Tuesday, May 5, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 94

2 இலட்சத்து 39,000 மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் இறக்குமதி!

0

இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு சுமார் 2 இலட்சத்து 39 ஆயிரம் மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கைச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

உள்நாட்டுப் பெரிய வெங்காய அறுவடை தொடங்கிய ஓகஸ்ட் மாதம் முதல் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 50,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என சுங்கப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா குறிப்பிட்டார். 

இந்த நிலையில், அறுவடை செய்து சுமார் மூன்று மாதங்கள் ஆகியும், தமது விளைச்சலை விற்பனை செய்ய முடியாமல் உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் தற்போது கவலையான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

மேலும், கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால், அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தை உலர வைக்க முடியாமல், முழுமையாக அழிந்துவிட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தக் குழப்பத்திற்குத் தீர்வாக, லங்கா சதொச மூலம் ஒரு விவசாயியிடமிருந்து வாரத்திற்கு அதிகபட்சமாக 2,000 கிலோ கிராம் (2 மெட்ரிக் தொன்) பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இருப்பினும், இந்த நடைமுறைக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் காரணமாக, இவ்வாறு விற்பனை செய்வது சாத்தியமற்றது என்று விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குளியாப்பிடியவில் உதயமான தேசிய கல்வியற் கல்லூரி!

0

குளியாப்பிடிய தேசிய கல்வியற் கல்லூரி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்டது.

குளியாப்பிடிய தேசிய கல்வியற் கல்லூரியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று (03) கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், குளியாபிட்டிய தேசிய கல்வியற் கல்லூரி, இலங்கை அரசாங்கத்திற்கும், கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் (KOICA) இடையிலான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பின் விளைவாக நிறுவப்பட்டதாகவும், க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்காக பொறியியல் தொழில்நுட்பம், உயிரியல் கட்டமைப்பு தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களைக் கற்கும் மாணவர்களுக்குத் தேவையான கல்வியை வழங்கத் தகுதியான தொழில்நுட்ப ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பது இந்த நிறுவனத்தை நிறுவுவதன் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த மதிப்புமிக்க வளங்களைக் கொண்ட நிலம், புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு இணங்க மேற்கொள்ளப்படவுள்ள தொழில் கல்விக்கும் தேவையான நன்மைகளைப் பெற முடியும் என்றார்.

அத்துடன், கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம் மற்றும் KOICA திட்டம் இணைந்து தயாரித்த இணைந்த செயல்திட்டத்தின் விளைவாக, கட்டுமானப் பணிகள் மற்றும் ஏனைய சேவைகளுக்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில், மூன்று பாடப்பிரிவுகளின் கீழ் 210 மாணவர்கள் கல்வி கற்பதுடன், 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். திட்டமிடப்பட்டுள்ளது. இக்கல்வியற் கல்லூரியில் 9 உயிரியல் கட்டமைப்பு ஆய்வகங்கள், ஸ்மார்ட் ஆய்வகம், இ-நூலகம் மற்றும் பல்நோக்கு கட்டடம் போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், 630 மாணவர்கள் தங்கியிருக்கக் கூடிய வகையில் விடுதி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம், இலங்கையில் தொழில்நுட்பக் கல்வியை முன்னேற்றுவதற்கான ஒரு முக்கிய மைல்கல் எனக் கருதப்படுகிறது.

இந் நிகழ்வில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, இலங்கைக்கான கொரிய தூதுவர் மியோன் லீ அம்மையார், KOICA இலங்கையின் பணிப்பாளர் யூலி லீ (Yooli LEE), கல்வியற் கல்லூரி ஆணையாளர் பி.டி. இரோஷினி கே. பரணகம உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கல்வியே நாட்டின் பண்பாட்டு மாற்றத்தின் அடித்தளம்!

0

கல்வியே நாட்டின் பண்பாட்டு மாற்றத்தின் அடித்தளம்– கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

கல்வி என்பது ஒரு நாட்டின் பண்பாட்டு பரிமாற்றத்தின் அடிப்படைத் தூணாகும் என்றும், கற்பித்தல் மற்றும் கற்றல் செயற்பாட்டை வலுப்படுத்தி நாட்டின் குழந்தைகளுக்கு உயர்தரமான கல்வியை வழங்குவது அனைவரின் கூட்டு பொறுப்பாகும் என்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பாக கல்முனை, சம்மாந்துறை மற்றும் அம்பாறை கல்வி வட்டாரங்களில் உள்ள தரம் 1 மற்றும் தரம் 6 வகுப்பு ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், அதிபர்கள் ஆகியோரை அவற்றைப் பற்றி விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் நடைபெற்றன.

கல்முனையில் உள்ள அல் அஸ்ராக் வித்தியாலயம் மற்றும் அம்பாறையில் உள்ள டி.எஸ். சேனாநாயக்க வித்தியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து, கல்முனையின் சம்மாந்துறை மற்றும் அம்பாறை வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளின் 01 மற்றும் 06 ஆம் வகுப்புகளின் ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை பெண்களுக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்!

0

இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் ஆகிய பதவிகளுக்குப் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புகையிரத திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை, புகையிரத இயந்திர சாரதி, புகையிரத பாதுகாப்பு அதிகாரி மற்றும் புகையிரத நிலைய அதிகாரி ஆகிய பதவிகளுக்கு ஆண் அதிகாரிகள் மட்டுமே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். மேற்பார்வை முகாமையாளர் பதவிக்கு 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மட்டுமே பெண் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையைக் கருத்தில் கொண்டு, தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு நடைமுறையில் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய ஏற்பாடுகள் இல்லாததால், அரசியலமைப்பின் 55 உறுப்புரையின் (1) உப அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கமைய அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ், புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் ஆகிய பதவிகளுக்குப் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு கொள்கையளவில் அங்கீகாரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இறந்த ஒரு காட்டு யானையின் உடல் கண்டுபிடிப்பு!

