Home Blog Page 39

நாடாளுமன்றத்தையே உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்!

சல்லி சல்லியாக உடைந்த இரும்பு கேட்! ஆயுதங்களுடன் பாய்ந்த கைதிகள்: நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணி அம்பலம்!

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் கைதிகள் இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு, ஆயுதங்களுடன் வெளியே வந்து வெறியாட்டத்தில் ஈடுபட்ட திடுக்கிடும் தகவலை நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த மோதல் சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றிய போதே, சிறைக்குள் நடந்த அந்த அதிர்ச்சி நிமிடங்களை அவர் விவரித்தார்.

பொதுவாக சிறைச்சாலை மோதல்கள் சாதாரண வாக்குவாதங்களுடன் முடிவடைந்துவிடும் என்ற பொதுவான பிம்பத்தை உடைக்கும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. இந்த வன்முறையை அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்த அமைச்சர், இதற்குப் பின்னால் இருந்த பிரதான சதித்திட்டத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார். அதாவது, சிறைச்சாலையின் ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரத்தையும் முழுமையாகச் சீர்குலைப்பதே இந்த மோதலில் ஈடுபட்டவர்களின் உண்மையான நோக்கமாக இருந்திருக்கிறது.

அப்படியென்றால் அங்கே உண்மையில் என்னதான் நடந்தது? ஆரம்பத்தில் சிறைக்குள் இருந்த ஆயுதமற்ற இரண்டு அதிகாரிகள் மீதுதான் கைதிகள் பாய்ந்துள்ளனர். தற்காப்புக்குக் கூட ஆயுதமில்லாமல் சிக்குண்ட அந்த இரு அதிகாரிகளையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற மனிதாபிமான நோக்கில், ஏனைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால், அங்கே அவர்களுக்குக் காத்திருந்தது மரணப் பொறி.

மனிதாபிமானத்தைக் காக்க ஓடிவந்த அதிகாரிகள் மீது, எவ்வித இரக்கமுமின்றி செங்கற்கள் மற்றும் கம்புகளால் மிகக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலின் காரணமாகவே அதிகாரிகள் உயிரிழக்க நேரிட்டதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். சிறைச்சாலை வரலாற்றில் கரும்புள்ளியாக மாறியுள்ள இந்தத் கொடூரம், ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனினும், நடந்த தவறைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு, மீண்டும் இவ்வாறானதொரு அத்துமீறல் மற்றும் கொடூரச் சம்பவம் இலங்கையின் எந்தவொரு சிறைச்சாலையிலும் நடைபெறாமல் இருக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். அத்தோடு, எதற்காக, யாருடைய தூண்டுதலின் பேரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்துப் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரெட் அலெர்ட்: இலங்கையில் 61 ஆயிரத்தை தாண்டியது டெங்கு!

இலங்கையில் நாளுக்கு நாள் அச்சுறுத்தலாக மாறிவரும் டெங்கு காய்ச்சலின் பரவல், தற்போது மிக மோசமான ஒரு எல்லைக் கோட்டைத் தொட்டுள்ளது. நாடு முழுவதும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகத் தீவிரமாகப் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபரங்கள் எச்சரிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,060 ஆக உயர்வடைந்துள்ளமை பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24 மணித்தியால இடைவெளிக்குள் மட்டும் 2,604 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்தத் தரவானது, டெங்கு நுளம்புகளின் பெருக்கம் மற்றும் வைரஸ் பரவல் வேகம் எந்தளவிற்கு கட்டுப்பாட்டை மீறிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மாகாண ரீதியான தரவுகளைப் பார்க்கும்போது, இலங்கையின் வர்த்தக மற்றும் நிர்வாக மையமாக விளங்கும் மேல் மாகாணமே இந்த டெங்குப் போரில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த நோயாளர்களில் 52.50 வீதமானோர், அதாவது பாதிக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் மேல் மாகாணத்திலேயே முடங்கியுள்ளனர். அங்கு பதிவாகியுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை மாத்திரம் 32,054 ஆகும். அதிக மக்கள் தொகை நெருக்கடியும், முறையற்ற கழிவகற்றல் முறைகளுமே மேல் மாகாணத்தை டெங்குவின் கூடாரமாக மாற்றியுள்ளதாக சுகாதாரக் துறை அதிகாரிகள் கவலை வெளியிடுகின்றனர்.

