Home Blog Page 65

7 பில்லியன் காலி! மெட்ரோ பேருந்து திட்டம் ஒரு ‘தேசியக் குற்றம்’

அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘மெட்ரோ பேருந்து’ திட்டத்திற்காக சுமார் 7 பில்லியன் ரூபா பொதுப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, மெட்ரோ பேருந்து திட்டம் என்பது இலங்கை போக்குவரத்துச் சபையின் தற்போதைய முறையை வேறொரு பெயரில் அறிமுகப்படுத்தும் முயற்சியே அன்றி வேறில்லை எனத் தெரிவித்தார்.

இலங்கையின் பயணிகள் போக்குவரத்து உட்கட்டமைப்பு ஏற்கனவே இலங்கை போக்குவரத்துச் சபையினால் சீரழிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை போக்குவரத்து சபையின் காரணமாகவே இலங்கையில் போக்குவரத்துத் துறை அழிந்தது. இப்போது மெட்ரோ பேருந்துகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் மீண்டும் அதே தவற்றைச் செய்கிறது” என அவர் சாடினார்.

இந்தத் திட்டத்தின் ஊடாக திறைசேரியின் நிதி சூறையாடப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இதனை ஒரு ‘தேசியக் குற்றம்’ என வர்ணித்தார்.

புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்துவதால் பொதுப் போக்குவரத்தில் நிலவும் முறையான சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்காது எனவும், இது பழைய தோல்விகளையே மீண்டும் பிரதிபலிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அர்த்தமுள்ள மேம்பாடுகள் எதனையும் வழங்காமல், மக்களின் வரிப்பணத்தை மாத்திரம் இந்தத் திட்டம் வீணடிப்பதாக அவர் மேலும் வாதிட்டார்.

தமிழக அரசியலில் அதிரடி: 108 எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தி.மு.க கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்றுள்ள விஜய், கவர்னர் அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதும், “118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை உறுதிப்படுத்தாமல் ஆட்சியமைக்க அழைக்க முடியாது” என்று ஆளுநர் கறாராகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, த.வெ.க நிர்வாகிகள் வி.சி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஆதரவு கோரிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மறுபுறம், அ.தி.மு.க-வுக்கு தி.மு.க வெளியிலிருந்து ஆதரவு அளித்து, த.வெ.க-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இது த.வெ.க தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரின் நடவடிக்கை மற்றும் திராவிடக் கட்சிகளின் வியூகங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், த.வெ.க ஒரு அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளது. “தனிப்பெரும் கட்சியான எங்களை ஆட்சியமைக்க அழைக்காமல், தி.மு.க – அ.தி.மு.க கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முயன்றால், எங்களது 108 எம்.எல்.ஏ-க்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வார்கள்” என த.வெ.க எச்சரித்துள்ளது.

இந்த முடிவு எடுக்கப்பட்டால் இந்திய அரசியலமைப்பு வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 108 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வது இதுவே முதல் முறையாகும்.

108 பேர் ராஜினாமா செய்தால், சட்டசபையின் மொத்த பலம் 126 ஆகக் குறையும். அப்போது வெறும் 64 எம்.எல்.ஏ-க்கள் இருந்தாலே ஒருவர் முதலமைச்சராக முடியும். இது தி.மு.க-வுக்குச் சாதகமாக அமையக்கூடும் என்றாலும், மக்கள் மத்தியில் அது பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும்.

எம்.எல்.ஏ-க்களாகப் பதவியேற்பதற்கு முன்பே ராஜினாமா செய்வது சட்ட ரீதியான சிக்கல்களை உருவாக்கும். மேலும், 108 தொகுதிகளுக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது அரசுக்கு பெரும் நிதிச்சுமையை உண்டாக்கும்.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி அமைப்பதில் குழப்பம் நீடிப்பதாலும், த.வெ.க ராஜினாமா அஸ்திரத்தை ஏந்துவதாலும் தமிழகத்தில் ஒரு நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்தச் சூழலில், எந்தக் கட்சியாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், சட்டப்பிரிவு 356-ன் கீழ் ஆளுநர் பரிந்துரையின் பேரில் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

“பதவி ஆசை எங்களுக்கு இல்லை” என்பதை மக்கள் முன் நிரூபிக்க த.வெ.க இந்த முடிவை எடுக்கத் துணிந்துள்ளது. மறுபுறம், “விஜய் ஒருமுறை ஆட்சிக்கு வந்துவிட்டால் அவரை அசைக்க முடியாது” என்ற அச்சத்தில் திராவிடக் கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. வரும் மே 10-ஆம் தேதி வரை தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சென்னையிலேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் விஜய்யா? அல்லது தமிழகம் குடியரசுத் தலைவர் ஆட்சியை நோக்கிச் செல்கிறதா? என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேன தற்கொலை!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்த வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டது.  

