Home Blog Page 41

பொசன் பார்த்துவிட்டு திரும்பியபோது அண்ணன் கண்முன்னே தம்பிக்கு நேர்ந்த கதி!

ஜுட் சமந்த

புத்தளம்: பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பக்தி மயமான கொண்டாட்டங்கள் இடம்பெற்று வரும் வேளையில், ஆனமடுவ பகுதியில் ஒட்டுமொத்த கிராமத்தையுமே உரைய வைத்த ஒரு துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது. ஆனமடுவ நகரில் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொசன் வலயத்தை பார்ப்பதற்காக, புத்தளம் அட்டவில்லுவ பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் குழுவினர் தங்களது மோட்டார் சைக்கிள்களில் உற்சாகமாகப் புறப்பட்டுள்ளனர். ஆனால், அந்தப் பயணம் தங்களின் வாழ்வையே புரட்டிப்போடும் என்று அவர்கள் சற்றும் நினைத்திருக்கவில்லை.

வண்ணமயமான பொசன் வலயத்தை கண்டு ரசித்துவிட்டு, கடந்த 1 ஆம் திகதி நள்ளிரவு இவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிள்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். புத்தளம் – ஆனமடுவ பிரதான வீதியின் கொட்டுக்கச்சிய பகுதியை அவர்கள் கடந்தபோது, ஒரு மோட்டார் சைக்கிள் மட்டும் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரமாக இருந்த கொட்டுக்கச்சிய குளத்தையும் கச்சிமடுவ குளத்தையும் இணைக்கும் பிரதான நீர்ப்பாசன கால்வாய்க்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 19 வயதுடைய சசிந்து லக்ஷான் என்ற இளைஞன், விபத்தின் வேகத்தில் ஆழமான கால்வாய் நீருக்குள் மூழ்கினான். அவருடன் பின்னால் பயணித்த அண்ணனான பசிந்து லக்ஷான், எப்படியோ போராடி கால்வாய்க் கரைக்கு வந்து, தம்பியைக் காப்பாற்றுமாறு வீதியில் நின்று அலறியுள்ளார். ஆனால், அவர்களுடன் முன்னால் சென்ற நண்பர்களின் மோட்டார் சைக்கிள்கள் அதற்குள் அந்த இடத்தை தாண்டி வெகுதூரம் சென்றுவிட்டதால், அண்ணனின் அபயக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. நள்ளிரவு இருளில் என்ன செய்வதென்று தெரியாமல் அந்த அண்ணன் தவித்த தவிப்பு நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.

அந்தச் சமயத்தில், அதிர்ஷ்டவசமாக அந்த வீதியால் வந்த வேன் ஒன்றில் பயணித்தவர்கள், வீதியோரத்தில் காயங்களுடன் அலறிக்கொண்டிருந்த இளைஞனைக் கண்டு வாகனத்தை நிறுத்தியுள்ளனர். நிலைமையை உணர்ந்த அவர்கள், உடனடியாகச் செயற்பட்டு கால்வாய்க்குள் மூழ்கியிருந்த சசிந்துவை மீட்டு, இருவரையும் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சேர்த்தனர். எனினும், அங்கு பரிசோதித்த வைத்தியர்கள் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய சசிந்து லக்ஷான் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கைவிரித்தனர்.

இதேவேளை, படுகாயமடைந்த அண்ணன் பசிந்துவின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மேலதிக அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவசரமாக மாற்றப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் அளவுக்கு அதிகமான அதிவேகத்தில் பயணித்தமையே இந்த விபத்துக்குக் காரணம் என ஆனமடுவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஒரு கண நேர வேக ஆசை, ஒரு இளம் உயிரைப் பறித்து, மற்றொருவரை மரணப் போராட்டத்திற்குள் தள்ளியுள்ளது குறித்து ஆனமடுவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த 3 நாட்களுக்கு நாடு தழுவிய ஒழிப்புத் திட்டம்!

இலங்கையில் சைலண்டாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளது. நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உயர்ந்து வரும் நிலையில், இதனைப் போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்ள அரசாங்கம் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளது.

நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் சூழலில், இன்று (02) முதல் மூன்று நாட்களுக்கு நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

“தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்துடன் இணைந்து, நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகள் இந்த விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பங்கெடுக்கவுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 55,406 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அங்கு இதுவரை 21,565 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

அதிகரித்து வரும் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றாடலைத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

78 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞர் கைது!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர், காரில் 78 கிலோ கேரள கஞ்சாவை கடத்தி சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர். 

வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் கடந்த 30 ஆம் திகதி இரவு பெரியகுளம் சந்தி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில், சொகுசு கார் ஒன்றினை சோதனை செய்த போது அதில் கேரள கஞ்சா 78 கிலோகிராம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கேரளா கஞ்சா மீட்கப்பட்டதுடன், அதில் பயணித்த நபரும் கைது செய்யப்பட்டார். 

நெடுங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, குறித்த வாகனம் நிறுத்தி சோதனை செய்த போது இந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் 31 வயதுடைய புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் மக்கள் வங்கி கிளையினால் பூக்குளம் முன்பள்ளிக்கு பேருதவி!

மன்னார் பகுதியில் நீண்ட நாட்களாக அடிப்படை வசதிகளின்றி கல்வி கற்று வந்த முன்பள்ளிப் பிள்ளைகளின் முகங்களில், மக்கள் வங்கியின் பிறந்தநாள் கொண்டாட்டம் புதியதொரு ஒளியை ஏற்றியுள்ளது.

ஒரு நிறுவனம் தனது 65ஆவது மைல்கல்லை எட்டும்போது ஆடம்பரமாகக் கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால், மக்கள் வங்கி தனது 65ஆவது பிறந்தநாளை, சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள ஒரு கிராமத்து பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக அர்ப்பணித்து, அனைவரினதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. மக்கள் வங்கியின் மன்னார் கிளையின் முகாமையாளர் திரு ஹக் முஹம்மது அரூஸ் தலைமையில் இந்த நெகிழ்ச்சியான மனிதநேய உதவித்திட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

பூக்குளம் பிள்ளைகளுக்குக் கிடைத்த ‘உயிர்கொடுப்பு’

மன்னார், பூக்குளம் முன்பள்ளி பாடசாலையில் கல்வி பயிலும் குட்டிப் பிள்ளைகள், முறையான தளபாட வசதிகள் இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். தளபாடத் தட்டுப்பாடு என்பது அந்தப் பிள்ளைகளின் அன்றாட கற்றல் ஆர்வத்தையே பாதித்திருந்தது. இதனைத் துல்லியமாக அடையாளம் கண்டுகொண்ட மக்கள் வங்கியின் மன்னார் கிளை அதிகாரிகள், அந்தப் பாடசாலைக்கு நேரடியாகச் சென்று பிள்ளைகளுக்குத் தேவையான அத்தியாவசிய தளபாடச் சாமான்களை முற்றிலும் இலவசமாக அன்பளிப்புச் செய்துள்ளனர்.

இந்தத் தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வானது வெறும் ஒரு கொடுக்கல் வாங்கலாக அமையாமல், அந்தப் பகுதி மக்களின் நீண்டகாலக் குறைபாட்டைத் தீர்க்கும் ஒரு உன்னத நிகழ்வாக அமைந்தது. மன்னார் மக்கள் வங்கியின் முகாமையாளர் உற்பட ஏனைய அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் எனப் பலரது முன்னிலையில் இந்த உதவிப் பொருட்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. “எங்கள் பிள்ளைகளின் கல்விக்குக் கிடைத்த ஆகச்சிறந்த பிறந்தநாள் பரிசு இது” எனப் பெற்றோர் இதன்போது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

16 வருட சிறைத்தண்டனைக்கு சவால் விடுத்த சரண குணவர்தன!

இலங்கை அரசியலிலும் ஊடகங்களிலும் கடந்த சில நாட்களாகப் பேசும்பொருளாக இருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. நான்கு ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் தமக்கு விதிக்கப்பட்ட 16 வருட கடுங்காவல் சிறைத்தண்டனையை எதிர்த்து அவர் தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளார். கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி வழங்கப்பட்ட இந்த அதிரடித் தீர்ப்பை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே அவரது பிரதான கோரிக்கையாக உள்ளது.

சரண குணவர்தன அபிவிருத்தி அதிர்ஷ்டலாபச் சபையின் (Development Lotteries Board) தலைவராகப் பதவியிலிருந்த காலகட்டத்தில், அந்த நிறுவனத்திற்காக வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இதன் மூலம் அவர் அரசாங்கத்திற்கு பெருமளவு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (CIABOC) சுட்டிக்காட்டியுள்ளது.

