Friday, March 20, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 113

கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்யவுள்ள அரசாங்கம்!

0

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அரச நிறுவனத் தலைவர்களுக்காக 2,000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார். 

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவான் செனரத், 

“அடிமட்ட அளவில் அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்த, மாகாண அரச நிறுவனங்களின் தலைவர்கள் கிராமங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 

அதிகாரிகள் அங்கு சென்று திரும்புவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும். எங்களுக்கு சில வாகனங்கள் தேவை. 

நாட்டில் உள்ள ஒவ்வொரு அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அவர்களின் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் 2,000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

இதேவேளை செயல்படாத உள்ளூராட்சி நிறுவனங்களின் செயல்பாடுகளை மீண்டும் செயல்படுத்த பல புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார். 

கிராமப்புறங்களின் வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ரணிலின் கைது எல்லா திருடர்களையும் காட்டியுள்ளது!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளி நலன்புரிச்சங்கம் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை அழைத்து போராட்டம் மேற்கொண்ட அரசுக்கெதிரான நடவடிக்கையை விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாட்டை பதிவு செய்தார்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் அமைக்கப்பட்டுள்ள பெண் நோயியல் பிரிவு வைத்திய உபகரணங்களை வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்ல முற்படுவதாக நோயாளி நலன்புரிச்சங்கம் துண்டுப்பிரசுரம் மூலம் தெரிவித்து நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்ததை அடுத்து குறித்த முறைப்பாட்டை பதிவு செய்தார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதானது எல்லா திருடர்களையும் வெளிக்காட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்;

கூட்டு சேர்ந்தவர்கள் எல்லாம் படிப்படியாக சிறை செல்லப்போவது அவர்களுக்கு தெரியும். பாதாள உலகக் குழுக்களை இயக்கியவர்கள் இவர்கள் இன்று வெளிநாடுகளில் தங்கியிருந்த நிலையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிஸ் பிரிவை சுயாதீனமாக இயங்க விட்டிருக்கின்றோம். கடந்த காலம் என்றால் அரசியல் அழுத்தம் காரணமாக இவ்வாறு செய்ய மாட்டார்கள். இவர்களின் கைதுக்கு பின்பு பல அரசியல்வாதிகளின் பெயர்கள் தெரியவரவுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அளவு கடந்த நம்பிக்கையுள்ளது. சட்டம் தன் கடமையை செய்யும் போது இந்த கூட்டங்கள் இல்லாமல் போய்விடும் என தெரிவித்தார்.

இலங்கை அரசியலில் தொடரும் அலை!

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)- ஓட்டமாவடி.

இலங்கை அரசியலை கடலலைகளோடு ஒப்பிடுவது மிகத்தகுந்த உவமை. ஒவ்வொரு தேர்தலும் ஒரு புதிய அலை போல எழுந்து, அரசியல் கரையை மாற்றியமைக்கிறது. சில அலைகள் உயர்ந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்த, சில அலைகள் கரையை மட்டும் வருடி மறைந்து விடுகின்றன.

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பன சிறிய, சிறுபான்மைக்கட்சிகளோடு கூட்டிணைந்து ஆட்சியமைத்து வந்திருக்கிறது. இனவாத அலைகளை தோற்றுவித்து ஆட்சியைப்பிடித்ததன் விளைவுகள் தான் இலங்கையில் இன முரண்பாட்டைத் தோற்றுவித்து யுத்த சூழ்நிலைக்கு சென்று பேரழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது என்பதை யாரும் மறப்பதற்கில்லை.

இவ்வாறான தொடரில் அரசியலில் ஏற்பட்ட அலைகளை நாம் பார்க்கும் போது முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க குடும்ப அரசியல் முடிவுக்கு வந்து ராஜபக்ஷ குடும்ப அரசியல் ஆரம்பமான காலத்திலிருந்து இதுவரை ஏற்பட்ட அரசியல் அலைகளைப் பார்க்கலாம்.