இந்நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக, அவரது உறவினர்கள் எனக்கூறி போலி பிணையாளர்கள் இருவர் நீதிமன்றில் முன்னிலையானமை தெரியவந்தமையை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். 

கபில சந்திரசேனவின் பிணை நிபந்தனைகளின்படி, அவரது நெருங்கிய உறவினர்கள் மூவர் ஆள் பிணை வழங்க வேண்டியிருந்தது. 

இதற்காக உறவினர்களாக முன்னிலைப்படுவதற்குச் சந்தேக நபர்கள் தலா 15,000 ரூபாயைப் பணமாகப் பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளமையால், கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று உத்தரவிட்டார். 

இந்த சூழலிலேயே கபில சந்திரசேனவின் சடலம் கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

புத்தளம் மேதானந்தா கல்லூரியில் அடிக்கல் நாட்டு விழா!

புத்தளம் கோட்ட கல்விப் பிரிவுக்குட்பட்ட மேதானந்தா வித்யாலய மாணவர்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது.

புத்தளம் மேதானந்தா வித்யாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட 80 அடி × 25 அடி அளவிலான ஒற்றை மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த திங்கட்கிழமை (04.05.2025) அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வானது, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் அபிவிருத்திக் குழுத் தலைவருமான சகோதரர் முகமது பைசல் அவர்களின் தலைமையில் இனிதே இடம்பெற்றது.

நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்களின் கல்விக்கு முதன்மை முன்னுரிமை அளிக்கும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) அரசாங்கத்தின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 11.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தவும், இடவசதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த விசேட நிகழ்வில் கௌரவ மதத் தலைவர்கள் கலந்துகொண்டு ஆசிகளை வழங்கினர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் பைசல் அவர்களுடன், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், கல்வி பயிலும் மாணவச் செல்வங்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

அத்துடன், புத்தளம் பிரதேச சபையின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திக் குழு (CDC) தலைவர்கள், தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.

புதிய கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் பட்சத்தில், பாடசாலையின் கல்வித் தரம் மேலும் உயர்வடையும் என ஆசிரியர்களும் பெற்றோர்களும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.

முன்பள்ளி கல்வியில் சீர்திருத்தம், தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!

இலங்கையின் எதிர்கால சந்ததியினரை சவால்கள் நிறைந்த உலகிற்கு தயார்படுத்தும் வகையில், சிறுவர் பாடசாலை கல்வி முறையில் அவசர சீர்திருத்தங்கள் அவசியம் என்றும், நீண்டகாலமாக சேவை ஆற்றிவரும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளார்.

“இளமையில் கல்வி சிலையில் எழுத்து” என்ற முதுமொழியைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், தற்போதைய சூழலில் சிறுவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்தார். தற்போது மூன்று வயதிலேயே சிறுவர்கள் பாடசாலைக் கல்வியை ஆரம்பிப்பதும், இரண்டு வருடங்கள் அங்கு கல்வி கற்பதும் ஆரோக்கியமானது அல்ல என ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினர்.

நேற்றைய பாராளுமன்ற சபை அமர்வில் கலந்துகொண்டு வாய்மொழிமூலமாக கேள்வி எழுப்பியபோதே கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூரிய அவர்களின் கவனத்திற்கு குறித்த விடயங்களை அவரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான்;

சிறுவர் பாடசாலைக் கல்வியை முறைப்படுத்தி, முதலாம் தரத்தில் இணைவதற்கான வயதை 5 ஆகக் குறைப்பது குறித்து ஆய்வு செய்தல், தனியார் மற்றும் பிரதேச சபைகளின் கீழ் இயங்கும் சிறுவர் பாடசாலைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, நாடு முழுவதற்கும் பொதுவான கல்வி முறையை உருவாக்குதல், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தனியார் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பதால், அரச மற்றும் பிரதேச சபை பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரித்து ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை உறுதி செய்ய வேண்டும்.

