Thursday, February 6, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 65

பங்கர் அடித்து தங்கம் கடத்திய இலங்கையர் கைது

0

6.5 மில்லியன் இந்திய ரூபா பெறுமதியான தங்கத்தை குடலுக்குள் வைத்து கடத்த முற்பட்ட இலங்கை பிரஜை ஒருவர் கர்நாடகா – கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இலங்கையரிடம் இருந்து 1.2 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

33 வயதுடைய சந்தேகநபர் பஹ்ரைனில் இருந்து கல்ஃப் ஏர் விமான சேவையில் பெங்களூருக்கு சென்றுள்ளார்.

அவரின் தகவல்களில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் அவரை அழைத்து சென்று விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது குறித்த நபர் தமது குடலுக்குள் தங்கத்தை கடத்தி வந்தமை தெரியவந்துள்ளது.

அவர் நான்கு வில்லைகளில் தங்கத்தை அடைத்து குடலுக்குள் வைத்து பெங்களூருக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இந்தநிலையில், பெங்களூர் புலனாய்வு அதிகாரிகளால் தங்கம் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் இதற்கு முன்னரும் தங்கத்தை கடத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

0

அஞ்சல் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவுக்கமைய ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இந்த பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் என்பனவும் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு சார்ந்த சகல சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி முன்னதாக ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் திணைக்களத்தின் பகீர் தகவல்

0

எதிர்வரும் புதன்கிழமைக்குள் திறைசேரி 500 மில்லியன் ரூபாயை வழங்காவிட்டால் அஞ்சல் மூல வாக்குகளுக்கான புதிய திகதிகளை அறிவிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக ஏப்ரல் 25 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அஞ்சல் மூல வாக்களிப்புக்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை காலம் குறிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அஞ்சல் மூல வாக்குகளை அச்சிடுவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என அரசாங்க அச்சகப் பணிப்பாளர் கங்கானி லியனகேயும் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் எதிர்வரும் புதன்கிழமைக்குள் தமது ஆணைக்குழு 500 மில்லியன் ரூபாவை முன்பணமாகப் பெற்றுக் கொள்ளாத பட்சத்தில் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்த மாத இறுதிவரை திறைசேரியிலிருந்து மொத்தம் 1,100 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை மார்ச் 20 திங்கட்கிழமைக்குள் பணம் கிடைக்காவிட்டால், தாம் நீதிமன்றத்திற்கு சென்று தமக்கான நிதியை திறைசேரி ஒதுக்கீடு செய்யாதது குறித்து முறையிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அச்சிடும் பணிக்காக 533 மில்லியன் ரூபாய் கோரப்பட்ட போதிலும், 339 மில்லியன் ரூபாய் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், அதனால் அச்சடிக்கும் பணியை முன்னெடுக்க முடியவில்லை என்று அரச அச்சக பணிப்பாளர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான 2,500 அச்சுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில், இதுவரை 54 பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நான் எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன்

0

சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதி கடிதம் நேற்றிரவு கிடைத்ததையடுத்து, தானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக்  கடிதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

இதன்படி, நாட்டுக்கான தனது கடமையை நிறைவேற்றியுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியம் தனது கடமையை இம்மாத இறுதிக்குள் நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (07) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வேலைத்திட்டம் சீர்குலைந்தால் 2022 பெப்ரவரி மாத நிலமையைவிட மிகவும் ஆபத்தான நிலைக்கு நாடு தள்ளப்படலாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ஆற்றிய உரை பின்வருமாறு,

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சாதகமான தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட அரசாங்கம் 2022 மார்ச் நடுப்பகுதியில்  தீர்மானித்தது. அதன் பிறகு அந்நியச் செலாவணி நெருக்கடி மோசமடைந்தபோது, ஏப்ரல் 2022 நடுப்பகுதியில், வெளிநாட்டுக் கடனைச் செலுத்தும் திறன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இலங்கை ஒரு  வங்குரோத்து  பொருளாதாரமாக அன்று தொடக்கம் செயற்பட்டது.  அதன் பாதகமான விளைவுகளை நீங்கள் அனைவரும் அனுபவித்திருக்கிறீர்கள். 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், இந்த நாடு எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகள், மின்வெட்டு, உணவுப் பற்றாக்குறை, மருந்துகளை வாங்குவதில் உள்ள சிரமங்கள், பணவீக்கம், ரூபாயின் வீழ்ச்சி மற்றும்  வறுமை  அதிகரிப்பு போன்ற பல பிரச்சினைகளை சந்தித்துள்ளது. இலங்கையில் இவ்வாறான ஒரு அவல நிலை நவீன வரலாற்றில் இருந்ததில்லை என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும்.

