Home Blog Page 91

இஸ்ரேலின் அணுசக்தி பகுதியில் தாக்குதல்; 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

ஜெருசலேம்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே போர் தொடங்கி நான்கு வாரங்கள் நிறைவடையும் நிலையில், சனிக்கிழமை அன்று ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் மோதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளன. இஸ்ரேலின் முக்கிய அணுசக்தி நிலையத்தைக் கொண்டுள்ள டிமோனா (Dimona) மற்றும் அதன் அருகிலுள்ள ஆராத் (Arad) ஆகிய தெற்கு நகரங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இஸ்ரேலிய அவசரக்கால சேவைகளின்படி, ஆராத் நகரில் குறைந்தது 88 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நகரின் மையப்பகுதியில் கணிசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிமோனா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 39 பேர் காயமடைந்தனர். அங்குள்ள பல குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், சிறுவன் ஒருவன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

பாதுகாப்புத் தோல்வி:

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air defence systems) இந்தத் தாக்குதலின் போது செயல்பட்ட போதிலும், சில ஏவுகணைகளைத் தடுக்கத் தவறிவிட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒப்புக்கொண்டுள்ளார். நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள வெடிமருந்துகளைச் சுமந்து வந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள் நேரடியாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழுந்து வெடித்துள்ளன.

தாக்குதலுக்கு உள்ளான டிமோனா நகரில் இஸ்ரேலின் ஷிமோன் பெரெஸ் நெகேவ் அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இருப்பினும், அணு ஆராய்ச்சி மையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அப்பகுதியில் கதிர்வீச்சு அளவு சாதாரணமாகவே இருப்பதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிப்படுத்தியுள்ளது. அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு IAEA இயக்குனர் ஜெனரல் ரஃபேல் கிரோசி வலியுறுத்தியுள்ளார்.

சனிக்கிழமை அதிகாலை ஈரானின் நடன்ஸ் (Natanz) அணுசக்தி வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரானின் மாலெக் அஷ்டார் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது.

ஈரானின் இந்த நடவடிக்கையானது “பதிலடிக்கு பதிலடி” (eye-for-an-eye) என்ற அணுகுமுறையைப் பின்பற்றுவதாக மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வுகளின் மூத்த ஆய்வாளர் அபாஸ் அஸ்லானி தெரிவித்துள்ளார். வெறும் போர்நிறுத்தத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், ஈரானின் அச்சுறுத்தல்களை நம்பகமானதாக மாற்றி நீண்டகால பாதுகாப்பு ஏற்பாட்டை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது இஸ்ரேலுக்கு ஒரு “கடினமான” இரவு என்று வருணனை செய்துள்ளதோடு, ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும் உறுதியளித்துள்ளார். பிப்ரவரி 28 முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஈரானில் 1,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பு கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வரலாறு காணாத எரிபொருள் அடியால் ஸ்தம்பித்த போக்குவரத்து!

இன்று (22) நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று (21) அதிக அளவில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இதன் காரணமாகவே இன்றைய தினம் பேருந்துகளை இயக்காதிருக்க பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே பேருந்து சேவைகளை மீண்டும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

தாறுமாறாக ஏறிய எரிபொருள் விலை, அவதியில் மக்கள்!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி ஒட்டோ டீசல் 79 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 382 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 90 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 443 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேநேரம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல், 81 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 398 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

எனினும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 90 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 455 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 60 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 255 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

 உலகின் மிகப்பெரிய கத்தார் எல்பிஜி ஆலை மீது ஈரான் தாக்குதல்!

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஆலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

கத்தாரில் எல்பிஜி ஆலை தீப்பற்றி எரிவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் அத்துமீறி கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி நீடித்து வரும் போரில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நாசிர்ஜாதே, தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி ஷம்கானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது செவ்வாயன்று விடிய விடிய நடத்திய தாக்குதலில் ஈரானின் 3வது உயர்மட்ட அதிகாரியான உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டார். இந்த தொடர் இழப்புகள் ஈரானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. என்றாலும் ஈரான் வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்து வருகின்றது.

