Friday, March 27, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 26

“ஜனாஸாக்களை மார்க்க முறைப்படி அடக்கம் செய்ய விடுங்கள்!”

குருக்கள் மடத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை தோண்டியெடுத்து அவர்களது குடும்பத்தினர் விரும்பியவாறு மார்க்க அடிப்படையில் மீள் அடக்கம் செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தா்ர்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி புனித ஹஜ் கிரிகைகளை நிறைவு செய்து விட்டு தங்களது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்த முஸ்லிம் யாத்திரியர்கள் கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதயில் குருக்கள் மடம் எனும் இடத்தில் தமிழீல விடுதலைப்புலிகளினால் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர் என காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் மஜீத் முகம்மது றவூப் என்பவரினால் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் 2014.04.09ஆம் தகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பிலே கடந்த வரவு செலவுத் திட்ட நீதி அமைச்சு தொடர்பான விவாதத்தின் போதும் நான் பேசியிருந்ததை நினைவுகூறுகின்றேன்.

மேற்படி சம்பவத்தின்போது 100 க்கும் மேற்பட்வர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டு அவர்களது உடமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இறுதியில் கொலை செய்யப்பட்டு குருக்கள்மட கடற்கரையை அண்டிய ஒரு பகுதியில் புதைக்கப்பட்டுள்ளார்கள் என்ற நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தின் மேலான தலையீட்டைக் கோரிய போது, 2014.04.28ஆம் திகதியாகிய சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே குறித்த புதைகுழியை அகழ்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நீதிவான் கட்டளை பிரப்பித்திருந்தார். எனினும் இன்றுவரை குறித்த புதைகுழி அகழப்படவில்லை.

மேற்படி சம்பவமானது வலிந்து காணாமலாக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள் தொடர்பானதாகும். தங்களது உறவினர்களுக்கும் அன்பர்களுக்கும் என்ன நேர்ந்தது என்பதை அறிகின்ற தார்மீக உரிமை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் காணப்படுகின்றது. அதன் அடிப்படையில் குருக்கள்மடப் புதைகுழியில் மேற்படி வலிந்து காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தால் புதைக்கப்பட்ட எச்சங்களைத் தோண்டியெடுத்து மரபணுப்பரிசோதனைகள் மூலம் அடையாளங்கண்டு அவ் எச்சங்களை அவர்களது குடும்பத்தினர் விரும்பியவாறு மார்க்க அனுஷ்டானங்களை மேற்கொண்டு கடமைகளை நிறைவேற்றி மீள் அடக்கம் செய்வதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதும் இவ் உயரிய சபையினுடைய கடமையாகும்.

இவ்விடயம் தொடர்பில் இவ் உயரிய சபையில் நான் பேசிய பின்பு நீங்களும் அவ்விடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டு அகழ்வு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதற்குத் தேவையான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தீர்கள். இதற்காக பாதிக்கட்ட மக்கள் சார்பாக உங்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனினும் இதற்குத் தேவையான நிதி விடுவிக்கப்படாமை காரணமாகவே இவ்விடயம் இன்னும் பிற்படுத்தப்பட்டு செல்வதாக அறிகின்றேன். ஏற்கனவே இவ் அகழ்வுப் பணிக்காக சுமார் இருபத்தொன்பது இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவ் ஒதுக்கப்பட்ட நிதியானது குறித்த அகழ்வுப் பணிக்கு விடுவிக்கப்படாததன் காரணமாக கடந்த 2026.01.06ஆம் திகதி வழக்குத் தவணையின் போது நீதிவான் மேலதிக நிதியினைக் கோரியிருப்பதாகவும் நான் அறிகின்றேன்.

நீதிவானின் உத்தரவின் பேரில் குருக்கள்மட மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியை மண்முனை தென்எருவில்பற்று, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகமே பொறுப்பேற்றுள்ளதாக அறிகின்றேன். எனவே இதற்குத் தேவையான மொத்த நிதியையும் குறித்த பிரதேச செயலகத்திற்கு விடுவித்து தங்களது உறவுகளின் ஜனாஸாக்களையாவது மார்க்க முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு ஆவண செய்யுமாறு தங்களிடம் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

எனவே வலிந்து காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை தோண்டியெடுத்து அவர்களது குடும்பத்தினர் விரும்பியவாறு இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் கடமைகளை நிறைவேற்றி மீள் அடக்கம் செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? என கேட்கிறேன் என்றார்.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கை நியாயமானது, அதற்கான நிதி மிக விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதோடு நான் தனிப்பட்ட ரீதியில் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்துவேன் என கூறிய அமைச்சர், இவ்விடயம் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ்வின் நல்ல முயற்சிகளை பாராட்டுகிறேன். அவர் எந்த நேரத்திலும் என்னோடு தொடர்பு கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

10 இலட்சம் மக்களுக்கான வரப்பிரசாதம்!

