபடி, தமனி நோய், இதய செயலிழப்பு அல்லது சிறுநீரக பிரச்சினைகள் போன்ற கடுமையான பாதிப்புகள் எதுவும் இல்லை. இந்த நோய் கண்டறியப்பட்டாலும் டிரம்ப்புக்கு எந்த விதமான வலி அல்லது அசவுகரியம் இல்லை, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

66,000 கோடி இழப்பீடு கேட்டு மார்க்கிற்கு எதிராக வழக்கு!

0

‘பேஸ்புக்’ பயனர்களின் தகவல்கள் கசிந்த விவகாரத்தில் அதன் தாய் நிறுவனமான, ‘மெட்டா’வின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க்கிற்கு எதிராக, 66,000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று துவங்கியது.

அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்தின் கீழ், ‘பேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம்’ ஆகிய சமூக ஊடகங்கள் செயல்படுகின்றன. இதில் கோடிக்கணக்கான பயனர்களின் தகவல்கள் உள்ளன.

இந்த தகவல்களை, 2016ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்புக்காக அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா பயன்படுத்தியது.

இது, அமெரிக்காவின் சட்டப்படி தனியுரிமை மீறல் என சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக 2018ல், அமெரிக்க பார்லிமென்ட்டில் ஆஜராகி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் மன்னிப்பு கோரினார். 35,000 கோடி ரூபாய் அபராதம் செலுத்தினார்.

இந்த சம்பவத்தால் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, 1.36 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவைச் சந்தித்தன. இதனால், ஒவ்வொரு முதலீட்டாளரும் பல ஆயிரம் கோடி ரூபாயை இழந்தனர். அவர்கள், பேஸ்புக் நிறுவனர் மார்க் மற்றும் அதன் தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

அதில், ‘பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவால் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயங்கள் குறித்து, மெட்டா எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை.

இதனால் 66,000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை நேற்று துவங்கியது. அதில் மெட்டா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘பயனர் தனியுரிமைக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம்.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவின் ஏமாற்று வேலைக்கு நாங்கள் பலியானோம். வழக்கின் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

பாலியல் சேட்டை செய்த 81 வயது பௌத்த துறவி!

0

காலி ஹபராதுவ விஹாரை ஒன்றில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 81 வயதான பௌத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தலைமை மதகுருவாக பணியாற்றும் இந்த துறவி, 41 வயதான நியூசிலாந்து நாட்டவருக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கிய நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் குறித்த சுற்றுலாப் பயணி, இந்த சம்பவம் தொடர்பில் உனவட்டுன சுற்றுலா காவல்துறையிடம் முறையிட்டதை அடுத்தே பௌத்த துறவி கைது செய்யப்பட்டார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை!

0

புத்தளம் முதல் கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

புத்தளம் முதல் கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையில் 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் புத்தளம் முதல் கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் கடல் அலைகள் 2.5 முதல் 3.00 மீற்றர் வரை உயரக்கூடும். 

எனவே அப்பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை நோக்கி வரக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு புத்தளம் முதல் கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்சார் சமூகம் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை கடற்பகுதிகளில் அவதானத்துடன் செயற்படுமாறு கடற்சார் சமூகம் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அதிகரித்த கிரிக்கெட் முறைப்பாடுகள்!

விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட புலனாய்வுப் பிரிவு (SISU) 2024 ஆம் ஆண்டில் பெறப்பட்ட முறைப்பாடுகளில் கிரிக்கெட் தொடர்பானவை மிக அதிகமாக இருந்ததாக தெரிவித்துள்ளது. 

கிரிக்கெட் தொடர்பாக ஆட்ட நிர்ணயம் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு உள்ளிட்ட 9 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவை முக்கியமாக 2024 இல் நடைபெற்ற இலங்கை பிரீமியர் லீக் மற்றும் லெஜண்ட்ஸ் கிண்ணப் போட்டிகளுடன் தொடர்புடையவை என கூறப்படுகிறது. 

2024 ஆம் ஆண்டில் SISU மொத்தம் 27 முறைப்பாடுகளைப் பெற்றது. இதில் கிரிக்கெட், கைப்பந்து, ஹாக்கி, ஜூடோ, மேசைப்பந்து, கபடி, மற்றும் பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகள் அடங்கும். 

