Friday, March 20, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 101

1990 களில் ஏவப்பட்ட செல் வெடிக்காத நிலையில் கண்டுபிடிப்பு!

வெடிக்காத நிலையில் இனங்காணப்பட்டுள்ள செல்!

இராமநாதபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட 10 வீட்டு பகுதியின் தனியார் காணியில் வெடிக்காத நிலையில் உள்ள பீப்பாய்செல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1990 யுத்த காலத்தில் இப்பகுதியில் பகுதியில் இராணுவத்தினால் ஏவப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பீப்பாய்செல் ஒன்று தனியார் காணி உரிமையாளர் அவரது காணியில் துப்பரவு பணி மேற்கொண்ட பொழுது வெடிக்காத நிலையில் இனங்காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் போலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக, இராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டதுடன், கிளிநொச்சி நீதிமன்ற நீதவனின் அனுமதியுடன் அதனை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராமநாதபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறையில் இலவச கண் சிகிச்சை முகாம்!

இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்; ஆரம்பித்துவைத்தார் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி..!

– எஸ். சினீஸ் கான் –

“சவூதி நூர்” தன்னார்வத் திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்று வரும் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி அவர்கள், நேரில் சென்று இன்று (17) பார்வையிட்டார்.

கண்சார்ந்த நோய்களை குணமாக்க இலவசமாக முன்னெடுக்கப்படும் இத்திட்டம், கிங் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரண மையத்தினால் செப்டம்பர் 15 முதல் 21 ஆம் திகதி வரை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி, மனிதாபிமான பணிகளை உலகம் முழுவதும் மேற்கொள்வதில் சவூதி அரேபியாவின் அடிப்படை மதிப்புகளே பிரதிபலிக்கின்றன எனக் குறிப்பிட்டார்.

குறிப்பாக சுகாதார துறையில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு, இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் ஆகியோரின் தலைமையில் சவூதி அரசு வழங்கி வரும் அக்கறையை அவர் பாராட்டினார்.

மேலும், மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம், அல்-பஸர் சர்வதேச அமைப்பு, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் பணியாளர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

அதேபோன்று, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் பிரபாஷங்கர் அவர்கள் உரையாற்றுகையில்,

இலங்கைக்கு வழங்கப்பட்ட இம்மனிதாபிமான உதவிக்காக சவூதி அரசின் தலைமைத்துவத்திற்கும், குறிப்பாக மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கும் நன்றியைத் தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி அவர்கள் செய்துவரும் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

அவ்வாறே, செப்டம்பர் 22 முதல் 28 ஆம் திகதி வரை, சவூதி நூர் திட்டத்தின் அடுத்த கட்ட முகாம் எம்பிலிபிடிய அரச வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

நிந்தவூரில் இடம்பெற்ற அஷ்ரபின் 25ஆவது நினைவேந்தல்!

0

பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்வு நிந்தவூரில் விமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்வு அண்மையில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமுதுமாணி கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமையிலாக நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பு அதிதியாக, தேசிய காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர், தற்போதைய அக்கரைப்பற்று மாநகர மாண்புமிகு முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு பிரமுகர்கள், அரசியல் ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் என அதிகமானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக, முஸ்லிம் முழக்கம் ஆசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான மர்ஹூம் ஏ.எல். அப்துல் மஜீத் அவர்களின் “ஓயாத புயலும் சாயாத மரமும்” என்ற நூல், பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா அவர்களால் ஆய்வுடன் வெளியிடப்பட்டது.

இந்த நூலின் சிறப்பு பிரதியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள், தேசிய காங்கிரஸ் தலைவர் கௌரவ அதாஉல்லா அவர்களுக்கு வழங்கிய நிகழ்வு, அரங்கத்தை அலங்கரித்தது.

மேலும் நினைவுப் பேருரை நிகழ்த்துவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்களும் அழைக்கப்பட்டது விசேட அம்சமாகும்.

கால் நூற்றாண்டு கடந்தும் பெருந்தலைவர் அஷ்ரப்பின் வாழ்க்கை மற்றும் அரசியல் பணிகள், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஆணிவேராகவே இருக்கின்றது.

இதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர், முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25 ஆவது நினைவு தினத்தையிட்டு, நேற்று செவ்வாய்கிழமை (16) அட்டாளைச்சேனை , மருதமுனை, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் நடைபெற்ற ,கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆ பிரார்த்தனை நிகழ்வுகளிலும் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

வறுமை ஒழிப்புக்கான சமூக சக்தி கருத்தரங்கு கிளிநொச்சியில்!

கிளிநொச்சியில் சமூக சக்தி (பிரஜா சக்தி) வறுமை ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு இன்று நடைபெற்றது.

