Wednesday, August 6, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 118

ஜனாதிபதி தலைமையில் விஷேட கூட்டம்!

0

இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான கட்டமைப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய பசுபிக் குழுவின் மூலம் நடத்தப்பட இருக்கும் இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்கான முக்கிய தயார்படுத்தல் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று(23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினதும் நிதியியல் உளவறிதல் பிரிவினதும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சுக்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் சட்ட அமுலாக்கல் முகவராண்மை நிறுவனங்கள் உள்ளடங்கலாக தொடர்புள்ள 24 நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை நிதியியல் உளவறிதல் பிரிவு இங்கு வலியுறுத்தியது.

நிதியியல் நடவடிக்கைச் செயலணியினால் (FATF) தயாரிக்கப்பட்டு பரிந்துரைகளை முன்னெடுப்பதற்கான சட்ட ரீதியிலான மறுசீரமைப்புகள், இயலளவு விருத்தி, முகவராண்மைகளுக்கிடையிலான மேம்பட்ட கூட்டிணைப்பு, அனைத்தையுமுள்ளடக்கிய புள்ளிவிபரங்களை பேணுதல் என்பவற்றுக்கு இந்த செயற்பாட்டுத் திட்டம் முன்னுரிமையளித்துள்ளது.

இத்திட்டங்களுடன் முழுமையான இணக்கப்பாட்டினை உறுதிசெய்வதற்கு பிரத்தியேகமான குழுக்களை நியமிக்குமாறும், அதன் முன்னேற்றத்தினை உன்னிப்பாக கண்காணிக்குமாறும் நிதியியல் உளவறிதல் பிரிவு,பொறுப்புடைய அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்தோடு இந்தச் செயற்பாடு தொடர்பில் ஒத்துழைப்புடன் அர்ப்பணிக்குமாறு கோரிய ஜனாதிபதி, இலங்கையின் நிதிக்கட்டமைப்பு ஸ்தீரத்தன்மையைப் பாதுகாத்து நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நம்பிக்கையினை மேம்படுத்துவதற்கும் அதன் ஊடாக சாதகமான பெறுபேறுகளை பெறவும் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியீடலை ஒழிப்பதற்கு பலமான மற்றும் செயற்திறனுள்ள கட்டமைப்பொன்று அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

சுகாதாரத்துறைக்கு மின்சார முச்சக்கரவண்டிகள்!

0

இலங்கையில் முதன்முறையாக சுகாதாரத்துறைக்கு மின்சார முச்சக்கரவண்டிகளை வழங்கும் திட்டத்தின் முதல் கட்ட வேலைத்திட்டம் பதுளை மாவட்டத்தில் உள்ள 16 வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (21) பதுளையில், பெருந்தோட்ட அமைச்சர் மற்றும் சமூக உள்கட்டமைப்பு திரு. சமந்தா வித்யாரத்ன தலைமையில் இடம்பெற்றது.

ஊவா மாகாண சுகாதார அமைச்சின் தலையீட்டில் உலக வங்கியின் உதவியுடன் ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் டேவிட் பீரிஸ் நிறுவனத்தின் ஊடாக சுமார் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான மின்சார முச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த முச்சக்கர வண்டிகள் அந்தந்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் களப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த முச்சக்கர வண்டிகளை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் திரு.சமந்த வித்யாரத்ன, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையின் அடிப்படையில் செலவீனங்களைக் குறைக்க அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகள் மற்றும் சேவைத் தேவைகளுக்கு மின்சாரக் கார்களைப் பயன்படுத்துவது முக்கியமான தீர்மானமாகும் என குறிப்பிட்டார்.

அத்துடன் கடந்த காலங்களில் அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் விலையுயர்ந்த சொகுசு வாகனங்களை பயன்படுத்திய போதும் தமது அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரும் அந்த வாகனங்களை ஏற்றுக்கொள்ளாது சாதாரண வாகனங்களையே பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டினார்.

