Saturday, March 28, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 8

ஈரான் விடயத்தில் சீனாவிடம் கெஞ்சும் அமெரிக்கா!

0

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா உதவும் என தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். 

சீனாவின் 90% எண்ணெய் இந்த நீரிணை வழியாகவே வருவதாகவும், அதனால் சீனா இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். 

எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த சீனா ஜனாதிபதியுடனான சந்திப்பு பிற்போடப்படலாம் என அவர் கூறிய நிலையில் அதற்கான காரணங்களை வௌிப்படுத்தியிருக்கவில்லை. 

அந்த சந்திப்புக்கு முன்னர் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு சீனா நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

சீனா, ஈரானின் எண்ணெய் தயாரிப்புகளில் சுமார் 90 சதவீதத்தை கொள்வனவு செய்கிறது. 

ஆனால், இது சீனாவின் மொத்த எண்ணெய் கொள்முதலில் சுமார் 12 சதவீதம் மட்டுமே ஆகும். 

வொஷிங்டனைச் சேர்ந்த உத்தியோகபூர்வ மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம், சீனாவின் எண்ணெய்ப் போக்குவரத்தில் சுமார் 40% மட்டுமே ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 மாதங்களாக மகனை தேடும் தாய், உண்மை மறைக்கிறதா பொலிஸ்?

0

கல்பிட்டி, பத்தலங்குண்டுவ தீவில் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த தனது மகன் மாயமாகி 4 மாதங்கள் கடந்தும், பொலிஸார் இது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என சிலாபம் – புஞ்சி வலத்தவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய எம்.ஏ. ஸ்ரீயாணி பிரேமலதா என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

காணாமல் போயுள்ள பி.ஆர். சஞ்சீவ விக்ரமசிங்க (38) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தை, கடந்த 15 ஆண்டுகளாக பத்தலங்குண்டுவ தீவில் தனியாக வசித்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் தீவுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர், அன்று மாலை அங்குள்ள சிலருடன் இணைந்து மது விருந்து ஒன்றில் பங்கேற்றுள்ளார். அந்த விருந்தில் கடற்படையைச் சேர்ந்த இருவர் மற்றும் தீவைச் சேர்ந்த மேலும் சிலர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

படுகொலை சந்தேகமும் பொலிஸ் மெத்தனமும்

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தாய் தெரிவிக்கும்போது, “எனது மகன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. விருந்து முடிந்து அவர்கள் அனைவரும் ஒரு படகில் ஏரிப் பகுதிக்குச் சென்றபோது, எனது மகன் ஏரியில் விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் எவரும் அவரைக் காப்பாற்றவில்லை. அவரது உடல் எங்கோ ஓரிடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கல்பட்டி பொலிஸ் நிலையம், புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகியவற்றில் பலமுறை முறையிட்டும் இதுவரை முறையான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார். கல்பட்டி பொலிஸார் கடற்படை வீரர்கள் இருவர் உட்பட சிலரிடம் வாக்குமூலம் பெற்ற போதிலும், அந்த நேரத்தில் தன்னை அனுமதிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது மகன் உயிருடன் இருந்தால் கண்டிப்பாகத் தொடர்பு கொண்டிருப்பார் என்று கூறும் அத்தாய், பொலிஸார் ஏன் இந்த விடயத்தில் மௌனம் காக்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். “குறைந்தபட்சம் எனது மகன் இறந்துவிட்டான் என்பதற்கான மரணச் சான்றிதழாவது கிடைத்தால், அவருக்கான இறுதிச் சடங்குகளை எம்மால் செய்ய முடியும்” என அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

17 ஆண்டுகால ஆட்சியை முறியடித்த தேசிய மக்கள் சக்தி!

0

ஜூட் சமந்த

சிலாபம் பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அதிகாரத்தை சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

சிலாபம் பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கான குழுப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்றது. இச்சங்கத்தின் கீழ் உள்ள 17 பிராந்தியங்களுக்காக மொத்தம் 83 குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதே இந்தத் தேர்தலின் நோக்கமாகும்.

இந்தத் தேர்தலின் முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி (NPP) ஆதரவுக் குழு: 50 இடங்களையும், பொது எதிர்க்கட்சி ஆதரவுக் குழு: 33 இடங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இதன் மூலம் கூட்டுறவுச் சங்கத்தின் பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்தி ஆதரவுக் குழுவினர் சுவீகரித்துள்ளனர்.

