Monday, March 23, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 55

அனர்த்தங்களினால் நாட்டில் இதுவரை 355 மரணங்கள் பதிவு!

0

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 366 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் சீரற்ற வானிலை காரணமாக 318,252 குடும்பங்களைச் சேர்ந்த 1,156,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதிகபட்ச உயிரிழப்புகள் கண்டி மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளன. 

குறித்த மாவட்டத்தில் மாத்திரம் 88 மரணங்கள் இதுவரை பதிவாகியுள்ளன. 

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 75 மரணங்களும், பதுளை மாவட்டத்தில் 71 மரணங்களும், குருநாகலில் 37 மரணங்களும், மாத்தளை மாவட்டத்தில் 23 மரணங்களும் புத்தளம் மாவட்டத்தில் 10 மரணங்களும் இதுவரை பதிவாகியுள்ளன. 

மேலும், அனர்த்தங்கள் காரணமாக கண்டி மாவட்டத்தில் 150 பேரும், நுவரெலியாவில் 62 பேரும், பதுளையில் 53 பேரும், கேகாலை மாவட்டத்தில் 46 பேரும், குருநாகலில் 35 பேரும் இதுவரை காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை களனி ஆற்றில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த கட்டப்பட்ட களனிமுல்ல வெள்ள அணை உடையும் அபாயம் இருப்பதாக ஒரு ஆதாரமற்ற செய்தி பரவி வருகிறது. களனிமுல்ல வெள்ள அணை மணல் மூட்டைகளால் பலப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அந்த பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பாக தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் மாவட்டத்தில் 47 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு!

0

நாட்டின் திடீர் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் பலத்த காற்றின் தாக்கத்தினால் புத்தளம் மாவட்டத்தில் 47ஆயிரத்து 222 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தில் 301 கிராம சேவையாளர் பிரிவுகளுக்குற்பட்ட 47ஆயிரத்து 222 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இதில் ஒரு லட்சத்து 73ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த செயலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அனர்த்தத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 76 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 4ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 14ஆயிரத்து 328 பேர் 75 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புத்தளம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட 13ஆயிரத்து 4 குடும்பங்களை சேர்ந்த 47ஆயிரத்து 939 பேர் குறித்த மாவட்டத்தில் அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட 9ஆயிரத்து 214 குடும்பங்களை சேர்ந்த 35ஆயிரத்து 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆராச்சிகட்டுவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட 8ஆயிரத்து 923 குடும்பங்களை சேர்ந்த 31ஆயிரத்து 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரணத்தின் நிழலில் உயிர் பிழைத்தவனின் சாட்சி இது!

0

இலங்கையில் தோல்வியுற்ற நிவாரணம்: மூன்று நாட்கள் மரணத்தின் நிழலில் உயிர் பிழைத்தவனின் சாட்சி இது!

நான் இந்தக் கட்டுரையை எழுதுவது ஒரு செய்தியைப் பகிர்வதற்காக மட்டும் அல்ல நான் நேரடியாக அனுபவித்த வேதனையை பேசுவதற்காகவும், எங்களை காப்பாற்ற வேண்டிய நாட்டின் நிர்வாகம் எங்களை எப்படி புறக்கணித்தது என்பதை உலகத்துக்கு சொல்லுவதற்காகவும்.

அந்த அனர்த்தத்திலிருந்து உயிர் தப்பிய ஒருவராக, நான் கண்ட எல்லா கொடுமைகளையும், நான் சுமந்த அனைத்து துயரங்களையும் ஒரு சொட்டும் மெருகூட்டாமல், உண்மையாகவே இங்கே எழுதுகிறேன்.

சிலாபம், தெதுறு ஓயா

“உதவி வருகிறது” என்ற அரசு பிரிவுகளின் வாக்குறுதிகளை நம்பி, நான் மற்றும் சுமார் 250 பேர் மூன்று நாட்கள் வெள்ளநீரால் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுக் கிடந்தோம். குடிநீர் இல்லை, உணவு இல்லை, மருந்து இல்லை, எங்களுடைய ஒரே துணை இறைவனின் நாட்டத்தினால் அச்சமும், இருட்டும், பட்டினியும்.

மூன்று நாட்கள்: உயிருக்கும் மரணத்துக்கும் இடையில்

ஹைலேண்ட் பால் சேமிப்பு நிலையத்தை அண்டிய பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தபோது, நாங்கள் எவரும் வெளியில் வரவோ, எவரும் உள்ளே வரவோ முடியாத நிலை.

அந்த மூன்று நாட்களின் காட்சிகள்:

பட்டினியில் கதறும் குழந்தைகள், குளிரில் நடுங்கிய வயோதிபர்கள், குடிக்க தண்ணீர் இல்லாமல் நச்சுநீர் குடித்து உயிர் பிழைக்க முயன்ற இளைஞர்கள், எம்முன்னே நீரில் அடித்துச் செல்லப்பட்ட மனிதர்கள்.

