Home Blog Page 38

“பைத்துல்மால் நிதியம்” இலங்கை முஸ்லிம்களின் பொருளாதார மறுமலர்ச்சி!

✍️ எஸ். சினீஸ் கான்

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நீண்டகால சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளில், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள “இலங்கை பைத்துல்மால் நிதியம்” அமைப்பதற்கான தனிநபர் பிரேரணை, கவனத்திற்குரியதும் வரவேற்கத்தக்கதுமான ஒரு முன்முயற்சியாகக் காணப்படுகிறது.

பல தசாப்தங்களாக, இலங்கையில் சமூக நலன், கல்வி உதவிகள், வாழ்வாதார மேம்பாடு, விதவைகள், அநாதைகள் மற்றும் வறிய குடும்பங்களுக்கான உதவிகள் பெரும்பாலும் தனிநபர்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் முயற்சிகளின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தாலும், தேசிய மட்டத்தில் சட்டபூர்வமான, வெளிப்படையான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அமைப்பு இல்லாதது ஒரு குறையாக இருந்து வருகிறது.

அந்தக் குறையை நிரப்பும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணை, சமூக வளங்களைத் திட்டமிட்ட முறையில் பயன்படுத்துவதற்கான புதிய கட்டமைப்பை உருவாக்கக்கூடியதாகும்.

இன்றைய உலகில் பல முஸ்லிம் நாடுகள் பைத்துல்மால் நிதியங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. மலேசியா, இந்தோனேசியா, புரூணை, குவைத், கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்தான் மற்றும் சூடான் போன்ற பல நாடுகளில் இத்தகைய அமைப்புகள் கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, வீடமைப்பு, வாழ்வாதார மேம்பாடு மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. இந்நாடுகளில், சட்டபூர்வமான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தின் காரணமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச நன்கொடையாளர்களின் நம்பிக்கையையும் இந்த அமைப்புகள் பெற்றுள்ளன.

அதேபோன்று, இலங்கையிலும் சட்டபூர்வமானதும், முறையான நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டதும், தணிக்கைக்கு உட்பட்டதுமான ஒரு பைத்துல்மால் நிதியம் உருவாக்கப்படுமானால், சர்வதேச முஸ்லிம் நாடுகள், சர்வதேச மனிதாபிமான அமைப்புகள், அபிவிருத்தி நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம்களின் நிதிப் பங்களிப்புகளை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் ஈர்க்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகலாம். இதன் மூலம் வெளிநாட்டு உதவிகளை நம்பகமான வழிமுறையின் ஊடாகப் பெற்றுக்கொண்டு, அவற்றை திட்டமிட்ட சமூக அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும்.

இந்த நிதியத்தின் சிறப்பு, அது ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டுமே பயன்படும் அமைப்பாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதாகும். கல்வி உதவிகள், மருத்துவ உதவிகள், இயற்கை அனர்த்த நிவாரணம், அவசர மனிதாபிமான உதவிகள், வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற பல்வேறு சமூக நல நடவடிக்கைகள், தேவையின் அடிப்படையில் முஸ்லிம்கள் மட்டுமன்றி அனைத்து சகோதர இன மக்களுக்கும் வழங்கப்படலாம். இத்தகைய அணுகுமுறை, சமூக நல்லிணக்கத்தையும் பரஸ்பர நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்தும்.

அதேவேளை, எந்தவொரு தேசிய நிதியத்தின் வெற்றியும் அதன் பெயரில் அல்லாது அதன் நிர்வாகத் தரம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் சார்பற்ற செயற்பாட்டில்தான் தங்கியுள்ளது. எனவே, இத்தகைய நிதியம் உருவாக்கப்பட்டால், சுயாதீன நிர்வாகம், வருடாந்த தணிக்கை, நவீன நிதி முகாமைத்துவம் மற்றும் பொதுமக்களுக்கு திறந்த கணக்கறிக்கை முறை ஆகியவை கட்டாயமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் தனிநபர் பிரேரணை, ஆரோக்கியமான ஜனநாயக விவாதத்தின் மூலம் பரிசீலிக்கப்பட்டு, நாட்டின் சட்டங்களுக்கும் நல்லாட்சி நெறிமுறைகளுக்கும் அமைவாக நடைமுறைப்படுத்தப்படுமானால், அது சமூக நலனுக்கான ஒரு முக்கியமான தேசிய நிறுவனமாக உருவெடுக்க முடியும்.

எனவே, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள “இலங்கை பைத்துல்மால் நிதியம்” தொடர்பான தனிநபர் பிரேரணை, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் ஒட்டுமொத்த சமூக நலனுக்கும், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்குமான ஒரு ஆக்கபூர்வமான முயற்சியாக வரவேற்கப்பட வேண்டியது அவசியமாகும்.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி பெரியதொரு கேள்விக்குறியாக மாறியுள்ளது!

“நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணுவதிலும், அமைதியை நிலைநாட்டுவதிலும் எழுந்துள்ள சவால்கள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்பொழுது முழுச் சட்டத்தின் ஆட்சியும் பெரியதொரு கேள்விக்குறியாக மாறியுள்ளது” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று புதன்கிழமை (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

கடும்  தொனியில் அங்கு  உரையாற்றிய கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,                                                            

நேற்று (8 )நாம் விவாதிக்கும் இந்த ஒழுங்கு விதிகளில், குறிப்பாக மோட்டார் வாகனச் சட்டம், சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களின் விதிமுறைகள் பற்றிப் பேசுகிறோம். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இது போன்ற சட்டங்களைக் கொண்டுவரும் அதே வேளையில், நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பேணுவதிலும், அமைதியைப் பாதுகாப்பதிலும் எழுந்துள்ள சவால்கள் குறித்தும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்போது முழுச் சட்டத்தின் ஆதிக்கமும் பெரியதொரு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

குறிப்பாக சிறைச்சாலைகளில் நடக்கும் சம்பவங்களை அடுத்து இது தீவிரமடைந்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் சில வருடங்களுக்கு முன்பு இவ்வாறான சம்பவங்கள் நடந்தன, அதேபோல் மஹர சிறைச்சாலையிலும் நடந்தது. இப்போது நீர்கொழும்பு சிறைச்சாலையிலும் அத்தகையதொரு சம்பவம் நடந்துள்ளது.

கைதிகளின் நெருக்கடி ஒரு காரணம் என்று நாம் கூறினாலும், சிறைச்சாலைகளுக்குள் நிலவும் ஒரு குறிப்பிட்ட கலாசாரமும் இதற்கு முக்கிய காரணியாகும். அங்குள்ள ‘”செல்வாக்கு” மிக்க கைதிகள் தங்களுக்குத் தேவையான வசதிகளைப் பெறுவது மட்டுமன்றி, ஏனைய கைதிகளையும் அவர்கள் துன்புறுத்தும் நிலைமை காணப்படுகிறது. அதேபோல், சிறைச்சாலை அதிகாரிகளுக்குள்ளும் ஊழல்மிக்க அதிகாரிகள் இருப்பதை நாம் கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம். இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் குறித்து நாம் வருத்தமடைவதோடு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளை, அனைத்துச் சிறைச்சாலைகளிலும் கைதிகள் ஆன்மீக ரீதியில் தங்கள் மதங்களைப் பின்பற்றுவதற்கான இடவசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அண்மைய காலமாக, குறிப்பாக முஸ்லிம் கைதிகள் தங்களின் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்டிருந்த இடங்கள் தொடர்பில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

வெலிக்கடை சிறைச்சாலை: அங்கு “எல் ஹோல்” (L Hall) என்ற மண்டபம் உள்ளது. அதில் பல பிரிவுகள் உள்ளன. அங்கு மேன்முறையீடு செய்துள்ள அதிக அளவிலான கைதிகள் இருக்கிறார்கள். இந்த மண்டபத்தின் 3 ஆவது மாடியில் பௌத்த மதக் கடமைகளுக்கான ‘போதி மழுவ’ ஒன்றும், 2ஆவது மாடியில் கிறிஸ்தவ மதத்தவர்களுக்கான தேவாலயம் ஒன்றும் உள்ளது. அதேபோல், கீழ் தளத்தில் முஸ்லிம்கள் தொழுவதற்கான ஓர் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. எங்கள் பாராளுமன்றத்திலும் ஒரு தொழுகை அறை இருக்கிறது, நீங்களும் போகிறீர்கள், நாங்களும் போகிறோம்.

அது போன்றுதான், இந்த வெலிக்கடை சிறைச்சாலையிலும் தினமும் ஐந்து வேளை தொழுகைக்காக 30 முதல் 40 பேர் வரை ஒன்று கூடித் தொழுது வந்தனர். ஆனால், தற்போது அந்த தொழுகை அறை திடீரென மூடப்பட்டுள்ளது. அங்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இதுகுறித்து உடனடியாக ஆராய வேண்டும்.

மஹர சிறைச்சாலையில் இருந்த பள்ளிவாசல் அங்கிருந்து முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. அண்மையில்கூட , பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, நீதி அமைச்சர் எங்கோ உள்ள அதிகாரிகள் கொடுத்த பதில்களையே இங்கு கூறினார்.

அமைச்சர்கள் தங்களுக்கு அதிகாரிகள் தரும் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டுமே தவிர, இங்கு வந்து கிளிப்பிள்ளை போல அதைக் கூறக் கூடாது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு, இனவாத அடிப்படையில் செயற்பட்ட சிலர் இணைந்து, மலாய் சிப்பாய்களின்
காலத்தைச் சேர்ந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அந்தப் பள்ளிவாசலை மூடிவிட்டனர். இப்போது சிறைச்சாலை அதிகாரிகள் இல்லாத பொல்லாத கதைகளைக் கூறுகிறார்கள், அமைச்சரும் அதையே இங்கு பேசுகிறார். இது முற்றிலும் பொய். அந்த பள்ளிவாசல் இருந்த இடத்தில் இப்போது வேறு மதக் கடமைகள் நடக்கின்றன.