சிலாபம் பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கமானது கடந்த 17 வருடங்களாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சிக்கு ஆதரவான குழுவினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு இச்சங்கத்தின் நிர்வாகத்தில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 83 குழு உறுப்பினர்களிலிருந்து, சங்கத்தை வழிநடத்துவதற்கான புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை வரும் நாட்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் அழியும் நிலையில் எருமை மாடுகள்!

0

ஜூட் சமந்த

புத்தளம் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலங்கள் இல்லாத காரணத்தினால் எருமை மாடுகள் மிக வேகமாக அழிந்து வருவதாக பால் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 14 ஆம் திகதி சிலாபத்தில் அமைந்துள்ள வடமேல் மாகாண மீன்பிடி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தின் போதே இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. விவசாய மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த பால் பண்ணையாளர்கள், புத்தளம் மாவட்டத்தில் எருமை மாடுகள் அழிந்து வருவதற்குப் பிரதான காரணம் அவற்றுக்குத் தேவையான தீவனத்தைப் பெற்றுக்கொள்ளப் போதுமான மேய்ச்சல் நிலங்கள் இல்லாமையே என்று சுட்டிக்காட்டினர்.

முன்பு கால்நடைகள் மேய்ச்சலுக்காகப் பயன்படுத்திய நிலங்கள் பிரதேச செயலாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால், தற்போது அந்த நிலங்கள் வனவிலங்கு அல்லது வனப் பாதுகாப்புத் திணைக்களங்களின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட நிலங்களுக்குள் கால்நடைகளை நுழைய விடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், எருமை மாடுகளுக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நிலவும் நெருக்கடி காரணமாக, வேறு வழியின்றித் தமது எருமை மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு போகத்தில் மட்டும் சராசரியாக 100 எருமை மாடுகள் வரை இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாகத் தெரியவருகிறது.

இதன் விளைவாக, புத்தளம் மாவட்டத்தில் எருமைப் பால் மற்றும் தயிர் உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களின் வசம் உள்ள நிலங்களை மீண்டும் பிரதேச செயலாளர்களின் கீழ் கொண்டு வராவிட்டால், வருங்காலத்தில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து எருமை மாடு என்ற இனமே அழிந்துவிடும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்கத்தின் பதில் நடவடிக்கை: விவசாயிகளின் இந்தப் பிரச்சினைகளுக்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன பின்வரும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்:

  • பால் உற்பத்தி நிலை: தற்போது நாட்டில் நாளொன்றுக்கு 10 இலட்சம் லீற்றர் பால் உற்பத்தியாகிறது, இது நாட்டின் தேவையில் 35% மட்டுமே ஆகும்.
  • பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி: பால் உற்பத்தியை அதிகரிக்க பாகிஸ்தானில் இருந்து 7 எருமை மாடுகள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தல் காலத்திற்குப் பிறகு, அவை இனப்பெருக்கத்திற்காக விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்.
  • நிதி ஒதுக்கீடு: கால்நடை நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசித் திட்டங்களுக்காக அரசாங்கம் 25,000 இலட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

எருமை மாடு வளர்ப்பைப் பாதுகாப்பதுடன், அவற்றுக்கான தீவனத் தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்தும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகப் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மீண்டும் QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகம்!

0

QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இன்று காலை 8:00 – 9:00 மணியளவில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் QR குறியீட்டு முறையுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய தற்போது விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்பட்டாலும், கேன்கள் மற்றும் போத்தல்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

பொதுமக்கள் தமது சொந்த வாகனங்களில் வந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஒருவரின் QR குறியீட்டைப் பயன்படுத்தி வேறு வாகனங்களுக்கு எரிபொருள் கோரினால் அதனை வழங்கப்போவதில்லை என எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்: “புதிதாக வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்களுக்கு QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகப் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதற்கு அரசாங்கம் விரைவில் தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது QR முறைமை வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்குப் பாரிய பொறுப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் தமக்குரிய QR குறியீட்டுடன் தமது வாகனத்திலேயே வருகை தந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

தடையின்றி எரிபொருள் கிடைக்க ரஷ்யா உறுதி!

