Thursday, February 6, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 63

வட கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்

0

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்னும் கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கதவடைப்பு போராட்டம் இடம்பெறுகின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று 25ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள பொது முடக்கம் ஊடான எதிர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ் மக்களும், சிவில் சமூக அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்க முன்வர வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் யாழ்ப்பாண நகரம் முழுமையாக முடங்கியதுடன் சங்கானை பகுதியிலும் கடைகள் மூடப்பட்டமையால் சங்கானை நகரமும் முடங்கியது. அத்துடன் மானிப்பாயிலும் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமையால் மானிப்பாயும் முடங்கியுள்ளது.

இறைவனை சந்திப்பதற்காக 47 பேர் பட்டினி கிடந்தது சாவு

0

கென்யாவில் இறைவனை சந்திப்பதற்காக பட்டினி கிடந்து உயிரிழந்தவர்கள் என சந்தேதிக்கப்படும்  47 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மத குரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெக்கன்ஸி எனும் 58 வயதான மத போதகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘நற்செய்தி சர்வதேச தேவாலயம்’ எனும் இயக்கத்தின் தலைவர் இவர்.

இயேசுவை சந்திக்கச் செல்வதற்காக பட்டினி கிடக்குமாறு தன்னைப் பின்பற்றுபவர்களிடம் மத போதகர் மெக்கன்ஸி கூறினார் என செய்தி வெளியாகியுள்ளது.

21 பேரின் சடலங்கள் காட்டுப் பகுதிகளிலிருந்து சில தினங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மேலதிக விசாரணைகள் மற்றும் தேடுதல்களையடுத்து, மேலும் 26 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என கென்யாவின் மலின்டி பிராந்திய குற்றவியல் விசாரணைப் பிரிவு தலைமை அதிகாரி சார்ள்ஸ் கெமாவ் நேற்று தெரிவித்துள்ளார்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளன.

உயிரிழந்தவர்களை கண்டுபிடிப்பதற்காக மட்டுமல்லாமல், குறித்த குழுவின் உயிர்த்தப்பிய அங்கத்தவர்களை கண்டுபிடிப்பத்றகாகவும் தேடுதல்கள் நடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இத்தேடுதல்களுக்காக  800 ஏக்கர் (325 ஹெக்டேயர்) அளவிலான காட்டுப்பகுதி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதிக்கு நாளை செவ்வாய்க்கிழமை தான் செல்லவுள்ளதாக  கென்யாவின் உள்துறை அமைச்சர் கிதுரே கின்டிக்கி தெரிவித்துள்ளார்.

ஹர்த்தாலுக்கு வவுனியாவில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

0

நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் ஹர்தாலுக்கு ஆதரவு கோரி இன்று திங்கட்கிழமை (24) வவுனியா நகர் பகுதியில் தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் வவுனியா நகரிற்கு வருகை தந்தவர்களுக்கும் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் எமது இனத்திற்கு பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், எமது இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் பேரினவாத அரசின் திட்டமிட்ட, இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் வரலாற்றை சிதைக்கும் அரசின் அனைத்து கட்டமைப்புக்களின் செயற்பாட்டை எதிர்க்க நாளைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்டகிளையின் செயலாளர் ந.கருணாநிதி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் குகன், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் நி.பிரதீபன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் அனுஸ்டிக்க ஆதரவு கோரி 6 கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன கூட்டாக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாணத்துக்கு மாத்திரமே முட்டை விநியோகம்

0
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை மேல் மாகாணத்துக்கு மாத்திரமே விநியோகம் செய்வதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக அரச வணிக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஏனைய மாகாணங்களில் உள்ள பாரியளவான வெதுப்பக மற்றும் உணவகங்களில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு பாரிய கேள்வி உள்ளதாக அதன் தலைவர் ஆசிர வலிசுந்தர தெரிவித்தார்.

