பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புத்தளம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் அலைகளின் உயரம் 2.5-3 மீட்டர் வரை அதிகரிக்கலாம் எனவும், இதனால் குறித்த பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை அடைய வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகங்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகளைப் பற்றி ஆராய்வதற்கு புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே சுயாதீன விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் தொடர்பில் அரசாங்கப் பொறுப்புக் கணக்குகள் குழுவின் (COPE) பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்காக நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட இக்குழுவினை உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி விஜித் கே. மலல்கொட, ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க, அரச உடமைகள் மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டபிள்யு.எம்.சி. பண்டார ஆகியோர் குழு அங்கத்தவர்களாகவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவி கணக்காய்வாளர் திருமதி ஹஸ்தி பத்திரண அழைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கையினை 60 நாட்களுக்குள் கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும்.
நோய்வாய்ப்பட்டு மிகவும் பலவீனமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ‘பாத்திய’ காட்டு யானை உயிரிழந்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் அசோக தன்கொல்ல தலைமையிலான குழு, பொல்பிதிகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் ஆபத்தான நிலையில் இருந்த ‘பாத்திய’ யானைக்கு சிகிச்சை அளிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டது.
எனினும், தசைச் சிதைவு மற்றும் பாதிக்கப்பட்ட இரத்த ஓட்டம் காரணமாக யானை ஆபத்தான நிலையில் இருந்ததாக கால்நடை வைத்தியர்கள் தெரிவித்தனர்.
பல நாட்களாக ஒரே பக்கத்தில் இருந்த பாத்திய, நேற்று (14) மறு பக்கத்திற்கு திருப்பப்பட்டது.
பேராசிரியர் அசோக தன்கொல்லவின் அறிவுறுத்தலின் பேரில், வைத்தியர் தரிந்து விஜேகோன், வனவிலங்கு மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து தேவையான பணிகளை மிகுந்த முயற்சியுடன் மேற்கொண்டார்.
இந்நிலையில், 30-35 வயது மதிக்கப்பட்ட ‘பாத்திய’ யானை, கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (15) காலை உயிரிழந்தது.
இலங்கை கடற்படையினர், 2025 ஜூன் 30 முதல் ஜூலை 10 வரை புத்தளம் மற்றும் கல்பிட்டி கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் கலால் துறையுடன் இணைந்து மேற்கொண்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1307 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும் இரண்டு (02) டிங்கிகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளை புத்தளம் கலால் அலுவலகத்துடன் இணைந்து புத்தளம், பாரமுனை, வெல்லமுண்டலம் மற்றும் உச்சமுனை ஆகிய பகுதிகளில் புத்தளம் மற்றும் கல்பிட்டி ஆகிய இடங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் பீடி 1307 கிலோகிராம் இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.
இலங்கையில் சவூதி அரேபியாவின் 11 வது மேம்பாட்டு முயற்சியான வயம்ப பல்கலைக்கழகம் நகர அபிவிருத்தி திட்டம் இன்று (14) திறந்துவைக்கப்பட்டது.
வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த கல்வி மற்றும் வளர்ச்சித் திட்டம், சவுதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்குமிடையேயான ஆழமான உறவுகளை பிரதிபலிக்கிறது என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி அரேபிய கொண்டுள்ள நம்பிக்கையே இந்த திட்டங்களை செயற்படுத்த காரணமாக அமைந்துள்ளன.
பல்கலைக்கழகங்களை கட்டுதல், அபிவிருத்தி செய்தல் என்பது வெறும் கட்டிடங்களை நிர்மாணிப்பது மட்டுமல்ல, மாறாக அது ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான அடித்தளமாகவும், மக்களுக்கிடையேயான புரிதலையும் அறிவையும் இணைக்கும் பாலமாகவும் அமைகிறது.
இந்த திட்டம், எவ்வித உட்புற நோக்கங்களோ அல்லது நிபந்தனைகளோ இல்லாமல், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட உண்மையான அபிவிருத்தி கூட்டுறவுகள் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதற்கான ஒரு முன்னுதாரணமாக உள்ளது.
1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, சவூதி அபிவிருத்தி நிதியம், உலகம் முழுவதும் அபிவிருத்தி மற்றும் அமைதிக்காக சேவையாற்றும் சவூதியன் கொள்கையின் அடிப்படையில், 90க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலைத்த பயனுடைய திட்டங்களை செயற்படுத்த மிகுந்த முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக கல்விக்கு செய்கின்ற உதவி மாபெரும் தர்மம் என்பதை இத்திட்டத்தின் மூலம் அறிகிறோம். கல்வியே ஒரு சமூகத்தின் மேம்பாட்டுக்கு காரணமாகும்.
