தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை அணி நாடு திரும்பியது
இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணியினர் இன்று (28) நாடு திரும்பினர்.
அவர்கள் இன்று காலை கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் விளையாட்டு வீரர்களை வரவேற்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
இந்த வெற்றியை அடைவதற்கு அவர்கள் வழங்கிய அர்ப்பணிப்பு, உற்சாகம் மற்றும் போட்டிக்கு அமைச்சு நன்றிகளைத் தெரிவித்தது.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மதன மோதக (லேகியம்) விற்பனை செய்த ஒருவரை வென்னப்புவ காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வென்னப்புவ நகரில் ஆண்கள் பாடசாலைக்கு அருகில் இயங்கிவந்த ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்யும் ஒரு வணிக நிறுவனத்தில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மதன மோதக (லேகியம்) விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, விற்பனையாளரை நேற்று 27.10.2025 காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த ஆயுர்வேத வணிக நிறுவனத்தில் கஞ்சா கலக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 250 பாக்கெட் மதன மோதக (லேகியம்) பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர் குளியாபிட்டி பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த மதன மோதக (லேகியம்) பாக்கெட் ஒன்று பாடசாலை மாணவர்களுக்கு 250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் மதன மோதக (லேகியம்) விற்பனை செய்யப்பட விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிலாபம் நகரில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான ஒரு பெரிய மாரா மரத்தை வெட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
சிலாபம் மக்கள் வங்கியின் முன் அமைந்திருந்த இந்த பெரிய மாரா மரத்தின் அழுகிய சில கிளைகள் சமீபத்தில் விழத் தொடங்கியதை அடுத்து சில கிளைகளும் அப்போது வெட்டப்பட்டன.
இருப்பினும், அந்த மரம் காலாவதியாகி ஆபத்தானதாக மாறியதாலும், மழை காலத்தில் இம் மரம் ஆபத்தாக பார்க்கப்படுவதாலும் வெட்டப்பட்டதாக நகரவாசிகள் கூறுகின்றனர்.
பட்டைகளை அகற்றிய மாரா மரம் சிலாபம் நகரத்தின் மிகப் பழமையான மரம் என்றும் நகரவாசிகள் கூறுகின்றனர்.
அருவக்காடு திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை பிரதமர் கண்காணித்தார்.
மேல் மாகாணத்தின் திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக களனி மற்றும் புத்தளம் அருவக்காடு பிரதேசங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தைப் பார்வையிட, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் நேற்று 26ஆம் திகதி கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுண ஆராச்சி, அசித நிரோஷன், அருண பனாகொட, தேவானந்த சுரவீர, அஜித் கிஹான், ஹிருணி விஜேசிங்க, கயான் ஜானக, பைசல் மொஹமட் ஆகியோரும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டச் செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசத்தின் பொது மக்கள், சுற்றாடல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிலாபம்-காக்கப்பள்ளிய ரயில் நிலையத்தில் உள்ள கட்டிடங்கள், காலப்போக்கில் பராமரிப்பு இல்லாததால் கடுமையாக சேதமடைந்து, இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக ரயில் பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சிலாபம்-கொழும்பு ரயில் பாதையில் உள்ள காக்கப்பள்ளிய ரயில் நிலையம், தினமும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தும் இடமாகும்.
இந்த ரயில் நிலையத்தைச் சுற்றி களைகள் வளர்ந்து காணப்படுவதாகவும், கட்டிடம் கட்டப்பட்டதிலிருந்து சுத்தம் செய்யப்படவோ அல்லது புதுப்பிக்கப்படவோ இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ரயில் நிலையத்தின் மேல் தளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லமும் பாழடைந்துள்ளதால், நீண்ட காலமாக யாரும் அங்கு தங்கியிருக்கவில்லை என்றும் தெரிகிறது. ரயில் நிலையத்தில் ஒரு கழிப்பறை இருந்தாலும், அது பயன்படுத்தக்கூடிய நிலையில் இல்லை என்றும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
கழிப்பறையைச் சுற்றி களைகள் வளர்ந்திருப்பதால், யாரும் அதற்குள் நுழைய முடியாத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதி அதிக அளவில் காடுகளாக மாறிவிட்டதாகவும், பல காலமாக சுத்தம் செய்யப்படவில்லை என்றும் பயணிகள் கூறுகின்றனர். சில பயணிகள் இரவில் கட்டாய தேவை கருதி காக்கப்பள்ளியா ரயில் நிலையத்தைப் பயன்படுத்தினாலும், மற்றவர்கள் அந்தப் பகுதியில் விஷ ஜந்துக்களின் வாழ்விடமாக மாறிவிட்டதால் பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர். இது ஒரு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்க அரசு தற்போது தயாராகி வருகிறது.
