Saturday, March 21, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 95

சூர்யகுமாருக்கு 30% அபராதம் விதித்த ஐசிசி!

0

ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு போட்டிக்கட்டணத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2025 ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இரண்டுமுறை மோதின, இதில் இரண்டு போட்டியிலும் இரண்டு அணி வீரர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்களும், சர்ச்சைக்குரிய செயல்பாடுகளும் இருந்தன.

லீக் போட்டியில் பாகிஸ்தான் கேப்டனுடன் கைக்குலுக்காத இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், செய்தியாளர் சந்திப்பில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக இருக்கிறோம், அதற்கான பதிலடி தற்போது கொடுக்கப்பட்டது என்று பேசினார். மேலும் இந்திய வீரர்கள் யாரும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்கவில்லை.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பவுலர் ஹாரிஸ் ராஃப், ரசிகர்களின் ’கோலி’ என்ற கோஷத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய சைகளை வெளிப்படுத்தினார். இது இணையத்தில் வைரலாகி பேசுபொருளாக மாறியது.. தொடர்ந்து மற்றொரு பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான் செய்த துப்பாக்கி சுடுதல் செலப்ரேஷனும் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் வீரர்களின் இந்த நடவடிக்கைக்காக ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அரசியல் ரீதியான கருத்தை தெரிவித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியில் புகாரளித்திருந்தது. அதன் நடவடிக்கையாக நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் விசாரணையில் ஈடுபட்டார். சூர்யகுமார் யாதவ் விசாரணையின் போது தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. அதேநேரத்தில் ஹாரிஸ் ராஃபின் செயல்கள் குற்றமென நடுவரால் உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் இருவருக்கும் போட்டிக்கட்டணத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவ் குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில், இந்திய அணி இந்த குற்றத்தின்மீது மேல்முறையீடு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னும் இந்தியாவின் மேல்முறையீடு விசாரிக்கப்படாத நிலையில், இறுதிப்போட்டி முடிந்தபிறகு இதற்கான முடிவு என்னவென்று தெரியவரும் என சொல்லப்படுகிறது.

தேவாவுக்கு ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் கௌரவம்!

0

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவுக்கு ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் தேவா அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, அவருக்கு ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் (Australian Parliament) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மரியாதை வழங்கப்பட்டுள்ளது.

திரையுலக இசையில் தேனிசைத்தென்றல் தேவாவிற்கு என்று தனி இடம் இருக்கிறது. 36 ஆண்டுகால இசை வாழ்க்கையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் 400 படங்களுக்கும் மேல் இசையமைத்த பெருமைக்கு சொந்தக்காரர் தேவா. ஒரு படத்தில் மெலடி, குத்துபாட்டு, வெஸ்டர்ன் பாட்டு, இசைக்கருவிகளுக்கு முக்கியத்துவம் தரும் பாட்டு முதலியவற்றோடு, கானா பாடல்களையும் கொடுக்கும் ஒரே இசையமைப்பாளர் தேவா மட்டுமே. இசையமைப்பதை தாண்டி பல்வேறு ஹிட் பாடல்களையும் பாடியுள்ளதோடு, மாஸ்ஸான பின்னணி இசை என ரசிகர்களின் மனதில் தேவா தனியிடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு சென்ற தேனிசைத்தென்றல் தேவா, சபாநாயகர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். தேவா அவர்கள் பாராளுமன்றத்துக்கு வரவேற்கப்பட்டு, அங்குள்ள சபாநாயகர் இருக்கையில் அமர அழைக்கப்பட்டார். மேலும், பாராளுமன்றத்தின் முக்கியச் சின்னமான செங்கோலும் அவருக்கு அளித்து மரியாதை செலுத்தப்பட்டது. இது ஒரு பெரிய அரசியல் கௌரவமாகக் கருதப்படுகிறது.

