Tuesday, May 5, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 92

பா.உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்!

0

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையாரும், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி. மூ. இராசமாணிக்கம் அவர்களின் புதல்வருமான வைத்தியர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் நேற்று (07) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். 

காலமாகும் போது அவரது வயது 67 ஆகும். (பிறப்பு: 13.06.1958, இறப்பு: 07.11.2025) 

அன்னாரின் திருவுடல் இன்று சனிக்கிழமை (08) பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect Home-இல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பின்னர், அன்னாரின் திருவுடல் நாளை (09) மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

0

2025 நவம்பர் 08ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வரவு செலவுத் திட்டத்தை கடுமையாக சாடிய சஜித்!

0

இன்று (07) சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது, மக்களுக்கு சலுகைகள் இல்லாத, சர்வதேச நாணய நிதியத்தின் வெறும் வரவு செலவுத் திட்டமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார். 

வரவு செலவுத் திட்ட உரை முடிந்த பின்னர், பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாக அமையவில்லை. 

நாட்டு மக்கள் இன்று பல துயரமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். வறுமை அதிகரித்து காணப்படுகிறது. வேலையின்மையும் அதிகரித்துள்ளது. 

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% இற்கு மேலாகப் பங்களிக்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகள் வீழ்ச்சி கண்டு, அவர்களது வாழ்க்கை சீர்குலைந்து போயுள்ளது. இவர்களைப் பாதுகாக்க இந்த அரசாங்கத்தால் முடியவில்லை. 

விவசாயிகள், மீனவர்கள், சுயதொழில் புரிவோர், வேலையில்லாப் பட்டதாரிகள் என அனைவரும் தங்கள் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வுகளும் இல்லாமல் தவிக்கின்றனர். 

இந்த வரவு செலவுத் திட்டமானது ஏமாற்று, பொய்கள் மற்றும் தமது இருப்பை முன்னோக்கி கொண்டு செல்லும் வரவு செலவுத் திட்டமாக அமைந்து காணப்படுகின்றது. 

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சட்டக் கட்டமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்குவேன் என்று ஜனாதிபதி கூறினாலும், அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இந்நேரத்தில், இது தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என்று சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளார். 

இதற்கு முன்னர் இந்த அரசாங்கம் போதைப்பொருள் கடத்தல் குறித்து ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு வந்தது. ஆனால் இன்று திசைகாட்டி அரசாங்கத்தைச் சேர்ந்தோர் இந்த போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய பிற்பாடு, இவற்றை ஊடகங்களில் காண்பிப்பதைத் தவிர்த்து, அதனை மறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்த அரசாங்கம் இரட்டை நாக்கு கொண்ட அரசாங்கமாக காணப்படுகின்றது. இது மக்களுக்கு நிவாரணம் வழங்காத, IMF எழுதிய வரவு செலவுத் திட்டத்தின் வடிவத்தை எடுத்த வரவு செலவுத் திட்டமாகும். வறுமை ஒழிப்புத் திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடங்கவில்லை. 

முன்மொழியப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டக் கருத்திட்டங்களுக்கு மிகக் குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டுள்ளன. 

2025 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளைப் பார்க்கும்போது, ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு ஒதுக்கீடுகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை முன்வைக்கப்பட வேண்டும். அது இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. 

இவ்வாறு முன்னேற்ற மீளாய்வுகளை சமர்ப்பிக்காத நிதியமைச்சரான ஜனாதிபதி இன்று பொய்களை அடிக்கி வைத்தார். இந்த ஆளும் தரப்பினர் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அரசாங்கத்திற்கு இன்னும் மனச்சாட்சி வரவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்டம் 2026 ஒரே பார்வை!

0

கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் நிதி அமைச்சர் என்ற ரீதியில் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீ்ட்டை (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இன்று (07) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

இன்று பி.ப 1.30 மணிக்கு வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டுடன் கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து சம்பிரதாய பூர்வமாக படைக்கல சேவிதர் அழைத்துவர சபா மண்டபத்திற்கு வருகை தந்ததுடன் பி.ப 5.50 மணிவரை வரவுசெலவுத்திட்ட உரையை முன்வைத்தார்.

புதிய அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத்திட்டமான இது சுதந்திர இலங்கையின் 80வது வரவுசெலவுத்திட்டமாக வரலாற்றில் பதிவாகிறது. வெளிநாட்டுத் தூதுவர்கள், ஆளுநர்கள், உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள், நீதிபதிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 6 நாட்கள் இடம்பெறும். அதன்பின்னர் நவம்பர் 14 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.

இதனைத் தொடர்ந்து, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலையின் போதன விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 3 சனிக்கிழமை தினங்கள் உள்ளடங்கலாக 17 நாட்கள் நடைபெறவுள்ளது. அதனையடுத்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறும்.

இன்றைய வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் ஒரே பார்வையில்..

ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மூலம் உயர் வருமானம்

  • புதிய தீர்வை வரிக் கொள்கையை அறிமுகம் செய்வதற்கும் , புதிய ஏற்றுமதி உற்பத்தி  மற்றும் சேவை மேம்பாட்டுக்குத் தேவையான நிதி வசதிகளை வழங்குவதற்கும் தேசிய தனிவர்த்தக கரும பீடத்தை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடன் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்தல்
  • 2028 ஆம் வருடத்தில் வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு முடியாத நிலை தோன்றுமென அடிப்படையற்ற கருத்துக்களை ஒருசில தரப்பினர்கள் சமூகத்திற்கு எடுத்துரைத்த வண்ணம் இருக்கின்றார்கள். 2024 ஆம் வருடத்தில் 1,674 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் தவணைப் பணமாகவும் வட்டியாகவும் செலுத்தி முடித்துள்ளோம். 2025 செப்டம்பர் மாதம் 30 ஆந் திகதியாகும்போது 1,948 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    நடுத்தர கால பேரண்டப் பொருளாதாரப் போக்கு
  • எமது பொருளாதார வளர்ச்சி 2024 ஆம் வருடத்தின் முதல் அரையாண்டில் காணப்பட்ட 4.6 வீதத்திலிருந்து 2025 ஆம் வருடத்தின் சமமான காலப்பகுதியில் 4.8 வீதம்வரை அதிகரித்தது. வேலையின்மை 2024 ஆம் வருடத்தின்  முதல் காலாண்டில் காணப்பட்ட 4.5 வீதத்திலிருந்து 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் 3.8 வீதம் வரை வீழ்ச்சியடைந்தது.

