ஜூட் சமந்த
மகாவெவ – மட்டக்கொட்டுவ கடற்கரை கனிஷ்ட வித்தியாலயம் ஏற்பாடு செய்த “சூரிய மங்கள” புத்தாண்டு விழா அண்மையில் பாடசாலை வளாகத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
சுமார் 300 மாணவர்கள் கல்வி பயிலும் மட்டக்கொட்டுவ கடற்கரை கனிஷ்ட வித்தியாலயத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், அங்கு கற்கும் அனைத்து மாணவர்களும் ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்பதாகும். அந்தப் பாடசாலையில் பௌத்த அல்லது இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் கூட இல்லாவிட்டாலும், கலாசார விழுமியங்களைப் போற்றும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆரம்பப் பிரிவு பாடத்திட்டத்தின்படி, அனைத்து மாணவர்களுக்கும் சிங்கள – தமிழ் புத்தாண்டு சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் குறித்த அறிவை வழங்குவது அவசியமாகும். இதற்காக அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலில் பாடசாலை வளாகத்தினுள் “நீல்மிணி தென்ன” மற்றும் “ரன்மிணி தென்ன” என பெயரிடப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் கலாசாரங்களை பிரதிபலிக்கும் இரு கிராமங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
புத்தாண்டு இளவரசனின் வருகையைத் தொடர்ந்து விழா ஆரம்பமானது. சுப நேரங்களின்படி அடுப்பு மூட்டுதல், உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல், உணவு உட்கொள்ளுதல் மற்றும் தலைக்கு எண்ணெய் வைத்தல் போன்ற பாரம்பரிய சடங்குகள் முறையாகக் கடைபிடிக்கப்பட்டன. அத்துடன் மாணவர்கள் பாரம்பரிய ஊஞ்சல் ஆடுவதிலும் உற்சாகமாக ஈடுபட்டனர்.
மத அல்லது இன வேறுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கும் புத்தாண்டு சடங்குகள் மற்றும் சுப நேரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இவ்விழாவின் நோக்கம் என பாடசாலை அதிபர் கே.டி. விமலசேன தெரிவித்தார்.
இவ்விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு மகாவெவ ஸ்ரீ தர்மாராம வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எச்.எம். காமிணி அபயசிங்க மற்றும் அவரது பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். இப்பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவிலான பொதுமக்கள் இந்த கலாசார விழாவைக் கண்டுகளிக்க வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







