Saturday, March 21, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 93

மருதங்கேணி பொலிசாரின் முன் மாதிரியான செயற்பாடு!

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அம்பன் கிராமத்தில் உள்ள ஓர் வறுமைக்கோட்டில் உள்ள குடும்பத்திற்கு மருதங்கேணி பொலிசார் 25000 ரூபாய் பெறுமதியான பொதி ஒன்றினை வழங்கிய விடயம் பேசும்பொருளாக மாறியுள்ளது.

குறித்த பொதியில் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதி வழங்கி வைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன், எதிர் வரும் முதலாம் திகதி தாழையடி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சிறுவர் தினத்தை மிகவும் சிறப்பாக நடத்தவும் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் பெரும்போகம் ஆரம்பம்!

இரணைமடுக் குளத்தின் கீழான 2025ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் தலைமையில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன கட்டிடத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கண்டாவளை மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர்கள், பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பொறியியலாளர், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், மாவட்ட விவசாயத்திணைக்கள பிரதிப்பணிப்பாளர், கமநல காப்புறுதிச்சபை மாவட்ட உதவிப்பணிப்பாளர், விவசாயத்திணைக்களம் சார்ந்த உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

2025, ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெற்ச்செய்கை தற்பொழுது ஆரம்பிக்கப்படுவதற்கான முன் ஆயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் நடைபெற்றது.

இதன் போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் பல முக்கிய விடயங்களை தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், தற்பொழுது இரணமடு குளத்தின் நீர்மட்டமானது 19/5 அடி நீர்மட்டமாக காணப்படுவதாகவும், 21,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு குறித்த நீர் பாசனம் செய்யவேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் நெற்செய்கை 01.10.2025 தொடக்கம் 10.11.2025 வறையான காலப்பகுதிகள் ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும், 15.11.2025 திகதிகளில் நீர்ப்பாசனம் செய்யப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். எனவே விவசாயிகள் உரிய காலத்தில் நெற்ச்செய்கையினை ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

40 வருடமாக தெதுரு ஓயா பகுதியில் வசித்தவர்களுக்கு ஏற்பட்ட சோதனை!

0

ஜூட் சமந்த

சிலாபம்-தெதுரு ஓயா ஆற்றுக்கழிமுகத்திற்கு அருகில் கட்டப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்ற கடலோர பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி, அப்பகுதி மீனவர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் இன்று 29 ஆம் தேதி காலை இடம்பெற்றது.

சிலாபம்-தெதுரு ஓயா ஆற்றுக்கழிமுகத்திற்கு அருகில் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்றுமாறு கடலோர பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஏற்கனவே அப்பகுதிவாசிகளுக்கு அறிவித்திருந்தனர்.

இருப்பினும், ஆற்றுக்கழிமுகத்திற்கு அருகில் கட்டப்பட்ட பல நிரந்தர கட்டிடங்களில் பலர் இன்னும் தங்கியிருப்பதை கடலோர பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளை அமைத்து அதில் தங்கி இருக்கின்ற மக்களை அகற்ற காவல்துறை மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளின் உதவியுடன் அப்பகுதிக்குச் சென்ற கடலோர பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அப்பகுதி மீனவர்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்தனர்.

அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் வசித்து வருவதாகவும், மின்சாரம் மற்றும் தண்ணீரைப் பெற்று சிலாபம் நகராட்சி மன்றத்திற்கு மதிப்பீட்டு வரியைக் கூட செலுத்திய நிலையில், இந்த வழியில் அவர்களை வெளியேற்றுவது நியாயமற்றது என்றும் அவர்கள் கூறினர். இருப்பினும், கடலோர பாதுகாப்பு சட்டத்தின்படி அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது, ​​இரு தரப்பினருக்கும் இடையே ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு பெண் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார், ஆனால் காவல்துறையினரும் கிராம மக்களும் அதைத் தடுத்தனர். மின்சார வாரிய ஊழியர்கள் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட மின்சாரத்தை துண்டிக்க முயன்றபோதும் மேலும் பதட்டமான சூழ்நிலை அதிகரித்தது.

