புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
கல்பிட்டியிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்பிட்டியிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காசா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பை வன்மையாக கண்டிக்கும் சவூதி அரேபியா..!
எஸ். சினீஸ் கான்
காசா பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சவூதி அரேபியா மிக வன்மையாக கண்டித்துள்ளது. ஆகஸ்ட் 8, 2025 அன்று வெளியிட்ட விசேட அறிக்கையில், “இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகள் காசா பகுதியை ஆக்கிரமிக்க எடுத்த முடிவை சவூதி அரேபியா வன்மையாக கண்டிக்கிறோம்” என்று சவூதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அறிக்கை மேலும், “பட்டிணி, கொடூரமான செயற்பாடுகள், மற்றும் இன அழிப்பு போன்ற குற்றங்களை பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ச்சியாகச் செய்வதை இராச்சியம் தெளிவாகவும் உறுதியான முறையிலும் கண்டிக்கிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் எடுத்த முடிவுகள், பாலஸ்தீன மக்களின் உணர்ச்சி, வரலாறு மற்றும் சட்ட ரீதியான உரிமைகளைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டதாகவும், சர்வதேச சட்டங்களும் மனிதாபிமானக் கொள்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வலியுறுத்துகிறது.
சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை உடனடியாக இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்தாதது, “சர்வதேச ஒழுங்கையும் சட்டபூர்வத்தன்மையையும் பாதிப்பதுடன், பிராந்திய மற்றும் உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும்; இன அழிப்பு மற்றும் கட்டாய இடம்பெயர்வு போன்ற விளைவுகளை உருவாக்கும்” என்று சவூதி அரேபியா எச்சரித்துள்ளது.
மேலும், “இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்களை நிறுத்த, சர்வதேச சமூகம் வலுவான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் பாலஸ்தீன மக்களைச் சூழ்ந்துள்ள மனிதாபிமான பேரழிவை முடிவுக்கு கொண்டு வரலாம்” என்றும், “1967 எல்லைகளுக்குள் கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு சுயாட்சி பாலஸ்தீன அரசை உருவாக்கும் இரு நாடு தீர்வே நீடித்த அமைதிக்கான ஒரே வழி” என்றும் அவ் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, குறித்த இளைஞனின் உடலை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து செல்லுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, உடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
முத்தையன்கட்டுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிற்கு தகரம் தருவதாக அழைக்கப்பட்ட ஐந்து இளைஞர்கள் நேற்று இராணுவத்தால் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் அதில் நால்வர் தப்பியதாகவும் ஒருவரைக் காணவில்லை எனவும் ஊர் மக்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று காலை காணாமல் போயிருந்த இளைஞசர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த இராணுவ முகாமிற்கு சென்ற ஐவரில் மற்றுமொரு நபருக்கு முதுகு பகுதிகளில் பலத்த அடிகாயங்கள் இருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 907 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனைகளின் போது குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 343 பேரும் இந்த சோதனை நடவடிக்கையின் போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைக்காக பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை உறுப்பினர்கள் உட்பட 6,129இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பங்கேற்றுள்ளனர்.
சோதனை நடவடிக்கையின் போது, 27,388 பேர் சோதனை செய்யப்பட்டனர். மேலும் 7,509 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 9,758 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த சோதனை நடவடிக்கையின் போது இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 58 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதோடு, கவனக் குறைவாக வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து குற்றச்சாட்டுக்களின் கீழ் 2,992 நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், பூஸ்ஸ சிறைச்சாலையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது, 11 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதற்கமைய, நேற்றைய (8) நாளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 1 கிலோ 547 கிராம் ஹெரோயின், 726 கிராம் 107 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டன.
2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள் அளவுக்கு மேலதிகமாக ரூ. 77 இலட்சத்து 30 ஆயிரத்து 262 (ரூ.7,730,262) செலுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய கோபா குழு (CoPA) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் அண்மையில் (05) கூடி, சப்ரகமுவ மாகாணசபையின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும்போதே இந்தத் தகவல்கள் தெரியவந்தன.