சம்பந்தப்பட்ட சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தினிந்து சமன் ஹென்நாயக்க, ஊவா மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர்.எம். தயானந்தா மற்றும் சுகாதார அதிகாரிகள் மற்றும் டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மக்கள் கரிசனையோடு போராடுபவர் பா.உ ஹக்கீம்!

0

ஜனாஸா எரிப்பு விவகாரம் – பழிவாங்கப்பட்ட சமூகத்துக்காக தொடர்ந்து போராடும் ரவூப் ஹக்கீம்

இலங்கையில் தற்போது புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், கடந்த ஆட்சியில் நடைபெற்ற அநீதிகளுக்கு நீதி பெற்றுக்கொள்வதோடு, மீண்டும் அவ்வாறான அநீதிகள் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நகர்வுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த ஆட்சியில் முஸ்லிம் சமூகத்தை மிக மோசமாக பாதித்த விடயம் கொவிட் ஜனாஸா எரிப்பு விவகாரமாகும்.

இது கடந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது காட்டிய வெறுப்பின் வெளிப்பாடாகப் பார்க்கப்பட்டது. இது போன்ற மோசமான நிலைகள் இனியும் ஏற்படக்கூடாதென்பதற்காக அன்றிலிருந்து இன்றுவரை ரவூப் ஹக்கீம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதைக் காணலாம்.

நம்மில் பலருக்கு ஒரு சம்பவம் நடக்கும் போதிருக்கின்ற ஆர்வம் அதன் பின்னர் இருப்பதில்லை. ஜனாஸா எரிப்பின் போது காட்டிய அக்கறை அவை நிறுத்தப்பட்ட பின்னர் அவை முடிந்து விட்டதாக வேறு வேலைகள் பக்கம் கவனத்தை திருப்பிக்கொண்டோம்.

ஆனாலும், இதுவரை இவ்வலிகளை அனுபவித்த குடும்பங்கள் நீதியின்றி துயரத்தில் வாடுவதை பலரும் நினைத்துப்பார்க்க மறந்து விட்டோம். ஆனால், ரவூப் ஹக்கீம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்யவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

அன்று ஜனாஸா எரித்த போது அதனைத் தடுப்பதற்காக ஆளும் கட்சியோடு பல முறை, பல சந்தர்ப்பங்களில் பேசினார்.

ஆனாலும், அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. இருப்பினும் ரவூப் ஹக்கீம் ஓயவில்லை. யார்?, எப்படி? சொன்னால் கேட்குமென்பதைப் புரிந்து கொண்டு ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து இரஜதந்திர ரீதியான காய்களை நகர்த்தி, போராட்டங்களைச்செய்து இறை உதவியால் ஜனாஸா எரிப்பு விவகாரம் முடிவுக்கு வந்தது.

ஆனாலும், கடந்த அரசாங்கம் செய்த தவறை ஒப்புக்கொள்ளவில்லை. ரவூப் ஹக்கீமும் விடுவதாகவில்லை. தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் குரல் தொடுத்துக்கொண்டே இருந்தார்.

அப்போதைய சுகாதார அமைச்சர்களாகவிருந்த பவித்ரா தேவி வன்னியாராச்சி மற்றும் ஹெஹலிய ரம்புக்வெல்ல போன்றவர்களிடம் இது தொடர்பில் கேள்விகளை தொடுத்திருந்தார்.

ஒரு கட்டத்தில் அரசாங்கம் தவறு செய்ததை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக்கோரினாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டயீடுகளை வழங்க முன்வராது, குறித்த விவகாரத்தோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கைகளுமின்றி அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டை முன்னெடுத்தது. அப்போது அதனையும் பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கேள்விக்குட்படுத்தினார்.

ஆனாலும், எரிக்கம்பட்ட ஜனாஸாக்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதை அப்போதைய அரசு மறுத்து வந்தது.