தேவைக்கு ஏற்ற வகையில் விநியோகத்தை வழங்க முடியும் என்றாலும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி கிடைக்காமை பிரச்சினையாக உள்ளதாக தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த 15ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 10 இலட்சம் முட்டைகள், இன்று மேல் மாகாணத்தில் உள்ள பாரியளவான வெதுப்பக மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு விநியோகப்படவுள்ளன.

அத்துடன், கடந்த 19 ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட 10 லட்சம் முட்டைகள் மாதிரிகள் இன்றைய தினம் பரிசோதனைக்கு  அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நியூசிலாந்தில் பாரிய நிலநடுக்கம்!

0
நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்பகுதியில் 7.3 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாத போதிலும், சுனாமி ஆய்வுக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக “உடனடியாக அங்கிருந்து நகர வேண்டும்” என்று கடற்கரைக்கு அருகிலுள்ள அனைத்து குடியிருப்பாளர்களையும் நியூஸிலாந்து அதிகாரிகள் வலியுறுத்தினர்

இருப்பினும், நிலநடுக்கம் பதிவான ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நாட்டிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரியவந்துள்ளது.

நியூசிலாந்து நேரப்படி 12.42 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து கடற்கரையில் இருந்து வடகிழக்கே சுமார் 500 மைல் தொலைவில் உள்ள கெர்மடெக் தீவுகளைச் சுற்றி இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் தேசிய அவசரநிலை முகாமை நிறுவனத்தின் ட்வீட்டர் பதிவில், “M7.3 அளவில் கெர்மடெக் தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இது நியூசிலாந்தை பாதிக்கக்கூடிய சுனாமியை உருவாக்கியுள்ளதா என்பதை நாங்கள் மதிப்பிடுகிறோம்.

“கடற்கரைக்கு அருகில் உள்ள எவரும் நீண்ட அல்லது வலுவான நிலநடுக்கத்தை உணர்ந்தால், உடனடியாக அருகில் உள்ள உயரமான பகுதிக்கு அல்லது உங்களால் முடிந்தவரை நாட்டின் உட்பகுதிக்கு செல்ல வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.

EWARDS அமைப்பினரால் மனிதநேய உதவி

0

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு கஷ்டத்தில் வாழும் மக்களுக்கு மனிதநேய உதவிகள் செய்யப்படுவது வழக்கமாகும்.

அந்த வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி EWARDS அமைப்பினரால் நாகவில்லில் வசிக்கும் சுமார் 20 பயனாளிகளுக்கு சுமார் 8000 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் கிடைப்பதட்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.

முஸ்லீம் ஹன்ட்ஸ் அமைப்பின் தலைமை நிர்வாகி அல்ஹாஜ் மிஹ்லார் அவர்களின் அன்பளிப்பில் குறித்த உளர் உணவுப்பொதிகள் பயனாளிகளுக்கு அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

இஸ்லாமிக் எயிட் நிறுவனத்தினால் நோன்புப்பெருநாளை எதிர்பார்த்து காத்திருந்த, வறுமை கோட்டில் வாழும் இம்மக்களுக்கு இவ்வாறான மனிதநேய உதவிகள் கிடைக்கபெற்றமையால் உதவி புரிந்த நல் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்ததுடன், அவர்களுக்காக துஆ பிரார்த்தனையும் செய்தமை குறிப்பிடத்தக்கது.

85 பேரை பலிகொண்ட ஏமன் கோரச் சம்பவம்

0

ஏமன் நாட்டில் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதும், கூட்டத்தின் ஒருபகுதியில் மின்சார ஒயர் ஷாக் அடித்ததுமே உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இஸ்லாமிய நாடான ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியது. மன்சூர் ஹைதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அலி அப்துல்லா சாலே அதிபராக இருந்து வருகிறார். 8 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் தொடர்ந்து வருகிறது.

உள்நாட்டுப் போரினால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஐ.நா அமைப்புகள் அங்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றன. ஏமன் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள நிலையில் இருக்கின்றனர்.