இருப்பினும், சீரழிந்து இடிந்து விழும் நிலையில் உள்ள துணை ரயில் நிலையங்கள் குறித்து எந்த கவனமும் செலுத்தப்படாதது வருத்தமளிக்கிறது.
களைகள் வளர்ந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ள காக்கப்பள்ளியா ரயில் நிலையம், அவசரமாக சரிசெய்ய வேண்டிய இடம் என்று பயணிகளும் உள்ளூர்வாசிகளும் கூறுயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் நீதிமன்ற வளாகத்தில் இருந்து கைவிலங்குகளுடன் தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்ய விசாரணைகள் தொடங்கியுள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பிச் சென்ற நபர் தலவத்துகொட பகுதியைச் சேர்ந்தவராவார்.
மதுரங்குளிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த சந்தேக நபரை, கடந்த 25 ஆம் தேதி அப்பகுதி மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது, சந்தேக நபர் அப்பகுதியில் எந்தவொரு குற்றத்திலும் ஈடுபட்டதாக எந்த தகவலும் தெரியவரவில்லை. சந்தேக நபர் தொடர்பாக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் செய்த குற்றங்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இருப்பினும், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சந்தேக நபர் எந்த குற்றங்களும் செய்யாததால், அவரை பிணையில் விடுவிக்க புத்தளம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு பிணை வழங்க யாரும் முன்வரவில்லை.
அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படும் வரை, அவர் நீதிமன்ற வளாகத்தில் கைவிலங்குகளுடன் வைக்கப்பட்டிருந்தபோதே சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
பிரான்சில் உள்ள பாரிஸ் லூவ் அருங்காட்சியகத்தில், மாவீரன் நெப்போலியன் காலத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சின் தலைநகர் பாரிசில் பிரபலமான லூவ் அருங்காட்சியகம் உள்ளது. தினமும், 30,000க்கும் மேற்பட்டோர் பார்வையிடும் இந்த அருங்காட்சியகத்தில் உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியம், நெப்போலியன் கால நகைகள் பழமையான சிற்பங்கள் என ஆயிரக்கணக்கான கலைப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.இந்த காட்சியகத்தில் உள்ள, ‘அப்பல்லோ கேலரி’யில் பிரான்ஸ் அரசர்கள் மற்றும் அரசிகளின் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இருசக்கர வாகனத்தில் கடந்த 19 ம் தேதியன்று வந்த மர்ம நபர்கள் பக்கத்து கட்டடத்தில் இருந்து, ‘ஹைட்ராலிக்’ ஏணி உதவியுடன் அருங்காட்சியகம் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கண்ணாடியை இயந்திரத்தால் உடைத்து கேலரிக்குள் புகுந்துள்ளனர். அங்கிருந்த மாவீரன் நெப்போலியன் காலத்தைச் சேர்ந்த அரசன் மற்றும் அரசியின் விலைமதிப்பற்ற ஒன்பது நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே கொள்ளை சம்பவம் தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் வெளியாகின. இதனை வைத்து கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீசினர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் பாரிசில் இருந்து தப்பிச் செல்வதற்காக விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் பாரிஸ் நகரில் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின் பிடிபட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. அவர்களிடம் நடக்கும் விசாரணைக்கு பிறகு கொள்ளை போன நகைகள் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை தான் உருவாகும் என சொல்லப்பட்ட மோன்தா புயல் இன்றே உருவாகவிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது..
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், நாளை ‘மோன்தா’புயல் உருவாகும் எனவும், அது தீவிர புயலாக வலுப்பெற்று நாளை மறுநாள் கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டது.
ஆனால் தற்போது புயல் முன்கூட்டியே உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவியஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்காக நோக்கி நகர்ந்தது. தொடர்ந்து தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருமாறியது.
இந்த தாழ்வுமண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை காலைக்குள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்குவங்கக்கடலில் ‘மோன்தா’ புயலாக மாறும் எனவும், பின்னர் காக்கிநாடா அருகே வரும் 28ஆம் தேதி தீவிர புயலாக வலுப்பெற்று கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தது.