இந்நிலையில், தற்போதைய புதிய அரசாங்கமானது, அன்று எதிரணியிலிருந்த போது ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் போக்கைக் கண்டித்தவர்கள் என்ற அடிப்படையில், மேலதிக நடவடிக்கைகளுக்காக குறித்த தகவல்களை தருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய சுகாதார அமைச்சரிடமும் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் விபரங்களைக்கோரிய போது கடந்த அரசாங்கம் சொன்னது போல் இந்த அரசாங்கமும் பதிலளித்தமை ஆச்சரியத்தை உண்டுபண்ணியது.

மேலும், இவ்விவகாரத்தில் அன்று தொடர்புபட்டிருந்தவர் மீண்டும் இந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படும் போது மீண்டுமொரு தவறு நடக்காது தடுக்கப்படும் என்பதோடு, அரசியல்வாதிகளின் அநீதியான செயற்பாடுகளுக்கு அரச நிருவாகிகள் துணை போவதற்கு அச்சப்படுவார்கள்.

அத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைப்பதோடு, மீண்டும் இவ்வாறான மோசமான தவறு இடம்பெறாதென்பதை சட்டரீதியாக உறுதிப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாகவும் அமையும்.

இது துன்பகரமான சம்பவம். இனி இவ்வாறான சம்பவம் நடக்காதென்பதை ஆணித்தரமாகக்கூறும் அரசு, பாதிக்கப்பட்டோர் விபரங்களை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடுள்ளது.

எனவே, இவ்விடயத்தில் நிரந்தரமாக ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தொடர்ந்தும் கரிசனையோடு போராடிவருவதைக் காண முடிகின்றது.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

0

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம்மாவட்டத்திலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில்பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

ஹட்டன் பஸ் விபத்து – நடந்தது என்ன?

0

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று சனிக்கிழமை (21) விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

ஹட்டனிலிருந்து பயணித்த குறித்த பஸ் ஹட்டன் மல்லியப்பு வாடி வீட்டுக்கருகில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து  விபத்துக்குள்ளானது.

பஸ்ஸில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுதுள்ளது.

பஸ்ஸின் சாரதி , நடத்துனர் உட்பட பயணிகள் 53 பேர் காயமுற்ற நிலையில் டிக்கோயா மற்றும் வட்டவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ஹட்டனைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர், 68 வயதுடைய கண்டியைச் சேர்ந்த பெண் மற்றும் மற்றுமொரு பெண் என மூன்று பேர் உயிரிழந்தனர்.

பாடசாலை மாணவன் தனது சகோதரியுடன் மருந்து எடுப்பதற்காக சென்ற போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் 10 பேர் கண்டி போதனா வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த விபத்து தொடர்பாக பஸ் சாரதியிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

பஸ் கட்டுப்பாட்டை இழந்து கதவு திறக்கப்பட்டு தான் பஸ்சில் இருந்து கீழே விழுந்ததாக சாரதி குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், விபத்துக்குள்ளான பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமரா அமைப்பின் தரவுத்தளத்தை ஹட்டன் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

விபத்து நடந்து சிறிது நேரம் கழித்து, ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி தொடர்புடைய சிசிடிவியை அணுகி காட்சிகள் நீக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கல்வி நிர்வாக சேவையின் அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள்!

0

அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் கல்விச்சேவைக் குழுவின் அறிவித்தலுக்கு இணங்க, தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் I  அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏற்றதாக,  இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் I அதிகாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.

அதற்காக   சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள அறிவித்தல், பாடசாலை பதிவேடு, புள்ளி விபரம் மற்றும் மாதிரி விண்ணப்ப படிவங்களை 2024.12.11 ஆம் திகதி அன்று கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது டன் 2024.12.31 ஆம் திகதி விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதியாகும். 

