Wednesday, February 5, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 52

உலக வானிலை அமைப்பின் திடுக்கிடும் தகவல்

0

உலக வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகளின் நிறுவனமான உலக வானிலை அமைப்பு தகவலொன்றினை வெளியிட்டுள்ளது.

அவ்வகையில், 1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமி தற்போது வெப்பநிலையில் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மனித செயல்பாடுகள் காரணமாக புவி வெப்பமயமாதல் அதிகரிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இருப்பினும், இதில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை.

அண்டார்டிகா பகுதியில் வெப்பக் காற்று

இவ்வாய்விற்காக, பணிக்கட்டிகள், மரங்களின் வயது, பல ஆயிரம் ஆண்டுகளாக புவியின் வெப்பநிலை உள்ளிட்டவை ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக சீனாவில் ஒருமுறை 52.2 டிகிரி செல்சியஸ் அதாவது 126 ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், கனடாவில் காட்டுத் தீ முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகம் காணப்படுகிறது.

இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும்போது பனிப்பாறைகள் மேலும் உருகி கடல்நீர் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகள் மூழ்கக் கூடும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, கடல் நீரின் வெப்பநிலையும் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் மிகவும் குளிர் நிலவக்கூடிய அண்டார்டிகா பகுதியிலும் வெப்பக் காற்றை உணர முடிவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரான்சில் விருதை வென்ற யாழ்ப்பாண இளைஞர்

0
பிரான்சில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான ‘பாரிஸின் சிறந்த பாண்’ என்ற போட்டியில் இந்த ஆண்டுக்கான விருதை வென்ற இலங்கை – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் இன்றைய தினம் (28) இலங்கை வரவுள்ளார்.

வருடாந்தம் பிரான்ஸில் நடத்தப்படும் ‘சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில், இந்த ஆண்டுக்கான விருதை யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த 37 வயதான தர்ஷன் செல்வராஜா வென்றிருந்தார்.

30 வது முறையாக இடம்பெறும் இந்தப் போட்டியில், இந்தமுறை 126 பேரில் வெற்றியாளராக அவர் தெரிவு செய்யப்பட்டு 4 ஆயிரம் யூரோவை பணபரிசாக பெற்றிருந்தார்

இதன்காரணமாக பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்னின் எலிசே மாளிகையில், அடுத்துவரும் ஓர் ஆண்டுக்கு பாண் தயாரிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது

இந்தநிலையில், இன்று நாட்டுக்கு வருகைத் தரும் அவர், அரச மட்டத்திலான அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புகளுடன் சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், பாணின் உற்பத்தி மற்றும் அதன் தனித்துவம் தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் தெளிவுபடுத்தி அது சார்ந்த கல்வி நிலையங்களை உருவாக்குவதே தமது இலக்காகும் என தர்ஷன் செல்வராஜா குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையத்தில் சிக்கிய பல கோடி மதிப்பிலான போதைப்பொருள்

0
கட்டுநாயக்க விமான நிலையத்தில், 21 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால், இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது, 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறு பைக்கற்றுக்களாக பொதியிடப்பட்ட கஞ்சா உள்ளிட்ட சில போதைப்பொருட்கள், விமான நிலையத்தில் வைத்து நேற்று மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் இடம்பெறும் விருந்துபசாரங்களில் இதுபோன்ற போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக, விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஹொங்கொங்கில் இருந்து, டுபாய் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்றைய தினம், விமானம் மூலம் பல பெருமளவான பொதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அந்தப் பொதிகளைக் கொண்டுசெல்வதற்காக, விமான நிலையத்தின் பொதிகள் பிரிவிற்கு மூன்று பேர் சென்றுள்ளனர்.

இதன்போது, சுமார் 33 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், புறக்கோட்டை பகுதியில் இருந்து மேலும் ஒரு தொகை போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியை வாஷ் அவுட் பண்ணிய பாக்கிஸ்தான்

0
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி. விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 57 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் அப்ரர் அஹமட் 4 விக்கெட்டுக்களையும், நஷீம் ஷா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்தநிலையில், தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 134 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 576 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

அணிசார்பில், அதிகபடியாக அப்துல்லா ஷபீக் 201 ஓட்டங்களையும், அகா சல்மான் 132 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின், ஹசித பெர்னாண்டோ 133 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதனையடுத்து, இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் 188 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அணிசார்பில் அதிகபடியாக ஏஞ்சலோ மெத்யூஸ் 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், பாகிஸ்தான் அணியின் நோமன் அலி 70 ஓட்டங்களுக்கு 07 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இன்னிங்ஸ் ஒன்றில் நோமன் அலி பெற்றுக்கொண்ட அதிக விக்கெட்டுக்கள் இதுவாகும்.

இதன்படி, இலங்கை அணி இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது.

