Friday, March 20, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 105

மாகாண சபைகளில் 61,000 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்!

0

இலங்கையின் மாகாண சபைகளில் பல்வேறு பதவிகளுக்கான 61,835 வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

அவற்றில் அதிகபட்சமாக 16,651 வெற்றிடங்கள் மேல் மாகாண சபையில் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வெற்றிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு முயற்சிகள் நடந்து வருவதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

நாடு தழுவிய சேவைகளுக்கு 1,000 பல்கலைக்கழக பட்டதாரிகள் ஏற்கனவே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 1,000 பேரை பணியமர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரச துறையை வலுப்படுத்தும் ஒரு பரந்த நடவடிக்கையாக, 35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாமலின் திருமணத்தால் மின்சார சபைக்கு ஏற்பட்ட சிக்கல்!

0

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை இலங்கை மின்சார சபைக்கு சரியான நேரத்தில் செலுத்தத் தவறியதன் மூலம், இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக தீர்ப்பளிக்கக் கோரி சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (11) அனுமதியளித்தது. 

இந்த மனுவை சட்டத்தரணி விஜித குமார தாக்கல் செய்துள்ளதுடன், அதில் பிரதிவாதிகளாக இலங்கை மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர். 

இந்த மனு உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் பிரீதிபத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. 

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வெரகொட, நாமல் ராஜபக்ஷவின் திருமணத்திற்கான மின்சாரக் கட்டணத்தை இலங்கை மின்சார சபைக்கு சரியான நேரத்தில் செலுத்தத் தவறியது தொடர்பாக மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

குறித்த மின்சாரக் கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டதால், இந்த வழக்கில் நீதிமன்றத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் ஒரே விடயம், சம்பந்தப்பட்ட நடவடிக்கை மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பான அறிவிப்பு மட்டுமே என்று சட்டத்தரணி கூறினார். 

பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், குறித்த மின்சாரக் கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த அமர்வு, மனுவை விசாரிக்க அனுமதி வழங்கியது. 

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கு இலங்கை மின்சார சபைக்கு 2 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் செலுத்த வேண்டியிருந்தாலும், மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என்று மனுதாரர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

பின்னர் இந்த வழக்கைத் தாக்கல் செய்த பின்னரே குறித்த மின்சாரக் கட்டணம் செலுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பொதுமக்களின் சிறிய மின்சாரக் கட்டணம் கூட சரியான நேரத்தில் செலுத்தப்படவில்லை என்று கூறி, இலங்கை மின்சார சபை மின்சாரத்தைத் துண்டித்து வருவதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், இவ்வளவு பெரிய மின்சாரக் கட்டணத்தை சரியான நேரத்தில் வசூலிக்க நடவடிக்கை எடுக்காதது கடுமையான தவறு என்று கூறியுள்ளார். 

இலங்கை மின்சார சபையின் இந்த அசாதாரண நடவடிக்கை மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளிக்கக் கோரி சட்டத்தரணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

44 லட்சம் மாணவர்களுக்கு சீனாவின் இலவச சீருடை!

0

அரசாங்கத்தின் மற்றும் அரசாங்கத்தின் உதவி கிடைக்கும் 4,418,404 பாடசாலை மாணவர்களுக்காக 2026 ஆம் ஆண்டுக்கு தீர்மானிக்கப்பட்ட சகல சீருடைகளையும் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக வழங்குவதற்கான இணக்கப்பாடுகளுடன் சீருடைகளைப் பரிமாறும் நிகழ்வு நேற்று (11) பத்திரமுல்லை கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது. 

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, சீன தூதுவர் கிவ் ஸெங்க்ஹொங் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. 

இதன் போது 2026ஆம் ஆண்டுக்கான பிள்ளைகளை வழங்குவதற்கு இணக்கத்தை தெரிவிக்கும் சான்றிதழை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவ மற்றும் சீன தூதுவர் கிவ் ஸெங்ஹொங் இடையே இடம்பெற்றது . 

இங்கு கருத்து தெரிவித்த கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுரை ஜனவரி “2025ஆம் ஆண்டுக்காக 11.82 மில்லியன் மீட்டர் துணி சீனாவிடம் இருந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

இதனால் முழு தேசிய அவசியத்தவையும் பூரணப்படுத்துவது போல் நாடு முழுவதும் உள்ள 4.6 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு நன்மை கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. 