மேல் மாகாணத்திற்கு அடுத்தபடியாக, சுற்றுலா மையமாக விளங்கும் தென் மாகாணத்தில் டெங்குவின் தாக்கம் கோரத்தாண்டவமாடி வருகிறது. அங்கு 9,674 நோயாளர்கள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சபரகமுவ மாகாணத்தில் 5,237 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க அங்கு விசேட துப்புரவுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டின் ஏனைய மாகாணங்களும் இந்த டெங்கு அபாயத்திலிருந்து தப்பவில்லை. மத்திய மாகாணத்தில் 4,823 பேரும், கிழக்கு மாகாணத்தில் 2,979 பேரும், வடமேல் மாகாணத்தில் 2,778 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று ஊவா மாகாணத்தில் 1,550 பேரும், வடமத்திய மாகாணத்தில் 1,013 பேரும் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையாக வட மாகாணத்தில் 957 பேர் பதிவாகியுள்ளனர். எவ்வாறாயினும், இந்த எண்கள் எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் என்பதால், நுளம்புகள் பெருகும் இடங்களை துப்புரவு செய்வதில் பொதுமக்கள் தங்களின் பங்களிப்பை உடனடியாக வழங்க வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலக விலையை விட அதிக காசு கொடுத்து எரிபொருள் வாங்கிய இலங்கை!

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி மக்களுக்கு நியாயமான விலையில் பெட்ரோல், டீசல் கிடைக்கிறதா? அல்லது உலக சந்தையைக் காட்டி உள்நாட்டில் பகற்கொள்ளை நடக்கிறதா? என்ற பாரிய சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்திருந்தாலும், தமக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறது. ஆனால், இந்த நஷ்டத்திற்கு உண்மையான காரணம் உலக சந்தை விலை உயர்வு அல்ல, மாறாக இலங்கையின் கொள்வனவு முறையில் உள்ள பாரிய ஓட்டைதான் என்பதை நாட்டின் முன்னணி பொருளாதார பகுப்பாய்வு நிறுவனமான ‘publicfinance.lk’ அம்பலப்படுத்தியுள்ளது.

2026 மே மாதத்தில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளைக் கொள்வனவு செய்த உத்தியோகபூர்வ தரவுகளை ஆராய்ந்தபோதுதான் இந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்துள்ளது. அந்த காலகட்டத்தில் உலக சந்தையில் நிலவிய சராசரி விலைகளை விட, இலங்கை கூட்டுத்தாபனமானது பெட்ரோலுக்காக 15 வீதமும், டீசலுக்காக 13 வீதமும் ‘அதிகப்படியான’ பணத்தை அள்ளி இறைத்துள்ளது. அதாவது, உலகமே குறைந்த விலைக்கு எரிபொருள் வாங்கியபோது, இலங்கை மட்டும் ஏன் சந்தை விலையை விடக் கூடுதல் விலை கொடுத்து வாங்கியது என்ற மர்மம் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஒருவேளை இலங்கை உலக சந்தையின் சாதாரண விலைக்கு மட்டுமே எரிபொருளைக் கொள்வனவு செய்திருந்தால், இன்று இலங்கையர்களுக்கு மிகக் குறைந்த விலையில் டீசலையும் பெட்ரோலையும் பெற்றிருக்க முடியும். அதேநேரம், கூட்டுத்தாபனத்திற்கும் எவ்வித நஷ்டமும் ஏற்பட்டிருக்காது. நீண்டகால விலை சூத்திரத்தின்படி கணிப்பீடு செய்திருந்தால், கடந்த ஜூன் மாதத்தில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 381 ரூபாவாகவும், பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 424 ரூபாவாகவும் மட்டுமே இருந்திருக்க வேண்டும். இந்த விலையில் அரசாங்கம் வழங்கும் வரிக் கழிவுகளான பெட்ரோலுக்கு 20 ரூபாவும், டீசலுக்கு 100 ரூபாவும் உள்ளடக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், நடந்ததோ தலைகீழ்! கூட்டுத்தாபனம் உலக சந்தை விலைக்குப் புறம்பான அதிக செலவில் எரிபொருளை வாங்கியதால், ஜூன் மாதத்தில் டீசல் லீற்றர் ஒன்றை 407 ரூபாவிற்கு விற்க வேண்டியதாயிற்று. இது விலை சூத்திரத்தை விட 26 ரூபா அதிகமாகும். அதேபோல் பெட்ரோல் லீற்றர் ஒன்றை 434 ரூபாவிற்கு விற்பனை செய்ததுடன், இது விலை சூத்திரத்தை விட 9 ரூபா அதிகமாகும்.