0

ஜூட் சமந்த

சில நாட்களுக்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் காட்டு யானையின் உடல் நவகத்தேகம-தம்மன்னாவதிய பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காட்டு யானையின் உடல் நவகத்தேகம-தம்மன்னாவதிய பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த 3 ஆம் தேதி மாலை அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் இறந்த காட்டு யானையின் உடலைப் பார்த்து வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

சுமார் 25 வயதுடைய இந்த காட்டு யானையின் உடல் யானை வேலிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதால் குறிப்பாக குறிப்பிடத்தக்கது.

காட்டு யானையின் இறப்புக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கனமூலை பாடசாலையை தேசிய ரீதியில் கெளரவப்படுத்திய மாணவி!

புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி முபா தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று சாதனை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கொழும்பு சாஹிரா கல்லூரியில் நடைபெற்று முடிந்த தேசிய மட்ட முஸ்லிம் கலாசார போட்டிகளில் புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி எம்.எம் முபா இரண்டாம் பிரிவின் நஷீத் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

சிறப்பான முறையில் தனது திறமையை வெளிப்படுத்தி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் பீ.எம் முஸ்னி தெரிவித்துள்ளார்

மேலும் மாணவிக்கும், பெற்றோர்களுக்கும், மாணவிக்கு ஊக்கமளித்த ஆசிரியருக்கும், பாடசாலை நிர்வாகம் சார்பாக தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதாக அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தேசிய போட்டியில் சாதித்த புத்தளம் சாஹிரா கல்லூரி!

0

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் சீனடிக் கலை போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்று சாதனை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் உயர்தர மாணவர்கள் தேசிய மட்ட இஸ்லாமிய கலாசார போட்டி நிகழ்ச்சியின் சீனடிக் கலை போட்டியில் முதலாம் இடத்தை பிடித்து தேசிய மட்டத்தில் சாதனை படைத்து பாடசாலைக்கும் புத்தளம் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக கல்லூரியின் அதிபர் ஐ.ஏ நஜீம் தெரிவித்துள்ளார்.

சீனடிக் கலையின் தேசிய மட்ட போட்டிகள் கடந்த சனிக்கிழமை (01) கொழும்பு சாஹிரா தேசிய கல்லூரியில் இடம்பெற்றது.

சீனடிக் கலையில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை சார்பில் உயர்தர மாணவர் குழுவினர் களான ஜே.சாஜித் (தலைவர்) எம்.ஏ.எம் ஆதில், எம்.கே கைஸ், எம்.எச் ஹைதம் காசிம், எம் ஏ எம் அஸ்மத். எஸ்.எம் அர்ஷத், எம் எம் எம் முன்தீர், எம் ஆர் எம் றஹீக் ஆகிய மாணவர்கள் தமது சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி வெற்றிபெற்றுள்ளனர்.

குறித்த போட்டியை பயிற்றுவித்து வெற்றி பாதைக்கு வழிகாட்டிய எம்.ஏ.எம். சுபியான் ஆசிரியர் அவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் சார்பாக தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக பாடசாலையின் அதிபர் ஐ.ஏ. நஜிம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

0

போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்றைய தினம் 03.11.2025 தருமபுரம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு தருமபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர், சிறுவர் நன்னடத்தை பிரிவினர், போதைப் பொருள் பாவனையில் ஏற்படக்கூடிய தீமைகள் தொடர்பாகவும் தொலைபேசியினால் ஏற்படும் பாரிய அளவிலான பாதிப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடாத்தப்பட்டது.

இதன் போது தர்மபுரம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசநாயக்க, தருமபுர மத்திய கல்லூரி அதிபர் திருமதி இந்திராணி, கண்டாவலைப் பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை பிரிவினர் ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான தெளிவூட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக சிக்கிய குஷ் போதைப்பொருள்!

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (03) 21 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்களுடன் இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின், பாங்காக்கிலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக வந்த 28 வயதுடைய இலங்கையர் ஒருவர் ரூ. 21 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 2.07 கிலோ குஷ் கஞ்சாவுடன் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்றபோது இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E1171 இல் வந்தபோது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று 3, 2025 குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட குஷ் ரக போதைப்பொருட்களின் மதிப்பு ரூ. 21 மில்லியனுக்கும் அதிகமாகும். NCU அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேக நபரும் மீட்கப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டன.

எருக்கலம்பிட்டியில் இடம்பெற்ற அதிர்ச்சிகர சம்பவம்!

மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எருக்கலம்பிட்டி 81 வீட்டுத்திட்டத்தில் குறித்த அதிர்ச்சிகர சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தகராறு காரணமாக ஒரு பிள்ளையின் தாயான அஸ்லா என்ற இளம் பெண்ணே இவ்வாறு தன்னைத்தானே மாய்த்துக்கொண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் உயிரிழந்த குறித்த பெண் தூக்கிட்டு விடயத்தில் பாரிய சந்தேகம் இருப்பதாக அயலவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக உயிரிழந்த பெண்ணின் உடல் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான விசாரணைகளை மன்னார் போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.