2010ஆம் ஆண்டின் அரசாங்க செலவு முகாமைத்துவ சுற்றுநிருபத்தின் படி சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரின் 3 வாகனங்களுக்கான 1,700 லீற்றர் எரிபொருள்களுக்காக 2014ஆம் ஆண்டு முதல் ரூ. 9,850,170 வழங்கப்பட்டிருந்த நிலையில், சப்ரகமுவ மாகாண சபையின் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய அபிவிருத்தி வடிவமைப்பு மற்றும் இயந்திரவியல் அதிகாரசபை மற்றும் சப்ரகமுவ வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையிடமிருந்து மாதாந்தம் 1500 லீற்றர் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதியைப் பெற்று 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு இயந்திரவியல் அதிகாரசபையில் 2,695,000 ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 2014 முதல் 2017 வரை, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையிடமிருந்து ரூ.5,035,262 செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் எல்லையை விட ரூ. 7,730,262 அதிகமாக செலுத்தப்பட்டுள்ளமை இங்கு தெரியவந்தது. இந்த நிலையில் ஒரு மாதகாலத்திற்குள் இது குறித்த விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும், வரையறையை மீறிப் பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அறிவுறுத்தல் வழங்கியது.
அத்துடன், மாகாண ஆளுநர் வெளிநாட்டில் இருக்கும்போது அவருக்குரிய எரிபொருள் கொடுப்பனவை அவரது பிரத்தியேக செயலாளர் பெற்றுக் கொண்டமையும் இங்கு புலப்பட்டது. அதன்படி, 2022 ஆம் ஆண்டில், இவ்வாறு ரூ. 725,000 தொகை செலுத்தப்பட்டதாகத் தெரியவந்ததுடன், 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 12ஆம் திகதியிடப்பட்ட ஜனாதிபதி செயலக சுற்றறிக்கையின்படி ஒருவருக்குச் சொந்தமான எரிபொருள் கொடுப்பனவை மற்றொருவருக்கு வழங்குவதற்கான ஏற்பாடு இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, குறித்த தொகையை முன்னாள் ஆளுநரிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டியது. முன்னாள் ஆளுநர் எதிர்காலத்தில் கோபா குழுவிற்கு அழைக்கப்படுவார் என்றும் குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
மாகாண சபைக்குச் சொந்தமான காணிகளுக்கான வரிகளை வசூலிப்பதில் சிக்கல் நிறைந்த சூழ்நிலை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய குழு, இதனுடன் தொடர்புடைய அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய அறிக்கையை இரண்டு மாத காலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியது.
மேலும், விநியோகஸ்தர்களினால் 2024ஆம் ஆண்டு விநியோகிக்கப்படவிருந்த சூரிய சக்தியில் இயங்கும் 90W வலுவைக் கொண்ட 1,500 வீதி விளக்குகளுக்காகப் பணம் செலுத்தப்படாமை குறித்து அதிகாரிகளிடம் குழு கேள்வியெழுப்பியது. குறித்த விநியோக நிறுவனம் 90W வீதி விளக்குகள் எனக் கூறி 30W வலுவைக் கொண்ட வீதி விளக்குகளையே விநியோகித்திருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதன் காரணமாக உரிய வீதி விளக்குகளை வழங்குமாறு கோரியபோதும் அதனை வழங்காது கண்டியில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதில் மோசடி இடம்பெற்றிருப்பது தெளிவாகத் தெரிவதால், கொள்முதல் செயற்பாடு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோபா குழு அறிவுறுத்தியது.
இக்கூட்டத்தில், கோபா குழுவின் உறுப்பினர்களான பிரதியமைச்சர்களான நளின் ஹேவகே, சுகத் திலகரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியஆராச்சி, ஒஷானி உமங்க, டி.கே. ஜயசுந்தர, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சுசந்த குமார நவரத்ன, சானக மதுகொட, சட்டத்தரணி சாகரிகா அத்தாவுட, மஞ்சுள சுரவீர ஆராச்சி, (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, கே.இளங்குமரன், சுனில் ரத்னசிறி மற்றும் லால் பிரேமநாத் ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
வடக்கில் உள்ள இராணுவத்தை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை கணக்கில் எடுக்காமல் இருப்பதன் விளைவுதான் முல்லைத்தீவு முத்தையன் கட்டு சம்பவம் என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
முல்லைத்தீவில் உள்ள முத்தையன்கட்டுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிற்கு தகரம் தருவதாக அழைக்கப்பட்ட நான்கு இளைஞர்கள் நேற்று இராணுவத்தால் தாக்குதலுக்கு உள்ளானதாக செய்திகள் வந்தன. பின்னர் அதில் நால்வர் தப்பியதாகவும் ஒருவரைக் காணவில்லை எனவும் ஊர் மக்கள் தெரிவித்தனர்.
அதில் காணாமலாகியிருந்த ஒருவர் இன்று சடலமாக மீட்க்கப்பட்டிருக்கின்றார் என ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.