யுத்தம் நிலவிய காலப்பகுதியிலும், அதற்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளிலும் வடக்கு, கிழக்கு மற்றும் எல்லைக் கிராமங்களில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தொண்டர் ஆசிரியர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். கடந்த அரசாங்கத்தின் போது இவர்களுக்கான நிரந்தர நியமன அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், தேர்தல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

வடக்கு மாகாணத்தில் சுமார் 150 பேரும், கிழக்கு மாகாணத்தில் 300 முதல் 400 பேரும் அரசியல் காரணங்களால் நிரந்தர நியமனம் மறுக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நீண்டகாலமாக அரச சேவைக்காகக் காத்திருந்த நிலையில், தற்போது பல ஆசிரியர்கள் அரச பணிக்கான வயது எல்லையைத் தாண்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களுக்கு நீதி வழங்கவும் ஒரு விசேட குழுவை நியமித்து ஆராய வேண்டும் என வலியுறுத்திய மஸ்தான், அவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டும் அல்லது ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட தற்போதைய அரசாங்கம், இந்த ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களுக்கு உள ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நிம்மதியை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூரிய, இலங்கையின் கல்வித்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில், முன்பள்ளி கல்விக்கான புதிய சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய கொள்கைகளை அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

தற்போதைய கல்வி முறையின்படி, 5 வயது பூர்த்தியடைந்த சிறுவர்கள் பாடசாலைகளில் தரம் 1 இல் சேர்க்கப்படுகிறார்கள். இந்நிலையில், 3 மற்றும் 4 வயதுடைய சிறுவர்களின் முன்பள்ளி கல்வியை முறைப்படுத்தும் வகையில் 2027 ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் வாய் மொழிமூலமான கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய;

இந்தச் சீர்திருத்த நடவடிக்கைகளை கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுடன் இணைந்து, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஒத்துழைப்போடு முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக, 2025 ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) “தேசிய ஆரம்ப சிறுவர் பருவ கல்விக்கான பாடத்திட்டக் கட்டமைப்பு” அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்கள் மற்றும் மாதிரிச் செயல்பாட்டுத் தொகுப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மாகாண மட்டத்தில் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் இப்பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டுக்குள் முன்பள்ளி கல்விக்கான முழுமையான தேசிய கொள்கையொன்றை ஸ்தாபிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் பெரும்பாலான முன்பள்ளிகள் தனியார் துறையினரால் நடத்தப்படுவதால், அங்குள்ள ஆசிரியர்களுக்கு நிலையான சம்பளம் அல்லது நிரந்தர நியமனங்களை வழங்குவதில் கல்வி அமைச்சுக்கு சட்ட ரீதியான வரையறைகள் உள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், மாகாண சபைகளினால் தெரிவு செய்யப்பட்ட சில முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், விசேடமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும், அங்குள்ள சிறுவர்கள் கல்வி கற்பதில் எதிர்கொள்ளும் சவால்களையும் அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளதாகவும், இது குறித்து ஆராய விசேட குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தவொரு மாகாணப் பாடசாலையும் தேசியப் பாடசாலையாகத் தரம் உயர்த்தப்படவில்லை என குறிப்பிட்ட கல்வி அமைச்சர், 4,700 தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்குவதற்கு 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் அமைச்சரவை தீர்மானங்களை மேற்கொண்டிருந்ததாக்க சுட்டிக்காட்டினார்.

அதன் பின்னர் புதிய தொண்டர் ஆசிரியர்கள் எவரும் கல்வி அமைச்சினால் நேரடியாக இணைத்துக்கொள்ளப்படவில்லை எனவும், முன்பள்ளி கல்வித் துறையை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுடன் மாதாந்தம் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஆளுநரை நேரில் சென்று சந்தித்த தளபதி விஜய்!

ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்று (மே 06) தமிழக கவர்னர் (பொறுப்பு) அர்லேக்கரை தவெக தலைவர் விஜய் சந்தித்து உரிமை கோரினார். தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள கடிதத்தையும் அளித்தார்.