0

ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட ‘ஆறுதல் சிகிச்சை’ (Palliative Care) சேவைப் பிரிவு கடந்த (06) அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது. இந்த அலகின் முதல் நோயாளியை அமைச்சரே உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்து வைத்தார்.

உயிருக்கு அச்சுறுத்தலான நோய்களினால் (இதய நோய்கள், புற்றுநோய், நீரிழிவு, சிறுநீரக செயலிழப்பு போன்றவை) பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இந்தச் சேவையின் முக்கிய நோக்கமாகும்.

வலி நிவாரணம், உடல் மற்றும் உளச்சமூக ரீதியான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயாளிகளின் துன்பங்களைக் குறைக்க இச்சேவை உதவுகிறது. இந்த அலகில் இதற்கெனப் பயிற்சி பெற்ற விசேட நிபுணர்கள் மற்றும் தாதியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஹொரண, இங்கிரிய மற்றும் மொரகஹஹேன உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 10 இலட்சம் மக்களுக்குச் சேவை வழங்கும் இந்த வைத்தியசாலையில் நிலவும் வசதிக் குறைபாடுகளை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இடைநிறுத்தப்பட்டிருந்த ஆறு மாடிக் கட்டிடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க இந்த ஆண்டு 150 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் (Tenders) மீளக் கோரப்பட்டு, எதிர்வரும் அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

வைத்தியசாலைக்குத் தேவையான மேலதிகப் பணியாளர்களை நியமிப்பதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நிதி அமைச்சு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதற்காக அடுத்த 10 ஆண்டுகளுக்கான தேசிய மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டின் அனைத்து சுகாதார நிறுவனங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் இயங்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

அரசியல் ரீதியான சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

இதனை நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை போதுமானது எனவும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் அபேசிங்க, ஓஷானி உமங்கா, வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ரசிகா லியனகே மற்றும் ஏனைய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

முஸ்லிம் வீரர்களை தேச பற்றார்களாக அறிவிக்க இணக்கம்!

அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையில் முக்கிய சந்திப்பு..!

தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்கள் தொடர்பான விவகாரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று (06) பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் பிமல் ரத்நாயக்க மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆகியோரை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

முதற்கட்டமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், இவ்விவகாரம் தொடர்பில் விரிவான விளக்கங்களை முன்வைத்தார். இதன்போது, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக இவ்விடயத்தை முன்னெடுத்து நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின்போது, காலனித்துவ ஆட்சிக்கெதிராக போராடிய பல முஸ்லிம் வீரர்கள், ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ‘தேசத் துரோகிகள்’ என முத்திரை குத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களை உரிய வகையில் தேசப் பற்றாளர்களாக அங்கீகரிக்க வேண்டிய அவசியம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பான முழுமையான ஆவணங்கள், வர்த்தமானி அறிவித்தல்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து தகவல்களையும் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களிடம் அவர் கையளித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், குறித்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்கள் தொடர்பான இந்த விவகாரம் குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் இதற்கு முன்னரும் பல தடவைகள் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் விரிவாக கருத்துகளை முன்வைத்து, தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

கரைவலைத் தொழிலில் இயந்திர பயன்பாட்டுக்கு தடை!

0

இயந்திரங்களைப் பயன்படுத்திச் சூழலை அழிக்காது, பாரம்பரிய கரைவலைத் தொழிலைப் பாதுகாக்கவும் – கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் கோரிக்கை

கரைவலைக் கைத்தொழிலுக்காக இயந்திரப் சாதனங்களைப் பயன்படுத்துவதனால் கரையோரச் சூழல் அமைப்பிற்கும் ஏனைய மீனவ சமூகத்தினருக்கும் ஏற்படும் கடுமையான பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாகப் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சுசந்த கஹவத்த அவர்கள் அனைத்து கரைவலை மீனவர்களிடமும் கோரிக்கை விடுக்கின்றார்.

