Home Blog Page 90

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன்; உதவுவதற்கு ஈரான் தயார்!

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார். 

இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை எரிபொருள் அல்லது வேறு ஏதேனும் அத்தியாவசியப் பொருட்களைக் கோரினால், அவற்றை வழங்க ஈரான் தயாராக உள்ளது என்றார். ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது நட்பு நாடுகளுக்காக மூடவில்லை என்பதையும் அவர் இங்கு வலியுறுத்தினார். 

இலங்கை இக்கட்டான நிலைக்கு உள்ளாவதை ஈரான் ஒருபோதும் விரும்பாது என்றும், ஈரான் தேசத்திற்கு இலங்கை மிகவும் மரியாதைக்குரிய நாடு என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

அண்மையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் ‘IRIS Dena’ போர்க்கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கு, ஈரான் கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே இலங்கை நடவடிக்கை எடுத்திருந்தது. இலங்கையின் அந்த உதவியை இச்சந்தர்ப்பத்தில் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். 

இதேவேளை, ஈரானில் உள்ள இலங்கையர்கள் மீண்டும் தாயகம் திரும்ப விரும்பினால், அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க ஈரான் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தூதுவர் மேலும் குறிப்பிட்டார்.

90 சதவீதமான தனியார் பேருந்து சேவைகள் இன்றும் முடக்கம்!

இன்றைய தினம் (23) பேருந்து சேவைகளிலிருந்து விலகியமை ஒரு வேலைநிறுத்தப் போராட்டம் அல்ல என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், பழைய கட்டணத்தின் கீழ் பேருந்துகளை இயக்க முடியாது என்பதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் நேற்று முதல் புதிய கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்தியிருக்க முடியும் என்றும், அவ்வாறு செய்யாததே இந்த நிலைக்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய தினம் 90 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகள் சேவையிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்த அவர், எவருக்கும் அழுத்தம் கொடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், ஒரு சில பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். எவ்வாறாயினும், ‘சிசு செரிய’ பாடசாலை பேருந்து சேவைகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டதாக அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த கெமுனு விஜேரத்ன:

“இதனை ஒரு வேலைநிறுத்தப் போராட்டமாக நாம் கூறவில்லை. நட்டத்தை ஈடுகட்ட முடியாததால் சேவையிலிருந்து விலகியுள்ளோம். குறுகிய தூர சேவைகளுக்கு 5,000 முதல் 6,000 ரூபா வரையிலும், நீண்ட தூர சேவைகளுக்கு 15,000 முதல் 20,000 ரூபா வரையிலும் நட்டம் ஏற்படுகிறது.

எவரும் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய மாட்டார்கள். இது ஒரு தொழில். கடந்த காலங்களில் எரிபொருள் விலை உயர்ந்தவுடன் அதிகாரிகள் எம்முடன் கலந்துரையாடினர். ஆனால் இம்முறை எவ்வித பேச்சுவார்த்தையும் இன்றி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் அமைச்சும் செயற்பட்டுள்ளன. எம்முடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு ஒரு சிறிய சமிக்ஞையை வழங்கியுள்ளோம்.”

மீண்டும் கட்டணம் – கொழும்பு மாநகர சபையின் முக்கிய அறிவிப்பு!

கொழும்பில் வாகன நிறுத்துமிடக் கட்டண அறவீடு தொடர்பாக

கொழும்பு மாநகர சபையால் தீர்மானிக்கப்பட்டபடி, எரிபொருள் நிலையங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் வாகன நிறுத்துமிடங்களில் ஏற்படும் பாதிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புவதற்கு வந்த மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக, வாகன நிறுத்துமிடக் கட்டணம் அறவீடு 18.03.2026 முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டது.

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறை மற்றும் வாகன இலக்கம் (ஒற்றை/இரட்டை) ஆகியவற்றின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படுவதால், எரிபொருள் நிலையங்களுக்கு அருகிலுள்ள வாகன வரிசைகள் குறைவடைந்துள்ளதாகக் காணப்படுகிறது.