முஸ்லிம் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் அது இன்னும் வழங்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் முனீர் முழப்பர் இதில் தலையிட்டு, பாதுகாப்புப் போதாது என்பதால் வேறு இடத்திற்கு மாற்றுவதாகக் கூறுகிறார். இத்தனை வருடங்களாகப் பாதுகாப்பாக இருந்த பள்ளிவாசலை மூடிவிட்டு எதற்காக வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்? அது பழைய இடத்திலேயே அமைந்திருக்க வேண்டும்.

இன்று கமன்தி விக்ரமசிங்க எழுதிய ஒரு முக்கியமான கட்டுரையை நான் பத்திரிகையில் பார்த்தேன். தற்போதைய சிறைச்சாலைகளின் குறைபாடுகள் குறித்து அந்தப் பக்கத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மிக முக்கியமான சில விடயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்; இவை விவாதிக்கப்பட வேண்டும்.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரசன்ன ஜயந்த பெர்னாண்டோ இந்த விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தற்காலிகக் குழுவின் விசாரணை இந்த ஒரு சம்பவத்துடன் மட்டும் சுருங்கிவிடக் கூடாது. ஒட்டுமொத்த சிறைச்சாலை அமைப்பிலும் உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்ற பரந்த கோணத்தில் இது அமைய வேண்டும். ஒட்டுமொத்த குற்றவியல் நீதி அமைப்பும் (Criminal Justice System) மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

குறிப்பாக, மரண தண்டனைக் கைதிகள் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்களின் தண்டனைக் குறைப்புக்கான (Remission) உரிமைகள் மறுக்கப்படுவதால், அவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது அவர்களுக்கு ஒரு கடுமையான மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இக்குழுவில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் போன்றோர் இருந்தாலும், சிறைச்சாலைகளின் ஓய்வுபெற்ற ஆணையாளர் நாயகம் ஒருவரும் இதில் உள்வாங்கப்பட வேண்டும் என நான் கருதுகிறேன். அப்போதே சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் (Prisons Ordinance), பொலிஸ் கட்டளைச் சட்டம் போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து சீர்திருத்தங்களைக் கொண்டுவர முடியும்.

அபராதத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் உள்ளவர்களில் கிட்டத்தட்ட 60 வீதமானோர் போதைப்பொருள் குற்றவாளிகள் அல்லது மிகச் சிறிய தொகையான அபராதத்தைச் செலுத்த முடியாதவர்கள் ஆவர். வறுமையில் வாடும் மக்களைத் தண்டிக்கும் இந்த நிலை மிகவும் பாரதூரமானது. மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட நிதியத்தை உருவாக்கி, இத்தொகையைச் செலுத்த முடியாதவர்களை விடுவிக்க எளிய தீர்வைக் காண வேண்டும்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காமல், நோயாளிகளாகக் கருதி அவர்களுக்குச் சிறைச்சாலைகளுக்குப் பதிலாக முறையான புனர்வாழ்வு மையங்கள் (Rehabilitation Facilities) வழங்கப்பட வேண்டும்.

அதேவேளையில், சில சிறைகளில் முஸ்லிம் கைதிகள் ஐந்து வேளை தொழுவதைத் தடுக்கும் இந்த இனவாத அணுகுமுறை உடனடியாக நிறுத்தப்பட்டு, அவர்களின் தொழுகை அறைகள் மீள வழங்கப்பட வேண்டும். மஹர சிறைச்சாலை பள்ளிவாசலும் அதன் அசல் இடத்திலேயே மீண்டும் நிறுவப்பட வேண்டும். அதிகாரிகள் தரும் தவறான அறிக்கைகளை மட்டும் நம்பாமல், களத்தில் என்ன நடக்கிறது என்பதை அரசு பார்த்து, இந்த இனவாதப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

அமெரிக்க தளங்கள் மீது ஈரான் கொடூர தாக்குதல்!

  • ஈரானுக்குள் புகுந்து 90 இலக்குகளை அமெரிக்கா தாக்கியழித்ததைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன் (Drone) தாக்குதல்களை நடாத்திப் பதிலடி கொடுத்துள்ளது.
  • பஹ்ரைன், குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் பேட்ரியட் ஏவுகணை முறைமைகள், செயற்கைக்கோள் அன்டனாக்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு நிலையங்களைக் குறிவைத்தே இத்தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன.
  • நள்ளிரவில் பஹ்ரைனில் அபாயச் சங்குகளும் (Sirens), கட்டாரில் பொதுமக்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அவசரக்கால எச்சரிக்கை குறுஞ்செய்திகளும் (Emergency Alerts) அனுப்பப்பட்டதால் வளைகுடா நாடுகள் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகின்றது.