ஜூன் 2022 முதல் நிலவி வந்த பொருளாதாரப் பிரச்சினைகள் படிப்படியாக ஓரளவுக்குத் தீர்க்கப்படும்  போக்கை காண்பித்தது. உரங்கள் வழங்கியதால், கடந்த  வருடம் சிறு மற்றும் பெரும் போகங்களில்  சிறந்த அறுவடை கிடைத்தது. விவசாய பொருட்களின் ஏற்றுமதியும் வழமை நிலைக்கு திரும்பியது.

நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளை படிப்படியாகத் தீர்க்கும் வகையில், ஸ்திரப்படுத்தல் திட்டம் வகுக்கப்பட்டது. அதற்கு  பொருத்தமான  திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியது. அவற்றில் சிலவற்றை இந்த உயரிய சபையில்  நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எரிவாயு மற்றும் பெற்றோல் என்பன வழமை போன்று  கிடைப்பதை உறுதி செய்வது, பாடசாலைகள் மற்றும் பரீட்சைகளை உரிய முறையில் நடத்தவது, தொடர்ச்சியாக  மின்சாரம் வழங்குவது, உரங்கள் வழங்குவது, சமுர்த்தி பயனாளர்களுக்கு மேலதிக  நிதி வழங்குவது மற்றும்  2019 இல் அமுல்படுத்தப்பட்ட வரிக் கொள்கை மீள செயற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அரசுக்கு நேரிட்டது. 2019 இன் பிற்பகுதியில் அவசரகால  அமுல்படுத்தப்பட்ட வரிக் குறைப்புகளுக்குப் பிறகு, அரசாங்க வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% ஆகக் குறைந்தது. அதை  சீர்செய்ய புதிய வரிக் கொள்கைகளை முன்னெடுக்க நேரிட்டது.

அதேபோல், மத்திய வங்கியின் நிதிக் கொள்கைகளின் கீழ் வட்டி விகிதங்களை  உயர்த்த நேரிட்டது. தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்துவதே எம்மிடமிருந்த சாதகமான நடவடிக்கையாகும். கடந்த ஆண்டு செப்டம்பரில் சராசரி பணவீக்கம் 70% வரை  உயர்ந்தது. உணவுப் பணவீக்கம் 90 சதவீதத்தைத் தாண்டியது. ஆனால் தற்போது  பணவீக்க வேகம் 50 வீதம் வரை குறைந்துள்ளது. அத்தோடு  உணவுப் பணவீக்கமும் 54 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும், அந்நியச் செலாவணி பற்றாக்குறையால், பணப் பரிமாற்ற விதிகளை கடுமையாக்கவும், இறக்குமதியை கட்டுப்படுத்தவும்  நேரிட்டது.

எங்களால்  வெளிநாட்டுக் கடனைச் செலுத்த முடியாது என அறிவித்தவுடன், வெளிநாடுகளும் நிதி நிறுவனங்களும் இலங்கையுடனான நிதிக் கொடுக்கல் வாங்கல்களைக் கட்டுப்படுத்தின. உலக வங்கியும் ஆசிய  அபிவிருத்தி  வங்கியும் கூட புதிதாக நிதி வழங்குவதை நிறுத்தின. வெளிநாட்டு உதவியில் செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறுத்த நேரிட்டது. கடன்பத்திரங்களை  கூட திறக்க முடியவில்லை.   இலங்கைக்கு கடன் வழங்கக் கூடாது என்ற தர நிலைக்கு, கடன் தர நிர்ணய நிறுவனங்கள்  எமது நாட்டைத் தரமிறக்கின.

