Saturday, March 28, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 18

ஈரான் மோதல் குறித்து பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்க ராணுவத் தளபதி!

ஈரான் உடனான மோதல் முற்றி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது உயர்மட்ட ராணுவத் தளபதி ஜெனரல் டான் கெய்ன் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்காவின் பிரபல நாளிதழான ‘வாஷிங்டன் போஸ்ட்’ மற்றும் ‘ஆக்சியோஸ்’ (Axios) இணையதளம் வெளியிட்ட செய்திகளின்படி, ஈரானைத் தாக்கினால் அமெரிக்கா ஒரு நீண்ட காலப் போரில் சிக்கிக்கொள்ள நேரிடும் என்றும், அமெரிக்க வீரர்களுக்கு அதிக உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஜெனரல் கெய்ன் அதிபரை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் உக்ரைன் போன்ற நட்பு நாடுகளுக்கு வழங்கப்பட்ட ராணுவ உதவிகளால் அமெரிக்காவின் வெடிமருந்து கையிருப்பு (munitions stockpiles) குறைந்துள்ளதாகவும், இது ஈரானின் எதிர் தாக்குதலைச் சமாளிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் கெய்ன் கவலை தெரிவித்ததாக அந்த அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இந்தச் செய்திகளை “போலியான ஊடகச் செய்திகள்” என்று சமூக வலைதளப் பதிவில் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், ஜெனரல் கெய்ன் ஈரானுக்கு எதிரானப் போரை “எளிதில் வெல்ல முடியும்” என்று நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“கெய்னுக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்: அது எப்படி வெற்றி பெறுவது என்பது மட்டுமே. அவருக்கு உத்தரவிடப்பட்டால், அவர் படையை முன்னின்று நடத்துவார்” என்று ட்ரம்ப் பாராட்டியுள்ளார். மேலும், ஈரானுடனான போர் குறித்த செய்திகள் அனைத்தும் திட்டமிட்டுத் தவறாக எழுதப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தளபதி அலுவலகத்தின் விளக்கம்

இந்த விவகாரம் குறித்து ஜெனரல் கெய்னின் அலுவலகம் விடுத்துள்ள விளக்கத்தில், நாட்டின் பாதுகாப்பு முடிவுகளை எடுக்கும் சிவில் தலைவர்களுக்குத் தேவையான ராணுவ விருப்பங்கள் (military options), அதன் விளைவுகள் மற்றும் அதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்துத் தெளிவுபடுத்துவதே தளபதியின் பணி என்று தெரிவித்துள்ளது.

ஈரான் தனது அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்கள் தொடர்பான அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்கவில்லை என்றால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்ரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். இதற்காக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளன.

மறுபுறம், பேச்சுவார்த்தைக்குத் தாங்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதற்குப் பதிலடி கொடுத்துத் தற்காத்துக் கொள்வோம் என்றும் ஈரான் அறிவித்துள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்காவின் உள்மட்ட ராணுவ ஆலோசனைகள் குறித்த செய்திகள் சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகின்றன.

மெக்சிகோ போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் தலைவன் சாவு!

0

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவன் எல் மென்ச்சோ சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மிக ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் கும்பல்களில் ஒன்றான CJNG அமைப்பின் தலைவன் ராணுவப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதால் மெக்சிகோவில் வன்முறை வெடித்துள்ளது.

மெக்சிகோ நாட்டில் ‘ஜலிஸ்கோ புதிய தலைமுறை கார்டெல்’ என்ற பெயரில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்தது. கடந்த காலங்களில் இக்கும்பல் மெக்சிகோ ராணுவ வீரர்களைக் கொன்றது மற்றும் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியது போன்ற தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்தது. இக்கும்பலின் தலைவனான நெமேசியோ ரூபன் ஒசெகுவேரா செர்வாண்டஸ், ‘எல் மென்சோ’ என்று அழைக்கப்பட்டு வந்தான்.

அவனைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க அரசு 125 கோடி ரூபாய் வரை பரிசு அறிவித்திருந்தது. உலக அளவில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த இவனைப் பிடிக்க மெக்சிகோ மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் நீண்ட காலமாகத் திட்டமிட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜலிஸ்கோ மாநிலத்தின் தபால்பா பகுதியில் உள்ள மலைப்பகுதியில் மெக்சிகோ சிறப்புப் படையினர் மற்றும் அமெரிக்க ராணுவக் குழுவினர் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் எல் மென்சோ மற்றும் அவனது கூட்டாளிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தேசிய பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.