எனவே, கொழும்பு மாநகர சபை, நிதி மீதான நிலைக்குழுவில், வாகன நிறுத்துமிடங்களின் முகாமைத்துவ கட்டணம் அறவீட்டை 23.03.2026 அன்று காலை 6.00 மணி முதல் வழக்கம் போல் மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேக்கரி தொழில் வீழ்ச்சியடையும் அபாயம்!

ஜூட் சமந்த

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டு தேங்காய் எண்ணெயின் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பேக்கரி உற்பத்தியாளர்களின் தகவல்படி, ஒரு கிலோகிராம் 850 ரூபாயாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயின் (RDB) விலை தற்போது 1,130 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் உள்நாட்டு தேங்காய் எண்ணெயின் விலை 1,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

தேங்காய் எண்ணெய் மட்டுமின்றி, பாம் ஆயில் (Palm Oil) உள்ளிட்ட இதர சமையல் எண்ணெய் வகைகளின் விலையும் கிலோவிற்கு 700 ரூபாயிலிருந்து 960 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. விலை உயர்வு ஒருபுறமிருக்க, சந்தையில் இந்த எண்ணெய் வகைகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், உள்நாட்டு எண்ணெய் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கிலோகிராம் கள்ளுத் தேங்காய் (Katu Pol) 135 ரூபாயிலிருந்து 175 ரூபாயாக அதிகரித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை உயர்வு காரணமாக, எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பேக்கரி தொழில் முற்றாகச் சரிவடையும் அபாயம் உள்ளதாக உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர். மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் சந்தையில் நிலவும் தட்டுப்பாடு காரணமாகத் தொழிலை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை பகைத்துக்கொள்ள இலங்கை அரசாங்கம் அஞ்சுகிறது!

பாராளுமன்றத்தில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் காட்டம்

வியாழக்கிழமை(19), இடம்பெற்ற மத்திய கிழக்கு போர் நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் கண்டி மாவட்ட எம்பி, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியதாவது,

தற்போது ஈரான் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த துரதிர்ஷ்டவசமான போர் உலகளாவியரீதியில் சிக்கல்களை உருவாக்கியுள்ளது. இதில் முக்கியமான ஒன்று, உலகம் எதிர்கொண்டுள்ள எண்ணெய் தட்டுப்பாடு ஆகும். ஒருபுறம் ‘அப்பார்த்தைட்’ (இன ஒதுக்கல்) நாடு என்று அழைக்கப்படும் இஸ்ரேல், பாலஸ்தீனியர்களுக்கு எதிராகக் கடுமையான இனப்படுகொலையில் ஈடுபட்டு வருகிறபோது. ஈரான் இனப்படுகொலை செய்ததா? ஈரானில் அப்பார்த்தைட் ஆட்சி உள்ளதா? இல்லை.

ஆனால், ஒரு இன ஒதுக்கல் நாடும் (இஸ்ரேல்) இனப்படுகொலை நாடும் (அமெரிக்காவுடன் இணைந்து) ஈரான் மீது குண்டுவீசி அதன் தலைவர்கள் பலரைக் கொன்றுள்ளன. இந்த அரசாங்கத்திற்கு அதை விமர்சிக்க முதுகெலும்பு இல்லை. இது ஒரு சமச்சீரற்ற போர்; இரண்டு மாறுபட்ட இராணுவ சக்திகளுக்கு இடையிலான போர். அமெரிக்காவின் இராணுவ பலத்தை ஈரானுடன் ஒப்பிட முடியாது. ஆனால், நான்கு ஐந்து நாட்களில் முடிந்துவிடும் என்று சொல்லப்பட்ட போர், இப்போது 4 வாரங்களைத் தாண்டியும் நீடிக்கிறது. இது மாதக்கணக்கில் கூட செல்லலாம், ஏனென்றால் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

யார் அதிக வலியைத் தாங்கிக்கொள்கிறார்கள் என்பதுதான் இங்கு எழுகின்ற கேள்வி. “எங்களுக்கு நொந்தால் நீங்களும் அந்த நோவினையை அனுபவிப்பீர்கள்” என்பதுதான் ஈரானியர்களின் அணுகுமுறை. இன்று இலங்கையில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தினால், அனைத்து சமூகங்களும் ஈரானுடன்தான் நிற்கும், அமெரிக்காவுடனோ அல்லது இஸ்ரேலுடனோ அல்ல.