0

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று (13) நண்பகல் அமைச்சில் நடைபெற்றது. 

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீர்வாக, ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

அதற்கமைய, இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு கட்டமாக, ரஷ்ய எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து வெளிவிவகார அமைச்சர், ரஷ்ய தூதுவருடன் கலந்துரையாடினார். 

இலங்கையின் இந்தக் கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்திற்கு அறிவிக்கத் தூதுவர் இதன்போது சம்மதம் தெரிவித்தார். 

அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார். 

இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்குத் தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரஷ்யாவின் ஆதரவு கிடைக்கும் என ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டினார். 

இச்சந்திப்பில் தொழிலாளர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காலியில் இருந்து 45 ஈரானியர்களின் உடலங்கள் தாயகம் அனுப்பி வைப்பு!

0

காலி கடற்பகுதியில் அமெரிக்காவின் டொர்பிடோ (Torpedo) தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய ‘ஐரிஸ் டெனா’ (Iris Dena) கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளில், 45 பேரின் உடலங்கள் இன்று ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
காலி போதனா மருத்துவமனையின் இரண்டு குளிரூட்டப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருந்த இந்த 45 உடலங்களும் தற்போது மத்தல வானூர்தி நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடலங்களை ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட வழங்கிய உத்தரவிற்கு அமைவாகவே, குறித்த உடலங்கள் இன்று வானூர்தி மூலம் ஈரானுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

கடந்த 4ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து சுமார் 19 கடற்படை மைல் தொலைவிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் வைத்து, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலில் ஈரானுக்குச் சொந்தமான ‘ஐரிஸ் டெனா’ கப்பல் கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் உயிரிழந்த ஏனைய மாலுமிகளின் உடலங்களும் அடுத்தடுத்த கட்டங்களாக ஈரானுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்காகப் பிறக்கிறது விசேட பேருந்து சேவை!

0

மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட முன்னுரிமை பேருந்து சேவையொன்றை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் இதுவரை முறையாகக் கவனிக்கப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இது முன்னெடுக்கப்படுகிறது. ‘அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் மனித கௌரவத்தை பாதுகாக்கும் நாடு’ எனும் அரசாங்கத்தின் தூரநோக்கை யதார்த்தமாக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்திற்காக 430.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சமூகத்தில் நடமாடுவதற்கான தடைகளை நீக்குவதே இதன் நோக்கமாகும்.

முதற்கட்டமாக, சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் இலகுவாக ஏறுவதற்கு வசதியான ‘தாழ்ந்த தளம்’ கொண்ட 10 நவீன குளிரூட்டப்பட்ட பேருந்துகள் கடந்த 10 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இவை சனிக்கிழமை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

33 ஆசனங்களைக் கொண்ட இந்தப் பேருந்து ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் 80 பயணிகள் பயணிக்க முடியும். சக்கர நாற்காலிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட தொழில்நுட்ப வசதிகளும் இதில் உள்ளன.
 
முன்னோடித் திட்டமாக மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்திலிருந்து புறக்கோட்டை மற்றும் கடவத்தை வரையில் காலை, மாலை வேளைகளில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் ஒருமுறை இந்த பேருந்துகள் இயக்கப்படும்.

மஹரகம அபெக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றை நேரடியாக இணைக்கும் வகையில் இந்த சேவைகள் அமையும்.
 
தெரிவு செய்யப்பட்ட 28 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு சைகை மொழி, தொழில்சார் ஒழுக்கநெறிகள் மற்றும் பஸ் தொழில்நுட்பம் குறித்து விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் மேலும் 100 பேருந்துகளை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் ‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் பேருந்து நிலையங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு நவீனமயப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கல்பிட்டி கடலில் துள்ளிக்குதிக்கும் டொல்பின்கள்!

0

ஜூட் சமந்த

கல்பிட்டி கடற்பரப்பில் தற்போது டொல்பின்கள் அதிகளவில் வந்து குவிவதால் அவற்றைக் காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் அப்பகுதிக்கு வருகை தருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாத இறுதி வரை கல்பிட்டி கடற்பரப்பில் இந்த டொல்பின்களைக் காண முடியும் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கல்பிட்டி, கந்தகுலிய மற்றும் இலந்தவெளிய ஆகிய கடற்கரைப் பகுதிகளில் இருந்து படகு மூலம் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் மேற்கு நோக்கி கடலுக்குள் சென்றால் இந்த டொல்பின் கூட்டங்களை நேரில் கண்டு ரசிக்கலாம்.