இந்த தவறான கொள்வனவு விலை முறையினால் கூட்டுத்தாபனத்திற்கும் கட்டுப்படியாகவில்லை, மக்களுக்கும் நிம்மதியில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. கூட்டுத்தாபனம் வாங்கிய அதிக விலையின்படி அதன் செலவை ஈடுசெய்ய வேண்டுமாயின் பெட்ரோல் 474 ரூபாவிற்கும், டீசல் 436 ரூபாவிற்கும் விற்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் ஜூன் மாத சில்லறை விலையின்படி கூட்டுத்தாபனத்திற்கு பெட்ரோல் லீற்றருக்கு 40 ரூபாவும், டீசலுக்கு 29 ரூபாவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சுருக்கமாகக் கூறின், உலக சந்தையோடு ஒப்பிடும்போது இலங்கையில் டீசல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது, ஆனால் கூட்டுத்தாபனம் வாங்கிய கொள்ளை விலையோடு ஒப்பிடும்போது அது நஷ்டத்தில் விற்கப்படுவதாக ‘publicfinance.lk’ சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரிகளின் இந்த நிர்வாகக் குறைபாடுகளுக்கு தற்போதும் நுகர்வோரே பலியாக்கப்பட்டு வருகின்றனர்.

கோப் குழுவில் அம்பலமாகிய கப்பல் கூட்டுத்தாபனத்தின் ‘மர்ம’ நஷ்டம்!

பொதுமக்களின் வரிப்பணம் எவ்வாறெல்லாம் வீணடிக்கப்படுகிறது என்பதற்கு மற்றுமொரு அதிர்ச்சி உதாரணம் தற்போது நாடாளுமன்றப் பொது வியாபாரங்கள் பற்றிய குழுவில் (COPE) வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் (Ceylon Shipping Corporation Limited) தனக்குச் சொந்தமான 6 இணை நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகளின் உண்மை நிலை என்ன தெரியுமா? கேட்கவே நெஞ்சம் பதறும் வகையில், சுமார் 63 கோடி (630 மில்லியன்) ரூபா முதலீட்டுக்கு ஒட்டுமொத்தமாகவே வருடாந்த இலாபமாக வெறும் 4 லட்சம் ரூபா மட்டுமே கிடைத்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் கோப் குழு விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கோடிக்கணக்கில் முதலீடு செய்துவிட்டு, வெறும் சொற்ப தொகையை இலாபமாகப் பெறும் இந்த விசித்திரமான வியாபார தந்திரம் எப்படிச் சாத்தியமானது என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 6 இணை நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் கப்பல் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள் பலரும் அங்கம் வகித்து வந்துள்ளனர். அப்படியிருந்தும், நிறுவனங்களின் செயல்திறனை உயர்த்துவதற்கோ அல்லது இலாபத்தை அதிகரிப்பதற்கோ இந்த அதிகாரிகள் எவ்வித உருப்படியான பங்களிப்பையும் வழங்கவில்லை என நாடாளுமன்றக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரிகள் வெறும் பதவிகளை மட்டுமே அலங்கரித்தனரா என்ற சந்தேகமும் இதனால் எழுந்துள்ளது.

