க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றைத் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று (26) நிறைவடையவுள்ளது.
கடந்த காலங்களிலும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், பரீட்சை முடிந்த பின்னர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் போக்கு காணப்பட்டதாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, பெற்றோர்களும் தமது பிள்ளைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இவ்வாறான நிலைமைகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (26) 06 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தமது பிரச்சினைகள் குறித்து பலமுறை அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்திய போதிலும், இதுவரை அதற்குத் தீர்வு கிடைக்கவில்லை என அந்த தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதன்படி, இன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, தமது கோரிக்கைகள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சருடன் இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் முடிவுகளின் அடிப்படையில், அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என சுங்கத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கறுப்புப் பட்டிகளை அணிந்து கடமைகளை முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் கீதாஞ்சன மடபாத தெரிவித்துள்ளார்.
பிங்கிரிய – போவத்தையிலிருந்து ரஸ்நாயக்கபுர வரையான வீதியில் தெதுரு ஓயாவிற்கு குறுக்கே அமைந்துள்ள “கடிகாவ பாலம்” (Kadigawa Bridge), ‘டிட்வா’ (Ditwa) சூறாவளிக்குப் பின்னர் பாரிய சேதமடைந்து தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
‘டிட்வா’ சூறாவளி நிலவிய காலப்பகுதியில், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இந்தப் பாலம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. பாலத்தின் பாதுகாப்புத் தூண்களின் அடிப்பகுதி (Foundation) முழுமையாக அரிப்புக்குள்ளாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
மேலும், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாரிய மரக்கட்டைகள் பாலத்தின் அடியில் சிக்கியுள்ளன. எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்னதாக இந்த மரக்கட்டைகளை அகற்றி பாலத்தைப் பாதுகாக்கத் தவறினால், பாலம் பாரிய ஆபத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சேதமடைந்துள்ள அரச கட்டமைப்புக்கள்
பாலத்திற்கு அருகில் தெதுரு ஓயா ஆற்றின் கரை கடுமையாக அரிப்புக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்குச் சொந்தமான நீர் அளவீட்டு கருவி மற்றும் நீர்வளச் சபையின் நீர்ப்பரேற்று நிலையம் என்பனவும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சூறாவளி அனர்த்தம் ஏற்பட்டு சுமார் மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும், சேதமடைந்த பாலத்தைச் சீரமைக்கவோ அல்லது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் புனரமைக்கவோ இதுவரை எந்தவொரு அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால் கடிகாவ பாலம் எந்நேரமும் சரிந்து விழக்கூடும் எனவும், அவ்வாறு நேர்ந்தால் பிங்கிரிய மற்றும் ரஸ்நாயக்கபுர இடையிலான போக்குவரத்துத் தொடர்புகள் முழுமையாகத் துண்டிக்கப்படும் எனவும் மக்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, பாரிய அனர்த்தம் ஒன்று ஏற்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் தலையிட்டு பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிலாபம், ஆராச்சிகட்டுவ பகுதியில் 7ஆம் தரத்தில் கல்வி பயிலும் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை சிலாபம் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.
தனது பெற்றோருடன் அடிக்கடி முரண்பட்டுக் கொண்டு, வன்முறையான முறையில் நடந்து கொண்ட அந்தச் சிறுமியை, அதற்கான காரணத்தைக் கண்டறிய சிலாபம் சட்ட வைத்திய அதிகாரியிடம் பொலிஸார் ஒப்படைத்தனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் பின்னரே, அந்தச் சிறுமி இதற்கு முன்னர் இரண்டு முறை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக சிறுமி சிலாபம் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் விரிவான வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.
உறவினர் செய்த அத்துமீறல்
சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் படி, முதன்முதலில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி நாத்தாண்டியா – வலஹாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த அவரது 37 வயதுடைய உறவினர் ஒருவரால் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் வைத்து இந்த அத்துமீறலைச் செய்த அந்த நபர், இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகச் சிறுமியை மிரட்டியதுடன், அவருக்கு 500 ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மாரவில பொலிஸாரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மற்றொரு சம்பவமாக, கடந்த 2025 ஜூலை 05 ஆம் திகதி நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த தனது காதலனுடன் இரண்டு சந்தர்ப்பங்களில் உடலுறவு கொண்டதாகச் சிறுமி தெரிவித்துள்ளார். தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக அவர் வாக்குறுதி அளித்ததால் இந்த விடயத்தை மறைத்ததாகவும், அந்தச் சமயத்தில் தனது தாய் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்ததாகவும் சிறுமி குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது அவரது தாயின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபம், தெதுரு ஓயா முகத்துவாரத்தை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்களை கடற்கரை பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் அகற்றியுள்ளனர். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கடந்த 25 ஆம் திகதி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
முந்தைய முயற்சி தோல்வி
கடந்த ஆண்டு செப்டம்பர் 29 ஆம் திகதி, இந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முதன்முதலில் முயன்றனர். இருப்பினும், அந்தச் சந்தர்ப்பத்தில் கட்டிட உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டு அதிகாரிகள் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.
