Wednesday, February 5, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 54

3 நாட்களில் 54 பேர் பலி

0

இந்தியாவின் உத்தர பிரதேச பல்லியா மாவட்ட வைத்தியசாலையில், கடுமையான வெப்பநிலைக்கு மத்தியில், கடந்த 3 நாட்களில் மாத்திரம் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 400க்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறப்புக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

உத்தர பிரதேச பகுதியில், 40 செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆங்கிலத்தை தேசிய மொழியாக்க நடவடிக்கை

0
அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா, ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற 2018 – 2022ஆம் கல்வியாண்டு தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் தேசிய பாடசாலைகளுக்கான ஆயிரத்து 729 நியமனங்களும் மேல் மாகாணத்திற்கான 626 நியமனங்களும் வழங்கப்பட்டன.

அதனையடுத்து, ஏனைய 8 மாகாணங்களுக்குமான நியமனங்களும் வழங்கப்பட்டதோடு மொத்தமாக இன்றைய தினத்தில் 7 ஆயிரத்து 342 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்தநிலையில், நாட்டிற்குள் 2050ஆம் ஆண்டிற்கு பொருத்தமான கல்வி முறையை உருவாக்குவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதற்கான முதன்மைக்காரணி மனித வளம் என வலியுறுத்திய ஜனாதிபதி, மனித வளத்தை தயார்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களை சார்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டிற்குள் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்திலும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் கல்வி முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

தேரர்களால் வைக்கப்பட்டுள்ள கற்களை உடனடியாக நீக்க வேண்டும்

0

வரலாற்று முக்கியத்துவம் மிக்க விகாரைகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக பொது மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பதற்கு இடமளிக்க முடியாது. தேசிய கொள்கைகளை தொல்பொருள் திணைக்களம் பின்பற்ற வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வடக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ளாமல் செயற்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , ‘நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்று  கற்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? ‘ என்று அதிகாரிடம் கடுந்தொனியில் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதன் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் காணப்படும் 229 ஏக்கர் காணியை விடுப்பதற்கான கடிதத்தை ஜூன் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்திருந்தார்.

எனினும் இதுவரையில் அதற்கான பதில் வழங்கப்படவில்லை என வடக்கு பிரதிநிதிகளால் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பணிப்பாளர் நாயகம் , ‘எனக்கு அதனை விடுவிப்பதில் பாரிய சிக்கல் காணப்படுகிறது.’ எனக் குறிப்பிட்டார்.

எனினும் அது அமைச்சரவையின் கொள்கை என்றும், அதனை தொல்பொருள் திணைக்களம் பின்பற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி கடுந்தொனியில் தெரிவித்ததோடு, அடுத்த முறை இவ்வாறு தேசிய கொள்கையை பின்பற்றாமைக்கு காரணங்களை முன்வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி எச்சரித்தார்.

விகாரையொன்றை அமைப்பதற்கு 275 ஏக்கர் நிலப்பரப்பை எடுத்தால் அது மகா விகாரையை விடவும் பெரியதாகிவிடும். மகா விகாரை, தியதவனாராமய மற்றும் அபய கிரி உள்ளிட்ட அனைத்து விகாரைகளை இணைத்தால் 100 ஏக்கர் காணப்படும்.

அவ்வாறெனில் இவற்றை விட பாரிய விகாரையை அமைப்பதற்காகவா நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்று  கற்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? என்று ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக ஒரு விகாரைக்கு 220 ஏக்கர் நிலப்பரப்பு உரித்துடையதாகக் காணப்படும் என்று நான் நினைக்கவில்லை. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடி இது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொது மக்களின் 3000 ஏக்கர் காணியை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது. பனாமுரே திலகவன்ச என்ற தேரரே தற்போது அந்த காணியை ஆக்கிரமித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதன் போது சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டிருந்த கிழக்கு தொல்பொருள் பாதுகாப்பு செயலணியின் உறுப்பினராக அந்த தேரர் செயற்பட்டதாக அதிகாரிகள் இதன் போது தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி , ‘அந்த செயலணி தற்போது செயற்பாட்டில் இல்லையல்லவா? அத்தோடு அந்த செயலணிக்கு அரசாங்கத்தின் காணியையோ அல்லது தனியாரின் காணியையோ ஆக்கிரமிக்க முடியாது. இதில் என்ன சட்ட முறைமை காணப்படுகிறது? வனப்பகுதிகள் உங்களுக்கு உரித்தானதில்லையல்லவா?

திரியாயவுக்கு எதற்காக 3000 ஏக்கர் காணி தேவைப்படுகிறது? திரியாய என்பது விகாரையல்ல. முன்னயை காலங்களில் அது துறைமுக மையமாகும். படகின் மூலம் திரியாயவிலிருந்து ஹொரவபொத்தான வரை செல்ல முடியும். பின் ஹொரவபொத்தானையிலிருந்து அநுராதபுரத்துக்கும், அங்கிருந்து மல்வத்து ஓயாவுக்கும் , அங்கிருந்து மன்னாருக்கும் செல்ல முடியும்.

அந்தப் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க இந்து கோவிலொன்றும் காணப்பட்டது. எனவே அங்கு தேரர்களால் வைக்கப்பட்டுள்ள கற்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன் போது பணிப்புரை விடுத்தார்.

கொழும்பில் நாளை 20 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

0
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை(13) 20 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொரகபிடிய, சித்தமுல்ல, ரத்மல்தெனிய, மஹரகம – பிலியந்தலை வீதிப்பகுதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெடிய வீதி, மெதவல வீதி,போகுந்தர வீதி ஆகிய பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் விலகல்.