இவனது மரணத்தைத் தொடர்ந்து மெக்சிகோவின் ஜலிஸ்கோ, மிகோகன் உள்ளிட்ட 8 மாநிலங்களில் போதை கும்பல் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்துகள் மற்றும் லாரிகளுக்குத் தீ வைக்கப்பட்டதால் 20க்கும் மேற்பட்ட சாலைகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்திய தூதரகம் அங்குள்ள இந்தியர்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளது. இதுகுறித்து மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் பேசுகையில், ‘நாட்டின் பாதுகாப்பைப் பேணவும் பொதுமக்களின் அமைதியை நிலைநாட்டவும் ராணுவத்தினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதை கும்பலின் அச்சுறுத்தல்களை ஒடுக்க மாநில அரசுகளுடன் இணைந்து ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது‘ என்றார்.

இலங்கை அணுசக்தித் துறையில் புதிய பாய்ச்சல்!

0

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை அணுசக்தி சபைக்குச் சொந்தமான இலங்கை காமா மத்திய நிலையத்தின் (Sri Lanka Gamma Centre) கதிரியக்கத் திறனை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன உள்ளிட்ட அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் அண்மையில் பியகம ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் அமைந்துள்ள இந்த நிலையத்திற்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டனர்.

இதன்போது, நிலையத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் காமா கதிரியக்கச் சேவைகள் குறித்து அமைச்சர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதுடன், அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இந்த மத்திய நிலையமானது கோபால்ட்-60 (Cobalt-60) ஐசோடோப்பைப் பயன்படுத்தி, நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் மூலம் கதிரியக்கச் சேவைகளை வழங்கி வருகின்றது.

குறிப்பாக மருத்துவத் துறை, மருந்துப் பொருட்கள் உற்பத்தி, உணவுப் பாதுகாப்பு, விவசாயத் துறை ஆகிய துறைகளுக்கு உயர்தரமான மற்றும் குறைந்த செலவிலான கதிரியக்கச் சேவைகள் இந்த நிலையத்தின் மூலம் வழங்கப்படுகின்றன.

எதிர்காலத் திட்டம் மற்றும் பொருளாதார நன்மைகள்:

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்த நிலையத்தின் கொள்ளளவை அதிகரிப்பது மிகவும் அவசியம் என்று அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார். இதன் மூலம் நிறுவனத்திற்கும் நாட்டிற்கும் அதிகளவிலான பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விரிவாக்கப் பணிகளை முன்னெடுப்பதற்காக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் இலங்கை அணுசக்தி சபை ஆகியவற்றின் தலைமையில், சுகாதாரம், ஊடகம், வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் நிதி அமைச்சுக்களுடன் இணைந்து ஒரு கூட்டு வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

இந்த விஜயத்தின் போது அமைச்சின் செயலாளர் முகமது நவாவ், பணிப்பாளர் நாயகம் (ஆராய்ச்சி) கீதானி குருப்புஆராச்சி, பணிப்பாளர் (ஆராய்ச்சி) புத்திகா டி சில்வா மற்றும் இலங்கை அணுசக்தி சபையின் பதில் பணிப்பாளர் நாயகம் சம்பா திஸாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பெண்களின் வலுவூட்டலுக்காக மீண்டும் வரும் Ride Colombo 2026!

0

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் முன்னணி பெண்கள் பங்கேற்கும் மிதிவண்டி கொண்டாட்டமான “Ride Colombo 2026” இரண்டாவது ஆண்டாக மீண்டும் பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ ஊடக சந்திப்பு அண்மையில் கொழும்பு Cinnamon Life – City of Dreams வளாகத்தில் நடைபெற்றது.

“என் சவாரி, என் குரல். மாற்றத்தின் சக்கரம்” (My Ride. My Voice. Wheels of Change) என்ற ஆழமான கருப்பொருளில் இந்த ஆண்டு நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது வெறும் மிதிவண்டி சவாரி மட்டுமல்லாது, ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கையுடன் தனது குரலை சமூகத்தில் ஒலிக்கச் செய்யவும், நாட்டின் முன்னேற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு அங்கமாக மாறவும் உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும் என Feel Lanka அமைப்பின் நெறியாளர் மதுர தர்மரத்ன தெரிவித்தார்.