இந்த அரிய மரியாதை குறித்து தேவா அவர்கள் நெகிழ்ச்சியுடன் தனது நன்றியைத் தெரிவித்தார். ஆஸ்திரேலிய அரசு, தமிழ்க் கலை மற்றும் கலாச்சார மையம் சக இசைக் கலைஞர்கள் மற்றும் தனது அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்தினார்.தேனிசைத் தென்றல் தேவாவுக்குக் கிடைத்த இந்த கௌரவம், தமிழ் இசைத்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளது.

மன்னாரில் பொதுமக்களை தாக்கிய பொலிஸார்!

0

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை அமைதியான முறையில் தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டனர். 

இதில் பலர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையில், கடந்த மாதம் ஒரு குழுவை அமைத்து மக்களின் கருத்துக்களை உள்வாங்கி நல்ல தீர்வு வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

ஆனால், இதற்கு மாறாக, ஜனாதிபதி மக்களின் எதிர்ப்பையும் கருத்துக்களையும் மதிக்காமல், காற்றாலைத் திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நேற்று முன்தினம் பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று (26) இரவு 10 மணியளவில், முதற்கட்டமாக காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை மக்கள் அமைதியாகத் தடுத்து நிறுத்த முயன்றபோதிலும், அவர்களின் எதிர்ப்பை மீறி உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டன.

தொடர்ந்து, நள்ளிரவு 12 மணியளவில் இரண்டாவது காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டபோது, பொதுமக்களும் அருட்தந்தையர்களும் வீதிகளில் இறங்கி தடுக்க முயன்றனர்.

அப்போது, பொலிஸார் பெண்கள், அருட்தந்தையர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் கொடூரமாகத் தாக்குதல் நடத்தி, கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.

அதேவேளை, போராட்டக்காரர்களைத் தடுக்க விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் காற்றாலை உதிரிபாகங்களைக் தீவுக்குள் கொண்டு சென்றனர். 

தாக்குதலில் காயமடைந்தவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிறுவர் தினத்தையொட்டி குருதிக்கொடை முகாம்!

சிறுவர் தினத்தையொட்டி போரின் போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் நினைவாக “எழுகை” அமையத்தின் ஒழுங்குபடுத்தலில் மாபெரும் குருதிக்கொடை முகாம் கிளிநொச்சி பசுமை பூங்காவனத்தில் நடைபெற்றது.

இதன்போது பலர் தாமாகவே முன்வந்து மிகுந்த ஆர்வத்துடன் குருதி கொடையினை இன்றைய தினம் 27.09.2025 வழங்கினர்.

“சிந்திய குருதியை ஒருபோதும் மறக்கிலோம் அன்று சிந்தியதை இன்றும் கொடை செய்கிறோம்” என்ற அடிப்படையில் இன்றைய இரத்ததான முகம் இடம்பெற்றமை விஷேட அம்சமாகும்.

இன்று பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்!

0

2025 செப்டம்பர் 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ௐரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமத்திய மாகாணத்திலும் மாத்தளை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்கு 07 மிட்சுபிஷி கெப் வண்டிகள்!

0

சுகாதார சேவைகளுக்கு பயன்படுத்துவற்காக 07 இரட்டை இருக்கை வாகனங்கள் (Double cab) வழங்கப்பட்டன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி மற்றும் சுகாதார அமைப்புகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்கு 07 இரட்டை இருக்கை வாகனங்களை (Double cab) வழங்கியுள்ளது. இந்த வாகனங்கள் ஒவ்வொன்றின் பெறுமதி 22 மில்லியன் ஆகும். இந்த வாகனங்கள் நேற்று (25) சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் வளாகத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சுகாதார மருத்துவ அதிகாரிகள் அலுவலகங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.

அதன்படி, கண்டி மாவட்டத்தில் உள்ள வரல்லகம மற்றும் கங்காவத கோரளை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள், அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஹொரொவ்பதான சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், பதுளை மாவட்டத்தில் உள்ள மஹியங்கனை மற்றும் பண்டாரவளை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள், இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள நிவிடிகல சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் மற்றும் கொழும்பு திட்ட மேலாண்மை பிரிவு ஆகியவற்றுக்கு இந்த வாகனங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு இங்கு நடைபெற்றது.

மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்களில் சுகாதார சேவைகளுக்காக 45 வாகனங்களை கொள்வனவு செய்ய சுகாதார அமைப்புகள் மேம்பாட்டுத் திட்டம் நடவடிக்கை எடுத்திருந்தது, மேலும் 2022 ஜனவரியில், இந்த இரட்டை இருக்கை வாகனங்களில் 38 கொள்வனவு செய்யப்பட்டு அந்த வாகனங்களை பயன்படுத்தி நோய் தடுப்பு சுகாதார சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் மீதமுள்ள 07 வாகனங்களை சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர்கள் சாமிக கமகே, சுனில் கலகம, ஜனக கித்சிறி குணவர்தன, துணை இயக்குநர் ஜெனரல் தினிபிரியா ஹேரத், இயக்குநர் (போக்குவரத்து) நிலங்க தில்ஹான் சோமபால, ஆசிய வளர்ச்சி வங்கியின் இலங்கையில் சுகாதார அமைப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் இயக்குநர் டாக்டர் அனில் திசாநாயக்க மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

40 ஆண்டில் 5 முறை இந்தியா-பாகிஸ்தான் ஃபைனல்!

0

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இருநாடுகளுக்கு இடையேயான அரசியல் பதற்றம் காரணமாக இருதரப்பு தொடர்களில் விளையாடுவதை தவிர்த்துவருகின்றன.

என்றாலும், இரண்டு அணிகளுக்கான மோதல் எப்போது நடந்தாலும் அதுஒரு திருவிழா போலவே உலக கிரிக்கெட்டில் அங்கம் வகிக்கிறது. வரலாற்றில் அதற்கான சான்றுகள் அதிகம் இருக்கின்றன, எடுத்துக்காட்டாக 2007 டி20 உலகக்கோப்பை ஃபைனல், 2022 டி20 உலகக்கோப்பை லீக் போட்டி என மைதானத்தின் பார்வையாளர்கள் தொடங்கி, மொபைல், டெலிவிசன் பார்வையாளர்கள் என அனைத்திலும் சாதனை படைத்து வரலாறாக மாறியது இந்தியா-பாகிஸ்தான் போட்டி.

இந்நிலையில் 2025 ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன. வரும் 28-ம் தேதி ஞாயிற்று கிழமையன்று இவ்விரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கும் நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான மோதலானது சர்ச்சைகளுக்கு நடுவே அதிக எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா நடத்திய ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை என்பதை எல்லாம் தாண்டி, 2025 ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் வீரர்களின் மோதலனாது ஒருபடி உச்சம் தொட்டுள்ளது.

பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்த இந்திய வீரர்கள், பதிலுக்கு பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவை விமர்சிக்கும் வகையில் செய்த துப்பாக்கி சுடுதல் செலப்ரேசன், அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய வீரர்களின் பதிவுகள் என நடப்பு 2025 ஆசியக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சர்ச்சைகளில் தலைப்பு செய்திகளாக மாறியுள்ளன.

இந்தசூழலில் 2025 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை சந்தித்தால் ’நாங்கள் கோப்பை வெல்லுவோம்’ என பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி கூறியுள்ளார்.

தற்போது இரண்டு அணிகளுக்கும் இடையே இறுதிப்போட்டியானது உறுதியாகிவிட்ட நிலையில், இதற்கு முன்பு எத்தனை முறை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஃபைனலில் மோதியுள்ளன, அதில் எந்த அணி அதிகமுறை கோப்பைகள் வென்றுள்ளது என்பதை பார்க்கலாம்.

1984 முதல் நடைபெற்றுவரும் ஆசியக்கோப்பை வரலாற்றில் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டதே இல்லை. ஆனால் 1986 ஆஸ்ட்ரல்-ஆசிய கோப்பை மோதலின் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. அதில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.

