Home Blog Page 66

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஸ்டாலின்!

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பினார்.

இதற்கிடையே சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.

இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி திமுக கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு சதவீதம் வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழக மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.

ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம். இனம், மொழி, நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

வறிய குடும்பத்தின் வீட்டுக்கனவை நனவாக்கிய தேசிய மக்கள் சக்தி!

தேசிய மக்கள் சக்தியின் “அனைவருக்கும் பாதுகாப்பான தங்குமிடம்” எனும் தூரநோக்கிற்கு அமைவாக, புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தம்மன்னகம கிராம உத்தியோகத்தர் பிரிவில் வறிய குடும்பம் ஒன்றுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று இன்று உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NHDA) நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிரந்தர வீட்டை, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.J.M. பைசல் அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளிடம் கையளித்தார்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தகுதியான குடும்பங்களை அடையாளங்கண்டு, அவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களின் நீண்டகால வீட்டுக்கனவு இதன் மூலம் நனவாக்கப்பட்டுள்ளது.

புதிய வீட்டைத் திறந்து வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் M.J.M. பைசல், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் தற்போதைய அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பிரஜா சக்தி தலைவர் மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினருமான நிமேஸ், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரஜிதா, தேசிய மக்கள் சக்தியின் பிரமுகர்கள், தம்மன்னகம கிராம உத்தியோகத்தர் மற்றும் அரச அதிகாரிகள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

புதிய வீட்டினைப் பெற்றுக்கொண்ட குடும்பத்தினர், தங்களின் வாழ்வாதாரத்தைச் சீரமைக்க அரசு வழங்கிய இந்த உதவிக்குத் தமது நெகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

எம்ஜிஆரை மிஞ்சிய விஜய்; அறிமுக தேர்தலில் சொல்லியடித்து அசத்தல்!

தமிழகத்தில் புதிதாக கட்சி துவங்கி அறிமுக தேர்தலிலேயே அதிக ஓட்டு சதவீதத்தை பெற்ற எம்ஜிஆரின் அதிமுக வை மிஞ்சி, விஜயின் தவெக முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 4) வெளியாகி வருகிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) முதல்முறையாக களத்தில் இறங்கியது. இதனால் அதிக எதிர்பார்ப்பு அக்கட்சி மீது ஏற்பட்டது.

விஜய் தனது முதல் மாநாட்டிலும் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது எப்படி முதல்முறை தேர்தலில் வெற்றி பெற்றாரோ, அதேபோல், வரலாறு திரும்புகிறது; நாமும் ஆட்சி அமைப்போம் என்று பேசினார். அதேபோல், எம்ஜிஆருக்கு கிடைத்தது போன்ற ஆதரவு விஜய்க்கும் கிடைத்தது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக முதல் தேர்தலிலேயே அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது தவெக. பெரும்பான்மை இடங்களை பெறவில்லை என்றாலும், கூடுதல் தொகுதிகளில் த.வெ.க வெற்றி முகத்தில் இருக்கிறது. பகல் 1 மணி நிலவரப்படி தவெக மட்டும் 38 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.

எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி துவங்கி 1977 சட்டசபை தேர்தலில் முதன்முறையாக களமிறங்கியபோது 30.4 சதவீத ஓட்டுகளை பெற்றார். கடந்த 49 ஆண்டுகளாக அதன் பிறகு எத்தனையோ புதிய கட்சிகள் தேர்தலில் களமிறங்கின. ஆனால் அக்கட்சிகள் 10 சதவீத ஓட்டுகளைக் கூட எட்டவில்லை.

அப்படியிருக்கையில் எம்ஜிஆரின் 30.4 சதவீத சாதனையை கட்சி துவங்கி இரண்டரை ஆண்டில் முதல் தேர்தலில் தகர்த்து சாதித்துள்ளார் விஜய். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வரிப்பணமும் மக்கள் சலுகைகளும் எங்கே? பைஸர் முஸ்தபா கேள்வி!

அரசாங்கம் மக்களிடம் வரி அறவிட்டு வந்தாலும், மக்களுக்கான சலுகைகள் எங்கே; பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா கேள்வி

அரசாங்கம் மக்களிடம் வரி அறவிட்டு வந்தாலும், மக்களுக்கான சலுகைகள் எங்கே? என, பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபா கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம்,
“ஊழல் நிறைந்த அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தி” எனும் தொனிப்பொருளில், பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில், கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின் வழி காட்டலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட மக்கள் உள்ளிட்ட நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும், கட்சியின் அபிமானிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இம்மே தினக் கூட்டத்தில் பைஸர் முஸ்தபா மேலும் கருத்து வெளியிடும்போது,
அரசாங்கம் வரி அறவிட்டு வந்தாலும், மக்களுக்கான சலுகைகளை உரிய முறையில் வழங்க முன்வரவில்லை. மக்கள் தற்போது பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