    முதலீட்டிற்கு அனுகூலமான சூழலை உருவாக்கல்
  • முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துவதற்கும், முதலீடுகளை பாதுகாப்பதற்குமாக புதிய “முதலீட்டுப் பாதுகாப்புச் சட்டம்” 2026 ஆண்டு முற்பகுதியில் அங்கீகரிக்கப்படும்.  

    இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை வலுப்படுத்தவதற்கான ஒன்றிணைந்த வேலைத் திட்டம்
  • கைத்தொழில் வலயங்களை உருவாக்கி அபிவிருத்தி செய்து உரிய முறையில்  முகாமை செய்வதற்காக 2026 இல் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 4,000 மில்லியனிற்கு மேலதிகமாக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்குவதற்கு  முன்மொழிவு.

    வலதுகுறைந்த சமூகத்திற்கு உதவி செய்தல்
  • அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடைமுறை; அரச சேவையின் 3 சதவீதம்  வலது குறைந்தோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளபோதும் இது முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. எனவே, அரச சேவைக்கு மேற்குறிப்பிடப்பட்டவாறு 3 சதவீதத்தை ஆட்சேர்ப்புச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • வலது குறைந்தோரை  தனியார் துறையில் தொழில் ஒன்றில் ஈடுபடுத்திக் கொள்வதாயின், ரூபா  15,000 என்ற உச்ச வரம்பிற்கு கட்டுப்பட்டு ஊழியரின் சம்பளத்தில்  50 சதவீத சம்பள உதவித் தொகை  24 மாதங்கள் வரை அரசாங்கத்​தினால் செலுத்துவதற்கு ரூபா 500 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிவு.

    கல்வியும் பயிற்சியும்
  • கற்கைகளுக்கு தேவையான காகிதாதிகளை ஒவ்வொரு பிள்ளையும் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்யும் நோக்குடன் 2025 ஆம் ஆண்டில்  மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூபா 6,000 காகிதாதிகள் கொடுப்பனவுகளை 2026 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வழங்க நடவடிக்கை.
  • மருத்துவப் பரிந்துரையின் அடிப்படையில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி  பிள்ளையொன்றுக்கு ரூபா 5,000 கொண்ட மாதாந்த்க் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு இவ்வாண்டின் வரவு  செலவுத்திட்டத்திலிருந்து ரூபா 50 மில்லியன் ஒதுக்கீடு.
  • சப்பிரகமுவ, மொரட்டுவ, உருகுணை, ஊவா வெல்லஸ்ஸ மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களின் அபிவிருத்திக்காக ரூபா 11,000 மில்லியன் ஒதுக்கீடு. இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் வசதிகள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ரூபா 11,500 மில்லியன் ஒதுக்கீடு.
  • உயர்வடைகின்ற வாழ்க்கைச் செலவுடன் ஈடுகொடுப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த மகாபொல மற்றும் மாணவ உதவுதொகை  கொடுப்பனவுகளை 2026 இலும் ரூபா  2,500 மூலம் அதிகரிப்பதற்கு முன்மொழிவு. அதற்கமைய, மாதாந்த மகாப்பொல கொடுப்பனவு ரூபா 10,000 ஆகவும் மாணவர் உதவுதொகை  கொடுப்பனவு ரூபா  9,000 ஆகவும் அதிகரிக்கப்படும்.  அதேபோன்று “நிபுணதா சிசுதிரிய கொடுப்பனவு” ரூபா 2,500 இனால் அதிகரிக்கப்படும்.
  • தேசிய கல்விக் கல்லூரி புலமைப்பரிசில் பெறுநர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை ரூபா 2,500 இனால் அதிகரிப்பதற்கு  முன்மொழிவு.

    சுகாதாரம்
  • இரண்டாம் நிலை சுகாதாரசேவைகள் 82 தள வைத்தியசாலை (Base Hospitals) களினூடாக வழங்கப்படுகின்றன. வைத்தியசாலைகள் அநேகமானவற்றில் வசதிகள் அண்மைகாலங்களில் அபிவிருத்தி செய்யப்படவில்லை. இவ்வைத்தயசாலைகளை அபிவிருத்தி  செய்வதன் மூலம் இரண்டாம் நிலை சுகாதார சேவைகளின் தரத்தினை மேம்படுத்துவதற்கு ஐந்தாண்டு நிகழ்ச்சித்திட்டமொன்றின் முதலாவது ஆண்டனைத் தொடங்குவதற்கு ரூபா  31,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு.
  • ரூபா 12,000 மில்லியன் செலவில் அதிக இடவசதி மற்றும் நவீன உபகரணங்களுடன் கூடிய 16 மாடி கொண்ட தேசிய இருதய பிரிவொன்றை தாபிப்பதற்குத் தேவையான தொடக்கப் பணியினை ஆரம்பிப்பதற்கு ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு.
  • மருத்துவ பரிந்துரையின் அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் தலசீமியா நோயாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபா  10,000 கொண்ட மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு ரூபா 250 மில்லியனை ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு.

    தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்
  • ரூபா 1,350 கொண்ட தற்போதைய நாளாந்த குறைந்தபட்ச சம்பளம் 2026 ஜனவரியில் இருந்து தொடக்கம் ரூபா 1,550 ஆக அதிகரிப்பதற்கு முன்மொழிகின்றேன். இவ் ரூபா 1,5​50 தொகை சம்பளத்திற்கு மேலதிகமாக வேலைக்கு சமுகமளிப்பதை நாளாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவாக ரூபா 20​​0 தொகையினை அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுப்பதற்கு முன்மொழிவு.