சட்டசபை தேர்தலில், 108 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக த.வெ.க., உருவெடுத்துள்ளது. இதற்கிடையே பெரும்பான்மையை நிரூபிக்க விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் விஜய் கோரி இருக்கிறார்.

இந்நிலையில் , தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேக்கர் இன்று தமிழகம் வந்தார். அவரை தவெக தலைவர் விஜய், தன் கட்சி எம்எல்ஏக்கள் 6 பேருடன் சென்று சந்தித்தார். தங்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பட்டியல், காங்கிரஸ் தந்த ஆதரவு கடிதம் ஆகியவற்றை கவர்னரிடம் வழங்கி, ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரினார்.

ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. தவெக 108 இடங்களில் வென்றாலும், விஜய் 2 இடங்களில் வென்றதால் 107 என்பது தான் கணக்கு. தவெகவுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர்.

பெரும்பான்மை இல்லாவிட்டாலும், சட்டசபையில் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் தங்களை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று கவர்னரிடம் விஜய் கோரியுள்ளார்.

தவெக – காங்கிரஸ் கைகோர்ப்பு: தமிழக அரசியலில் புதிய ஆரம்பம்!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தி.மு.க., கூட்டணியில், 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெகவுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க 11 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றன. இதனால் 2 எம்எல்ஏக்களை கொண்டுள்ள இந்திய கம்யூ, மார்க்சிஸ்ட் மற்றும் விசிகவுக்கு ஆதரவு கோரி விஜய் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து, தேர்தலில் வெற்றி பெற்ற காங்., வேட்பாளர்கள் ஐந்து பேருடன், அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் ஆலோசனை நடத்தினார்.

தற்போது தமிழகத்தில் ஆட்சி தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அடுத்து வரவிருக்கும் லோக்சபா, உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. தவெகவுக்கு ஆதரவு என்று காங்கிரஸ் அறிவித்ததால், திமுகவுடன் 2016ம் ஆண்டு முதல் தொடரும் அந்த கட்சியின் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது.

இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியாவின் மதச்சார்பற்ற, முற்போக்கான மற்றும் மக்கள் நல அரசியலின் அடையாளமாகவும், அதன் தோற்றுவிப்பாளராகவும் திகழ்கிறது. தமிழ்நாட்டு மக்களின் இந்த ஆணையை மதிப்பதும், நிலைநிறுத்துவதும், அதனை நிறைவேற்ற உதவுவதும் எங்களது அரசியலமைப்பு ரீதியான கடமையாகும். அதற்கேற்ப, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க தனது முழு ஆதரவை வழங்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியும் (CLP) முடிவு செய்துள்ளன.

இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கையற்ற எந்தவொரு வகுப்புவாத சக்திகளையும் இந்த கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் எங்களது ஆதரவு அமையும்.

தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் இடையிலான இந்த கூட்டணி, தந்தை பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகள் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டக் கோட்பாடுகளுக்கு வலுவான அர்ப்பணிப்புடன், பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வர பாடுபடும்.

பரஸ்பர மரியாதை, தகுந்த பங்கு மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உருவான இந்த கூட்டணி, தற்போதைய ஆட்சி அமைப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தல்களுக்கும் தொடரும்.

விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து, மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான அரசாங்கத்திற்கான தமிழ்நாட்டு மக்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மதித்து நடப்பதாகவும், தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதாகவும் உறுதிபூணுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் ஒரு கார் கண்காட்சி – இங்கிலாந்து முதல் அமெரிக்கா வரை

நிருபர்: ஜூட் சமந்த

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் விளையாட்டு கார்களை சேகரிப்பது ஒரு பொழுதுபோக்காக இருந்தாலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிகப்பழமையான விளையாட்டு கார்களின் தொகுப்பைக் கொண்டிருப்பது அரிதான ஒரு விஷயமாகும்.

வென்னப்புவ – நைனாமடை பிரதேசத்தைச் சேர்ந்த பர்டி பெரேரா என்பவர், அத்தகைய ஒரு அரிய வகை சேகரிப்புக்கு உரிமையாளராகத் திகழ்கிறார். இவரிடம் இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, கனடா போன்ற பல நாடுகளில் தயாரிக்கப்பட்ட, சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த 65 விளையாட்டு கார்கள் உள்ளன.