5.17 வில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி பங்களிப்பு, சிறுவர்கள் முதல் தேசிய பரீட்சைக்காக மாணவர்கள் வரை ஒவ்வொரு பிள்ளைக்கும் கௌரவம் மற்றும் சமத்துவத்துடன் கல்வி கற்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்காக இவ்வாறான பங்களிப்பை வழங்கியமை வரவேற்கப்பட வேண்டும்” என்றார். 

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் 2026 ஆம் ஆண்டுக்கான சீருடைகளை வழங்குவது தொடர்பாக விரைவாக பதில் அளித்த இலங்கை மற்றும் சீன அரசாங்கங்களுக்கிடையே காணப்படும் அந்நியோன்ய நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான ஏற்பாடாகவும் இது காணப்படுவதாக குறிப்பிட்டார். 

இந்நிகழ்வில் சீன தூதுவராலயம் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இரணைமடு சென்ற ஆசிய அபிவிருத்திக் குழு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் இரணைமடு குளத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Takafumi Kadono உள்ளிட்ட குழுவினர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் அமைக்கப்பட்ட இரணைமடு குளம் மற்றும் இரணைமடு குள ஏற்று நீர்ப்பாசன திட்டத்தை பார்வையிட்டு அவற்றின் மூலம் விவசாயிகள் பெறும் பயன்கள் தொடர்பாக ஆராய்ந்தனர்.

குறித்த விஜயத்தின் போது வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ, வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல் பிரிவு) என்.சுதாகரன், வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் த.இராஜகோபு, கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் கே.கருணாநிதி, கிளிநொச்சி கிழக்கு பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் கே.பிரகாஸ் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகளும் இரணைமடு குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர், திருவையாறு ஏற்று நீர்ப்பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மன்னார் காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபவனி!

மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலைக்கு மன்னார் மக்களால் பெரும் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், அதற்கு பலம் சேர்க்கும் முகமாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து இரண்டு இளைஞர்கள் நேற்றைய தினம் 10.09.2025 கால் நடையாக நடந்து சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந் நிலையில் துண்டு பிரசுரங்களையும் வீதி ஓரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

காற்றாலை அபிவிருத்தி திட்டம் மக்களுக்கானதா? முதலாளிகளுக்கானதா? எமது வளத்தை அழித்துவிட்டு யாருக்கானது உங்கள் அபிவிருத்தி. எமது நிலங்களும், எமது வளங்களும் எமக்கானதே. முதலாளிகளின் அடிவருடிகளாக இல்லாது எம் எதிர்காலத்தையும் சிந்திப்போம். கனியமணல் சுரங்கம் மன்னார் தீவிற்கு மட்டுமல்ல முழுநாட்டிற்கும் ஆபத்தானது என அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

மாணவர்களை ஏற்றும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு!

0

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்குப் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து, இந்த விசேட கூட்டுத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களாக, பாடசாலை போக்குவரத்து வாகனங்களுடன் தொடர்புடைய பல விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துகளில் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். 

இந்தநிலையில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் பாடசாலை தொடர்பான நடவடிக்கைகளுக்கும் அமைச்சு பொருத்தமான பரிந்துரைகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைய, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களும், புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்குமென கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

106 நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம்!

0

நீதவான்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 106 நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

நீதவான்கள், மேலதிக நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள், மேலதிக மாவட்ட நீதிபதிகள் மற்றும் பதிவாளர்களுக்கு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த இடமாற்றங்களின் கீழ், மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க, மஹர நீதவான் நீதிமன்றத்திற்கும், மஹர நீதவான் எச்.ஜி.ஜே.ஆர். பெரேரா, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். 

காலி நீதவான் ஐ.என்.என். குமார கமகே, கோட்டை நீதவானாகவும், குருநாகல் நீதவான் என்.டி. குணரத்ன, கம்பஹா மேலதிக மாவட்ட நீதிபதியாகவும் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு மேலதிக நீதவான் பி.எஸ். பத்திரண, பலபிட்டிய நீதவானாகவும், ஆர்.டி. ஜனக, கொழும்பு மேலதிக நீதவானாகவும் மாற்றப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, நீதித்துறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 17 நீதவான்கள், மேலதிக நீதவான்கள் மேலதிக மாவட்ட நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதன்முறை 3 லட்சத்தை கடந்த தங்கத்தின் விலை!