வளைகுடா பிராந்தியம் எப்போதுமே ஒரு எரிமலை தான், ஆனால் இன்று நள்ளிரவு அது வெடித்துச் சிதறியிருக்கின்றது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பல வருடங்களாக புகைந்து கொண்டிருந்த பகையனல், இப்போது முழு அளவிலான வான்வழிப் போராக உருவெடுத்துள்ளது. உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகப் பார்க்கப்படும் ஹோர்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) கட்டுப்பாட்டை யார் கையில் வைத்திருப்பது என்ற ஒற்றைப் புள்ளியில் தான் இந்த போர் அபாயம் ஆரம்பமாகியுள்ளது.

இன்று அதிகாலைப் பொழுதில் ஈரான் இராணுவம் அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டது. வளைகுடா நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் “மூலோபாய பாதுகாப்பு மையங்களை” இலக்கு வைத்து பாரிய ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக அது உத்தியோகபூர்வமாக அறிவித்தது. குவைத்தில் உள்ள பேட்ரியட் ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு, கட்டாரில் உள்ள அமெரிக்காவின் செய்மதி முன்னெச்சரிக்கை அன்டனா தளம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க படைகளின் பிரம்மாண்ட எரிபொருள் சேமிப்பு டாங்கிகள் என அமெரிக்காவின் பாதுகாப்பு அரண்கள் ஈரானின் நவீன ட்ரோன்களால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் நள்ளிரவில் அரங்கேறியபோது வளைகுடா நாடுகள் எப்படி உறைந்து போயின என்பதை கத்தாரில் இருந்து வரும் கள நிலவரங்கள் வெளிப்படுத்துகின்றன. அதிகாலை 4 மணியளவில் கத்தார் மக்களின் மொபைல் போன்களுக்கு அவசரக்கால அலாரங்கள் அலறியுள்ளன. “வீடுகளுக்குள் இருங்கள், ஜன்னல்கள் மற்றும் கண்ணாடி கட்டிடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம்” என அரசு விடுத்த குறுஞ்செய்தியால் மக்கள் பீதியடைந்தனர். அதேநேரம், அண்டை நாடான பஹ்ரைனில் வான்வழித் தாக்குதலுக்கான அபாயச் சங்குகள் நள்ளிரவில் இரண்டு முறை முழங்கியுள்ளன. பஹ்ரைன் வான் பாதுகாப்புப் படையினர், தங்கள் மீது தொடுக்கப்பட்ட பல ஈரானிய ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் நடுவானில் சுட்டு வீழ்த்தியதாக அவசரமாக அறிவித்துள்ளனர்.

ஈரான் ஏன் இந்த திடீர் தாக்குதலை நடத்தியது என்பதன் பின்னணியில் அமெரிக்காவின் கொடூர தாக்குதல்கள் இருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஈரானின் 5 மாகாணங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 78 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் கொடூரம் என்னவென்றால், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் கொலையுண்ட நிலையில் அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படவிருந்த மஷாத் நகருக்கான பிரதான ரயில் பாதையையும் அமெரிக்கா குண்டுவீசித் தகர்த்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் நடுத்தெருவில் தவித்து வருகின்றனர். அத்துடன் சஹ்பஹார் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றும் அமெரிக்க குண்டுகளின் சிதறல்களால் சேதமடைந்துள்ளது.

உலகையே உலுக்கியுள்ள இந்த மோதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் (X) தளத்தில், “ஈரான் எங்களைத் தாக்கினால் 1க்கு 20 என்ற கணக்கில் திருப்பி அடிப்போம். அவர்கள் எங்களோடு சமாதான உடன்படிக்கைக்கு வர துடிக்கிறார்கள்” என அதிரடி காட்டியுள்ளார். ஆனால், இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப், “அமெரிக்காவின் மிரட்டல்களுக்கும், வாக்குறுதிகளை மீறும் செயல்களுக்கும் இனி இலவசமாக விலக்கு அளிக்கப்பட மாட்டாது. அவர்கள் செய்த தப்புக்கு பெரும் விலை கொடுக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார். இரு தரப்பும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லாத நிலையில், வளைகுடா பிராந்தியம் ஒரு பெரும் உலகப் போரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றது என்பதே தற்போதைய நிதர்சனமாகும்.

கொழும்புப் பல்கலையில் ஒரேடியாக 71 மாணவர்களுக்கு டெங்கு!

கொழும்புப் பல்கலைக்கழக வளாகம் இப்போது ஒரு தற்காலிக சுகாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. திடீரெனப் பரவிய டெங்கு காய்ச்சல் காரணமாக, பல்கலைக்கழகத்தின் 71 மாணவர்கள் உத்தியோகபூர்வமாக நோய் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க வெளியிட்டுள்ளார்.

இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட மாணவர்களில் 5 பேரின் நிலைமை சற்று கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் செய்தி ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகத்தையே உலுக்கியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு தான் இப்போது பேசுபொருளாகியுள்ளது.

பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் கலைப்பீடத்தை (Faculty of Arts) சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எந்தவொரு இடர்பாடும் இல்லாமல் தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பல்கலைக்கழக நிர்வாகம், ஒரு வார காலத்திற்கு பல பீடங்களின் விரிவுரைகளை மாத்திரம் இணையவழி (Online) மற்றும் கலப்பு (Blended mode) முறைக்கு அவசரமாக மாற்றியமைக்கத் தீர்மானித்துள்ளது.