நாடு முழுவதிலும் வறுமையை ஒழித்து சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டம், அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் கடந்த ஜூலை மாதம் 04ம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற விழாவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தினால் சமூக சக்தி (பிரஜா சக்தி) வறுமை ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட திணைக்கள தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு இன்று (17.09.2025) புதன்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் தமிழ் மொழி மூலமாக காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.

இதன் வளவாளராக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் சாரஞ்சலி மனோகரன் அவர்கள் கலந்து கொண்டார்.

குறித்த வேலைத்திட்டம் வறுமையை ஒழித்து நாட்டு மக்களை அனைத்து வகையிலும் வளமான மனிதர்களாக மாற்றியமைக்கும் நோக்கில் “செழுமையான தேசம் பசுமையான வாழ்க்கை” எனும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மேலும் குறித்த செயலமர்வு சம நேரத்தில் சிங்கள மொழி மூலமாக மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக் கருத்தரங்கில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலக இணைப்பாளர் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியுடன் அருகில் உள்ள இந்த முக்கியஸ்தர் யார்?

0

60 ஆண்டுகளுக்குப் பிறகு நவீன உலகிற்கு ஏற்றவாறு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை கடந்த 15 ஆம் தேதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது ​​ஜனாதிபதிக்கு அருகில் இருந்து நிகழ்வில் பங்கேற்ற ஒருவர் மீது கடந்த சில தினங்களாக சமூக ஊடகத்தில் அதிகமாக தேடப்பட்டுள்ளது.

அவர் வேறு யாருமல்ல, அப்போது ஜே.வி.பியின் மிக முக்கிய நபராக கருதப்பட்ட சேபால லியனகே ஆவார்.

1983 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் ஜே.வி.பி.யை தடை செய்ய நடவடிக்கை எடுத்தபோது, ​​ஜே.வி.பி தலைவர் ரோஹண விஜேவீரவுடன் காட்டில் மறைந்திருந்த கட்சியின் ஆரமகால போராளியே இந்த சேபால என்ற சேபால லியனகே ஆவார்.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையின்போது ஜானதிபதியுடன் மிக நெருக்கமாக இருந்த விடயம் அனைவரின் கவனத்தையும் ஈரத்ததுடன், அவர் குறித்து அதிகம் ஆராய தொடங்கினர்.

அந்த வகையிலே தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பேசும் பொருளாக மாறியிருக்கிறார் ​​ஜனாதிபதியின் இடதுபுறத்தில் நின்ற கட்சியின் ஆரம்பகர்த்தா சேபால லியனகே.

இங்கே காட்டப்பட்டுள்ள குழு புகைப்படத்தில் ரோஹண விஜேவீரவின் வலதுபுறத்தில் உள்ளார். இது ஹென்றி வர்ணகுலசூரிய பேஸ்புக்கில் பதிவிட்ட பதிவிலே இவ்விடயம் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் இன்னும் உண்மையில் இடம்பெயரவில்லை!

0

முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களை அவர்கள் முறையாக காலி செய்த பிறகு, அவற்றின் உத்தேச மதிப்பைப் பெறுவதற்கான திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகம் மற்றும் சுகாதார அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அதன்படி, திறைசேரிக்கு பயனளிக்கும் ஒரு முடிவை எடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு அதிக நிதி நன்மை கிடைக்கும் என்றும் நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவை அறிவிக்கும் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தபோது அமைச்சர் கூறினார்.

பெற்ற ஆணையின்படி ஒரு பொதுச் சட்டம் இயற்றப்பட்டு, முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டதாகவும், அதன்படி தற்போதைய ஜனாதிபதியும் அந்த உரிமைகளை இழப்பார் என்றும் அமைச்சர் கூறினார்.

இது ஒரு போதைப் பழக்கமாக மாறிவிட்டது. அந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கான ஆணையைப் பெற்றுள்ளோம். அதன்படி நாங்கள் செயல்பட்டோம். நாங்கள் தனிநபர்களை குறிவைக்கவில்லை. அவர்கள் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேறிவிட்டதாகச் சொன்னாலும், அவர்கள் இன்னும் உண்மையில் இடம்பெயரவில்லை.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஒரு சட்ட நிறுவனம் மூலம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். இன்னும் இரண்டு மாதங்கள் தங்குவதற்கு கேட்டுக் கொண்டார்.

சிலர் வெளியேறிவிட்டதாகக் கூறியுள்ளனர், ஆனால் பொருட்கள் இன்னும் முறையாக ஒப்படைக்கப்படவில்லை. இந்த விஷயங்கள் அனைத்தும் முறையாகப் பெறப்பட்ட பிறகு, அவற்றின் நிதி மதிப்பு மற்றும் சந்தை மதிப்பின் அடிப்படையில், பொருளாதார ரீதியாக உற்பத்தி நோக்கங்களுக்காக அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும். முதலில் நாம் வெளியேறும் வரை காத்திருந்து மீதமுள்ளதைப் பார்க்க வேண்டும்.

