Home Blog Page 64

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்கள்!

அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்கள் எந்த வயதில் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டனர் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

1952ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி. ராஜகோபாலச்சரி பதவி ஏற்றார். அப்போது அவரின் வயது 58 ஆகும்.

தமிழ்நாட்டின் இரண்டாவது முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கல்வி கண்திறந்து காமராஜர் பதவி ஏற்றார். அப்போது அவரின் வயது 51 ஆகும்.

காமராஜரை தொடர்ந்து தமிழ்நாட்டின் மூன்றாவது முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம். பக்தவச்சலம் பதவி வகித்தார். அப்போது அவரின் வயது 65 ஆகும்.

காங்கிரஸ் ஆட்சியை தொடர்ந்து திமுக கட்சி தமிழ்நாட்டை ஆண்டது. பேரறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். அப்போது அண்ணாவின் வயது 58 ஆகும்.

ஆட்சியில் இருந்தபோதே அண்ணா உயிரிழந்த நிலையில் இரா. நெடுஞ்செழியன் 5 நாட்கள் முதலமைச்சர் பதவி வகித்தார். அப்போது அவரின் வயது 49 ஆகும்.

1969ம் ஆண்டு மு. கருணாநிதி முதலமைச்சர் பதவி ஏற்றார். அப்போது கருணாநிதியின் வயது 47 ஆகும்.

திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக என்ற கட்சியை தொடங்கிய எம்ஜிஆர், 1977ம் ஆண்டு முதல்வர் பதவி ஏற்றார். அப்போது அவரின் வயது 60 ஆகும்.

எம்ஜிஆரின் மறைவை தொடர்ந்து விஎன் ஜானகி ராமச்சந்திரன் 23 நாட்கள் முதலமைச்சராக பதவி வகித்தார். அப்போது அவரின் வயது 60 ஆகும்.

1991ல் ஜெயலலிதா முதன் முதலாக முதலமைச்சர் பதவி வகித்தார். அப்போது அவரின் வயது 43 ஆகும்.

டான்சி வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் ஓ.பின்னீர்செல்வம் 160 நாட்கள் முதல்வர் பதவி வகித்தார். அப்போது அவரின் வயது 50 ஆகும்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி 2017ல் முதல்வர் பதவி ஏற்றார். அப்போது அவரின் வயது 62 ஆகும்.

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்றார். அப்போது அவரின் வயது 68 ஆகும்.

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ்நாட்டின் 13வது முதல்வராக இன்று 10ம் தேதி விஜய் பதவி ஏற்றார். தற்போது விஜய்யின் வயது 51 ஆகும்.

வசமாக சிக்கியது தரமற்ற கம்பிகள் உற்பத்தி செய்த பிரபல நிறுவனம்!

தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்த தொழிற்சாலை ஒன்றிற்கு முத்திரையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

கட்டாயமான SLS தரச்சான்றிதழ் இன்றி, தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து வந்த ஹோமாகம கைத்தொழில் வலையத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றிற்கே இவ்வாறு முத்திரையிடப்பட்டு மூடப்பட்டுள்ளது. 

கிடைத்த தகவலொன்றிற்கு அமைய, குறித்த அதிகாரசபையின் அதிகாரிகளால் நேற்று (09) இந்தத் தொழிற்சாலையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. 

இதன்போது, இந்தத் தொழிற்சாலை சுமார் மூன்று வருடங்களாக இந்த இடத்தில் இயங்கி வந்துள்ளமையும், அவர்கள் தமது ஏனைய உற்பத்திகளுடன் சேர்த்து 6 மில்லிமீற்றர் (6mm) அளவிலான தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து சந்தைக்கு விநியோகித்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. 

இரும்புக்கம்பிகளுக்கான இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLS) சான்றிதழ் இன்றி, இந்த இரும்புக்கம்பித் தொகுதியை உற்பத்தி செய்து சந்தைக்கு விநியோகித்த காரணத்தினால், குறித்த நிறுவனத்திற்கு முத்திரையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. 