“ஸ்பின்னர்” டொல்பின்களின் சாகசம்

இங்கு காணப்படும் டொல்பின்கள் “ஸ்பின்னர் டொல்பின்கள்” (Spinner Dolphins) என்று அழைக்கப்படுகின்றன. இவை சிறிய மற்றும் பெரிய கூட்டங்களாகக் கடலில் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக, இளம் வயது டொல்பின்கள் கடலில் உயரே துள்ளிக்குதித்து வித்தை காட்டுவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஆண் டொல்பின்கள் தமக்கான பெண் துணையை ஈர்ப்பதற்காகவே இவ்வாறான சாகசங்களைச் செய்வதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இயற்கையிலேயே மனிதர்களை விரும்பும் குணம் கொண்ட இந்த டொல்பின்கள், சுற்றுலாப் பயணிகள் வரும் படகுகளைச் சூழ நீந்தி விளையாடுவது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.

பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இந்த டொல்பின்கள், கடந்த காலங்களில் சில தேவையற்ற மனித நடவடிக்கைகளால் உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. எனவே, இந்த இயற்கை வளத்தைப் பாதுகாத்து, சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டியது அவசியம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆபத்தான நிலையில் உள்ள புத்தளம் பேருந்து நிலைய டிஜிட்டல் பெயர்ப்பலகை:

0

ஜூட் சமந்த

புத்தளம் பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள பாரிய டிஜிட்டல் பெயர்ப்பலகை ஒன்று எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் உள்ளதாக அங்கிருக்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில், நாடளாவிய ரீதியில் உள்ள பேருந்து நிலையங்களில் டிஜிட்டல் பெயர்ப்பலகைகளை நிறுவும் திட்டத்தின் கீழ் இந்தப் பலகை அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் பேருந்து நேர அட்டவணைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களை இது காட்சிப்படுத்தியது. இருப்பினும், காலப்போக்கில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், முதலில் நேர அட்டவணைகளும் பின்னர் விளம்பரங்களும் காட்சிப்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டது.

எவ்வித நிருவாக கண்காணிப்பும் இன்றி வெயிலிலும் மழையிலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த இந்தப் பெயர்ப்பலகை தற்போது முற்றாகத் துருப்பிடித்து உக்கடைந்துள்ளது.

கடந்த “டிட்வா” (Ditwa) சூறாவளி வீசிய காலப்பகுதியில், இந்தப் பெயர்ப்பலகை சரிந்து விழத் தொடங்கியது. அந்தச் சந்தர்ப்பத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் வழங்கிய தகவலின் பேரில் விரைந்து செயற்பட்ட புத்தளம் நகர சபைத் தொழிலாளர்கள், இந்தப் பலகை கீழே விழுவதைத் தடுப்பதற்காக அதனை ஒரு சங்கிலியால் அருகில் உள்ள மரத்துடன் சேர்த்துக் கட்டியுள்ளனர்.

தற்போது இந்த டிஜிட்டல் பெயர்ப்பலகையைத் தாங்கி நிற்கும் தூண்கள் பலவீனமடைந்து மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், வீதியில் செல்லும் பொதுமக்களுக்கோ அல்லது வாகனங்களுக்கோ பாரிய அனர்த்தம் ஏற்படக்கூடும் என முச்சக்கர வண்டி சாரதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக புத்தளம் நகர முதல்வர் எம்.எஃப். ரின்சாத் (M.F. Rinzad) அவர்களிடம் வினவியபோது, “இந்தப் பெயர்ப்பலகையை நிறுவியது யார் என்பது கூட எங்களுக்குத் தெரியாது. கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தோல்வியடைந்த ஒரு திட்டத்தின் விளைவையே நாம் இன்று காண்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இந்த பெயர்ப்பலகைக்குப் பொறுப்புக் கூற எந்தவொரு நிறுவனமோ அல்லது தனிநபரோ முன்வராத நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இதனை உடனடியாக அகற்ற வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.