- மனிதர்களைக் குறிவைக்கும் ‘கில்லர் ரோபோக்கள்’: உலகிற்கு ஐ.நா மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் விடுத்த இறுதி எச்சரிக்கை!
- இயந்திரங்களிடம் செல்லும் உயிர்ப்பலி அதிகாரம்: ஆபத்தின் விளிம்பில் உலகம்!
- போர்க்களத்தில் ஏஐ ஆயுதப் புரட்சி: சர்வதேச சட்டங்களை வகுக்க உலக நாடுகளுக்கு அவசர அழைப்பு!
மனிதர்களின் நேரடி உத்தரவுகள் எதுவுமின்றி, இயந்திரங்களே சுயமாக இலக்குகளைத் தேர்ந்தெடுத்து மனிதர்களைக் கொல்லும் ஒரு கொடூர எதிர்காலத்தை நோக்கி உலகம் மிக ஆபத்தான முறையில் நெருங்கிக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் (ICRC) உலக நாடுகளை எச்சரித்துள்ளன.
இந்த அபாயகரமான தொழில்நுட்பத்தை உடனடியாக கட்டுப்படுத்த சர்வதேச சட்டங்கள் மற்றும் தடைகளை கொண்டு வருமாறு கடந்த 2023 ஆம் ஆண்டே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது நிலமை மேலும் தீவிரமடைந்துள்ளதாகவும், இயந்திரங்கள் மனிதர்களை தாக்கும் அந்த ‘தார்மீக சிவப்புக் கோட்டை’ உலகம் தாண்ட மிக அருகில் உள்ளதாகவும் ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் மிர்ஜானா ஸ்போல்ஜாரிக் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போர்க்களங்களை ஆக்கிரமிக்கும் ஏஐ தொழில்நுட்பம்
இதுவரை முழுமையான தானியங்கி ஆயுதங்கள் போர்க்களத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வெடித்துள்ள மோதல்களில் ஆளில்லா ட்ரோன்களின் ஆதிக்கம் பாரியளவில் அதிகரித்துள்ளது. இதுவே மிக விரைவில் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிய ‘கில்லர் ரோபோக்கள்’ யுத்தகளத்திற்குள் இறக்கப்படலாம் என்ற சர்வதேச அச்சத்தை தூண்டியுள்ளது.
இதுபற்றி கருத்து வெளியிட்ட தலைவர்கள், “தானியங்கி ஆயுதங்கள் என்பது எதிர்காலக் கற்பனையல்ல; அந்த ஆயுதப் போட்டி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இவை கட்டுப்பாட்டை மீறிப் பெருகுவதற்குள் தலைவர்கள் நடவடிக்கை எடுத்தார்களா என எதிர்கால சந்ததியினர் கேள்வி எழுப்புவார்கள்” என்று குறிப்பிட்டனர்.
விஞ்ஞானிகளே விடுக்கும் அபாய எச்சரிக்கை!
குறிப்பாக, இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உருவாக்கிய தலைமை விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களே இதற்கான வரம்புகளை நிர்ணயிக்குமாறு குரல் எழுப்பி வருகின்றனர். தொழில்நுட்பத்தை உருவாக்கியவர்களே எச்சரிக்கும்போது, உலக நாடுகள் இதில் மெத்தனமாக இருக்க முடியாது என ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஒரு தசாப்தமாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த ஆயுதக் கட்டுப்பாட்டு விவகாரத்தில், உத்தியோகபூர்வ ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதா என்பது குறித்து உலக நாடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் தீர்க்கமான முடிவை எடுக்கவுள்ளன.
சர்வதேச நாடுகள் உறுதியான துணிச்சலை வெளிப்படுத்தத் தவறினால், அது மனித உயிர்களை காவு வாங்கும் எனவும், “தொழில்நுட்ப புத்தாக்கம் மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டுமே தவிர, அதை அச்சுறுத்தலாக மாற்றக்கூடாது” எனவும் ஐ.நா மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளன.