பொருளாதார ரீதியிலும் அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் மக்கள் மீது வரி சுமத்தப்பட்டு வருகிறது. ஆனால், நிவாரணங்கள் சரியாக வழங்கப்படுவதில்லை. இது அரசாங்கம் மக்களுக்கு செய்யும் அநியாயமும் அநீதியுமாகும். எனவே, மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கவும், பொருளாதார ரீதியில் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சின்னாபின்னமாகிப் போகவில்லை. எமது கட்சி, இதுவரை பிரிந்து போகவும் இல்லை. கட்சி, கடந்த காலங்களைப் போல் மிகச் சிறப்பாக செயற்பட்டு வருகிறது. மக்கள் அபிமானம் தொடர்ந்தும் எதுவித மாற்றங்களும் இன்றி அவ்வாறே பலமாக உள்ளது.

இந்த நிலைப்பாட்டை, கட்சி என்ற வகையில் நாம் தொடர்ந்தும் உறுதியாக வலுமிக்கதாக தக்க வைப்போம். மக்களுடன் மக்களாக தோழ் தொடுத்து முன்னேறிச் செல்வோம் என்றார்.

தமிழகத்தில் ‘தளபதி’ புயல்: முதல் தேர்தலிலேயே தவெக முன்னிலை!

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தவெக 113 தொகுதிகளிலும், அதிமுக 69-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், திமுக 52-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

முதல் முறை தேர்தலில் களம் கண்டுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மநீம, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமையிலான அணியில் பாஜ, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தனித்து தேர்தலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மொத்தமுள்ள 234 தொகுதியிலும் 4023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார். இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43,291 பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.

இதில் 4 கோடியே 87 லட்சத்து 98,833 பேர் வாக்களித்தனர். இது 85.10 சதவீதம் ஆகும். வாக்குப்பதிவு முடிந்ததும் 75,064 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள ஸ்டாங் ரூமில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.

போதைப்பொருள் மாஃபியாவிற்கு எதிராக நின்ற வீரன் கொலை!

போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நபர் ஒருவர், இனந்தெரியாத கும்பலால் இரும்புத் தடியால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மாரவிலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாரவிலை – குருசப் பள்ளிப் பகுதியைச் சேர்ந்த பொன்னம்பெருமகே ஸ்ரீலால் பெர்னாண்டோ (60 வயது) என்பவரே இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இரவு 7.00 மணியளவில், மாரவிலை பகுதியில் வைத்து இவருக்கும் ஒரு குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இதன்போது அக்குழுவினர் இரும்புத் தடிகளால் ஸ்ரீலால் பெர்னாண்டோவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மாரவிலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த மே மாதம் 01 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

உயிரிழந்த ஸ்ரீலால் பெர்னாண்டோ, குருசப் பள்ளிப் பகுதியில் ஒரு கும்பலால் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இந்த எதிர்ப்பு காரணமாகவே அவர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அவர்கள் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு மாரவிலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தித் தொகுப்பு: ஜூட் சமந்த

தோற்றால் கதை ஓவர். விஜய்தான் உதவனும் – தவெக வேட்பாளர்கள்!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது முதல் தேர்தல் பயணத்தை நிறைவு செய்திருக்கிறது. விஜய், அரசியலில் காலடி எடுத்து வைத்தபோது அவரோடு பயணித்த வேட்பாளர்கள் இப்போது ஒரு இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, பல வேட்பாளர்களின் வீடுகளில் நிம்மதி மறைந்து, ‘கடன்’ என்ற பூதம் ஆட்டமிழக்கத் தொடங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய கட்சி என்பதால், மற்ற திராவிடக் கட்சிகளைப் போல அசுர பலம் கொண்ட தேர்தல் நிதி அந்தப் பார்ட்டியிடம் இல்லை என்பது நிதர்சனம். கட்சியின் தலைமை ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையை வழங்கியதாகக் கூறப்பட்டாலும், கள நிலவரப்படி தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேட்பாளர்கள் பெரும் தொகையைச் செலவிட வேண்டியிருந்தது.

மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் எனப் பலரும், தங்கள் கைவசம் இருந்த சேமிப்புத் தொகையைத் தாண்டி, பல லட்சம் ரூபாய் தனிநபர் கடன் (Personal Loan) பெற்றுள்ளனர். அதையும் தாண்டி, தங்கள் குடும்பத்தினரின் தங்க நகைகளை அடகு வைத்து ‘கோல்ட் லோன்’ மூலமாக அவசரத் தேவைக்கு நிதி திரட்டியுள்ளனர். தேர்தல் பிரச்சார வாகனங்கள், தொண்டர்களுக்கான உணவு, விளம்பர பேனர்கள் மற்றும் சமூக ஊடகப் பிரச்சாரங்கள் என ஒவ்வொன்றுக்கும் அவர்கள் செலவிட்ட தொகை இன்று அவர்களுக்கு ஒரு பெரும் சுமையாக உருவெடுத்துள்ளது.

