Saturday, March 28, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 7

சிலாபம் பேருந்து நிலையத்தில் செய்தித்தாள் வாசிப்புத் தளம் திறப்பு

0

ஜூட் சமந்த

சிலாபம் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில், அங்கு தினசரி செய்தித்தாள்களை வாசிப்பதற்கான பிரத்யேக இடமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

சிலாபம் நகர சபை மற்றும் சுரங்க சொய்சா அறக்கட்டளை (Suranga Soysa Foundation) ஆகியன இணைந்து இந்த வாசிப்புத் தளத்தை நிறுவியுள்ளன.

பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் பயணிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் செய்தித்தாள்களைப் பெற்று வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என சிலாபம் நகர சபை உறுப்பினர் சுரங்க சொய்சா தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வாசிப்புத் தளத்தை சிலாபம் நகர முதல்வர் சட்டத்தரணி சுமேத பெரேரா உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் செய்தித்தாள்களை வாசிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

புத்தளத்தில் வீடுபுகுந்து வாள் வீச்சு தாக்குதல்!

0

ஜூட் சமந்த

புத்தளம், செம்பந்தலுவ பகுதியில் குடிபோதையில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த இருவர் மீது வாள் வீச்சு தாக்குதல் நடத்தியும், பெண் ஒருவரைத் தாக்கியும் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களைக் கைது செய்ய புத்தளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் காயமடைந்த செம்பந்தலுவ பகுதியைச் சேர்ந்த லபிர் முகமது அம்ஜான், சாவுல் ஹமீத் முகமது ரிஸ்வான் மற்றும் சாவுல் ஹமீத் ரியாசா ஆகிய மூவரும் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட லபிர் முகமது அம்ஜான் என்பவரது வீட்டில் இருந்த தங்க ஆபரணங்கள் சில, கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி இனந்தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பாக அவர் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததுடன், இந்தத் திருட்டில் ஈடுபட்டதாகத் தான் சந்தேகிக்கப்படும் நபர் குறித்து தனது நண்பர்களிடமும் கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 14ஆம் திகதி இரவு குடிபோதையில் அம்ஜானின் வீட்டிற்கு வந்த இரு நபர்கள், இந்தத் திருட்டுச் சந்தேகம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அங்கிருந்த இரு ஆடவர்கள் மீது வாள் வீச்சுத் தாக்குதலை நடத்தியதுடன், வீட்டின் உரிமையாளரின் மனைவியையும் கைகளாலும் கால்களாலும் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பொலிஸ் விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள்:

வைத்தியசாலை பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில், புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபர்களில் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. மற்றைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைப் பிடிக்க பொலிஸார் வலைவீசியுள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சந்தேகநபர், அம்ஜானின் வீட்டில் தங்க நகைகளைத் திருடியதாக ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்ட அதே நபர் எனப் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்!

0

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை மற்றும் குமார ஜயகொடி தற்போதைய அமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன்னர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஈரான் வெற்றி பெறுவது மூன்றாம் உலக நாடுகளின் தேவை!

ஈரான் வெற்றி பெறுவது மூன்றாம் உலக நாடுகளின் மக்களினதும் தேவை.

அட்டாளைச்சேனையில் மு.கா.தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

யுத்தத்தில் ஈரான் வெற்றி பெற வேண்டும் என்பது உலகளாவிய முஸ்லிம்களுடைய எதிர்பார்ப்பு மாத்திரமல்ல ,எல்லா அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் தேவையுமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

அட்டாளச்சேனை, அல் இபாதா கலாசார மன்றத்தின் 15 ஆவது இப்தார் நிகழ்வும், பரிசளிப்பும் ஞாயிற்றுக்கிழமை(15), பெரிய பாலத்தடி மைதானத்தில் நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

