Saturday, March 28, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 20

நாளைய வானிலையில் அதிரடி மாற்றம்!

0

நாளைய தினம் (22) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பௌத்த மதத்தை இழிவுபடுத்த எவருக்கும் உரிமையில்லை!

0

பௌத்த மதத்தையோ அல்லது எந்தவொரு மதத் தலைவர்களையோ இழிவுபடுத்த எவருக்கும் உரிமை கிடையாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாட்டின் விகாரைக் கட்டமைப்புகள் தற்போது போதிய கவனமின்றி சிதைவடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி பௌத்த மதத்தைப் போற்றிப் பாதுகாப்பதற்காக ரணசிங்க பிரேமதாச புத்தசாசன அமைச்சு மற்றும் நிதியத்தை உருவாக்கினார். அதன் மூலம் ஏனைய மதங்களுக்கான அமைச்சுக்களையும் ஏற்படுத்தி அந்தந்த மதக் கலாச்சாரங்களைப் பாதுகாப்பதன் ஊடாக நாட்டின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

சில தரப்பினர் புத்தசாசனத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும், இல்லறத்திலுள்ளவர்களுக்கு அத்தகைய அச்சுறுத்தல்களை விடுக்கவோ அல்லது மகா சங்கத்தினருக்கு எதிராக விரல் நீட்டவோ உரிமை இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார். காவி உடைக்கும் புத்தசாசனத்திற்கும் மதிப்பளித்து ஏனைய மதங்களையும் மதத் தலைவர்களையும் மதிக்க வேண்டியது அனைத்துப் பிரஜைகளினதும் பொறுப்பாகும் என அவர் தெரிவித்தார்.

“மதம், இனம், சாதி அல்லது வகுப்பைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடக்கூடாது. அவ்வாறு செய்வது ஒரு தனிநபரின் இயலாமையையே காட்டுகிறது. அரசியல் என்பது மக்கள் சேவையும் சமூக மேம்பாடுமே ஆகும்,” என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் உன்னத சட்டமான அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள விசேட இடத்தை உறுதிப்படுத்தும் அதேவேளை, ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தனது நம்பிக்கை என அவர் குறிப்பிட்டார்.

உலக தாய்மொழி தினம் இன்று!

0

உலக தாய்மொழி தினம் இன்றைய தினத்தில் ( 21) அனுஷ்டிக்கப்படுகிறது. 

மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் திகதி இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 

1999 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ (UNESCO) பொது மாநாட்டில் உலக தாய்மொழி தினம் அங்கீகரிக்கப்பட்டதுடன், 2000 ஆம் ஆண்டிலிருந்து இது உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 

நிலையான சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கு கலாச்சார மற்றும் மொழி பன்முகத்தன்மை அவசியம் என்று யுனெஸ்கோ அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. இந்த தினத்தை அனுஷ்டிப்பதற்கான முன்மொழிவை முதன்முதலில் பங்களாதேஷ் நாடே சமர்ப்பித்தது. 

பங்களாதேஷின் தாய்மொழியைப் பாதுகாப்பதற்கான தனித்துவமான வரலாறு, மொழி பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கான அந்நாட்டின் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த அங்கீகாரத்திற்கு அடிப்படையாக அமைந்தன. 

1952 ஆம் ஆண்டில் உருது மொழியை தேசிய மொழியாக அறிவிக்க அந்த நாட்டு அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் வெடித்தன. 

அந்தப் போராட்டத்தின் போது பல மாணவர்கள் உயிர்த்தியாகம் செய்ததுடன், பின்னர் பெங்காலி மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. 

அதன்படி, மொழி உரிமைகளுக்காகச் செய்யப்பட்ட அந்த அர்ப்பணிப்பை நினைவுகூரும் வகையில், 1999 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் திகதி உலக தாய்மொழி தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 

இதேவேளை, உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில், இலங்கையர் என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

ஒரு சமூகத்தின் தாய்மொழியே அந்தச் சமூகத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் மிக முக்கியமான காரணியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மொழி என்பது ஒரு தொடர்பாடல் கருவி மட்டுமல்லாது, ஒரு சமூகத்தின் கலாச்சாரம், விழுமியங்கள் மற்றும் வரலாற்றை முன்னோக்கி கொண்டு செல்லும் அடிப்படை ஊடகமாகவும் அடையாளப்படுத்த முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

மாமனாரின் கத்திக்குத்தில் மருமகன் பலி!

0

தெரணியகலை, மாலிபொடவத்த தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் மாமனார் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மருமகன் உயிரிழந்தார். 

நேற்று (20) மாலை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து, மாமனார் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் மருமகனைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதில் பலத்த காயமடைந்த மருமகன், பிரதேசவாசிகளால் தெரணியகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை எனவும், அவரது மனைவி தற்போது தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொலையைச் செய்த பின்னர் மாமனார் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்காகத் தெரணியகலை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

டிரம்பின் வரி விதிப்பு அதிகாரம் ரத்து: முட்டாள்கள் என விமர்சிப்பு!