உழவு இயந்திரங்கள் (Tractors) மற்றும் விஞ்ச் (Winch) இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராகச் சில பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் நாயகம், 1984 ஆம் ஆண்டின் கரைவலை ஒழுங்குவிதிகளுக்கு அமைய, கரைவலைக் கைத்தொழில் என்பது இயந்திரச் செயற்பாடுகள் இன்றி, மனித வலுவை மட்டும் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பாரம்பரியத் தொழில் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

“புதிதாகச் சட்டங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை என குறிப்பிட்ட கடற்றொழில் பணிப்பாளர் நாயகம், நடைமுறையிலுள்ள சட்டத்தை அமுல்படுத்துவதாகவும், நாட்டில் இயங்கும் 827 கரைவலைப் பாடுகளில் (Maadel operations) பெரும்பான்மையாக தென் மாகாண மீனவர்கள், இன்றும் எவ்விதப் பிரச்சினையுமின்றி மனித வலுவைக் கொண்டு பாரம்பரியமாக இத்தொழிலில் ஈடுபடுகின்றனர்,” என திரு. கஹவத்த தெரிவித்தார்.

விஞ்சு மற்றும் உழவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதனால் சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் ஏற்படுவதாகப் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

நிர்ணயிக்கப்பட்ட அளவை விடவும் நீளமான வலைகள் மற்றும் அதிக பாரமான இரும்புத் துண்டுகளைப் பயன்படுத்துவதால் கடல் தரை சுரண்டப்பட்டு முருகைக் கற்கள் மற்றும் மீன் இனப்பெருக்க இடங்கள் அழிவடைதாகவும், கரையோரங்களில் பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்துவதனால் கரையோர அரிப்பு ஏற்பட்டு கரையோரச் சூழல் அமைப்புகள் அழிவடைதாகவும் தெரிவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட எல்லையைத் தாண்டிப் பாரிய கடற்பரப்பை வளைப்பதனால் சிறிய மீன்பிடிப் படகு உரிமையாளர்களுக்கும் ஏனைய மீனவர்களுக்கும் தொழிலில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

“நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறிக்கொண்டு சட்டவிரோதமான மற்றும் சூழலை அழிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. எனவே பாரம்பரிய மீன்பிடித் தொழிலையும், கடல் வளத்தையும் பாதுகாப்பது எமது பொறுப்பாகும்,” என பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.

ஆகையால், ஏனைய மீனவர்களுக்கோ அல்லது சுற்றாடலுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில், சட்டரீதியான கட்டமைப்பிற்குள் நின்று பாரம்பரிய கரைவலைத் தொழிலில் ஈடுபடுமாறு திணைக்களம் அனைத்து கரைவலை உரிமையாளர்களிடமும் தயவுடன் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றில் பெண் உறுப்பினர்கள் போர்க்கொடி!

0

சபாமண்டபத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை அல்லது கூற்றுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையை திருத்துமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநயாகரிடம் நேற்று (05) கோரிக்கை விடுத்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான பெண் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றமாக பத்தாவது பாராளுமன்றம் திகழ்கிறது.

பிரதிநிதித்துவ ஜனநாயகம் கொண்ட ஒரு நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக, அவர்கள் பாராளுமன்ற சபைக்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள். பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் மற்றும்” பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்பாட்டின்” ஒரு பகுதியாக ஆண்டுதோறும் “செம்மஞ்சள் தினம்” போன்ற அடையாள நிகழ்வுகளை நாங்கள் நடத்தியிருந்தாலும், இந்த சபையின் செயல்பாடுகள் மூலம் அவற்றை அர்த்தமுள்ள வகையில் விளக்க முடியவில்லை என்பது தமது அவதானிப்பாகும் என பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சருமான சாரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கையளித்துள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை குறிவைத்து வாய்மொழியிலான துஷ்பிரயோகம் இடம்பெறும் போக்கு அண்மைய காலத்தில் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூற்றுகள் முன்னால் உள்ள சவால் வெறுமனே தனிநபர்களை இலக்காகக் கொண்டதல்ல, மாறாக மக்களின் இறையாண்மை மற்றும் பெண்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் அரசியலில் பங்கேற்கவும் உள்ள உரிமையை இலக்காகக் கொண்டது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது ஒட்டுமொத்த சமூகத்திலும் அரசியலில் பெண்கள் தீவிரமாகப் பங்கேற்பதற்கு பாதகமான முன்னுதாரணமாகவும் அமைகிறது என்றும் ஒன்றியத்தின் கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் ஆண் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய இரு தரப்பினரினதும் நடத்தை அல்லது கூற்றுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் பரிந்துரையாகும்.