இருப்பினும், 2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 6 முறைப்பாடுகள் பெறப்பட்டதாகவும், 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 3 முறைப்பாடுகள் பெறப்பட்டதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.


SISU, 2019 ஆம் ஆண்டு 24 ஆம் எண் விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டத்தின் பிரிவு 21 இன் கீழ் நிறுவப்பட்டது. 

இப்பிரிவு, விளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரிப்பது, போட்டிகளை கண்காணிப்பது, விளையாட்டு வீரர்களுக்கு விழிப்புணர்வு விரிவுரைகள் நடத்துவது, சர்வதேச விளையாட்டு அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணுவது, மற்றும் ஆட்ட நிர்ணயம், ஊழல், சட்டவிரோத கையாளுதல், சட்டவிரோத பந்தயம் போன்றவற்றில் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கிய பணிகளை மேற்கொள்கிறது. 

தற்போது, SISU பணிப்பாளர் இல்லாமல் செயல்படுவதாகவும், இதனால் சில குற்றங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இப்பிரிவு சுயாதீனமானதாக இருப்பதால், பதில் பணிப்பாளரை நியமிக்க சட்டத்தில் இடமில்லை. எனவே, உதவி பொலிஸ் அத்தியட்சகர் அல்லது உயர் அதிகாரி ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும்.

ஈராக் மார்க்கெட் தீ விபத்தில் 50 பேர் பலி!

0

கிழக்கு ஈராக்கின் அல்-குட் நகரில் உள்ள ஒரு ஹைப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். வாசித் மாகாணத்தில் உள்ள அல்-குட் நகரில் உள்ள ஐந்து மாடி கட்டிட ஷாப்பிங் மால் இரவில் தீப்பிடித்து எரிந்தது, இதில் முதலில் ஒரு பல்பொருள் அங்காடி மற்றும் ஒரு உணவகத்தில் தீ பற்றியது. தீ விபத்து ஏற்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களில் பலர் மாலில் ஷாப்பிங் செய்தும், உணவருந்தியதாக கூறப்படுகிறது. இத்தகைய தீப்பிழம்புகள் தொலைதூரம் வரையில் காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்படுத்தினர்.

இத்தகைய தீவிபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக ஈராக்கின் பஸிட் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.மேலும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. அதில் ஒரு உடல் மிகவும் மோசமாக எரிந்ததால் அதை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் ஆரம்ப விசாரணை முடிவுகள் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று ஈரானின் அரசு செய்தி நிறுவனமான ஐஎன்ஏ தெரிவித்துள்ளது. ஐஎன்ஏ இன் படி, கட்டிடம் மற்றும் மாலின் உரிமையாளர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கல்பிட்டியில் சிக்கிய 13 லட்சம் போதை மாத்திரைகள்!

0

கடந்த 2025 ஜூலை 14 ஆம் திகதி கல்பிட்டி வெல்லமுண்டலம் கடல் பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு மில்லியன் முந்நூற்று நாற்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று நாற்பது (1,349,640) போதை மாத்திரைகளை ஏற்றிச் சென்ற மூன்று டிங்கி படகுகளுடன் ஐந்து (05) சந்தேக நபர்கள் கடற்படையினர் கைப்பற்றப்பட்டனர்.

கடல் வழியே கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் உச்சமுனை கடற்படை பிரிவின் சிறப்பு கப்பல் படை ரோந்து குழுவினரால் கல்பிட்டி, வெல்லமுண்டலம் கடல் பகுதியில் மேற்கொண்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மேற்படி கடல் பகுதியில் பயணித்த மூன்று (03) சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகள் கண்காணிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.

குறிப்பிட்ட டிங்கி படகிற்குள் பதினெட்டு (18) பைகளில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒபோதை மாத்திரைகளுடன் இவ்வாறு ஐந்து (05) சந்தேக நபர்களும் மூன்று (03) டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கல்பிட்டி, மோத்துவாரம், குரக்கன்ஹேன, வன்னிமுண்டலம் மற்றும் சின்னக்குடுரிப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 மற்றும் 44 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள், போதை மாத்திரைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் துறையின் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.