தனது இந்த அரிய வகை சேகரிப்பு பற்றி பர்டி பெரேரா கருத்து தெரிவிக்கையில்:

“நான் நீண்ட காலம் இத்தாலியில் பணிபுரிந்தேன். 1990-ஆம் ஆண்டு காலப்பகுதியில் அங்குள்ள ஒரு வயதான கலைஞரிடம் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் அடிக்கடி பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார். அவ்வாறு சென்று வரும்போதெல்லாம் அழகான விளையாட்டு கார்களை வாங்கி வருவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.”

அவரிடம் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றியதாகக் கூறும் பெரேரா, அந்தக் கலைஞரின் இறுதிக்காலத்தில் அந்த பெறுமதிமிக்க கார் தொகுப்பை தன்னிடம் ஒப்படைத்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அவர் இறந்த பிறகு, அந்த நினைவாகவே அக்கார்களைத் தான் இலங்கைக்குக் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.

தனித்துவமான சிறப்பம்சங்கள்

இந்த சேகரிப்பில் உள்ள ஒவ்வொரு காரின் பின்புறத்திலும் அது தயாரிக்கப்பட்ட நாடு மற்றும் வருடம் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. இதுவரை எங்கும் பார்த்திராத பல அரிய வகை மாதிரிகள் இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ளன. இந்த கார்களைக் காண்பதற்காகத் தனது இல்லத்திற்கு வரும் சிறுவர்களைப் பார்ப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் கூறுகிறார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சேகரிப்பைப் பாதுகாப்பாகப் பராமரிப்பதற்கு, அவரது உறவினரான ரோலண்ட் ரோட்னி என்பவரும் பெரும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதல்வரான பிறகும் விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல்!

இன்று ஆளுநரைச் சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் எனச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், கர்நாடகாவில் எடியூரப்பா விவகாரத்தை மேற்கோள் காட்டும் சிலர், விஜய்க்குப் பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும் என்கிறார்கள்.

தமிழ்நாடு தேர்தலில் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, இன்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோறியுள்ளது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், விஜய் கட்சிக்கு இப்போது 10 எம்.எல்.ஏ.க்கள் கூடுதலாகத் தேவைப்படுகிறது. இதற்காக அவர் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது.

ஒருவேளை எல்லாமே திட்டமிட்டபடி நடந்தால்.. ஓரிரு நாட்களில் விஜய் முதல்வராகப் பதவியேற்பார் எனத் தெரிகிறது. இருப்பினும், அதன் பிறகு அவர் சட்டசபையில் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி இருக்கிறது. அதை நிரூபிக்கவில்லை என்றால் ஆட்சி கவிழும்! இருப்பினும், 15 நாட்கள் இருப்பதால் அதற்குள் தேவையான பெரும்பான்மையைப் பெற முடியும் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும் 15 நாட்களுக்குப் பதிலாக ஒரு நாள் மட்டுமே கூட டைம் வழங்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

இதற்கு 2018ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த எடியூரப்பா விவகாரத்தை உதாரணமாகச் சொல்கிறார்கள்.. அதாவது அப்போது கர்நாடக தேர்தலில் 104 இடங்களைப் பெற்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், இது பெரும்பான்மைக்குத் தேவைப்பட்ட 112 இடங்களை விட 8 இடங்கள் குறைவாகும். எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அப்போதே ஆளுநர் அழைப்பு விடுத்தார். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்தார்.

இதனை எதிர்த்து காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி அவசர மனுத் தாக்கல் செய்தது. அதில் குதிரை பேரம் நடக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை அப்போதைய சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அதில் “குதிரை பேரத்தைத் தவிர்க்க உடனடியாகப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்” என்று கூறி, 15 நாள் அவகாசத்தை வெறும் 24 மணிநேரமாகக் குறைத்து உத்தரவிட்டது. பெரும்பான்மைக்குத் தேவையான 112 இடங்கள் இல்லாததால், எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே உணர்ச்சிகரமாகப் பேசி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

விஜய்யின் தற்போதைய நிலை எடியூரப்பாவின் நிலையை விடச் சற்று நெருக்கடியானது. எடியூரப்பாவுக்கு 8 இடங்கள் மட்டுமே தேவைப்பட்டன, ஆனால் விஜய்க்கு 10 இடங்கள் தேவைப்படுகின்றன. எனவே, எடியூரப்பாவைப் போலவே 24 மணி நேரம் மட்டும் கூட டைம் வழங்கப்படலாம். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை விஜய் அரசு எந்தவொரு முக்கியக் கொள்கை முடிவுகளையும் எடுக்க முடியாது.