அங்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

எமக்கு ரமழான் மாதம் பல படிப்பினைகளை ஒருசேர கற்றுத் தருகிறது.தேவையுள்ளவர்களுக்கு கொடுத்து வாழ்கிற ஈகைப் பண்போடு சேர்த்து, சகிப்புத்தன்மை பாவமன்னிப்பு கோருதல் மற்றும் ஆன்மாவையும் , உடலையும் தூய்மைப்படுத்திக்கொள்ளுதல் ஆகிய உயரிய நோக்கங்களோடு இறைவன் எங்களுக்கு இந்த ரமழான் மாதத்தை அருளியுள்ளான்.ஆயினும்,இந்த புனித மாதத்திலும்கூட அவ்வப்போது நாங்கள் பல்வேறு சோதனைகளைச் சந்திக்க நேரிடுகின்றது.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் சொன்னதுபோல் ஏகாதிபத்தியவாதிகளின் ,சியோனிச ஆக்கிரமிப்பாளர்களின் அட்டூழியங்களை நாள்தோறும் நாங்கள் பார்த்துவருகிறோம். அதன் விளைவாக இன்று முழு உலக பொருளாதாரத்தையும் பாரிய பாதிப்புக்குள் ஆக்குகிற ஓர் ஆபத்தை நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம்.எமது நாடு மாறிமாறிவந்த பல அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு,அண்மையிலும் காலநிலை அனர்த்தத்தை நாங்கள் சந்தித்தோம். எனவே இந்த பாதிப்புகளுக்கு மத்தியில் ஒருவாறு எங்களை சமாளித்துக் கொண்டு மீண்டு வந்துவிடலாம் என்று நினைத்ததிருந்தோம். இந்த நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அ மீண்டு வருகின்ற ஒரு சந்தர்ப்பத்தில் ,ஏராளமான உல்லாசப்பயணிகள் எங்களுடைய நாட்டுக்கு வரத்தொடங்கிவிட்டார்கள்,தாராளமாக வெளிநாடுகளில் வேலைசெய்கின்ற எம்மவர்களுடைய அந்நியச்செலாவணி நாட்டின் இருப்பை முன்னேற்றுவதற்கு பெரிதும் உதவும் என்றெல்லாம் கொஞ்சம் நிம்மதி அடைந்துகொண்டிருக்கிற ஒரு சந்தர்ப்பத்தில்தான் நினையாப் புறமாக இந்த முழு உலகத்திற்கும் ஒரு சாபக்கேடாக நாங்கள் பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்களைப் பேசிக் கொண்டிருக்கிறார். அவரது எதேச்சாதிகரமான நடவடிக்கை இன்று எங்களுக்கு மாத்திரமல்ல, முழு உலகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் பின்னணி என்ன என்று மிகத் தெளிவாக எல்லோருக்கும் தெரிகிறது .

சியோனிச இஸ்ரேலுடைய இரண்டரை வருட கால அப்பாவி காசா மக்கள் மீதான தாக்குதலில் சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் மீறிய நடவடிக்கைகளை கண்டு பெரிதாக எதையுமே செய்யாமல் புதினம் பார்த்துக் கொண்டிருந்த மேற்கு நாடுகளும் அரபுலக நாடுகளும் கூட அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை என்ற அங்கலாய்ப்பு எங்களுக்கு மத்தியில் இருந்தது .

1979 ஆம் ஆண்டு ஈரானிய புரட்சி வெடித்த போது நாங்கள் எல்லாம் பாடசாலையில் உயர்தரத்தில் படிக்கின்ற மாணவர்களாக இருந்தோம்,அந்தக் காலத்திலும் அதை ஒரு இஸ்லாமிய புரட்சி என்று சொல்வதற்கு கொஞ்சம் பேர் தயங்கினார்கள். ஷீஆ,சுன்னி என்கிற வேறுபாடுகளை மையமாக வைத்து இஸ்லாமிய புரட்சி என்று சொல்வதற்கு தயங்குபவர்கள் கொஞ்சம் பேர் இன்னும் இருக்கிறார்கள்.

ஆனால் ,இது ஈரான் தொடுத்த போர் அல்ல.அந்த நாட்டு மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு போர். அந்தப் போரின் காரணமாக இன்று நாங்கள் எல்லோரும் பாரிய சிக்கலுக்கு ஆளாகிருக்கிறோம். நாளும் பொழுதும் தொலைக்காட்சிகளில் காண்கிறோம்.

நோன்பு கால பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருக்கின்றோம். இந்த அட்டூழியங்களுக்கு இறுதி முடிவாக இந்த யுத்தத்தில் ஈரான் வெற்றி பெற வேண்டும் என்பது உலகளாவிய முஸ்லிம்களுடைய கோரிக்கை மாத்திரமல்ல, எதிர்பார்ப்பு மாத்திரமல்ல எல்லா அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் தேவையுமாகும்.

இந்த நடவடிக்கைகளுக்கு அனுமதி கொடுக்காத, அங்கீகரிக்காத இரண்டு வல்லரசுகளாக ரஷ்யாவும், சீனாவும் உள்ளன.இந்த பட்டியலில் மேற்குலகில் ஸ்பெயினும், இத்தாலியும் சேர்ந்திருக்கின்றன .

நாளடைவில் இந்த பாரிய யுத்தம் இவ்வாறான எதேச்சகரமான நடவடிக்கைகளுக்கு இனிமேலும் இந்த ஏகாதிபத்தியவாதிகள் துணிந்துவிடக்கூடாது என்பதற்கான ஒரு படிப்பினையாக மாற வேண்டும் என்று நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் ; பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறோம்.

