Sunday, March 22, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 79

18 ரயில் சேவைகள் இன்று ரத்து!

0

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் இன்று (20) இரவு சேவையில் ஈடுபடவிருந்த தபால் ரயில் உட்பட மேலும் 7 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இஹல கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இன்று காலை​ 7 ரயில் சேவைகளை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

இதனிடையே, மண்சரிவு காரணமாக கடிகமுவ மற்றும் பலான இடையேயான ரயில் பாதையை அடைவது கடினமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பின்வரும் ரயில்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 

ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் பின்வருமாறு: 

பிற்பகல் 03.35 கொழும்பு கோட்டை முதல் கண்டி 

மாலை 04.35 கொழும்பு கோட்டை முதல் மாத்தளை 

மாலை 05.15 கொழும்பு கோட்டை முதல் கண்டி 

மாலை 05.55 கொழும்பு கோட்டை முதல் கண்டி 

இரவு 08.30 கொழும்பு கோட்டை முதல் பதுளை இரவு தபால் ரயில் 

பிற்பகல் 03.25 கண்டி முதல் கொழும்பு கோட்டை 

மாலை 06.00 பதுளை முதல் கொழும்பு கோட்டை வரையிலான ரயில் உட்பட 18 சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையில் கிண்ணஸ் சாதனை!

0

தீபாவளியை முன்னிட்டு அயோத்தியின் சரயு நதிக்கரையில் 26 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு, கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு 26 லட்சம் விளக்குகள் ஏற்றும் நிகழ்வை உத்தரபிரதேச அரசு ஏற்பாடு செய்திருந்தது.

பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள், 10,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், இதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சரயு நதிக்கரையில் சுமார் 26 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.

நிகழ்வில் கலந்து கொண்ட உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விளக்கு ஏற்றி தீப உற்சவத்தை தொடங்கி வைத்தார்.

இதற்கு முன்னர் 25 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் உலக சாதனையாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு 26 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மேலும், தீப உற்சவத்தை முன்னிட்டு சரயு நதிக்கரையிலும் வண்ண ஒளி லேசர் நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கை நிகழ்வுகள் பார்ப்போரின் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் இருந்தது.

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

0

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இன்று (20) கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவு கூர்ந்து, அதர்மத்தை தோற்கடித்து அநீதியை வென்றது போன்று, அனைவரின் இதயங்களிலும் இருள் நீங்கி ஒளி பரவட்டும் என்ற பிரார்த்தனையை தாங்கி அவர்கள் மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த கொண்டாட்டம் தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்றதை குறிக்கிறது. தற்போது நம்முன்பாக உள்ள பாரிய சவாலைப் போன்றே நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் போதைப்பொருள் மற்றும் மறைந்துள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அனைவரினதும் வாழும் உரிமையை உறுதி செய்வதும், அதை ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துவதும் எங்கள் முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும் எனவும் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

அதேபோல், நமது பிரஜைகள் மட்டுமன்றி இந்த நாட்டில் வசிக்கும் மற்றும் வருகை தரும் அனைத்து மக்களின் உடல், மன, பௌதீக மற்றும் உணர்வுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பிற்காக அரசாங்கமென்ற வகையில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அனைத்து மதவாத மற்றும் இனவாத சக்திகளையும் தோற்கடித்து சமூக நீதியை நிலைநாட்டவும், அனைவரும் தங்கள் அனைத்து சிவில், அரசியல் மற்றும் கலாச்சார உரிமைகளையும் தடையின்றி அனுபவிக்கக்கூடிய, அனைவரின் சுதந்திரமும் கண்ணியமும் பாதுகாக்கப்படும் ஒரு பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்பவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்பதை இதன் மூலம் வலியுறுத்துகிறேன்.

தீபாவளி உண்மையிலேயே ஒரு ஒளிப் பண்டிகை. தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டையும் ஒளிரச் செய்யும் விளக்குகளுடன், ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ தொடர்பிலான இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற நமது ஒன்றிணைந்து செல்லும் பாதை இன்னும் ஒற்றுமையாக இருக்கட்டும் என்று பிரார்த்தித்து இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்து பக்தர்களுக்கும் அவர்களின் இதயங்களை பிரகாசமாக்கும் மகிழ்ச்சிகரமான தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி – இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

2025 ஒக்டோபர் 20 ஆம் திகதி

கல்முனையில் இடம்பெற்ற SLMC யின் முக்கிய கலந்துரையாடல்!

0

ஏ.எஸ்.எம். அர்ஹம் – நிருபர்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை பகுதியின் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (19) கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் அவரது கல்முனை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டார்.

நாட்டில் நிலவும் சமகால அரசியல் தொடர்பாகவும், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும், எதிர்வரக்கூடிய தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் கல்முனையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்தும் கருத்துரைக்கப்பட்டது.