இது முன்னுதாரணம் மிக்க நடவடிக்கை என்றும் கூறலாம். ஒவ்வொருவரும் இந்த உலகில் வாழும் போது மற்ற மனிதனின் துன்பங்களில் பங்கு கொண்டு அதனை தீர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
எங்கள் தலைவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த உலகத்தில் இப்படியான முன்னுதாரண மனிதராக மாநபியாக இருந்து வாழ்ந்து வழிகாட்டி இருக்கிறார்கள்.
இந்த வகையில் இப்பொழுது திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற வயம்ப பல்கலைக்கழகத்திட்டம் நபிகளாரின் சிந்தனையை பிரதிபலிக்கின்ற ஒரு செயல் என்பதையும் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
வயம்ப பல்கலைக்கழகம் அறிவின் கலங்கரை விளக்கமாகவும் நம்பிக்கையின் இல்லமாகவும் இருப்பதையும், மேலும் செழிப்பான மற்றும் பாதுகாப்பான இலங்கையை கட்டியெழுப்ப உதவும் புது தலைமுறைகளை உருவாக்கும் தளமாகவும் அமையும் என நான் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார்.
மீரிகம, ஏக்கர் 20 பகுதியில் உள்ள துரியன் (முள்நாறி) தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மீது தோட்டத்தின் காவலாளி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் மீரிகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட காவலாளி மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (14) பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 2025.01.01 முதல் 2025.07.13 வரை பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 50 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடையவை என்றும், ஏனைய 18 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேற்படி 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் 34 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்றும், துப்பாக்கிச் சூட்டில் 39 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 30 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
1805 ஆம் ஆண்டு இலங்கை சுங்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, சிவப்பு லேபிள்கள் கொண்ட எந்த கொள்கலன்களும் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை, ஆனால் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 309 சிவப்பு லேபிள் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அதுல டி சில்வா தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கொள்கலன்களுக்கு சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் லேபிள்கள் இருப்பதாகவும், பச்சை மற்றும் மஞ்சள் கொள்கலன்களை வெளியிடுவது சிக்கலானது இல்லை என்றும் அவர் கூறினார்.
கொள்கலனை இறக்குமதி செய்யும் நபர் மோசடியில் ஈடுபட்டுள்ளமை, கொள்கலனை அனுப்பும் நபர் போதைப்பொருள் அல்லது ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளமை, அல்லது கொள்கலனை அனுப்பும் நபருக்கு துறைமுகம் அல்லது நாடு குறித்து சந்தேகம் உள்ளமை போன்ற காரணிகளின் அடிப்படையில் கொள்கலன்கள் சிவப்பு லேபிள் செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி கூறினார்.
சிவப்பு லேபிள்கள் கொண்ட கொள்கலன்களில் ஆயுதங்கள், விவசாயத் தொழில் மற்றும் தேயிலைத் தொழிலை அழிக்கக்கூடிய பூச்சிக்கொல்லிகள் மற்றும் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகள் இருக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.
அத்தகைய சிவப்பு லேபிள் கொள்கலன்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் அதையும் மீறி 309 சிவப்பு லேபிள் கொள்கலன்களை வெளியிட்டுள்ளது என்றும், இது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 87 வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்சனையால் காலமானார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் தனது வீட்டிலேயே காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து புகழ்பெற்றார். மறைந்த சரோஜாதேவிக்கு திரையுலகினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சரோஜா தேவி. கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் 1938ம் ஆண்டு ஜன 7ல் பிறந்த இவர் தனது 17வது வயதில் ‛மகாகவி காளிதாஸ்’ என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகாகி புகழ்பெற்றார். தமிழில் ‛நாடோடி மன்னன்’ என்ற படத்தில் எம்ஜிஆர் உடன் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் தனது வீட்டிலேயே காலமானார். பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையும், தமிழகம் உள்ளிட்ட பிறமாநில அரசு விருதுகளையும் வென்றுள்ளார். சரோஜாதேவியின் மறைவு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்படி இன்று (14) முதல் எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அதன்படி, இன்று (14) துமிந்த திசாநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 250,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்குமாறு கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டார்.