ஐக்கிய அமெரிக்கா தோற்றம் பெற்று 200 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், அந்த 200 வருடங்களில் 16 வருடங்கள் தவிர மற்றைய எல்லா வருடங்களிலும் ஏதாவது ஒரு யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு நாடுதான் அமெரிக்கா. யுத்தமே தன்னுடைய நோக்கம் என்று இருக்கிற ஒரு நாட்டைத்தான் இன்று ஏக வல்லரசு என்று நம்பிக்கொண்டு அதற்கு வால் பிடிக்கிற ஒரு கூட்டம் எல்லா இடங்களிலும் இருக்கிறது.

அவர்களுடைய இந்த அநியாயமான தாக்குதல்களை பெயர் குறிப்பிட்டு கண்டிப்பதற்கு திராணியற்ற நாடுகளில் எங்களுடைய நாடும் இருக்கிறது என்ற ஒரு மிக கேவலமான ஒரு நிலையில் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம்.

அமெரிக்காவையோ,இஸ்ரேலையோ பெயர் குறிப்பிட்டு இந்த தாக்குதல் கண்டிக்கப்படவேண்டும் என்று சொல்லாமல் விட்டது மாத்திரமல்ல ,ஒரு நட்பு நாடான ஈரானுடைய ஆன்மிக தலைவரை- அரசியல் தலைவரை சர்வதேச சட்டங்களை மீறி அவருடைய ராணுவ தளபதிகளையும்,இன்னும் பலரையும் அவருடைய குடும்பத்தினருடன் சேர்ந்து படுகொலை செய்த நிகழ்வைக்கூட ஒரு பகிரங்க அறிக்கையின் மூலம் கண்டிக்காமல் விட்டால் பரவாயில்லை அனுதாபமாவது தெரிவிக்காத ஒரு நாடு எங்களுடைய நாடு என்ற ஒரு கேவலமான நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

இதைப் பற்றி எங்களுடைய வெளிவிவகார அமைச்சரிடம் நான் கேள்வி கேட்டபோது, அவர் “ஈரானிய தூதரகத்தின் அனுதாப புத்தகத்தில் கைச்சாத்திடப் போகிறேன் “என்று மட்டும் சொன்னார்.அதைத் தவிர வழமையாக ஒரு வெளிநாட்டு அமைச்சு செய்யவேண்டிய ஒரு பணியை செய்யாமல் விட்ட அந்த விவகாரம் மூன்றாம் உலக நாடுகளில் எங்களைப் போன்ற பலருக்கு ஏற்பட்டிருக்கிற மிகப்பெரிய அவமானம் மாத்திரமல்ல இப்படி அடிமைத்தனமான நிலைக்கு நாங்கள் போய்விட்டோம் என்பதை யிட்டு நாங்கள்
கவலைப்படுகிறோம்.

எனவே இன்றிருக்கிற சூழலில், எங்களுடைய ஆட்சியாளர்களுடைய இந்த நிலைப்பாடு நீடிக்க கூடாது ; இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும் என நாங்கள் எல்லோரும் ஒருசேரப் பிரார்த்திக்கவேண்டியது அவசியம்.

இந்த யுத்தம் எங்கள் மீது கொண்டு வருகிற அபாயங்கள் அநேகம் உள்ளன.
எண்ணெய் விலையேற்றம் மற்றும் ,தட்டுப்பாடு மாத்திரமல்ல இந்தப் பிரதேச விவசாயிகளுக்கு இனி பசளைகூட சரிவர வந்து சேர மாட்டாது என்கிற மிகப்பெரிய ஒரு பாதிப்பை நாங்கள் சந்திக்கவிருக்கிறோம்.

இந்தப் பின்னணியில் , புனித ரமழான் மாதத்தின் கடாச்சத்தினால் எல்லாம் வல்ல இறைவன் இதற்கு நாங்கள் எல்லோரும் விரும்பும் ஒரு நல்ல முடிவை தர வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன் என்றார்.

தேசிய காங்கிரஸ் தலைவரும்,முன்னாள் அமைச்சரும்,அக்கரைப்பற்று மாநகர சபை மேயருமான ஏ.எல்.அதாவுல்லாஹ்,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எ
ஸ்.உதுமாலெப்பை ஆகியோரும் உரையாற்றினர்.

