Home Blog Page 85

“ஈரானின் ஆட்சியை மாற்ற இதுவே தருணம்” பஹ்லவி அதிரடி முழக்கம்!

ஈரானின் மறைந்த ஷா மன்னரின் மகனும், தற்பொழுது புலம்பெயர்ந்து வாழ்ந்து வருபவருமான பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி, அமெரிக்காவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் ஆற்றிய உரை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் தற்போதைய ஆட்சி மாற்றத்திற்கான தனது தயார் நிலையை அவர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற CPAC (Conservative Political Action Conference) 2026 மாநாட்டில் பஹ்லவி கலந்துகொண்டார். அங்கு ஆற்றிய உரையில், ஈரானின் தற்போதைய ஆட்சியாளர்களுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்த வேண்டாம் என அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் அவர் கோரிக்கை விடுத்தார். “ஈரானிய ஆட்சியாளர்களுடனான விவகாரத்தை இப்போதே முடித்துவிடுங்கள்” (Finish the job) என்று அவர் ஆக்ரோஷமாகப் பேசினார்.

ஈரானில் தற்போதைய இஸ்லாமியக் குடியரசு வீழ்ச்சியடைந்தால், அதிகாரத்தை உடனடியாகப் பொறுப்பேற்கத் தான் தயாராக இருப்பதாக பஹ்லவி அறிவித்தார். இதற்காக ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள நிபுணர்களைக் கொண்டு ஒரு “இடைக்கால ஆட்சி அமைப்பு” ஏற்கனவே உருவாக்கப்பட்டுத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

180 நாட்கள் நீடிக்கும் இந்த இடைக்கால ஆட்சிக்குப் பிறகு, நாட்டில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை அவர் பாராட்டியது இந்த உரையில் மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல்கள் ஆட்சியின் வீழ்ச்சியை வேகப்படுத்தும் என்றும், இதன் மூலம் உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானிய பாதுகாப்புப் படையினர் தற்போதைய ஆட்சிக்கான ஆதரவைக் கைவிட்டு மக்கள் பக்கம் சேர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பஹ்லவியின் இந்தப் பேச்சுக்கு ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரை வெளிநாட்டு சக்திகளின் “கைப்பாவை” என்று வர்ணித்துள்ள ஈரான் ஊடகங்கள், அவர் பயங்கரவாதத்தைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளன. அதேசமயம், ஈரானுக்குள்ளும் பல போராட்டக்காரர்கள் இவரை ஒரு மதச்சார்பற்ற தலைவராகப் பார்த்தாலும், வெளிநாட்டு ராணுவத் தலையீட்டை அவர் ஆதரிப்பது நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து என்று ஒரு தரப்பினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பஹ்லவியின் இந்தத் திடீர் அரசியல் நகர்வுகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஈரானின் எதிர்காலத்தை நோக்கிய இந்தப் போர் மேகங்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் சர்வதேச அரசியலில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகின்றன.

“நேபாளத்தில் நள்ளிரவு அதிரடி: முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது!

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி நேற்று கைது செய்யப்பட்டார். நேபாளத்தில் கடந்த ஆண்டு ஜென் இசட் இயக்கப் போராட்டங்கள் வெடித்தது. போராட்டத்தின்போது சுமார் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உட்பட சுமார் 76 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பான சம்பவங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் உள்ளிட்டோர் மீது குற்றவியல் பிரிவுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது.

இந்நிலையில் புதிதாக பிரதமராக பொறுப்பேற்ற பாலேந்திர ஷா தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில் விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமரும் சிபிஎன்-யூஎம்எல் கட்சியின் தலைவருமான சர்மா ஒலி பக்தபூர் மாவட்டத்தின் குண்டு பகுதியில் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். மேலும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் கதுன்ஜே பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் ட்ரோன் கிடங்கை தரைமட்டமாக்கியதா ஈரான்?

துபாயில் அமைந்துள்ள உக்ரைன் நாட்டின் ட்ரோன்-எதிர்ப்பு அமைப்புகளின் கிடங்கை தாக்கி அழித்ததாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீர் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்கப் படைகளின் மறைவிடமாக செயல்பட்ட உக்ரைன் கிடங்கை தாக்கியதாக ஈரான் கூறியுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) மற்றும் அதன் கூட்டு செயல்பாட்டு மையமான காத்தம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) மார்ச் 28, 2026 அன்று ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

அதில், துபாயில் அமெரிக்க இராணுவத் தளபதிகள் மற்றும் வீரர்கள் பதுங்கியிருந்த இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறியது. அதே நேரத்தில், அமெரிக்கப் படைகளுக்கு உதவும் நோக்கில் துபாயில் அமைக்கப்பட்டிருந்த உக்ரைனிய ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளின் (Anti-drone systems) கிடங்கை தாக்கி அழித்ததாகவும் தெரிவித்தது.