அதேபோல 1994 ஆஸ்ட்ரல்-ஆசிய கோப்பை இறுதிப்போட்டியிலும் 39 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது பாகிஸ்தான். கடைசியாக இரு அணிகளும் மோதிக்கொண்ட 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தான் வென்று கோப்பையை தட்டிச்சென்றது.

இந்திய அணியை பொறுத்தவரை 1985 உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பதிவுசெய்தது. அதுபோக 2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பாகிஸ்தானிடமிருந்து கோப்பையை தட்டிப்பறித்தது இந்தியா.

1985 முதலான 40 வருட கிரிக்கெட் வரலாற்றில் 5 முறை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதியுள்ள நிலையில், அதில் பாகிஸ்தான் அணி 3-2 என முன்னிலை வகிக்கிறது. இந்தசூழலில் 2025 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்து 3-3 என சமன்செய்யும் என்ற எதிர்ப்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் இருந்துவருகின்றனர்.

2025 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் வரும் ஞாயிற்று கிழமை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கின் விளையாட்டுத் துறையில் மறுமலர்ச்சி!

கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி திறன் விருத்தி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் விளையாட்டு துறை அமைச்சர். சுனில்குமாரகம மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன்ண விளையாட்டு கழகங்களில் தலைவர்கள் மற்றும் பயிற்விப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு கழகங்கள் முகம்கொடுத்துவரும் பல்வேறு குறைபாடுகளை இன்றைய தினம் விளையாட்டு துறை அமைச்சரிடம் விளையாட்டு கழகங்கள் நேரடியாக தெரிவித்தன.

கலந்துரையாடலின் போது விளையாட்டு கழகங்களின் தலைவர்கள், செயலாளர் மற்றும் விளையாட்டு துறை பயிற்றுவிப்பாளர்கள் தாம் விளையாட்டுத்துறையில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதற்கு பதில் அளித்த விளையாட்டுதுறை அமைச்சர், கழகங்களில் குறைபாடுகள் நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் இருப்பதாகவும், அதற்கான நிதியும் தம்மிடம் கையிருப்பில் உள்ளதாகவும் உங்கள் விளையாட்டு கழகங்களுக்கு தேவைப்படுகின்ற தேவைப்பாடுகள் தொடர்பாக அறிக்கைகளை தருமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் கிளிநொச்சி மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் கட்டடத் தொகுதியில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை விரைவாக தரும் பொழுது தம்மால் நிதியை பெற்றுத் தர முடியும் எனவும் இதன்போது தெரிவித்தார்.

இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் சீனா!

இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் சீனாவின் மூலோபாயப் பங்களிப்பு

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

இலங்கையின் நீண்ட வரலாற்றிலும் அண்மைய தேசிய அபிவிருத்தியிலும் சீனா ஒரு முதன்மையான மூலோபாயப் பங்காளியாகத் திகழ்கிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்திருக்கும் இரு நாடுகளின் வரலாற்று மற்றும் கலாசாரத் தொடர்புகள், நவீன காலத்தில் பொருளாதார முதலீடுகள் மற்றும் பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் மூலம் ஆழமடைந்துள்ளன.

குறிப்பாக, சீனாவின் ‘ஒரு பட்டை ஒரு சாலை முன்னெடுப்பு’ (Belt and Road Initiative – BRI) இலங்கையின் புவியியல் அமைப்பைச் சாதகமாகப் பயன்படுத்தி, பல பாரிய அபிவிருத்தித் திட்டங்களை இங்கு முன்னெடுக்க வழிவகுத்துள்ளது.

  1. உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்கள்

சீனாவின் பங்களிப்பு இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்தக முகப்பையே மாற்றியமைக்கும் வகையில் அமைந்துள்ளன. இத்திட்டங்கள் இலங்கையின் அபிவிருத்திக்கு மிக முக்கியமானவை.

