Wednesday, February 5, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 5

நாகவில்லு பாடசாலையில் 9 மாணவர்கள் சித்தி!

0

புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையில் கல்வி கற்று கடந்த வருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேற்றை பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கு முன்னாள் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் SM ரிஜாஜ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி 9 மாணவர்கள் சித்திபெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் கெளரவத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

தமது மாணவர்களை மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தயார்படுத்தி சித்திபெறவைத்த ஆசிரிய பெருந்தகைகளுக்கும், அதிபருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பல வரிய மாணவர்களும் திறமை சித்தி பெற்றுள்ளதுடன், இதற்காக அயராது பாடுபட்ட பெற்றோர்களின் அற்பணிப்பையும் முன்னாள் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் SM ரிஜாஜ் வியந்து பாராட்டியுள்ளார்.

மேலும் குறித்த பாடசாலையில் பல போராட்டங்களுக்கு மத்தியில் விஞ்ஞான பிரிவும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பல மாணவர்கள் குறித்த பிரிவில் கல்வி கற்று வரும் நிலையில், ஊரின் தனவந்தர்கள் சிலரின் அனுசரணையில் விஞ்ஞான பிரிவு மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழினத்தின் மூத்த தலைவர் மறைந்தார்!

0

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று (29) காலமானார்.

குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால் தலையில் அடிபட்டதால் தலையில் உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்ட நிலையில் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

யாழ். மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்த மாவை சேனாதிராஜா, தனது 19 ஆவது வயதில் 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்கேற்றார்.

அதனை தொடர்ந்து 20 ஆவது வயதில் 1962 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து கொண்டார்.

அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த கால பகுதியில், 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மெகசீன் சிறைச்சாலைகளில் சுமார் 7 ஆண்டுகள் வரை சிறையில் தனது வாழ் நாட்களை கழித்தார்.

1977 இல் மாவை சேனாதிராஜா தனது உறவுமுறை ‘பவானி’ என்பவரை திருமணம் செய்தார்.

மேலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தலைவராக 2014 ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய 10 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார்.

1962 ஆம் ஆண்டு முதல் அவரின் இறப்பு வரையில் சுமார் 63 வருடங்கள் கட்சிக்காகவே வாழ்ந்துள்ளார்.

உயிரிழக்கும் போது மாவை சேனாதிராஜாவுக்கு வயது 82.

காலமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) பிற்பகல் 3 மணிக்கு யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் என்று அன்னாரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற பிரவேசம்…

மாவை சேனாதிராஜா 1989 பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணி வேட்பாளர்களில் 13 வதாக இடத்தை பிடித்து தோல்வியடைந்தார்.

ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராஜா தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

இதோபோல் 1999 ஜூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார்.

2000 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.

2001 ஒக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், த.வி.கூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.

இதன் பின் 2001 தேர்தலில் த.தே.கூ சார்பாக யாழ். மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.

அதேபோல் 2004, 2010, 2015 நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2014 செப்டம்பர் இல் சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1989 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (தவிகூ) – 2,820 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்படவில்லை.
2000 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (தவிகூ ) – 10,965 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2001 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (தவிகூ) – 33,831 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2004 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் – (ததேகூ) – 38,783 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2010 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (ததேகூ) – 20,501 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2015 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (ததேகூ) – 58,782 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2020 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (ததேகூ) – 20,358 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்படவில்லை.

பாராளுமன்றில் சாதித்துக்காட்டிய ஹக்கீம்!

0

விவாதத்திற்கு வரும் ரவூப் ஹக்கீமின் ஜனாஸா எரிப்பு தனிநபர் பிரேரணை

ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் அரசியல்வாதிகள் நடந்து கொண்ட முறை, அரச அதிகாரிகளின் போக்கு உட்பட கொரோனா தொற்றைக் காரணங்காட்டி முடக்கப்பட்டு அநீதி செய்யப்பட்ட பிரதேச மக்களுக்காக என, பல தடவைகள் கடந்த அரசாங்கத்திடமும் தற்போதைய அரசாங்கத்திடமும் பாராளுமன்றத்தில் துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் பல கேள்விகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் தொடுத்திருப்பதைக் காண முடிகிறது.

இவ்வாறானதொரு மோசமான சூழ்நிலை எதிர்காலத்திலும் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படாமல் இருக்கவும் தற்போது இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கவும் தொடராக ரவூப் ஹக்கீம் போராடி வருகிறார்.

அந்த வகையில், பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்க தனிநபர் பிரேரணையொன்றைக் கொண்டு வர முயற்சித்திருந்தார். குறித்த பிரேரணை விவாதத்திற்கு திகதி குறிப்பிடப்படாது (பா.28/2024) பாராளுமன்ற ஒழுங்குப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது.