ஆனால் தற்போதைய அப்டேட்டின் படி, நாளை உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த மோன்தா புயல் முன்கூட்டியே உருவாகவிருக்கிறது. இன்று மாலை 5:30 மணிக்கு புயலாக வலுப்பெறும் எனவும், நாளை மறுநாள் காலை தீவிர புயலாக வலுப்பெற்று, அன்றே மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது மோன்தா புயல் சின்னம் சென்னையிலிருந்து 780 கிமீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும், மணிக்கு 6 கிமீ வேகத்தில் நகர்ந்துவருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டது உண்மையான செவ்வந்தியா என்பதில் தனக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
தனியார் யூடியூப் சனல் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இஷாரா செவ்வந்தியின் கைது தொடர்பில் விசாரணை அதிகாரிகள் செயற்படும் விதம் தனக்கு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லும் போது வெளியான புகைப்படங்களில் அவரது முகம் நீள்வட்டமாக இருந்தது. எனினும், தற்போது நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள செவ்வந்தியின் முகம் வட்டமாக உள்ளது.செவ்வந்தியின் தோற்றத்திலும் நிறைய மாற்றங்கள் உள்ளன.
பியூமி ஹன்சமாலியின் க்ரீமை பாவித்தால் கூட 8 மாதங்களில் இவ்வாறான தோற்றத்தை பெற வாய்ப்பில்லை. அத்துடன், உதவி காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல, செவ்வந்தியை நேபாளத்தில் வைத்து பார்த்தவுடன் அவரிடம் ‘நலமா?’ என வினவுகின்றார்.
செவ்வந்தியை போன்ற உருவ அமைப்பை உடைய மற்றொரு பெண்ணும் அங்கு இருக்கின்றார். இவ்வாறிருக்க, அவர் செவ்வந்தியை எவ்வாறு அடையாளம் கண்டுகொண்டார்?
வாகனம் செலுத்தும் ஒருவர் சாதாரண தவறொன்றை செய்துவிட்டு காவல்துறையினரிடம் சிக்கினால் அவர் பதற்றமடைவார். ஆனால், கொலைக் குற்றம் புரிந்த செவ்வந்தி, காவல்துறையிடம் சிக்கும் போது அவரது முகத்தில் எந்தவொரு பதற்றமும் இல்லை. மாறாக, அவரது முகத்தில் சிரிப்பே இருந்தது.
சாதாரணமாக ஒரு குற்றவாளியை மற்றுமொரு நாட்டிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரும் போது, முகத்தை மூடி அழைத்து வருவது வழக்கம். எனினும், செவ்வந்தி இலங்கைக்கு அழைத்து வரப்படும் போது அவர் தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு பகிரப்பட்டன.
இந்நிலையில், செவ்வந்தி தங்கியிருந்த இடத்தை பார்வையிட காவல்துறையினர் அவரை அழைத்துச் செல்லும் போது, முகத்தை மூடி அழைத்து செல்கின்றனர். முழு நாடே செவ்வந்தியின் முகத்தை பார்த்த பின்னர் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்?
இதேவேளை, பாதாள உலகக் குழுவின் தலைவர் கெஹல்பத்தர பத்மே தான் செவ்வந்தி நேபாளத்திற்கு தப்பிச்செல்ல உதவினார்.அவர் காவல்துறையிடம் சிக்கிய பின்னர் செவ்வந்தி தொடர்பான உண்மைகளை கூறுவார் என அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறான நிலையில், செவ்வந்தி ஏன் நேபாளத்தை விட்டு தப்பிச் செல்லாமல் இருந்தார்? இவ்வாறான விடயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதற்காக புதிய நிபந்தனைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (24) முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட போதிலும், 2013ஆம் ஆண்டு இல. 02 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் விதிமுறைகளை மீறி குறித்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இலங்கை சுங்கத்தில் சிக்கியுள்ளன
இந்த புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, இறக்குமதி செய்யப்பட்ட நாட்டைத் தவிர வேறு ஒரு நாட்டில் திறக்கப்பட்ட கடனுறுதி ஆவணங்கள் (cross-border LC) தொடர்பான ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க அனுமதி வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வாகனங்களை விடுவிப்பதற்கும் பதிவு செய்வதற்கும் பல நிபந்தனைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.