Home Blog Page 68

30 நாட்கள் மரணப் போராட்டம்: விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

ஜூட் சமந்த

நாத்தாண்டியா பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து, கடந்த ஒரு மாத காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாத்தாண்டியா – பஹல வலஹாபிட்டிய பகுதியைச் சேர்ந்த பனம்பரம்கே ரொஷான் பிரகீத் (51 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி இரவு 11:00 மணியளவில் நாத்தாண்டியா நகரில் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானார்.

விபத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சுமார் 30 நாட்கள் மரணப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 29) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வேகமாக வந்த மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மாரவில பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேறிய எரான் விக்ரமரத்ன!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு பதவிகளிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா செய்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன சமர்ப்பித்த இராஜினாமா கடிதத்தை அக்கட்சி உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு பதவிகளிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா செய்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன சமர்ப்பித்த இராஜினாமா கடிதத்தை அக்கட்சி உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) மீளமைப்புக் குழுவின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவை, கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் விலகுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் 2026 ஏப்ரல் 29 அன்று அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், எரான் விக்கிரமரத்னவினால் 2026.04.29 அன்று வழங்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை கட்சியின் முகாமைத்துவக் குழு மற்றும் செயற்குழு ஆகியன ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விளையாட்டு சங்கங்களும் அரசியல் தலையீடுகளற்ற சுயாதீனமான நிர்வாகத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதும், அரசியல்வாதிகள் அவற்றில் பதவிகளை வகிக்கக் கூடாது என்பதுமே கட்சியின் உறுதியான கொள்கையாகும் என அக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, கட்சியின் இந்தக் கொள்கைக்கு முரணாக அமையாத வகையில், எரான் விக்கிரமரத்ன தார்மீக ரீதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்புரிமையிலிருந்தும் விலகிக்கொள்ள வேண்டும் என பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விளையாட்டுத் துறையில் அரசியல் தலையீடுகளைத் தவிர்ப்பதற்கான கட்சியின் கொள்கையினைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கடிதத்தின் மூலம் அறியமுடிகிறது.

விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மாற்றியமைப்புக் குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடலில் மிதந்த 250 கிலோவிற்கும் அதிக எடையுள்ள பீடி இலைகள்!

ஜூட் சமந்த

சிலாபம், அம்பகந்தவில பகுதியில் கடலில் மிதந்து வந்த பெருமளவிலான பீடி இலைகளை கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட இந்த பீடி இலைகள் மேலதிக விசாரணைகளுக்காக சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை, சிலாபம் – அம்பகந்தவில கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் சோதனைச் சாவடி அதிகாரிகளுக்கு கடலில் சில சந்தேகத்திற்கிடமான பொதிகள் மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, கடலில் மிதந்து வந்து கரையை அடைந்த 250 கிலோ 900 கிராம் எடையுள்ள 06 பொதிகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

இந்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பெரிய படகுகளில் இருந்து சிறிய படகுகள் மூலம் கரைக்கு மாற்ற முற்பட்ட போது, கடற்படையினரின் சோதனையில் இருந்து தப்பிக்கும் நோக்கில் அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கடத்தல்காரர்கள் இப்பொதிகளை கடலில் வீசிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

தற்போது வரை இந்த கடத்தலுடன் தொடர்புடைய நபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் பெறுமதி மற்றும் அவற்றை கொண்டு வந்தவர்கள் குறித்த மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கதறும் மகாராஷ்டிரா: வெப்பத்தின் பிடியில் 100-க்கும் மேற்பட்டோர் பலி!

மராட்டிய மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், வெப்பத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவகின்றன. 

மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் 1, 2026 முதல் ஏப்ரல் 20 வரை வெப்பத்தாக்கத்தால் 39 நேரடி பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. 

இதனுடன், மாநிலம் முழுவதும் இதுவரை மொத்தம் 109 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 

அக்கோலா, நந்துர்பார் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் அதிகப்படியான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 

மும்பை மாநகராட்சிப் பகுதியில் நேரடி வெப்பத்தாக்கங்கள் புதிதாக இல்லை என்றாலும், வெப்பம் தொடர்பான பிற உடல்நலக் குறைபாடுகளால் 108 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 3.34 லட்சத்திற்கும் அதிகமானோர் வெப்பம் தொடர்பான பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர். 