இந்தத் தாக்குதலின் போது அங்கு 21 உக்ரைனிய நிபுணர்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஈரான் தரப்பில் உரிமை கோரப்பட்டது.

இந் நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பை உக்ரைன் அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. இது குறித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹியோர்ஹி திகி மற்றும் உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது:

ஈரானின் இந்தச் செய்தி “முற்றிலும் பொயானது” என்றும், இது ஈரானிய மற்றும் ரஷ்ய அரசுகளின் திட்டமிடப்பட்ட தவறான தகவல் பரப்புதல் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அமீரகத்தில் உக்ரைனிய நிபுணர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

சர்வதேச செய்தி நிறுவனங்கள் ஈரானின் உரிமை கோரலைப் பதிவு செய்துள்ளனரே தவிர, உக்ரைன் கிடங்கு உண்மையில் அழிக்கப்பட்டதற்கான எவ்வித செயற்கைக்கோள் படங்களோ அல்லது தரைமட்ட ஆதாரங்களோ இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

ஈரான் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறினாலும், உக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத் தரப்பிலிருந்து இதற்கு எவ்வித அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீரிணையை கடக்க பாகிஸ்தான் ஈரானுடன் வரலாற்று ஒப்பந்தம்!

நவீன வரலாற்றிலேயே மிக மோசமான எரிசக்தி நெருக்கடியைச் சந்தித்து வரும் பாகிஸ்தான், தனது 20 கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியாகச் செலுத்த ஈரானுடன் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் கொடியுடன் கூடிய 20 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.

நாளொன்றுக்கு இரண்டு கப்பல்கள் வீதம் இந்த நீரிணையைக் கடக்கும் என்று இஷாக் தார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த முடிவை “அமைதிக்கான முன்னோடி” மற்றும் ஒரு “வரவேற்கத்தக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை” என்று அவர் பாராட்டியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஒருங்கிணைந்த தாக்குதல்களில் ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இந்தப் போரில் ஈரானில் சுமார் 2,000 பேரும், லெபனானில் 1,100-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.

உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையாகக் கருதப்படும் இந்த நீரிணை முடங்கியதால், கச்சா எண்ணெய் விலை 40 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது. சுமார் 2,000 கப்பல்கள் நீரிணையின் இருபுறமும் தவித்து வரும் நிலையில், உலக வர்த்தக அமைப்பு (WTO) இதனை கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பாதிப்பு என்று வர்ணித்துள்ளது.

ஈரானின் கட்டுப்பாடுகளும் கட்டணமும்:
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தற்போது இந்த நீரிணையை ஒரு சோதனைச் சாவடியாக மாற்றியுள்ளது. இந்த வழியாகச் செல்லும் கப்பல்கள் தங்களின் சரக்கு விவரங்கள் மற்றும் குழுவினர் பட்டியலைச் சமர்ப்பித்து அனுமதி குறியீடு பெற வேண்டும். சில கப்பல்கள் இந்த நீரிணையைக் கடக்க தலா 2 மில்லியன் டாலர் வரை சீன யுவான் (Yuan) மதிப்பில் கட்டணமாகச் செலுத்தியுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே மலேசியக் கப்பல்களுக்கும் இத்தகைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் தீவிர ராஜதந்திர முயற்சியின் பலனாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் இது குறித்துப் பேசியுள்ளார். அதே சமயம், ஹார்முஸ் நீரிணை மீதான தனது அதிகாரத்தை சர்வதேச சமூகம் முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.

தற்போது ஈரான் மின் நிலையங்கள் மீதான தாக்குதலை அமெரிக்கா ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்த அவகாசம் சனிக்கிழமையுடன் முடிவடையும் நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடரும் என்று அறிவித்துள்ளது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கியூ.ஆர் (QR) முறையில் அறிமுகமாகும் புதிய அப்டேட்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது வாகனங்களை மொத்தமாகப் பதிவு செய்யக்கூடிய புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால இது குறித்துத் தெரிவிக்கையில்,

பெரிய அளவிலான வாகனங்களைக் கொண்ட நிறுவனங்கள், ஒவ்வொரு வாகனத்தையும் தனித்தனியாகப் பதிவு செய்வதற்குப் பதிலாக, ஒரே குழுவாகப் பதிவு செய்யும் வசதியை அமைச்சகம் உருவாக்கி வருகிறது.