இந் நிகழ்வில் உலமாக்கள்.தீகவாபிவிகாராதிபதி,இந்து,கிறித்தவ மத குருமார், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.அப்துல் வாசித்,கோடீஸ்வரன்,முன்னாள் பிரதியமைச்சர் பைசல் காசிம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளருமான எம். எம்.முஷர்ரப் ,மு.கா.பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதிர்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள்,உறுப்பினர்கள்,திகாமடுல்ல மாவட்ட செயலாளர்,அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் உயிரிழப்பு!

ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார். 

ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நேற்றிரவு நடத்தியதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார். 

குறித்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

எனினும் இதனை உடனடியாக ஈரான் உறுதிப்படுத்தியிருக்கவில்லை. 

இந்நிலையில். உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் உயிரிழந்திருப்பதாக Mazoud Pezeshkian உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரானின் பிரமாண்ட நிலத்தடி ஏவுகணை தளம் அழிப்பு!

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் அமைத்துள்ள நிலத்தடி ஏவுகணை தளங்களை அமெரிக்க ராணுவம் பதுங்கு குழி தகர்ப்பு குண்டுகள் மூலம் அதிரடியாக அழித்துள்ளது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில் போர் தீவிரமடைந்தது. இந்த மோதல் இன்றுடன் 19வது நாளை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக போக்குவரத்து 97 சதவீதம் வரை சரிந்தது. உலக எரிசக்தி விநியோகத்தில் 20 சதவீதத்தை கொண்டுள்ள இப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று ஈரானின் கடற்கரை ஓரம் நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏவுகணை தளங்களை அமெரிக்காவின் ‘சென்ட்காம்’ என்ற அமைப்பு இலக்கு வைத்தது. சுமார் 2,267 கிலோ எடை கொண்ட ஜிபியு-72/பி ரக பதுங்கு குழி தகர்ப்பு குண்டுகளை பயன்படுத்தி ஈரானின் ஏவுகணை தளங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

சர்வதேச கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை செயலிழக்கச் செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ‘பென்டகன்’ தெரிவித்துள்ளது. இந்த போரை ஆதரிக்க முடியாது எனத் தெரிவித்து, அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் ஜோ கென்ட் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அமெரிக்க அரசு நிர்வாகத்தின் போர் நியாயங்களை எனது மனசாட்சியால் ஏற்க முடியாது என்பதால் பதவி விலகுகிறேன்’ என்று தெரிவித்தார்.

தற்போது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க ‘நேட்டோ’ நாடுகளின் உதவியை கோரியுள்ள நிலையில், போர் விரிவடையும் என்ற அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள் அதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. ஈரான் தாக்குதலில் இஸ்ரேலின் ரமத் கான் பகுதியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் ஏவுகணைகளை இடைமறித்து அழித்து வருகின்றன.

மொஜ்தாபா கமேனி எங்கே?

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தாபா கமேனி சமீபத்தில் பொறுப்பேற்றார். இந்த சூழலில், ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி மற்றும் பாசிஜ் படை தளபதி கோலம்ரெசா சுலைமானி ஆகியோர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின், ‘மொஜ்தாபா காமேனி பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது; அவரது குரலை நாங்கள் கேட்டதில்லை; அவரை பார்க்கவும் இல்லை.

ஆனால், ஒன்றை மட்டும் கூறுகிறேன். அவரை நாங்கள் பின்தொடர்வோம், தேடி கண்டுபிடிப்போம், பின்னர் அவரை அழிப்போம்’ என்று அவர் தெரிவித்தார். புதிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு மொஜ்தாபா கமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றவோ, டிவியில் உரையாற்றவோ இல்லை. அவர் பாதுகாப்பான ரகசிய இடத்தில் தங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவரை ஒழிப்பதே இஸ்ரேலின் நீண்டகால திட்டம் என உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா தேர்தலில் கிம் ஜாங் உன் அபார வெற்றி!

0

வடகொரியா நாடாளுமன்றத் தேர்தலில் 99.97% வாக்குகள் பெற்று கிம் ஜாங் உன் வெற்றி பெற்றுள்ளார். வெறும் 0.07% மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

1957க்கு பிறகு முதல்முறையாக எதிர்ப்பு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 15 அன்று நடைபெற்ற 15-வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தலில், கிம் தலைமையிலான தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 99.97% வாக்குகளைப் பெற்று அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 99.99% பேர் வாக்களித்துள்ளனர். வெளிநாடுகளில் இருப்பவர்கள் அல்லது கடலில் பணிபுரிபவர்கள் (0.0037%) மற்றும் வாக்களிக்க வராதவர்கள் (0.00003%) தவிர மற்ற அனைவரும் வாக்களித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

இருப்பினும், வடகொரியத் தேர்தல் வரலாற்றில் அரிதான நிகழ்வாக, 0.07% பேர் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டுத் தேர்தல் முறையில் ஒரு மாற்றமாகக் கருதப்படுகிறது.