இது 2026 மார்ச் 7 ஆம் திகதி சனிக்கிழமை, கொழும்பு Galle Face Green பகுதியில் மாலை 3.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது

இந்த நிகழ்வில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் மற்றும் உலக நாடுகளிலிருந்தும் பெண்கள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக, வடகிழக்கு மாகாணங்களில் வாழும் பெண்களும் இந்த ஒற்றுமைக்கான சவாரி நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் விசேட அழைப்பு விடுத்துள்ளனர்.

Ride Colombo 2026 இன் சிறப்பம்சமாக, இதன் மூலம் கிடைக்கும் டிக்கெட் வருவாயின் 100% நிதி, Feel Lanka, Indira Cancer Fund மற்றும் Helpline 1333 ஆகிய மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும். இதன் மூலம் பங்கேற்பாளர்கள் சமூக நலன் மற்றும் சுகாதார மேம்பாட்டு முயற்சிகளுக்கு நேரடியாகப் பங்களிக்கின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற Ride Colombo 2025 பிரச்சாரமானது, சர்வதேச ரீதியில் உயரிய அங்கீகாரமான “MarCom Platinum Award” விருதைப் பெற்றுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இலங்கைப் பிராண்ட் பிரச்சாரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரம்மாண்ட நிகழ்விற்கு LUMALA பிரதான அனுசரணையாளராகச் செயற்படுகிறது. இவர்களுடன் இணைந்து Cinnamon Life, Maharaja Broadcasting Corporation, Maya Hive, Lipton மற்றும் பல முன்னணி நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.

இந்தச் சவாரி நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் www.ridecolombo.com என்ற இணையதளத்தின் ஊடாகப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி இம்மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் சுதந்திரம், வலிமை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழும் இந்தப் பயணத்தில் இணைந்து மாற்றத்தின் சக்கரமாகத் திகழுமாறு அனைத்துப் பெண்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் தொடங்கியது சவூதி மன்னரின் இப்தார் திட்டம்!

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி அவர்கள் முன்னிலையில், இலங்கைத் தலைநகர் கொழும்பில் ரமழான் இப்தார் விருந்து நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சின் சார்பில், இலங்கைக்கான சவூதி தூதரகத்தின் சமயப் பிரிவு இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தது.

இலங்கையில் ஹிஜ்ரி 1447-ஆம் ஆண்டிற்கான ‘இரு புனித ஹரம்களின் பாதுகாவலரின் இப்தார் திட்டத்தை’ (Custodian of the Two Holy Mosques’ Iftar Program) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் வகையில் இந்த விருந்து நடைபெற்றது.

இந்நிகழ்வில் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முலஃபர், இஸ்லாமிய நிலையங்கள் மற்றும் சங்கங்களின் அதிகாரிகள் மற்றும் முக்கிய சமய மற்றும் ஊடகப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சிலாபம் பொது வைத்தியசாலையில் நோயாளிகளும் ஊழியர்களும் அவதி!

0

ஜூட் சமந்த

சிலாபம் பொது வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவி வரும் கட்டிடப் பற்றாக்குறை காரணமாக, அங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

வைத்தியசாலையில் இடவசதி இல்லாத காரணத்தினால், அதன் தினசரி மருத்துவ கிளினிக் (Clinic) நடவடிக்கைகள் சிலாபம் நகர சபைக்குச் சொந்தமான இரண்டு கட்டிடங்களில் தற்காலிகமாக நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது அந்த இரண்டு கட்டிடங்களையும் தாராளமாகப் பயன்படுத்த வழங்கிய கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், அவற்றை மீண்டும் ஒப்படைக்குமாறு நகர சபை வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த கிளினிக் கட்டிடங்கள் சிலாபம்-கொழும்பு பிரதான வீதிக்கு மறுபுறம் அமைந்துள்ளதால், சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை வைத்தியசாலை ஊழியர்கள் பரபரப்பான பிரதான வீதியைக் கடந்து அழைத்துச் செல்ல வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் இந்த நெருக்கடி நிலை குறித்து முன்னரே சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், நிரந்தரத் தீர்வு எட்டப்படாததால் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் ஊழியர்களின் பணித்திறன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மாநகர சபை ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை!