இதுவரை சுமார் 6 மில்லியன் பயனாளர்கள் இந்த அமைப்பில் பதிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் 15 ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 2 மில்லியன் புதிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுத்தளத்தில் உள்ள தகவல்களுடன் முரண்பாடுகள் காணப்படுவதால், சுமார் 200,000 பயனாளர்கள் சில சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திர எண்களை வாசிப்பதில் ஏற்படும் எழுத்துப் பிழைகளே (உதாரணமாக: ‘0’ என்பதற்குப் பதில் ‘O’) இதற்கு முக்கியக் காரணமாகும். இவை தற்போது உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகின்றன.

ஆரம்பக் கட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டுள்ளதால், தற்போது பயனாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்த போதிலும் கட்டமைப்பு ஸ்திரமாக உள்ளதாகச் செயலாளர் உறுதியளித்தார்.

வாகனங்கள் அல்லாத ஏனைய அத்தியாவசியத் துறைகளுக்கும் இந்த கியூ.ஆர். முறைமை விரிவுபடுத்தப்படவுள்ளது. விவசாய உபகரணங்கள் மற்றும் கடற்றொழில் படகுகளை இந்த அமைப்பில் இணைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது அந்தந்தத் துறையினருக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் நிவாரணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கியூ.ஆர். குறியீடுகளைத் தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மற்றவர்களின் கியூ.ஆர். குறியீடுகளைச் சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்த 153 கைபேசி இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மோசடிகள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 79 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதற்காக எரிபொருளைப் பதுக்கி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பதிவு தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக 1919 என்ற அவசர இலக்கத்திற்கு மேலதிகமாக, ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் ஒரு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் தமது பகுதிகளில் உள்ள இந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கைது!

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கெப் ரக வாகனமொன்றின் சேஸி (Chassis) இலக்கத்தைத் திருத்தி, அதனை போலியான முறையில் பதிவு செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள கமல் அமரசிங்க, இன்று (28) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அமெரிக்காவில் ட்ரம்பிற்கு எதிராக 3,000 இடங்களில் போராட்டங்கள்!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ஈரானுடனான போர்ச் சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்று அமெரிக்கா முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்களை நடத்த “No Kings” என்ற மக்கள் இயக்கம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே 2025 ஜூன் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வாரமும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்பின் கடுமையான குடிவரவு கொள்கைகள் மற்றும் ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் ஆகியவற்றை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வொஷிங்டன் டி.சி. மினியாபோலிஸ், சிகாகோ மற்றும் சென் பிரான்சிஸ்கோ போன்ற முக்கிய நகரங்களில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 6,46,000 மக்கள் தொகையைக் கொண்ட சிறிய மாநிலமான வெர்மான்ட்டில் மாத்திரம் 40க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்ட தினங்களில் ஒன்றாக இந்தச் சனிக்கிழமை அமையும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

உலகில் அதிகம் பாதிக்கப்படும் 2-வது நாடாக இலங்கை!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நெருக்கடி நிலைமையால் பொருட்களின் விலை அதிகரிப்பினால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக பிபிசி வெரிஃபை (BBC Verify) ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வழமையாக நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கும் ஹோர்முஸ் நீரிணை வழியிலான போக்குவரத்து, தற்போது ஒரு சில கப்பல்களாகக் குறைந்துள்ளதாக பிபிசி வெரிஃபை சுட்டிக்காட்டுகிறது.

இதன் விளைவாக, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்புடன், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் வேகமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய விவசாயத் தேவைகளுக்கான யூரியா, பொட்டாஷியம், அமோனியா மற்றும் பொஸ்பரேட் போன்ற உரத் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கு (1/3) பொதுவாக இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

வட அரைக்கோளத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் முக்கிய பயிர்ச்செய்கை காலங்களாக இருப்பதால், தற்போதைய உரத் தட்டுப்பாடு ஆண்டின் பிற்பகுதியில் பயிர் விளைச்சல் குறைவதற்கு நேரடியாக வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஜெர்மனியின் கீல் ஆராய்ச்சி நிறுவனம்(Kiel Research Institute), ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலகளாவிய கோதுமை விலை 4.2% ஆகவும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் 5.2% ஆகவும் உயரக்கூடும் எனக் குறிப்பிடுகிறது.

கீல் நிறுவனத்தின் தரவுகளின்படி, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் பொருட்களின் விலை அதிகம் உயரக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.