மின்சார சபை ஊழியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்!

0

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் புதன்கிழமை (செப்டம்பர் 17) சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

இது அவர்களின் “வேலைக்கு ஏற்ற ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தின் இரண்டாம் கட்டம் என மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தங்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றாததால், இந்த சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்ததாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த திடீர் வேலைநிறுத்தம் காரணமாக, மின்சார சபையின் அன்றாடச் செயல்பாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. புதிய மின் இணைப்புகள் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளில் தாமதம் ஏற்படலாம்.

இந்த நிலை, அரசாங்கத்திற்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையே நிலவும் முரண்பாடடை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!

0

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை – மீரிகம வீதிகளின் கட்டுமானப் பணிகள் புதன்கிழமை (17) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

கடவத்தை வீதியிலிருந்து முதல் 500 மீற்றர் வரையான கட்டுமானப் பணிகள் தொடங்குகின்றன. இதற்கு 8.6 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. 

மேலும், இந்த வீதி கட்டுமானப் பணிகளுக்காக சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக வழங்கப்படுகிறது.

இந்த வீதியின் 37 கிலோ மீற்றர் வரையான கட்டுமான பணிகள்  2028 ஆம் ஆண்டின்  நடுப்பகுதியில் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வடமராட்சி கிழக்கில் பாரிய மண் கொள்ளை சம்பவங்கள்!

வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் மண் கொள்ளைக்கு துனை போகிறதா தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்தரிப்பு நிலையம் மற்றும் மருதங்கேணி பொலிசார்?

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் பல காலமாக மண் கொள்ளை பாரியளவு இடம் பெற்று வருகின்றது. குறிப்பாக தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்தரிப்பு நிலையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 200m க்கு உட்பட்ட இடத்தில் பல தொன் மண் அகழ்வு அண்மைக்காலத்தில் சுதந்திரமாக இடம்பெற்று வருகிறது.

குறித்த பிரதேசமானது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக பாரியளவு மண் திட்டுகளுடன் சிறு நாவல் காடுகளை கொண்டதாக காணப்பட்டது

தற்பொழுது இப் பிரதேசம் பாரியளவு பள்ளங்கள் மற்றும் குழிகலாகவே காணப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;

ஒரு குறித்த மண் மாஃபியா கும்பல் சட்ட விரோத மண் அகழ்வினை மேற்கொண்டு வருவதுடன், நாள் தோறும் பல டிப்பர் மண்களை செம்பியன் பற்று தாளையடி கடற்கரை வீதி வழியாக சட்டத்திற்கு முரனாக இரவு நேரங்களில் கொண்டு செல்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் எந்த வித பயமும் இல்லாமல் சட்ட ரீதியாக மண் அகழ்வது போல மண் கொள்ளை நடவெடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண் அகழும் பிரதேசத்தில் இருந்து மருதங்கேணி பொலிஸ் நிலையம் சுமார் 1km தூரத்தில் உள்ளது, ஆனாலும் இதுவரை அச் சம்பவம் தொடர்பாக எந்த வித சந்தேக நபர்களும் குறித்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட வில்லை.

இதன் அடிப்படையில் மருதங்கேணி பொலிஸ் மண் மாஃபியாவிடன் கை சலப்பு செய்கிறதா இல்லை இவ் மண் கொள்ளையினை பார்த்தும் பார்க்காமலும் இருக்கிறதா என மக்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.

இதனை விட பொலிசார் ஒரு நாள் தமது கடமையின் நிமித்தம் இரவு நேரங்களில் அவ் இடத்திற்கு சென்று இருந்தால் இவ் பாரியளவு மண் கொள்ளையினை கட்டு படுத்தி இருக்கலாம். மேலும் மண் அகழ்ந்து இரவு நேரங்களில் வீதி வழியாகவே வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் செல்கிறது. இதனை இது வரைக்கும் ஏன் கட்டுப்படுத்தவில்லை, இதன் பிண்ணனியில் நடப்பது என்ன என பல கேள்விகள் எழுகின்றன.

இதனை விட தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்தரிப்பு நிலையத்தில் காவல் செய்யும் பணியாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இவ் மண் கொள்ளை சம்மந்தமாக இது வரைக்கும் எந்த வித முறைப்பாடுகளும் செய்ய வில்லை.