நீண்டகால விசாரணைகளின் பின்னர், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் 2022ஆம் ஆண்டில் அவருக்கு எதிராக நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் இறுதித் தீர்ப்பாகவே அண்மையில் 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், இந்தத் தீர்ப்பில் சட்ட ரீதியான குறைபாடுகள் இருப்பதாகக் கூறி சரண குணவர்தன தரப்பு மேல்முறையீடு செய்துள்ளதால், இந்த அரசியல்-சட்டப் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்ந்துள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனுக்களை ஏற்குமா, தீர்ப்பில் மாற்றம் வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேல் மாகாணத்தை உலுக்கும் டெங்கு: இதுவரை 32 மரணங்கள்!

இலங்கையில் அண்மைக்காலமாகப் பேசப்படும் பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், சத்தமில்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் அச்சுறுத்தும் ஒரு பாரிய அரக்கனாக டெங்கு நோய் உருவெடுத்து வருகின்றது. நாம் அன்றாடம் கடந்து செல்லும் ஒரு நுளம்புதானே என்று அலட்சியமாக இருந்தால், அது உயிரைப் பறிக்கும் ஆபத்தாக மாறக்கூடும் என்பதை தற்போதைய புள்ளிவிபரங்கள் மிகத் தெளிவாக நிரூபித்துள்ளன. ஆம், இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,000 ஐக் கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே மாதத்தில் கொத்தாகப் பரவிய நோய்!

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தரவுகளின்படி, மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 55,406 ஆக உயர்ந்துள்ளதுடன், துரதிஷ்டவசமாக 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மிகவும் ஆபத்தான விடயம் என்னவென்றால், கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 21,565 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதாவது, மொத்தப் பாதிப்பில் கிட்டத் தட்ட அரைவாசிப் பங்கு ஒரே மாதத்தில் பதிவாகியுள்ளது. நிலைமை எவ்வளவு தீவிரமாக இருக்கின்றது என்பதற்கு, கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள 1,024 நோயாளர்களே சாட்சியாகும்.

ரெட் அலெர்ட் (Red Alert) வலயத்தில் மேல் மாகாணம்:

இந்த டெங்குப் பேரலையின் பிரதான மையப்புள்ளியாக மேல் மாகாணமே மாறியுள்ளது. மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, கொழும்பு மாவட்டத்தில் 11,392 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 11,006 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். சனநெரிசல் மிக்க இந்த மாவட்டங்களில் வசிப்பவர்கள் ஒவ்வொரு நிமிடமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

“பொதுமக்கள் இன்னமும் நுளம்புகள் முட்டையிடும் இடங்களை முழுமையாகச் சுத்தம் செய்யாமல் இருப்பதே இந்தத் தீவிரப் பரவலுக்கு முதன்மைக் காரணம்” என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தற்காலிக இயக்குநர் வைத்தியர் கபில கன்னங்கர சுட்டிக்காட்டியுள்ளார். நாம் போடும் சிறிய பிளாஸ்டிக் மூடி, உடைந்த போத்தல்கள், டயர்கள் மற்றும் பூச்சாடித் தட்டுகளில் தேங்கும் ஒரு துளித் தண்ணீரே இந்த அச்சுறுத்தலின் ஆரம்பப் புள்ளியாக அமைகின்றது. இனிவரும் நாட்களில் நோயாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமாயின், நுளம்புகள் பெருகும் இடங்களை முற்றாக அழிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.

பாடசாலைகளையும் அரச அலுவலகங்களையும் குறிவைக்கும் நுளம்புகள்!

தற்போது வீடுகளை விட, எமது பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களைச் சூழவே டெங்கு மிக வேகமாகப் பரவி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இது குறித்து பெற்றோர், ஆசிரியர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வெறும் பார்வையாளர்களாக இராமல், கூடுதல் அவதானத்துடனும் பொறுப்புடனும் உடனடியாகச் செயற்பட வேண்டிய தருணம் இதுவாகும். உங்கள் சூழலை இன்றே சோதியுங்கள், இல்லையேல் அடுத்த பாதிப்பு உங்களுடையதாகக் கூட இருக்கலாம்!