இதனைத் தொடர்ந்து, கடற்கரை பாதுகாப்பு அதிகாரிகள் ஜனவரி மாதம் 19 ஆம் திகதி இது தொடர்பான விடயங்களை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். வழக்கை ஆராய்ந்த நீதவான், மூன்று வார காலத்திற்குள் குறித்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றி, அது குறித்த அறிக்கையை ஏப்ரல் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
மின்சாரம் துண்டிப்பு மற்றும் இடிப்பு
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு அமைய, தெதுரு ஓயா முகத்துவாரப் பகுதியில் இருந்த கட்டிடங்களை கடற்கரை பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் இடித்து அகற்றினர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கை மின்சார சபையினரால் அந்த கட்டிடங்களுக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டது.
கட்டிடங்கள் அகற்றப்படும் போது மீண்டும் எவ்வித கலவரங்களும் அல்லது அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புனித ரமழான் மாதம் என்பது வெறும் பசியையும் தாகத்தையும் அடக்கும் மாதமல்ல; அது இதயங்களை இணைக்கும் மாதம்.
அந்த உன்னத நோக்கத்தை பறைசாற்றும் வகையில், இன்று கல்பிட்டி திகளி பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் ஏற்பாட்டில் மிகப்பிரம்மாண்டமான இப்தார் நிகழ்வு அரங்கேறியது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் NTM தாஹிர் மரிக்கார் அவர்களின் நுணுக்கமான நெறிப்படுத்தலில், இந்த நிகழ்வு வெறும் அரசியல் நிகழ்வாக அமையாமல், ஒரு குடும்ப விழாவாகவே மாறியிருந்தது.
திகளி பகுதியே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. மக்களின் உணர்வுகளை மதிக்கும் தலைவர்களும், தலைவர்களின் அழைப்பை ஏற்று திரண்ட மக்களும் ஒரு புள்ளியில் இணைந்த காட்சி, அந்தப் பிரதேசத்தின் ஒற்றுமையை பறைசாற்றியது.
ஊர் மக்கள், உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் என பெருந்திரளானோர் இதில் கலந்துகொண்டனர்.
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட காட்சி, சமூக நல்லிணக்கத்தின் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்தது.
“மக்களுக்காக உழைக்கும் தலைவன், மக்களோடு அமர்ந்து நோன்பு துறப்பதில்தான் உண்மையான திருப்தி காண்கிறான்.” – இந்த இப்தார் நிகழ்வு இந்த வரிகளுக்கு உயிரூட்டியது.
இன்றைய இப்தார் நிகழ்வு மற்றும் அதற்கான ஏற்பாடுகள் குறித்து அப்பகுதி மக்கள் பெரும் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நேர்த்தியான ஒழுங்கமைப்பு மற்றும் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்ற உபசரிப்பு முறை என அனைத்தும் பாராட்டுக்குரியதாக அமைந்தன.
தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் மரிக்கார் ஆகியோரின் இந்த முயற்சி, கல்பிட்டி பிரதேச மக்களின் இதயங்களில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது என்பதில் ஐயமில்லை.
வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அனுமதி உள்ளவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விஜய் ரசிகர்கள் பலர் போலீசாரை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றனர். இருக்கையில் அமராமல் நாற்காலிகள் மீது ஏறி நின்று கூச்சலிட்டனர். இந்நிலையில் கூட்டத்தில் பேசிய விஜய் முதலில் ஒரு குட்டிக்கதை சொல்லலாமா? எனக்கேட்டுக்கொண்டு விளங்காத ஒரு கதையை கூறினார்.
தொடர்ந்து பேச ஆரம்பித்த அவர், திடீரென ஆவேசப்பட்டார். சில நொடிகள் வார்த்தை வராதது போல் தவித்தார். பிறகு கண் கலங்குவது போல் நடித்தார். அதன்பிறகு ‘சாரி’ என்று சொல்லிவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தார். இதை நேரடி ஒளிபரப்பில் பார்த்த பலரும், ‘‘உலக மகா நடிப்புடா சாமி’’ என்று கலாய்த்தனர்.