இதன் பின்னணியில் தெரிய வருவதாவது; இவ் சுத்தரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்ட பின்பு தான் குறித்த பிரதேசத்தில் அதிகளவான மண் அகழ்வு இடம்பெறுவதோடு இவ் கொள்ளை சம்பவத்தில் இவ் நிலையத்தில் பணி புரியும் பணியாளர்களும் ஈடு படுகின்றனரா என பல்வேறு பட்ட சந்தேக கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதேவேளை இவ் சட்டத்திற்கு முரணானதும், திட்டம் இட்டு வடமராட்சி கிழக்கு மண் வளத்தை கொள்ளை அடிக்கும் சம்பவத்தை தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்தரிப்பு நிலையம்தான் மேற்கொள்கிறதா எனவும் சந்தேகிக்க வைப்பதாக பிரிகேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இவ் பாரியளவு மண் கொள்ளைக்கு பொறுப்பு கூரளில் கட்டாயம் தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்தரிப்பு நிலையம் மற்றும் மருதங்கேணி பொலிசார் பதில் சொல்ல வேண்டும். இல்லையெனில் இவ் பாரியளவு மண் கொள்ளையுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படவேண்டும். இனி இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான வகையில் மண் விநியோகம் இடம் பெற கூடாது என மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் முஸ்லிம்களின் அடையாளம்!

முஸ்லிம் சமூகத்தின் அடையாளம்; பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்..!

மாபெரும் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களுடைய இழப்பு என்பது முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவர் முஸ்லிம் சமூகத்திற்கு விட்டுச் சென்ற மிகப் பெரும் சொத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகும். அதன் மூலமாக இன்று இந்த நாட்டில் பல முஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக, தலைவர்களாக உருவாகியிருக்கின்றனர். அத்தனை பேருக்குரிய தாயகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

அவர் முஸ்லிம் மக்களுக்காக பல்வேறு தியாகங்களை செய்தவர். எந்தச் சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும், உணர்வுகளையும் விட்டுக் கொடுக்காதவர். நான் அவருடன் 1989 ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆம் ஆண்டுவரை பாராளுமன்றத்தில் இருந்தேன். அவரோடு பல்வேறு கூட்டங்கள், நிகழ்வுகள், சர்வதேச கலந்துரையாடல்களுக்கு சென்றிருக்கிறேன்.

குறிப்பாக முஸ்லிம்களுக்கு மிக மோசமான, பயங்கரமான காலகட்டம்தான் 1990 – 2000 வரையிலான காலப்பகுதி. முஸ்லிம்கள் படுகொலை, முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டமை, கிழக்கு மாகாணத்தில் பல முஸ்லிம் கிராமங்கள் அழிக்கப்பட்டமை, முஸ்லிம்களின் சொத்துக்கள் சுரண்டப்பட்டமை உட்பட பல சோதனையான காலம். அப்போது முஸ்லிம்களை பாதுகாப்பது, கிராமங்களை பாதுகாப்பது, LTTE யின் அட்டகாசத்திலிருந்து மக்களை பாதுகாப்பது போன்ற முக்கிய விடயங்களுக்கு அவருடைய தலைமையில் தான் கட்சி முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

அந்தக் காலப்பகுதியில் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அர்ப்பணிப்பு என்றும் நினைவில் கொள்ள வேண்டியது. நாம் அவரோடு ஒன்றாக இருந்து இவ்விடயங்களை கையாண்டோம் என பெரும் தலைவர் அஷ்ரப் மரணித்து 25 வருடங்கள் நிறைவடையும் இத் தருணத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதுபோன்று, முஸ்லிம் இளைஞர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல அச்சுறுத்தல்களை எதிர்நோக்கிய சந்தர்ப்பத்தில், பல சவால்களை எதிர்நோக்கி போராடி, தென்கிழக்கு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்தில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு தீர்வை பெற்றுக் கொடுத்தவர் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள்.

முஸ்லிம் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பணிகள், அபிவிருத்திப் பணிகள் பல உள்ளன. LTTEயினரால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு புத்தளம் பிரதேசத்தில் காணிகளை வழங்கி குடியேற்றியது போன்ற பல சிறப்புப் பணிகளை செய்தவர்.

எமது மறைந்த மாபெரும் தலைவர், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர், முஸ்லிம் சமூகத்தின் மூத்த விடுதலைப் போராளி, விடுதலை உணர்வை எமக்கு ஊட்டிய எம் தலைவருடைய தூய பணிகளை அல்லாஹ் தஆலா ஏற்று, உயர்ந்த சுவர்க்கத்தை அவருக்கு வழங்குவானாக என்று பிரார்த்திக்கின்றோம் என அவரின் நினைவு செய்தியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

– கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
(பாராளுமன்ற உறுப்பினர்)
பிரதித் தலைவர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.