டெங்கு காய்ச்சல் தொற்றிய உடனே உடலுக்கு முழுமையான ஓய்வு என்பது அத்தியாவசியமான ஒன்று. மாணவர்கள் விரிவுரைகளுக்காக அலைவதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே தங்களது படிப்பைத் தொடர வேண்டும் என்ற நோக்கோடே இந்த ‘ஆன்லைன்’ வகுப்பு முறை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக துணைவேந்தர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, “பல்கலைக்கழகம் மூடப்பட்டுவிட்டது” என பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள பேராசிரியர் இந்திக்க கருணாதிலக்க, பல்கலைக்கழகம் எந்தவொரு சூழ்நிலையிலும் மூடப்படவில்லை என்றும், அவ்வாறான எண்ணம் எதுவும் நிர்வாகத்திற்கு இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தற்போதைய சூழல் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் எவருக்கேனும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“மெஸ்ஸிக்காக உலகக்கிண்ணம் பிக்ஸ் பண்ணப்பட்டிருக்கா?”

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த உலகக்கிண்ண நாக்-அவுட் சுற்றில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டீனாவை நேற்றைய போட்டியில் எகிப்து அணி அலறவிட்டுக் கொண்டிருந்தது. போட்டியின் 78வது நிமிடம் வரை 2-0 என முன்னிலையில் இருந்து, உலகக்கிண்ண வரலாற்றின் மிகப்பெரிய அதிர்ச்சியை நோக்கி எகிப்து நகர்ந்துகொண்டிருந்த வேளையில்தான், ஆட்டத்தின் போக்கையே மாற்றிய அந்த விபரீதம் அரங்கேறியது. அர்ஜென்டீனா 3-2 என்ற கணக்கில் அசாத்தியமாக மீண்டு வந்து வெற்றி பெற்றாலும், இப்போது அந்த வெற்றியின் பின்னணியில் “நடுவர்களின் சதி” இருப்பதாக கால்பந்து உலகம் கொதித்தெழுந்துள்ளது.

போட்டியின் இரண்டாவது பாதியில் எகிப்தின் முஸ்தபா ஜிகோ அடித்த அட்டகாசமான கோல், மைதானத்தையே அதிரவைத்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் வீடியோ உதவி நடுவர் (VAR), எகிப்து வீரர் மர்வான் அத்தியா, அர்ஜென்டீனாவின் லிசாண்ட்ரோ மார்டினஸின் காலை மிதித்தார் என்றுகூறி அந்த கோலை அதிரடியாக ரத்து செய்தார். கோல் அடிக்கப்படுவதற்கு கிட்டத்தட்ட 30 வினாடிகளுக்கு முன்னர், ஆட்டத்தின் ஆரம்பப் புள்ளியில் நடந்த இந்தச் சின்ன விஷயத்தைத் தேடிப் பிடித்து கோலை ரத்து செய்தமை எகிப்து மற்றும் உலக ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கதை இத்துடன் முடியவில்லை; ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் ஸ்கோர் 2-2 என சமநிலையில் இருந்தபோது, எகிப்தின் நட்சத்திர வீரர் மொஹமட் சலா அர்ஜென்டீனாவின் பெனால்டி எல்லைக்குள் அர்ஜென்டீன வீரரால் காலால் தட்டிவிடப்பட்டு வீழ்த்தப்பட்டார். ஆனால், அதற்கு நடுவர் பெனால்டி வழங்கவும் இல்லை, அதனை VAR மூலம் சோதிக்கவும் இல்லை. அந்த அதிர்ச்சியில் இருந்து எகிப்து மீள்வதற்குள், அர்ஜென்டீனா பதில் தாக்குதல் தொடுத்து, மேலதிக நேரத்தில் (Stoppage Time) வெற்றிக் கோலை அடித்து 3-2 என போட்டியைத் தன்வசமாக்கியது. எகிப்துக்கு ஒரு கண், அர்ஜென்டீனாவுக்கு ஒரு கண் என நடுவர்கள் காட்டிய இந்த “இரட்டை நிலைப்பாடு” தான் இப்போது உலக அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்த அநீதிக்கு எதிராக எகிப்திய கால்பந்து சம்மேளனத்தின் (EFA) தலைவர் ஹானி அபு ரிடா நேரடியாகக் களமிறங்கியுள்ளார். பிரெஞ்சு நடுவர் பிரான்சுவா லெடெக்சியர் தலைமையிலான ஒட்டுமொத்த நடுவர் குழுவையும், VAR அதிகாரிகளையும் உடனடியாக உலகக்கிண்ணத் தொடரிலிருந்து தூக்க வேண்டும் என FIFAவிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளார். “எகிப்து அணிக்கு எதிராக இழைக்கப்பட்டது அப்பட்டமான இனம் சார்ந்த பாரபட்சம் (Discrimination)” என்றும் எகிப்து சம்மேளனம் தனது அறிக்கையில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளது.