    பிரதேச அபிவிருத்தி
  • இடைநிறுத்தப்பட்ட வீதிகள் மற்றும் பாலங்களின் நிர்மாணம் மீள தொடங்கப்பட்டு முக்கிய சந்திகள் விரிவுபடுத்தப்படும். அதற்கமைய கிராமிய வீதிகளுக்காக ரூபா 24,000 மில்லியனும், கிராமிய பாலங்களுக்காக ரூபா 2,500 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கான சலுகைகள்
  • வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சலுகை வட்டியில் வீட்டுக் கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தப்படும். அது வட்டி மீளளிப்பிற்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் நிதியத்தினை பயன்படுத்தி வட்டியை மீளளிப்புச் செய்ய முன்மொழிவு. அதேபோல், வெளிநாட்டில் வேலை பார்க்கும் இலங்கையர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய முறைமையொன்றை அறிமுகம் செய்யப்படும்.

    மனித-யானை மோதலைக் குறைத்தல்
  • வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயற்திறனை அதிகரிப்பதற்குத் தேவையான 294 வாகனங்கள் மற்றும் தொடர்பாடல் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அனுமதி.
  • யானை வேலி கண்காணிப்பு மற்றும் மனித-யானை மோதலினை குறைப்பதற்காக விசேட பயிற்சி வழங்கப்பட்ட சிவில் பாதுகாப்பு சேவை அலுவலர்கள் 5,000 பேரினை வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு நிரந்தர அடிப்படையில் இணைத்துக்கொள்வதற்கு முன்மொழிவு.
  • வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு.

    ஊடகத்துறை மேம்பாடு
  • ஊடகவியலாளர்களின் திறன் அபிவிருத்திக்கு அவசியமான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு உயர் கல்வி புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு மற்றும் ஊடகவாகத்திற்கு அவசியமான தொழில்நுட்ப பிரவேசத்திற்கான உதவிகளை பெற்றுக்கொடுப்பற்கும் ரூபா 100 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிவு.

    விளையாட்டுக் கலாச்சாரத்தை உருவாக்குதல்
  • விளையாட்டுக் கலாச்சாரத்தை விருத்திசெய்தலானது, சமூகத்தில் ஆரோக்கியமான, ஒற்றுமையான மற்றும் “பலமான குடிமகன் – வெற்றிகரமான மக்களை” உருவாக்குகிறது. எனவே, விளையாட்டு வசதிகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் நமது குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டு கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 1,800 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக மேலும் ரூபா 800 மில்லியனை ஒதுக்க நாம் முன்மொழிவு.
  • கல்முனை விளையாட்டரங்கினை நிறைவு செய்வதற்காக ரூபா 150 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுக் கட்டிடத் தொகுதிகளை  அபிவிருத்தி செய்வதற்காக ரூபா 150 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

    பொருளாதார சுயாதீனம் மற்றும் உணவுப் பாதுகாப்பு
  • ரூபா 500 மில்லியனுக்கும் அதிக செலவில் நிர்மாணிக்கட்டப்பட்டு, பல்வேறு தொழில்நுட்ப காரணங்களினால் செயற்படாதிருக்கும் தம்புள்ளை குளிரூட்டல் களஞ்சியசாலை, விவசாய பொருட்களுக்கான களஞ்சியமாகத் திறம்பட பயன்படுத்தப்படுதல் வேண்டும். இக்களஞ்சியமானது, சுமார் 5,000 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்டதாகும். இக் களஞ்சியத்தினைப் பயன்படுத்துவதற்கு இடையூறாக இருக்கும் கட்டுமானப் பணிகளை நிறைவுசெய்யவும், சூரிய சக்தி மின் முறைமையினை நிறுவவும் இந்த வரவுசெலவுத்திட்டத்தில் ரூபா 250 மில்லியனை ஒதுக்கீடுசெய்ய முன்மொழிவு.
  • அரசாங்கம் அடையாளம் காணப்பட்ட 400 நீர்ப்பாசன முறைமைகளுக்கு நடுத்தர கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் ரூபா 4,000 மில்லியனை வழங்கவும், அதில் 100 நீர்ப்பாசன முறைமைகளை 2026 ஆண்டில் அமுல்படுத்துவதற்காக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு.
  • மில்கோ (பிரைவட்) லிமிடெட்டின் படல்கம பால் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளை மீண்டும் தொடங்குவது மிகவும் முக்கியமாகும். 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படல்கம பால் தொழிற்சாலை செயற்பாடுகள் முடங்கியுள்ளதுடன், அதற்காக ஏற்கனவே சுமார் ரூபா 18,000 மில்லியன் மக்கள் பணம் செலவிடப்பட்டுள்ளது. தொழிற்சாலையின் மீதமுள்ள பணிகளை நிறைவுசெய்யத் தேவையான அடிப்படைப் பணிகளுக்கு, குறிப்பாக இயந்திரங்கள் மற்றும் கட்டிடங்களைத் திருத்தி உற்பத்தியைத் தொடங்குவதற்கு ரூபா 3,000 மில்லியனை ஒதுக்கீடுசெய்ய முன்மொழிவு.

    தெங்குச் செய்கையை அபிவிருத்தி செய்தல்
  • இலங்கையின் வருடாந்த தெங்கு உற்பத்தி சுமார் 2,800 – 3,000 மில்லியன் தேங்காய்கள் என்பதுடன் இதில் சுமார் 70 வீதம் வீட்டு நுகர்வுக்காகவும் மீதி தெங்குசார் உற்பத்திக் கைத்தொழில்களுக்காகவும் பயன்படுத்தப் படுகின்றது. எவ்வாறாயினும், தற்போதைய வருடாந்த தெங்கு உற்பத்தி வீட்டு நுகர்வுக்கு போதுமாக இருந்த போதிலும், இது கைத்தொழில் கேள்விக்கு  ஏற்ற வழங்கலை நிறைவு  செய்வதற்கு போதுமானதல்ல. அதனால், தெங்கு உற்பத்தியை அதிகரிக்கும் நீண்டகால உபாயவழியாக, தெங்கு  ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் அடிப்படையில்  ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள வடக்கு தெங்கு  முக்கோண வலயத்தில் தெங்குச் செய்கையை தொடர்ந்தும் விஸ்தரிக்கும் பொருட்டு ரூபா 600 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்மொழிவு.
  • பாதுகாப்பானதும் தரமானதுமான மீன்பிடி படகுகளை இயக்குவதற்குத் தேவையான உதவிகளை வழங்குதல், வினைத்திறனைக் கூட்டுதல் மற்றும் விளைச்சலுக்குப் பிந்திய சேதங்களை கட்டுப்படுத்தல் ஆகிய விடயங்கள் மீது கவனம் செலுத்திய வண்ணம், பேருவளை, அம்பலாங்கொடை, குடாவெல்ல, நில்வெல்ல உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தல் என்பவற்றுக்காக ரூபா 300 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்வைக்கின்றேன்.