கடந்த 23ஆம் திகதி கௌரவ சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய பெப்ரவரி 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற செயற்பாடுகளில் மு.ப. 11.30 முதல் பி.ப. 5.00 மணிவரை தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த நேரத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரஊப் ஹக்கீம் அவர்களால் கொண்டு வரப்படும் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதைத் தவிர்த்து தகனஞ்செய்தமை தொடர்பில் விசாரணை செய்து பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணை மீது விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA,JP) – ஓட்டமாவடி.

இணையவுள்ள பலமான புதிய கூட்டணி!

0

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சர்வஜன பலய மற்றும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஒரு குழு எம்.பிக்கள் இணைந்து போட்டியிடத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் நேற்று முன்தினம் (27) கொழும்பு டார்லி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, அனுர பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவண்ண ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினர், பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறிய குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தினர், பேராசிரியர் சன்ன ஜெயசுமன ஆகியோர் சர்வ ஜன பலய கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த விவாதத்தில் பங்கேற்றார்.

உள்ளூராட்சித் தேர்தல்கள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இங்கு விவாதிக்கப்பட்டதாக அறியப்படுகிறது, மேலும் இந்த பிரதிநிதிகள் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இந்த விடயத்தில் விவாதங்களை நடத்தியுள்ளதாகவும் அறியக்கிடைத்தது.

அனுராதபுர பகுதிகளில் 21 மணி நேர நீர் வெட்டு!

0

நீர் விநியோகம் துண்டிப்பு குறித்த அறிவித்தல் – அனுராதபுரம்

அத்தியவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இன்று (29) இரவு 9.00 மணி முதல் நாளை (30) மாலை 06.00 மணி வரையில்அனுராதபுரத்தின் குறிப்பிடத்தக்க பிரதேசங்களில் 21 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நீர் விநியோகம் துண்டிக்கப்படும் பிரதேசங்கள் | அனுராதபுரம் வடக்கு நீர் விநியோக அமைப்பு

கலத்தேவ, நெலும்கன்னியா, தரியங்குளம், கல்குளம், கவரெக்குளம், வண்ணம்மடுவ, குஞ்சிக்குளம், குருந்தன்குளம், மாத்தளை சந்தி, சாலிய மாவத்தை, தன்னயன்குளம், யாழ்ப்பாண சந்தி, பண்டாரபுளியங்குளம், தெப்பன்குளம், ஜெயந்திகிராமம், சாலியபுர, மங்கடவல, லிங்கலபார, கட்டமான்குளம்.

அனுராதபுரம் புதிய நகர நீர் வழங்கல் அமைப்பு – அனுராதபுரம் கட்டம் 1

மிஹிந்தலை நீர் விநியோக அமைப்பு

கந்துவட்டபார, ருவங்கம, வெல்லமொரண, தரியங்குளம், பலுகஸ்வௌ, சட்டம்பிகுளம், அம்பதலாகம, பொலிஸ் கிராமம், மஹிந்த ராஜபக்ஷ மாவத்தை, கிரிந்தேகம, கன்னட்டிய மற்றும் குருதன்குளம்.

வெளியாகிய அத்தியாவசிய பொருட்களின் விலை!

0

பல அத்தியாவசிய பொருட்களின் மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி வெள்ளை முட்டை, பால்மா, கோதுமை மா, சீனி, பருப்பு,உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களுக்கு மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வெள்ளை முட்டையின் விலை 28-35 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் விலை 870-1,000 ரூபாவாகவும்,ஒரு கிலோகிராம் கோதுமை மா 155-163 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 228-245 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பருப்பு 275-293 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 160-180 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 210-220 ரூபாவாகவும், உள்ளூர் அரிசி 220-230 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் அரிசி 210-220 ரூபாவாகவும், நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

கையடக்க தொலைபேசிகளுக்கு தடை!

0

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாத கையடக்க தொலைபேசிகளை கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும் கொள்வனவு செய்ய வேண்டாம் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, பொதுமக்களிடம் கோரியுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் விளக்கமளிக்கையில்,

“எமது நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும் வாங்க வேண்டாம் என்று பொதுமக்களை தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்.”

“இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத தொலைபேசி பயன்பாட்டைத் தடுக்க விரைவில் ஒரு புதிய தானியங்கி அமைப்பை நாங்கள் செயல்படுத்துவோம்.”

“அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகளால் நமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகளைக் குறைத்து நாட்டில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களைப் பாதுகாப்பது இதன் நோக்கமாகும்.”

அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகள் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக விரோத நடவடிக்கைகளைக் குறைப்பதற்கும், கையடக்க தொலைபேசிகள் மூலம் சட்டவிரோத பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண்பதை மேலும் வலுப்படுத்துவதற்கும் இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் சந்தையில் சட்டப்பூர்வ கையடக்க தொலைபேசிகளின் பெருக்கம் அதிகரிப்பதன் காரணமாக எதிர்காலத்தில் விலைகள் குறைய அதிக வாய்ப்பு உள்ளது.” என்றார்.

சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்!

0

தீவு முழுவதிற்குமான சமாதான நீதவானாக எம்.என்.எம்.யஸீர் அறபாத் சத்தியப்பிரமாணம்

மாவடிச்சேனை, பஸீர் வீதியைச்சேர்ந்த முஹம்மது நஸீர் முஹம்மது யஸீர் அறபாத் தீவு முழுவதிற்குமான சமாதான நீதவானாக இன்று (28) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹம்மட் பஷீல் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் தென்கிழக்கு பல்கலைக்கழக இளங்கலைப் பட்டதாரியும், மாவடிச்சேனை மஸ்ஜித் மஸீத் ஸாலிஹ் அல் மஸீத் பள்ளிவாயலின் செயலாளரும், பத்தி எழுத்தாளரும், இளம் சமூகச்செயற்பாட்டாளருமாவார்.

மாவடிச்சேனை அல்-இக்பால் வித்தியாலயம் மற்றும் ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) என்பவற்றின் பழைய மாணவரான இவர் முஹம்மது நஸீர், மர்ஹுமா பாத்திமா தம்பதிகளின் புதல்வருமாவார்.

தேவைக்கு ஏற்ப சட்டம் மாற வேண்டும்!

0

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் மேற்கொள்ளக் கூடிய சாத்தியமான அனைத்து முடிவுகளையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும்

• பொருளாதாரத்தை சீராக்க சுங்கத் திணைக்களம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை.

• கடந்த ஆண்டில் சுங்கம் அடைந்த இலக்குகளை வரவேற்கிறேன்

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கும் தற்போதைய அரசாங்கம் சாத்தியமான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு நேற்று (27) பிற்பகல் சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்த வருடம் சர்வதேச சுங்க தினம் ” சுபீட்சமான தேசத்தை உருவாக்க வினைத்திறனான சுங்கத் திணைக்களம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகிறது.

1952 ஆம் ஆண்டு 17 ஐரோப்பிய நாடுகளின் பங்கேற்புடன் சுங்க ஒத்துழைப்பு கவுன்சிலாக நிறுவப்பட்ட இந்த சர்வதேச அமைப்பில் 1967 ஆம் ஆண்டு இலங்கை உறுப்பினராக இணைந்தது. 1994 ஆம் ஆண்டில், சுங்க ஒத்துழைப்பு கவுன்சில் உலக சுங்க அமைப்பு என பெயரிடப்பட்டது.

1953 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற சுங்க ஒத்துழைப்பு கவுன்சிலின் முதல் அமர்வை நினைவுகூரும் வகையில் இந்தத் தினம் சர்வதேச சுங்க தினமாக பெயரிடப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி, உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள சுங்க நிறுவனங்கள் சர்வதேச சுங்க தினத்தைக் கொண்டாடுகின்றன.

யுகத்திற்கு ஏற்ற நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகிய நிறுவனங்களில் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

காலத்தின் சவால்களுக்கு ஏற்ப சட்டம் அல்லது நிறுவனங்கள் மாற வேண்டும் என்றும் எந்தவொரு சட்டமோ அல்லது நிறுவனமோ எக்காலமும் நிலையாக இருக்க முடியாது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில்:

கடந்த ஆண்டு சுங்கத்திற்கு வழங்கப்பட்ட பொறுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை சீராக்க சுங்கம் மேற்கொண்ட முன்னெடுப்புகள் பாராட்டத்தக்கவை. கடந்த ஆண்டு சுங்கம் அடைந்த இலக்குகளை நாங்கள் பாராட்டுறோம். வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை, வருவாய் இலக்குகளை அடைவதன் மூலம் மட்டும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, வருமான விகிதத்தை அதிகரிக்க வேண்டும். பொருளாதார சரிவு காரணமாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சந்தை சுருங்கியது. சர்வதேச நாணய நிதியத்தின் அளவீடுகளின்படி நாம் அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறோம். எனவே, மேலோட்டமாகப் பார்க்கும்போது பொருளாதார தேகம் மீண்டுவிட்டதாகத் தோன்றினாலும், முழு பொருளாதார கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொருளாதார நெருக்கடியை சீராக்க நாம் கவனமாக செயற்பட வேண்டும்.