அ. கொழும்புத்துறைமுக நகரம் (Colombo Port City)
கொழும்புத் துறைமுக நகரம், இலங்கையின் அபிவிருத்தியில் முன்னெப்போதுமில்லாத வகையில் பாரிய முதலீட்டையும், பொருளாதார மாற்றத்தையும் கொண்டு வரக்கூடிய ஒரு திட்டமாகும்.

திட்டத்தின் நோக்கம்:
கொழும்பின் மத்திய வணிக மாவட்டத்தையொட்டி 269 ஹெக்டேர் கடற்பரப்பை நிலமாக மீட்கும் (Land Reclamation) இந்த மெகா திட்டம், சர்வதேச நிதிச் சேவைகள், சுற்றுலா மற்றும் தகவல் தொழிநுட்ப மையங்களைக்கொண்ட சிறப்புப்பொருளாதார மண்டலமாக (Special Economic Zone) உருவாக்கப்படுகிறது.

சீனப் பங்களிப்பு:
இத்திட்டத்தில் ஆரம்ப முதலீடு சுமார் $1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். நிலத்தை மீட்கும் மற்றும் கட்டுமானப்பணிகளில் பிரதானமாகச் சீன அரசு நிறுவனமான சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி (CHEC) ஈடுபட்டுள்ளது.

ஒப்பந்தச்சாரம்:
முதலீட்டுக்கு ஈடாக, மீட்கப்பட்ட நிலப்பரப்பின் ஒரு பகுதி CHEC நிறுவனத்திற்கு 99 வருட காலக்குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் தாக்கம்:
இது பூர்த்தி செய்யப்படும் போது, துபாய் அல்லது சிங்கப்பூர் போன்ற பிராந்திய நிதி மையமாகச் செயற்பட்டு, கணிசமானளவு அந்நிய முதலீட்டையும், சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆ. ஹம்பாந்தோட்டை துறைமுகம் (Hambantota Port)

இலங்கையின் தென்பகுதியில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம், சர்வதேச கடல்வழி வர்த்தகப்பாதையில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டமாகும்.

திட்டச்சவால்:
இத்துறைமுகம் இலங்கையின் சொந்தக் கடனுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அதன் கட்டுமானத்திற்கான பாரிய சீன வங்கிக் கடனைத் திருப்பிச்செலுத்த முடியாததால் இலங்கை அரசு நெருக்கடிக்குள்ளானது.

சீனப்பங்களிப்பு:
கடன் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, 2017ம் ஆண்டு, துறைமுகத்தின் 70% பங்கு சீன அரசு நிறுவனமான சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் (China Merchants Port Holdings) நிறுவனத்திற்கு 99 வருட காலக் குத்தகை ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டது.

பொருளாதார விளைவு:
துறைமுக நிர்வாகத்தை சீன நிறுவனம் ஏற்றதன் மூலம், அது வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதிலும், சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதிலும் முக்கியத்துவம் செலுத்தி வருகிறது.

இ. ஏனைய உள்கட்டமைப்புத்திட்டங்கள்
மேற்கூறிய பிரதான திட்டங்கள் மட்டுமன்றி, சீனா இலங்கையின் பல முக்கிய தேசிய உள்கட்டமைப்புத் திட்டங்களிலும் பங்களித்துள்ளது.

  • நெடுஞ்சாலைகள்:
    தென் அதிவேக நெடுஞ்சாலை (Southern Expressway – E01) மற்றும் ஏனைய முக்கிய வீதி அபிவிருத்திகள்.
  • துறைமுக முனையங்கள்:
    கொழும்புத் துறைமுகத்தின் தெற்கு முனையம் (South Container Terminal) கட்டுமானப் பணிகள்.
  • கட்டிடங்கள்:
    கொழும்பிலுள்ள தாமரைக்கோபுரம் (Lotus Tower) போன்ற முக்கிய அடையாளச்சின்னங்கள்.
  1. அரசியல், வர்த்தகம் மற்றும் தூதரகப்பணிகள்
    பொருளாதாரத் திட்டங்களுக்கப்பால், சீனா பல ஆண்டுகளாக இலங்கையுடன் நெருக்கமான அரசியல் மற்றும் வர்த்தக உறவைப் பேணி வருகிறது.