நிலையியற் கட்டளைகளின் கீழ் “பாராளுமன்றத்தில் ஒழுக்கம்” பிரிவின் மூலம் இது செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு, அது தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய வகையில், புதிய நிலையியற் கட்டளையைச் சேர்த்து நிலையியற் கட்டளைகளைத் திருத்துமாறு கேட்டுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில் பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகையே அதிரவைக்கும் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’

0

அமெரிக்க நீதிமன்ற உத்தரவு மற்றும் ‘எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தின்’ (Epstein Files Transparency Act) படி, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்கள் தற்போது பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஒரு செல்வாக்குமிக்க அமெரிக்க நிதி ஆலோசகர். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் என உலகின் செல்வாக்குமிக்க மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

2019ஆம் ஆண்டில், சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அமெரிக்க அதிகாரிகளால் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். தனது செல்வாக்கையும் பணத்தையும் பயன்படுத்தி சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர் கைது செய்யப்பட்ட சில வாரங்களிலேயே, நியூயார்க் சிறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது தற்கொலை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணம் உலகளவில் பல மர்மங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியது. கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்க புலனாய்வாளர்கள் எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், தொடர்புப் பட்டியல்கள், விமானப் பயணப் பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் எனப் பெருமளவிலான தரவுகளைச் சேகரித்தனர். இவைதான் இப்போது, ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ என்று அழைக்கப்படுகின்றன

2026-ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வெளியான இந்தத் தகவல்கள் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்க நீதித்துறை சுமார் 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், 2,000-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் 1,80,000 புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இவை பல தசாப்தங்களாக எப்ஸ்டீன் மீது நடத்தப்பட்ட விசாரணைகளின் தொகுப்பாகும்.

எப்ஸ்டீனின் புகழ்பெற்ற ‘கருப்புப் புத்தகத்தில்’ (Black Book) இருந்த பல தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகள் இப்போது மறைக்கப்படாமல் (Unredacted) வெளியிடப்பட்டுள்ளன. இதில் உலகெங்கிலும் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட முக்கிய புள்ளிகளின் நேரடித் தொடர்பு எண்கள் உள்ளன.

உலகத் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள்

இந்த ஆவணங்களில் பல முன்னணி நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், ஒருவரின் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெறுவது மட்டுமே அவர்கள் குற்றவாளி என்பதற்கான ஆதாரம் அல்ல என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

  • பிரிட்டிஷ் அரச குடும்பம்: இளவரசர் ஆண்ட்ரூ (Prince Andrew) மற்றும் அவரது முன்னாள் மனைவி சாரா பெர்குசன் ஆகியோரின் பெயர்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன. ஆண்ட்ரூ ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களும், எப்ஸ்டீனை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அவர் அழைத்ததற்கான மின்னஞ்சல்களும் வெளியாகியுள்ளன.

எப்ஸ்டீனின் உதவியாளர் கிஸ்லேன் மேக்ஸ்வெல்லுடன் ஆண்ட்ரூ பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல்கள், அவர் எப்ஸ்டீனின் தீவுக்கு (Little St. James) பலமுறை சென்றதை உறுதிப்படுத்துகின்றன.

எப்ஸ்டீனின் நியூயார்க் இல்லத்தில் ஆண்ட்ரூ இருந்தபோது எடுக்கப்பட்ட சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது அவர் முன்னதாக அளித்த வாக்குமூலங்களுக்கு முரணாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அரசியல் தலைவர்கள்: முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் பெயர்கள் கோப்புகளில் உள்ளன. ட்ரம்ப் எப்ஸ்டீனின் விமானத்தில் பயணம் செய்த பழைய தகவல்களும், கிளிண்டன் அவருடன் இருக்கும் புகைப்படங்களும் இதில் அடங்கும்.
  • தொழில் அதிபர்கள்: எலான் மஸ்க் (Elon Musk) மற்றும் பில் கேட்ஸ் (Bill Gates) ஆகியோரின் தொடர்புகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. எப்ஸ்டீனின் தீவுக்குச் செல்ல மஸ்க் திட்டமிட்டது போன்ற மின்னஞ்சல்கள் இருந்தாலும், தான் அங்கு செல்லவில்லை என மஸ்க் மறுத்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீன் இடையேயான நிதித் தொடர்புகள் குறித்து புதிய தகவல்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்ஸ்டீன் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்க பில் கேட்ஸிடம் உதவி கேட்ட மின்னஞ்சல்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