இது ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் சனாவில் தனியார் சார்பில் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளிக்கூடம் ஒன்றில் இந்த நிகழ்ச்சியின்போது உதவிப்பொருட்களைப் பெற ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடினர். மக்கள் ஒருவொருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு உதவிகளைப் பெற முயன்றதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். 322 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்தோரில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிற்பகல் வேளையில் பல இடங்களில் மழை பெய்யும்

0

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களத் தெரிவித்துள்ளது.

அதேவேளை, மேற்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் காலையிலும் ஒருசில மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள்  கேட்டுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கண் சொட்டு மருந்துக்கு தடை

0
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் நோய்க்காக பயன்படுத்தப்பட்டதன் பின்னர், பாதிப்புக்கள் ஏற்பட்டதாக கூறப்படும் ப்ரெட்னிசெலோன் சொட்டு மருந்தின் மாதிரி தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த ஒளடத்தின் தரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சொட்டு மருந்து 2021ம் ஆண்டு முதல் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருவதாக எமதுச் செய்தி சேவை மேற்கொண்ட ஆராய்வில் தெரியவந்துள்ளது.

அந்த சொட்டு மருந்தை பயன்படுத்திய நோயாளர்கள் சிலர் பல்வேறுப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.

இதனையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ப்ரெட்னிசெலோன் என்ற கண் சொட்டு மருந்து தொகுதியை மாத்திரம் மீளப்பெறுமாறு சுகாதார அமைச்சு அனைத்து வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் 4 வருடம்

0
சர்வதேசத்தில் இலங்கையின் நன்மதிப்பை, கடுமையாக பாதித்த ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் துயரச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

எனினும், இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் மற்றும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என வத்திக்கான் முதல் சர்வதேசம் வரையில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த 2019 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி காலை வேளையில், கிறிஸ்தவ மக்கள் வழமையான உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளுக்காக, தேவாலயங்களில் ஒன்றுகூடியிருந்தனர்.

இதன்போது, காலை 8.45 அளவில், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியனவற்றில், ஒரே நேரத்தில், தற்கொலைக் குண்டுதாரிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.

அதேநேரம், கொழும்பின் முன்னணி விருந்தகங்களான ஷெங்ரிலா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் லேக்சைட் உள்ளிட்ட விருந்தகங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

குறிப்பிட்ட நேரத்துக்குள், இந்தத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

500 பேர் வரையில் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் இலங்கையில் மாத்திரமல்லாமல், சர்வதேசத்திலும், பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இலங்கையின் நன்மதிப்பை கடுமையாக பாதிக்கும் சம்பவமாகவும் மாறியது.

எனினும், இன்றுவரை இந்தத் தாக்குதல்களுக்கு மூல காரணம் யார் என்பது, விசாரணைகளில் கண்டறியப்படவில்லை.

உள்நாட்டில், கத்தோலிக்க சபை, இந்த விடயத்தில் நீதி கோரி, சர்வதேசத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

எனினும், அரசாங்கம், விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறுவதாக பதிலளித்து வருகிறது.

இந்த நிலையில், இலங்கையின் இனப்பிரச்சினை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, நில அபகரிப்பு, குடிப்பரம்பல் மாற்றங்கள், 200 வருடங்களாக நிலமற்று இருக்கும் மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகள் உட்பட பிரச்சினைகளுக்கு, தீர்வுகள் காணப்படாத நிலைமையே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திலும் தொடர்கிறது.

இந்த விடயம், உள்நாட்டு விசாரணையில் இருந்து, கைமீறி, சர்வதேசத்திற்கு சென்றிருந்தாலும் கூட, இலங்கையின் பூகோள அரசியல் அடிப்படையில், எவ்வாறான தீர்வு கிடைக்கப்போகின்றது? என்பதே பாதிக்கப்பட்டோரின் எதிர்பார்ப்பாக தொடர்ந்தும் உள்ளது.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கு நீதிக்கோரி, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலிருந்து கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம் வரை மக்கள் தொடர் அஞ்சலி நிகழ்வுகளில் ஈடுபடவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.