போட்டிக்குப் பின்னர் ஊடகங்களைச் சந்தித்த எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்: “அவர்கள் உலக சாம்பியனை எப்படியாவது தொடரில் தக்கவைக்க விரும்பியிருக்கலாம். மெஸ்ஸி தொடர்ந்து விளையாட வேண்டும் என்று FIFA நினைத்திருக்கலாம். இதனால்தான் எகிப்துக்கு அப்பட்டமாக இழைக்கப்பட்ட அநீதியை நடுவர்கள் கண்டும் காணாமல் இருந்தனர். நான் இனி இந்த உலகக்கிண்ணப் போட்டிகளைப் பார்க்கவே மாட்டேன்” என கண்ணீரும் கோபமுமாகத் தெரிவித்ததுடன், “இந்தத் தொடரே பிக்ஸ் பண்ணப்பட்டது என்பது இப்போது தெளிவாகத் தெரிந்துவிட்டது” என பகிரங்கக் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். எகிப்தின் இந்த அதிரடிப் புகாரைத் தொடர்ந்து, சனிக்கிழமை சுவிட்சர்லாந்துடன் மோதவிருக்கும் அர்ஜென்டீனா அணியின் அடுத்த கட்ட நகர்வு பெரும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது.

கிராண்ட்பாஸ் லொகு நோனாவின் 6 கோடி சொத்துக்கள் முடக்கம்!

கொழும்பு பாதாள உலகத்தின் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை திரைமறைவிலிருந்து இயக்கி வந்ததாகக் கருதப்படும் ‘கிராண்ட்பாஸ் லொகு நோனா’வின் சொத்துக் குவியல் மீதான பிடி இறுகியுள்ளது. சட்டத்தின் வலைக்குள் சிக்காதவாறு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த இவருக்கு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று (08) மரண அடி கொடுத்துள்ளது.

இலங்கையின் போதைப்பொருள் தடுப்பு வரலாற்றில் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த ஒரு மிக ரகசியமான, துல்லியமான தகவல் தான் இந்த ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் சரித்துள்ளது. உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் சொகுசாக வாழ்ந்து வந்த இந்த பெண், சாதாரண மக்களின் கண்களுக்குப் புலப்படாமல் சட்டவிரோத வியாபாரத்தின் மூலம் கோடிகளை அள்ளிக் குவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைத்த கறுப்புப் பணத்தைக் கொண்டு, சந்தேகத்திற்கு இடமின்றி அவர் அள்ளிய சொத்துக்களின் விபரங்கள் சிஐடியினரின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதன்படி, சுமார் 5 கோடியே 70 இலட்சம் ரூபாவிற்கும் அதிக சந்தை மதிப்பைக் கொண்ட இரு பிரதான சொத்துக்களை பொலிஸார் உடனடியாக அடையாளம் கண்டுள்ளனர்.

சந்தேக நபரான இந்த ‘லொகு நோனா’ தனது சட்டவிரோத சொத்துக்களை மாற்றுவதையோ அல்லது விற்பனை செய்வதையோ தடுக்கும் நோக்கில், அடுத்த 7 நாட்களுக்கு இந்த சொத்துக்கள் எதனையும் பயன்படுத்தவோ, பரிமாற்றவோ முடியாதவாறு பொலிஸார் அதிரடியாக முடக்கியுள்ளனர்.

ஆண்களுக்கு நிகராக போதைப்பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தில் கொடிகட்டிப் பறந்த இந்த ‘கிராண்ட்பாஸ் லொகு நோனா’வின் ஏனைய சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் குறித்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் தற்போது வலைவீசி விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த அதிர்வலைகளால் கொழும்பு பாதாள உலகமே தற்போது கலங்கிப் போயுள்ளது.

புத்தளம் மாவட்ட ஏற்றுமதி 2027ஆம் ஆண்டளவில் 352 மில்லியன் டொலர்!

உலக சந்தையில் சோலார் பேனல்கள் மற்றும் இலத்திரனியல் சிப்களை (Chips) தயாரிப்பதற்கு சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் போட்டிபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கை தங்களுக்குக் கிடைத்த ஒரு தங்கப் புதையலை இத்தனை காலம் வெறும் சுவர்கள் கட்டப் பயன்படுத்திக் கொண்டிருந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. புத்தளம் மாவட்டத்தின் பொருளாதார விதியை தலைகீழாக மாற்றப்போகும் அந்தப் புதையல் தான் “சிலிக்கா மணல்” (Silica Sand).