    மேலும், மீன்பிடித் துறைமுகங்களின் அத்தியவசிய உட்கட்டமைப்பு வசதிகளை  தொடர்ந்தும் மேம்படுத்துவதற்காக, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக ரூபா 1,000 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்வைப்பு.
  • விளைச்சலுக்குப் பிந்திய சேதங்களை குறைப்பதனூடாக தரமானதும் போதியதுமான மீண் விளைச்சலை பெற்றுக்கொள்வதன் மூலம் மீனவ சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக துறைமுகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ரூபா 500 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிவு.

    நீர்ப்பாசனக் கைத்தொழிலும் நீர்வழங்கலும்
  • வடக்கு மாகாணத்தின் யோதவாவியுடன் இணைந்த காணிகளில் விவசாயத்துறைக்கு ஈடுபடுத்தல், ஏற்கனவே உள்ள காணிகளின் உற்பத்தி விளைவுப் பெருக்கத்தை அதிகரித்தல், அதேபோன்று குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் மன்னார் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு பிரச்சனைக்கு தீர்வாக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பஹல மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தி கருத்திட்டம். முதலான கருத்திட்டங்களை துரிதப்படுத்துவதற்காக ரூபா 5,000 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகின்றது.
  • அணைக்கட்டுகள் மற்றும் வாவிகளை புனரமைத்தல்: சேனாநாயக்க சமுத்திரத்தின் வாண் கதவுகளை புனரமைக்கும் பணிகளை துரிதமாக ஆரம்பித்தல் உள்ளிட்ட கல்ஓயா, இராஜாங்கனய ஓயா, ஹுறுலு வாவி, மின்னேரியா வாவி உள்ளிட்ட வாவிகள் மற்றும் அணைக்கட்டுகளின் புனரமைப்பு பணிகளுக்காக ரூபா 6,500 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகின்றது.
  • சிறிய குளங்கள், வாய்க்கால்கள், அருவித்தொடர் முறைமையை மேம்படுத்துதல் மற்றும் ஏனைய புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ரூபா 8,350 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 650 குளங்கள் மற்றும் 350 கிலோமீற்றர் வாய்க்கால்கள் புனரமைப்புச் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

    நகர வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தல்
  • வெள்ளப்பெருக்கு காரணமாக அவதியுறும் கொழும்பு, கம்பஹா, காலி, அம்பாறை, மன்னார், புத்தளம் ஆகிய நகரங்கள் சார்ந்ததாக ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தலுக்கு துரித தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. இத்திட்டத்தை தயாரிப்பதற்கும் அமுல் செய்வதற்கும் இவ் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ரூபா 250 மில்லியன் ஒதுக்கீடு.
  • வளவ கங்கைக்கு மேலதிக நீரை அனுப்புவதற்கு மேலதிகமாக தற்சமயம் இரத்தினபுரி மற்றும் களுத்தறை மாவட்டங்களில் காணப்படுகின்ற வெள்ளப்பெருக்கு பிரச்சனைக்கும் பொருத்தமான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கும் முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரூபா 500 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிவு.
  • மாத்தறை நில்வளா கங்கைக்கு குறுக்காக 2022 ஆம் வருடத்தில் முடிக்கப்பட்ட உவர்நீர் தடுப்பு காரணமாக தற்சமயம் பல்வேறு தரப்பட்ட சிக்கல்களும் பிரச்சனைகளும் எழுந்துள்ளன. இது சம்பந்தமாக ஏற்கனவே ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. எனவே, அந்த ஆய்வின் மூலம் கண்டறியப்படுகின்ற தீர்வுகளை அமுல் செய்வதற்கு ரூபா 1,000 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகின்றது.  அதேபோல் இவ் வெள்ள அனர்த்த்தின் காரணமாக பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் விவசாயம் செய்வதற்கு  முடியாமல் போன வயல்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக ரூபா 1,200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு அவதானத்தை கட்டுப்படுத்துவதற்காக கிரான் பாலத்தையும், பொண்டுக்கள் சேனை பாலத்தையும் நிர்மாணிப்பதற்குத் தேவையான ஆரம்ப கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு ரூபா 500 மில்லியன் நிதியை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்குவதற்கு முன்மொழிவு.

    குடிநீர் வழங்கலை மேம்படுத்தல்
  • கம்பஹா,  களுத்துறை, அநுராதபுரம், கண்டி,யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் குருணாகல் முதலான மாவட்டங்களை உள்ளடக்கியதாக சமுதாய நீர்வழங்கல் கருத்திட்டமாக குடிநீர் வழங்கல் கருத்திட்டங்களை  செயற்படுத்துவதற்கு ரூபா 85,700 மில்லியன் ஒதுக்கீடு.

    பொதுப் போக்குவரத்து
  • “பொதுமக்கள் போக்குவரத்துச் சேவை – வினைத்திறன் மிக்க பயணமுடிவு” என்ற அரசாங்கத்தின் நீண்டகால நோக்கை அடைவதற்கு  வினைத்திறன் மிக்கதும் நிலைபேறானதுமான பயணிகள் போக்குவரத்து முறைமையொன்றை ஏற்படுத்துவதே தற்போதய அரசாங்கத்தின் முதன்மை எதிர்பார்ப்பாகும். இதற்காக இவ்வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ரூபா 67,200 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகின்றது.
  • பொதுப் போக்குவரத்துத் துறையை பலப்படுத்தும் பொருட்டு தூர பயணச் சேவைகளுக்காக 600 பஸ் வண்டிகள் இலங்கைப் போக்குவரத்து சபை மூலம் போக்குவரத்துக்கு ஈடுபடுத்தப்படவுள்ளது.
  • ஒரு சில வீதிகளில் ஓடும் பஸ் வண்டிகளுக்கு போதிய வருமானம் கிடைக்காமை காரணமாக தனியார்துறை போக்குவரத்து சேவைகளை வழங்குவோர் தமது பஸ் வண்டிகளை அவ் வீதிகளில் செலுத்துவதை மட்டுப்படுத்துகின்றார்கள். நிலைபேறான போக்குவரத்து சேவையொன்றை வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டமொன்றை வகுப்பதற்கு யோசனை முன்வைக்கப்படுவதுடன், இடைக்காலத் தீர்வொன்றாக ரூபா 2,000 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு.