எடியூரப்பா விவகாரத்தில், “பெரும்பான்மை என்பது நம்பர்களை பொறுத்தது; அதன் உண்மைத்தன்மை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்கப்பட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அந்த நம்பர் தான் விஜய்க்கும் இப்போது தேவைப்படுகிறது. எனவே, விஜய்க்கு ஆளுநர் இரு வாரம் டைம் வழங்கினாலும் கூட அது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் செல்ல அதிக வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், வெறும் 24 மணி நேரத்தில் பெரும்பான்மையைப் பெற வேண்டி இருக்கும்.

தேர்தலில் தமிழ்த் திரையுலகினரின் வெற்றியும்… தோல்வியும்!

தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழ்த் திரையுலகிலிருந்து சிலர் போட்டியிட்டனர். தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளார்.

அவரது கட்சியில் போட்டியிட்ட மற்ற திரைக் கலைஞர்களில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட விஜய்யின் நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத், திமுக அமைச்சர் கீதா ஜீவனைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்ரீநாத் – தவெக – 1,00,536
கீதா ஜீவன் – 62,805

சென்னை ரோகிணி தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவரான ரேவந்த் சரண் மதுரவாயல் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு தேர்வாகி உள்ளார்.

ரேவந்த் சரண் – தவெக – 1,41,725
கணபதி – திமுக – 80,216

சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜ்மோகன் கூட ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஓரிரு படங்களில் நடித்துள்ளார்.

ராஜ்மோகன் – தவெக – 53,901
தமிழன் பிரசன்ன – திமுக – 43,097

திமுக சார்பில் முன்னாள் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் – திமுக – 62,992
செல்வம் – தவெக – 55,852

வந்தவாசி தொகுதியில் தயாரிப்பாளர் அம்பேத்குமார், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அம்பேத்குமார் – திமுக – 63,805
ராணி – அதிமுக – 60,472

மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட இயக்குனர் சுந்தர் சி, தோல்வியடைந்து மூன்றாம் இடத்தையே பிடித்துள்ளார்.

மதார் பஹ்ருதீன் – தவெக – 63,414
பிடிஆர் பழனிவேல் ராஜன் – திமுக – 44,286
சுந்தர் சி – அதிமுக – 33,538

சிவகங்கை தொகுதியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு தோல்வியடைந்துள்ளார்.

குழந்தை ராணி – தவெக – 73,737
செந்தில்நாதன் – அதிமுக – 58,656
கருணாஸ் – திமுக – 57,300

சினிமா இயக்குனராகவும், நடிகராகவும் இருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 30,793 வாக்குகளை மட்டுமே பெற்றதால் 4ம் இடம் கிடைத்து டெபாசிட்டைப் பறிகொடுத்தார்.

டாக்டர் பிரபு – தவெக – 1,01,358
மாங்குடி – காங்கிரஸ் – 55,284
தேர்போகி வி பாண்டி – அமமுக – 33,352
சீமான் – நாம் தமிழர் – 30,793

லால்குடி தொகுதியில் சுயோச்சையாகப் போட்டியிட்ட நடிகர் மன்சூரலிகான் 101 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார்.

லீமாரோஸ் மார்ட்டின் – அதிமுக – 60,795
குப கிருஷ்ணன் – தவெக – 58,056
பாரிவள்ளல் – திமுக – 55,565
மன்சூரலிகான் – சுயேச்சை – 101

பென்னாகரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜிகே தமிழ்க்குமரன் தோல்வியைத் தழுவினார்.

கஜேந்திரன் – தவெக – 81,240
பாட்டாளி மக்கள் கட்சி – 78,075
ஜிகே தமிழ்க்குமரன் – காங்கிரஸ் – 53,901