விசாரணைகள் இத்துடன் நின்றுவிடவில்லை. இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் ஒட்டுமொத்த முகாமைத்துவம், நிதிப் பயன்பாடு மற்றும் கப்பல் போக்குவரத்துச் செயற்பாடுகளின் மந்தகதி குறித்து கோப் குழு மிக ஆழமாக ஆராய்ந்துள்ளது. திறமையற்ற நிர்வாகமே இந்த நஷ்டத்திற்குப் பின்னணியில் உள்ளதா? அல்லது நிதி கையாடல்கள் ஏதேனும் இடம்பெற்றதா? என்ற கோணத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இலங்கையின் கடல்சார் வணிகத் துறையில் பிரதான தூணாக இருக்க வேண்டிய ஒரு பொது நிறுவனம், இவ்வாறு நிதி மேலாண்மையில் படுதோல்வி அடைந்திருப்பது ஒட்டுமொத்த பொருளாதாரப் பின்னடைவையும் பிரதிபலிக்கிறது. குறிப்பாக மனிதவள மேலாண்மையில் உள்ள குறைபாடுகளும், கப்பல் இயக்கங்களின் திறமையின்மையும் இந்த வீழ்ச்சியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாரிய நிதி வீணடிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கப்பல் கூட்டுத்தாபனத்தின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பை முற்றாக சீரமைக்கவும் கோப் குழுவினால் அதிரடியான பல பரிந்துரைகள் தற்போது அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பரிந்துரைகள் வெறும் காகிதத்தோடு நின்றுவிடுமா அல்லது நஷ்டத்தில் ஓடும் கூட்டுத்தாபனத்திற்குப் புத்துயிர் அளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கோர வன்முறை: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகம் இன்று காலை ஒரு யுத்தக் களமாக மாறியுள்ளது. இன்று (06) காலை 10.15 மணியளவில் சிறைச்சாலைக்குள் மீண்டும் ஒரு பாரிய வன்முறை வெடித்துள்ளது. ஆரம்பத்தில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்டதாகக் கருதப்பட்ட இந்த மோதல், கணப்பொழுதில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையிலான பெரும் போராக உருவெடுத்தது. நிலைமை விபரீதமானதை அடுத்து, வன்முறையைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

நேரம் செல்லச் செல்ல சிறைச்சாலைக்குள் இருந்து வந்த செய்திகள் ஒட்டுமொத்த நாட்டையும் அதிரவைத்துள்ளன. முற்பகல் 11.38 மணியளவில் 5 பேரின் மரணத்துடன் ஆரம்பித்த இந்த கொடூரம், மதியம் 12.00 மணிக்கு 7 ஆகவும், 12.46 மணிக்கு 19 ஆகவும் உயர்ந்து, இறுதியாகக் கிடைத்த உத்தியோகபூர்வ தகவல்களின்படி பலி எண்ணிக்கை 25 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த பலி எண்ணிக்கையானது தற்போதைய நிலவரப்படி மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் அதிகாரிகளும் அடக்கம்: மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர்!

இந்த கொடூர மோதலில் கைதிகள் மாத்திரமன்றி, கடமையில் இருந்த சிறை உத்தியோகத்தர்கள் நால்வரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், பாதுகாப்புப் படையினர் மற்றும் கைதிகள் உட்பட சுமார் 100 பேர் வரை படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலை வளாகத்திலும் தற்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஆரம்பக்கட்ட மோதலில் இரு கைதிகள் உயிரிழந்ததுடன் 38 பேர் காயமடைந்திருந்தனர். அவர்கள் இன்னமும் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே, இன்று காலை இந்தத் திடீர் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலையின் உட்பகுதியில் தற்போதும் பதற்றமான சூழல் நிலவுவதுடன், மேலதிக இராணுவ மற்றும் பொலிஸ் பிரிவினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மாறவில கடலில் பயங்கரம்: ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன்!