சிலிக்கா மணலின் உண்மையான பெறுமதியை உணராமல், கடந்த காலங்களில் வீடுகளுக்கு சாந்து பூசவும், சுவர் எழுப்பவும் இதனைப் பயன்படுத்தியமை பெரும் துரதிர்ஷ்டவசமானது என தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். சிலாபம் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற வடமேல் மற்றும் வடமத்திய மாகாண ஏற்றுமதியாளர்களை இணைக்கும் மாநாட்டிலேயே, இலங்கையின் புதிய பொருளாதார பாய்ச்சல் குறித்த இந்த அதிரடித் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இலங்கையின் வரலாற்றில் கடந்த இருபது வருடங்களின் பின்னர், சேவைத் துறையை முந்திக்கொண்டு கைத்தொழில் மற்றும் உற்பத்தித் துறை 7.2 வீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இது ஒரு நாட்டின் நிலையான பொருளாதாரத்திற்கு மிகச் சிறந்த அடித்தளமாகும். வெறும் நுகர்வுப் பொருளாதாரமாக இல்லாமல், மக்களின் பங்களிப்புடன் கூடிய “உற்பத்திப் பொருளாதாரத்தை” கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கொள்கையாக மாறியுள்ளது.

புத்தளம் மாவட்டம் ஏற்கனவே 2026இல் 309 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டியுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் அதனை 352 மில்லியன் டொலராக உயர்த்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கான துருப்புச் சீட்டாகவே இந்த “சிலிக்கான் சிட்டி” (Silicon City) திட்டம் அமையவுள்ளது. நிலத்தின் உரிமையாளர் யாராக இருந்தாலும், அதற்கு அடியில் இருக்கும் கனிம வளங்கள் நாட்டுக்கே சொந்தம் என்ற சட்டதிட்டங்களுக்கு அமைவாக, இனிமேல் சிலிக்கா மணலை சாதாரண தேவைகளுக்கு அகழ்வதற்கு முற்றாகத் தடை விதிக்கப்படவுள்ளது.

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சர்வதேச முதலீட்டாளர்களை இலங்கைக்குள் கொண்டுவந்து, புத்தளத்திலேயே பெறுமதி சேர்க்கப்பட்ட சிலிக்கான் தயாரிப்புகளை உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்ய அரசாங்கம் களம் இறங்கியுள்ளது. அதேநேரம், கடந்த காலங்களில் ஆறுகளிலும் கால்வாய்களிலும் கண்மூடித்தனமாக மணல் அகழ்ந்ததால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளைச் சீரமைக்க, மணல் விற்ற வருமானத்தை விட அதிக பணத்தை அரசாங்கம் செலவிட வேண்டியுள்ள கசப்பான உண்மையையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே, சூழலைப் பாதிக்காத வகையில், கடுமையான ஒழுங்குமுறைகளின் கீழ் இந்த புதிய “சிலிக்கன் சிட்டி” திட்டம் புத்தளத்தில் முடுக்கிவிடப்படவுள்ளது. இந்த விசேட மாநாட்டில் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க மற்றும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான், ஹிருணி விஜேசிங்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

ஜுட் சமந்த

1,600 கிலோ பீடி இலைகள் தன்கொட்டுவ பொலிஸாரால் பறிமுதல்!

ஜுட் சமந்த

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக படகுகள் மூலம் இலங்கைக்குள் ஊடுருவிய பெரும் தொகை பீடி இலை கடத்தல் தன்கொட்டுவ பொலிஸார் அதிரடியாக முறியடிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடி மிக்க கடல் வழியைக் கடந்து, இலங்கையின் கரையைத் தொட்ட இந்த சட்டவிரோத சரக்கு, அங்கிருந்து தந்திரமாக லொறி ஒன்றில் ஏற்றப்பட்டுள்ளது. எனினும், கடத்தல்காரர்களின் ஒவ்வொரு அசைவையும் தன்கொட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான உளவுப்பிரிவு மிகவும் துல்லியமாக கண்காணித்து வந்துள்ளது.

விவகாரம் சீரியஸாக மாற, வென்னப்புவ – வைக்கால், கம்மல பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்று அதிவேகமாக பயணிப்பதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு அவசர தகவல் பறந்தது. சற்றும் தாமதிக்காத பொலிஸ் அதிகாரிகள், அந்த லொறியை பின்தொடர்ந்து சென்று நிறுத்த முற்பட்டனர்.

எனினும் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில், லொறியின் சாரதி பொலிஸ் உத்தியோகத்தர்களை நசுக்கி விபத்துக்குள்ளாக்கும் நோக்கில் வாகனத்தை வேகமாக செலுத்தி தப்பியோட முயன்றுள்ளார். பொலிஸாரின் சாதுரியமான மற்றும் அதிரடியான நகர்வினால் லொறி முழுமையாக சுற்றி வளைக்கப்பட்டு, கடத்தல்காரர்களின் திட்டம் தவிடுபொடியாக்கப்பட்டது.

இதன்போது லொறியை சோதனையிட்டதில் தலா 40 பெரிய பொலித்தீன் மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட, 1,600 கிலோ கிராம் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. லொறியில் இருந்த வென்னப்புவ – போலவத்த பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 38 வயதுடைய இருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

தன்கொட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த அப்புஹாமி தலமையிலான கூட்டு நடவடிக்கையினாலேயே இந்த பாரிய கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரணிலின் திட்டம் காலி! பணவீக்கத்தால் தடம் புரளும் இலங்கை?

இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மூலோபாய பொருளாதார வளர்ச்சித் திட்டத்தை (Economic Growth Plan), தற்போதைய அரசாங்கம் முற்றாகக் கைவிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் தினுக் கொழம்பகே விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இந்தத் திடுக்கிடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அப்படியென்றால், நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பாதையில் என்னதான் நடக்கிறது? தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்பக் கட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் திட்டத்தை மட்டுமே அரைகுறையாக முன்னெடுத்திருந்தது. ஆனால், நாட்டின் உண்மையான முன்னேற்றத்திற்குத் தேவையான பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை அதனுடன் இணைத்து ஒத்திசைவாகக் கொண்டு செல்ல இந்த அரசாங்கம் முற்றாகத் தவறிவிட்டது என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரத் திட்டத்தின் பிரதான இலக்காக இருந்தது இலங்கை ரூபாயின் மதிப்பை வலுப்படுத்துவதும், நாட்டின் பணவீக்கத்தை 3% க்கும் குறைவான மட்டத்தில் கட்டுக்குள் வைத்திருப்பதுமே ஆகும். ஆனால், இன்றைய நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியைக் பொறுப்பேற்ற நாள் முதல், இலங்கை ரூபாய் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதுடன், பணவீக்கம் 6% ஐயும் தாண்டி எகிறியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டக்கூடிய எந்தவொரு புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்த தற்போதைய அரசாங்கம் அடியோடு தவறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை முன்னெடுத்து வரும் திட்டமானது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வித பங்களிப்பும் செய்யாத, வெறும் பொருளாதாரத்தை ஒரு இடத்தில் முடக்கி வைக்கும் (Economic Stabilization) ஒரு தனித்த திட்டமாக மட்டுமே சுருங்கிப் போயுள்ளது.

இறுதியாக, தற்போதைய அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி மில்லியனுக்கும் டாலர் பெறுமதியான கேள்வியொன்றை முன்வைத்துள்ளது. “நாட்டின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நிதியியல் ரீதியாகத் தயாராகும் அதேவேளையில், மறுபுறம் வறுமையை ஒழித்து, சாதாரண மக்களின் வருமான மட்டத்தை எவ்வாறு உயர்த்தப் போகிறீர்கள்?” என்ற எரியும் கேள்விக்கு தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என அந்த அறிக்கை அதிரடியாக வலியுறுத்தியுள்ளது.

சிறைச்சாலை அமைச்சர் உடனே விலக வேண்டும் – ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, இலங்கைச் சட்டம் மற்றும் சர்வதேச சட்டங்களின் கீழ் மிகக் கடுமையான கொடூரக் குற்றமாகும் என்று கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று (07) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு முழுப்பொறுப்பேற்று சிறைச்சாலைகள் அமைச்சர் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு, மலர் வீதியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அவசர ஊடகவியலாளர் சந்திப்பில், சிறைக்குள் நடந்த கோரத் தாண்டவத்தின் உண்மை நிலவரங்களை அவர் சல்லி சல்லியாக உடைத்து நாடாளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் அம்பலப்படுத்தினார்.

பேராசிரியர் பீரிஸ் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நேற்று இரவு நிலவரப்படி இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் ஆகக் கொடூரமான விடயம் என்னவென்றால், உயிரிழந்த 26 பேரில் 7 பேர் அரசாங்க அதிகாரிகள், அதாவது சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் ஆவர். சிறைக்காவலர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாகியுள்ள இந்தத் தளம், தற்போதைய பாதுகாப்புப் பொறிமுறையின் உச்சக்கட்டத் தோல்வியையே காட்டுகிறது.

இதனை வெறுமனே ஒரு உள்நாட்டுச் சிறை மோதலாகக் கடந்து சென்றுவிட முடியாது என்று எச்சரிக்கும் பேராசிரியர், இலங்கை அரசியலமைப்பின் 11ஆவது (சித்திரவதைக்கு எதிரான உரிமை) உறுப்புரை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். அதுமட்டுமன்றி, இலங்கை கைச்சாத்திட்டுள்ள நான்கு முக்கிய சர்வதேச உடன்படிக்கைகளை இந்தச் சம்பவம் முற்றாகத் தவிடுபொடியாக்கியுள்ளது.

சர்வதேச மனித உரிமைத் தளத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ள ‘நெல்சன் மண்டேலா விதிகள்’ (Nelson Mandela Rules) எனப்படும் கைதிகளை நடத்தும் குறைந்தபட்ச சர்வதேச தரநிலை, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் சர்வதேச உடன்படிக்கை (ICCPR), சித்திரவதைகளுக்கு எதிரான உடன்படிக்கை மற்றும் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் ஆகிய அனைத்தையும் இந்த அரசாங்கம் அப்பட்டமாக மீறியுள்ளது. கைதிகளினதும், அதிகாரிகளினதும் உயிர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாத இந்த அரசாங்கத்தின் பின்னணி குறித்தும், சர்வதேச அளவில் இலங்கை எதிர்கொள்ளப்போகும் சட்டச் சிக்கல்கள் குறித்தும் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.