மஹிந்த ராஜபக்ஷ காலத்து அலை (2005 – 2015)

மஹிந்த ராஜபக்ஷவின் எழுச்சி 2005 தேர்தலில் தொடங்கி 2009 இலங்கை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததால் அது போருக்குப்பிந்தைய “வெற்றி அலை”யாக இருந்தது. போரை வெற்றி கொண்டு, நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்கியதால், அந்த அலை வலிமையுடன் எழுந்த போதும், காலப்போக்கில் அதே அலை ஊழல், குடும்ப ஆட்சி, அதிகாரக்குவிப்பு போன்ற பல்வேறு விடயங்களால் மக்கள் மனதில் சோபை இழந்தது.

அதன் விளைவாக கூட்டு எதிரணியினர் ஒன்று சேர்ந்து மஹிந்த அணியிலிருந்த மைத்திரியை பிரதான எதிர்கக்ட்சியான ஐக்கிய தேசியக்கட்சி உள்வாங்கி ஏனைய எதிர்க்கட்சிகளையும் சிவில் சமூக அமைப்புகளையும் ஒன்று சேர்த்து சர்வதிகார குடும்ப ஆட்சிக்கெதிரான மைத்திரி அலையைத் தோற்றுவித்தார்கள்.

மைத்திரி அலை (2015)

2015 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி, ஒரு “மாற்றத்தின் அலை”யாக மக்களால் பார்க்கப்பட்டது. சிறிய படகில் புயலை எதிர்கொண்டு வந்தவர் போல, எதிர்பாராதவிதமாக மஹிந்தவின் வலிமையான அலைக்குப் பின்பு வெற்றியடைந்தார்.

நல்லாட்சிக்கான எதிர்பார்ப்பு, ஜனநாயக சீர்திருத்தம் போன்ற கனவுகள் அந்த அலையில் மிதந்தன. ஆனால் செயற்பாட்டில் பலவீனமும், அரசியல் உடன்படிக்கைகளில் ஏற்பட்ட சிக்கல்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபாலவிற்குமிடையில் ஏற்பட்ட அதிகார மோதல், 52 நாள் அரசியல் குழப்பம் என்பன தளர்வை ஏற்படுத்தின.

இவ்வாறு நல்லாட்சி பலவீனப்படுத்தப்பட்டதால், சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த அரசியலில் ஓரங்கட்டப்பட்ட ராஜபக்ஷ குடும்பத்திற்கு மீண்டும் நல்லதொரு வாய்ப்புக்கிடைத்தது.

கோட்டாபாயே அலை (2019)

ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுவெடிப்பு பிந்தைய அச்சமும் பாதுகாப்புத்தேவையை முன்னிலைப்படுத்தி “கோட்டா அலையை” உருவாக்கினார்கள். 2019 இல் கோட்டாபய ராஜபக்ச இனவாதத்தைத் தூண்டி வெற்றி பெற்றார்.

மக்கள் பாதுகாப்புக்காகத் தேடிய வலிமையான அலை என நம்பினார்கள். ஆனால், ஆட்சி நடத்தும் திறமையின்மை, COVID-19 நிர்வகிப்பதில் தோல்வி, பொருளாதாரச்சரிவு ஆகியவை அந்த அலையை மிக வேகமாக பின்வாங்கச் செய்தன. அது கோட்டா அலைக்கெதிரான மக்கள் எதிர்ப்பு அலையாக சுனாமி அலை போல வந்து ஜனாதிபதி கோட்டாபாயவை நாட்டை விட்டே விரட்டியடித்தது.