இவ்விரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்படி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2 – 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

5 இஸ்லாமிய அமைப்புக்களின் தடை நீக்கம்

0
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 5 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் ஜமாத், ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத், ஐக்கிய இலங்கை தௌஹீத் ஜமாத் மற்றும் ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா ஆகிய 5 அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் நோக்கில் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

பிரான்ஸ் ஜனாதிபதி முதன் முறையாக இலங்கை வருகிறார்

0

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை வெள்ளிக்கிழமை (28) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் இதுவாகும்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தை வலுப்படுத்தவும், பிராந்தியத்தில் பிரான்சின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தவும்  ஒரு “வரலாற்று” பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த ஐந்து நாள் பயணம் ஜூலை 24 அன்று பிரான்ஸ்  தீவுக்கூட்டமான நியூ கலிடோனியாவில் ஆரம்பமாகியது. அதைத் தொடர்ந்து வனுவாட்டு மற்றும் பப்புவா நியூ கினியாவில் நிறைவடையும்.

அதன் பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

ஜூன் மாதம் பாரிஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டின் அரச தலைவர் அமர்வின் போது ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடைசியாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பில் இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளத்தை அறிவித்த நாடுகளின் குழுவில் பிரான்ஸும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மசாஜ் நிலையம் சென்று பல்பு வாங்கிய போலீஸ் அதிகாரி

0

மாலம்பே, தலஹேன பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் வைத்து நுகேகொட லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அவரது மனைவி பிடித்ததையடுத்து சண்டையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சப் இன்ஸ்பெக்டராக கடமை புரியும் இவர், கடந்த வாரம் ஒரு நாள் குறித்த மசாஜ் நிலையத்துக்குச் சென்று, தனது உத்தியோகபூர்வ பொலிஸ் அடையாள அட்டையைக் காட்டி ஓர் அழகான யுவதியை மசாஜ் செய்ய அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அங்கிருந்த பெண் ஒருவர் இது குறித்து அவரது மனைவிக்கு தெரிவித்ததையடுத்து, அங்கு வந்த அவரது மனைவி கணவரையும், மசாஜ் செய்துகொண்டிருந்த பெண்ணையும் கடுமையான வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மன்னார் தொடக்கம் மாத்தளை வரை நடைபவனி

0

தமிழகத்தில் இருந்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மலையக மக்கள் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை நினைவு கூறும் வகையில் மன்னாரில் இருந்து மாத்தளை வரையான நடைபேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளைய தினம் மன்னாரில் ஆரம்பிக்கும் இந்த பயணம் எதிர்வரும் ஒகஸ்ட் 12ம் திகதி மாத்தளையில் நிறைவு பெறவுள்ளது.

மலையக பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காக தென்னிந்தியாவில் இருந்து மலையக மக்கள் அழைத்து வரப்பட்டு 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.

மன்னாரில் தரையிறங்கிய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து மாத்தளை வரை கால்நடையாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.

மாண்புமிகு மலையகத்திற்கான கூட்டிணைவு, சிவில் அமைப்பு என்பன இணைந்து இந்த நடைபயணத்தை முன்னெடுக்கவுள்ளன

ஆளுனர் தலைமையில் புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்

0

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று 12ஆம் திகதி வடமேல் மாகாண ஆளுனர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் புத்தளம் மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம், சிந்தக அமல் மாயாதுன்ன, நீர்வழங்கள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் மீளாய்வுகளை அரச நிறுவனம் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளால் முன்வைக்கப்பட்டது.

கடந்த காலங்களில் தடைப்பட்டுள்ள பாதை மற்றும் பாலங்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம் மற்றும் சனத் நிஷாந்த ஆகியாரினால் கவனயீர்ப்பு செய்யப்பட்டது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைக் காரணமாக பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்தமையால் இந்த வேலைத்திட்டங்கள் தடைப்பட்டதாகவும் அதனை மீள ஆரம்பிப்பதற்கான நிதித்திட்டமிடல் வேலைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதகாவும் குறிப்பிடப்பட்டது.

விரைவில் அந்த திட்டங்களை மீள ஆரம்பிப்தற்கான தீர் மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னம்பிட்டி விபத்து – பலி மேலும் அதிகரிப்பு

0
பொலனறுவை – மன்னம்பிட்டிய கொட்டலிய பாலத்தில் ஆற்றில் கவிழ்ந்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் விபத்தில் காயமடைந்த 41 பேர் மன்னம்பிட்டிய மற்றும் பொலனறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் உட்பட 9 பேர் உயிரிழந்ததாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சம்பத் இந்திக்க தெரிவித்தார்.

அத்துடன் மன்னம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கதுருவலையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே கொட்டலிய பாலத்தில் மோதி கொட்டலிய ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பேருந்து விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் அதில் 67 பேர் வரை பயணித்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.