அது உண்மைதான் என்பதை அவரது ஸ்கிரிப்ட் காட்டிக்கொடுத்துள்ளது. விஜய் பேசுவதற்காக எழுதி கொடுத்த ‘ஸ்பீச் காபி’ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதில் உள்ள ஒரு சில தகவல்கள்: ‘எவ்வளவு கத்தி பேச முடியுமோ அவ்வளவு கத்த வேண்டும். (குறிப்பு) இந்த வரியை பேசி முடித்து விட்டு சிறிது கேப் விட வேண்டும்.பேச முடியாதது போல் செய்து, மைக்கை விட்டு சற்று நகர்ந்து சென்று அழவும். (உங்கள் பாணியில்).மறுபடியும் மைக் பக்கம் வந்து, கண்கலங்கி ‘சாரி’ சொல்லிவிட்டு, எமோஷனலாக பேச தொடங்கவும் என எழுதப்பட்டிருந்தது. இந்த ஸ்கிரிப்ட்டில் எழுதியிருந்ததை ஒரு வரி கூட தவறாமல் விஜய் சூப்பராக பேசி, மவுனித்து, நடித்து காட்டினார் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மானபங்கப்படுத்தி வருகின்றனர். மைக் முன்னாடியும் கேமரா முன்னாடி நடிப்பதைப் போல நடித்து விஜய் வெளுத்து வாங்கிவிட்டார் என்று ஏகத்துக்கும் அவரை கலாய்த்து வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், புதிய நியமனங்கள் மற்றும் இடர் நிவாரண உதவிகள் வழங்கும் விசேட நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
பிரஜாசக்தி தலைவர்களுக்கான நியமனங்கள்:
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் மக்கள் பணிகளை முன்னெடுப்பதற்காக 43 பிரஜாசக்தி தலைவர்களுக்குப் புதிய நியமனங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. இதன்மூலம் கிராம மட்டத்திலான சமூகப் பணிகள் மேலும் உத்வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் பல குடும்பங்கள் வாழ்வாதார பாதிப்புகளை எதிர்கொண்டன. இதனைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்ட 435 குடும்பங்களைச் சேர்ந்த 701 மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்குக் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கடல்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் மருங்கன் மோகன் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் முகுந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இவர்களுடன் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
நாத்தாண்டியா – வலஹாபிட்டிய பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி ஹாமில்டன் கால்வாய்க்குள் (Hamilton Canal) வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து கடந்த 24 ஆம் திகதி நண்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது. நாத்தாண்டியா பகுதியிலிருந்து மாதம்பை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றே இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர் விபத்துக்குள்ளான வேனின் ஓட்டுநர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். விபத்தை அடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வேன் விபத்துக்குள்ளானதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
ஈரானில் நிலவும் தற்போதைய சூழல், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக மிகவும் பதற்றமான நிலையை எட்டியுள்ளது.
தீவிரமடையும் மாணவர் போராட்டங்கள்
பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளுக்குப் பிறகு, தற்போது மீண்டும் ஈரானில் மாணவர் போராட்டங்கள் வெடித்துள்ளன. டெஹ்ரான் பல்கலைக்கழகம், அல்-சஹ்ரா மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் அமீர் கபீர் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக “நாங்கள் ஈரானை மீட்டெடுப்போம்” என்ற முழக்கங்கள் போராட்டக்காரர்களிடையே வலுப்பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நிபந்தனைகளும் எச்சரிக்கையும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது தொடர்ந்து கடும் எச்சரிக்கைகளை விடுத்து வருகிறார். பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் “மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும், ஏவுகணைகளின் வரம்பைக் குறைக்க வேண்டும் மற்றும் மத்திய கிழக்கில் ஆயுதக் குழுக்களுக்கு வழங்கும் ஆதரவை நிறுத்த வேண்டும் என்பது வாஷிங்டனின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெய்ரூட்டில் உள்ள தனது தூதரகத்திலிருந்து அத்தியாவசியமற்ற பணியாளர்களை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனது 36 ஆண்டுகால ஆட்சியில் மிகக் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறார். சர்வதேச பொருளாதாரத் தடைகள் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அதே நேரத்தில், இரண்டாவது அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மத்திய கிழக்கு நோக்கி வரும் நிலையிலும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் சில “ஊக்கமளிக்கும் சமிக்ஞைகள்” உள்ளதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிர்வாகத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடு
ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டாலும், அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகத்திற்குள் இது குறித்து ஒருமித்த கருத்து இன்னும் எட்டப்படவில்லை. தாக்குதலைத் தொடங்குவதற்கு நிர்வாகத்தின் அனைத்துத் தரப்பிலிருந்தும் இன்னும் “ஒருங்கிணைந்த ஆதரவு” கிடைக்கவில்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.