சமூக ஊடகங்களைப் பாருங்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்கர்களைப் புண்படுத்தும் எதையும் சொல்லக்கூடாது என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக உள்ளது.

நமது கடல் எல்லைக்கு அருகில் ஈரானிய கப்பல் ஒன்று தாக்கப்பட்டபோது கூட இதுதான் நடந்தது. ஒரு முடிவெடுக்க நாம் 11 மணிநேரம் எடுத்துக்கொண்டோம். 11 நீண்ட மணிநேரம் அவர்களை அங்கேயே விட்டுவிட்டோம். வெளியுறவு அமைச்சுக்கு இராஜதந்திர குறிப்பொன்று அனுப்பப்பட்டது. ஆனால் ,11 மணிநேரத்திற்கும் மேலாக முழு அமைதி நிலவியது. பாதுகாப்புச் சபையில் கூட விவாதிக்கப்பட்டது, ஆனால் முடிவு எடுக்கப்படவில்லை. ஒரு நட்பு நாட்டை நீங்கள் இப்படித்தான் நடத்துவீர்களா?

இறுதியில் 100 மாலுமிகள் தங்கள் உயிரைக் கொடுத்தனர். அவர்கள் முழுமையான மாலுமிகள் அல்லர், அவர்கள் பயிற்சி பெறும் வீரர்கள் (Cadets). அவர்கள் போரில் ஈடுபடவில்லை, ஆனால் நமது பொருளாதார வலயத்திற்கு அருகில் அவர்கள் தாக்கப்பட்டனர். நீங்கள் அந்தக் கப்பலை நமது துறைமுகங்களில் ஒன்றிற்கு வர அனுமதித்திருந்தால், இது நடந்திருக்காது.

பின்னர் ஜனாதிபதி ஒரு விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தி, “நாங்கள் மனிதாபிமான கடமையைச் செய்தோம், மாலுமிகளைக் காப்பாற்றினோம், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்” என்று கூறினார். நல்லது, ஆனால் சர்வதேச உடன்படிக்கைகளின்படி அதைச் செய்ய நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

பால்கி சர்மாவுடனான அந்தப் புகழ்பெற்ற குழு விவாதத்தில் கௌரவ வெளியுறவு அமைச்சர் பேசியது இந்த உடன்படிக்கையைப் பற்றித்தான். வெளியுறவு அமைச்சரின் மொழித் திறமையைப் பற்றிப் பேசுவது என் நோக்கமல்ல. ஆனால் அவரிடம் இந்தச் சம்பவம் மற்றும் நமது பதில் நடவடிக்கை குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர் ‘பச்சை பொருளாதாரம்’ (Green Economy) மற்றும் ‘அன்க்லோஸ்’ (UNCLOS) பற்றியே பேசிக்கொண்டிருந்தார். கேட்கப்பட்ட கேள்விக்கும் பச்சைப் பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம்? எப்படியோ, இந்த மோதலில் நமது நிலைப்பாடுகள் குழப்பமடைந்துள்ளன.

அந்த மாலுமிகளைக் காப்பாற்றியதில் நமக்கு ஓரளவுக்குத் திருப்தி இருக்கலாம், ஆனால் இறுதியில் நட்பு நாடுகளுடனான நற்புறவு சீர்குலைந்து போயுள்ளது.