அதேபோல், SLS இலட்சினை இன்றி தரமற்ற உருக்குக் கம்பிகளை உற்பத்தி செய்த குற்றத்திற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

தெற்காசியாவில் ஆள் கடத்தலைத் தடுக்க புதிய சட்டக் கட்டமைப்பு!

செய்தித் தகவல்: ஜூட் சமந்த

தெற்காசிய பிராந்தியத்தில் சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்கு வலுவான சட்டக் கட்டமைப்பு அவசியமெனவும், இதற்காகப் பிராந்திய நாடுகளுக்கிடையே முறையான இணக்கப்பாடு எட்டப்பட வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பில் அண்மையில் நடைபெற்ற “தெற்காசியாவில் மனிதக் கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தலைத் தடுத்தல்” தொடர்பான விசேட கருத்தரங்கின் போதே இவ்விடயம் வலியுறுத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் (UNODC) இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய UNODC திட்ட ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் ரீவ் (Martin Reeve) பின்வருமாறு குறிப்பிட்டார்:

“சட்டவிரோதக் குடியேற்றம் என்பது மிகவும் அபாயகரமான ஒரு செயலாகும். இதன் காரணமாக ஏற்கனவே பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. இந்த அபாயகரமான சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த ஒரு சிறந்த சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக, தெற்காசிய பிராந்திய நாடுகளின் அரச பிரதிநிதிகளுக்கிடையே இதற்கான அவசர புரிந்துணர்வும் இணக்கப்பாடும் அவசியமாகிறது.”

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன், தெற்காசியாவின் இலங்கை, இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு ஆகிய 6 நாடுகளை உள்ளடக்கி, இந்த சட்டவிரோதக் கடத்தல்களைத் தடுப்பதற்கான மூன்று ஆண்டு காலத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது ஒரு பாரிய வணிகக் குற்றம்

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த UNODC தெற்காசிய பிராந்திய அலுவலகத்தின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் அனுஷா முனசிங்க, சட்டவிரோதக் குடியேற்றங்கள் தற்போது ஒரு பாரிய ‘வணிகமாக’ உருவெடுத்துள்ளதாகக் கவலை வெளியிட்டார்.

“சட்டபூர்வமான புலம்பெயர்வு என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், சட்டவிரோதமான முறையில் மனிதர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை ஒரு குற்றச்செயலாகவே நாம் கருதுகிறோம். மனித உழைப்பை தவறான முறையில் வெளிநாடுகளுக்குக் கடத்தும் போது, பலரது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

தற்போதுள்ள மிகப்பெரிய சவால் என்னவென்றால், இத்தகைய குற்றங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப் போதுமான சட்டக் கட்டமைப்புகள் இல்லாமையே ஆகும். இதனால் குற்றவாளிகளைத் தண்டிப்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. எனவே, கொள்கை ரீதியான மாற்றங்கள் மற்றும் சட்ட ரீதியான பாதுகாப்பு வளையங்களை உருவாக்க தெற்காசிய நாடுகள் ஒன்றிணைவது மிக முக்கியமானது,” என அவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானங்கள் மற்றும் முன்மொழிவுகள் குறித்து அந்தந்த நாட்டுத் தலைவர்களுடன் வரும் நாட்களில் விரிவாகக் கலந்துரையாடப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தளபதி விஜய் 13வது முதல்வராக பதவியேற்பு!

சென்னை நேரு ஸ்டேடியத்திற்கு தமிழக முதல்வராக ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்றார் விஜய்.

தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் தலைமையில் புதிய அரசு ஆட்சி அமைத்தது. புதிய அரசு பதவியேற்பு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடந்தது. கோட் சூட் அணிந்து, தமிழக முதல்வராக, இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதவி ஏற்றார். அவருக்கு தமிழக கவர்னர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஜோசப் விஜய் என்னும் நான் ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்று கொண்டார் விஜய். அவர் ஜோசப் விஜய் எனும் நான் என்று சொல்லும் போது அரங்கமே அதிரும் வகையில் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். விசில் சத்தம் விண்ணை பிளந்தது. தமிழகத்தில் ராஜாஜி முதல் ஸ்டாலின் வரை, இதுவரை, 12 முதல்வர்கள் இருந்துள்ளனர். நபர்கள் அடிப்படையில், 13வது முதல்வராக விஜய் பதவியேற்றார்.