ஆட்சியின் மீதி காலத்திற்கு ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தினூடாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து அன்று ஏற்பட்டிருந்த பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வுகளைக்கண்டு வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் நாட்டை மீட்ட தலைவர் என ஒரு அலையை ஏற்படுத்தி வெற்றி பெறலாம் என முயற்சித்தாலும் அந்த தேர்தலில் மும்முனைப்போட்டி ஏற்பட்டதாலும், கடந்த ஆட்சியின் போக்கில் மக்கள் அதிர்ப்தியில் இருந்ததாலும், நெருக்கடியான காலகட்டத்தில் மக்கள் எழுச்சி போராட்டங்களில் அனுர குமாரதிசாநாயக்கவின் பங்கு என்பவற்றோடு, பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்திய விதம் என்பவற்றால் மக்களிடத்தில் பெரிதும் அனுர குமார திசாநாயக்க கவரப்பட்டதால் அனுர அலை தோற்றம் பெற்றது.

இருப்பினும், ஜனாதிபதித் தேர்தலில் அனுரவுக்கு அலை உண்டானதான ஒரு பிரம்மை ஏற்படுத்தப்பட்டாலும் ரணிலுக்கு 22 இலட்சம், சஜீத் 45 இலட்சம், நாமல் 3 இலட்சம் எனை வாக்குப்பிரிப்பு அனுரவுக்கு அலை உருவானதான பிரம்மை உருவாக தோற்றப்பாட்டை உருவாக்கியது எனலாம். மொத்தத்தில் பார்க்கும் போது எதிரணி கணிசமான வாக்கை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பாராளுமன்ற வெற்றியைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் வெற்றி என்பது அனுரவுக்கான அலை எனக்கொள்ள முடியாவிட்டாலும், மக்கள் மனோநிலையில் எதிரணியினர் மீதான அவநம்பிக்கை, ஒற்றுமையின்மை என்பன அனுரவுக்கான வெற்றியை இலகுபடுத்தியுள்ளதை அவதானிக்கலாம்.

அனுர அலை (2024)

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) நீண்ட நாள் போராட்டத்தோடு, தேசிய மக்கள் சக்தியாக மக்கள் இயக்கங்களை ஒன்றிணைத்து இடைவிடாத முயற்சியின் பலனாக அனுர அலை எழும்பியது.

அனுரகுமார திஸாநாயக்கா தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) நீண்ட காலமாக “மாற்றத்தின் புது அலை” என மக்கள் மத்தியில் தோன்றிக் கொண்டிருக்கிறது.

இளைஞர்கள், நடுத்தர மக்கள், ஊழல் எதிர்ப்பு மனநிலை கொண்டவர்கள் இவரது அலையில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தேர்தல் காலங்களில் மக்களுக்கு நம்பிக்கை தரும் வாக்குறுதிகளை அளித்ததன் விளைவாக பாராளுமன்றத்திலும் 2/3 பெரும்பான்மைக்கு அதிகமான பிரதிநிதிகளை மக்கள் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், இந்த அலை இன்னும் முழுமையாகக் கரையை அடையவில்லை; அது கரையோரத்தில் சேமித்து வைக்கப்பட்ட சக்தி போலத் தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கிறது.

ஆனாலும், ஆட்சியைப் பிடிப்பதற்கு முதல், கடந்த அரசாங்கங்களால் முன்னெடுத்த ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் என்பவற்றை எதிர்த்து கடுமையாக விமர்சனம் செய்து விட்டு, ஆட்சியை பிடித்த பின்னர் அதனைத்தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என்பதும், அதனை மேலும் ஆதரிப்பதென்பதும் ஆட்சியைப்பிடிக்க மக்களை ஏமாற்றிய செயலா? என கேள்விகளும் எழுந்துகொண்டுதான் இருக்கிறது.

கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலிலும் கணிசமான வாக்குகளை அனுர அரசாங்கம் இழந்திருப்பதும், இது ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்குள் நிகழ்ந்திருப்பதும் அரசாங்கத்தின் போக்கில் மக்களின் அதிருப்தி வெளிப்படுவதாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது இலங்கை அரசியலில் சூடுபிடித்திருக்கும் செய்தி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது விவகாரமாகும்.