“வெற்றி பெற்றால் எப்படியாவது சமாளித்துவிடலாம்” என்ற நம்பிக்கையில் கடன் வாங்கிய வேட்பாளர்கள், இப்போது தேர்தல் முடிவுகள் குறித்த கணிப்புகளால் கலக்கமடைந்துள்ளனர். ஒருவேளை தாங்கள் தோல்வியடைந்தால் அல்லது கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறினால், வாங்கிய கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்ற கேள்வி அவர்களைத் துரத்துகிறது.

“கட்சிக்காக எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். இப்போது வட்டி கட்டக்கூட வழியில்லாத சூழல் உருவாகியுள்ளது” என சில வேட்பாளர்கள் நெருக்கமான வட்டாரங்களில் புலம்பி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, நடுத்தர வர்க்கப் பின்னணியில் இருந்து வந்த வேட்பாளர்கள், வாங்கிய தனிநபர் கடனுக்கான மாதாந்திரத் தவணையை (EMI) எப்படிக் கட்டப் போகிறோம் என்ற அச்சத்தில் உள்ளனர்.

விஜய் கைகொடுப்பாரா? எதிர்பார்ப்பில் வேட்பாளர்கள்

இந்த இக்கட்டான நிலையில், வேட்பாளர்களின் ஒட்டுமொத்த பார்வையும் இப்போது விஜய் பக்கமே திரும்பியுள்ளது. “நாங்கள் விஜய்க்காகவும், கட்சியின் எதிர்காலத்திற்காகவும் தான் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்துள்ளோம். எனவே, ஒருவேளை பின்னடைவு ஏற்பட்டால், கட்சித் தலைமை எங்களைக் கைவிடக்கூடாது” என்பதே அவர்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.

தோல்வியடையும் வேட்பாளர்களுக்கு நிதியுதவி அளிப்பதோ அல்லது அவர்களின் கடனை அடைக்க ஏதேனும் ஒரு வழியைக் காட்டுவதோ விஜய்க்குச் சாத்தியமா? என்ற விவாதம் கட்சிக்குள் எழுந்துள்ளது. விஜய் தனது சொந்த நிதியில் இருந்து உதவி செய்வாரா அல்லது எதிர்காலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு ஒரு ‘நிவாரண நிதி’ போல எதையேனும் உருவாக்குவாரா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அரசியல் எதிர்காலத்திற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

புதிதாக அரசியலுக்கு வரும் இளைஞர்களுக்கும், சாமானியர்களுக்கும் இந்தச் சூழல் ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. முறையான நிதித் திட்டமிடல் இன்றி, உணர்ச்சிவசப்பட்டு கடன் வாங்கித் தேர்தல் களம் காண்பது, தனிநபர் வாழ்க்கையை எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதற்குத் தவெக வேட்பாளர்களின் தற்போதைய நிலையே சாட்சி.

முடிவுகள் சாதகமாக அமைந்தால் இந்தக் கடன்கள் அவர்களுக்கு ஒரு ‘முதலீடாக’த் தோன்றும். ஆனால், முடிவுகள் பாதகமானால், தமிழக வெற்றிக் கழகத்தின் பல முக்கிய நிர்வாகிகள் நீண்ட கால நிதி நெருக்கடியில் சிக்க நேரிடும். விஜய் தனது தொண்டர்களுக்காகவும், வேட்பாளர்களுக்காகவும் என்ன அதிரடி முடிவை எடுக்கப்போகிறார் என்பதே இப்போதைய ஹாட் டாபிக்!

மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை!

சர்ச்சைக்குரிய 2013ஆம் ஆண்டு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை மே மாதம் 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 06 எயார்பஸ் A-330 ரக விமானங்களையும், 08 எயார்பஸ் A-350 ரக விமானங்களையும் கொள்வனவு செய்தபோது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக அப்போதைய ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பாக இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, சந்தேக நபரான கபில சந்திரசேன கடந்த மார்ச் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, பின்னர் மே மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிதி மோசடியில் ஈடு ஈடுபட்ட 120 வெளிநாட்டவர்கள் கைது!

ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் உள்ள இடமொன்றில் சட்டவிரோத நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சுமார் 120 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரிவினரிடையே சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து ஏராளமான கணினிகள் மற்றும் கைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மெத வெலிக்கடை வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பல மாடிகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, இவர்கள் இந்த மோசடி நடவடிக்கையை முன்னெடுத்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது நடவடிக்கையின் போது இவர்களில் ஒரு குழுவினர் தப்பியோடியுள்ளனர். அவர்களைக் கைது செய்வதற்காக வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை கணினி குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 36 வெளிநாட்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 37 பேர் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், நேற்று சனிக்கிழமை (02) மாலை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மற்றும் தலங்கம பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2026 மே 02 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவித்துள்ளது.

புதிய எரிபொருள் விலையின் அடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 410.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 470.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 392.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 458.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் புதிய விலை ரூ. 265.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 10 ரூபாயால் மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.