எப்ஸ்டீனின் இல்லத்தில் இரவு விருந்துகளில் பில் கேட்ஸ் கலந்துகொண்டது குறித்த விவரங்கள் ஆவணங்களில் இடம்பெற்றுள்ளதுடன், இது குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்திருந்த கேட்ஸ், “அவரைச் சந்தித்தது ஒரு தவறு” என்று கூறியிருந்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதி மற்றும் சமூக ரீதியான நீதி வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன:

எப்ஸ்டீன் மரணத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட ‘எப்ஸ்டீன் பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டம்’ (Epstein Victims’ Compensation Program) இதுவரை $125 மில்லியனுக்கும் (சுமார் ₹1,000 கோடி) அதிகமான தொகையை 150-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கியுள்ளது.

எப்ஸ்டீனின் கறுப்புப் பணப் பரிமாற்றங்களுக்கு உதவியதாகக் கருதப்படும் ஜேபி மோர்கன் (JPMorgan) மற்றும் டியூட்சே வங்கி (Deutsche Bank) போன்ற பெரிய வங்கிகளிடமிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் இழப்பீடாகப் பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

2026 பிப்ரவரி நிலவரப்படி, சில பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் பெயர்கள் கோப்புகளில் சரியாக மறைக்கப்படாமல் (Redaction failure) வெளியானதற்காக அரசின் மீது வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளனர்.

அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள்

எப்ஸ்டீன் சிறையில் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னதாக, புலனாய்வு அமைப்புகளுடன் ஒத்துழைக்க (Cooperation) அவர் தயாராக இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இசைக்கலைஞர்கள் மைக் ஜாக்சன், மிக் ஜாகர் மற்றும் பல ஹாலிவுட் பிரபலங்கள் எப்ஸ்டீனுடன் இருக்கும் அரிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களின் நெட்வொர்க்கை விளக்கும் எப்.பி.ஐ (FBI) வரைபடங்கள் மற்றும் ஆவணங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கோப்புகள் வெளியானதன் பின்னணியில் நீண்டகாலமாக மறைக்கப்பட்டிருந்த அதிகார மையங்களின் தொடர்புகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, எப்ஸ்டீனின் கூட்டாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டுவது இதன் பிரதான நோக்கமாக பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் தலைநகரில் தற்கொலை தாக்குதல் – 69 பேர் பலி:

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 69 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் ஷியா சமூகத்தினர் சுமார் 20 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 10-12 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் வழக்கம் போல் மக்கள் கூடியிருந்தனர். மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 69 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 169 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சிடிஏ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்கொலை குண்டுதாரி ஆப்கானிஸ்தானுடன் தொடர்புடையவர் என்று இஸ்லாமாபாத் போலீசார் கூறுகின்றனர். டிடிபி தாக்குதல் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து?

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள “நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்கல்) சட்டமூலத்தின்” எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாக அமையாததால், இதனை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறான ஓய்வூதியச் சலுகைகளை வழங்குவது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் நோக்கமாக இருக்கவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய ஓய்வூதியச் சட்டம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டிற்கு ஒரு விதிவிலக்காகக் காணப்படுவதாகவும், புதிய சட்டமூலம் அந்த விதிவிலக்கை நீக்கி சமத்துவத்தை உறுதிப்படுத்துவதாகவும் நீதிமன்றம் விளக்கியுள்ளது.

இந்தச் சட்டமூலமானது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களால் வழங்கப்பட்ட தெளிவான ஆணையின் அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டு வந்த இந்த ஓய்வூதிய முறைமையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 121(1) உறுப்புரையின் கீழ் இந்தச் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றம் இது தொடர்பான தமது வியாக்கியானத்தை இரகசியமாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தது.

அதற்கமையவே இந்த வியாக்கியானம் குறித்து இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்தச் சட்டமூலம் நடைமுறைக்கு வரும் திகதியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெற்று வந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் மாகாண பாடசாலைகளில் 2,834 ஆசிரியர் வெற்றிடங்கள்!