இந்நிலையில் எமக்கு

· ஏற்றுமதி

· வெளிநாட்டில் பணிபுரிவதற்கு  தொழிலாளர்  இடம்பெயர்தல்

· சுற்றுலாத் துறை  மூலம்

அந்நியச் செலாவணி கிடைத்தன.

நாடு மற்றும் சமூகத்தில் நிலவிய சாதகமற்ற சூழ்நிலையினால், 2022 ஆம் ஆண்டு முழுவதும் சுற்றுலாத்துறை வெற்றிபெறவில்லை.  ஆனால்  இந்த ஆண்டு நிலைமையில் இருந்து எழுந்து நிற்கும்  அறிகுறிகள் தென்படுகின்றன. அந்நியச் செலாவணி அனுப்புவது சாதாரண நிலைமைகளில் இருந்த மட்டத்தை விட  1/3   ஆகக் குறைந்தது. இது  மேலும் அதிகரிக்கும் போக்கை  காட்டுகிறது. ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க உதவும் உள்ளீடுகளை இறக்குமதி செய்யப் போதுமான அந்நியச் செலாவணி நம்மிடம் இன்னும் இல்லை.

எமது நாட்டின் பொருளாதாரத்தில் உள்ள நெருக்கடி, குறிப்பாக அந்நிய செலாவணி நெருக்கடி குறித்து 2021 முதல் சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து எச்சரித்தது. 2022 நடுப்பகுதியில் இருந்து IMF உடன் தொடர்ச்சியாக   பேச்சுவார்த்தைகள்   முன்னெடுக்கப்பட்டன. அந்தப் பிரதிநிதிகள் இடைக்கிடையே இலங்கைக்கு வந்து, கொடுப்பனவு நிலுவை நெருக்கடி, நிதி நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி குறித்து எங்களுடன் ஆழமாக கலந்துரையாடினர். மேலும், பல தசாப்தங்களாக தாமதமாகி வரும் கட்டமைப்பு ரீதியான  சீர்திருத்தங்களை தொடர்ந்தும் ஒத்திவைக்க  முடியாது  என்றும் IMF சுட்டிக்காட்டியுள்ளது.

2022 செப்டம்பர்  முதலாம் திகதியில் IMF உடன்  அதிகாரிகள் மட்ட உடன்பாட்டை  எட்டினோம்.   எவ்வாறாயினும், நாடு கடன் நிலைத்தன்மையை அடையும் வரை இந்த ஒப்பந்தத்தை IMF பணிப்பாளர் சபைக்கு  சமர்ப்பிக்க முடியாது என்று IMF தெரிவித்துள்ளது. எனவே, கடனை நிலைநிறுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இதற்காக, Lasads மற்றும்  Clifford Chance ஆகிய சர்வதேச நிபுணத்துவ நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றோம்.  இது ஒரு நீண்ட மற்றும் சிக்கலான பேச்சுவார்த்தைகளாகும். இதன்படி, இலங்கைக்கு கடன் வழங்கிய பரிஸ் கழகத்துடனும், பரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்காத இந்தியா மற்றும் சீனாவுடனும்  நிதியுதவி உத்தரவாதங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில்  தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்டது.  2023  ஜனவரி 16 ஆம் திகதி  அந்த உறுதிமொழியை  இந்தியா வழங்கியது. சீனா அதை ஜனவரி 18 அன்று வழங்கியது.2023.01.25 ஆம் திகதி  நடைபெற்ற கூட்டத்தில் இலங்கைக்கு நிதி உத்தரவாதத்தை வழங்க  பாரிஸ் கிளப் ஒப்புக்கொண்டது. அதன் பிறகு, மார்ச் 2ஆம் திகதி IMFஇன் முகாமைத்துவப் பணிப்பாளர்  கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் IMF கடன் உதவித் திட்டம் பற்றி  கலந்துரையோடினேன்.