நேற்று நடந்த ஜனாதிபதியின் இப்தார் நிகழ்விற்கு மலேசியா மற்றும் இந்தோனேசியாவைத் தவிர முஸ்லிம் நாடுகளில் இருந்து யாருமே வரவில்லை என்பதை முஜிபுர் ரஹ்மான் எம்.பி இங்கு சுட்டிக்காட்டினார். எங்களை அழைத்ததற்கு நன்றி, எங்களை ஜனாதிபதி அழைத்ததால் நாங்கள் வந்தோம். ஆனால், வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய நாடுகள் ஏன் வரவில்லை? இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

“அமெரிக்காவின் இராணுவத் தளத்தை யார் வைத்திருந்தாலும் அவர்கள் எங்கள் இலக்காக மாறுவார்கள்” என்று ஈரானியர்கள் முன்பே எச்சரித்திருந்தனர். அவர்கள் துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அவர்களிடம் இவ்வளவு தொழில்நுட்ப அறிவு இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இது இன்னும் பல வாரங்களுக்கு நீடிக்கும். ஹார்முஸ் ஜலசந்தி என்பது சுமார் 2 கிலோமீட்டர் செல்லக்கூடிய பகுதியாகும். இவ்வளவு பெரிய உலகளாவிய இராணுவ பலம் கொண்ட அமெரிக்கா இப்போது தனது நட்பு நாடுகளிடம் உதவி கேட்கிறது. ஆனால் யாரும் முன் வரவில்லை. ஏன்? ஏனென்றால் இது மிகவும் ஆபத்தான நிலைமை.

இந்த நிலைமை நீடித்தால், உலக எண்ணெய் விநியோகத்தில் 20% பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், செங்கடல் போக்குவரத்தை ஹூத்திகள் குறிவைக்கத் தொடங்கினால், மேலும் 12-30% விநியோகம் ஆபத்தில் சிக்கக்கூடும். இத்தகைய இக்கட்டான சூழலில் நாம் இருக்கிறோம். இத்தகைய உலகளாவிய சம்பவங்களை நாம் முன்கூட்டியே கணிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் அவை நடக்கும்போது, உண்மையை உண்மையாகச் சொல்லும் தைரியம் நமக்கு இருக்க வேண்டும். தற்போதைய ஆளும் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது அதுதான் அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. இப்போது அவர்கள் ஏகாதிபத்தியவாதிகளின் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்.

காசா பகுதியில் நடக்கும் பயங்கரமான யுத்த மீறல்கள் குறித்து நீங்கள் மௌனமாக இருந்தீர்கள். திருப்தியளிக்காத சில வார்த்தைகளை மட்டுமே கூறினீர்கள். இது பாலஸ்தீனியர்களுக்கோ அல்லது ஈரானியர்களுக்கோ திருப்தி அளிக்கவில்லை. நமது பலவீனமான வெளியுறவுக் கொள்கையால் நாம் எல்லாப் பக்கங்களிலும் நண்பர்களை இழந்து வருகிறோம்.

இன்னொரு முக்கிய விடயம் பற்றி கதைக்க வேண்டும். அதாவது,நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையால் வாரந்தோறும் புதன்கிழமை விடுமுறை தினமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையான 4 தினங்கள் கூடும் நிலையில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள அரசாங்க விடுமுறை தினத்தால் தூரப்பிரதேசங்களிலிருந்து வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

​எனவே, இந்த அரசாங்கம் விடுமுறை தினத்தை திங்கட்கிழமைக்கு மாற்றுமாறு சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் கோரியபோது, அவர் ஜனாதிபதியிடம் கேட்குமாறு கூறுகின்றார். பாராளுமன்ற விடயங்களை ஜனாதிபதி தீர்மானிப்பதில்லை. எனவே மக்களின் அதிக பிரச்சினைகள் பேச வேண்டியிருப்பதனால் பாராளுமன்றம் தொடர்ந்தும் 4 தினங்களும் கூடும் வகையில் புதன்கிழமை அரசு விடுமுறை தினத்தை திங்கட்கிழமைக்கு மாற்றுமாறு சபாநாயகரைக் கோருகின்றேன் என்றார்.

