வீதியில் பயணித்த மோட்டார் கார் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதில் பெல்ஜியத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் சாரதி ஆகியோர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் – சிலாபம் சாலையில் மதுரங்குளிய – செம்பெட்டே பகுதியில் நேற்று 24 ஆம் தேதி மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் சிக்கிய மோட்டார் கார், சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்றவேளையில் வாகனம் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும வாகனத்தை செலுத்திய ஓட்டுநர் தூங்கிவிட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்களின் நிலை மோசமாக இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரங்குளிய காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பாக்கெட்டுகளை விழுங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் தொடுவாவ – மஹாவெவ, குடமடுவெல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவராவார்.
போதைப்பொருள் பாக்கெட்டுகளை விழுங்கிய பின்னர் வீட்டில் மயக்கமடைந்த நபரை அவரது சகோதரர் நேற்று 24 ஆம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவரா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக போதைப்பொருள் பாக்கெட்டுகளை விழுங்கினாரா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
அந்த வகையில், கனடாவை அமெரிக்காவோடு இணைப்பது குறித்து அவ்வபோது பேசி வந்த அவர், கனடாவிற்கு அதிக வரிவிதிப்பையும் அமல்படுத்தி உள்ளார். இதற்கிடையே, கனடாவின் பிரதமராக ஒன்பது ஆண்டுகள் பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதை அடுத்து, மார்க் கார்னி லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமரானார்.
மார்க் கார்னி பிரதமரான பின்பும் அமெரிக்காவை எதிர்த்து வந்தார். இந்தச் சூழலில், அமெரிக்காவிற்குச் சமீபத்தில் பயணம் மேற்கொண்ட கனடா பிரதமர் மார்க் கார்னி, வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில், கனடாவின் வரிவிதிப்பு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தொலைக்காட்சியில் விளம்பரம் வெளியானதைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் வர்த்தக வரிகள் பற்றிப் பேசியதை, கனடா தனது விளம்பரத்தில் தவறாகச் சித்திரித்திருப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். வரி விதிப்பு குறித்து எதிர்மறையாகப் பேசும் ரீகனின் விளம்பரங்களைக் கனடா தவறாகப் பயன்படுத்தியதாகவும் அது போலியானது என்றும் அண்மையில் ரொனால்டு ரீகன் அறக்கட்டளை அறிவித்திருந்ததை ட்ரம்ப் சுட்டிக்காட்டினார். மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வரிகள் மிகவும் முக்கியமானவை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கடுமையான அமெரிக்க வரி விதிப்பிற்குத் தளர்வு வழங்கக் கோரி கனடா பிரதமர் மார்க் கார்னி ட்ரம்பைச் சந்தித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த எதிர்பாரா முடிவு வெளிவந்துள்ளது. முன்னதாக, ”அமெரிக்கா அல்லாத பிற நாடுகளுக்குச் செய்யப்படும் ஏற்றுமதி அடுத்த பத்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கப்படும், அதேநேரத்தில், உள்நாட்டு முதலீடும் உள்கட்டமைப்பும் வரும் பட்ஜெட்டில் அதிகரிக்கப்படும். பல தசாப்தங்களாக நீடித்துவந்த அமெரிக்காவுடனான நெருக்கமான பொருளாதார உறவு முடிந்தது” என்று மார்க் கார்னி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை சுமார் 155 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம் (NDRSC) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தின் 14 கிராம சேவகர் பிரிவுகளில், சுமார் 155 குடும்பங்களைச் சேர்ந்த 562 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தின் 10 பிரதேச செயலகங்களுக்கு உற்பட்ட 155 குடும்பங்களை சேர்ந்த 562 பேர் இவ்வாறு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலாபம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அம்பகந்ததவள மற்றும் சவரான கிராம சேவகர் பிரிவில் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், மொத்தமாக 12 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாத்தாண்டிய பிரதேச செயலகத்தின் தெற்கு முது கட்டுவ பிரிவில் உள்ள கால்நடை அலுவலக வளாகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிலாபம் சவாரான பகுதியில் உள்ள சமூக மண்டபம் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2026ம் ஆண்டு வடமாகாண கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடம்மாற்றத்தில் கிளிநொச்சி ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கிளிநொச்சி தெற்கு வலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமாகாணக் கல்வித்திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களும் மாவட்டத்தில் பணிபுரியும் ஏனைய ஆசிரியர்களும் அதிபர்களும் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த முறையற்ற விதமாக மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தை உடணடியாக இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி இன்று (2025.10.24) வெள்ளிக்கிழமை கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப் பணிமனைக்கு முன்பாக ஒன்றுகூடி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின் மூலம் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கான பின்வரும் நியாயப்பாடுகளை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் முன்வைத்துள்ளனர்.