இவ்விவகாரம் ரணில் மீதான அனுதாப அலையை தோற்றுவித்துள்ளதுடன், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவை சாத்தியப்படுத்தும் நிலை உருவாக்கியுள்ளது. அத்துடன், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தி ரணில் என்ற ஆளுமையிடமே உள்ளதெனலாம்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியும் ரணிலைக் கண்டு பயங்கொள்வதைத்தான் ரணிலின் கைது பின்னணி வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. ரணிலை வெளியில் விட்டிருப்பதால் தேசிய மக்கள் சக்திக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற ஒரு காரணமும், ரணிலை கைதுசெய்து ஜெயில் வைத்தியசாலையில் முடக்க காரணமாக அமைகின்றது.

அத்தோடு, பட்டலந்தைக்கு பழிவாங்க சுமார் 40 ஆண்டுகள் காத்திருந்த நிலையில், இன்று அரச நிதி துஸ்பிரயோகம் என்ற வலைக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி ரணில்.

அடுத்து மத்திய வங்கி பிணைமுறி என தொடர் குற்றச்சாட்டுக்களால் ரணிலின் அரசியல் வாழ்வு முடித்து வைக்கப்படும்.

தேசிய மக்கள் சக்திக்குள்ள ஒரே சவால் ரணிலே தவிர வேறு யாருமில்லை. ரணிலைக் கண்டு அச்சங்கொள்வதால் தான் அவரை முடக்கத்திற்கு கொண்டு வர அரசு எத்தனிக்கிறது.

2022ல் பொருளாதார சுனாமி இலங்கையைச் சிதறடித்த போது, அதிர்ச்சி மற்றும் குழப்பத்தின் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க அரசைப் பொறுப்பேற்றார். பலரால் நிராகரிக்கப்பட்டாலும் நாட்டை நிலைநிறுத்தும் முயற்சியில் வெளிநாட்டுத்தொடர்புகள், கடன் மறுசீரமைப்புகள், தற்காலிக பொருளாதார நிலைத்தன்மை போன்றவையில் குறிப்பிட்டளவு வெற்றி கண்டார். அதன் காரணமாக மக்கள் மத்தியில் தற்போது அவருடைய கைது விடயத்தில் அனுதாப அலை உருவாக்கியுள்ளது.

ஆனால், இது உண்மையான மக்கள் எழுச்சியால் வந்த அலையல்ல. மாறாக, சிதைந்த கடலில் மூழ்காமல் காப்பாற்றும் தற்காலிக அலை போன்றது. இதனை எதிர்க்கட்சிகள் எவ்வாறு பயன்படுத்தப் போகின்றது என்பதில் தான் இதன் வலிமை தங்கியிருக்கிறது.

எதிர்வரும் தேர்தலில் இந்த அலையின் வலிமை சோதிக்கப்படும். அது மக்களின் மனதில் நம்பிக்கை அலையை பாயச் செய்யுமா? அல்லது மக்கள் மீண்டும் மாற்றத்திற்காக அனுர அலையை அல்லது மாற்றத்திற்கான வேறு அலையை தேடுவார்களா? என்ற கேள்வி திறந்த நிலையிலுள்ளது.

இந்த அலை எதிர்கால அரசியலுக்கான அலை என ஒரு சில தரப்பு காட்டிக்கொள்ள முனைந்தாலும், வழக்கு, நீதிமன்றம் என தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான கூடாரமாக இதனைப்பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றனர் என்பது வெளிப்படை.

ரணிலையே வழக்கு, நீதிமன்றம் என அலைய விடும் அரசு, ஏற்கனவே உள்ள குற்றச்சாட்டு கோவைகளை தூசு தட்டி சங்கிலிக்கோர்வையாக எடுக்கும் போது ஓரணியில் திரள்வதை தடுக்கும் என்பது நிச்சயம்.

