- தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஒரு நிமிட இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
- தலைநகர் கராகஸ் (Caracas) மற்றும் லா குவைரா (La Guaira) ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து வீழ்ந்ததில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதோடு, 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
- நாட்டின் நிலவரம் மோசமடைந்துள்ளதால் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார்.
கராகஸ்: ஒரே ஒரு நிமிட இடைவெளிதான்! ஒட்டுமொத்த நாடே குலுங்கி, மரண ஓலம் எழுப்பத் தொடங்கியுள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை உலுக்கியெடுத்த அடுத்தடுத்த இரண்டு மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், அங்குள்ள பல அடுக்குமாடி கட்டிடங்களை சில நொடிகளில் தரைமட்டமாக்கியுள்ளன. இதுவரை உத்தியோகபூர்வமாக 32 மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், இடிபாடுகளுக்குள் நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருப்பதால் இந்த எண்ணிக்கை பல ஆயிரங்களாக உயரக்கூடும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) எச்சரித்துள்ளது.
இந்த பேரழிவின் அதிர்வலைகள் தலைநகர் கராகஸை மட்டுமன்றி, அண்டை நாடான பிரேசிலின் அமேசான் காடுகள் வரை உணரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் ஏற்பட்ட அந்த அதிர்ச்சியூட்டும் தருணத்தில், மக்கள் வீடுகளை விட்டும், வர்த்தக நிலையங்களை விட்டும் அலறியடித்தபடி வீதிகளுக்கு ஓடி வந்துள்ளனர். கராகஸ் நகருக்கு மேற்கே 168 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மொரோன் (Moron) பகுதியை மையமாகக் கொண்டு முதலில் 7.2 ரிக்டர் அளவிலும், அடுத்த சில நொடிகளில் அதே பகுதியில் 7.5 ரிக்டர் அளவிலும் இந்த இரட்டை நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன. வீதிகள் பிளந்து, கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்ததில், வீடுகளுக்குள் இருந்த தளபாடங்கள் வீதிகளில் செல்வோருக்கு அப்படியே தெரியும் அளவுக்கு சேதம் மிகக் கொடூரமாகக் காணப்படுகிறது.
“எனது வாழ்நாளில் இப்படியொரு நடுக்கத்தை நான் பார்த்ததே இல்லை; குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்த பொருட்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டன” என 56 வயதுடைய கராகஸ் நகரவாசி ஒருவர் கண்ணீருடன் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.
தற்போது நாட்டின் நிலைமை மிக மோசமடைந்துள்ளதால், தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் உடனடியாக நாடு முழுவதும் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். குறிப்பாக, ‘லா குவைரா’ (La Guaira) மாநிலமே இந்த இயற்கைச் சீற்றத்தினால் ஆகக் கூடுதலாகப் பாதிக்கப்பட்டு, ஒரு சிதைந்த சுடுகாடு போலக் காட்சியளிப்பதாக அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார். அங்குள்ள பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் அனைத்தும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகின்றன.
சுரங்கப்பாதை (Metro) சேவைகள் மற்றும் எரிவாயு விநியோகங்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், மீட்புப் பணிகளுக்கு இடையூறாக அலைபேசி மற்றும் மின்சாரக் கட்டமைப்புகளும் செயலிழந்துள்ளன.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் உயிர்களைக் காப்பாற்ற தங்களது உயிரையும் பணயம் வைத்து ‘அசுர வேகத்தில்’ போராடி வருகின்றனர். நாட்டின் பிரதான சர்வதேச விமான நிலையமான சைமன் பொலிவார் விமான நிலையத்தின் ஓடுதளங்கள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதால் அது தற்காலிகமாக மூடப்பட்டு, விமானச் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இலங்கையைப் போல பொருளாதார நெருக்கடிகளால் ஏற்கனவே தத்தளித்துக் கொண்டிருக்கும் வெனிசுலாவுக்கு, இந்த இயற்கை பேரிடர் “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல” அமைந்துள்ளதாக சர்வதேச அரசியல் அவதானிகள் கவலை வெளியிடுகின்றனர்.
இந்நிலையில், வெனிசுலா மக்களின் துயர் துடைக்க சர்வதேச சமூகமும் மனிதாபிமான அடிப்படையில் கரம் கோர்க்கத் தொடங்கியுள்ளது. உலகப் புகழ்பெற்ற ஸ்பானிய-அமெரிக்க சமையல் கலைஞரும் சமூக ஆர்வலருமான ஜோஸ் ஆண்ட்ரெஸ் (Jose Andres), தனது ‘லாங்கர் டேபிள்ஸ் ஃபண்ட்’ (Longer Tables Fund) ஊடாக முதற்கட்டமாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவசர நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இவர் ஏற்கனவே காசா போர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ போன்ற உலகளாவிய பேரிடர்களின் போது ‘வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’ அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கு உணவு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெனிசுலாவிலும் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய இவருடைய குழு களமிறங்கியுள்ளது.