0

தென்னிலங்கை மாணவர்களின் கல்விக்கனவு சிதையுமா?

இலங்கையின் தென் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அதனை நிவர்த்தி செய்வதற்கான புதிய முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தென் மாகாண சபைக்கும் அதற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கும் இடையில் நிலவும் இந்த இடைவெளியை நிரப்புவது ஒரு சவாலான காரியமாக மாறியுள்ளது.

தென் மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகளில் தற்போது 2,834 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.கே.ஆர்.பத்திரண தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான இடமாற்றங்கள், ஆசிரியர்களின் ஓய்வு மற்றும் பாட ரீதியாக நிலவும் வெற்றிடங்கள் குறித்த விரிவான தகவல்கள் தற்போது வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாகத் திரட்டப்பட்டு வருகின்றன.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மாணவர்களின் கல்வியைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல, நிலவும் வெற்றிடங்களில் 1,417 இடங்களை இந்த வருடத்திற்குள் நிரப்புவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில் தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்குத் தனியான பரீட்சை மூலமும், ஏனைய பட்டதாரிகளுக்குத் திறந்த போட்டிப் பரீட்சை மூலமும் ஆசிரியர்களைத் தெரிவு செய்ய கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைபவர்களின் விபரங்கள் மாகாண கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்ட பின், மாகாண சபையினால் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட உள்ளனர்.

இதேவேளை கல்வித்துறை சார்ந்த விசேட பட்டதாரிகளை (Bachelor of Education) எவ்வித போட்டிப் பரீட்சைகளுமின்றி நேரடியாக ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வகுப்பறைகளில் ஆசிரியர் இன்றித் தவிக்கும் பிள்ளைகளின் ஏக்கத்தைப் போக்கி, அவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். முறையாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ஊடாக, தென் மாகாணத்தின் கல்வித் தரம் மீண்டும் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு பிள்ளையும் தனது கல்வி உரிமையைப் பெறுவதை உறுதி செய்வதே ஒரு சமூகத்தின் கடமையாகும். அந்த வகையில், இந்த 1,417 புதிய ஆசிரியர்களின் வருகை தென் மாகாணக் கல்வித்துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என நம்பலாம்.

மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் 30% குறையும்!

0

இலங்கை மக்கள் நீண்டகாலமாகச் சுமந்து வரும் பாரிய பொருளாதாரச் சுமைகளில் ஒன்றான மின்சாரக் கட்டண விவகாரத்தில், தற்போது ஒரு புதிய நம்பிக்கை ஒளி தென்படத் தொடங்கியுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பாராளுமன்றத்தில் நேற்று (05) உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

மின்சார உற்பத்திச் செலவைக் குறைக்காமல், நுகர்வோருக்கான கட்டணத்தைக் குறைக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் பொறுப்பேற்ற போது ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய 37 ரூபா செலவான நிலையில், தற்போது அது 29 ரூபாவாக (22%) குறைக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்திச் செலவை மேலும் 25 ரூபா வரை குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு வெறும் வாக்குறுதிகளை மட்டும் வழங்காமல், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நீண்டகாலத் திட்டங்களையும் அரசாங்கம் வகுத்துள்ளது.

இதன்படி, தேசிய மின் கட்டமைப்பில் சூரிய மற்றும் காற்று போன்ற இயற்கை எரிசக்தி ஆதாரங்களை அதிகளவில் உள்வாங்குதல், தேசிய மின் விநியோக மற்றும் கடத்தல் கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதுடன், எரிசக்தி சேமிப்பு வசதிகளை (Storage systems) அறிமுகப்படுத்துதல், காலாவதியாகும் மின் நிலையங்களுக்குப் பதிலாக நவீன வெப்ப மின் நிலையங்கள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மின் நிலையங்களை நிறுவுதல், தற்போது இயங்கி வரும் நீர் மின் நிலையங்களின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்தத் திட்டங்கள் வெற்றியடையும் பட்சத்தில், ஒவ்வொரு சாதாரணக் குடும்பமும் தமது மாதாந்த வரவு செலவுத் திட்டத்தில் மின்சாரத்திற்காகச் செலவிடும் தொகை கணிசமாகக் குறையும். இருளில் தவிக்கும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு பெரும் நிம்மதியையும், ஒளிமயமான எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் வழங்கியுள்ளது.