ஆற்றுக்கழிமுகத்திற்கு அருகில் கட்டப்பட்டிருந்த இரண்டு பன்றி கொட்டகைகள் மற்றும் ஒரு நிரந்தர கட்டிடத்தை மட்டுமே கடலோர பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இறுதியாக அகற்ற முடிந்தது.

குடியிருப்பாளர்களுக்கும் கடலோர பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் இடையே அவசர பேச்சுவார்த்தை நடத்தி தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கல்முனை மண்ணிற்கு பெருமை சேர்த்த இளம் ஊடகவியலாளர்!

0

கல்முனை செய்தியாளர்

SDG அமைப்பின் இளைஞர் தூதுவர்களுக்கான உத்தியோகபூர்வ நியமனம் வழங்கும் நிகழ்வும் ஏனைய நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமும் நேற்று (28) கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் Kalmunai Friendly Guiders பவுண்டேசனின் ஸ்தாபக தலைவரும், சிரேஷ்ட இளம் ஊடகவியலாளரும், சர்வதேச மனித உரிமை அமைப்பின் சர்வதேச இயக்குனருமான ஏ.எஸ்.எம்.அர்ஹம் அவர்களுக்கு ஆஸ்திரேலியா நாட்டுக்கான இளைஞர் தூதுவராக உத்தியோகபூர்வ நியமனம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதன்மூலம் தனது கல்முனை மண்ணிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து மண்ணையும், பெற்றோர்களையும் கெளரவத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.

மேலும் ஏனைய நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போதைக்கு அடிமையாகும் மேல் மாகாண பாடசாலை மாணவர்கள்!

0

இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களே மிகவும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. 

இதில் கொழும்பு மாவட்டம் முதன்மை பெறும் நிலையில், கிராண்ட்பாஸ், தொட்டலங்க, கொம்பனிவீதி, அங்குலான, வாழைத்தோட்டம், பாணந்துறை, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ஹிக்கடுவ உள்ளிட்ட பல நகரங்களில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பிள்ளைகள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகுவதாக அந்த சபை மேலும் கூறியுள்ளது. 

அத்துடன் பாடசாலை மாணவர்கள் இடையே போதைப் பழக்கத்திற்கு அடிமையாக அதிக வாய்ப்புள்ள பகுதிகளாக கண்டி மாவட்டத்தை சேர்ந்த சில பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதேநேரம் கம்பஹா, குருநாகல், அனுராதபுரம், காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களும் ஆபத்தான மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மேலும் தெரிவித்துள்ளது. 

நாண்பர்களின் அழுத்தமே பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு உள்ளாகும் முக்கிய காரணியாக கண்டறியப்பட்டுள்ளது. 

குறிப்பாக, பாடசாலைகளில் போதைப்பொருள் கொள்கைகள் செயல்படுத்தப்படாதது, பாடசாலையில் போதைப்பொருள் தடுப்புக் கொள்கையை அமுல்படுத்துவதில் அதிபர்கள் மற்றும் வலயக் கல்வி அலுவலகங்கள் ஆர்வம் காட்டாதது ஆகியவை பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாவதற்கான காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

மேலும், உடைந்த குடும்பச் சூழலில் மன அழுத்த சூழ்நிலைகள், குழந்தைகளைப் புறக்கணித்தல், குடும்பம் மற்றும் வசிக்கும் பகுதியில் போதைப்பொருட்களின் பரவல், வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற சுற்றுச்சூழல் காரணிகளும் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாவதை தடுக்க, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை, சர்வதேச தரத்தின்படி உள்ளூர்மயமாக்கும் 6 பிரிவுகள் மூலம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

அதன்படி, பாடசாலை அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சி, இளைஞர்களை அடிப்படையாகக் கொண்ட போதைப்பொருள் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சி, குடும்ப அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சி, பணியிட அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் அடிப்படையிலான போதைப்பொருள் கல்வி பயிற்சி அல்லது போதைப்பொருள் கொள்கை உருவாக்கம் மற்றும் ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சி ஆகிய பிரிவுகள் மூலம் அவை செயல்படுத்தப்படுகின்றன. 