இந்த அபாயகரமான நிலையை முன்னிட்டு, மாநில சுகாதாரத் துறை அனைத்து மாவட்ட மருத்துவமனைகளும் தயார்நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 

வெப்பத்தாக்க நோயாளிகளுக்கென தனிப்படுக்கைகள், போதுமான அளவு ஓஆர்எஸ் (ORS) பாக்கெட்டுகள் மற்றும் குளிர்ந்த குடிநீர் வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும், தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும், அதிகளவில் தண்ணீர் குடித்து உடல் நீர்ச்சத்தை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உழ்ஹிய்யா விவகாரத்தில் ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை!

வெசாக் – ஹஜ்ஜுப் பெருநாள், இரண்டு சமயக் கடமைகளும் சமூகத்தில் மிக முக்கிய நிகழ்வுகள் என, ஜனாதிபதியிடமும் அவரது செயலாளரிடமும் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா சுட்டிக் காட்டியுள்ளார்.

உழ்ஹிய்யா விவகாரம் தொடர்பில் அவசரமாகவும் அவசியமாகவும் சுமூகமான தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுக்குமாறும், பைஸர் முஸ்தபா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொலைபேசி ஊடாகவே பைஸர் முஸ்தபா, இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இம்முறை வெசாக் வாரத்தை அரசாங்கம் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே மாதம் 28 ஆம் திகதி முஸ்லிம்கள் புனித ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்.

முஸ்லிம்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றுவதற்கான காலம், ஹஜ்ஜுப் பெருநாள் தினமான “அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் பிறை 10) மே மாதம் 28 முதல், (துல்ஹஜ் பிறை 13) மே மாதம் 31 அஸர் தொழுகை நேரம் வரையிலாகும். இக்காலப் பகுதியிலேயே வெசாக் வாரமும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இக்காலப் பகுதியில் இறைச்சிக்கான பிராணிகளை அறுப்பதோ அல்லது விற்பனை செய்வதோ கூடாது என, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் பொது நிர்வாக அமைச்சு விசேட வர்த்தமானி மூலம் அறிவுறுத்தியுள்ளது. இதனடிப்படையில், இக்காலப் பகுதியில் உழ்ஹிய்யாவுக்காக ஆடு மாடுகளை அறுப்பதும் தடை செய்யப்பட்டதாகக் கருத வேண்டியுள்ளது.

இதன் பின்னணியில், உழ்ஹிய்யாக் கொடுப்பது தொடர்பான பலரினதும் பல்வேறு கருத்துக்கள், தற்போது சர்ச்சையாக உருவாகியும் கேள்விக் குறியாகவும் மாறியுள்ளன.

எனவேதான், உழ்ஹிய்யா விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.

வெசாக் – ஹஜ்ஜுப் பெருநாள், இரண்டு சமயக் கடமைகளும் சமூகத்தில் மிக முக்கிய நிகழ்வுகளாக இருப்பதால், வெசாக் போயா தினமல்லாத ஏனைய நாட்களில் குறித்த விவகாரம் தொடர்பில் அவசரமாகவும் அவசியமாகவும் சுமூகமான தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுக்குமாறும், பைஸர் முஸ்தபா இருவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(ஐ. ஏ. காதிர் கான்)

402 ஆயுர்வேத பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கல்!

பயிற்சிகளை நிறைவுசெய்த ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகள் 402 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (28) கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டப்படிப்பு பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு மருத்துவ பீடம், கம்பஹா விக்ரமாராச்சி உள்நாட்டு மருத்துவ பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடம், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடங்களில் ஐந்தாண்டு கால மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவர்களுக்கே குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இவர்கள் 2017–2018 ஆம் கல்வியாண்டுகளில் கல்விப் பொதுத்தராதரப் பத்திரப் படிப்பை மேற்கொண்டவர்களாவர். தெரிவு செய்யப்பட்ட 402 பட்டதாரிகளில் 249 பேர் ஆயுர்வேதத் துறையையும், 109 பேர் சித்த மருத்துவத் துறையையும், 44 பேர் யுனானி மருத்துவத் துறையையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டதாரிகள் போதனா வைத்தியசாலைகள், ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் ஓராண்டு காலத்திற்கு உள்ளக பயிற்சியைப் பெறு உள்ளனர். விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் முதலாம் தர வைத்தியர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் இப்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

பயிற்சிக் காலத்தின் போது, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் இவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதுடன், பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் அதிகாரிகள், ஆயுர்வேத மருத்துவ சபையில் தங்களை ஆயுர்வேத வைத்தியர்களாகப் பதிவு செய்துகொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, வளர்ந்து வரும் ஒரு நாடாக இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்ல கடுமையான நிதி ஒழுக்கம் அவசியம் என வலியுறுத்தினார்.

‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க திறைசேரியினால் 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு இறுதியில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவுகளுக்காக வரலாற்றில் மிக அதிக தொகையான 2000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

உயர்கல்வி அமைச்சினால் வழங்கப்படும் அனைத்துப் பட்டதாரிகளையும் சுகாதார அமைச்சு நேரடியாக உள்வாங்கும் நிலை இனி இருக்காது என அமைச்சர் தெளிவுபடுத்தினார். தற்போது மேற்குலக மருத்துவப் பட்டதாரிகளுக்கும் வெற்றிடங்கள் குறைந்து வருவதால், எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட பொறிமுறையின் ஊடாகவே சேவையில் இணைய வேண்டிய சூழல் ஏற்படும் என அவர் எச்சரித்தார்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமந்தி ரணசிங்க, ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தீப்தி சுமனசேன மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையால் இரு முறை வைப்பிலிடப்பட்ட பணம்!

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்ட சில தரப்பினருக்கு தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட இரட்டைப் கொடுப்பனவுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து அமைச்சர் மேலும் விளக்குகையில்:

இலங்கை வங்கிகளுக்கு இடையிலான கொடுப்பனவு கோப்புகளை (Interbank Payment Files) பரிமாற்றம் செய்தபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒப்பந்தக்காரர்கள் உட்பட சில வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு ஒரே கொடுப்பனவு இரண்டு முறை வரவு வைக்கப்பட்டுள்ளது.

வங்கி முறைமையில் இவ்வாறான தவறான கொடுப்பனவுகள் இடம்பெறும் போது, அவற்றை மீண்டும் அறவிடுவதற்கு முறையான மற்றும் நிலையான பொறிமுறை ஒன்று ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அந்தப் பொறிமுறையின் ஊடாக, தவறுதலாக வைப்பிலிடப்பட்ட பணத்தை மீளப் பெறுவதற்கான சாதாரண நடவடிக்கைகளை வங்கிகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளன.

இந்தச் சம்பவத்தினால் அரசாங்கத்தின் கணக்குகளுக்கோ, நிறுவன ரீதியான கணக்குகளுக்கோ அல்லது தனிப்பட்ட நபர்களின் கணக்குகளுக்கோ எவ்வித நிதி இழப்பும் அல்லது பாதிப்பும் ஏற்படவில்லை என அமைச்சர் உறுதியளித்தார். வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கோ அல்லது வேறு கணக்கு உரிமையாளர்களுக்கோ இதனால் எவ்வித நஷ்டமும் ஏற்படாது எனவும், மேலதிகமாகச் சென்ற பணத்தை மீளப் பெறும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது இலங்கை வங்கி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து இந்த நிலைமையை சீர்செய்வதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

திறைசேரியைத் தொடர்ந்து தபால் திணைக்களத்திலும் கைவரிசை!

ஆஸ்திரேலிய ஏற்றுமதி நிதி முகவர் நிலையத்திற்கு வழங்கப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, திறைசேரியில் இருந்து காணாமல் போன விவகாரம் நாடளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மற்றுமொரு பாரிய நிதி மோசடி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க தபால் சேவைக்கு வழங்கப்பட வேண்டிய 625,000 அமெரிக்க டொலர் நிதி காணாமல் போயுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

இலங்கை தபால் திணைக்களத்தினால் அமெரிக்க தபால் சேவைக்கு செலுத்துவதற்காக விடுவிக்கப்பட்ட 625,000 டொலர் நிதி, உரிய தரப்பைச் சென்றடையவில்லை. தங்களுக்குரிய பணம் கிடைக்கப்பெறவில்லை என அமெரிக்க தபால் சேவை விடுத்த முறைப்பாட்டையடுத்தே இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.

இது தொடர்பில் தபால் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. குறித்த பணம் இரண்டு கட்டங்களாக விடுவிக்கப்பட்ட போதிலும், அவை எங்கே சென்றன என்பது குறித்து தீவிர தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது.

ஆஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய நிதியில் இடம்பெற்ற மோசடிக்கும், இந்தச் சம்பவத்திற்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.

“நிறுவன ரீதியாக இவ்வாறான சம்பவங்கள் அறிக்கையிடப்படும் போது, அவை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அனைத்து விடயங்களும் அமைச்சரவையில் விவாதிக்கப்படுவதில்லை. எனினும், இந்த மோசடிகளில் தொடர்புடைய அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்படும்,” என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்தார்.

அரசின் முக்கிய திணைக்களங்களில் இருந்து தொடர்ச்சியாக இவ்வாறு நிதி காணாமல் போவது மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தபால் துறைக்கு 326 புதிய அதிகாரிகள் நியமனம்!

அரச சேவையில் ஆட்சேர்ப்புகளின் போது எவ்வித அரசியல் தலையீடுகளோ அல்லது அமைச்சர்களின் பெயர்ப்பட்டியலோ சமர்ப்பிக்கப்படமாட்டாது என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலங்கைத் தபால் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் – III தர தபால் சேவை அதிகாரி பதவிக்காகத் தெரிவு செய்யப்பட்ட 326 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (28) முற்பகல் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தபால் திணைக்களத்தின் 600 வெற்றிடங்களுக்காக சுமார் 20,000 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டின் இறுதியில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில், தகுதிகளைப் பூர்த்தி செய்த 326 பேர் முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த அதிகாரிகள், மாகாண மட்டத்தில் உள்ள தபால் பயிற்சி நிறுவனங்களில் இரண்டு வார கால விசேட பயிற்சியினைப் பெற்ற பின்னர், அந்தந்த தபால் அலுவலகங்களில் பணிக்காக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

நியமனங்களை வழங்கி வைத்து உரையாற்றிய அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ;

தற்போதைய அரசாங்கம் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமனங்களை வழங்குகிறது. பகிரங்க விண்ணப்பம் கோரல், போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றன.

2025 மார்ச் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு அரச சேவையில் இணைந்தவர்களுக்கு நிலவிய ஓய்வூதிய நிச்சயமற்ற தன்மை நீக்கப்பட்டு, அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் அவர்களுக்கான ஓய்வூதிய உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பல வருடங்களாக PL (Primary Level) பிரிவின் கீழ் பணியாற்றி, பல்வேறு காரணங்களால் நிரந்தர நியமனம் கிடைக்காதிருந்த பத்தாயிரக்கணக்கான ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கான அமைச்சரவை யோசனை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.

மேலும் தபால் சேவையை நவீனமயமாக்குவதற்காக அரசாங்கம் பாரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதன்படி:

  • புதிய கட்டிடங்களுக்காக 600 மில்லியன் ரூபாயும், பழைய கட்டிடங்களைப் புனரமைக்க மேலதிகமாக 600 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்த 590 மில்லியன் ரூபாய் செலவில் 10 லொறிகள் மற்றும் 20 குரூ-கப் (Crew Cab) வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
  • திறன் அபிவிருத்திக்காக 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆண்டு தபால் திணைக்களம் 15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை நோக்கிப் பயணிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், புதிய அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, அமைச்சின் மேலதிக செயலாளர் தீபா லியனகே, தபால் மா அதிபர் ருவன் சத்குமார மற்றும் பிரதி தபால் மா அதிபர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

பதவி விலகும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். 

இன்று (28) பிற்பகல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

ஷம்மி சில்வா 2019 ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதுடன், அன்று முதல் இதுவரையான 7 ஆண்டு காலம் அப் பதவியில் நீடித்தார். 

கடந்த காலங்களில் அவருக்கும் கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தைப் பதவியிலிருந்து விலகுமாறு அரசாங்கத் தரப்பு அறிவுறுத்தியுள்ளதாக அண்மையில் ஊடகச் செய்திகள் வெளியாகியிருந்தன. 

தற்போது பெரும் பேசுபொருளாக உள்ள கிரிக்கெட் வீரர்களின் முகாமையாளர் ஒருவர் மற்றும் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்கள் சிலர் உள்ளிட்ட குழுவினர், அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினரைச் சந்தித்து தற்போதைய கிரிக்கெட் நிர்வாகம் குறித்துப் முறைப்பாடு அளித்திருந்த பின்னணியில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.