IMF உடனான பேச்சுவார்த்தையின் போது, அதன் உடன்பாட்டைப் பெறுவதற்கு பல பணிகளை முன்கூட்டியே செய்ய வேண்டியிருந்தது. மின்சார விலையை மறுசீரமைத்தல், பெற்றோலிய விலைகளை மறுசீரமைத்தல், மத்திய வங்கியின் சுயாதீனத்தை  உறுதி செய்தல், பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்துதல், பொது நிறுவனங்களை மறுசீரமைத்தல், சமூக பாதுகாப்பு  கட்டமைப்பை வலுப்படுத்துதல், அரசாங்க வருமானத்தை அதிகரிக்க பணியாற்றுதல் மற்றும் பொது செலவினங்களைக் கட்டுப்படுத்துதல். பெற்றோலிய  மற்றும் மின்சாரத் துறைகளில் போட்டித்தன்மையை  விரிவுபடுத்துதல் போன்ற பல விடயங்களை முன்கூட்டியே செய்ய  வேண்டியிருந்தது. இலங்கை முன்கூட்டியே செய்திருக்க வேண்டிய அந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

மேலும், இந்த நாட்டு மக்கள் படும் இன்னல்களை நான் அறிவேன். அதற்காக அரசாங்கம் என்ற வகையில் மன்னிப்புக் கோருகிறோம். நேற்றிரவு சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உத்தரவாதக் கடிதத்தைப் பெற்றோம். அதன்படி அன்றிரவே நானும் மத்திய வங்கி ஆளுநரும்  இணக்கப்பாட்டுக்  கடிதத்தில் கையொப்பமிட்டு சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைத்தோம். இப்போது நமது கடமைகள் நிறைவடைந்துவிட்டன. இந்த மாத இறுதிக்குள், நான்காவது வாரமளவில் , IMF தனது கடமையைச் செய்யும் என்று எதிர்பார்க்கிறேன். அதன்பிறகு உலக வங்கி மற்றும்  ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்து   முதலாம் கட்ட  நிதி  கிடைக்கும்.

IMF உடனான  இதற்கு முன்னர்  16 சந்தர்ப்பங்களில்  செய்து கொண்டதைப்  போலல்லாமல், இந்த முறை  உடன்பட்ட விடயங்களை  தவறாமல்  செய்யப்பட வேண்டும். இல்லையேல்   IMF இலங்கையுடன் இணைந்து செயல்படாது. அந்த சூழ்நிலையில், பலதரப்பு மற்றும் இருதரப்பு நிதி நிறுவனங்கள் எங்களுடன் இணைந்து செயல்பட முடியாது. அதன்படி, வெளிநாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் பெருமளவில் தடைபடும். ஒரு விடயத்தை நாம் வலியுறுத்த வேண்டும். தற்போது நாம் வெளிநாட்டு கடனை செலுத்தவில்லை. (பலதரப்பு நிதி நிறுவனங்களுக்கு மட்டுமே கடன்  செலுத்தப்படுகிறது) IMF உடன் ஏற்கனவே உள்ள ஒப்பந்தம் முறிந்தால், வெளிநாடுகள் மற்றும் தனியார் வங்கிகளில் (SB) வாங்கிய கடனை செலுத்த  நேரிடும். 2029 வரை ஆண்டுதோறும் சுமார் 6 முதல் 7 வரையான பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்கள் செலுத்தப்பட  வேண்டும். இந்தக் கடனை அடைக்க நம்மிடம் அந்நியச் செலாவணி இல்லை. எனவே, IMF தலையிட்டு வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட கடன் நிலைத்தன்மை உரையாடலைத் தொடர வேண்டும். இன்று அதற்கு தற்போது மாற்று வழி இல்லை. எனவே, சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம், நமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான விசேட  முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த பல கடினமான பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தோம். பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொண்டு வருகிறோம். இதனால் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் தொடர்ச்சியாக இன்னல்கள் ஏற்படும். இத்தகைய கடினமான மற்றும் சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில், கடந்த 7-8 மாதங்களாக செலவழித்து, அதை ஒரு  சாதகமான நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். இதிலிருந்து முன்னேற பொருளாதார சீர்திருத்தங்கள் தேவை. இதை நாட்டில் உள்ள அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு செல்வாக்குச் செலுத்தும் குழுக்கள், அரசியல் கட்சிகள்,  தொண்டர் குழுக்கள், தொழிற்சங்கங்கள் போன்றவை இது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