இதனிடையே ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மற்றும் அதன் கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. ஈரானில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் சமார் 80சதவீதம் இயற்கை எரிவாயுவில் இருந்து வருவதால் இந்த தாக்குதல் அந்த நாட்டின் மின் விநியோகத்திற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. உலகின் மிகப்பெரிய எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில், கத்தார், துபாய், அபுதாபி, சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் மீதான தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி உள்ளது.

கத்தாரின் ராஸ் லஃபான் தொழில்துறை நகரத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் ஏவிய ஏவுகணை தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து கத்தாரை சேர்ந்த அவசரகால மீட்புக் குழுவினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். ராஸ் லஃபான் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி மையங்களில் ஒன்று என்பதால், இந்த தாக்குதல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதல், கடுமையான சேதத்தை விளைவித்துள்ளதாக கத்தார் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கும் நோக்கில், கத்தாரையும் அதன் அண்டை நாடுகளையும் ஈரான் தொடர்ந்து குறிவைத்து வருவது கண்டிக்கத்தக்கது’ என கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கத்தாரில் உள்ள ஈரானிய தூதரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்களை வெளியேறுமாறு கத்தார் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதேபோல் குவைத்தின் மினா அல் அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குலின் காரணமாக தீப்பற்றி எரிந்து வருகின்றது. இது அருகில் உள்ள மின அப்துல்லா சுத்திகரிப்பு நிலையத்திலும் பரவியுள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரைக்கு அப்பால் ஒரு கப்பல் தாக்குதல் காரணமாக தீப்பற்றி எரிந்துகொண்டு இருக்கின்றது. கத்தார் கடற்கரைக்கு அருகே மற்றொரு கப்பல் சேதமடைந்தது. இது ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் ஆதிக்கத்தால் கப்பல்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான ஆபத்தை காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அபுதாபியில் உள்ள அதிகாரிகள் ஹப்ஷான் எரிவாயு நிலையம் மற்றும் பாப் எரிவாயு வயலில் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த இடங்களின் மீது ஈரான் நடத்திய இரவுநேர தாக்குதல்களால் பதற்றம் அதிகரித்துள்ளது. செங்கடலில் உள்ள யான்பு துறைமுக நகரில் உள்ள சாம்ரெப் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது நேற்று டிரோன் தாக்கியதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. சேதமதிப்பீடுகள் நடந்து வருகின்றது. கத்தார் இயற்கை எரிவாயு நிலையங்கள், குவைத்தின் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டதன் காரணமாக சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் நேற்று கடுமையாக உயர்ந்தன.

ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் அங்கு எரிபொருள் ஏற்றி நிற்கும் இந்திய கப்பல்கள் சிக்கி இருக்கின்றன. இந்த கப்பல்களுக்கு பாதுகாப்பு அளித்து எரிசக்தி வழித்தடங்களை பாதுகாக்கும் வகையில் இந்தியா கூடுதல் போர்க்கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்திக்கு அனுப்பிவைத்துள்ளது. 6க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

  • கத்தார் ராஸ் லபான் எரிவாயு நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலை அரபு லீக் பொதுச்செயலாளர் அகமது அபுல் கெய்ட் கண்டித்துள்ளார்.
  • செக் குடியரசின் பிரதமர் ஆண்ட்ரே, ஈரானின் சவுத் பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது ஈரானே நடத்திய தாக்குதலை புரிந்துகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
  • ஆஸ்திரிய அதிபர் கிறிஸ்டின் ஸ்டாக்கர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்ற மிரட்டலுக்கு உள்ளாக்க ஐரோப்பாவும் ஆஸ்திரியாவும் அனுமதிக்காது என்றார்.
  • ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ், மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய அலட்சியமான பதிலடித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. மோதல்கள் மேலும் தீவிரமடைவதை நாங்கள் விரும்பவில்லை” என்றார்.
  • சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், ‘‘சர்வதேச உறவுகளின் படைபலத்தை பயன்படுத்துவதை நாங்கள் எதிர்த்து வருகிறோம். ஈரானின் தேசிய தலைவர்களை கொல்வதும், பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நடத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. சம்பந்தப்பட்ட அனைவரும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி பிராந்தி மோதல் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை தடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் மீது ஈரான் அதிருப்தி