முன்னதாக, நீலாங்கரை இல்லத்தில் இருந்து விஜய் நேரு ஸ்டேடியத்திற்கு காரில் பலத்த பாதுகாப்புடன் வந்தார். வழிநெடுகிலும் விஜய்க்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களை பார்த்து விஜய் காரில் இருந்த படியே கை அசைத்தார். கருப்பு பேன்ட், வெள்ளை சட்டை அணிந்து, பதவியேற்பு விழாவுக்கு நேரு உள் விளையாட்டு அரங்கம் வந்தார் விஜய்; அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்று தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்தததை அடுத்து அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

அந்த வகையில் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் ஆண்டவன் மேல் ஆணையிட்டு என உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆனால் ஆதவ்அர்ஜூனா மட்டும் ஆண்டவனை தவிர்த்து உளமாற என்று கூறினார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், தலைமைச் செயலகத்திற்கு வந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.

தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக பதவியேற்ற விஜய், நேரு ஸ்டேடியத்தில் இருந்து நேராக தலைமைச் செயலகத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு காவல் துறை மரியாதை அளிக்கப்பட்டதையடுத்து முதல்வர் அறைக்குச் சென்ற விஜய், அங்கு முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.

கிளிநொச்சியில் 15 வருடமாகத் தொடரும் மணல் கொள்ளை!

கிளிநொச்சி மாவட்டம், தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்தலியாற்றுப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகாலமாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத மணல் அகழ்வினால், அப்பகுதியின் இயற்கைச் சூழலும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

விவசாய நிலங்கள் மற்றும் அரச காடுகள் பாதிப்பு

​சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள், ஆற்றுப் படுக்கைகளைத் தாண்டி ஆற்றுக்கு அருகாமையில் அமைந்துள்ள விளைநிலங்களுக்குள்ளும் அத்துமீறி நுழைந்து மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக:

  • ​பல ஏக்கர் கணக்கான விவசாய நிலங்கள் பாரிய குழிகளாக மாற்றப்பட்டு, செய்கைக்கு உதவாத நிலங்களாக மாறியுள்ளன.
  • ​ஆற்றுப் படுக்கைகள் சிதைக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, விவசாயக் கிணறுகள் வற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் அருகிலுள்ள அரச காடுகள் அழிக்கப்பட்டு, இயற்கை அரணாக விளங்கும் மரங்களும் வேரோடு சாய்க்கப்படுகின்றன.

பறவைகள் சரணாலயத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்

​நெத்தலியாற்றுப் பகுதியை அண்டியுள்ள பறவைகள் சரணாலயம் மற்றும் வனவிலங்கு வாழ்விடங்கள் மணல் கொள்ளையர்களின் செயற்பாட்டினால் சிதைக்கப்பட்டு வருகின்றன. இயந்திரங்கள் எழுப்பும் சத்தம் மற்றும் மனித ஊடுருவல்கள் காரணமாக இப்பகுதிக்கு வரும் அரிய வகை பறவைகள் இடம்பெயர்ந்து செல்வதுடன், வனவிலங்குகளின் வாழ்விடங்களும் சுருங்கி வருகின்றன.

அதிகாரிகளின் மௌனம் – மக்கள் விசனம்

​சுமார் 15 வருடங்களாக இச்சட்டவிரோத செயற்பாடுகள் பகிரங்கமாக நடைபெற்று வரும் நிலையிலும், இதனைத் தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

​தர்மபுரம் பொலிஸார் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் ஒன்றிணைந்து, இப்பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும் விவசாய அமைப்புகளும் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

30 இலட்சம் இலஞ்சம் பெற்ற குருநாகல் மாநகர பிரதி மேயர்!

ஒப்பந்தம் ஒன்றை இரத்து செய்யாமல் இருப்பதற்காக 30 இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.

​இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் நேற்று (2026.05.08) மாலை 6.00 மணியளவில் பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சம்பவத்தின் பின்னணி

​பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. முறைப்பாட்டாளர் குருநாகல் பேருந்து நிலையம் மற்றும் வர்த்தக தொகுதியின் பராமரிப்பு மற்றும் துப்புரவுப் பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றிருந்தார்.

​எனினும், குறித்த பேருந்து நிலைய கழிப்பறைத் தொகுதிக்கான நீர் கட்டணத்தில் 40 இலட்சம் ரூபாய் நிலுவை காணப்பட்டதைக் காரணம் காட்டி, அந்த துப்புரவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய குருநாகல் மாநகர சபை தீர்மானித்திருந்தது.

இலஞ்சக் கோரிக்கை

​இந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படுவதைத் தடுத்து, ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு உதவி புரிய பிரதி மேயர் மொஹமட் மொயினுதீன் மொஹமட் அசார்தீன் என்பவர் இலஞ்சம் கோரியதாகக் கூறப்படுகிறது:

  • ​முதலில் ஒப்பந்தத்தை இரத்து செய்யாமல் இருக்க 50 இலட்சம் ரூபாய் கோரப்பட்டது.
  • ​ஒப்பந்தப் பணிகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல மாதந்தோறும் 5 இலட்சம் ரூபாய் இலஞ்சமாக வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • ​இறுதியில், ஆரம்பமாக கோரப்பட்ட 50 இலட்சம் ரூபாயில், 30 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொள்ள பிரதி மேயர் சம்மதித்துள்ளார்.

கைது நடவடிக்கை

​குறித்த 30 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட போதே, இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் அவர் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டார்.

​கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தோள் கொடுக்கும் சிறுத்தைகள்.. கைகோர்க்கும் தளபதி!

தவெக ஆட்சி அமைக்க விடுதலை சிறுத்தைகள் ஆதரவை அளித்து இருக்கிறது. விஜய் வென்று ராஜினாமா செய்ய இருக்கும் திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுகிறார். விஜய் அமைச்சரவையில் திருமாவளவன் உள்பட அக்கட்சியை சேர்ந்த 2 பேர் அமைச்சர்கள் ஆகின்றனர்.

தமிழகத்தில் தனி பெரும்பான்மையுடன் அதிக தொகுதிகளை வென்றுள்ள தவெக ஆட்சியமைக்க போதிய எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இல்லை. எனவே மற்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்டது. 5 எம்எல்ஏக்கள் வைத்துள்ள காங்கிரஸ் முதல் கட்சியாக ஆதரவை அளித்துவிட்டது. இந்திய கம்யூனிஸ்., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் தவெகவுக்கு தங்களின் அதிகாரப்பூர்வ ஆதரவை அறிவித்து இருக்கின்றன.

திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் பல கட்ட ஆலோசனைகளுக்கு பின்னர், தமது ஆதரவை தவெகவுக்கு வழங்கி உள்ளது. காங்கிரஸ் 5, இடதுசாரிகள் 4, விடுதலை சிறுத்தைகள் 2 என ஆதரவு மூலம் பெரும்பான்மை எண்ணிக்கையான 118ஐ தவெக எட்டி பிடித்துள்ளது.

கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் தவெக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், தாம் வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்கிறார். அந்த தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

போட்டியிட்டு எம்எல்ஏ ஆகும் அவர், கூட்டணி அரசில் அமைச்சராகவும் இடம்பெற உள்ளார். அவருடன் மேலும் ஒரு விசிக எம்எல்ஏவும் அமைச்சராகிறார். தமிழகத்தில் அமைய உள்ள கூட்டணி ஆட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 அமைச்சர்கள் பதவி தரப்படுகின்றன.

9 தசாப்த இசைப் பயணத்திற்காக தேவானந்த கௌரவிப்பு!

