Tuesday, December 23, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 9

ஆரம்பமாகும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி!

0

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

அதேநேரம் மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிக மழைவீழ்ச்சி!

0

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி நில்வளா கங்கையை அண்டிய அக்குரஸ்ஸ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். 

இன்று (5) காலை அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், அப்பிரதேசத்தில் 125 மி.மீ. இற்கு அண்மித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். 

எனினும், ஏனைய பல பிரதேசங்களில் சாதாரண மழைவீழ்ச்சியே பெய்துள்ளதாகவும், கங்கைகளின் நீர்மட்டங்களில் பெரிய அதிகரிப்பைக் காட்டவில்லை எனவும் அவர் கூறினார். 

அத்துடன் ஏனைய பிரதேசங்களில் மழை பெய்யாததினால் கங்கைகளின் நீர்மட்டங்களில் அதிகரிப்பு ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதேவேளை, குளங்கள் கட்டமைப்பில் அபாயகரமான வான் பாயும் நிலைமை இல்லை எனவும், பல குளங்கள் வான் மட்டத்திலோ அல்லது சாதாரண அளவிலோ வான் பாய்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

எனினும், மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும், அதனால் எதிர்காலத்தில் கிடைக்கும் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப அந்தந்த கங்கைகளின் அளவீட்டு நிலையங்களின் தரவுகளைக் கருத்திற்கொண்டு மக்களுக்கு அறிவிப்பதாகவும் அவர் கூறினார். 

ஆகவே அச்சமடைவதைத் தவிர்க்குமாறும், உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தவிர வதந்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

ரணில் கூட்டிய அரசியல் கட்சித் தலைவர்களின் நேற்றைய கூட்டம்!

0

இலங்கையில் ஏற்பட்டுள்ள மிகவும் பேரழிவு சூழ்நிலையை எந்த அரசாங்கமும் தனியாக எதிர்கொள்ள முடியாது என்பதால், எதிர்காலத்தில் அனைவரின் ஒற்றுமையின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்று இலங்கையின் அரசியல் கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் நேற்று (03) தெரிவித்தனர்.

எட்டாவது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், கொழும்பு பால் சாலை அரசியல் கட்சி அலுவலகத்தில் நேற்று (03) மாலை கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது.

நாட்டில் பதிவுசெய்யப்பட்ட 35க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் அவற்றின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தக் கலந்துரையாடலில், “தித்வா” சூறாவளியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்முறையை வழிநடத்த அனைத்து மத, அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. முதல் கூட்டத்திற்குத் தலைமை தாங்க நான்கு மகாநாயக்க தேரர்களை அழைக்கவும் முன்மொழியப்பட்டது.

மேலும், நல்லிணக்க செயல்முறையை முன்னோக்கி எடுத்துச் செல்ல இந்து விவகார அமைச்சர், அமைச்சக செயலாளர் மற்றும் இந்து விவகார பணிப்பாளர் ஆகியோரை நியமிப்பது குறித்து இந்து பிரமுகர்களுடன் விவாதிக்கப்பட்டு கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

கட்சித் தலைவர்கள் தற்போது அரசியலமைப்பை மீறிச் செயல்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர்கள், பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி அரசியல் குழு இன்று அரச அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர்.

கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டு, பெலவத்தையிலிருந்து அதிகாரம் அகற்றப்பட்டு மீண்டும் பாராளுமன்றத்திற்கு மாற்றப்படுவதை உறுதி செய்வதற்கான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

வடக்கின் நெற்செய்கையை முற்றாக அழித்த பேரிடர்!

வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களை மாவட்ட அரசாங்கதிபர் பார்வையிட்டார்.

கடந்த 28ம் திகதி ஏற்பட்ட டித்வா புயல் தாக்கம் காரணமாக இரணைமடு குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வான் கதவு திறந்து விடப்பட்டமையால் தாழ் நிலப்பகுதிகளான பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை, பெரியகுளம் போன்ற பகுதிகளில் பல ஏக்கர் நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