1. போர் நிகழ்ந்த சூழலில் தங்கள் உயிர்களை துச்சமென எண்ணி பதுங்கு குழிகளுக்குள்ளும் குண்டுமழை நடுவினிலும் நின்று கடந்த காலங்களில் பணியாற்றிய பல ஆசிரியர்களின் பெயர்களும் இப்பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளமை.
2. போர்ச்சூழலால் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களதும், உடல் உறுப்புக்களை இழந்து அடைந்தவர்களதும் பெயர்களும் இப்பட்டியலில் விழுப்புண் உள்வாங்கப்பட்டுள்ளமை.
3. உயர்கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் கிடைத்தும் போர் காரணமாக மிக சவால்களின் மத்தியில் உயர்கல்வியை நிறைவுசெய்து காலதாமதமாகி ஆசியர்சேவைக்குள் உள்வாங்கப்பட்டு இன்று பாரிய குடும்பச் சுமைகளோடு பணியாற்றிவருகின்ற ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை.
4. கிளிநொச்சி மாவட்டத்தின் புவிசார் கட்டமைப்புகளை புரிந்து கொள்ளாமல் மாவட்டத்திற்குள்ளே பல கிலோமீற்றர் தூரம் பாரிய போக்குவரத்து நெருக்கடிகளைச் சந்தித்து பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை.
5. கிளிநொச்சி மாவட்டத்தின் பல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யாத சூழலில் பற்றாக்குறையாகவுள்ள எமது மாவட்டத்தின் ஆசிரியவளத்தை சிதைக்கும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை.
6. முறையான தரவுகளின்றி இடமாற்றப்பட்டியலில் ஆசிரியர்களின் பெயர் உள்வாங்கப்பட்டமை மற்றும் இடமாற்றம் வழங்கப்படும் ஆசிரியர்களுக்கு நிகரான ஆசிரியர்களை வழங்குவது தொடர்பாக நம்பகமான பொறிமுறை ஏதுமின்றி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள நியாயப்பாடுகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றத்தால் எமது மாவட்டத்தின் கல்வி மேலும் பின்தள்ளப்பட்டு எமது மாணவர்களின் எதிர்காலம் இருள்மயமாகி பேராபத்து நிகழவுள்ளமையினை புரிந்து கொண்டு உடனடியாக சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தை இரத்துச்செய்யவேண்டும் என்ற கோரிக்கையினை பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக ஆசிரியர் சங்கத்தினர் முன்வைத்துள்ளனர்.
கோரிக்கையின் நியாயப்பாடுகளைப் புரிந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் அக்கறையுள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்விமான்கள் ஆகியோரும் எம்முடன் கைகோர்த்துள்ளார்கள் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மைத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் 106 பிரதேச செயலகங்களுக்குற்பட்ட 4,959 குடும்பங்களைச் சேர்ந்த 20,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.
மேலம் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை நான்கு ஓர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மைத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சீரற்ற காலநிலையால் 2 வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுளளதுடன், 507 வீடுகள் பகுதியளவில் பதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 8 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 30 பேர் பாதுகாப்பான இடத்தில் தங்கிச வைக்கப்பட்டுள்ளதாகவும், அயல் வீடுகளில் சுமார் 43 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர் தங்கியுள்ளதாகவும் குறித்த நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடம் ஜனவரி 1 முதல் இதுவரையான காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் இவ்வருடம் ஜனவரி 1 முதல் இதுவரையான காலப்பகுதிகளில் 2539.5 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும், 1481.4 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 32.6 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருளும், 14,419.4 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த காலப்பகுதிக்குள் 30 லட்சம் போதை மருந்துகளும், 6 லட்சம் போதை மாத்திரைகளும், 575 கிராம் ஹெரோயின் ஏனைய போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும் போதை தொடர்பாக 1 லட்சத்து 87 ஆயிரத்து 862 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான போலி சட்டமூலம் தொடர்பான போலி ஆவணம் தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ.