சிலாபம் – காக்கப்பள்ளியில் சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்!

ஜூட் சமந்த

சிலாபம், காக்கப்பள்ளி பகுதியில் உள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றில், 9 வயது மற்றும் 11 மாதங்கள் உடைய சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேகநபர்களை சிலாபம் பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் கைது செய்துள்ளது.

குறித்த சிகையலங்கார நிலையத்தினுள் சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்படும் வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இந்த வீடியோவை அவதானித்த நபர் ஒருவர் பொலிஸ் தலைமையகத்தில் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைவாக, சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு சிலாபம் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுவனையும் அவரது தந்தையையும் அடையாளம் கண்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் வழங்கிய வாக்குமூலத்தின்படி, இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது. சிறுவன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 54 வயதுடைய ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 58 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் காக்கப்பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவன் மருத்துவப் பரிசோதனைகளுக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாட்டால் முடங்கும் மீன்பிடித் தொழில்!

ஜூட் சமந்த

புத்தளம் மற்றும் சிலாபம் – வட்டக்கல்லியப் பகுதிகளில் “துரித மீன்பிடி” (Running Gear) முறையில் ஈடுபடும் மீனவர்கள், தங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முறையான வழிமுறை இல்லாததால் தமது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த மீனவர்கள் வலைகளைப் பயன்படுத்தாமல், தூண்டில் முறையைப் பயன்படுத்தி கரைப்பகுதியிலிருந்து 30 முதல் 50 கடல் மைல் தொலைவிலுள்ள ஆழ்கடலுக்குச் சென்று, ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்ட டூனா, கெலவல்லா மற்றும் பலயா போன்ற மீன் வகைகளைப் பிடிக்கின்றனர். ஏனைய மீனவர்கள் மண்ணெண்ணெய் பயன்படுத்தும் வேளையில், இவர்கள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, புகை மற்றும் எண்ணெய் கசிவு ஏற்படுத்தாத சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பெட்ரோல் என்ஜின்களையே பயன்படுத்துகின்றனர்.

புத்தளம் மாவட்டத்தில் இவ்வாறான பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட படகுகள் தற்போது எரிபொருள் இன்றி கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மீனவர் ரொஷான் பெர்னாண்டோ கூறுகையில், “எமது படகுகளுக்கு ஒரு நாளைக்குக் குறைந்தது 60 லீட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. ஆனால் எரிபொருள் கூட்டுத்தாபனம் வெறும் 5 லீட்டர் மாத்திரமே வழங்க முடியும் எனக் கூறுகிறது” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மீன்பிடித் திணைக்களம் வழங்கியுள்ள அனுமதிப்பத்திரத்தில் இந்த இயந்திரங்கள் பெட்ரோல் மூலம் இயங்குபவை எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்க மறுப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். “குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 30 லீட்டர் பெட்ரோல் வழங்கினால் கூட, நாம் ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது கடலுக்குச் செல்வோம்” என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 10 நாட்களாகத் தொழிலுக்குச் செல்ல முடியாததால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சிலாபம் வட்டக்கல்லியவைச் சேர்ந்த சஞ்சீவ மதுவந்த மற்றும் கயான் சதுரங்க ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், தங்களுக்கு வேறு தொழில் தெரியாது எனவும், 10 நாட்களாக வருமானம் இல்லாததால் பிள்ளைகள் பட்டினியால் வாடுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

கார்மல் மாதா மீனவர் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்படப் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் தலையிட்டு தங்களுக்கு உரிய எரிபொருள் வசதியைச் செய்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மாதம் 20 பில்லியன் ரூபாய் நட்டம் – அரசாங்கம் அறிவிப்பு!