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது முந்தைய இறக்குமதி வரிக் கொள்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, அதற்குப் போட்டியாக புதிய 10% உலகளாவிய இறக்குமதி வரியை (Universal Baseline Tariff) அறிவித்துள்ளார். இது உலக வர்த்தகச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையால் விதிக்கப்பட்ட பெரும்பாலான இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

  • தீர்ப்பு விகிதம்: 6-3 என்ற கணக்கில் நீதிபதிகள் இந்த முடிவை எடுத்தனர்.
  • முக்கிய காரணம்: ஜனாதிபதி தனது அதிகார வரம்பைத் மீறி (Ultra Vires), நாடாளுமன்றத்தின் (Congress) அனுமதியின்றி வரிகளை விதித்ததாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
  • வெற்றியாளர்கள்: இந்தத் தீர்ப்பு வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கும், பல அமெரிக்க மாநிலங்களுக்கும் ஒரு மிகப்பெரிய சட்டப்பூர்வ வெற்றியாகக் கருதப்படுகிறது.

டிரம்பின் ஆவேசமான எதிர்வினை

நீதிமன்றத் தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே வெள்ளை மாளிகையில் இருந்து உரையாற்றிய டிரம்ப், நீதிபதிகளின் முடிவை “பயங்கரமானது” (Terrible) என்று விமர்சித்தார். தனது கொள்கையை எதிர்ப்பவர்களை “முட்டாள்கள்” என்று சாடிய அவர், அமெரிக்காவின் பொருளாதார நலன்களை நீதிமன்றம் சீர்குலைப்பதாகக் குற்றம் சாட்டினார்.

புதிய 10% உலகளாவிய இறக்குமதி வரி

பழைய வரிகள் ரத்து செய்யப்பட்டாலும், டிரம்ப் பின்வாங்கத் தயாராக இல்லை. அதற்கு மாற்றாக புதிய 10% இறக்குமதி வரியை அவர் உடனடியாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் முதலீடு மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க பழைய சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்டாலும், வேறு சில சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தி (உதாரணமாக ‘தேசிய பாதுகாப்பு’ சார்ந்த சட்டங்கள்) இந்த வரியைத் தொடரப் போவதாக அவர் கூறினார்.

ஏற்கனவே வசூலிக்கப்பட்ட பில்லியன் கணக்கான டொலர் வரித் தொகையைத் திரும்பப் பெறுவது எளிதாக இருக்காது என்றும், இதற்கான சட்டப் போராட்டம் பல ஆண்டுகள் நீடிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த மோதல் போக்கு உலகளாவிய வர்த்தகச் சூழலில் பெரும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி கொலை தொடர்பில் புதிய அப்டேட்!

0

ஜூட் சமந்த

2026 பெப்ரவரி 13 ஆம் திகதி தலங்கம பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த விசாரணைகளின் அடிப்படையில், குறித்த குற்றத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தே நபரின் அடையாளங்கள் மற்றும் விபரங்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபரின் விபரங்கள்:

உயரம்: சுமார் 5 அடி 5 அங்குலம்.
வயது: சுமார் 44 வயது.
தோற்ற அமைப்பு: கருப்பு நிறமானவர், கண்களைச் சுற்றி மஞ்சள் கலந்த நிறத்தைக் கொண்டவர்.
விசேட அடையாளம்: சந்தேக நபரின் வலது கன்னத்திற்கு கீழே வெட்டுக்காயத் தழும்பு (Scar) ஒன்று காணப்படுகிறது.

சந்தேக நபரின் தற்போதைய தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சில புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர்.

இந்தச் சந்தேக நபர் தொடர்பான ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், உடனடியாகப் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்:

071 – 8598008071 – 8591641071 – 8592279

இந்தத் தகவல்களைப் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்ப்பதன் மூலம் குற்றவாளிகளைக் கண்டறிய ஒத்துழைப்பு நல்குமாறு ஊடக நிறுவனங்களிடமும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடை தெரியாத 9 ஆண்டுகள்; ஓயாத நீதிக்கான பேரணி!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகளைத் தேடி 2017 பிப்ரவரி 20 அன்று கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக தொடங்கிய போராட்டம் இன்றுடன் 3287 நாட்களைக் கடந்துள்ளது.

இன்று காலை 10:30 மணிக்கு கிளிநொச்சி சித்தி விநாயகர் ஆலய முன்பாகத் தொடங்கிய ஆர்ப்பாட்டம், சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து டிப்போ சந்தி மீனாட்சி அம்மன் ஆலயம் வரை உறவினர்கள் பேரணியாகச் சென்றனர்.

இப்போராட்டத்தின் மூலம் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவும், கடந்த 16 வருடங்களாகத் தொடரும் தார்மீகக் கேள்விகளுக்குப் பதில் வேண்டியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக் குழுவினரின் முக்கிய குற்றச்சாட்டுகள்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் சிவானந்தம் ஜெனிதா சில முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.

அண்மையில் ‘டித்வா’ புயல் பாதிப்பிற்கு உலக நாடுகள் காட்டிய அக்கறையை, இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது காட்டவில்லை என ஆதங்கம் தெரிவித்தார்.