இவ்வாறான நிலைமைகளை கருத்திற்கொள்ளும் போது எதிர்காலத்தில் இலங்கை அரசியல் மூன்று சாத்தியமான அலைகளை எதிர்கொள்கிறது:

  1. ரணிலின் அனுதாப அலை –
    நிலைத்தன்மை, சர்வதேச ஆதரவு என்ற அடிப்படையில் ஒரு குறுகிய கால அலையை நீண்ட அலையாக எதிர்கட்சிகள் மாற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
  2. அனுர அலை –
    ஊழல் எதிர்ப்பு, இளைஞர் சக்தி, மாற்றம் என்ற அடிப்படையில் வலுவான அலையாக மாற முயற்சிக்கலாம்.
  3. பழைய குடும்ப அலைகள் (மஹிந்த – கோட்டா வகை) – சில பகுதிகளில் இன்னும் நிலைத்து நிற்கலாம், ஆனால், அதன் வலிமை குறைந்துள்ளது. ஆனாலும், நாமலூடாக வலுப்படுத்த முயற்சிக்கலாம்.

எனவே, இலங்கை அரசியலில் ஒவ்வொரு தேர்தலும் ஏதொவொரு அலையை ஏற்படுத்துகின்றது. மஹிந்த அலை மக்களை வெற்றிக்குப்பின் கொண்டு சென்றாலும் ஊழலில் கரைந்தது; மைத்திரி அலை நம்பிக்கையைத் தூண்டியும் நீண்டு நிற்கவில்லை; கோட்டா அலை பாதுகாப்பின் பெயரில் நாட்டைச் சிதைத்தது; அனுர அலை இன்னும் கரையைக்காண விழைகிறது. தற்போது ரணில் அனுதாப அலை அரசியலில் தற்காலிக அமைதியை வழங்குகிறது.

ஆனால், இறுதிக்கேள்வி ஒன்றே. எந்த அலை மக்கள் நம்பிக்கையை நிரந்தரமாகத் தாங்கிச்செல்லும்? அதற்கான விடை வரவிருக்கும் தேர்தலில் மட்டுமே வெளிப்படும்.

மக்கள் மத்தியில் ஏற்படும் கொந்தளிப்பான நிலை தான் அலையாக மாற்றம் பெற்று அரசியல் மாற்றமாக வலுப்பெறுகின்றது. மக்கள் சுய பரிசோதனை என்பதைத் தாண்டி உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதனால் அரசியல் மாற்றத்துக்கான எண்ணப்பாடுகள் தோற்றம் பெறுவதுடன், மக்கள் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை இன, மதவாத அரசியலுக்கும் முக்கியத்துவம் பெற்று இனவாத, மதவாத ஆட்சியாக மாற்றம் பெறுகின்றன.

மக்கள் சுய சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்காமையினால் கடந்த கால அரசியல் மாற்றங்க்களுக்கு இன, மதவாத சிந்தனை துணை போனது என்பது வரலாறாகும்.

இலங்கையை விட்டு வெளியேறிய எரிபொருள் நிறுவனம்!

0

இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைந்த அவுஸ்திரேலிய எரிபொருள் நிறுவனமான யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம், நாட்டிலிருந்து முழுமையாக விலகியுள்ளது.

இது இந்த துறையை பன்முகப்படுத்துவதற்கான இலங்கையின் திட்டத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கை கனியவள கூட்டுதாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரை கோடிட்டு ஆங்கில ஊடகமொன்று, யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம் இலங்கை சந்தையில் இருந்து முழுமையாக விலகியதாக குறிப்பிட்டுள்ளது. 

குறித்த நிறுவனம் மூன்று மாதங்களுக்கு முன்னரே தங்களின் வெளியேறும் முடிவை அறிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எதிர்பார்த்த இலாபத்தை அடைவதற்கு இலங்கை சந்தை பொருத்தமாக இல்லை என்பதை கருத்திற் கொண்டே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் குறித்த நிறுவனம் அறியப்படுத்தியுள்ளது.

இலங்கை மின்சார ஊழியர்களுக்காக வெளியான வர்த்தமானி!

0

இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பில், இலங்கை மின்சார சபையின் நிரந்தர ஊழியர்களுக்கு பொருந்தக்கூடிய விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. 

