ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு மாவட்ட மத்திய குழுவின் கூட்டமொன்று,கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று(12) கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் நடைபெற்றது. கொழும்பு மற்றும் ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபைகளின் உறுப்பினர்கள் உட்பட மத்திய குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது வியாழக்கிழமை (14) பிற்பகல் 2:30 மணி அளவில், கொழும்பு, தும்முல்லையில் ஐ.நா. அலுவலகத்துக்கு முன்பாக நடைபெற உள்ள கூட்டு எதிர்க்கட்சிகளின் பலஸ்தீன ஆதரவு ஒன்று கூடலில் முஸ்லிம் காங்கிரஸும் பங்குபற்றுவதுடன், மறுநாள் வெள்ளிக்கிழமை(15) பிற்பகல் 3 மணியளவில் பொரளை கனத்தை சந்தியில் ஆரம்பித்து கெம்பல் பார்க் வரை நடைபெற உள்ள பாலஸ்தீனத்துக்கான ஒன்றிணையும் இலங்கையர்களின் நடைபவணிப் பேரணியிலும் கட்சியினர் பங்குபற்றி ஒத்துழைப்பது பற்றியும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் ,கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் கட்சிப் புனரமைப்பு மற்றும் வட்டார அமைப்பாளர்களை நியமிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .
மேலும், இலங்கையில் கொழும்பில் இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபாவின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது பற்றியும், அதற்கான போட்டி நிகழ்ச்சிகளை இலங்கைக் கவிஞர்கள் மத்தியில் நடத்துவது பற்றியும், அந்த விழாவின் போது சிறந்த இந்திய இலங்கைப் பாடகர்களை பங்குபற்ற வைப்பது பற்றியும் உரையாடப்பட்டது.