யுத்தம் முடிந்து ஐந்து அரசாங்கங்கள் மாறியும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் மற்றும் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு எந்தப் பதிலும் இல்லை.

நீதி கிடைக்காமல் ஏக்கத்துடனேயே இதுவரை 400-க்கும் மேற்பட்ட தாய், தந்தையர் உயிரிழந்துள்ளனர். எஞ்சியிருப்பவர்கள் தங்களின் வாழ்நாளுக்குள் உண்மை தெரிய வேண்டும் எனப் போராடுகின்றனர்.

மனிதப் புதைகுழி ஆய்வுகளில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பு அவசியம் என்றும், குறிப்பாக செம்மணி போன்ற இடங்களில் அகழ்வுப் பணிகள் முறையாக நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

முன்வைக்கப்பட்ட 8 கோரிக்கைகள்

போராட்டத்தின் இறுதியில் உறவினர்கள் பின்வரும் கோரிக்கைகளைச் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசிற்கும் வலியுறுத்தினர்:

  1. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வழங்கப்பட வேண்டும்.
  2. அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
  3. பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) மற்றும் புதிதாகக் கொண்டுவரப்படும் பாதுகாப்புச் சட்டம் (PSTA) ஆகியவற்றை நீக்க வேண்டும்.
  4. வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் மூடப்பட வேண்டும்.
  5. மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பு வேண்டும்.
  6. பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் மீதான புலனாய்வுத் துறை அச்சுறுத்தல் நிறுத்தப்பட வேண்டும்.
  7. பௌத்த மயமாக்கல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
  8. தாயகப் பகுதியின் வளச் சுரண்டல் மற்றும் அனைத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

நீதி வேண்டிய இந்தத் தொடர் போராட்டம், தமிழ் மக்களின் தீராத வலியைச் சர்வதேச அரங்கிற்கு மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது.

கற்பிட்டி பகுதியில் 10 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி, ஆனவாசல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற விஷட தேடுதல் நடவடிக்கையின் போது ஆறு பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த10 கிலோ 400 கிராம் கஞ்சாவை கற்பிட்டி பொலிஸார் கைப்பற்றியதுடன் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜேலால் தலைமையிலான நான்கு பேர் அடங்கிய பொலிஸ் குழுவினரால் இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கைப்பற்றப்பட்ட 10 கிலோ 400 கிராம் கஞ்சா பொதிகள் மற்றும் சந்தேக நபர்கள் மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓய்வூதியம் நீக்குதல் சட்டம் வர்த்தமானியில்!

0

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம், 1982 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்கச் சட்டத்தின் 09 ஆம் பிரிவு அல்லது 1990 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்கச் சட்டத்தின் 09 ஆம் பிரிவின்படி ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமையுள்ள மற்றும் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருக்கும் எந்தவொரு நபருக்கும், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியிலிருந்தும் அதற்குப் பின்னரும் ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் கடந்த 17 ஆம் திகதி நடைபெற்றதுடன், அது பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்திய நிலையில், தற்போது அது சட்டமாக வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

புனித ரமலான் நோன்பு காலம் நாளை ஆரம்பம்!

0

புனித ரமலான் நோன்பு காலம் நாளை (19) முதல் ஆரம்பமாகிறது. அதன்படி, நாளை முதல் ஒரு மாத காலத்திற்கு முஸ்லிம் மக்கள் நோன்பு நோற்பார்கள்.

இன்று (18) இரவு புதிய பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு தெரிவித்தது.

புனித  ரமலான் நோன்பு என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் ஒரு மத நடைமுறையாகும். 

ரமலான் நோன்பு என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக உள்ளது. கலிமா, தொழுகை, ஜகாத் மற்றும் ஹஜ் ஆகியவையே மீதமுள்ள 4 கடமைகள் ஆகும்.

பொதுவாக 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்படும் இந்த நோன்புகளில், விடியற்காலை (ஸஹர்) முதல் சூரிய அஸ்தமனம் (இஃப்தார்) வரை முஸ்லிம்கள் சாப்பிடவோ, எதையும் குடிக்கவோ மாட்டார்கள். இஸ்லாத்தில் பக்தி மற்றும் சுய ஒழுக்கத்தின் செயலாக இது பார்க்கப்படுகிறது.

ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள், விடியலுக்கு முன்பு அதிகாலையிலேயே காலை உணவை உண்பர். இது, ஸஹர் என அறியப்படுகிறது.

அதன்பின், சூரியன் மறைந்ததும் மாலை நோன்பை முடிப்பதற்கு முன்பு வரை எதையும் உண்ண மாட்டார்கள், தண்ணீர் உட்பட எதையும் அருந்த மாட்டார்கள். இது இஃப்தார் எனப்படுகிறது.

இந்த இரண்டிற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. அதற்குள் ஸஹர் உணவை முடித்து, நோன்பைத் தொடங்க வேண்டும் மற்றும் மாலையில் இஃப்தார் உணவை உண்டு, நோன்பை முடிக்க வேண்டும்.