2024 ஆம் ஆண்டு இலக்கம் 36 இலங்கை மின்சாரச் சட்டத்தின் 18ஆம் சரத்தின் மூன்றாவது உபசரத்தின்படி இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் கீழ், நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு பின்வருமாறு: 

10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவைக் காலம் கொண்ட ஊழியருக்கு, முதல் 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் இரண்டு மாத சம்பளமும், மீதமுள்ள ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் ஒன்றரை மாத சம்பளமும் இழப்பீடாக வழங்கப்படும். 

10 ஆண்டுகளுக்கும் குறைவான சேவைக் காலம் கொண்ட ஊழியருக்கு, ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் 5 மாத சம்பளம் வழங்கப்படும், மீதமுள்ள சேவைக் காலத்திற்கு இழப்பீடு இல்லை.

மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான விதிமுறைகள் உள்ளிட்ட பல நிபந்தனைகள் வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

கற்பிட்டியில் சிறப்பாக இடம்பெற்ற வருடாந்த கண்காட்சி!

கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபீர் முன்பள்ளி வருடாந்த கண்காட்சி இரண்டு நாட்கள் சிறப்பாக இடம்பெற்றது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த கண்காட்சி இம்முறை இரண்டு நாட்கள் பாடசாலையின் வளாகத்தில் கடந்த புதன், வியாழன் (27,28) ஆகிய தினங்களில் அதிபர் எம்.ஜே.என் பாஹீமா தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

கண்காட்சி நிகழ்வின் பிரதம அதிதியாக கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸ் கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

கௌரவ அதிதிகளாக கற்பிட்டி பிரதேச செயலகத்தின் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எம் நிப்ராஸ், கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மில் , கிராம உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம் முசாதீக் ஆகியோர் கலந்து கொண்டனர்

சிறார்களின் திறமை மற்றும் ஆற்றல்கள் கழிவுப் பொருட்களை கொண்டு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதுடன், பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு மிகவும் நேர்த்தியாக கண்காட்சி பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் கற்பிட்டி பிரதேசத்தின் பாரம்பரிய பழமையான அன்றாட பாவனைப் பொருட்களும் காட்சி படுத்தப்பட்டு இருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுடன், அனைவரின் பாராட்டையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத மருத்துவ சேவை!

வடக்கு மாகாணத்தின் விசேட மகளிர் சிகிச்சை மையத்தை செயற்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு
மாகாணத்திற்கான விசேட மகளிர் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக இயங்காமல் இருப்பதனை கண்டித்தும், ஆதனை விரைவாக செயற்படுத்த கோரியும், அங்குள்ள அதி நவீன மருத்துவ உபகரணங்களை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று (29) வைத்தியசாலை
வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின்
ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் பல மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்திற்கான விசேட மகளிர் சிகிச்சை மையமானது, அதி நவீன வசதிகளுடனும் நவீன மருத்துவ உபகரணங்களுடனும் அமைக்கப்பட்டு 2024 மே மாதம் அன்றைய ஐனாதிபதியால்
திறந்து வைக்கப்பட்டது.

குறித்த சிகிச்சை மையம் திறக்கப்பட்டு ஒரு வருடத்தினை கடந்தும் இன்று வரை
எந்தவொரு செயற்பாடும் இன்றி காணப்படுகிறது. இந்த சிகிச்சை மையத்தில்
இரண்டு மகப்பேறு மற்றும் பிரசவ விடுதிகள், (கர்ப்பத்திற்கு முந்திய
விடுதி, பிரசவத்திற்கு பிந்திய விடுதி) பெண் நோயியல் விடுதிகள், நவீன
வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை கூடம், மகப்பேறு தீவீர சிகிச்சைப் பிரிவு,
கருவள பெருக்கம் சிகிச்சைப் பிரிவு, நோயாளர் கிளினிக் வளாகம்
போன்றவற்றை அமைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த சிகிச்சை மையத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்தால் இதுவரை
காலமும் வடக்கு மாகாணத்தில் இருந்து மேற்படி சிகிச்சைகளுக்கு
கொழும்புக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் கடும் சிரமங்களுக்கு
மத்தியில் சென்று வந்த பெண்கள் தங்களது காலடியிலேயே சிகிச்சை பெறும்
சூழல் உருவாகும். வடக்கு மாகாண பெண்கள் மட்டுமன்றி மாகாணத்தின் அருகில் உள்ள ஏனைய தாய்மார்களும் இதன் பயனை பெறுவார்கள்.