உணவுப் பொருட்களின் ஒட்டுமொத்த விலை அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஜாம்பியா (30.7%), இலங்கை (15.3%), தாய்வான் (12.5%) மற்றும் பாகிஸ்தான் (11.4%) ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஈரான் மோதலிலிருந்து கத்தார் விலகல்:

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றத்திலிருந்து கத்தார் அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை, சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

​கடந்த மார்ச் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில், கத்தாரின் முக்கிய எரிசக்தி மையமான ‘ராஸ் லப்பான்’ மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களை கத்தார் ராணுவம் வெற்றிகரமாக முறியடித்த போதிலும், நாட்டின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியில் 17% பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

​இந்தத் தாக்குதலால் சுமார் $20 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்பில் உள்ள பலவீனத்தை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

விலகலுக்கான காரணம் என்ன?

​அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும், ஈரான் உடனான நேரடி மோதலைத் தவிர்க்க கத்தார் முடிவு செய்துள்ளது.

  • ​உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலை கத்தாரும் ஈரானும் பகிர்ந்து கொள்கின்றன. ஈரானுடன் பகைத்துக் கொள்வது கத்தாரின் பொருளாதார அடித்தளத்தையே பாதிக்கும்.
  • போரினால் ஏற்படும் பேரழிவை விட, பிராந்திய நாடுகளுடன் இணைந்து வாழ்வதே சிறந்தது என கத்தார் கருதுகிறது.
  • ​ஆயுத மோதல்களை விட பேச்சுவார்த்தை மூலமே நிரந்தரத் தீர்வு காண முடியும் என கத்தார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

வளைகுடா அரசியலில் மாற்றம்

​கத்தாரின் இந்தத் திடீர் முடிவு, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போன்ற அண்டை நாடுகளுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கக் கூட்டணியில் பிளவு ஏற்படுவதை இது காட்டுவதுடன், மற்ற நாடுகளும் தங்கள் பொருளாதார நலனைக் கருதி ஈரானுடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

​மொத்தத்தில், ஒரு போரைத் தொடர்வதை விட, தனது நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து கத்தார் எடுத்துள்ள இந்த முடிவு, மத்திய கிழக்கு அரசியலில் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

பிஸ்கட் மற்றும் இனிப்பு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பு?

இலங்கையில் பிஸ்கட், ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் உள்ளிட்ட இனிப்பு பண்டங்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிப்பதில்லை என இலங்கை இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் (Lanka Confectionery Manufacturers Association) உறுதியளித்துள்ளது.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கும், இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (26) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய தாக்கம் மற்றும் உள்நாட்டுத் தொழிற்றுறையில் அதன் பாதிப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

தற்போதைய பொருளாதாரச் சூழலில் நுகர்வோரால் மேலதிக விலை உயர்வைத் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். உள்நாட்டு பிஸ்கட் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் அதேவேளை, நுகர்வோர் பாதிக்கப்படுவதை ஆகக்குறைந்த மட்டத்தில் பேணுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்தார்.

அத்துடன், கடினமான காலப்பகுதியிலும் நுகர்வோர் நலன் கருதி செயற்படுமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர், உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் தலையிடத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி. சூரியகுமார, பின்வரும் முக்கிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்:

  • இலங்கையின் இனிப்புப் பண்டத் தேவையானது 95% உள்நாட்டு உற்பத்தியின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.
  • இத்தொழிற்றுறையில் சுமார் 50,000 பேர் நேரடியாகவும், 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
  • கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொழில்நுட்ப முதலீடுகள் இத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மின்சார மற்றும் எரிவாயு கட்டண உயர்வு மற்றும் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை இத்துறை எதிர்கொள்ளும் பிரதான சவால்களாக உள்ளன. குறிப்பாக, கரோனா காலத்திற்குப் பிறகு பெரிய அளவில் விலையேற்றம் செய்யப்படாமல், மிகக் குறைந்த இலாபத்துடனேயே இத்தொழிற்றுறை இயங்கி வருவதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இருப்பினும், சித்திரைப் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குச் சுமையை ஏற்படுத்தாத வகையில் மே மாதம் வரை விலையை அதிகரிப்பதில்லை என சங்கம் ஒருமனதாகத் தீர்மானித்துள்ளது. மே மாதத்திற்குப் பின்னரும் எரிவாயு, மின்சாரம் மற்றும் மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்தால் மட்டுமே விலை திருத்தம் குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், துறைமுகத்தில் மூலப்பொருட்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் கப்பல் கட்டண உயர்வு போன்ற பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிய உற்பத்தியாளர்கள், புத்தாண்டு கால விநியோக நடவடிக்கைகளுக்காகத் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.