இந்த அனைத்தும் கற்பனை அல்ல, நான் கண்களால் கண்டவை. நான் வாழ்ந்து மீண்டவை.

உதவி கோரிய ஒவ்வொரு அழைப்பும் வெறும் வெறுமையான வார்த்தைகள்.

நாங்கள் தகவல் கொடுத்தோம்:

அனர்த்த முகாமை பிரிவு, இலங்கை போலீஸ் திணைக்களம், இலங்கை கடற்படை, ஜனாதிபதி செயலகம், தொடர்புடைய அரசு அதிகாரிகள், ஆனால் பெற்ற பதில்கள்:

“உங்கள் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.”
“இன்னும் சற்று சமயத்தில் உதவி வருகிறது.”
“ஐந்து மணிக்கு உணவுப் பொதிகள் அனுப்புகிறோம்.”
“கவலைப்பட வேண்டாம், நடவடிக்கை நடக்கிறது.”
“உங்களைக் காப்பாற்ற இராணுவ லொறி Truck வருகிறது.”

நடவடிக்கை? கரையில் நின்றிருந்த நீரின் அமைதி போலவே அமைதியாகவே அவர்களும். உதவி எதுவும் வரவில்லை.

எங்களை வந்தடைந்தது வெறும் வார்த்தைகள் தான் உதவி அல்ல. உயிர் ஆபத்தில் இருந்த அந்த தருணங்களில் இந்த காலியான வாக்குறுதிகள் மரணத்தைவிட வேதனையானவை.

ஜனாதிபதியின் உத்தரவுகள் தரையில் இருந்த அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்ட அவலநிலை.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் துரித நடவடிக்கை உத்தரவுகள் வழங்கப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம்.

ஆனால் தரையில் இருப்பவர்களின் செயல்பாடு? உத்தரவுகள் செயல்படுத்தப்படவில்லை, அதிகாரிகள் அலட்சியம் காட்டினர், நிவாரணத் திட்டம் முழுமையாக முறியடிக்கப்பட்டது, இதன் விளைவாக, நாங்கள் 250 பேரும் இயற்கையின் தாக்கத்தைவிட அதிகமான மனித அலட்சியத்தின் தாக்கத்தையே அனுபவித்தோம்.

இது வெள்ளத்தின் அழிவு மட்டும் அல்ல; நிர்வாகத் தோல்வியின் காயமும்

அந்த மூன்று நாட்கள் எங்களை கற்றுக் கொடுத்தது:

அனர்த்தம் இயற்கையின் செயல், ஆனால் அனர்த்தத்தை துயரமாக மாற்றுவது மனிதர்களின் பொறுப்பின்மை, நாங்கள் நம்பிய அமைப்புகள், எப்போது வேண்டுமோ அப்போது செயலிழந்தன. நாங்கள் காத்திருந்த அரசு பிரிவுகள், நாங்கள் மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் எங்களைக் காப்பாற்றத் தவறவிட்டன.

கடைசியில், எங்களை காப்பாற்றியது இறைவனின் நாட்டத்தினால் நாங்களே..

எந்த அதிகாரியும் எங்களை சேரவில்லை, எந்த உதவியும் வரவில்லை, நாங்கள் தானே எங்களைத் தாங்கிக் கொண்டோம்.

என் வாழ்நாள் நினைவில் நிலைத்திருக்கும் கொடுமையான உண்மை இதுதான்:

இலங்கையில் நிவாரணம் தோல்வியுற்றது, இயற்கையால் அல்ல, அரசின் அலட்சியத்தால்.

சதக்கத்துல்லாஹ் முஹம்மது ரிஜாஜ் (முன்னாள் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்)

இது தேசத்தின் துயரம்!

0

​மிகுந்த வேதனையுடனும் கனத்த இதயத்துடனும் இச்செய்தியைப் பகிர்கிறோம்.

​நாட்டில் எதிர்பாராமல் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் கோரமான மண்சரிவுகளின் காரணமாக, இதுவரை நூற்றுக்கணக்கானோர் மரணத்தைத் தழுவியுள்ளனர்.

மேலும், பலர் காணாமல் போயுள்ள சோக நிகழ்வுகளும் நடந்துள்ளன.

​பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து, வாழ்க்கையின் அனைத்து ஆதாரங்களையும் இழந்து, மிகவும் மோசமான, நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

​இந்நிலமை தாங்கமுடியாத துயரத்தை அளிக்கிறது. துயரில் ஆழந்துள்ள எமது நாடு, இந்தச் சோதனையில் இருந்து விரைவாகவும் வலிமையாகவும் மீண்டுவர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

​இனம், மதம், மொழி, அரசியல் கட்சி என்ற எந்தவித வேறுபாடுகளுக்கும் அப்பால், நாம் அனைவரும் மனிதர்கள் என்ற உணர்வுடன், பாதிக்கப்பட்ட மக்களுடன் மக்களுக்காக என்றும் துயர் துடைக்கும் களத்தில் உறுதியாக நிற்போம்.

​பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மட்டக்களப்பு அனைத்து புகையிரத சேவைகளும் ரத்து!

0

மட்டக்களப்பில் பெய்துவரும் தொடர் மழையினால் புறநகர் பகுதிகளுக்கான போக்குவரத்தில் பாதிப்பு!!

மட்டக்களப்பு நகர் பகுதியிலிருந்து புறநகர் பகுதிகளான வவுணதீவு, கொக்கட்டிச்சோலை மற்றும் மட்டக்களப்பு – திருகோணமலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான தரை வழி போக்குவரத்து மார்க்கங்களான வலயறவு பாலம், சுமை தாந்தி பாலம், மண்முனை பாலம், பிள்ளையாரடி பிரதான வீதி ஆகியவற்றிற்கு மேலாக ஆற்று நீர் பெருக்கெடுத்து காணப்படுவதனால் பொதுமக்களது போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு புகையிரத நிலையம் வெள்ள நீரினால் முற்றாக மூழ்கி காணப்படுவதுடன், மன்னம்பிட்டி பகுதியில் நீர் பிரவாகம் அதிகரித்து காணப்படுவதனாலும் மறு அறிவித்தல் வரை இன்றிலிருந்து (27) மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து செல்லும் அனைத்து புகையிரத சேவைகளும் ரத்து செய்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்,

மட்டக்களப்பு நகரை அண்டிய கிராமங்களான கூழாவடி, நாவற்குடா, இருதயபுரம், கல்லடி, ஆரையம்பதி மற்றும் ஒல்லிக் குளம் ஆகிய பகுதிகளில் வீதிகளிலும், வீடுகளிற்குள்ளும் வெள்ள நீர் தேங்கி காணப்படுவதனால் மக்களது இயல்பு வாழ்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பலத்த காற்றுடனான கன மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலையால் இதுவரை 39 பேர் உயிரிழப்பு!

0

நாட்டில் நிலவும் அசாதாரணமான வானிலை காரணமாக இதுவரை 39 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

17 மாவட்டங்களில் உள்ள 79 பிரதேச செயலாளர் பிரிவுகள் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. 

அப்பகுதிகளில் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 

இதற்கிடையில், இந்த அனர்த்தங்கள் காரணமாக 10 பேர் காயமடைந்துள்ளதுடன், 41 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் 5 பாதுகாப்பு மையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மேலும், 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் தற்போது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுவடையும்!

0

மறு அறிவித்தல் வரும் வரை நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் மீன்பிடித்தல் மற்றும் கடல்வழிப் பயணங்களைத் தவிர்க்கவும்.

அடுத்த 24 மணித்தியாலத்திற்காள நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 நவம்பர் 27 பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

இலங்கைக்குத் தென்கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 120 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 6.7° இற்கும் கிழக்கு நெடுங்கோடு 82.1° இற்கும் அருகில் மையம் கொண்டிருக்கின்றது. இது அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுவடைந்து வடமேற்கு – வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.

இலங்கை வானிலை மையம்

புத்தளம் நகரில் கைப்பற்றப்பட்ட கடத்தல் பீடி இலைகள்!

0

இலங்கை கடற்படையினர், கடந்த 25 ஆம் திகதி புத்தளம் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைத்திருந்த சுமார் அறுநூற்று தொண்ணூற்றொன்பது (699) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு (01) கெப் வண்டியுடன் இரண்டு (02) சந்தேக நபர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி புத்தளம் நகரில் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான கெப் வண்டியொன்று (01) சோதனை செய்யப்பட்டது.

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைத்திருந்த சுமார் அறுநூற்று தொண்ணூற்றொன்பது (699) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு (01) கெப் வண்டியுடன் இரண்டு (02) சந்தேக நபர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு (02) சந்தேக நபர்கள், பீடி இலைகள் மற்றும் கெப் வண்டி (01) ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை!

0

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்கள் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. 

அத்துடன், இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 மதகுகளும் 15 அடி உயரத்திற்கு!

0

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 மதகுகளும் 15 அடி உயரத்திற்கும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று 27 ஆம் தேதி மதியம் 01.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், திறக்கப்பட்ட மதகுகளிலிருந்து வினாடிக்கு 83,000 கன அடி நீர் தெதுரு ஓயாவில் வெளியேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ராஜாங்கனை நீர்த்தேக்கம் மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் திறக்கப்பட்ட மதகுகளிலிருந்து அதிகளவான நீர் கலா ஓயாவில் வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

நிலவும் சூழ்நிலை காரணமாக தெதுரு ஓயா மற்றும் கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.