மேலும், போதைப்பொருள் தடுப்பு சோதனைகள், மதிப்பீட்டு சோதனைகள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான பிள்ளைகளை தொடர்ச்சியான படிப்புக்கு பரிந்துரைத்து, ஆலோசனை, சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் பின் பராமரிப்பு சேவைகள் மூலம் மீட்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை செயல்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கிடையில், போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளான பாடசாலை மாணவர்களை மீட்பதற்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை செயற்பட்டு வரும் அதேநேரத்தில், இந்த நோக்கத்திற்காக, சோதனைக்கு பின்னர் மூன்று முறைகளில் செயற்படுவதற்காக பாடசாலை ஆலோசகர் ஆசிரியர் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, குறைந்த அவதானமுள்ள மாணவர்களுக்கான ஆலோசனை மற்றும் தலையீடு முதல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. 

இரண்டாவது முறையில் நடுத்தர ஆபத்துள்ள மாணவர்களை கண்டறிதல் மற்றும் அதிக ஆபத்துள்ள மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை அதிகாரிகளிடம் பரிந்துரைப்பதாகும். 

இறுதி கட்டமாக, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் இளைஞர் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று அவர்கள் விரும்பியபடி பாடசாலை கல்வி அல்லது தொழிற்கல்விக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஓகஸ்ட் 31 வரை போதைப்பொருள் குற்றங்களுக்காக 206 பிள்ளைகளை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். 

இவர்களில் 39 பிள்ளைகள் நன்னடத்தையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

பிள்ளைகளை போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாக்கியமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிள்ளைகள் போதைப்பொருட்களுக்கு ஆளாவதை தடுக்க இலங்கை பொலிஸார், பாடசாலை மற்றும் உரிய நிறுவனங்களில் 15,652 செயற்திட்டங்களை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

ஆளும்கட்சிக்கு எதிராக ஊழல் முறைப்பாடு வழங்கிய கம்மன்பில!

0

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (29) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். 

ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாதாந்திர சம்பளத்தை கட்சி நிதிக்கு மாற்றி மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர கொடுப்பனவை தமது விருப்பப்படி செலவிட முடியாது என்று கூறினார். 

அதன்படி,  ஆளுங்கட்சியின்  159 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாதத்திற்கு 03 கோடி ரூபாய்க்கு மேல் பெற்று அதை கட்சி நிதியில் வரவு வைத்து அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது பொது நிதியை தவறாக பயன்படுத்தும் செயலாகும் எனவும், இந்த விடயம் குறித்து விசாரணை நடத்த கோரியும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் அவர் முறைப்பாடு அளித்துள்ளார். 

உதய கம்மன்பில மேலும் கருத்து தெரிவிக்கையில், 

“தொலைபேசி கட்டணம், எரிபொருள் மற்றும் அலுவலக பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் இந்தப் பணத்தை கட்சி நிதிக்கு அனுப்பி அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதாகும். 

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 160 பேரும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதில் மாதத்திற்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. 

எனவே, இந்த 160 பேரிடமும் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி இன்று நாங்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வந்துள்ளோம்.” என்றார்.

1143 கோடி லஞ்சம் பெற்ற முன்னாள் அமைச்சர்!

0

ஊழல் வழக்கில், சீனாவின் முன்னாள் அமைச்சர் டாங் ரெஞ்சியனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் முன்னாள் வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகாரத் துறை அமைச்சர் டாங் ரெஞ்சியன் (63). இவர் தனது பதவிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது அரசின் திட்டங்களைப் பணத்தை வாங்கிக்கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு ஜிலின் மாகாணம் சாங்சுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை நிறைவடைந்த நிலையில் நலத்திட்டங்களை ஒதுக்குவதற்காக பயனாளிகளிடம் இருந்து சுமார் 38 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.1143 கோடி) வரை லஞ்சம் பெற்றது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் வழக்கில், டாங் ரெஞ்சியனுக்கு கோர்ட் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்த தொகையை அவரிடம் இருந்து கைப்பற்றி தேசிய கருவூலத்துக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு அதிபர் ஜி ஜின்பிங் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC) மேற்கொண்ட மிகப்பெரிய ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சீன அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளதுடன், ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் நூற்றுக்கணக்கான உயர் ராணுவ அதிகாரிகளும் அடங்குவர்.