அதன்படி அந்த அறிவித்தல், பாடசாலை பதிவேடு, புள்ளி விபரம் மற்றும் மாதிரி விண்ணப்பப் படிவம் என்பவற்றை கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் “விசேட அறிவித்தல்”  எனும் பகுதியில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த பிராண்ட் அம்பாசிடர்கள்!

0

உலகில் முதன்முறையாக மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக 100 பிராண்ட் அம்பாசிடர்கள் (brand ambassador) நியமிக்கபட்டார்கள்.

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் உலகில் முதன்முறையாக 100 சிறப்புப் பயிற்சி பெற்ற வர்த்தக நாம தூதர்கள் (brand ambassador) குழுவொன்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் தன்னார்வ சேவைக்காக நியமிக்கபட்டது.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த வைத்தியசாலையினால் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட குழு விசேட பயிற்சியின் பின்னர் வர்த்தக நாம தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

“மூளை ஆரோக்கியத்திற்கான 10 தேவையான விஷயங்கள்” எனப்படும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான 10 முக்கிய விஷயங்களைப் பற்றி மக்களுக்குத் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பிராண்ட் தூதர்கள் பயன்படுத்த பட உள்ளனர்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமும் அதனுடன் இணைந்த வைத்தியசாலையும் இணைந்து இத்திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.

எதிர்காலத்தில் “மூளை ஆரோக்கியத்திற்கான 10 தேவையான விஷயங்கள்” என்று அழைக்கப்படும் சுகாதார மேம்பாட்டு செயல்முறை ஆரோக்கியமான உணவு முறைகள், உடல் செயல்பாடு, ஒரு நல்ல குடிமகனாக இருப்பது மற்றும் நல்ல சமூக உறவுகளை உருவாக்குதல், உடல் எடை மற்றும் இடுப்பு சுற்றளவை நல்ல சரியான அளவில் வைத்திருத்தல், புகைபிடிப்பதைத் தவிர்த்தல், கொலஸ்ட்ரால் அளவை நல்ல சரியான அளவில் வைத்திருத்தல், இரத்த சர்க்கரை மேலாண்மை, இரத்த அழுத்த மேலாண்மை, நேர்மறை மன மேலாண்மை மற்றும் ஆரோக்கியமான தூக்கம் ஆகியவை இதில் அடங்கும்.

திறப்பு விழாவில் கலந்து கொண்ட சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மக்களைக் கல்வியூட்டுவதற்கும் மேற்கொள்ளப்படும் இம்முயற்சி மகத்தான செயல் என்றும், இதற்கு முன்னின்று செயற்படும் அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த தன்னார்வ சேவையானது இந்த நாட்டில் சுகாதார சேவையில் ஒரு நல்ல மாற்றத்திற்கான ஆரம்பத்தை குறிக்கிறது என்றும் தெரிவித்தார். நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் வருடாந்தம் பெருமளவு பணம் செலவழிப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இவ்வாறான தன்னார்வ சேவைகள் மூலம் நோய்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்கான ஆலோசனைகளையும் விழிப்புணர்வையும் இந்நாட்டு மக்களுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவித்தார். இந்த முக்கியமான பணியை ஆதரிக்க அரசு எப்போதும் தயாராக இருப்பதாகவும், நோய் தடுப்புக்கு முன்னுரிமை அளிப்பது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும், அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

உலக மக்கள்தொகையான 08 பில்லியனில் கிட்டத்தட்ட 04 பில்லியன் அதாவது 3.4 பில்லியன் பேர் தற்போது மூளை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 400 மூளை நோய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மூளையின் முக்கிய நோய்கள் பக்கவாதம், டிமென்ஷியா, ஒற்றைத் தலைவலி என்பன அதில் அடங்குகின்றன.

மேலும், சர்க்கரை நோயினால் ஏற்படும் புற நரம்பு பாதிப்பு, மனித வாழ்வை அதிகம் பாதிக்கும் நோயாக கண்டறியப்பட்டு, மூளை நோய்கள் குறித்து முறையான விழிப்புணர்வு அளிப்பதன் மூலம், 90 சதவீதத்துக்கும் அதிகமான நோய்களை தடுக்க முடியும் என்பதும் தெரியவந்தது.