இவற்றை ஆராயும் நோக்கில் மாவட்ட அரசாங்கதிபர் பெரியகுளம் பகுதிக்கு சென்று அழிவடைந்த நெல் வயல் நிலங்களை பார்வையிட்டார். அரசாங்க அதிபருடன் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் உள்ளிட்டோர் குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டனர்.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் விவசாயிகள், ஏற்பட்ட அனர்த்தத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வெறும் 45 நாட்களில், கடந்த 28-ம் திகதி ஏற்ப்பட்ட வெள்ளம், இரணைமடு குளத்தின் நீர் வடிந்துதோடும் பகுதிகளில் உள்ள பல விவசாயிகளின் நெற்செய்கை முற்று முழுதாக அழிவை ஏற்படுத்தியதாகவும், இதற்கான கொடுப்பனவுகள் முற்று முழுதாக விவசாயிகளுக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும், தற்போதைய அரசாங்கம் எமக்கு ஏற்பட்ட அழிவுக்கான கொடுப்பனவை முற்றும் முழுதாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

குறித்த இழப்பீடு கிடைக்கப்பெறுமாயின் தொடர்ச்சியாக நெற்செய்கை மேற்கொள்ளக்கூடிய நிலை உருவாகும் எனவும், இல்லையேல் விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

அபாயத்துடன் பாலத்தை கடக்கும் வடக்கு மக்கள்!

அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கிளிநொச்சி-முல்லைத்தீவு மாவட்டத்திற்க்கு இடைப்பட்ட கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்குனை பகுதியில் அமைந்துள்ள பாலம் முற்றாக சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

இருப்பினும் மக்கள் அப்பாலத்தின் ஊடாகவே நடந்து தமது பிரயாணத்தை மேற்கொண்டு வருவதை அடுத்து தற்பொழுது இராணுவத்தினர் மக்களின் பாதுகாப்பிற்காக பாலத்தின் ஒரு பகுதியில் மக்கள் நடந்து தமது போக்குவரத்தை மேற்கொள்வதற்காக வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

அந்த வகையில் தற்பொழுது கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் புளியம்பொக்குனை பகுதி வரை தமது சேவையை முன்னெடுக்கின்றனர்.

அதேபோன்று முல்லைத்தீவு பகுதியில் இருந்து புளியம்பொக்குனை வரை பேருந்துகள் தமது சேவையை முன்னெடுத்துள்ளதுடன், இடைப்பட்ட பகுதியில் மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் பாலத்தைக் கடந்து தமது நாளாந்த தேவையினை பூர்த்தி செய்து வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புத்தளம் -நுரைச்சோலை பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை!

0

ஜூட் சமந்த

தனது மாமனார் மற்றும் மாமியாரை வெட்டிக் கொலை செய்ததாகக் சந்தேகிக்கப்படும் ஒரு சந்தேக நபரை நுரைச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புத்தளம், மின்னியா, தலுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

மின்னியா, தலுவ பகுதியைச் சேர்ந்த சிரில் ஜெயசீலன் (38) மற்றும் நடராஜா சசிகலா (35) ஆகிய தம்பதியினரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் நேற்று 3ஆம் தேதி மதியம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் மகளை திருமணம் செய்தவர் என தெரிவியவந்துள்ளது.

சந்தேக நபரின் கொடூரமான தாக்குதலால் காயமடைந்த அவரது மனைவி தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர், தனது மாமனார் வீட்டிற்குச் சென்று தனது குழந்தையைக் கேட்டுள்ளார்.

குழந்தையை தங்கள் மருமகனிடம் ஒப்படைக்க மாமனாரும் மாமியாரும் மறுத்த நிலையில், ​​இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து கூர்மையான ஆயுதம் கொண்டு வந்த மருமகன், தனது மாமனார் மற்றும் மாமியாரை கொடூரமாக தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்த தம்பதியினரை அப்பகுதி மக்கள் புத்தளம் பொது மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று 3ஆம் தேதி இரவு நுரைச்சோலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாகவில்லு குறுக்கு வீதிகளை புனரமைக்கும் பணி தீவிரம்!

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.

அந்த வகையில் டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் புத்தளம் மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட நாகவில்லு கிராமம் முழுமையாக இந்த வெள்ள அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பிவரும் நிலையில் நாகவில்லு கிராமத்தில் சுமார் 5 தினங்கள் மூன்று வேலைகளிலும் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டதுடன், இரண்டு தினங்களுக்கு இலவச தண்ணீர் விநியோகமும் இடம்பெற்றது.