நிகழ்வில் அதிதிகளாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், போராளிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

மரத்தை நேர் செய்த வெசேல் வண்டி!

0

(உடப்பு க.மகாதேவன்)

குருநாகல் – புத்தளம் பிரதான வீதியின் மகாகெலிய சந்திக்கு அருகில் கார் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து இன்று(20) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வாகனத்தை ஓட்டிச்சென்ற சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால், கார் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெய்வாதீனமாக குறித்த விபத்தில் பயணித்த எவருக்கும் உயிராபத்து எதுவும் இடம்பெறவில்லை.

இறால் பண்ணை நீர் தொட்டியில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

0

ஜூட் சமந்த

இறால் பண்ணையில் தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முந்தள் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து நேற்று 19 ஆம் தேதி முந்தல், புலிச்சகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இறந்தவர் வவுனியா, விஸ்வமடு பகுதியைச் சேர்ந்த வசந்தம் தர்ஷன் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முந்தல், புலிச்சகுளம் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரிந்து வந்த உயிரிழந்த குறித்த நபர் வலிப்பு நோயாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.. இறால் பண்ணையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது திடீரென தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் விழுந்துள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

பண்ணையில் இருந்த மற்றவர்கள் அவரை சிகிச்சைக்காக முந்தல் மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சிலாபம் பொது மருத்துவமனைக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளது.

முந்தல் போலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மாஓய நிரம்பி வழியும் அபாயம்!

0

ஜூட் சமந்த

நாட்டின் தொடர்ச்சியான மலை வீழ்ச்சியினால் மாஓய நிரம்பி வழியும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று 19 இரவு 11.30 க்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை 21 மதியம் 12.00 வரை செல்லுபடியாகும் என குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அபாயம் காரணமாக ஆலவ்வ, திவுலபிடி, மிரிகம, பன்னல, ஆகவ, மீகமுவ, கடான மற்றும் தங்கொடுவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட மாஓயா அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அதிக மலை வீழ்ச்சி காரணமாக தெதுறுஓய, ராஜாங்கனய மற்றும் அங்கமுவ வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 20 ஆம் தேதி காலை நிலவரப்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் தலா 04 அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வான் கதவுகள் வழியாக வினாடிக்கு 16,250 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்படும் என்றும் நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் தலா 06 அடி திறக்கப்பட்டுள்ளன, மேலும் வினாடிக்கு 6,996 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படும். அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் தலா 05 அடி திறக்கப்பட்டுள்ளன. அந்த வான் கதவுகள் வழியாக வினாடிக்கு 2,536 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீர் தேங்குவதால் கலா ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை காரணமாக கலா ஓயாவைச் சுற்றியுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மைப் பிரிவு மேலும் கூறுகிறது.

இதற்கிடையில், கலா ஓயாவில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், வில்பத்து தேசிய பூங்காவிற்குள் நுழைய உதவும் எலுவன்குளம் பாலத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை!

அக்கறையான் போலீஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சங்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை

கிளிநொச்சி, அக்கறையான் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்கந்தபுரம், ஈச்சங்குளம் பகுதியில் முற்பகை காரணமாக 24 வயது மதிக்கத்தக்க அதே பகுதியைச் சேர்ந்த கௌரிராஜன் கஜன் என்ற ஒரு பிள்ளையின் இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைவாக சடலத்தின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அக்கறையான் போலீசார் தெரிவித்துள்ளனர்

இச்சம்பவம் தொடர்பாக அக்கறையான் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உடப்பில் இடம்பெற்ற வாணி விழா!

0

(உடப்பு குறூப் நிருபர்)

உடப்பு இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் “வாணி விழா” நிகழ்வு உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபர் திரு.பி. சுகந்தன் தலைமையில் கடந்த (16) வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் சிலாபம் ஶ்ரீஜெயனிதா நகை மாளிகை உரிமையாளர் திரு.வி.சுதானந்தம், அருள் நாகநாதன் அறக்கட்டளை நிதியஸ்தாபகர் திரு.ஏ.நாகநாதன், உடப்பு இந்து ஆலய பரிபாலனசபைத் தலைவர் திரு.வி.கந்தசாமி, அத்துடன் உடப்பு முன்னாள் ஆலய பூசகர் எம். பரந்தாமன்(ஜோதிடர்), கலாபூஷணம் மற்றும் ஊடகவியலாளரான திரு.வி.வீரசொக்கன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் கடந்த காலங்களில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் தங்கப் பதக்கங்களும் துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் கலந்து கொண்ட பிரதம அதிதிகளுக்கும் பொன்னாடைகளும் போர்த்தி கௌரவமும் அளிக்கப்பட்டது.

அதிகரிக்கும் டெங்கு அபாயம்!

0

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக அதன் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார். 

இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 40,392 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், 22 பேர் உயிரிழந்தனர். 

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டெங்கு நுளம்புகள் பரவுவதைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பிரஷீலா சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.