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் தளத்தில்,‘‘ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்க போரைக் கண்டித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தெஹ்ரானில் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இஸ்ரேல் தகர்த்து மில்லியன் கணக்கான மக்களை நச்சுக்கு ஆளாக்கியபோதும் அவர் இஸ்ரேலை கண்டிக்கவில்லை. இஸ்ரேலின் தாக்குதல் குறித்து அவருக்கு கவலை ஏற்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதிகள் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கள் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டன. இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களல் 900க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 10லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். ரமலான் மாத நிறைவை குறிக்கும் ஈத் அல் பித்ருக்கான ஏற்பாடுகள் முடங்கியுள்ளது. புத்தாடைகள், இறைச்சி மற்றும் இனிப்பு பலகாரங்களை வாங்கி மகிழ்ச்சியோடு இருக்கும் பொதுமக்கள் போர் காரணமாக வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர் பதற்றம் காரணமாக உலகச் சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய் விலைகள், இன்று (20) காலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கமைய, இன்று காலை பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.82 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளது. 

நேற்று ஒரு பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாயின் விலை 115 டொலரையும் விட அதிகரித்து காணப்பட்டது. 

இதேவேளை, WTI மசகு எண்ணெய் பீப்பாயின் விலையும் 93.43 டொலர்கள் வரை குறைந்துள்ளது. 

அதன் விலையும் நேற்று 100 டொலர்களைத் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாதம்பை பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு!

ஜூட் சமந்த

ராகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக, பேலியகொட பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதம்பை – இஸ்சம்மடில்ல பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேக நபர் கடந்த 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து, அவரது வீட்டு முற்றத்தில் புதைக்கப்பட்டிருந்த 12 போர்ட் ரக துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் 14 உயிர்ச்சுள்ள தோட்டாக்கள் கடந்த 19ஆம் திகதி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், வெளிநாட்டிலிருந்து பாகங்களாகக் கொண்டு வரப்பட்டு இலங்கையில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்ட, பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள் ஒன்றும் குறித்த வீட்டில் இருந்து அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட இந்தத் துப்பாக்கி ஏதேனும் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் தற்போது மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஹூதா லங்கா ஏற்பாட்டில் இந்திய உயர்ஸ்தானிகர் கனமூலை விஜயம்!

ஹூதா லங்கா (Hudha Lanka) நிறுவனத்தின் விசேட அழைப்பினை ஏற்று, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (17) புத்தளம், கனமூலை பிரதேசத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடும், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை பலப்படுத்தும் வகையிலும் இந்த விஜயம் அமைந்திருந்தது.

இந்த விஜயத்தின் ஒரு அங்கமாக, கனமூலை பிரதேசத்தில் வாழும் சுமார் 150 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்திய உயர்ஸ்தானிகர் தனது கரங்களால் இந்த நிவாரணப் பொருட்களை மக்களிடம் கையளித்தார். தற்போதைய பொருளாதாரச் சூழலில் இந்த உதவி தமக்கு பெரும் பக்கபலமாக அமைந்ததாகப் பயனடைந்த மக்கள் நன்றியுடன் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கனமூலை பாடசாலையின் கல்வித் தரம் மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது பாடசாலைக்கு அவசியமான பௌதீக வளங்கள் மற்றும் தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை பாடசாலை அதிபர் பீ.எம். முஹ்ஸி அவர்கள் உயர்ஸ்தானிகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இந்தியத் தூதரகத்தின் மூலம் வழங்கப்படக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

இந்நிகழ்வில் ஹூதா லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர், ஊர் பிரமுகர்கள், உலமாக்கள் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்திய உயர்ஸ்தானிகரின் இந்த விஜயமானது கனமூலை கிராம மக்களின் நீண்டகாலத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு ஆரம்பப் புள்ளியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

புனித ஷஹ்பான் மாத தலைப்பிறை தென்படவில்லை!