0

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு, பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் 2026 மார்ச் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உட்படுத்தப்படும் காலப்பகுதியும் குற்றச்சாட்டுகளும்: 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபைக்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் குறித்து இந்த ஆணைக்குழு விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக பின்வரும் விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது:

• ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம்.
• அதிகாரம், அரசாங்க சொத்துக்கள் மற்றும் சலுகைகளை முறையற்ற வகையில் பயன்படுத்துதல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல்.
• சட்டவிரோத ஆட்சேர்ப்பு, நியமனங்கள் மற்றும் கொள்முதல் வழிகாட்டல்களை மீறுதல்.
• அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவதில் இடம்பெற்ற முறைகேடுகள்.
• முறையான நடைமுறைகளை மீறி முன்னெடுக்கப்பட்ட வழக்கு நடவடிக்கைகள் மற்றும் இணக்கப்பாடுகள்.
• மேற்குறிப்பிட்ட காரணங்களால் அரசாங்கத்தின் சொத்துக்களுக்கு அல்லது வருமானத்திற்கு ஏற்பட்ட பாரிய இழப்புகள்.

முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் வழிமுறைகள்:

இது தொடர்பான எழுத்து மூலமான முறைப்பாடுகள் அல்லது தகவல்களை தமிழ், சிங்களம் அல்லது ஆங்கிலம் ஆகிய ஏதேனும் ஒரு மொழியில், செயலாளர், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, இலக்கம் 152, காலி வீதி, கொழும்பு 03. என்ற விலாசத்திற்கு சமர்ப்பிக்க முடியும்.

முறைப்பாடு செய்பவரின் பெயர், முகவரி, தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கம் ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

முறைப்பாடு செய்பவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை எனில், அதனை இரகசியமாக வைத்திருக்குமாறு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்க முடியும்.

மேலும், வாய்மூலமாக தகவல்களை வழங்க விரும்பும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள், 011 2 301 735 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு, 2026 மார்ச் 16 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான ஒரு திகதியை ஒதுக்கிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமலின் ஆக்ஸ்போர்ட் விவகாரம் குறித்து வாய்திறந்து அலிசப்ரி!

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பங்கேற்கவிருந்த ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உரைகள் அண்மையில் ரத்து செய்யப்பட்டமை குறித்து, இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் விவாதச் சங்கங்கள் பல தலைமுறைகளாகத் துணிச்சலான உரையாடல்கள் மற்றும் தர்க்கரீதியான கருத்துப் பரிமாற்றங்களின் அடையாளங்களாகத் திகழ்ந்து வருகின்றன என்று அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

கேம்பிரிட்ஜ் சங்கத்தில் உரையாற்றிய தனது சொந்த அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், இத்தகைய தளங்கள் மாற்றுக் கருத்துக்களை வெளிப்படைத்தன்மையுடனும், மரியாதையுடனும், அறிவுசார் நேர்மையுடனும் எதிர்கொள்வதற்கான ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அழுத்தங்களுக்குப் பணிதல் வருத்தமளிக்கிறது

துரதிர்ஷ்டவசமாக, சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக இந்த நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் சிவில் சமூகத்தில் தேவையற்ற பிளவுகளை ஏற்படுத்த வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

நல்லிணக்கத்திற்கும் ஜனநாயகத்திற்கும் ஏற்படும் பாதிப்பு

இலங்கையின் எதிர்காலம் மற்றும் உண்மையான தேசிய நல்லிணக்கத்திற்கு இத்தகைய சம்பவங்கள் முட்டுக்கட்டையாக அமையும் என அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார். மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களைச் சந்திக்கவும், அவர்களைக் கேள்விக்குட்படுத்தவும், அவர்களுக்குச் செவிசாய்க்கவும் அனைவரும் முன்வர வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக உள்ளது.

மாற்றுக் குரல்களை ஒடுக்குவதன் மூலம் ஜனநாயகம் ஒருபோதும் முன்னேற்றமடையாது என்றும், இது பல்கலைக்கழகங்கள் பாதுகாக்க வேண்டிய உன்னத இலட்சியங்களையே சீர்குலைக்கும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

ஒரே நாளில் 958 பேர் அதிரடியாக கைது!

0

முழு நாடும் ஒன்றாக தேசிய விசேட நடவடிக்கையின் கீழ் நேற்று (22) 958 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

968 சுற்றிவளைப்புக்களின் போது இவர்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 07 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. 

அத்துடன், ஒரு சந்தேகநபர் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் 5 சந்தேகநபர்கள் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குளித்துவிட்டு வந்தவரை தாக்கிய காட்டு யானை!

0

பானம பகுதியில், பானம குளத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் உயிரிழந்தார். 

இந்தத் தாக்குதலினால் குறித்த நபர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இவ்வாறு உயிரிழந்தவர் பானம தெற்கு பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த நபர் குளிப்பதற்காக பானம குளத்திற்குச் சென்றுவிட்டு, தனது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வாடிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

பானம பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.