முன்னதாக, கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஊழல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று அதிபர் ஜின்பிங் பலமுறை எச்சரித்து இருந்தார். கட்சியின் அதிகாரத்தைத் தக்கவைக்க அதை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில்தான் சீனாவின் முன்னாள் அமைச்சர் டாங் ரெஞ்சியனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!

0
ஆசியக்கோப்பை | பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9வது முறையாக சாம்பியன்.. கோப்பையை வாங்க மறுப்பு!

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரிடம் இருந்து வெற்றிக் கோப்பையை பெற இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

8 அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், இறுதிக்கட்டத்தை எட்டியது. இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளுக்கு இடையே சச்சரவுகள் நீடித்து வரும் நிலையில், இது மேலும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைக் கூட்டியது. அதிலும், 41 ஆண்டுகால ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் நேற்று களம் கண்டன.

இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் 146 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக ஃபர்ஹான் 57 ரன்களும், ஜமான் 46 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், பும்ரா, வருண், அக்‌ஷர் ஆகியார் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

இந்த தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்து வந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, இந்த முறை 5 ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. அதேபோல் சுப்மன் கில் 12 ரன்களிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் நடையைக் கட்ட, இந்தியா ஆரம்பத்திலேயே தள்ளாட்டத்தைச் சந்தித்தது. எனினும், திலக் வர்மா இந்தப் போட்டியில் நங்கூரமாய் இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இந்தப் போட்டியில் திலக் வர்மா 53 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 69 ரன்கள் எடுத்தார். அவருக்குத் துணையாக சஞ்சு சாம்சன் (24 ரன்கள்), ஷிவம் துபே (33 ரன்கள்) ஆகியோர் கைகொடுக்க இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றதுடன் சாம்பியன் கோப்பையையும் 9வது முறையாகத் தட்டிச் சென்றது.

இந்த தொடரில் எல்லாப் போட்டிகளிலும் வென்ற இந்திய அணி, பாகிஸ்தான் அணியை மட்டும் மூன்று முறை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், ஆசியக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், அந்நாட்டின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து வெற்றிக் கோப்பையைப் பெற மறுத்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோப்பை வழங்க நக்வி மேடைக்கு வந்தபோது, இந்திய வீரர்கள் 15 அடி தூரத்தில் விலகி நின்று கோப்பையை வாங்க மறுத்தனர். பிசிசிஐ செயலர் தேவஜித் சைக்கியா கூறுகையில், “இந்தியா மீது பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல் நடத்தியது. அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கோப்பையை பெற மாட்டோம். அதேசமயம், இந்தியாவுக்கான கோப்பை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

போட்டியில் வென்ற அணிக்கு மைதானத்தில் கோப்பை வழங்கப்படாமல் போனது இதுவே முதன்முறை என்பது கவனிக்கத்தக்கது.

அதேநேரத்தில், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதையடுத்து, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அதில் விளைவு ஒன்றுதான்; இந்தியா வெற்றி பெற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

மன்னாரில் நாளை பொது முடக்கம்?

0

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை (29) மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கல் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். 

மன்னாரில் இன்றைய தினம் (28) 57 ஆவது நாளாக போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில், அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“மன்னார் மாவட்டம் முழுவதும் நாளை திங்கட்கிழமை பொது முடக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். அனைத்து செயல்பாடுகளும் முழுமையாக நிறுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

எமது போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பொது போக்குவரத்துகள் அனைத்தையும் நிறுத்தி, வர்த்தக நிலையங்களை மூடி மாவட்டத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்து எமது போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டுகோள் விடுக்கின்றோம். 

அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றுகின்றவர்கள் நாளைய தினம் கடமைகளுக்கு செல்லாது எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

நாளை (29) காலை 10.00 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமாகும். குறித்த பேரணி மன்னார் பஜார் பகுதியை வந்தடையும். பின்னர் அங்கு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்படும். 