இந்த கொலையை இராணுவம் செய்துள்ளதாக மக்கள் தெரிவிப்பதாகவும், தமிழ் மக்களை ஆண்டாண்டு காலமாக கொன்ற இராணுவத்தின் கொலை வெறி இன்னும் அடங்குவதாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் இனப்படுகொலை இராணுவத்தை அகற்று என்ற எம் கோரிக்கையை கணக்கில் எடுக்காமல் இருப்பதன் விளைவு தான் இவை. இது ஒரு பாரதூரமான விடயம், அந்த இடத்து இளைஞர்களுக்கான பாதுகாப்பை உடனடியாக அரசு உறுத்திப்படுத்துவதுடன் கொலைகாரர் எனக் கூறப்படும் இராணுவத்தை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை அகற்றப்படுகின்ற இராணுவ முகாமின் தகரங்களை பெற்றுக்கொள்ளுவதற்காக மரணித்த இளைஞரும் ஏனைய மூன்று இளைஞர்களும் முகாமிற்குள் சென்றார்கள் என்றும் அங்கு கைகலப்பு இடம்பெற்றது என்றும் சொல்லப்படுகிறது.
இரத்தினபுரி – பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து இன்று சனிக்கிழமை (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்தின் போது வீட்டிலிருந்த 7 வயதுடைய சிறுவன் ஒருவன் தீக்காயங்களுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் வாசித், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம் முஷாரப் ஆகியோரை வாழ்த்தி பொத்துவில் மக்கள் ஒற்றுமைப்பட்டு கொண்டாடிய “பேரெழுச்சிப் பெருவிழா நிகழ்வு” நேற்று (08) பொத்துவில் பிரதேசத்தில் நடைபெற்றது.
எழில் மிகு கடற்கரையில் ஜலால்தீன் சதுக்கத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியால் நிரம்பிய இந்நிகழ்வு, பொத்துவில் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக பதியப்படும்.
இந்நிகழ்வில், கட்சியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, நகர சபை, பிரதேச சபை தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.
தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா ராகுல் காந்திக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முனணி தலைவருமான ராகுல் காந்தி, கர்நாடகாவின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாகவும், 12,000 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
மகாதேவபுரா தொகுதியில் தேர்தல் மோசடி நடந்துள்ளது. “1,00,250 வாக்குகள் திருடப்பட்டன, 12,000 போலி வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இது தேர்தல் ஆணையத்தின் தோல்வியையும், பாஜகவின் மோசடியையும் காட்டுகிறது,” என்று தெரிவித்தார் ராகுல் காந்தி. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதிலும், தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகவும், இது இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்றும் அவர் விமர்சித்தார்.
டெல்லியில் கடந்த 07.08.2025 அன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பெங்களூர் சென்ட்ரல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட மகாதேவபுரா சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளது. பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. வாக்குகள் திருடப்பட்டு, போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் தான் பாஜக வேட்பாளரிடம் காங்கிரஸ் வேட்பாளர் தோற்றார் என்று பரபரப்பான தகவலை கூறினார்.
மகாதேவபுரா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் மேற்கொண்ட ஆய்வில் சரியாக 1 லட்சத்து 250 போலி ஓட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 11,965 வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு முறை பதிவாகி உள்ளன. 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலி. 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாக பதிவு செய்துள்ளனர். அதோடு, 4,132 பொருத்தமில்லாத புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இப்படியாக மகாதேவபுராவில் 1,00250 ஓட்டுகள் திருடப்பட்டதை நாங்கள் கண்டறிந்தோம். இங்கு புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6 தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. போலி முகவரியில், ஒரே முகவரியில் கூடுதல் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளன” என்று குற்றம்சாட்டி உள்ளார்.
இதையடுத்து, கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா ராகுல் காந்திக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களுடன் நாளை (ஆகஸ்ட் 8, 2025) அன்று தன்னை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில வாக்காளர் பட்டியலில் முறைகேடாக சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்துடன் இணைத்து பகிருமாறு கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி ராகுல் காந்தியை கேட்டுக்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி, தருமபுர பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 12 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிராயோகம் செய்த குற்றச்சாட்டில் 46 வயதுடைய நபர் ஒருவர் போலீசாரினல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராம சேவையாளர் ஒருவரினால் போலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய, தருமபுர பொலிசாரிடம் பாதிக்கப்பட்ட குறித்த 12 வயது சிறுமி தன்னை 46 வயதுடைய குறித்த நபர் துஷ்பிரயோகம் செய்ததாக வழங்கிய தகவலுக்கமைவாக சந்தேக நபர் தர்மபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 20.08.2025 வரை சந்தேக நபரை தடுப்பு காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தருமபுர போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.