    வீதி அபிவிருத்தி
  • நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பெரும்பாலான வீதி அபிவிருத்தி கருத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன. மீண்டும் அவ்வீதி அபிவிருத்திக் கருத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு ஒட்டுமொத்த வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் 2026 ஆம் வருடத்திற்கு ரூபா 342,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கடவத்தை – மீரிகமை வீதிப் பகுதியின் அபிவிருத்திப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2026 வருடத்திற்கு ரூபா 66,150 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக பாதுகாப்பு வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்
  • இலங்கை பொலிஸ் வீதி விபத்துக்கள் அறிக்கைக்க​ அமைய 2024 ஆம் வருடத்தில் 24,589 வீதி விபத்துக்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. இதில் 2,262 உயிராபத்து விபத்துக்கள் ஆகும். இவ் விபத்துக்கள் காரணமாக 2,368 உயிர்கள்  இழக்கப்பட்டுள்ளன. வீதிப் பாதுகாப்புடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் பரந்த அளவிலான  வீதிப் பாதுகாப்பு வேலைத் திட்டமொன்றை அமுல் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, மேலும், ரூபா 1,000 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிவு.

    நகர அபிவிருத்திக்கான புதிய அணுகுமுறை
  • யாழ்ப்பாணம், எஹெலியகொடை, மட்டக்களப்பு, சிலாபம், மாத்தறை உள்ளடங்கலாக தீவு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 10 நகரங்களின் சாத்திய வளங்களை அடையாளங்காணும் ஆரம்ப பணிக்காக ரூபா 2,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்ட அதேவேளை தேவை மற்றும் முன்னேற்றத்திற்கு ஏற்ப வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  • திண்மக்கழிவுகளை முறையாக அகற்றுவதற்கும், பராமரிப்பதற்கும் வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி அமைச்சின் கீழ் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை செயல்படுத்துவதற்காக, ரூபா 900 மில்லியன் நிதி ஒதுக்கீடு.

    சகலருக்கும் பாதுகாப்பான உறைவிடம்
  • வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றினை 2026 ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், அவ்வேலைத் திட்டத்தின் கீழ், தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் அடங்கலாக 27,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பு.
  • குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வீட்டுவசதிப் பிரச்சினைகளுக்கு தீர்வாக, அடுத்த ஆண்டு முதல் “தமக்கெனதோர் இல்லம் – அழகான வாழ்க்கை” வீட்டுவசதி நிகழ்ச்சிதிட்டம்  கட்டம் கட்டமாக  நடைமுறைபடுத்தபடும், மேலும், அதன் கீழ் நடுத்தரக் காலத்தில் 70,000 வீடுகளைக் நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்நோக்கத்திற்காக, 2026 இல் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 7,200 மில்லியனுக்கு மேலதிகமாக மேலும் ரூபா 3,000 மில்லியன்களை ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு.
  • அப்பிள் வத்த, மாதம்பிட்டிய, பெர்குசன் மாவத்தை, ஒபேசேகரபுர, ஸ்டேடியம்கம, கொலம்பகே மாவத்தை மற்றும் டொரிங்ரன் பிளேஸ் ஆகிய இடங்களில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 2026 வருடத்திற்கு ரூபா 15,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு.
  • மகறகமை மற்றும் கொட்டாவை ஆகிய இடங்களில் சுமார் 1,996 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுவரும் அதேவேளை,  அதற்காக ஏற்கனவே ரூபா 6,500 மில்லியன்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வீடுகளுள் ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்காகவும் வீடுகள் வழங்கப்படும்.
  • இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் மத்திய, ஊவா, சபிரகமுவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் வசிக்கும் மலையக தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 2,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக ரூபா 4,290 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் 943 வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கு  ரூபா 1,305 மில்லியன்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மண்சரிவு மற்றும் வேறு சுற்றுச்சூழல் காரணங்களால் பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 9,000 கிராமப்புற மற்றும் தோட்டப்புற குடும்ப அலகுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாண்டில் 1,200 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிப்பதற்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூபா 1,000 மில்லியனுக்கு மேலதிகமாக ரூபா 2,000 மில்லியன்  நிதி ஒதுக்கீடுசெய்ய முன்மொழிவு.
  • வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போர் காரணமாக எந்தவொரு வீடும் அற்ற குடும்பங்களுக்காக  2,500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு  தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 3,850 மில்லியன் ஒதுக்கீடு, ரூபா 5,000 மில்லியனாக அதிகரிக்கப்படும்.

    அரச சேவைக்கான ஆட்சேர்ப்பினை முறைப்படுத்தல்
  • பிரதமரின் தலைமையில் தாபிக்கப்பட்டுள்ள அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பதவியணி முகாமைக்கான குழுவினூடாக மேற்கொள்ளப்பட்ட முறையான ஆய்வின் பின்னர் சுமார் 75,000 பேரை உரிய முறையின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அரசாங்க நிறுவனங்களுக்கு தேவையான வாகனங்கள்/ உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இயந்திரோபகரணங்களை பெற்றுக்கொடுத்தல்
  • அரச  நிறுவனங்களுக்கு அத்தியாவசிய வாகனங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலத்தின் இறுதியில் அவற்றைத் திருப்பிப் பெறும் அடிப்படையில் வழங்கப்படும் வாகனங்கள் மற்றும் இயந்திரோபகரணங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள அதேவேளை  இதற்காக ஆரம்பத்தில் ரூபா 12,500 மில்லியன் ஒதுக்கீடுசெய்ய முன்மொழிவு.