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கம் ஒரு பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய விலையில் எரிபொருளை விற்பனை செய்வதால் அரசாங்கத்திற்கு மாதாந்தம் 20 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், அரசாங்கம் ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாயும், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு 20 ரூபாயும் நட்டத்தை எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்டார். இந்த ஆதரவு பொறிமுறைக்காக அரசாங்கத் திறைசேரி மேலதிகமாக 20 பில்லியன் ரூபாய் சுமையை ஏற்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது.

  • லங்கா ஓட்டோ டீசல்: ஒரு லீற்றர் 79 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 382 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சூப்பர் டீசல்: ஒரு லீற்றர் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 443 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ஒக்டேன் 95 பெட்ரோல்: ஒரு லீற்றர் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 455 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ஒக்டேன் 92 பெட்ரோல்: ஒரு லீற்றர் 81 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 398 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இஸ்ரேலின் அணுசக்தி பகுதியில் தாக்குதல்; 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

ஜெருசலேம்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே போர் தொடங்கி நான்கு வாரங்கள் நிறைவடையும் நிலையில், சனிக்கிழமை அன்று ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் மோதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளன. இஸ்ரேலின் முக்கிய அணுசக்தி நிலையத்தைக் கொண்டுள்ள டிமோனா (Dimona) மற்றும் அதன் அருகிலுள்ள ஆராத் (Arad) ஆகிய தெற்கு நகரங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இஸ்ரேலிய அவசரக்கால சேவைகளின்படி, ஆராத் நகரில் குறைந்தது 88 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நகரின் மையப்பகுதியில் கணிசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிமோனா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 39 பேர் காயமடைந்தனர். அங்குள்ள பல குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், சிறுவன் ஒருவன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

பாதுகாப்புத் தோல்வி:

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air defence systems) இந்தத் தாக்குதலின் போது செயல்பட்ட போதிலும், சில ஏவுகணைகளைத் தடுக்கத் தவறிவிட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒப்புக்கொண்டுள்ளார். நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள வெடிமருந்துகளைச் சுமந்து வந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள் நேரடியாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழுந்து வெடித்துள்ளன.

தாக்குதலுக்கு உள்ளான டிமோனா நகரில் இஸ்ரேலின் ஷிமோன் பெரெஸ் நெகேவ் அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இருப்பினும், அணு ஆராய்ச்சி மையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அப்பகுதியில் கதிர்வீச்சு அளவு சாதாரணமாகவே இருப்பதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிப்படுத்தியுள்ளது. அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு IAEA இயக்குனர் ஜெனரல் ரஃபேல் கிரோசி வலியுறுத்தியுள்ளார்.

சனிக்கிழமை அதிகாலை ஈரானின் நடன்ஸ் (Natanz) அணுசக்தி வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரானின் மாலெக் அஷ்டார் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது.

ஈரானின் இந்த நடவடிக்கையானது “பதிலடிக்கு பதிலடி” (eye-for-an-eye) என்ற அணுகுமுறையைப் பின்பற்றுவதாக மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வுகளின் மூத்த ஆய்வாளர் அபாஸ் அஸ்லானி தெரிவித்துள்ளார். வெறும் போர்நிறுத்தத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், ஈரானின் அச்சுறுத்தல்களை நம்பகமானதாக மாற்றி நீண்டகால பாதுகாப்பு ஏற்பாட்டை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது இஸ்ரேலுக்கு ஒரு “கடினமான” இரவு என்று வருணனை செய்துள்ளதோடு, ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும் உறுதியளித்துள்ளார். பிப்ரவரி 28 முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஈரானில் 1,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பு கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வரலாறு காணாத எரிபொருள் அடியால் ஸ்தம்பித்த போக்குவரத்து!

இன்று (22) நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று (21) அதிக அளவில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இதன் காரணமாகவே இன்றைய தினம் பேருந்துகளை இயக்காதிருக்க பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே பேருந்து சேவைகளை மீண்டும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.