வரிச்சுமை அதிகமாக உள்ளதாக தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த நிலைமை ஒரு குறுகிய காலத்திற்கு பராமரிக்கப்பட வேண்டும். இல்லையெனில், இந்தத் திட்டம் சீர்குலைந்தால், 2022 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இருந்த நிலையை விட மிகவும் ஆபத்தான இடத்திற்கு நாடு தள்ளப்படலாம். அப்போது சம்பளம், ஓய்வூதியம், வேலை என்பன பறிபோகும் தொழிற்சாலைகள் மூடப்படும்,  பாடசாலைகள் தினமும் மூடப்படும் என்று பலரும் நினைத்தார்கள். அவற்றை நாம்  ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளோம். ஆனால், சமூகத்தில் செல்வாக்கு மிக்க குழுக்கள் நாம் முன்வைத்த வேலைத்திட்டத்தை பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நாசமாக்கினால், அதிலிருந்து உருவாகும் சமூக மாற்றம்,  மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.  இது நம் சமூகத்தில் முன்னெப்போதும் இல்லாத சோகமான காலத்திற்கு வழிவகுக்கும்.

கருத்துக்களை வெளியிடும் உரிமையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதனை அமைதியாக செய்யுங்கள். கூட்டங்கள் நடத்துவதும், போராட்டம் நடத்துவதும் ஒரு பிரச்சினையல்ல. ஆனால், இந்தப் போராட்டத்தின் மூலம் இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைத்தால், அதற்கு எதிராக இந்த அரசாங்கம்  கடுமையாகச் செயல்படும் என்று கூற விரும்புகிறேன்.

நான் ஒன்று சொல்ல வேண்டும், இப்போது  டொலர் விலை குறைந்து வருகிறது. ஜூலை 9ஆம் திகதி இந்த நாடு வீழ்ந்திருந்தால் இன்று இந்த நிலை இருந்திருக்காது. அப்போது யாரின் உதவியும் இருக்கவில்லை.  இதற்கு நடவடிக்கை எடுத்த முப்படை மற்றும்  பொலிஸாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்கள் எடுத்த அந்த நடவடிக்கையால்தான் இன்று நமக்கு எரிபொருளும் மின்சாரமும் கிடைத்துள்ளது.  எனவே, அந்த  சக்திகளுக்கு இந்த நிலைமையை தகர்க்க அனுமதிக்க மாட்டோம்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான பயணத்தில் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சியை  நான் கேட்டுக்கொள்கிறேன். இதனை நிறைவேற்றிய பின்னர்  ஜனாதிபதி தேர்தலா பொதுத் தேர்தலா எது தேவை என்பதை தீர்மானிக்க முடியும். அதுவரை நீங்கள் காத்திருக்கத்  தயாரா இல்லையா என்று கேட்கிறேன். உங்களுக்கு இதை ஏற்கவோ நிராகரிக்கவோ முடியும்.

குறிப்பாக ஜூன் நடுப்பகுதிக்குள் நாட்டின் வருமான நிலைமையை குறித்து  கருத்தில் கொள்ள வேண்டும். அதிலிருந்து முடிவுகளை எடுக்கலாம். குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைத்தவுடன் ஒப்பந்தத்தை  சபையில் சமர்ப்பித்து முன்மொழிவொன்றை கொண்டு வருவேன். அதை   சபை ஏற்பதா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இன்றேல் எங்களுக்கு மாற்று  வழியைக்  தாருங்கள்.

அதன் பிறகு  எதிர்கால பயணம் மற்றும் திட்டங்கள் தொடர்பில் நாம் புதிய வரைபு ஒன்றை சமர்ப்பிக்க இருக்கிறோம்.  அதனை தேசிய சபைக்கும் வழங்குவோம். பாராளுமன்றத்தில் ஆராய்ந்து  உடன்பாடு எட்டப்பட்ட பிறகு நீண்ட கால மற்றும் நடுத்தர கால திட்டத்தை முன்வைப்பேன். தற்போது, பாராளுமன்றத்தின் தேசிய சபைக் குழுக்களிடமிருந்து பல அறிக்கைகள் கிடைத்துள்ளன. அதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். ஆனால் 08 மாதங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் இப்பணியை எங்களால் முடிக்க முடிந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவோம்.”  என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலுக்கான மற்றுமொரு திகதி அறிவிப்பு

0

எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான ஆலோசனைகளை அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அந்த ஆணைக்குழு வழங்கியுள்ளது.