செயற்கை முறை கருத்தரித்தல், கர்ப்பகாலம், பிரசவகாலம், பிரசவத்திற்கு
பிந்திய காலம், கருவில் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை, குழந்தை
சிகிச்சை, மார்பக புற்றுநோய், கருப்பை கழுத்து புற்றுநோய்களை
கண்டறிவதற்காக நவீன மருத்துவ உபகரணங்கள் என பெண்களுக்கான விசேட சிகிச்சை மையமாக இது அமைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பெண்களுக்கு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்பது
போல வடக்கு மாகாண விசேட மகளிர் சிகிச்சை மையம் காணப்படுகிறது. இந்த
சிகிச்சை மையத்தை செயற்படுத்துவதற்கு தற்போதுள்ள பிரதான தடையாக ஆளனியே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தாதியர்கள் இன்மைய இந்த சிகிச்சை மையத்தை இயங்கவைக்க முடியாதுள்ளதுடன், தொடர்ச்சியாக
செயற்பாடின்றி காணப்படும் பெறுமதிக்க மருத்துவ உபகரணங்கள்
கூட பழுதடையக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும்.

எனவே இந்த மருத்துவ உபகரணங்களின் பயன்பாடு இன்மையை காரணம் காட்டி
நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு இந்த உபகரணங்களை
வழங்குவதற்கான முயற்சிகளும் இடம்பெறுகிறது. வடக்கு வாழ் மக்களுக்கு என
வழங்கப்பட்ட இந்த மருத்துவ உபகரணங்களை எக்காரணம் கொண்டு வெளியில்
எடுத்துச் செல்ல அனுமதிக்க போவதில்லை எனவும் தெரிவித்தனர்.

இவ்வார்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் வடக்கு மாகாண ஆளுநர்,
மத்திய சுகாதார அமைச்சர். வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்,
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியா சென்ற குழுவில் இடம்பிடித்த ரவூப் ஹக்கீம்!

0

இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தூதுக் குழுவினர் இந்தியா விஜயம்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சரும், ஆளும் கட்சியின் முதற்கோலாசானும், இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவருமான கௌரவ (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான இலங்கை பாராளுமன்ற தூதுக் குழுவினர் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அழைப்பையேற்று ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தூதுக் குழுவில் கௌரவ பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ஜீ.ஜீ.பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், ஜே.சி.அலவத்துவல, (வைத்தியர்) காவிந்த ஹேஷா ஜயவர்தன, தனுர திசாநாயக்க, ருவன்திலக ஜயக்கொடி, சுனில் பியன்வில, ரியாஸ் பரூக், கௌரவ (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்க, அம்பிகா சாமிவேல், தேவானந்த சுரவீர, சமிந்த ஹெட்டிஆரச்சி, சம்பிக்க ஹெட்டிஆரச்சி, சுதத் பலகல்ல, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி வை.எல்.ரிஷ்மியா, பாராளுமன்ற ஒழுங்குமரபு அதிகாரி ஜீ.ஜீ.சி.எல்.பி.கலன்க, பாராளுமன்ற ஆளும் கட்சி முதற்கோலாசான் அலுவலகத்தின் முகாமைத்துவ உதவியாளர் டபிள்யூ.ஆர்.ஏ.கோஷிகா சுஜீவனி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இந்தத் தூதுக் குழுவினரின் நிகழ்ச்சி நிரலில், லோக் சபா மற்றும் இரஜ்ஜ சபாக்களுக்கான விஜயம், பாராளுமன்ற நூலக விஜயம் மற்றும் இந்திய ஊடகங்களின் வகிபாகம், பாராளுமன்ற குழு முறைமை, உயர் கல்வி, பொது சுகாதாரம், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த கலந்துரையாடல்கள் என்பன உள்ளடங்கியுள்ளன. இந்தத் தூதுக் குழுவினர் சுகாதார சிறப்பு மையத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்கங்களின் சம்மேளத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