தரம் 5 புலமைப்பரிசிலைக் குறிவைத்து ஆனமடுவையில் ‘மிஹிகத வருண 2026’

ஜுட் சமந்த

இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் திரைகளுக்குள் சுருங்கிப்போயிருக்கும் சிறுவர்களுக்கு, இயற்கையின் அருமையையும் நமது பாரம்பரியத்தின் பெருமையையும் நேரில் காட்டினால் எப்படியிருக்கும்? அதிலும், சில மாதங்களுக்கு முன்பு சூறாவளியின் கோரத்தாண்டவத்தால் நிலைகுலைந்து போன ஒரு பாடசாலை, பீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்து இவ்வாறானதொரு பிரம்மாண்டத்தை நிகழ்த்தியிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், ஆனமடுவ மண்டலான கனிஷ்ட வித்தியாலயத்தில் அண்மையில் அரங்கேறிய ‘மிஹிகத வருண 2026’ சூழலியல் கண்காட்சி, பிராந்தியத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சூறாவளி தந்த வடு.. சோர்ந்து போகாத மனிதர்கள்!

உண்மையில் இந்த வெற்றியின் பின்னணியில் ஒரு கண்ணீர்க் கதை இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய ‘தித்வா’ (Ditwa) சூறாவளியின் போது, மண்டலான குளத்தின் அணைக்கட்டு உடைந்ததில் இந்தப் பாடசாலை வெள்ளத்தில் மூழ்கியது. அழகாக இருந்த பாடசாலைத் தோட்டம் முற்றாக அழிந்ததுடன், கட்டடங்களும் கடும் சேதங்களுக்கு உள்ளாகின. “எல்லாம் போச்சு” என்று கைவிட்டிடாமல், அதிபர் சாகரிகா சந்தமாலி தலைமையிலான குழுவினர், டிசம்பர் மாதமே களத்தில் குதித்தனர். இடிபாடுகளுக்கு மத்தியிலிருந்து, வெறும் சில மாதங்களில் ஒரு பசுமைச் சோலையை அவர்கள் எப்படி உருவாக்கினார்கள் என்பதுதான் தற்போதைய பேசுபொருள்!

வீட்டுத் தோட்டம் முதல் விண்வெளி வரை!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களை இலக்கு வைத்தே இந்த கண்காட்சி திட்டமிடப்பட்டது. பரீட்சைக்கான 16 முக்கிய பாடக் கருப்பொருள்களில், 9 கருப்பொருள்களை மையமாக வைத்து கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வீட்டுத் தோட்டம், பழங்கால மற்றும் தற்கால மத வழிபாட்டுத் தலங்கள், நீர்ப்பாசனத் தொழில்நுட்பம், போக்குவரத்துப் பாதுகாப்பு, நவீன கண்டுபிடிப்புகள் எனப் பல பிரிவுகள் இதில் அடங்கியிருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, விண்வெளி குறித்த கூடமும், தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்த ‘ஆதிவாசிகள் கிராமமும்’ வந்திருந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளின் நெஞ்சங்களைக் கொள்ளைகொண்டன.

“இன்றைய பிள்ளைகள் பலரும் பார்த்திராத, ஏன்… கேள்விப்பட்டிராத பல பழங்காலக் கருவிகளும், வீட்டு உபயோகப் பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. எமது முன்னோர்களின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, பெற்றோர்கள் கிராமம் கிராமமாகத் அலைந்து திரிந்து, தேடிக் கண்டுபிடித்து இப்பொருட்களைக் கொண்டு வந்தனர்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் பாடசாலை அதிபர்.

மதிப்பெண்கள் மட்டுமல்ல, மன மாற்றமே இலக்கு!

வெறும் பரீட்சை மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமல்ல இந்த கண்காட்சியின் நோக்கம். “இங்கு வரும் ஒவ்வொரு பிள்ளைக்கும், நாமும் எமது வீட்டில் இப்படி ஒரு சூழலை உருவாக்க வேண்டும், இயற்கையை நேசிக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். அதில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்” என்கிறார் அதிபர் சாகரிகா சந்தமாலி.

ஆசிரியர்கள், பெற்றோர், கிராம மக்கள் மற்றும் அரச அதிகாரிகள் என ஒட்டுமொத்த சமூகமும் கைகோர்த்தால், சூறாவளிப் பேரழிவைக் கூட ஒரு சரித்திர சாதனையாக மாற்ற முடியும் என்பதற்கு இந்த ‘மிஹிகத வருண 2026’ சூழலியல் கண்காட்சி ஒரு வாழும் உதாரணம்!