வடகொரியா தேர்தல் சட்டங்களின்படி, தொழிலாளர்கள், விவசாயிகள், சேவைப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 687 பிரதிநிதிகள் இந்தப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 1957-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக, உச்ச மக்கள் பேரவைத் தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

ஒன்றை, இரட்டை இலக்கத்திற்கு அமைய நாளை முதல் எரிபொருள்!

0

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும், ஏனைய இலக்கங்களுக்கு ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 0,2,4,6 மற்றும் 8 ஆக இருந்தால் இரட்டை எண்கள் கொண்ட திகதிகளிலும் மற்றும் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 1,3,5,7 மற்றும் 9 ஆக இருந்தால் ஒற்றை எண்கள் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாளாந்தம் எரிபொருள் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டு வருவதாலும், உள்நாட்டில் எரிபொருளுக்கான கேள்வி அசாதாரணமான முறையில் அதிகரித்து வருவதாலும், நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு, எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் QR குறியீடு முறைமையைச் செயற்படுத்த அரசாங்கம் கடந்த 16ஆம் திகதி முதல் நடவடிக்கை எடுத்துள்ளது.

பெட்ரோல் தேடி ஸ்கூட்டரில் மற்றைய ஸ்கூட்டரை ஏற்றிச் சென்ற அவலம்!

0

இலங்கையின் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, மஹியங்கனை பகுதியில் இரண்டு நபர்கள் ஒரு ஸ்கூட்டரில் மற்றொரு ஸ்கூட்டரை ஏற்றிக்கொண்டு பெட்ரோல் தேடி அலைந்த வினோத காட்சி நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு ஸ்கூட்டரில் பயணிக்கும் இருவர், தங்களுக்கு இடையே மற்றொரு ஸ்கூட்டரை லாவகமாகப் பிடித்துக் கொண்டு செல்வதைக் காண முடிகிறது. வீடியோவில் உள்ளவர்களின் கூற்றுப்படி, அவர்களுக்கு ஒரு ஸ்கூட்டருக்கு மட்டுமே பெட்ரோல் கிடைத்துள்ளது. இதனால், மற்றொரு வாகனத்திற்கு பெட்ரோல் தேடும் பயணத்தைத் தொடர, அதனை உருட்டிச் செல்வதற்குப் பதிலாக இவ்வாறு மற்றொரு ஸ்கூட்டரிலேயே ஏற்றிச் செல்ல அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மஹியங்கனையில் நிலவும் அவல நிலை:

அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், மஹியங்கனையில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதாகவும், தட்டுப்பாடு காரணமாக பல நிலையங்கள் வாகனங்கள் உள்ளே நுழையாதவாறு எல்லைக்கோடுகள் இட்டு மூடப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

தற்போது நிலவி வரும் எரிபொருள் விநியோகப் பிரச்சினைகளால் வாகன ஓட்டிகள் எதிர்கொள்ளும் பெரும் சிரமங்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளதாக சமூக வலைதள பயனர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

எரிபொருள் போதாது: ஜனாதிபதி செயலகத்திற்கு முன் போராடுவோம்!

0

QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் முகாமைத்துவ முறையின் கீழ் தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு, தங்களின் நாளாந்த வாழ்வாதாரத்தைப் பேணுவதற்குப் போதுமானதாக இல்லை என முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டிகளுக்கு தற்போது வாரத்திற்கு 15 லீற்றர் எரிபொருள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், முச்சக்கர வண்டி ஓட்டுதலையே முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டவர்களுக்கு இந்த அளவு மிகவும் குறைவானது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வழமையான சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்க வாரத்திற்கு குறைந்தது 35 லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாக முச்சக்கர வண்டி சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒதுக்கீட்டில் திருத்தம் செய்யப்படாவிட்டால், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

முச்சக்கர வண்டி ஓட்டுநர்களைப் போன்றே, பாடசாலை போக்குவரத்துச் சேவையாளர்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களும் தற்போதைய ஒதுக்கீடு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

பாடசாலை பேருந்துகளுக்கு வாரத்திற்கு வழங்கப்படும் 60 லீற்றர் டீசல், மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கும் வழமையான வழித்தடங்களில் பயணிப்பதற்கும் போதுமானதாக இல்லை.

எனவே, இதனை 100 லீற்றராக அதிகரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யப்படாவிட்டால், மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் இருப்பு காரணமாகச் சில பேருந்து சேவைகளைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கையில் மீண்டும் QR முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், பல்வேறு துறையினரின் இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.