புனித நோன்புப் பெருநாள் நாளை மறுதினம் (21) கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. 

ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (19) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. 

இதன்போது ஷவ்வால் மாத தலைப்பிறை நாட்டின் எப்பகுதியிலும் தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. 

இதனால் நாளை ரமழான் நோன்பை 30 ஆக பூர்த்தி செய்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் நாளை மறுதினம் நோன்புப் பெருநாளை கொண்டாடலாமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

புத்தளத்தில் 3,900 மாணவர்கள் பங்கேற்ற ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வு!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில், இம்முறை ரமழான் மாதத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட ‘ஹிஸ்புல் குர்ஆன்’ செயற்திட்டத்தின் நிறைவு விழா மற்றும் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

புத்தளம் நகரப் பகுதிகளில் உள்ள சுமார் 70-க்கும் மேற்பட்ட மஸ்ஜித்களை உள்ளடக்கி இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. புனித ரமழான் மாதம் முழுவதும் மஸ்ஜித்களில் குர்ஆன் ஓதுவதை ஊக்குவிக்கும் நோக்கில் அமைந்த இத்திட்டத்தின் மூலம், சுமார் 3,900 மாணவர்கள் நன்மையடைந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (27) இரவு, புத்தளம் நகர ஜம்இய்யத்துல் உலமா காரியாலயத்தில், அதன் தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் மிஸ்பாஹி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது:

  • ஹிஸ்புல் குர்ஆன் திட்டத்தில் பங்கேற்று குர்ஆனை முழுமையாக ஓதி முடித்த 3,900 மாணவர்களுக்கும் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
  • மஸ்ஜித்களில் மாணவர்களை முறையாக வழிநடத்தி, இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த ஆலிம்களுக்கு (மார்க்க அறிஞர்கள்) ஊக்குவிப்பு நன்கொடைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

புத்தளம் நகரில் இளைய தலைமுறையினரிடையே குர்ஆன் ஓதும் ஆர்வத்தை வளர்ப்பதற்கும், ரமழான் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கும் இத்திட்டம் பெரும் பங்களிப்பு செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மஸ்ஜித்கள் தோறும் மாணவர்கள் திரண்டு குர்ஆன் ஓதியது நகரில் ஒரு ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிர்வாகிகள், உலமாக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வென்னப்புவ பகுதியில் பெருமளவு போதைப்பொருளுடன் இருவர்!

ஜூட் சமந்த

வென்னப்புவ மற்றும் நாத்தாண்டியா பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இருவர் லுனுவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, மாரவில பகுதியில் பொலிஸ் சோதனையின் போது போதைப்பொருளுடன் மூவர் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 18ஆம் திகதி தும்மோதரை மற்றும் தில்லவல பகுதிகளில் லுனுவில பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட முதல் சந்தேகநபரிடமிருந்து 45 கிராம் 650 மில்லிகிராம் ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருளும், 22 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மற்றைய சந்தேகநபரிடமிருந்து 16 கிராம் 360 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், வியாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 கைபேசிகள், ஒரு இலத்திரனியல் தராசு, போதைப்பொருள் பொதியிட பயன்படும் பொலித்தீன் உறைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இருவரும் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, இன்று (19) அதிகாலை மாரவில பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் சிலாபம் – கொழும்பு வீதியில் பயணித்த வான் ஒன்றை மறித்து சோதனை செய்துள்ளனர். இதன்போது அந்த வானினுள் 30 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வானில் இருந்த மூன்று நபர்கள் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளனர். குறித்த வானிலிருந்து 5 கைபேசிகள் மற்றும் ஒரு பணப்பை என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பணப்பையில் இருந்த அடையாள அட்டையின் அடிப்படையில், தப்பியோடியவர்களில் ஒருவர் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.