    அரசாங்க நிறுவனங்களில் நிலுவையில் உள்ள நியதிச்சட்ட கொடுப்பனவுகளைத் தீர்ப்பனவுசெய்தல்
  • பல அரசாங்க தொழில்முயற்சிகளுக்கு பணியாளர்ளை ஆட்சேர்ப்புச் செய்யும்போது  அரசியல் ஆதரவை கருத்திற்கொண்டு வேலைவாய்ப்பு  வழங்கும் இடங்களாகவும்  முறையான முகாமைத்துவ அல்லது நிதி ஒழுக்கம்  இல்லாமல் செயற்பட்டதால் பல அரசாங்க  நிறுவனங்கள்  மக்களுக்கு  பெரும் சுமையாக மாறி, வங்கிகளுக்கு கடன்பட்டு, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி மற்றும் வரிகளை செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
  • 1.  வரையறுக்கப்பட்ட இலங்கை சீனி (தனியார்) நிறுவனம்
  • 2. மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை
  • 3. இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம்
  • 4. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
  • 5. இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம்
  • 6. தேசிய கால்நடை அபிவிருத்தி சபை
  • 7.  வரையறுக்கப்பட்ட எல்கடுவ  பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம்
  • 8. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
  • 9. நோர்த் சீ நிறுவனம்
  • 10. சிலோன் செரமிக்ஸ் கூட்டுத்தாபனம்

    ஆகிய 10  அரசு தொழில்முயற்சிகளில் நிலுவையாக உள்ள  ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம், பணிக்கொடை போன்ற நியதிச்சட்ட கொடுப்பனவுகள் மற்றும் வரிகளின் நிலுவைத் தொகையைத் தீர்ப்பனவு செய்வதற்கு ரூபா 11,000 மில்லியன்  தேவைப்படுகிறது. இவ்வாறு செலுத்தப்படாத நியதிச்சட்டக் கொடுப்பனவுகளை, கட்டம் கட்டமாக செலுத்த முன்மொழியும் அதேவேளை, 2026 ஆம் ஆண்டிற்கு ரூபா 5,000 மில்லியன் ஒதுக்கீடுசெய்ய முன்மொழிவு.
  • கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில்  பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்படாதிருப்பதனால், இக் கொடுப்பனவை 1,500 ரூபாவால் அதிகரிப்பதற்கும் அதிபர் பதவியில் பணியாற்றும் அதிபர்களுக்கு வழங்கப்படும் அதிபர்  கொடுப்பனவை 1,500 ரூபாவால் அதிகரிக்கவும் முன்மொழிவு.

    வாகனங்கள் மீது சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீட்டினை விதித்தல்
  • வாகனங்கள் விற்பனையின் போது அறவிடப்படும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு அறவீடு முறையாக அறவிடப்படுவதில்லை என்பது அவதானிக்கப்படுகின்றது. எனவே, வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அல்லது உற்பத்தி  மற்றும் விற்னையின் போது  சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீட்டினை சேகரித்து, விற்பனைக்குப் பின்னான சந்தர்ப்பத்தில் இந்த வரியை விலக்களிக்க முன்மொழிகின்றேன். இதனை 2026 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

    தேசிய தீர்வைக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்
  • தற்சமயம் நடைமுறையிலுள்ள 0%, 15%, 20% என்ற தீர்வை வரி விகிதங்களை, 2026 ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வருமாறு தீர்வை விகிதங்களை 0%, 10%, 20%, 30% என்றவாறு தேசிய தீர்வை கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் முன்மொழிவு.

இலங்கையின் பரந்த பொருளாதார  மறுசீரமைப்பு  நிகழ்ச்சித்திட்டம் தற்பொழுது திருப்திகரமான முன்னேற்றத்தை தொடராக இடம்பெறச் செய்கின்றது என சர்வதேச ரீதியாகப் பராட்டப்படுகின்ற இத் தருணத்தில், இலங்கை சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாகவும், உலகில் முதற் தர சுற்றுலா பயணிகள் அடைவிடமாகவும் சர்வதேச மட்டத்தில் பேர்பெற்றுள்ள தருணத்தில், உலகில் சனநாயக சுட்டிக்கு  அமைவாக எமது தேசம் 15 படிகள் முன்னேற்றமடைந்துள்ள இத் தருணத்தில், உலகில் ஊழலுக்கு எதிரான செயன்முறை சிறந்த பாராட்டத்தைப் பெற்றுள்ள இத்தருணத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தை சமர்ப்பிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம் என ஜனாதிபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூபா 5,000 கொடுப்பனவு!

0
  • தமது பிள்ளைகளுக்கு கல்வியூட்டுவதற்கு  புத்தகங்கள், உபகரணங்கள் மற்றும் காகிதாதிகளுக்கான  செலவைக் குறைத்து அவர்களின்  கற்கைகளுக்கு தேவையான காகிதாதிகளை ஒவ்வொரு பிள்ளையும் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்யும் நோக்குடன் 2025 ஆம் ஆண்டில்  மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூபா  6,000 காகிதாதிகள் கொடுப்பனவுகளை 2026 ஆம் ஆண்டிலும் நாம்  தொடர்ந்து வழங்குவோம். இந்நோக்கத்திற்காக அஸ்வெசும நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  ரூபா 9,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கல்வி, அனைத்து பிள்ளைகளினதும் அடிப்படை உரிமையாகக் கருதப்படுவதனால் அனைவரையும் உள்ளடக்கும் கல்வியினூடாக மாற்றுத்திறனுடைய பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், கல்வியில் மாற்றுத்திறன்கூடிய பிள்ளைகளின் ஈடுபாடு குறைவாகவே காணப்படுகின்றது. மருத்துவப் பரிந்துரையின் அடிப்படையில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி  பிள்ளையொன்றுக்கு ரூபா 5,000  கொண்ட மாதாந்த்க் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு இவ்வாண்டின் வரவு  செலவுத்திட்டத்திலிருந்து ரூபா  50 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்மொழிகின்றோம்.
  • கடந்த தசாப்தத்தில் பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்ளும்  மாணவர்களின்  எண்ணிக்கை 43,000 ஆக அதிகரித்துள்ள போதிலும், அவர்களுக்கு போதிய வசதிகள் இன்மையானது  பல பிரச்சனைகளைத் தோற்றிவித்துள்ளது.  எனவே, மாணவர்களுக்கான விடுதிகள், உணவகங்கள் மற்றும் பொது​ கற்றல் பிரதேசங்கள் போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கு  ரூபா 2,500 மில்லியன் ஒதுக்கீடு   செய்யப்பட்டுள்ளது.