ஒரு சிறிய தவறு கூட பொருளாதாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். எனவே, சுங்கத் திணைக்களம் 2550 பில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டுவதற்கு கூட்டாகச் செயல்பட வேண்டும்.

சுங்கத்திற்கான வசதிகளை வழங்குவது தொடர்பிலும் புதிய சம்பள அளவை ஸ்தாபிப்பது தொடர்பிலும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அது குறித்து நிதியமைச்சு, திறைசேரியுடன் கலந்துரையாடி தீர்வொன்றை வழங்க எதிர்பார்க்கிறேன்.

இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது. அரச சேவையை மேலும் திறம்படச் செயற்படுத்த, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தை இணைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. வலுவான நிறுவன கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

முன்னைய அரசியல் தரப்பு மற்றும் அரச சேவை பொறிமுறைக்கு இடையே முரண்பாடுகள் இருந்தன. அந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்த அரசியல் தரப்பில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களை சரியான நேரத்தில் மேற்கொள்ள முடியவில்லை. சரியான நேரத்தில் நல்லதொரு நிறுவன கட்டமைப்பை உருவாக்க தவறியதால் எதிர்பார்க்கப்பட்ட பிரதிபலன்கள் கிடைக்கவில்லை. அதனால் நாம் பல விடயங்களை கையகப்படுத்தும் முன்பாக வெளியாட்கள் அவற்றை கைப்பற்றிக் கொண்டனர். இதன் விளைவாக, இலங்கையின் இயற்கையான அமைவிடத்தைப் பயன்படுத்துவதற்கான சில வாய்ப்புகளை ஒரு நாடு என்ற வகையில் இழந்திருக்கிறோம்.

எதிர்காலத்தில் இலங்கை துறைமுகத்தில் 113 இலட்சம் கொள்கலன் செயற்பாடுகளை முன்னெடுக்க தேவையான முன்னெடுப்புகள் செய்யப்பட வேண்டும். அதற்கான கூட்டு முயற்சியை ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் நாம் ஒரு நாடாக முன்னோக்கி செல்ல முடியாது. இந்த வருடத்தில் சுங்க திணைக்களத்திற்கு 2550 பில்லியன் ரூபா வருமான இலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, சிறப்பாக பணியாற்றிய 20 சுங்க அதிகாரிகளை பாராட்டும் விதமாக உலக சுங்க அமைப்பின் சான்றிதழ்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் இரண்டு அதிகாரிகளுக்கு தகைமை விருதுகளும் வழங்கப்பட்டன.

அதனையடுத்து சுங்கப் பணிப்பாளர் நாயகத்தினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு சுங்க நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் உட்பட சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி!

0

2025 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு கூடியது

பிரதேச மட்டத்தில் ஜனாதிபதி நிதிய சேவைகளை வழங்க அனுமதி

மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்துவதற்காக, கடமை நேரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான ஜனாதிபதி நிதியிலிருந்து பணியாளர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கவும் திட்டம்

நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில், ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை கிராம மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கும் பிரதேச செயலகம் மூலம் சேவைகளை இணையவழி(ஒன்லைன் முறை) மூலம் வழங்குவதற்கும் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியபோது, ​​இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஜனாதிபதி நிதியத்தின் நன்மைகள் உண்மையாக மக்களைச் சென்றடையும் வகையில் வினைத்திறனான சேவைகளை வழங்கும் வகையில் திட்டம் தயாரித்தல், புதிய யோசனைகள் மற்றும் தற்போதுள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அரச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் அதிக எண்ணிக்கையிலானோர் காத்திருப்பது குறித்து இதன் போது ஆராயப்பட்டது. இதற்கான தீர்வாக கடமை நேரத்திற்குப் பிறகு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கும் அந்த சேவையை முன்னெடுக்கும் பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்க ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி ஒதுக்குவது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. தற்பொழுது இந்த முறைமை கராபிடிய மருத்துவமனையில் மாத்திரம் முன்னெடுக்கப்படுகிறது.எதிர்காலத்தில் அதனை தேசிய மருத்துவமனை, கண்டி பெரியாஸ்பத்திரி மற்றும் ரிச்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனை என்பவற்றிலும் முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வசதிகளை வழங்குவதை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதோடு க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகளை மையமாகக் கொண்டு புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் தற்பொழுது முன்னெடுக்கப்படும் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொசான் கமகே, பேராசிரியர் ஜே.ஆர்.பி. ஜயக்கொடி, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் சந்திரசிறி மாயாதுன்னே மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.