குளோபல் பேஷண்ட் அட்வகேசி கோலிஷன் (Global Patient Advocacy Coalition-GPAC) மற்றும் முன்னணி சர்வதேச நிறுவனங்கள் (Leading international organization) இந்த திட்டத்தில் பங்களிக்க தயாராக உள்ளன.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்ட (ஓய்வு), சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசேல குணவர்தன, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, பேராசிரியர் திஸ்ஸ மற்றும் பேராசிரியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் அடங்கிய குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ரெஸ்லின் வீரர் ரே மிஸ்டீரியோ திடீர் மரணம்!

0

புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர், தனது 66வது வயதில் காலமானார்.

புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியரின் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புகழ்பெற்ற மெக்சிகன் மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. WWE போட்டிகளில் மாமா (அங்கிள்) என்று வாஞ்சையோடு அழைக்கப்படும் இவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ்.

இவருக்கு தற்போது வயது  66 ஆகும். அதேநேரம், அவரது உயிரிழப்புக்கான சரியான காரணம் எதும் விளக்கப்படவில்லை. உயரம் குறைவானவராக இருந்தாலும், மிகுந்த பராக்கிரமத்துடன் சண்டையிட்டு எதிராளிகளை நிலைகுலைய செய்யும் வல்லமை கொண்டவர்.

களத்தில் அவரது செயல்பாடுகள் எதிராளிகளையே மிரட்சியடைய செய்யும். குறிப்பாக, கயிறுகளுக்கு இடையில் சுழன்று சென்று, எதிராளிகளின் முகத்தில் உதைக்கும் அவரது ட்ரேட்மார்க் ஷாட், மிகவும் பிரபலமானதாகும். இந்நிலையில், ரே மிஸ்டீரியோவின் மறைவிற்கு, உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் செல்வாக்குக்கு இடமில்லை. நடவடிக்கை எடுக்கப்படும்!

0

அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளது

-ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கை பொருட்படுத்தாமல், அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள ‘நில மெதுர’ கட்டிடத்தில் அமைந்துள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (20) நடைபெற்ற மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்க அதிபரிலிருந்து மாவட்டச் செயலாளர் என பதவிப் பெயர் மாற்றம் பெற்ற இந்த சேவையானது 200 வருடங்கள் பழமையானது எனவும், எமது நாட்டை புதிய திசையில் வழிநடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

இருப்பினும், இறுதி நோக்கம் மற்றும் இலக்கு தொடர்பில் திருப்தியடையும் வகையில் தற்போதைய நிலைமை இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என்றும், அரசு என்ற வகையில் முழுக் கட்டமைப்பும் சரிவை கண்டுள்ளதெனவும் தெரிவித்தார்.

சரிவடைந்திருக்கும், கட்டமைப்பை மீள உருவாக்க நாம் தயாரா? இல்லையா? என்பது குறித்து எம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

அரச சேவையில் இருக்கின்ற கதிரை தொடர்பான பிரச்சினை தனக்கு இல்லை எனவும், கதிரையில் அமர வைப்பதற்கு யார் இருக்கின்றார்கள் என்ற பிரச்சினையே தனக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி, அவற்றுக்கு இசைவான மாற்றங்களை செய்துகொண்டு , தமது துறைக்கு தலைமைத்துவம் வழங்கி அதனை வெற்றியை நோக்கி

வழிநடத்தும் கதிரைகள் வெற்றிடமாக காணப்படுகின்றதென கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது இந்திய விஜயத்தின் போது ​1500 அதிகாரிகளை ​இந்தியாவிற்கு அனுப்பி பயிற்சி அளிக்க இணக்கம் எட்டப்பட்டது என்றும் கூறினார்.