முன்னதாக, எதிர்வரும் 9 ஆம் திகதி அதாவது நாளை மறுதினம் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டிருந்தது.

எவ்வாறாயினும், திறைசேரியிலிருந்து தேர்தல் நடவடிக்கைகளுக்கு போதியளவு நிதி வழங்கப்படாமை உள்ளிட்ட காரணங்களால், உள்ளூராட்சி தேர்தல், திகதி குறிப்பிடப்படாமல் பிற்போடப்பட்டது.

இந்தநிலையில், எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல் ஆணைக்குழு இன்று (7) தெரிவித்துள்ளது.

கணவனை பழிவாங்க குழந்தையை கொல்ல முயன்ற தாய்

0

கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து, அவரை பழிவாங்குவதற்காக ஒன்றரை வயதான தமது குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளியதாக கூறப்படும் தாயொருவரை கைதுசெய்துள்ளதாக உடப்பு  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடப்பு, கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவியே, தமது ஒன்றரை வயதான பெண் குழந்தையை இறால் வளர்க்கப்படும் தொட்டியில் தள்ளியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென காவல்துறையினர் கூறுகின்றனர்.

குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளியதாக கூறப்படும் குறித்த பெண், எதுவும் தெரியாததைப் போல குழந்தையை தேடியுள்ளார்.

எவ்வாறாயினும்,  குழந்தை தள்ளிவிடப்பட்டதை அவதானித்த ​​அதே இறால் பண்ணையில் பணிபுரியும் மற்றுமொரு தொழிலாளி, அதில் குதித்து அந்த குழந்தையை காப்பாற்றியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  அங்கிருந்து குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குருணாகல் போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சந்தேகநபரான பெண்ணுக்கு தமது கணவருடன் சில காலமாக குடும்பத் தகராறு நிலவிவந்தமை காவல்துறை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் கொபேகனே பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் குடும்ப தகராறு தொடர்பில் கொபேகனே காவல்நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இருவரும் குழந்தையுடன் தகராறின்றி வாழுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், குறித்த பெண் தனது கணவனுடனும் குழந்தையுடனும் கட்டகடுவ இறால் பண்ணையில் உள்ள தங்குமிடம் ஒன்றில் வசித்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கணவனை பழிவாங்குவதற்காக குழந்தையை இறால் தொட்டியில் தள்ளியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேநபரான 20 வயதுடைய தாயை உடப்பு காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், அவரை புத்தளம் நீதிமன்றம்  முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

முதுமானி கற்கையை நிறைவுசெய்த எருக்கலம்பிட்டி மைந்தன்

0

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் (மாவட்ட வைத்தியசாலை) கணக்குப்பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிபவருமான அமீர் ஹம்சா இன்ஸாத் தனது முதுமானி கற்கை நெறியை (MPA) பூர்த்தி செய்துள்ளார்.

பொது நிர்வாகத்தில் முதுநிலை (Masters in Public Administration – MPA) கற்கையை ஆங்கில மொழி மூலம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பாரிய சவால்களுக்கு மத்தியில் நிறைவுசெய்த அமீர் ஹம்சா இன்ஸாத் 2004 ஆம் ஆண்டு தனது உயர்தர படிப்பை பூர்த்தி செய்தார்.

சாதாரண குடும்ப பின்னணயில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் வணிகப்பிரிவில் கல்விகற்ற அமீர் ஹம்சா இன்ஸாத் 2010 ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்தார்.

மன்னார் பிரதேச சபையில் பணியை ஆரம்பிப்பதற்கான தனது முதலாவது நியமனக்கடித்ததை 2011 நவம்பர் 14 ஆம் திகதி பெற்றுக்கொண்டு தனது கடமைகளை ஆரம்பித்தார்.