இலங்கை நாட்டுப்புறப் பாடல் கலையை வளர்ப்பதில் தனித்துவமான பங்காற்றிய மூத்த பாடகர் தேவானந்த வைத்தியசேகரவின் 90 ஆண்டுகால கலைப் பயணத்தைப் பாராட்டும் வகையில், “நீல நுவன்” எனும் விசேட பாராட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் (SLBC) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, நேற்று (07) கொழும்பு – 10 இல் உள்ள ஆனந்த சமரகோன் கலையகத்தில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் டாக்டர் ஹினிதும சுனில் செனவி, வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்:

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேவானந்த வைத்தியசேகர அவர்களின் கலைப் பணியானது பல தலைமுறை ரசிகர்களின் இதயங்களை மகிழ்வித்துள்ளதாகக் குறிப்பிட்டார். அத்தகைய கலைஞர்கள் நாட்டின் “தேசிய வளங்கள்” என்றும் அவர் போற்றினார். மேலும், வைத்தியசேகரவின் பங்களிப்பைப் பாராட்டி அமைச்சரினால் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

அமைச்சர் டாக்டர் ஹினிதும சுனில் செனவி உரையாற்றுகையில், ஒரு மருத்துவர் சிறந்த இசைக்கலைஞராக இருப்பது வியப்பிற்குரியது எனத் தெரிவித்ததோடு, வானொலியின் பழைய கலாச்சாரத் தூண்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தற்போது பல நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எழுதப்பட்ட “சியவசக சிஹானந்தா” என்ற நூலை, அதன் தற்போதைய தலைவர் பேராசிரியர் உதித்த கயாஷன் குணசேகர வெளியிட்டார். இதன் ஒரு பிரதி தேவானந்த வைத்தியசேகரவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கீர்த்தி பாஸ்கலே, சனத் குணதிலக்க, ஜனக விக்ரமசிங்க, இந்திராணி பெரேரா உள்ளிட்ட முன்னணி கலைஞர்களும் பல அறிஞர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் நிலையக் காணி பாடசாலைக்கு வழங்க வேண்டும்!

தற்போது ஏறாவூர் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அலிகார் தேசியப் பாடசாலைக்கு கையளிக்குமாறும், பொலிஸ் நிலையத்தை நகர சபையினால் ஒதுக்கப்பட்டுள்ள புதிய இடத்திற்கு இடமாற்றுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று (07) நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஏறாவூர் கல்விச் சமூகத்தின் நீண்டகாலத் தேவையொன்றை வலியுறுத்திப் பேசினார்.

“அண்மையில் பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த வேளையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகர சபைத் தவிசாளருமான எம்.எஸ். நளீம் இவ்விடயத்தை அமைச்சரின் கவனத்திற்கு நேடியாகக் கொண்டு சென்றார். இதன்போது, பொலிஸ் நிலையத்தை இடமாற்றம் செய்வது குறித்த இணக்கப்பாடும், அனுமதியும் அமைச்சரினால் வழங்கப்பட்டது என குறிப்பிட்டார்.

அலிகார் தேசியப் பாடசாலையின் தற்போதைய நிலைமை குறித்து விபரித்த அவர், அங்கு 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருவதைச் சுட்டிக்காட்டினார். மாணவர் எண்ணிக்கைக்கேற்ப போதிய கட்டிட வசதிகள் இல்லாமையினால் ஆசிரியர்களும் மாணவர்களும் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“மாணவர்களின் கல்வி நலன் என்பது மிக முக்கியமானது. தற்போதுள்ள இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பொலிஸ் நிலையக் காணி பாடசாலைக்கு வழங்கப்படுவது அவசியமாகும். இதற்காக ஏறாவூர் நகர சபையினால் பொலிஸ் நிலையத்திற்கென புதிய காணி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.”

பொலிஸ் நிலையத்தை புதிய இடத்திற்கு மாற்றுவதன் மூலம், அலிகார் தேசியப் பாடசாலையின் கட்டிடத் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் எனத் தெரிவித்த கலாநிதி ஹிஸ்புல்லாஹ், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இந்த விவகாரத்தில் உரிய அமைச்சர் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தனது உரையில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

பயங்கரவாதத்தை விட பொருளாதார பாதுகாப்பற்ற தன்மை ஆபத்தானது!

