ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பொன்று கட்சியின் தேசியத்தலைவர் ரவுப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க ஞாயிற்றுக்கிழமை (5) முஸ்லிம் காங்கிரஸ், தலைமையகமான தாருஸ்ஸலாமில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஸாம்தீனின் தலைமையில், கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் சுஹைர் அத்தாசின் வழிநடத்தலில் இளைஞர் காங்கிரஸ் புதிய பரிமாணம் பெற்றுள்ளது.
நிகழ்வின் முக்கிய அதிதியாக கட்சியின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் சிறப்பு பேச்சாளராக புத்தளம் மாவட்ட முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் கலந்து சிறப்பித்தனர்.
கல்வியின் மூலம் சமுதாயத்தை வலுப்படுத்துதல் வேலைவாய்ப்புகளை பெற வழிகாட்டுதல், சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறையை மேம்படுத்துதல், இளைஞர்களை ஆபத்தான போதைப்பொருள்களிலிருந்து பாதுகாத்தல் போன்ற இன்னோரன்ன வேலைத் திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்த இவ்வமைப்பு திடசங்கட்பம் பூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மர்ஹூம்களான AL அன்பஸ் மற்றும் AHM அப்ஸிர் ஞாபகார்த்தமாக நடைபெற்ற டொமினோ பிரிமியர் லீக் கரப்பந்தாட்ட சுற்றுத் தொடர் புத்தளம் எருக்கலம்பிட்டியில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
கடந்த 4,5 மற்றும் 6 திகதிகளில் புத்தளம் எருக்கலம்பிட்டி டொமினோ பார்க்கில் மின்னொளியில் மிகவும் பரபரப்பாக இடம்பெற்ற லீக் தொடரில் 6 அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.
Domino evergreen, Domino Stone, Domino Stars, Domino Titans, Domino Rock, Domino Power ஆகிய அணிகள் குறித்த சுற்றுத்தொடரில் பங்குகொண்டு தொடரை சுவாரஷ்யமாக்கியது.
மிகவும் விறுவிறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இடம்பெற்ற லீக் தொடரில் சமர்செய்த அணிகளில் Domino Stars, Domino titans, Domino Rock, Domino Power ஆகிய நான்கு அணிகள் ப்லே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்ற ப்லே ஆப் சுற்றில் அபாரமாக விளையாடிய Domino Stars மற்றும் Domino Power ஆகிய அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
பார்வையாளர்களினதும், வீரர்களினதும் மிகுந்த ஆரவாரத்துக்கு மத்தியில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் Domino Stars அணி Domino Power அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
தொடரில் பங்குகொண்ட சகல போட்டிகளிலும் Domino Stars அணி வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டியில் மிகவும் அபாரமாக விளையாடி கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டனர்.
தொடரில் சாம்பியன் ஆன Domino Stars அணிக்கு வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டதுடன், இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட Domino Power அணிக்கும் வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டன.
சாம்பியன் கிண்ணத்திற்கு தொழிலதிபர் AGM அஸாருதீன் அனுசரணை வழங்கி இருந்ததுடன், பணப்பரிசினை தொழிலதிபர் HM இக்ராம் வழங்கிவைத்தார்.
அதே போல் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட அணிக்கான கிண்ணத்திற்கு அல்ஹிக்மா விளையாட்டு கழகம் அனுசரணை வழங்கி இருந்ததுடன், அவர்களுக்கான பணப்பரிசினை தொழிலதிபர் AGM அஸாருதீன் வழங்கிவைத்தார்.
வளர்ந்து வரும் இளம் வீரருக்கான பணப்பரிசினை Domino Stars அணியின் S ருஷ்தி பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான பணப்பரிசை தொழிலதிபர்களான AGM அஸாருதீன் மற்றும் JM சப்ரீன் ஆகியோர் இணைந்து வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
உத்தம நபிகளார் முகம்மத் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை சிறப்பாக்கி வைக்கும் மீலாதுன் நபி விழா நிகழ்வு கடந்த 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய நூர்தீன் மஷூர் திறந்த வெளியரங்கில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
நாகவில்லு ஜம்மிய்யதுல் உலமாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வை, அதன் தலைவர் அஷ் ஷேக் அபுல்ஹுதா ஐனுல்லாஹ் (நுழாரி) அவர்கள் தலைமை தாங்கி நடத்திவைத்தார்.
குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக ஜம்மிய்யதுல் உலமாவின் புத்தளக் கிளை தலைவர் அஷ் ஷேக், அல்ஹாபிழ் MBM ஜிப்நாஸ் (மிஸ்பாஹி) கலந்து சிறப்பித்தார்.
பல வருடங்களுக்குப் பின்னர் புத்தளம் எருக்கலம்பிட்டியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற மீலாதுன் நபி விழா நிகழ்வில், புத்தளம் எருக்கலம்பிட்டியில் உள்ள 8 குர்ஆன் மத்ரஸாக்களை சேர்ந்த சுமார் 40 மாணவர்களின் நிகழ்ச்சிகள் மேடையை அலங்கரித்ததுடன், அவர்களுக்கான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
நிகழ்வினை மேலும் சுவாரஷ்யமாக்கும் வகையில் பக்கீர் பாவாவின் இஸ்லாமிய கீதங்களும் அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்தன.
நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், புத்தளம் எருக்கலம்பிட்டியில் உள்ள 8 குர்ஆன் மத்ரஸாக்களுக்கும் விஷேட நினைவுச்சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் புத்தளம் எருக்கலம்பிட்டி நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், மத்ரஸா அதிபர்கள், உலமாக்கள், நாகவில்லு ஜம்மிய்யதுல் உலமாவின் உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
வெறுமனே குறைகளை சொல்லி திரியாமல் இருக்கும் குறைகளை நிறைகளாக்க களத்தில் இறங்கினார் புத்தளம் மாநகரசபை உறுப்பினர் எம்.எம்.எம் முர்ஷித்.
விடுமுறை நாளான நேற்று (06.10.2025) புத்தளம் மாநகர சபைக்குற்பட்ட ஐந்தாம் வட்டாரத்தில் உள்ள ஒரு பகுதி வடிகாண்கள் புத்தளம் மாநகரசபை உறுப்பினர் எம்.எம்.எம் முர்ஷித் அவர்களின் கள முயற்சியில் முழுமையாக துப்பரவு செய்யப்பட்டது.
மலை காலம் ஆரம்பித்துள்ளமையால் குப்பை கூளங்கள் தேங்கி இருக்கும் வடிகான்களை இணங்கண்டு தனது கரங்களால் துப்பரவு செய்த காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வடிகான்களின் கழிவுப்பொருட்கள் மற்றும் ஏனைய குப்பை கூளங்கள் அதிகம் தேங்கி இருந்தமையாலும், அதன் கழிவுகள் பல நாட்கள் சுத்தம் செய்யப்படாமையாலும் நேரடியாக காலத்தில் குறித்து துப்பரவு பணிகளை மேற்கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் 5ம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற புத்தளம் மாநகரசபை உறுப்பினர் எம்.எம்.எம் முர்ஷித் அவர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் களத்தில் நின்ற உறுப்பினருக்கு, அவருடைய ஆதரவாளர்களும் அப்பகுதி மக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு, உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பானது, அதன் சொந்த உடல் உறுப்புகளைத் தாக்காமல் எப்படி கட்டுக்குள் வைக்கிறது என்ற ஆராய்ச்சிக்காக மேரி இ. பிரன்கோவ் (Mary E. Brunkow), பிரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell) மற்றும் ஷிமோன் சகாகுச்சி (Shimon Sakaguchi) என்ற 3 மருத்துவ வல்லுநர்களுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை வேதியியல், அக்டோபர் 8 அன்று இலக்கியம், அக்டோபர் 9 அன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. நோபல் பரிசு பெறுவோர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் இலங்கை மதிப்பில் ரூ.30.41 கோடி தரப்படுகிறது.
ஆங்கில மொழித் தினப் போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு
அகில இலங்கை ஆங்கில மொழித் தின சொல்வதெழுதுதல் ( Dictation ) போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவி லாபிர் அலி பாத்திமா பஹ்மா மாகாண மட்டப் போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.
கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவி லாபிர் அலி பாத்திமா பஹ்மா ஆங்கில மொழித் தின சொல்வதெழுதுதல் ( Dictation ) போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்க்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தேசிய மட்டத்தில் முதலிடத்தை பெற்று பாடசாலைக்கும் தம் பிரதேசத்திற்கும் பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதற்காக அயராது உழைத்து மாணவியை போட்டி நிகழ்ச்சிக்குத் தயார் செய்த பாடசாலையின் சகல ஆங்கில மொழிப் பாட ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு இதற்கான வழிகாட்டல்களை வழங்கிய பாடசாலை அதிபர் யு.எம்.எம். அமீருக்கும் ( SLPS I ) பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஒரே வருடத்தில் இரண்டு தேசிய வெற்றிகளைப் பெற்று புளிச்சாக்குளம் உமர் பாறுக் மகா வித்தியாலயம் சாதனை!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
2025 இவ் ஆண்டில், புளிச்சாக்குளம் உமர் பாறுக் மகா வித்தியாலய மாணவர்கள் இரண்டு தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று, பாடசாலையின் நற்பெயரை நாடளாவிய ரீதியில் பிரகாசமாக்கியுள்ளனர்.
அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டியில் பாடசாலை மாணவிகள் இருவர் ஒரே வருடத்தில் இரண்டு தேசிய வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கு கெளரவத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
திறனாய்வுப் போட்டியில் ஜீ. தரண்யா முதலாம் இடத்தையும், இலக்கிய விமர்சனம் போட்டியில் வீ. நதீஹாஷினி மூன்றாம் இடத்தையும் பெற்று சாதித்துள்ளனர்.
இவ்விரு மாணவிகளின் வெற்றிக்குப் பின்னால் இருந்து சாதனைக்கு வழிகாட்டியாக இருந்த திருமதி ஏ. சுலைஹா ஆசிரியையின் பங்கு பாராட்டப்படத்தக்கது என பாடசாலையின் அதிபர் எம்.யூ.எம். சாஜஹான் குறிப்பிட்டார்.
இந்த சாதனைகள் பாடசாலையின் கல்வித் தரத்தையும், கலாச்சார வளர்ச்சியையும் பிரதிபலிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பாடசாலை சமூகத்திற்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
13ஆவது சர்வதேச குஜுர்யு கராத்தே மற்றும் சோடகன் கராத்தே (GUJURYU KARATE & SHOTOKHAN KARATE) ஓபன் சாம்பியன் போட்டிகள் கடந்த 04.10.2025 சனிக்கிழமை குளியாப்பிட்டியில் உள்ள வயம்ப பல்கலைக்கழத்தில் இடம்பெற்றது.
விளையாட்டு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கராத்தே சம்மேளனத்தின் போட்டியாளர்கள் பங்குபற்றிய குறித்த போட்டிகளை I.G.K.A. இலங்கை கிளை நடாத்தியது.
மேலும் குறித்த போட்டிகளில் இலங்கை, இந்தியா, மலேசிய மற்றும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கராத்தே வீரர்களும் இதில் கலந்துகொண்டனர்.
அந்த வகையில் 12 வயது பிரிவின் கீழ் இடம்பெற்ற “காடா” பிரிவில் புத்தளம் எருக்கலம்பிட்டியை சேர்ந்த ரைசுதீன் – பர்வீன் தம்பதிகளின் இளம் வாரிசு “ரைசுதீன் ஷெஷாட் அஹமட்” இரண்டாம் இடத்தினை பெற்று நாட்டிற்கும், பாடசாலைக்கும், ஊருக்கும் கெளரவத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.
அதேபோல் 12 வயது பிரிவின் கீழ் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியான “கொமிடி” பிரிவிலும் பங்குபற்றி இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
எருக்கலம்பிட்டி இளம் வாரிசான “ரைசுதீன் ஷெஷாட் அஹமட்” மதுரங்குளி மெர்சி லங்கா தனியார் பாடசாலையில் கல்வி பயின்று வருவதுடன், குறித்த போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற சகல வழிகளிலும் பெரும் துணையாக இருந்திருக்கிறார் கராத்தே பயிற்சியாளர் பைரோஸ் (பிளக் பெல்ட்).