2017 ஜூலை 2 ஆம் திகதி வரை சுமார் ஐந்தரை வருடங்கள் மன்னார் பிரதேச சபையில் உயரிய சேவை வழங்கிய அமீர் ஹம்சா இன்ஸாத் மன்னார் பொது வைத்தியசாலைக்கு (மாவட்ட வைத்தியசாலை) மாற்றப்பட்டார்.

மன்னார் பொது வைத்தியசாலையில் (மாவட்ட வைத்தியசாலை) கணக்குப்பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக இன்றுவரை கடமையாற்றிவரும் அவருக்கு ஊர் மக்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவரது கல்வி எம் சமூகத்துக்கு பிரயோசனம் அளிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதுடன் எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடர்ந்து அதிகரித்துவரும் ரூபாவின் பெறுமதி

0

அமெரிக்க டொலரொன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்வடைந்து வருகின்றது.

நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட பணவீக்க உயர்வினால் கடந்த காலங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துசென்றது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 343.97 ரூபாவாகவும், அதன் விற்பனைப்பெறுமதி 356.73 ரூபாவாகவும் சாதகமான மட்டத்தில் பதிவாகியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று (03)  ரூபாவின் பெறுமதி கணிசமானளவினால் உயர்வடைந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 334.50 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 348.03 ரூபாவாகவும் நேற்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

0

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதி தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவிற்கமைய செயற்படுவதில் நிதி அமைச்சிற்கு எவ்வித சிக்கலும் இல்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு நிதி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றத்தினால் நேற்று (03) வெள்ளிக்கிழமை இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்கப்பட்டது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தலுக்கான நிதியை வழங்குவது கடினமாகும் என்று ஏற்கனவே திறைசேரி செயலாளரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே உயர் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதற்கமைய இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நீதிமன்ற தீர்ப்பிற்கு சகலரும் மதிப்பளிக்க வேண்டும். நிதி அமைச்சானாலும் , அரசாங்கமானாலும் , அரச நிறுவனங்களானாலும் , தனியார் நிறுவனமானாலும் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று அதற்கமைய செயற்பட வேண்டியது அவசியமாகும். அதற்கமைய நிதி அமைச்சு என்ற அடிப்படையில் நாம் பொறுப்புடன் செயற்படுவோம்.

எனவே நீதிமன்ற தீர்ப்பிற்கமைய செலவுகளை ஏற்க வேண்டியேற்படலாம். நீதிமன்ற தீர்ப்பிற்கமைய செயற்படுவதில் நிதி அமைச்சிற்கு எவ்வித சிக்கலும் இல்லை என்றார்.

கல்பிட்டியில் ஒருதொகை கடத்தல் பொருட்கள் மீட்பு

0

கல்பிட்டி மொஹொத்துவாரம் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​கடல் மார்க்கமாக கடத்தப்பட்டதாக நம்பப்படும் கடத்தல் பொருட்களுடன் இரண்டு (02) டிங்கி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.

கடல் வழியாக கடத்தல் பொருட்கள் வருவதைத் தடுக்க, கடற்படை அடிக்கடி ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கையை தீவின் கடலோர மற்றும் கடல் பகுதிகளில் நடத்துகிறது.

வடமேற்கு கடற்படை கட்டளையில் உள்ள கடற்படை ஸ்தாபனமான SLNS விஜயா கடந்த மார்ச் 03 ஆம் திகதி மொஹொத்துவாரம் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இவைகள் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர், சந்தேகத்திற்கிடமான 02 டிங்கி படகுகளை கடற்கரையில் சோதனையிட்டதுடன், கடல் வழியாக கடத்தப்பட்டதாகக் கருதப்படும் கடத்தல் பொருள்கள் ஒரு தொகுதியையும் மீட்டனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களில், 15 கிலோ காய்ந்த கடல் அட்டை, 01 கிலோ ஏலக்காய், 14 கிலோ காய்ந்த முந்திரி, 10 கிலோ அரிசி, 248 கிலோ சர்க்கரை, 100 கிலோ கோதுமை மா, 03 கிலோ உலர் மீன், 270 பேக் கோப்பி, 680 அழகுசாதனப் பொருட்கள். மற்றும் 2930 சவற்கார கட்டிகள் உள்ளடங்குகிறன.

இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட 02 டிங்கி படகுகள் மற்றும் கடத்தல் பொருட்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.