குறித்த போராட்டம் மதியம் 1.30 மணி வரை முன்னெடுக்கப்படும். போராட்டத்தின் இறுதியில் எமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கப்படும். 

எனவே மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் எமது உரிமைக்கான போராட்டத்தில் மீனவர்கள், வர்த்தகர்கள், பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்போர் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பூரண ஆதரவை வழங்க வேண்டும்” என்றார்.

நாட்டில் இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதார மையங்கள்!

0

பொதுமக்கள் தங்கள் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வுடன் இல்லாமல் இருந்தாலும் அவர்களின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது சுகாதார மற்றும் நல்வாழ்வு மைய ஊழியர்களின் பொறுப்பாகும்…

– சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ –

இந்த நாட்டில் வாழும் மக்கள் கண்ணியமான முறையில் சுகாதாரசேவையை எளிதில் பெற்றுக்கொள்ளகூடியவகையில் உறுதிசெய்வதற்காக, தற்போதைய அரசாங்கத்தின் சுகாதாரக்கொள்கையின் முதல் கட்டமாக சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் ஆயிரம் ஆரம்ப சுகாதார மையங்களை நிறுவ அமைச்சகம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.

மேலும் மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய இடத்தில் நிறுவப்படும் இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள்” ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுமையம்” என்று பெயரிடப்பட்டுள்ளன. இது நாட்டின் சுகாதாரசேவையை நல்லவழியில் மாற்றி அமைக்கும் சிறந்த மாற்றத்தின் முதல் ஆரம்பமாக இது காணப்படுகிறது.

மேலும் புதிய அரசாங்கத்தின் சிறந்த திட்டமான “HEALTHY SRI LANKA” இன் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதார மையங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் இரண்டாவது சுகாதார மற்றும் நல்வாழ்வு மையமான இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள அத் ஓயா சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம், நேற்று (27) மதியம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது.

முதல் அங்கத்துவர் பதிவு செய்யப்பட்டு, அதற்கான பதிவு அட்டை அமைச்சரால் வழங்கப்பட்டது. சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தால் வழங்கப்படும் சேவைகள் குறித்து அங்கு வந்திருந்த மக்களுக்குத் தெரிவித்த அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, நான்கு அல்லது ஐந்து கிராம சேவகர் பிரிவுகளில் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரையிலான மக்களை உள்ளடக்கிய ஒரு சுகாதாரக் குழு அறிமுகப்படுத்தப்படும் என்றும், இந்த மக்கள் அந்த மையத்தால் உள்வாங்கபடுவார்கள் என்றும் பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இது ஒரு நல்வாழ்வு மையம் என்றும் தெரிவித்தார்.

இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், மக்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே நோய்களை குறிப்பாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்று அல்லாத நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கு இந்த மையம் உதவும் என்றும் அங்கு கூடியிருந்த மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இதற்காக மாவட்ட மக்கள் பதிவு செய்யப்பட்டு தேவையான அடிப்படை பரிசோதனைகள் நடத்தப்படும், மேலும் இந்த மையத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவ அதிகாரியின் எல்லைக்கு அப்பாற்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு அருகிலுள்ள இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள்.

இந்த மையம் இந்த திட்டத்தின் இரண்டாவது மையம் என்றும், நாட்டில் இதுபோன்ற ஆயிரம் சுகாதார மையங்கள் நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தில் எட்டு பேர் கொண்ட சுகாதார ஊழியர்கள் இணைக்கப்படுவார்கள் என்றும் மக்கள் தங்கள் உடல்நலத்தைப் பற்றி சிந்திக்காவிட்டாலும், இந்த ஊழியர்கள் அந்த மக்களின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த மையங்கள் மக்களுக்கு சுகாதார ஆலோசனை மற்றும் மருந்துகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் மற்றும் ஆயுர்வேத சுகாதார சேவைகளையும் படிப்படியாகத் தொடங்கும் என்றும், உடல் உடற்பயிற்சி, யோகா, இசை சிகிச்சை போன்றவற்றை உங்கள் வாழ்க்கையுடன் பழகுவதற்கான இடமாக மாற்றும் என்றும் அவர் கூறினார்.