நடைபெற்ற சர்வதேச குஜுர்யு கராத்தே மற்றும் சோடகன் கராத்தே போட்டிகளில் பங்குபற்றி அதீத திறமையை வெளிப்படுத்தியதுடன், இரண்டு போட்டிகளிலும் மிகவும் சிறப்பாக பங்குபற்றி இரண்டாம் இடங்களை பெற்றுக்கொண்ட “ரைசுதீன் ஷெஷாட் அஹமட்” என்ற இளம் சிங்கத்திற்கு ஊர் மக்கள், பாடசாலை சமூகம் என பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், பயிற்சியாளர் பைரோஸ் அவர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல் எமது ஊடகம் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
யானை-மனித மோதலால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தப் பிரச்சினைக்கு தற்காலிகமான தீர்வை தாண்டி, நிரந்தர தீர்வை வழங்க அரசாங்கம் பாடுபடுவதாக பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
புத்தளம் மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
காட்டு யானைகள் மற்றும் யானைகளுக்கு சிறந்த சூழலை உருவாக்கி அவற்றுக்கான சூழலை வளப்படுத்தும் தேசிய திட்டம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்க குறித்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், புத்தளம்-தப்போவ குளக்கரையில் எதிர்வரும் 10 ஆம் திகதி குறித்த திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நிகழ்வில் பேசிய சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி:
கடந்த காலங்களில், யானை-மனித நடவடிக்கைகளால் சுமார் 380 காட்டு யானைகளையும் 150 மனித உயிர்களையும் இழந்துள்ளோம். சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் மிகப்பெரியது.
இந்த மனித-யானை பிரச்சினைக்கு முக்கிய காரணம் இரு தரப்பினரும் பொது நிலங்களைப் பயன்படுத்துவதும், ஒழுங்கமைக்கப்படாத திட்டங்களை செயல்படுத்துவதும்தான் என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
கிராமங்களுக்குள் படையெடுத்த காட்டு யானைகளை மீண்டும் காடுகளுக்குள் விரட்ட, அதற்கு முன் செய்ய வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.
முதலில் செய்ய வேண்டியது, காட்டு யானைகளை மீள்குடியேற்றுவதற்கு ஏற்ற வனப்பகுதியை அடையாளம் காண்பது. பின்னர், அந்த பகுதி அவற்றை நட்புறவாக மாற்றும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும்.
ஒரு காட்டு யானைக்கு பொதுவாக ஒரு நாளைக்கு சுமார் 150 கிலோகிராம் உணவு மற்றும் சுமார் 30 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. எனவே, காட்டு யானைகளை காடுகளில் மீள்குடியேற்றுவதற்கு முன், அந்தப் பகுதிகளில் உள்ள நீர் தொட்டிகளை புதுப்பிக்க வேண்டும்.
மேலும், தற்போதுள்ள காடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சேறுகள் மற்றும் பிற ஆக்கிரமிப்பு தாவரங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்ற வேண்டும்.
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை தப்போவாவில் இதுதான் ஆரம்பிக்கப்பட்ட இருக்கிறது. இங்கு, வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு துறைகளுக்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட காடுகளில் அமைந்துள்ள பல பாழடைந்த குளங்களின் புனரமைப்பு தொடங்கும்.
இந்தத் திட்டத்தில் 370 கிலோமீட்டர் யானை வேலியின் பாழடைந்த பகுதிகளைக் கண்டறிந்து சரிசெய்வதும் அடங்கும்.
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த தேசிய திட்டத்திற்கு காவல்துறை, முப்படைகள், சிவில் பாதுகாப்புப் படைகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவைப் பெற நாங்கள் நம்புகிறோம் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அக்டோபர் 10 முதல் 12 வரை புத்தளம் தப்போவ குளக்கரையில் தொடங்கப்படும் சுற்றுச்சூழல் வளப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதலைக் குறைக்க முடியும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜனக, அஜித் கிஹான், முகமது பைசல், புத்தளம் மாவட்ட செயலாளர் ஒய்.ஐ.எம். சில்வா, புத்தளம் மாவட்ட வனவிலங்கு உதவி இயக்குநர் எரந்த கமகே, புத்தளம் மாவட்ட வன அலுவலர் கமல் தென்னத்தோன் மற்றும் பிற அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.