அ. அரசியல் உறவுகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு

  • வர்த்தகப் பங்காளி:
    சீனா, இலங்கையின் பிரதான வர்த்தகக் கூட்டாளிகளில் ஒன்றாகும். இலங்கையின் தேயிலை, ஆடை போன்றவற்றை சீனா இறக்குமதி செய்கிறது.
  • கடன் உதவி:
    அண்மைக்கால பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கைக்குக் கடன் மறுசீரமைப்பு வழங்குவதில் சீனா ஒரு முக்கியப் பங்களிப்பாளராகச் செயல்பட்டு வருகிறது.

ஆ. சீனத்தூதரகத்தின் செயற்பாடுகள்
இலங்கையிலுள்ள சீனத்தூதரகம், இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர மற்றும் மக்கள் மட்ட உறவுகளைப் பலப்படுத்துவதில் முக்கியப் பணிகளை ஆற்றுகிறது.

  • கொள்கை ஒருங்கிணைப்பு:
    இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையேயான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் மற்றும் மூலோபாயக் கூட்டணிகளைத் தொடர்ந்து ஒருங்கிணைத்தல்.
  • மனிதாபிமான உதவி:
    அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவம் மற்றும் பிற மனிதாபிமான உதவிகளை விரைவாக வழங்குவதில் முக்கியப் பங்காற்றுதல்.
  • கலாசாரப்பரிமாற்றம்:
    புலமைப்பரிசில்கள் (Scholarships) வழங்குதல் மற்றும் சீனக்கலாசார நிகழ்ச்சிகள், கலை விழாக்களின் மூலம் இரு நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தைப் பேணுதல்.
  • குடியினர் பாதுகாப்பு:
    இலங்கையில் பணி புரியும், வாழும் சீனக்குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல்.

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் பங்களிப்பு மிக முக்கியமானதும், அதன் உட்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத் திறனைப் பலப்படுத்துவதுமான ஒரு அங்கமாகவுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்புத் துறைமுக நகரம் போன்ற பாரிய முதலீடுகள், இலங்கையைப் பிராந்தியத்தின் கடல்சார் மற்றும் நிதி மையமாக மாற்றும் ஆற்றல் கொண்டவை.

இந்த உறவு எதிர்காலத்திலும் நிலைத்தன்மையுடன் தொடர வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா நாட்டின் 76வது founding day நேற்று (25) கெழும்பு City of Dream ஹோட்டலில் இடம்பெற்றது.

(சீன மக்கள் குடியரசின் 76வது ஆண்டு நிறைவு முன்னிட்டு பிரசுரமாகும் கட்டுரை)

கல்பிட்டியில் கலைகட்ட உள்ள “STREET FOOD FESTIVAL”

0

இன்று கல்பிட்டியில் “STREET FOOD FESTIVAL” நிகழ்வு

கல்பிட்டி சுற்றுலா தொடர்பான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் அங்கமாக இன்றைய தினம் (26) மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை “STREET FOOD FESTIVAL” நிகழ்வு கல்பிட்டி நகரில் இடம்பெறவுள்ளது.

பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாகக் காணப்படும் கல்பிட்டிப் பிரதேசத்தில் இத்துறையை மேலும் வளர்ச்சி பெற வைத்து, இப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் வடமேல் மாகாண சபை, தொழில்துறை சேவைகள் பணியகம், கல்பிட்டி பிரதேச சபை மற்றும் கல்பிட்டி பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுசரணையில் இந் நிகழ்வு இடம்பெற உள்ளது.

கல்பிட்டி சுற்றுலா தொடர்பான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் (KALPITIYA FOOD FESTIVAL) எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.

இதில் பல வகையான உணவுப் பண்டங்களைக் கொண்ட விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)