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான ஒரு சட்டமூலமாக தயாரிக்கப்பட்ட போலி ஆவணம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது, மேலும் இது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அல்லது அதனுடன் இணைந்த எந்தவொரு நிறுவனத்தாலும் வெளியிடப்படவில்லை என்று அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இந்த போலி ஆவணம் தயாரிக்கப்பட்டது மற்றும் சமூக ஊடகங்களில் பரவியது குறித்து விசாரித்த பின்னர் எதிர்காலத்தில் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
களுத்துறை தர்கா நகரில் உள்ள அல்-ஹம்ரா கல்லூரியின் 129வது ஆண்டு விழா இன்று (23) இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
தர்கா நகரில் உள்ள அல்-ஹம்ரா கல்லூரியின் 129வது ஆண்டு விழாவில் மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திமா ஹெட்டியாராட்சி ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கல்வி மற்றும் சமூக சேவைக்கான கல்லூரியின் நீண்டகால அர்ப்பணிப்பு, கல்வியில் சிறந்து விளங்குவதற்காக குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் அசைக்க முடியாத முயற்சிகள் மற்றும் பல்வேறு சமூக அடுக்குகளைச் சேர்ந்த மாணவர்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கல்லூரியின் பங்கை ஆளுநர் பாராட்டினார்.
கல்வி என்பது ஆர்வம், அனுபவம் மற்றும் கற்பனை ஆகியவற்றின் வாழ்நாள் பயணம் என்றும், இது பொறுப்புள்ள, இரக்கமுள்ள குடிமக்களை வளர்க்கிறது என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.
குழந்தைகளுக்கு அறிவை வழங்குவதற்கும், ஒழுக்கமான குழந்தையை வளர்ப்பதற்கும், ஒற்றுமையை வளர்ப்பதற்கும் பள்ளியின் உறுதியான அர்ப்பணிப்புக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார், மேலும் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் திறமையான நபர்களை உருவாக்குவதில் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இந்த மதிப்புமிக்க கல்வி நிறுவனத்தின் வெற்றி மற்றும் கூட்டு சாதனைகளுக்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆளுநர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட இலங்கைத் தமிழர் ஒருவர் 3 மாதங்களில் 10 நாடுகளை கடந்து, நேற்று அதிகாலை, நாகையில் இருந்து கப்பல் மூலம் இலங்கை வந்தடைந்திருக்கிறார்.
இலங்கை, யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இனோசூரன் உள்நாட்டு போர் காரணமாக பிரான்ஸ் நாட்டில் குடியேறினார். போர் முடிவுக்கு வந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து சொந்த நாட்டிற்கு சைக்கிளில் செல்ல முடிவெடுத்தார்.
கடந்த ஜூலை 9 ஆம் தேதி பிரான்சு நாட்டிலிருந்து கிளம்பிய அவர், ஜெர்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகளை சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் கடந்து சாதனை படைத்துள்ளார். 3 மாத பயணத்தை நாகையில் முடித்த அவர் நாகை துறைமுகத்தில் இருந்து சிவகங்கை கப்பல் மூலம் இலங்கை யாழ்பாணம் வந்தடைந்தார்.
நேற்று அதிகாலை இந்திய துறைமுகம் வந்த அவருக்கு சுபம் நிறுவனத்தின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல நாடுகளின் கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்களை சைக்கிளில் சென்றதால் அறிய முடிந்தது என்று கூறியுள்ள இனோசூரண், பல ஆண்டுகள் கழித்து பூர்வீக நாடான இலங்கை செல்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.