0

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. 

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை நிலவரப்படி, 

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 3 இலட்சம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 2 இலட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

நேபாள இடைக்கால தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி!

0

2 நாட்கள் வன்முறைக்கு பின்னர் நேபாளத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசுக்கு எதிராக ஜென் இசட் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் கடந்த திங்கட்கிழமை போராட்டத்தை தொடங்கினர்.

அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் போராட்டம் கடும் தீவிரமடைந்து வன்முறையாக மாறியது. நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் உட்பட பெரும்பாலான அரசு கட்டிடங்களை போராட்ட இளைஞர்கள் தீ வைத்து எரித்தனர். அதிபர், முன்னாள் அதிபர்கள், பிரதமர், அமைச்சர்கள் என முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள், கட்சி அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

அமைச்சர்களை போராட்டக்காரர்கள் தெருவில் ஓட ஓட விரட்டி அடித்தனர். நிலைமை கைமீறிப் போனதைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார்.

அவரது அமைச்சரவை சகாக்கள் பலரும் ராஜினாமா செய்தனர். இந்த போராட்டத்தால் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

ஏராளமான இந்தியர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர். 2 நாள் வன்முறையால் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை நேற்று முன்தினம் இரவு முதல் ராணுவம் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில், நாடு தழுவிய ஊடரங்கு மற்றும் கட்டுப்பாட்டு உத்தரவுகளை ராணுவம் நேற்று பிறப்பித்தது.

போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. தெருக்கள், முக்கிய சாலைகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் நேற்று வன்முறை சம்பவங்கள் அடங்கின. மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு ராணுவம் அறிவுறுத்தியதால் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. அத்தியாவசிய பொருட்களை ஒருசிலர் மட்டும் சாலைகளில் சென்றபடி இருந்தனர். தெருக்கள், சாலைகளில் போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட வாகனங்கள் எலும்புக் கூடாக கிடந்தன. பல அரசு கட்டிடங்கள் தீயில் கருகி காட்சி அளிக்கின்றன. ஓட்டல்கள் பலவும் எரிக்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை 5 மணியுடன் ராணுவத்தின் கட்டுப்பாட்டு உத்தரவுகள் முடிவடைந்த நிலையில், புதிதாக போராட்டம் எதுவும் நடக்காததால் நேபாளத்தில் இயல்பு நிலை திரும்பியது. இதனிடையே நேபாள நாட்டின் இடைக்கால தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர் என அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில் இடைக்கால தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை!

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட சார்லி கிர்க் இளம் வாக்காளர்களை குடியரசுக் கட்சி ஆதரவாளர்களாக மாற்றுவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

அதன்படி உட்டா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்லி கிர்க் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் கழுத்தில் குண்டு பாய்ந்து சார்லி கிர்க் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த படுகொலை சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை சுட்டுக் கொன்றவர் யார்? எதற்காக சுட்டார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும், ஸ்வாட் பிரிவு காவல் துறையினர் சுட்டுக் கொன்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

சார்லி கிர்க்கின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி டிரம்ப், அவரது படுகொலை சம்பவம் தேசிய துக்கமாக அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; அமெரிக்க இளைஞர்களின் இதயத்தை சார்லி கிர்க் போல் வேறு யாரும் புரிந்து கொண்டதில்லை. அவர் மீது அனைவரும் அன்பு வைத்திருந்தனர். இன்று அவர் நம்முடன் இல்லை. அவரது குடும்பத்தினருக்கு நானும் எனது மனைவி மெலனியாவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அமெரிக்காவின் மாபெரும் தியாகி சார்லி கிர்க்கை கவுரவிக்கும் விதமாக, அவரது படுகொலையை தேசிய துக்கமாக அனுசரித்து வரும் ஞாயிறு மாலை 6 மணி வரை நாடு முழுவதும் அமெரிக்க கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட உத்தரவிட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.