ஜுட் சமந்த

வார இறுதி விடுமுறையைக் கழிப்பதற்காகக் கடற்கரைக்குச் செல்வோர், கடலின் ஆக்ரோஷத்தை உணராமல் செயற்படுவதால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்கதையாகி வருகின்றன. அந்த வகையில், நேற்றிரவு மாறவில கடற்பகுதியில் இடம்பெற்ற ஒரு துயரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பிரதேசத்தையும் உலுக்கியுள்ளது. நீர்கொழும்புப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள், மாறவில – லன்சிகம கடற்கரையின் ஆபத்தை உணராமல் இரவு நேரத்தில் கடலில் இறங்கியதே இந்த அனர்த்தத்திற்குப் பின்னணியாக அமைந்துள்ளது.

நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை இரவு 7.40 மணியளவில், நிலவொளி மற்றும் கடற்கரையின் அமைதிக்கு மத்தியில் அந்த இரு இளைஞர்களும் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது அவர்களை நோக்கி வந்த ஒரு ராட்சத அலை, நொடிப் பொழுதில் ஒரு இளைஞனை மாத்திரம் கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இவ்வாறு அலையினால் இழுத்துச் செல்லப்பட்டு, கடலில் மாயமானவர் நீர்கொழும்பு – பெரியமுல்லை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வர்ணகுலசூரிய மகமூனகே ரோசித பெர்னாண்டோ என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். தன் கண் முன்னாலேயே நண்பன் அலையோடு அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட மற்றைய இளைஞன், செய்வதறியாது கத்திக் கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து, நள்ளிரவு என்றும் பாராமல் சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேசவாசிகளும் மீனவர்களும் இணைந்து, மாயமான இளைஞனை உயிருடன் மீட்கும் நோக்கில் பாரிய தேடுதல் வேட்டை ஒன்றை ஆரம்பித்தனர். எனினும், இரவு நேரக் கடல் கொந்தளிப்பு மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்றிரவு முழுவதும் தேடியும் ரோசித பெர்னாண்டோவின் உடல் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை.

தற்போது மாறவில பொலிஸார் இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதுடன், கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் பணிகளைப் பலப்படுத்தியுள்ளனர். அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ள காலப்பகுதியில், இரவு வேளைகளில் கடலில் இறங்குவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கல்பிட்டியில் சிக்கிய பஸ்கள்: பயணிகளின் உயிருக்கு ஆபத்தா?

ஜுட் சமந்த

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் அதிர்ச்சித் தகவல் ஒன்று கல்பிட்டிப் பகுதியிலிருந்து வெளியாகியுள்ளது. டீசல் விலைச் சேமிப்பைக் குறிவைத்து, சட்டவிரோதமான முறையில் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி பயணிகளை ஏற்றிச் சென்ற 7 பேருந்துகளை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

நீண்ட நாட்களாகவே இவ்வாறான முறைகேடுகள் நடப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, புத்தளம் பிராந்திய போக்குவரத்துப் பிரிவினரும் கல்பிட்டி பொலிஸாரும் இணைந்து வீதிகளில் அதிரடி வேட்டை ஒன்றை அரங்கேற்றினர். கொழும்பில் இருந்தும் புத்தளத்தில் இருந்தும் கல்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்துகள் மட்டுமன்றி, அரச இ.போ.ச (CTB) பேருந்துகளும் இந்தத் திடீர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.

அப்படியே எரிபொருள் டாங்கியைத் திறந்து சோதித்த பொலிஸாருக்குக் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. இயந்திரங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மற்றும் சுற்றாடலுக்குப் பெரும் புகை மாசடைவை ஏற்படுத்தக் கூடிய மண்ணெண்ணெயை ஊற்றி, எவ்விதப் பயமுமின்றி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆபத்தான முறையில் பயணிகளின் உயிரோடு விளையாடிய 7 பேருந்துகளின் சாரதிகளையும் கையும் மெய்யுமாகப் பிடித்த பொலிஸார், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். லாபத்தை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் இவ்வாறான மோசடிகளுக்கு எதிராக இனிமேலும் சோதனைகள் தொடரும் என பொலிஸ் தரப்பு எச்சரித்துள்ளது.