வனாத்தவில்லுவில் தோணி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் பரிதாப மரணம்!

புத்தளம், வனாத்தவில்லுவ பகுதியில் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கிய சோகக் கதையொன்று பதிவாகியுள்ளது. மங்களபுர ஏரியின் அழகிய தாமரை மலர்களைப் பறிப்பதற்காக, ஆசையோடு தோணியேறிச் சென்ற 6 பாடசாலை மாணவர்களின் பயணம், மரணப் பயணமாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

வழக்கமான ஒரு நாளாகத் தொடங்கிய அந்த மாலைப் பொழுது, சில நிமிடங்களிலேயே பெரும் கூச்சலாகவும் மரண ஓலமாகவும் மாறியுள்ளது. மாணவர்கள் 6 பேரும் ஏரியின் நடுப்பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த வேளையில், அவர்கள் பயணித்த தோணி திடீரென நிலைதடுமாறி, அப்படியே தலைகீழாகக் கவிழ்ந்தது.

தண்ணீரில் விழுந்த மாணவர்கள் மரண பயத்தில் தத்தளித்துள்ளனர். அவர்களில் 2 மாணவர்கள் மட்டும் தனது முழு பலத்தையும் திரட்டி, நீந்திச் சென்று அதிர்ஷ்டவசமாக கரை சேர்ந்துள்ளார். ஆனால், ஏனைய நான்கு பிள்ளைகளும் நீச்சல் தெரியாததாலும், நீரின் ஆழத்தினாலும் கதிகலங்கி, கண் இமைக்கும் நேரத்திற்குள் ஏரித் தண்ணீருக்குள் மூழ்கினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நடத்திய தேடுதலின் பின்னர், நீரில் மூழ்கிய நான்கு மாணவர்களது உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் அனைவரும் பண்டாரநாயக்கபுர மற்றும் மங்களபுர ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 வயதுடைய, இளம் பாடசாலை மாணவர்கள் என்பது கிராமத்தையே சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்தத் துயரச் சம்பவம் குறித்து, வனாத்தவில்லுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மலர்களைப் பறிக்கச் சென்ற பிள்ளைகளின் இந்த முடிவு, நீர்நிலைகளுக்கு அருகில் செல்லும்போது பிள்ளைகள் எவ்வளவு அவதானமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்தியுள்ளது.

பாலாவி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் உடல் மீட்பு!

புத்தளம், பாலாவி வன்னித்தீவு பகுதியில் திடீரென ஏற்பட்ட பரபரப்புச் சம்பவம் ஒன்று, ஒட்டுமொத்தப் பிரதேச மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆள் நடமாட்டமே இல்லாத, அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள மரமொன்றில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமா மீட்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மக்கள், அது யார் என்று பார்த்தபோதுதான் அந்த அதிர்ச்சி இரட்டிப்பானது. உயிரிழந்தவர் பாலாவி, வன்னித்தீவு, சுருவம் மாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய செனத் தில்ஹார என்ற இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். துடிப்பான வயதில், வாழ்ந்து முடிக்க வேண்டிய ஒரு இளம் உயிர், இப்படி ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டமை ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

இந்த மர்ம மரணத்தின் பின்னணி என்னவாக இருக்கும் என்ற தேடலில், உறவினர்களிடம் இருந்து ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த இளைஞருக்கு அண்மைய நாட்களாகக் காதல் விவகாரம் ஒன்று இருந்ததாகவும், அது தொடர்பில் ஏற்பட்ட மன உளைச்சலால், சில நாட்களுக்கு முன்னர் அவர் தனது கைகளைத் தானே அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இந்தக் காதல் விவகாரமே அவரை இந்த விபரீத முடிவை நோக்கித் தள்ளியிருக்குமோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும், இது தற்கொலையா? அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் மர்மங்கள் ஒளிந்திருக்கின்றதா? என்ற கேள்விகளுக்கு இன்னும் முறையான பதில்கள் கிடைக்கவில்லை. உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இளம் உயிரின் பிரிவுக்குக் காரணமான உண்மைப் பின்னணி என்ன என்பது, பொலிஸாரின் விரிவான மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கைகளின் பின்னரே முழுமையாக வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியில் பிரம்மாண்ட மரநடுகை திட்டம்!