0
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க பதவி விலகியுள்ளார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அனுர மனதுங்க கடிதம் ஒன்றின் மூலம் தமது பதவி விலகலை அறியப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், ஜனாதிபதிக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் காணி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு தன்னிமுறிப்பு விகாரை அமைந்துள்ள காணி தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அதுகுறித்து ஜனாதிபதி தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மனதுங்க, குறித்த விகாரை தற்போது 72 ஏக்கர் காணி பரப்பை கொண்டுள்ளது. இதனை தவிர மேலும் 275 ஏக்கர் பரப்பு நிலம் விகாரை சார்பில் கோரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எனினும், இதனை மறுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜேத்தவனாராமய, மஹா விகாரை மற்றும் அபயகிரி விகாரை என்பனவற்றை இணைத்துப்பார்த்தாலும் 100 ஏக்கர் காணியே இருக்கும்.

அவ்வாறெனில் குறித்த விகாரைகளை விடவும் அளவில் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு விகாரை பெரியதா? என கேள்வி எழுப்பினார்.

அத்துடன், வரலாற்றை நீங்கள் எனக்கு கற்றுத்தருகின்றீர்களா? இல்லை நான் உங்களுக்கு கற்றுத்தர வேண்டுமா? எனவும் ஜனாதிபதி கடுமையாக அவரை சாடியிருந்தார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில், இன்றைய தினம் வெளியாகியிருந்த நிலையில், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

2500 ஆசிரியர் நியமனங்கள் இவ்வாரம் வழங்கப்படும்!

0
கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த, மேல் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளுக்கான 2,500 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளதாக அவர் எமது செய்திச் சேவைக்கு அனுப்பி வைத்துள்ள குரல்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 16ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் அலரி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்.
அதேவேளை, ஏனைய மாகாண பாடசாலைகளுக்கான நியமனக் கடிதங்கள் அந்தந்த மாகாண கல்விக் காரியாலயங்களில் வழங்கப்படும்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வியமைச்சு தற்போது மேற்கொண்டுள்ளது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.

யாழில் இனி தனியார் வகுப்புக்களுக்கு தடை

0
எதிர்வரும் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில், தரம் ஒன்பதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு, வெள்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்த பின்னரும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும், தனியார் வகுப்புக்கள் நடத்தப்படுவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரனின் தலைமையில் இன்று(9) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில், சுகாதாரம் மற்றும் கல்வித்துறைசார் அதிகாரிகள், மதத் தலைவர்கள், காவல்துறையினர், தனியார் கல்வி நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக, வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால், மாணவர்களுக்கும், சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகளை கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி

0
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இன்று முன்மொழிந்துள்ளார்.

இன்றைய சிறுவர்களுக்கு பாலியல் பற்றிய உண்மையான தகவல்கள் தெரியாது.

இதனால், பல்வேறு பிரச்சினைகளுக்கு சிறுவர்கள் ஆளாகின்றனர்.

சில பாடசாலை மாணவர்களுக்கு சமூக நோய் என்றால் என்ன என்று தெரியாது.

சில சிறுவர்கள் இந்த நோய்களைப் பற்றி அறியாததால் அவர்களுக்குத் தெரியாமல் பல்வேறு சமூக நோய்களால் பாதிக்கப்படலாம்.

இந்த நோய்களின் அறிகுறிகள் கூட அவர்களுக்குத் தெரியாது என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் எனவும் டயனா கமகே கோரினார்.

ஆப்கான் அணியை அடித்து நொறுக்கிய இலங்கை அணி

0
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் தொடரை வென்ற இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 22.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனையடுத்து, பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் பெத்தும் நிஸ்ஸங்க 51 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 56 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த போட்டியில் சிறப்பாட்டக்காரராக வனிந்து ஹசரங்கவும், தொடரின் சிறந்த வீரராக துஷ்மந்த சாமீரவும் தெரிவாகினர்.

இந்த நிலையில், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை, இலங்கை அணி 2 -1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைது

0
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று காலை கைதுசெய்யப்பட்டார்.

இன்று காலை 6.30 அளவில், கஜேந்திரகுமாரைக் கைதுசெய்வதற்காக, காவல்துறையினர் அவரது இல்லத்திற்கு சென்றனர்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில், சபாநாயகருக்கு அறிவித்ததாகவும், அது தொடர்பில், காவல்துறைமா அதிபருக்கு தாம் அறிவிப்பதாக சபாநாயகர் கூறியதாகவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தச் சந்தர்ப்பத்தில், எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும், காலை 8.15 அளவில், காவல்துறையினர் அவரைக் கைதுசெய்துள்ளனர்.

மருதங்கேணி பகுதியில் வைத்து, காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், அவர் கைதுசெய்யப்பட்டதாக, காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், நாளை முற்பகல் 10 மணிக்கு, மருதங்கேணி காவல்துறையில் முன்னிலையாகுமாறு, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நேற்று, மதியம் கொள்ளுப்பிட்டி காவல்துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில், இன்றைய தினம், நாடாளுமன்றில், சிறப்புரிமை பிரச்சினையை முன்வைக்க கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திட்டமிட்டிருந்தார்.

இது குறித்து, சபாநாயகருக்கு நேற்று மாலை அறியப்படுத்தி இருந்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னதாக எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியிலே, இன்று காலை அவர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.