புதிய பட்ஜெட்டில் வலதுகுறைந்த சமூகத்திற்கு சிறப்புத் திட்டம்!

0

நாடுபூராகவும் சிதறிவாழும் சுமார் 1.6 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட வலது குறைந்த சமூகம், நாட்டின் ஒட்டுமொத்த சனத்தொகையில் 7 வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இச்சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய பிரகடனத்தை அங்கீகரித்த நாடு என்ற வகையில் அச்சமூகத்தின் உரிமைகள் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பினை அரசு கொண்டுள்ளது.

  •  அஸ்வெசும நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக சுமார் 140,000 வலது குறைந்த மக்களுக்கு ரூபா 10,000 வீதப்படி உதவித்தொகை வழங்குவதற்காக ரூபா 19,000 மில்லியன் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட வலது குறைந்தோர்களுக்கான அணுகுமுறை ஒழுங்கு விதிகளை, தற்காலத்திற்கு ஏற்ற விதத்தில் வகுப்பதை பிரதான பணியாகக்  கொண்டு சர்வதேச தரங்களுக்கும் அளவு கோள்களுக்கும் ஏற்ப திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வலது குறைந்தோர்களுக்காக  பிரதேச  செயலகங்கள், புகையிரத நிலையங்கள், பஸ்தரிப்பு நிலையங்கள், நீதிமன்றங்கள், பொலிஸ் நிலையங்கள் முதலான பொது இடங்களுக்கு செல்வதற்கான வசதிகளை வழங்குதல்  என்பவற்றுக்காக வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ரூபா  1,000 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்மொழிகின்றோம்.
  • வலது குறைந்தோரை அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடைமுறை; அரச சேவையின்  3 சதவீதம்  வலது குறைந்தோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என  உத்தயோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாயினும் இது முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. எனவே,  அரச சேவைக்கு மேற்குறிப்பிடப்பட்டவாறு 3 சதவீதத்தை ஆட்சேர்ப்புச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • வலது குறைந்தோரின் பங்களிப்பை தேசிய பொருளாதாரத்திற்குப் பெற்றுக் கொள்வதை நோக்காகக்   கொண்டு, தனியார் தொழில்தருநர்களை ஊக்குவித்தல் மற்றும் தொழில் வாய்ப்புகளை விருத்தி செய்தல் எனும் நோக்குடன் தொழில் ஒன்றில் ஈடுபடக்கூடிய மட்டத்தில் இருக்கின்ற வலது குறைந்தோரை  தனியார் துறையில் தொழில் ஒன்றில் ஈடுபடுத்திக் கொள்வதாயின், ரூபா  15,000 என்ற உச்ச வரம்பிற்கு கட்டுப்பட்டு ஊழியரின் சம்பளத்தில்  50 சதவீத சம்பள உதவித் தொகை  24 மாதங்கள் வரை அரசாங்கத்​தினால் செலுத்துவதற்கு நாங்கள் பிரேரணை முன்மொழிகின்றோம். இதற்காக ரூபா 500 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.
  • ஒட்டிசம் உள்ளிட்ட வலதுகுறைந்த பிள்ளைகளுக்காக பகல்நேர பேணிப்பாதுகாத்தல் நிலையங்களை அமைக்கும் பணிகள், சுகாதார  அமைச்சு மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இப் பணிகளை அடுத்த வருடத்திலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின்கீழ் ரூபா 100 மில்லியன் நிதியும், சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் ரூபா 447 மில்லியன் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இப் பணிகளை தொடர்ந்தும்  விஸ்தரிப்பதற்கும் பகல்நேர  பாதுகாப்பு  நிலையங்களை அமைப்பதற்கும், மேலதிகமாக ரூபா  500 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்மொழிகின்றோம்.

வடக்கிற்கு அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள்!

பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து மீண்டெழுந்துகொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களை வழங்கியமைக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு வடக்கு மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்துக்கு 42 ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 36 பேர் சுதேச வைத்தியத்துறையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கும், 6 பேர் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தின் கீழும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமன நிலையங்களை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (07.11.2025) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர், வேலை இல்லை என்று சொல்லி தங்களுக்கு அரசாங்க வேலை கோருவார்கள். வேலை கிடைத்த பின்னர் வீட்டுக்குப் பக்கத்தில் திணைக்களத்தைக் கேட்பார்கள். நீங்கள் அப்படிச் செய்யக்கூடாது. இதுவரை காலமும் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் இல்லாமையால் அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மிகப் பெரும் சவால்களை நாம் சந்தித்திருந்தோம். இந்த நியமனங்கள் ஊடாக அது சரிசெய்யப்பட்டுள்ளது.

சுதேச மருத்துவம் என்பது ஒரு சாதாரண சிகிச்சை முறை மட்டும் அல்ல. அது நமது தொன்மையான பண்பாட்டு மரபின் உயிரோட்டம். நமது மண்ணின் செடிகள், மூலிகைகள், இயற்கை வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் தலைமுறைகளின் அனுபவ ஞானத்தின் அழகிய சங்கமமே இந்த சிகிச்சை முறை. இந்த மரபு தொலைந்து போகாமல் பாதுகாக்கப்படவேண்டும்; புதிய தலைமுறைக்கு உரிய முறையில் பரிமாறப்படவேண்டும்; அதில் நீங்கள் வகிக்க உள்ள பங்கு மிகப் பொறுப்பானதும் பெருமைமிக்கதுமானதாகும்.

உங்கள் சேவை ஒரு மருந்தளிப்பு அல்ல — அது ஒரு ஆறுதல், ஒரு நம்பிக்கை, ஒரு மனிதநேயம். இன்று நீங்கள் பெறும் நியமனம் ஒரு வேலை வாய்ப்பு அல்ல. இது ஒரு மக்கள் சேவைக்கான உறுதி. மக்கள் உங்களை நம்பி வரும்போது, அந்த நம்பிக்கையை நீங்கள் காக்க வேண்டும்.