கொழும்பு – நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் ரூபாய் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய நிதி உறுதியற்ற தன்மையும், வங்கித்துறையில் காணப்படும் மேற்பார்வை குறைபாடுகளும் நாட்டின் எதிர்காலத்திற்கு “பயங்கரவாதத்தை விட பாரதூரமான அச்சுறுத்தல்” என்று அவர் வாதிட்டார்.

திறைசேரி மற்றும் வர்த்தக வங்கிகளில் இருந்து நிதி திடீரென காணாமல் போகும் ஒரு “மிகவும் ஆபத்தான நிகழ்வு” குறித்து முஸ்தபா சுட்டிக்காட்டினார். தேசிய பாதுகாப்பைப் போன்றே பொருளாதார ஸ்திரத்தன்மையும் முக்கியமானது என்று வலியுறுத்திய அவர், வங்கி அமைப்பின் பாதுகாப்பு மீது சர்வதேச முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்தால், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை (FDI) ஈர்ப்பது சாத்தியமற்றதாகிவிடும் என்றார்.

“திறைசேரியில் உள்ள பணத்தைப் பாதுகாக்க முடியாவிட்டால், அது ஒரு பாரிய பிரச்சினையாகும். டிஜிட்டல் மயமாக்கல் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அங்கீகரிக்கப்படாத பணப் பரிமாற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வங்கிகள் தவறிவிட்டன,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், வங்கி மேற்பார்வைக்காக மாதத்திற்கு 50 முதல் 100 மில்லியன் ரூபாய் வரை வசூலிக்கும் மத்திய வங்கி, அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள பாரிய குறைபாடுகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டதாக அவர் கடுமையாகச் சாடினார்.

இவ்வாறான கட்டமைப்புத் தோல்விகளைச் சரிசெய்ய, அரசாங்கம் உடனடியாக ஒரு விசேட பணிக்குழுவை (Special Task Force) நியமிக்க வேண்டும் என்று முஸ்தபா வலியுறுத்தினார். நிறுவன ரீதியான தோல்விகளுக்கு உயர்மட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், ஜப்பானில் ஒரு ரயில் ஒரு நிமிடம் தாமதமானாலும் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யும் கலாச்சாரத்தை உதாரணமாகக் காட்டினார்.

“அவர்கள் ஊழல்வாதிகளாக இல்லாதிருக்கலாம், ஆனால் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டு பொறுப்பை ஏற்கும் போது, அந்த நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு,” என்று அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க இயந்திரமும் நீதித்துறையும் சரியாகச் இயங்கும் பட்சத்தில், அவசரகாலச் சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவது தேவையற்றது என அவர் சவால் விடுத்தார்.

சாதாரண சட்டங்களை இடைநிறுத்துவதன் மூலம் அவசரகாலச் சட்டம் இயங்குவதால், இது பொதுமக்களிடையே “அடக்குமுறை குறித்த அச்சத்தை” உருவாக்குவதாக அவர் சுட்டிக்காட்டினார். அண்மைய புயல் பாதிப்புகளுக்குப் பின்னரான மீட்புப் பணிகளுக்கு ஏன் இத்தகைய அதிகாரங்கள் தேவைப்படுகின்றன என்று கேள்வி எழுப்பிய அவர், புனரமைப்புப் பணிகளுக்கு சாதாரண சட்டக் கட்டமைப்புகளே போதுமானவை என்றார்.

கடந்த கால அரசாங்கங்களையோ அல்லது “75 வருட சாபத்தையோ” குறை கூறுவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று முஸ்தபா கேட்டுக்கொண்டார். கடந்த காலத் தவறுகளைச் சரி செய்வதற்காகவே தற்போதைய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை அவர் சபைக்கு நினைவூட்டினார்.

“ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சியின் வரலாற்றைப் பற்றிப் பேசாதீர்கள்… பொறுப்பைச் சரியாக ஏற்றுக்கொண்டு, உண்மையான மாற்றத்தை உருவாக்குங்கள்,” என்று கூறி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.