கால் நூற்றாண்டு கால ஏக்கம் நிறைவு: புதிய கட்டிடக் கனவு நனவாகியது!

புத்தளம்: அபிவிருத்திகளும், நவீன கல்வி வசதிகளும் வெறும் வார்த்தைகளாக மட்டுமன்றி, செயல் வடிவம் பெறும்போதுதான் ஒரு சமூகத்தின் எதிர்காலம் பிரகாசமடைகிறது. அந்த வகையில், வடமேல் மாகாணத்தின் முக்கிய கல்விக்கூடங்களில் ஒன்றான புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலய சமூகத்தின் கால் நூற்றாண்டு காலப் பெரும் கனவு, நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக நனவாகத் தொடங்கியுள்ளது.

64 வருடங்களுக்கும் மேலான நீண்டதொரு வரலாற்றைக் கொண்ட இப்பாடசாலையில், போதிய இடவசதிகளின்றி மாணவிகள் எதிர்நோக்கி வந்த சவால்களுக்கு தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாரிய தீர்வொன்றை வழங்கியுள்ளது. பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டிடம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக கடந்த 25 வருடங்களாக விடுக்கப்பட்டு வந்த கோரிக்கைகள், இதோ இப்போது சாத்தியமாகியிருக்கின்றன.

தேசிய மக்கள் சக்தியின் உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் “சகோதர, சகோதரிகளின்” தொடர்ச்சியான அரசியல் மற்றும் சமூகக் களப் போராட்டங்களின் விளைவாக, தற்போதைய அரசாங்கத்தினால் இதற்கென 29 மில்லியன் ரூபா நிதி நேரடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் நிர்மாணிக்கப்படவுள்ள 90×25 அடி பரப்பளவைக் கொண்ட பிரம்மாண்ட புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா, நேற்று (04.07.2026) காலை மிக விமரிசையாக அரங்கேறியது.

கல்லூரி அதிபர் திருமதி A.L. ஸரீனா பர்வீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

அமைச்சருடன் இணைந்து, தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைப்பாளருமான கயான் ஜானக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான M.J.M. பைசல் மற்றும் புத்தளம் மாநகர சபையின் முதல்வர் ரின்ஷாத் அஹ்மத் ஆகியோர் உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் இந்நிகழ்வுக்கு பலம் சேர்த்தனர்.

இந்த அடிக்கல் நாட்டு விழாவானது, புத்தளம் மண்ணின் பெண் கல்வியில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

புத்தளத்தில் நனவாகும் ஏழைக் குடும்பத்தின் வீட்டுக்கனவு!

சொந்தமாக ஒரு பாதுகாப்பான வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் கனவு. அதிலும் அன்றாட வாழ்வாதாரத்திற்கே போராடும் வறிய குடும்பங்களுக்கு அது எட்டாக்கனிதான். அவ்வாறானதொரு ஏழைக் குடும்பத்தின் நீண்டகாலக் கனவை நனவாக்கும் நோக்கில், புத்தளத்தில் புதியதொரு வீட்டுத் திட்டம் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ரத்மல்யாய கிராம உத்தியோகத்தர் பிரிவிலேயே இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு இடம்பெற்றது. அங்கு வாழும் மிகவும் வறிய குடும்பம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு நிரந்தர வீட்டை அமைத்துக் கொடுப்பதற்கான அரசாங்க நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல்லை புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவருமான சகோதரர் முஹம்மது பைசல் அவர்கள் நேற்று (03.07.2026) நாட்டி வைத்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எத்தனையோ சவால்களுக்கு மத்தியில் வாழும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும். வெறுமனே ஒரு கட்டிடத்தை எழுப்புவதுடன் நின்றுவிடாமல், பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்து, அவர்களின் முகங்களில் மகிழ்ச்சியைக் காண்பதே இதன் இலக்கு என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த முக்கிய நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் முகமது பைசல் அவர்களுடன், புத்தளம் பிரதேச சபை உறுப்பினரும் பிரஜா சக்தி தலைவருமான சகோதரர் கியாஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அவர்களோடு, அரச அதிகாரிகள், வீட்டுத் திட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் இப்பயனாளிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அரச அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து உழைக்கும் போது அடிமட்ட மக்களின் தேவைகள் எவ்வாறு விரைவாக நிறைவேற்றப்படுகின்றன என்பதற்கு இந்த வீட்டுத் திட்டத் தொடக்கம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கனடாவை 3-0 என வீழ்த்தி, காலிறுதிக்கு தகுதி பெற்றது மொரோக்கோ!

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த 2026 FIFA உலகக்கிண்ணத்தின் முதலாவது நாக்-அவுட் சுற்றில், இணை வழங்கு நாடான கனடா மற்றும் பலம் வாய்ந்த மொரோக்கோ அணிகள் மோதின. கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்த கனடா அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், அவர்களால் கோல் போடும் வாய்ப்புகளை துரதிர்ஷ்டவசமாக முழுமைப்படுத்த முடியவில்லை.

மைதானத்தில் பதற்றம்: மொரோக்கோவிற்கு விழுந்த பலத்த அடி!

கடந்த 2022 உலகக்கிண்ணத்தில் அரையிறுதி வரை சென்று சாதனை படைத்த ‘அட்லஸ் லயன்ஸ்’ (Morocco) அணிக்கு ஆரம்பம் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. ஆட்டத்தின் 22வது நிமிடத்திலேயே அணியின் முன்னணி கோல் வேட்டையாளர் இஸ்மைல் சைபாரி (Ismael Saibari) உபாதைக்குள்ளாகி மைதானத்தை விட்டு கண்ணீருடன் வெளியேறியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு அணிகளும் முட்டி மோதிய இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் நடுவரால் 6 மஞ்சள் அட்டைகள் (Yellow Cards) காண்பிக்கப்பட்டன என்றால், மைதானத்தில் எவ்வளவு பரபரப்பு நிலவியிருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்! இறுதியாக முதல் பாதி ஆட்டம் கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிந்தது.

இரண்டாம் பாதியில் ருத்ரதாண்டவம் ஆடிய மொரோக்கோ!

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் ஆட்டத்தின் போக்கே தலைகீழாக மாறியது. 50வது நிமிடத்தில் மொரோக்கோவின் அசெடின் ஓனாஹி (Azzedine Ounahi) முதல் கோலை அடித்து மைதானத்தை அதிர வைத்தார். இதனால் கனடா அணி கடுமையான நெருக்கடிக்குள்ளானது. தொடர்ந்து பதிலடி கொடுக்க கனடா முயன்ற போதிலும், மொரோக்கோவின் தற்காப்பு அரணை அவர்களால் உடைக்க முடியவில்லை. ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் மீண்டும் ஒரு மாயாஜாலம் செய்த ஓனாஹி, தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்து மொரோக்கோவின் வெற்றியை அசைக்க முடியாத இடத்திற்கு கொண்டு சென்றார்.

கடைசி நிமிட ‘பினிஷிங்’

ஆட்டம் முடியப்போகும் கூடுதல் நேரத்தில், மாற்று ஆட்டக்காரராக களம் புகுந்த சுஃபியான் ரஹிமி (Soufiane Rahimi) மொரோக்கோவின் 3வது கோலை அடித்து கனடாவின் உலகக்கிண்ணக் கனவை முற்றிலுமாக தகர்த்தார். 3-0 என்ற கோல் கணக்கு கனடா அணிக்கு சற்றே ஏமாற்றத்தை தந்தாலும், உலகக்கிண்ண வரலாற்றில் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கி, அஞ்சா நெஞ்சத்தோடு தலைநிமிர்ந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது கனடா அணி.

இனி வரும் ஜூலை 9ஆம் திகதி நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அல்லது பராகுவே அணியுடன் மொரோக்கோ மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.