ஒவ்வொரு நோயாளியையும் சந்திக்கும் போது, ‘இந்த நிலை நான், அல்லது எனது குடும்பம் என்றால் நான் எப்படி அணுகுவேன்?’ என்று நீங்கள் உங்களிடம் கேளுங்கள். அந்த ஒரு கேள்வியே உங்களை சிறந்த சேவை வழங்கும் வழியில் நடத்தி செல்லும்.

வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தை, மக்கள் சேவைக்கு மிக நெருக்கமான, அணுகத்தக்க மற்றும் செயல்திறனான இடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாகாண நிர்வாக அலுவலகங்களை யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு மட்டுமே வைத்திருக்காமல், மாகாணம் முழுவதுக்கும் அணுகுமுறையை சமமாக்கும் வகையில் பல திணைக்களங்கள் நிலப்பரப்பாகப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. கிளிநொச்சியில் காணித் திணைக்கள அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதும், மாங்குளத்தில் நீர்பாசனத் திணைக்களம் செயல்பட்டு வருகின்றதும் அதன் எடுத்துக்காட்டுகளாகும். இதேபோன்று, சுதேச வைத்தியத்துறையையும் மக்களுக்கு அதிகளவில் பயனளிக்கும் மையத்திலேயே நாம் அமைப்போம்.

நீங்கள் சேவையாற்றத் தயாராகுங்கள் — உங்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கமும் மாகாண நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. உங்களின் சேவையின் தொடக்கம் இன்று. அந்த சேவையின் அர்த்தத்தை மக்கள் தீர்மானிப்பார்கள். நீங்கள் அவர்கள் மனதில் நம்பிக்கையின் விளக்காக விளங்கிட வாழ்த்துகிறேன், என்றார்.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன், வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்திய கலாநிதி தில்லையம்பலம் சர்வானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாகவில்லு பாடசாலைக்கு நவீன விஞ்ஞான ஆய்வுகூடம்!

நவீன விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய வளாகத்தில் பாடசாலையின் அதிபர் ஜனாப் S.M. Husaimath அவர்களின் தலைமையில் நேற்று 06.11.2025 மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளின்பேரில், குறித்த விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான கட்டிடம் பாடசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட உள்ளது.

அந்த வகையில் அல்ஹாஹ் லுக்மான் சஹாப்தீன் (LLB, AAL), Senior Deputy Director of Customs அவர்களின் முயற்சியாலும், நிதி வழங்குனர் ஒருவரின் பங்களிப்பினாலும், நவீன விஞ்ஞான ஆய்வு கூட கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் புத்தளம் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், புத்தளம் வலயக் கல்வி பணிப்பாளர், கோட்ட கல்வி பணிப்பாளர்கள், றினைசன்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அரச ஊழியர்களுக்கு பல சலுகைகள்!

0

வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு பல சலுகைகள்

1. 2016.01.01 அன்று அல்லது அதற்குப் பிறகு பொது சேவையில் சேர்க்கப்படும் அதிகாரிகளுக்கு தற்போதுள்ள ஓய்வூதிய முறைக்கான உரிமை உறுதி செய்யப்படும்.

2. அனைத்து அரச ஊழியர்களின் 2025 சம்பள திருத்தத்தின் இரண்டாம் கட்டம் 2026 ஜனவரி முதல் செயல்படுத்தப்படும்.

3. அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒரு சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு நிறுவப்படும்.

4. அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சொத்து கடன் திட்டம் புதிய கட்டமைப்பின் கீழ் ரூ. 5 மில்லியனாக அதிகரிக்கப்படும்

5. அரச ஊழியர்களுக்கான அக்ரஹார திட்டத்தின் சுகாதார சலுகைகள் விரிவுபடுத்தப்படும்.

6. அரச ஊழியர்களின் வட்டியில்லா பண்டிகை முன்பணம் கொடுப்பனவை ரூ.15,000 ஆக அதிகரித்தல்

7. அரச ஊழியர்களின் பேரிடர் கடன் முற்பணத்தை ரூ.4 லட்சமாக உயர்த்தி, குறுகிய காலத்தில் எந்த தடையும் இல்லாமல் பெறும் வகையில் ரூ.10,000 மில்லியன் ஒதுக்கீடு

8. கஷ்டப் பிரதேசத்தில் சேவையில் ஈடுபடும் ஆசிரியர்களின் மற்றும் அதிபர்களின் கொடுப்பனவை 1500 ரூபாவால் அதிகரிக்க முன்மொழிவு

9. பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் உள்ள நுழைவாயில் காவலர்களின் கொடுப்பனவை ரூ.15,000 ஆக உயர்த்த ரூ.250 மில்லியன் ஒதுக்கீடு

10. தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு முறையான நிரந்தர நியமனங்களை வழங்க முன்மொழிவு.

தேசிய ரீதியில் சாதித்த பு/ உமர்பாரூக் பாடசாலை!

0

(உடப்பு – க.மகாதேவன்)

தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றிய புளிச்சாக்குளம் உமர்பாரூக் பாடசாலை இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

அந்த வகையில் மெய்வல்லுனர் சுற்றுத்தொடரின் உயரம் பாய்தல் போட்டியில் புளிச்சாக்குளம் உமர்பாரூக் பாடசாலை மாணவி ஏ.டபில்யு.பி. தனுத்ரா இரண்டாம் இடத்தைப் பெற்று இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

இது உமர்பாரூக் பாடசாலை வரலாற்றில், ஒரே வருடத்தில் பெற்றுக்கொண்ட மூன்றாவது தேசிய வெற்றியுமாகும் என பாடசாலை அதிபர் எம்.யூ.எம். சாஜஹான் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பல சிரமங்களுக்கு மத்தியில் தேசிய போட்டிவரை சென்று கலந்துகொண்டு வெற்றி பெற்று பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்த இம் மாணவியை கெளரவப்படுத்தும் நிகழ்வு இன்று (7) பாடசாலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.