செய்தித் தொகுப்பு: ஜூட் சமந்த
வென்னப்புவ, வைக்காலை பகுதியில் வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 1,245 கிலோ கிராம் பீடி இலைகளை வென்னப்புவ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக குறித்த வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (ஏப்ரல் 22) மாலை வென்னப்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லலித் சந்தசிறி தலைமையிலான குழுவினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. பொலிஸார் கைப்பற்றிய பீடி இலைகள் 35 பொலித்தீன் உரைகளில் பொதி செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சந்தைப் பெறுமதி சுமார் 70 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். வேறொரு இடத்திற்கு விநியோகிப்பதற்காக இந்த வீட்டில் தற்காலிகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது பொலிஸார் இவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தச் சட்டவிரோதக் கடத்தல் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீடானது, வென்னப்புவ மதுவரி அலுவலகத்திற்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புத்தளம் மாவட்ட உதவி மதுவரி ஆணையாளர் அலுவலகம் மற்றும் வென்னப்புவ மதுவரி அத்தியட்சகர் அலுவலகம் ஆகியன அமைந்துள்ள அதே கட்டிடத் தொகுதிக்கு அருகிலேயே இந்தப் பதுக்கல் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் மற்றும் கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