இந்திய லோக் சபாவின் சபாநாயகர் கௌரவ ஓம் பிர்லாவுடனான சந்திப்பு முக்கியமானதாக அமைந்ததுடன், இலங்கைத் தூதுக்குழுவை இந்திய சபாநாயகர் வரவேற்றார். இத்தகைய பரிமாற்றங்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை குறிப்பாக பாராளுமன்றம், சுகாதாரம், ஊடகம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் என இருதரப்புக் கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த இந்திய சபாநாயகர் தெரிவித்தார்.

இந்தியப் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கு தூதுக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் கௌரவ அமைச்சர் (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற இராஜதந்திரத்தையும் மக்களிடையேயான உறவுகளையும் மேம்படுத்துவதில் இலங்கையின் உறுதிப்பாட்டையும் அவர் மீளவும் வலியுறுத்தினார்.

இந்திய லோக் சபா செயலகத்தில் இலங்கைத் தூதுக் குழுவினருக்கு விளக்கமளிக்கப்படவிருப்பதுடன், இத்துடன் இந்த நிகழ்ச்சிநிரல் வெற்றிகரமாக நிறைவடைகின்றது.

தொடர்ச்சியாக உள்ளே செல்லும் முன்னாள் எம்.பிக்கள்!

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அத்துரலிய ரத்தன தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த அவர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

இதேவேளை இன்று காலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றொரு வழக்கு தொடர்பாக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டப்பட்டிருந்தது. 

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 20 ஆம் திகதி அழைப்பாணை விடுத்திருந்தது. 

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 60(1) இன் கீழ் இந்த அழைப்பாணையை விடுத்திருந்தார்.

மேலும் இன்றைய தினம் முன்னாள் இராஜாங்க அமைச்சர்  நிமல் லான்சா கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

கொச்சிக்கடை காவல் நிலையத்தில்  சரணடைந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி A9 வீதியில் கோர விபத்து – இருவர் பலி!

கசிப்புடன் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இரண்டு நபர்கள் டிப்பர் வாகனத்துடன் மோதுண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுடன், மற்றும் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி 256 கிலோமீட்டர் பகுதிக்கு முன்பாக பரந்தன் அரச விதை உற்பத்திப் நிலையத்துக்கு முன்பாக இன்று 29.08.2025 அதிகாலை 5.30 மணியளவில் குறித்த பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

ஏ9 வீதி 256 கிலோமீட்டரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரெலியா சென்ற அரச பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டபோது, பரந்தன் பகுதியில் இருந்து வேகமாக வந்த கனரக டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரச பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், அதே பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி  மோட்டார் சைக்கிலிள் கசிப்புடன் வருகை தந்த நபர்கள் விபத்து ஏற்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றும் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு வருகைதந்த கிளிநொச்சி பொலிஸார் 1990 அவசர நோயாளர் கவுவண்டி அறிவித்து விபத்தில் காயப்பட்ட நபரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்தில் காயப்பட்ட நபரை சுற்றி பலர் விடுப்பு பார்ப்பதும் படம் எடுக்கும் நபர்களாகவே காணப்பட்டதுடன், விபத்தில் காயமடைந்த நபரை  வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல எந்த நபரும் முன் வரவில்லை. காயம் அடைந்த நபரை நோயாளர் காவு வண்டிக்கு ஏற்றுவதற்கு விடுப்பு பார்க்கும் நபர்களிடம் பொலிஸார் உதவி கோரியும் எந்த நபரும் முன் வராமல் விடுப்பு பார்ப்பதிலும் படமெடுப்பதிலும் கவனம் செலுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.