சுற்றுச்சூழல் நெருக்கடிகளும் பொருளாதார சவால்களும் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அவற்றுக்கு மிகச் சிறந்ததொரு தீர்வை முன்வைத்து, இலங்கைக்கே முன்மாதிரியாக மாறியுள்ளது புத்தளம் பிராந்தியத்தின் முன்னணி கல்வி நிறுவனமான இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி. பெண்கல்வி மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி வரும் இக்கல்லூரி, தற்போது நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், சூழல் சமநிலைக்கும் வலுச்சேர்க்கும் நோக்கில், தனது 26 ஏக்கர் பிரம்மாண்ட நிலப்பரப்பை முழுமையாகப் பயன்படுத்தும் ஒரு மாபெரும் பசுமைப் புரட்சியில் கால்பதித்துள்ளது.

இதன் முதற்கட்ட மைல்கல்லாக, இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் ‘மரநடுகை திட்டம் 2026’ (Tree Planting Project 2026) இற்கான மரக்கன்றுகள் கையளிக்கும் விசேட நிகழ்வு கடந்த 29 ஆம் திகதி திங்கட்கிழமை, கல்லூரியின் அதிநவீன ‘ஸாமில்’ (Zaamil) கேட்போர் கூடத்தில் மிக விமரிசையாக அரங்கேறியது. வெறும் உள்ளூர் நிகழ்வாக மட்டுமன்றி, எல்லை கடந்த சர்வதேசக் கரங்களின் கூட்டு முயற்சியாக இது அமைந்திருந்ததுதான் இதன் ஆகப்பெரிய சிறப்பம்சமாகும்.

இலங்கை முஸ்லிம்களுக்கான உலக மன்றத்தின் கனடா கிளை (World Forum for Sri Lankan Muslims – Canadian Chapter) வழங்கிய நிதியுதவியுடன், ‘Tree for Mercy Foundation’ அறக்கட்டளை மற்றும் ‘Citigardens’ நிறுவனம் ஆகியவற்றின் நேரடிப் பங்களிப்பில் இத்திட்டம் நனவாகியுள்ளது. இந்த உலகளாவிய கூட்டிணைவானது, கல்லூரியின் சுவர்களோடு நின்றுவிடாமல், ஒட்டுமொத்த தேசத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும் வித்திடும் நோக்குடன் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் நன்கொடையாளர்கள் சார்பாக ஹிள்ரு சித்தீக் அவர்கள் கனடாவிலிருந்து நிகழ்நிலையூடாக (Online) இணைந்து ஆற்றிய விசேட உரை மிக முக்கிய அங்கமாக அமைந்திருந்தது. நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய இந்த நேரடி உரையாடலின் போது, அவர் சுமார் 800 உயர்தர மரக்கன்றுகளை கல்லூரிச் சமூகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். இவற்றில் 500 அதிதிடமான தென்னங் கன்றுகளும், 300 பல்வகை கனிதரும் மரக்கன்றுகளும் உள்ளடங்குகின்றன. இவை வெறும் மரங்கள் அல்ல; கல்லூரியின் எதிர்காலப் பொருளாதாரத் தேவைகளை சுயமாக நிவர்த்தி செய்யப்போகும் ‘பசுமை வைப்புக்கள்’ (Green Investments) எனலாம்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி முகாமைத்துவ சபை தலைவர் எச். அஜ்மல், கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி) ஆகியோருடன், தோட்ட அபிவிருத்தி குழுவின் தூண்களான சகோதரர் அலிசிமாக், சகோதரர் நஸீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவர்களுடன் பிரதி அதிபர், விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், மாணவிகள் மற்றும் பழைய மாணவியர் அமைப்பின் தலைவி அஷ்ஷெய்கா நும்ரா ஸாஜிதா (இஸ்லாஹி) உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டு, இத்திட்டத்தை வாழ்த்தி வரவேற்றனர்.

“இன்றைய நாளில் நாம் நடும் ஒரு மரம், நாளைக்கான சிறந்ததொரு சமூகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்” என்ற உன்னதக் கோட்பாட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ‘மரநடுகை திட்டம் 2026’, இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்கு சுற்றாடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மாபெரும் சுயசார்புத் தன்மையை வழங்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இத்தகையதொரு உன்னதப் பணிக்கு தோள்கொடுத்த புலம்பெயர் சமூகங்களுக்கும், சர்வதேசத் தொண்டு நிறுவனங்களுக்கும் கல்லூரிச் சமூகம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பகிர்ந்து வருகின்றது.