அடுத்த வருடத்தில் உயர்தரத்தில் சித்தியடையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு அரசாங்கத்தின் புலமைப்பரிசில்களை வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சில நிறுவனங்கள் மற்றும் பதவிகள் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டன என்பது பிரச்சினையாக உள்ளதாகவும், எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் காணப்படுவதால், அதற்கான புதிய வியூகம் ஒன்று அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்வதற்கான புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் செல்வாக்குகளை பொருட்படுத்தாமல் அவை தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

அரச சேவையை மட்டுப்படுத்தும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லை எனவும், ஆனால் அரச சேவையை நடத்திச் செல்வதற்கான செலவில் பிரச்சினைகள் இருப்பதால், அரச சேவையை ஒரே நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து முறையான பொறிமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகார அடிப்படையில் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதாகவும், அரச அதிகாரிகளின் பங்களிப்பே இந்தப் பணிகளின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மக்கள் ஆணையின் 80% எதிர்பார்ப்புகளை அரச உத்தியோகத்தர்களே வௌிப்படுத்தியுள்ளனர் என்ற வகையில், அரசியல் அதிகார தரப்பின் பணிகளுக்கு அவர்கள் இணக்கம் மற்றும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். எனவே, இவை இரண்டும் இருவேறு முரண்பாடான குழுக்கள் அல்ல என்பதையும் இரண்டும் இணக்கமான குழுக்கள் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதன்படி, அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவையின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் இலக்குகள் சமநிலையானதாக காணப்படுவதை கடந்த மக்கள் ஆணை வௌிப்படுத்தியிருப்பதால், இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பணியே எம்முன் உள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், மக்களுடன் தொடர்புபடும் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் விரைவுபடுத்தப்பட்டு, புதிய வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் ‘Clean Sri Lanka’ திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

எமது நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக, வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல், சமூகத்தை கருத்தியல் ரீதியாக மாற்றியமைத்தல் என்ற மூன்று துறைகளின் கீழ் ‘Clean Sri Lanka’ ஊடாக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அந்த பணியை நிறைவேற்றும் போது எந்தவொரு உத்தியோகத்தருக்கும் அசௌகரியம், அநீதி அல்லது அசாதாரணம் இழைக்கப்பட்டால், அந்த நபரின் பாதுகாப்பிற்காக தாம் முன் நிற்பதாக உறுதியளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எவரேனும் அதிகாரியொருவர் அந்த திட்டத்தை சிதைக்கும் நோக்கில் தாமதப்படுத்தாவாராயின் அதற்கும் நியாயமான முறையில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ. எச். எம். எச். அபயரத்ன, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார, மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மு.ஜ ரணில்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் வழங்கப்பட்ட விதம் குறித்து விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், அனைத்து விண்ணப்பங்களுக்கும் பணம் செலுத்தப்பட்டதாகவும், அதற்காக 1515 மில்லியன் ரூபாவும், 2023 இல் 839 மில்லியன் ரூபாவும், 2024 செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் நோயாளர்களுக்கான மருத்துவ உதவியாக சுமார் 450 மில்லியன் ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பிரதிநிதிகள் தனிப்பட்ட ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், ஒரு கோரிக்கையை தவிர ஏனைய அனைத்து கோரிக்கைகளுக்கும் ஜனாதிபதி நிதியத்தின் பொது நடைமுறைகளை பின்பற்றி 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதியுதவி வழங்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி வரை ஜனாதிபதி நிதியத்தில் வைக்கப்பட்டிருந்த 7,000 மில்லியன் ரூபாவை பணத்திற்காக, பல்வேறு கொடுப்பனவுகள் இருந்தபோதிலும், 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை 11,000 மில்லியன் ரூபாவைத் தாண்டிய மீதியை பேணுவதற்கு தாம் நடவடிக்கை எடுத்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த 11 மாதங்களில் தனது பாதுகாப்புச் செலவுகளுக்காக 82 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.