வெள்ள அனர்த்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாகவில்லு கிராமத்தின் குறுக்கு வீதிகளை செப்பனிடும் பணிகள் நேற்றைய தினமும் இரண்டாவது நாளாக இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், புத்தளம் பிரதேச சபை கெளரவ உறுப்பினருமான ஜனாப் லரீப் காஸிம் அவர்களின் வழிகாட்டுதலில் குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஊர் தனவந்தர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் முழுமையான நிதிப்பங்களிப்பில் நாகவில்லு கிராமத்தில் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை அனர்த்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாகவில்லு மக்களின் வீடுகளுக்கு அரச அதிகாரிகள் தற்போது கள விஜயங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3.25 மில்லியன் நிதி உதவி செய்த தேர்ஸ்டன் கல்லூரி!

0


தேசிய அனர்த்த முகாமைத்துவ முயற்சிகளை வலுப்படுத்த 3.25 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கிய தேர்ஸ்டன் கல்லூரி

தேசிய அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு ஒத்துழைக்கும் வகையில், ரூபா 32 லட்சத்து 50ஆயிரம் நிதிப் பங்களிப்பு இன்று பாதுகாப்பு அமைச்சில் வைத்து பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்த (ஓய்வு) அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்த நன்கொடையை தேர்ஸ்டன் கல்லூரி நம்பிக்கை நிதியத்தின் (Thurstan College Trust Fund) தலைவர் திரு. நோயல் ஜோசப் அவர்கள் வழங்கினார்.

இந்த மொத்த பங்களிப்பில் கல்லூரியின் நம்பிக்கை நிதியத்திலிருந்து ரூ. 22 லட்சத்து 50ஆயிரம் மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள தேர்ஸ்டன் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரிடம் இருந்து ரூ.10 லட்சம் என்பன உள்ளடங்குகின்றன.

இது தேசிய நலன் மற்றும் அனர்த்த நிவாரண முயற்சிகளுக்கான தேர்ஸ்டன் சமூகத்தின் வலுவான கூட்டு ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது.

பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்த (ஓய்வு) அவர்கள், நாட்டின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணத் திறன்களை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட சரியான நேரத்திலான மற்றும் அர்த்தமுள்ள ஆதரவுக்கு தனது பாராட்டைத் தெரிவித்தார்.

அத்துடன், நன்கொடையாளர்களின் தாராள மனப்பான்மை மற்றும் தேசிய உணர்வையும் பாராட்டினார்.

பாதிக்கப்பட்ட தொழிலதிபர்களின் விபரங்கள் திரட்டு!

0

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட தொழில்கள் குறித்த தரவுகளைச் சேகரிக்க தொழில்துறை அமைச்சு ஒரு பொறிமுறையைத் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள் இந்தத் தரவு அமைப்பிற்கு விரைவாக தகவல்களை வழங்குமாறு அமைச்சு கேட்டுக்கொள்கிறது.

மேலும் இந்தத் தரவு அமைப்பிற்கு தேவையான தகவல்களைச் சேகரிப்பது டிசம்பர் 16, 2025 அன்று பிற்பகல் 2 மணிக்குள் நிறைவுபெறும்.

www.industry.gov.lk மூலம் தகவல்களை உள்ளிடலாம். உங்கள் சம்பந்தப்பட்ட பிரதேச செயலக அலுவலகத்திலும் மாவட்ட செயலக மட்டத்திலும் அமைந்துள்ள தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சக அதிகாரியிடமிருந்து தேவையான உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

புத்தளம்-அனுராதபுரம் வீதியில் புதிய இரும்பு பாலம்!

0

ஜூட் சமந்த

புத்தளம்-அனுராதபுரம் பிரதான வீதியில் 9ஆவது மைல்கல்லில் இடிந்து விழுந்த கான்கிரீட் பாலத்திற்கு பதிலாக புதிய இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் வீதி மேம்பாட்டு அதிகாரசபை அலுவலகம் தெரிவித்துள்ளது.

நிலவும் மோசமான வானிலை காரணமாக பாலம் இடிந்து விழுந்தது.

இதன் காரணமாக, புத்தளம்-அனுராதபுரம் வீதியில் அனைத்து போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.

புதிய பாலத்தின் விரைவான கட்டுமானத்திற்காக இராணுவ வீரர்கள், கருவலகஸ்வெவ பிரதேச செயலகம் மற்றும் கருவலகஸ்வெவ பிரதேச செயலகம் ஆகியவை வீதி மேம்பாட்டு அதிகாரசபைக்கு உதவி செய்தன.

இதன்மூலம் குறித்த பாலம் புனரமைக்கப்பட்டு போக்குவரத்து பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக த்தளம் வீதி மேம்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது.